கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, December 16, 2010

aacharyamana ahobilam - II

நெல்லூரிலிருந்து அஹோபிலம்  செல்லும் வழி ஆந்திராவின் அழகையும் வளத்தையும் செப்புகிறது.

இரவு சுமார் ஒன்பதரைக்கு அஹோபிலத்தை அடைந்தோம் .  அங்குள்ள அஹோபிலம் மடத்தில் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வார இறுதி என்பதால்  யாத்ரிகர்கள்  வந்த வண்ணம்  இருந்தார்கள். "முன்பெல்லாம் இத்தனை கும்பல்  கிடையாது, இப்பொழுது  மீடியாயக்களில் கோவில்களை பற்றி அதிகம் வருவதால் வார இறுதி என்றால் ஒரே கும்பல்தான்" என்று ஒரு பட்டாச்சாரியார் கூறினார்.

 108 வைஷ்ணவ திருப்பதிகளில் முக்கியமான ஒன்று.  திருமங்கை ஆழ்வாரால் பாடப் பெற்றது.   அஹோபிலம் என்று  வட மொழியில்  கூறப்பட்டாலும்  தமிழில் சிங்கவேழ் குன்றம் என்று அறியப்படும் இந்த திவ்ய தேசம்  கிழக்கு தொடர்ச்சி மலையில்  அமைந்துள்ளது.  ஆதிசேஷனே மலையாக சுருண்டு படுத்திருப்பதாகவும், படமெடுத்திருக்கும் அதன் தலைப்பகுதி திருப்தி(திருமலை), உடல் அஹோபிலம், வால் பகுதி ஸ்ரீ சைலம் என்றும் ஐதீகம். மஹா விஷ்ணுவை நரசிம்மராக தரிசிக்க ஆவல் கொண்ட கருடன் இங்கே தபஸ் செய்ய அவருக்கு நரசிம்மராக பகவான் காட்சி அளித்த இடம் இது என்பதால் இந்த மலை கருடாசலம் என்றும் அறியப்படுகிறது.

மறு நாள் காலை விஸ்வரூப தரிசனம்  காண அஹோபிலம் கோவிலுக்குக் சென்றோம். மூலவர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள். அமர்ந்த கோலத்தில்  சங்கு சக்கர தாரியாக இடது மடி மீது தாயாரை இருத்திக்கொண்டு ஒரு கை அபயம் அளிக்க மறு கையால் தாயாரை அணைத்த வண்ணம் நான்கு கரங்களோடு அருளுகிறார். அமிர்த வல்லி தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார்.  ப்ராகாரத்தில்   கல்யாண  கோலத்தில்  பத்மாவதி தாயாரோடு ஸ்ரீனிவாச பெருமாளுக்கும் தனி சந்நிதி உள்ளது. திருப்பதியில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருமணம்  நடக்கும் பொழுது செய்யப்படும் நைவேத்தியத்தை அஹோபில  நரசிம்மரே ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். கற்றளி கோவில். மண்டபத்திலும் பிராகார சுற்று சுவர்களிலும்  வெகு  அழகான  சிற்பங்களை  காண முடிகிறது. கிருஷ்ண தேவராயர் எடுபித்த கோவில்.  கிருஷ்ணா தேவா ராயர் தன்னுடைய  வெற்றியை  கொண்டாட ஜெய ஸ்தம்பம் நிறுவி உள்ளார். அதனாலோ என்னவோ சுற்று சுவர் சிற்பங்களில் போர் காட்சிகள் அதிகம்  காணப்படுகின்றன. ஒரு சில  கஜுரஹோ பாணி சிற்பங்களும் இருக்கின்றன.
குதிரை மீதமர்ந்து யானை மீது அம்பு தொடுக்கும் வீரன்  
  
மற்றும் ஒரு போர் காட்சி  

அன்று   காலை சிற்றுண்டிக்குப்பிறகு பார்கவ நரசிம்மரை  தரிசிக்க  சென்றோம். எங்களுடைய திட்டப்படி நவ நரசிம்மர்களில் அன்று பார்கவ நரசிம்மர்,  பாலயோக  நரசிம்மர், சத்ரவட நரசிம்மர், மற்றும் பாவன நரசிம்மர் என்று நான்கு நரசிம்மர் கோவில்களை சேவிப்பதாக ஏற்பாடு. இதற்கென்று ஜீப்புகளை டிராவல்ஸ்காரர்களே ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஜீப்புகள் ஒரு ஹெட் லைட் இல்லாமல் காயலான் கடைக்குச் செல்ல தயார் நிலையில் இருந்தன. ஒரு ஜீப்பில் எல்லோரும் அமர்ந்த பிறகு இரண்டு  பேர்கள்  தள்ளி  ஸ்டார்ட்  செய்ய வைத்ததைப் பார்த்த நான் என் தோழியிடம்,"பிரமிளா, அங்கே பாருங்கள் வண்டியை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்கிறார்கள் என்றேன்.."  "எல்லா வண்டியும் அப்படிதான்.." என்று அவள் என் வாயை அடைத்தாள்.
பார்கவ    நரசிம்மர் கோவிலுக்குச் செல்ல சுமார் 130 ௦ படிகள்  ஏற  வேண்டும்.  பார்க்க முனிவர் ஸ்ரீமன் நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யனை வதைத்ததை
தனக்கு காட்சி அருள வேண்டும் என்று தவம் இருக்க, அவருக்கு அப்படியே பெருமாள் காட்சி தந்த கோலம். பெருமாள் சதுர் புஜங்களோடு, தன் மடி மீது ஹிரண்யனை போட்டுக்கொண்டு அவன் குடலை கீழ் இரு கரங்களால் கிழித்த படியும், மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியும் காட்சி அளிக்கிறார். சிறிய சுயும்பு மூர்த்தம். படிகள் துவங்கும்  இடத்தில் பார்கவ முனிவரால் உண்டாக்கப்பட்ட சிறிய குளம் பார்கவ  தீர்த்தம்என்று அழைக்கப்படுகிறது. அதில் தண்ணீர் எப்போதும் வற்றுவது கிடையாது என்பதால் அக்ஷய தீர்த்தம் என்றும் வழங்கப்படுகிறது.    அதிலிருந்துதான்  பெருமாளுக்கு  திருமஞ்சனத்திர்க்காக தீர்த்தம் எடுத்துச்  செல்லப்படுகிறது.

இந்த குளத்து நீரை தலையில் தெளித்துக் கொள்ளலாம் என்று     நாங்கள்  சென்ற  போது அஹோபிலத்திர்க்கு முப்பது வருடங்களுக்கும் மேலாக சென்று கொண்டிருக்கும்  ஒருவர், "ஒரு முறை இந்த குளத்தில் கால் அலம்பினேன் ஒரு முதலை  சர்ரென்று  வந்தது அவசர அவசரமாக கரை ஏறி ஒரே ஓட்டம்தான்" என்றார்.  எங்களுக்கு  எதுவும்  பயம் இல்லை முதலை வந்து காலை கவ்வினால் ஆதி மூலமே! என்று அழைத்து விடுவோம், பெருமாள் பாவம் ஓடி வர வேண்டும். அதெல்லாம் வேண்டாம் என்று அதன் கரையில் நின்று போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டோம்.
அக்ஷய தீர்த்தத்தின் முன் நானும் ப்ரமீலாவும்
 
 இதற்குப் பிறகு சத்ரவட நரசிம்மரை தரிசிக்க சென்றோம். வட மொழியில் சத்ரம் என்றால் குடை என்று பொருள்; வடம்  என்பது  அரச  மரத்தைக்  குறிக்கும். அரச மரமே  ஒரு குடை போல கவிழ்ந்திருக்க அதனடியில் பத்மாசனத்தில் நான்கு திருக்கரங்களோடு  நரசிம்ம பெருமான் எழுந்தருளியிருக்கும் அழகை வர்ணிக்க எனக்கு ஆற்றல் போதாது.  சற்றே பெரிய சாளக்ராம விக்கிரகம்.

பெருமாள் தலையில்  கிரீடம், மார்பில் ஹாரம், கால்களில் சதங்கை, கைகளில் காப்பு, விரலில் மோதிரம் என்று சர்வாபரண பூஷிதராக விளங்குகிறார். மேலிரண்டு கைகளும் சங்கு சக்கரம் தாங்கி இருக்க, கீழ் வலது  கை அபய ஹஸ்தமாகவும், இடது  கையை  தொடையில்  ஊன்றியும்  வித்தியாசமான  ஒரு கோலத்தில் விளங்குகிறார். இதைப் பார்த்த ஒருவர், "வலது கை அபய ஹஸ்தமாக இருந்தால் இடது கை வர ஹஸ்தமாக இருக்கும் அல்லது கையை இடுப்பில்  வைத்து  கொண்டிருந்தால் பொருத்தமாக இருக்கும். இதிலே வலக்கரத்தை தொடையில் வைத்துக் கொண்டிருக்கிறாரே"? என்று கேட்டார். அதற்கு  கோவில் பட்டாச்சாரியார்,  "இங்கு 'ஆஹா', 'ஊஹு' என்று இரண்டு கின்னரர்கள் பெருமாளை இசையாலும் நடனத்தாலும் வழிபட்டனராம் அவர்களின் பெர்பார்மன்சை பகவான் தொடையில் தாளம் போட்டு ரசிப்பதாக ஐதீகம்". என்று விளக்கம் அளித்தார். ஒரு வேளை அதனால்தான் இப்பொழுதும் கூட உச்ச பட்ச பாராட்டு வார்த்தைகளாக  ஆஹா ஊஹு  என்று சொல்கிறோம் போலிருக்கிறது! இந்த கோவில் அமைந்திருக்கும் அழகை சொல்வதா? பெருமாளின் அழகை போற்றுவதா? அல்லது அங்கு நிலவும் சாநித்தியத்தை வியப்பதா?   நவ நசிம்மர்களில் என்னை மிகவும் கவர்ந்த கோவில் இது.

இதை அடுத்து  யோக நரசிம்மரை சேவித்தோம். பிரஹலாதனுக்கு யோக முத்திரைகளை கற்பித்த இடம் என்று நம்பப்படுகிறது. நான்கு கரங்களோடு கூடிய சிறிய மூர்த்தம். மேல் இரண்டு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியும் கீழ் இரண்டு கரங்களில் யோக முத்திரை காட்டிய படியும் அருளுகிறார்.

இந்த கோவிலுக்கு வெளியே ஒரு மண்டபத்தில் நவ நரசிம்மர்களும் எந்தெந்த நரசிம்மர் எந்தெந்த க்ரஹதிற்குரியவர் என்ற குறிப்போடு நவ கிரகங்கள் போல வட்டமாக எழுந்தருளப் பட்டிருக்கின்றனர். அம்மூர்தங்களை தனித் தனியே வலம் வரவும் முடியும். 

இதோடு எங்கள் காலை தரிசனங்கள் முடிந்தன. மதியம் பாவன நரசிம்மரை தரிசிக்கலாம் என்றார்கள். ஒரே ஒரு கோவிலுக்கு அரை நாளா? என்று நினைத்தேன்...என் யோசனை சரியா? தவறா? கொஞ்சம் பொறுத்திருங்கள் சொல்கிறேன்...                                                                     

1 comment:

  1. நவ நசிம்மரை பற்றிய உங்கள்
    விளக்கங்கள் அருமை ....

    ReplyDelete