கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, December 29, 2012

நீதானே என் பொன் வசந்தம்!

நீதானே என் பொன் வசந்தம்!





"நான் சொல்வதெல்லாம் காதல், காதலைத் தவிர வேறு ஒன்றுமில்லை" என்று பிரதிக்ஞை செய்து விட்டு இந்தப் படத்தை கெளதம்  வாசுதேவ்  மேனன்  எடுத்திருப்பார் போல, படம்  முழுவதும்  காதல் காதல் காதல்!கொஞ்சம் ஓவர் டோஸ்தான். அதுவும் முன் பாதியில் காமம்தான் காதல் என்பது போல சித்தரிப்பது நியாயமா கெளதம்?

கௌதமின் எல்லா கதா நாயகர்களையும் போல இந்தப் படத்திலும் மிடில் கிளாஸ்  இன்ஜீநீயரிங் மாணவனான ஜீவா, அவரை விட அந்தஸ்தில் உயர்ந்த சமந்தாவை காதலிக்கிறார். காதலியின் உபயத்தில் விலை உயர்ந்த உடை, சொகுசுக் கார் பயணம், செல் போன், நட்சத்திர ஓட்டல் சாப்பாடு என்று அதனை சொகுசுகளையும் அனுபவிக்கிறார், காதலியின் வீட்டில் ஒருவரும் இல்லாத போது அவருடன் தனியாக இருக்கிறார். அவருடைய அண்ணன் தான் ஆசைப்பட்ட பெண்ணை அந்தஸ்து குறைவான காரணத்தால் மணக்க முடியாமல் போகும் பொழுது நிதர்சனத்தை உணரும் அவர் படிப்பும் நல்ல உத்தியோகமும் வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்று புரிந்து கொண்டு எம். பி. ஏ. நுழைவுத்  தேர்வுக்கு  தன்னை  தயார்  செய்து  கொள்ள  வேண்டும்  என்பதால் காதலியிடமிருந்து  விலகுவதோடு  அவளையும், "என்னையே சார்ந்திருக்காதே  ஏதாவது உருப்படியாகச் செய்" என்று  நியாயமாக  அறிவுறுத்த அதை சரியாக புரிந்து கொள்ளாத சமந்தா அவரைப் பிரிகிறார். இது இயல்பான முன் பாதி என்றால், ஜீவாவின் படிப்பும்  நல்ல  உத்தியோகமும் அவரது குடும்ப அந்தஸ்தை உயர்த்துகிறது. இந்த  கால  இடைவெளியில்(மூன்று வருடங்கள்) சுனாமி  நிவாரண  கிராமம்  ஒன்றில்  ஆசிரியையாக பணி ஆற்றச் செல்கிறார் சமந்தா
அவரைத் தேடிச் செல்லும்(நோட்:கெளதம் கதா நாயகன்) ஜீவா தன்னோடு வரும்படி சமந்தாவை அழைக்க, "உன் வேலைகளை எல்லாம்
முடித்து விட்டு இப்பொழுது  என்னை வந்து அழைக்கிறாய், இதற்க்கு  உனக்கு மூன்று வருடங்கள் ஆகியிருக்கிறது,இன்னும் மூன்று வருடங்கள் ஆகி
இருந்தால் அப்பொழுதுதான் வந்து இருப்பாயா? நீ  அழைத்தவுடன்  உன்னோடு  நான் வந்து விட வேண்டுமா எனக்கு இங்கே வேலை இருக்கிறது". என்று கூறிவிட (இங்கே  படம்  முடிந்திருந்தால்  கூட  நன்றாக  இருந்திருக்கும்)  அதில்  உள்ள  நியாயத்தை  புரிந்து  கொள்ளாமல்  அவரை விட்டு விட்டு  தன்   அண்ணியின்  தங்கையையே  மணக்க  முடிவு  செய்யும் ஜீவா, கல்யாணத்திற்கு ஒரு மணி நேரத்திற்க்கு முன் திருமணத்தை நிறுத்தி விட்டு(நோட் மீண்டும் கெளதம் படம்) சமந்தவோடு மீண்டும் இணைவதுதான்  சினிமாத்தனமான பின் பகுதி. 

ஜீவாவைப் பொறுத்த வரை இது ஒரு முக்கியமான படம். கல்லூரி கல்சுரல்சில்,'நீதானே என் பொன் வசந்தம்' பாடல்  பாடும்  பொழுது  அவர்  முகத்தில் தென் படும் பரவசமும் சரி இறுதியில், "ஐ ஹேட்  யூ நித்யா" என்று கூறும் பொழுது முகத்தின் இறுக்கமும் சரி சபாஷ் சொல்ல வைக்கின்றன. சமந்தா  பள்ளி மாணவியாக படு கியூட்! பின்னால் சேலையில் பரிதாபம். முன் பாதியை சுவாரஸ்யமாக கொண்டு
சென்றிருபத்தில் சந்தானத்தின் டைமிங்கான காமெடிக்கு கணிசமான பங்கு
இருக்கிறது. பிரபல  சின்னத்திரை  நடிகர்  மோகன் ராமின்  மகள்  நகைச்  சுவை நடிகையாக அறிமுகமாகி  இருக்கிறார். மனோரமா போல வர ஆசையாம். ஆல் த பெஸ்ட் !

ஜீவாவும் சமந்தாவும் பிரியும் மிக மிக்கியமான கட்டத்தில் டைட்  க்ளோசப் இல்லாவிட்டாலும், மிட் ஷாட்டவது வைத்திருக்க வேண்டாமா?
லாங் ஷாட்டிலும், ஏரியல் ஷாட்டிலும் அந்தக் காட்சியை படம் பிடித்திருப்பது...? கௌதமுக்கும் ஹாரிஸ் ஜெயராஜுக்கும்
இருக்கும் கெமிஸ்ட்ரி இசை ஞானியோடு இல்லை. தேர்ந்த நடிகரான ரவி
ராகவேந்தருக்கு ஏன் உணர்ச்சியே இல்லாத ஒரு இரவல் குரல்?

பாடல்கள் பல பிரமாதம். கௌதமின் மற்ற படங்களை விட இந்தப் படத்தில் வசனம் மிகச் சிறப்பாக இருக்கிறது. காமிரா துல்லியம்! படம்? ஹி! ஹி! 

இறுதியாக கெளதம் வாசுதேவ் மேனன் சமூகத்திற்கு ஒரு விண்ணப்பம்! தயவு செய்து உடல் இச்சையை காதல் என்று காட்டாதீர்கள். அதே போல
கல்யாண மேடையில்  திருமணத்தை  நிறுத்தும்  காட்சியும்  இனிமேல்  வேண்டாம். 




    

 

Friday, November 9, 2012

Kodiyadhu katkin...

கொடியது கேட்கின்....

நமக்கு செய்ய பிடிக்காத விஷயங்களை,"உலகத்திலேயே கொடுமையான விஷயம் என்றல் அது இதுதான்" என்போம் அப்படி ஒரு கொடுமையான விஷயங்களுள் ஒன்று துக்கம் கேட்கச் செல்வது! மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் பொழுது சம்பந்தப்பட்டவர்களின் துக்கம் பாதியாக குறையும் என்ற நம்பிக்கையில் செல்கிறோம். ஆனால் நிஜமாகவே துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

சமீபத்தில் அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய துர்பாக்கியத்திற்கு ஆளானேன்! காலமானது மிக நெருங்கிய நண்பர். என்னதான் மிக மோசமான விபத்தை சந்தித்து ஐந்து வருடங்களாக கோமாவில் இருந்தாலும் அவருடைய மனைவியின் அக்கறை மிகுந்த கவனிப்பால் மிக மிக சொற்ப முன்னேற்றத்தை காட்டி வந்த அவர் இறுதி வரை முழு நினைவு திரும்பாமலேயே இறந்தது கொடுமை இல்லையா? அந்தப் பெண்ணின் உழைப்பு அத்தனையும்  வீண்தானா? தன கணவர் நிச்சயமாக பிழைத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் ஐந்து வருடங்கள் சரியாக தூங்காமல் அவருடைய ஒவ்வொரு அசைவையும் புரிந்து கொண்டு பணியாற்றிய, அந்தப்பெண், "நான் கஷ்டப்பட்டேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள், நான் கஷ்டப்படவேயில்லை,எனக்கு ஒரு குழந்தை இருந்தால் பார்த்துக்கொள்ள மாட்டேனா? ஐந்து வருடங்கள் நான் பட்டது ஒன்றுமே இல்லை,கடைசி ஒரு மாதத்தில் ஆஸ்பத்ரியில் அவர் அனுபவித்த
கஷ்டத்தை பார்த்த பொழுது அவர்இருப்பதை விட இறப்பதே மேல் என்று தோன்றி விட்டது அதனால்தான் நான் அழவே இல்லை என்று கண்களில் வழிந்த நீரை துடைத்தபடியே பேசும்
 அந்தப் பெண்ணிடமும், எண்பத்தைந்து வயதில் மகனை பறிகொடுத்து  விட்டு புத்திர சோகத்தில் தவிக்கும் தாயிடமும்,  பிறந்ததில்  இருந்து  மிக செல்லமாக குறிப்பாக அப்பாவின் செல்லமாக ஒரு இளவரசி போல வளர்ந்த குழந்தை, மோசமான ஒரு நாளில் நடந்த விபத்து வாழ்கையையே புரட்டி போட அதை மிக இயல்பாக
ஏற்றுக்கொண்டு இப்பொழுது சீ.ஏ. பரீட்சி நேரத்தில் தந்தை இறந்து போக, என்னால் சரியாக அழக்கூட முடியவில்லை எனும் சின்னப் பெண்ணிடமும்,'உப்பும் நீரும் சேரச் சேர
எல்லா துக்கமும் மாறிப்போகும்" என்று கூற வேண்டிய தருணம் கொடியதுதானே?

Friday, September 28, 2012

இரயில் பயணங்களில்!
(டி. ஆர். பட விமர்சனம் அல்ல!)


சமீபத்தில் நிறைய பயணம் செய்தேன்! பெரும்பாலும் புகை வண்டியில்(நிலக்கரியால் ஓடி, புகையைக் கக்கி, நம் உடைகளை பாழக்கிய அந்தக் காலத்தில் புகை வண்டி என்பது சரியாக இருந்தது. இப்போதுமா புகை வண்டி? வேறு பெயர் கண்டு பிடிங்க பாஸ்)



இரயில் பயணம் இப்போது மிகவும் சுலபமாகவும், வசதியாகவும் இருக்கிறது.
நம் வேலையெல்லாம் விட்டு விட்டு பயணச்சீட்டு வாங்குவதற்காக நீண்ட க்யு வரிசையில் காத்திருக்க வேண்டாம். மகனையோ, மகளையோ கெஞ்சி வீட்டில் இருந்த படியே கணினியில் பதிவு செய்து விடலாம்.  இன்னொரு நல்ல விஷயம், இப்போதெல்லாம் ரயில்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில்  புறப்பட்டு சரியான நேரத்தில் இலக்கை அடைகின்றன.  நம் நாட்டில் எமெர்ஜென்சி நிலவிய  பொழுது  இதைத்தான்  பெரிய  விஷயமாக  சொன்னார்கள் அதன் அதரவாளர்கள். அதைப் போலவே முன்பெல்லாம் ஒவ்வொரு
நிறுத்தத்திலும் வண்டி நிற்கும் பொழுதும் இட்லி, வடை, தயிர் சதம், வேர்கடலை, காபி, டீ இன்ன பிற சமாச்சாரங்களை சுமந்து கொண்டு கூவியபடி வண்டியின்  வேகத்தோடு ஓடிவரும்  சிறு  வியாபாரிகளைக்  காணவில்லை. எந்த எந்த  ஊரில்  என்ன என்ன  உணவு  நன்றாக  இருக்கும்  என்று சிலர் லிஸ்டே வைத்திருப்பார்கள். வண்டியிலேயே  எல்லா  உணவு  வகைகளும் கிடைத்து விடுவதால் வெளியே வாங்குபவர்கள் குறைந்து  விட்டார்கள் போலிருக்கிறது! சதாப்தி போன்ற வண்டிகளில் IRCTC நிர்வாகமே வேளா வேளைக்கு டீ, பிஸ்கெட்  முதல்  ஐஸ்ச்ரீமோடு  உணவு  வரை டான் டானென்று வழங்கி விடும் போது வெளியே ஏன் வாங்க வேண்டும்?
உபரியாக படிக்க தினசரியும் குடிக்க நீரும் வேறு..!  ஏசி  கோச்சுகளில்  கழிப்பறை நன்றாகவே பராமரிக்கப்  படுகிறது.   

ஸ்லீப்பர் கோச்சுகளில் சில்லறை சாமான்கள் விற்பவர்கள், காபி,டீ  இவற்றோடு பிச்சைக்காரர்கள், தவிர  வண்டியை  தன்  கையில்  உள்ள  துணியால் துடைத்து விட்டு  காசு  கேட்பவர்கள்  தொந்தரவு  செய்து கொண்டே இருக்கிறார்கள். இதில்  என்ன  ஆச்சர்யம்  என்றால் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒருவன் வந்து
துடைக்கிறான்  அப்பொழுதும் குப்பை வருகிறது. பொது இடத்தில் குப்பை போடுவதில் நமக்கு நிகர் நாம்தான்! 

ரயில்வே மட்டுமல்லாது infrastructure எனப்படும்  கட்டுமான  அமைப்பும் வெகுவாக வளர்ந்துள்ளதால் சாலைப் பயணமும் முன்பை விட
இலகுவாகவும், துரிதமாகவும்  இருக்கிறது. நவி மும்பையின்  வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது! மும்பையில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு வெளி நாட்டில் எடுத்தது என்றல் நம்பி விடுவார்கள்.

இவ்வளவு ஊழல், தகிடுதித்தங்களையும் மீறி இந்த தேசம் வளர்கிறதே! இறை அருள்தான் !
      

Saturday, August 11, 2012

naan ee - film review

நான் ஈ (விமர்சனம்)



மிருகங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்களில் ஆட்டுக்கார அலமேலுவிர்க்குப்பிறகு எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் நான் ஈயாகத்தான் இருக்கும்!

பணக்கார வெற்றிகரமான வர்த்தக பெரும்புள்ளி சுதீப். தன் மனைவியைத் தவிர தான் விரும்பும் அத்தனை பெண்களையும் தன்னால் வீழ்த்திவிட முடியும் என இருமாந்திருக்கும் அவர் நுண் கலைஞரான(micro artist) சமந்தாவை அடைய விரும்புகிறார். அவரோ நாணியைக் காதலிக்க, அப்பாவி நானி சுதீபால்  கொல்லப்படுகிறார். ஒரு ஈயாக மறு பிறவி எடுக்கும் நாணி சுதீபை எப்படி பழி தீர்க்கிறார் என்பதுதான் கதை! சர்வ சாதரணமான இந்தக் கதையை வெகு சுவாரஸ்யமாக படமாக்கி
-யிருப்பதில் டைரக்டர் ராஜ மௌலியின் திறமை பளிச்சிடுகிறது.

சமந்தாவின் புறக்கணிப்பைக் கூட தனக்கு சாதகமாக மாற்றி கூறும் அப்பாவித்தனத்தை அழகாக செய்திருக்கிறார் நாணி. வில்லன்  சுதீபின் உருவம், நடிப்பு இரண்டிலுமே ரகுவரனின் லேசான சாயல்!
குரல் கொடுத்தவர் வேறு ரகுவரனை மிமிக் செய்திருக்கிறார்  என்றாலும் ஓகே! சமந்தாவை குறை சொல்ல முடியாதுதான்
என்றாலும் இன்னும்  கொஞ்சம்  நமக்கு  நெருங்கி  வந்திருக்கலாம். தேவ தர்ஷினி போன்ற நமக்கு பரிச்சயமான முகங்கள்
தலை  காட்டினாலும் தெலுங்கு படம் பார்பது போன்ற உணர்வை
தவிர்க்க முடியவில்லை! சந்தானம் கூட இரண்டு காட்சிகளில் வந்து கலகலப்பூட்டுகிறார்!

வசனம் க்ரேசி மோகன் என்று போடுகிறார்கள், அவரே மருத்துவராக
வரும் கடைசி காட்சியைத் தவிர மற்ற இடங்களில் க்ரேசியை காணவில்லை.
ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு மிகவும் உதவி செய்திருக்கின்றன. கிராபிக்ஸ் படம் என்பதால் காதை அதிரச் செய்யாத பின்னணி இசையை
சேர்த்திருக்கும் மரகதமணியை பாராட்டத்தான் வேண்டும். பாடல்கள்  இரண்டும் இன்பம்! நம் ஊரில் அம்மன் படம் எடுப்பவர்கள் ராஜ மௌலியிடம் க்ராபிகசை எப்படி பயன் படுத்த வேண்டும் என்று
கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்.

மொத்தத்தில் ஒரு நல்ல பொழுது போக்கு படம் எடுக்க மாஸ் ஹீரோக்கள்
தேவை இல்லை, நல்ல திரைக்கதை, சிறப்பான  தொழில்  நுட்பம்  இருந்தால்  போதும் என்பது  மீண்டும்  நிரூபணமாகி  இருக்கிறது.















  

Thursday, June 21, 2012

அடி கள்ளி !

அடி கள்ளி ! 


என்னதான் விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எனக்கு தோட்டக் கலையில் அவ்வளவாக ஆர்வம் கிடையாது. நானும் என் சகோதரியும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல, அவளுக்கோ தோட்ட கலையில் அபரிமித ஈடுபாடு, எனவே செடிகளை தேடி அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் நானும் செல்வேன். கவனியுங்கள்! செல்வேன் அவ்வளவுதான்! மற்றபடி செடிகளையும்,விதைகளையும் வாங்குவது, அவற்றை எப்படி பராமரிப்பது போன்ற விவரங்களை எல்லாம் அவள்தான் கேட்டுக் கொள்வாள். நான் அங்கு ஏதாவது துண்டு பேபர் கிடைத்தால் எடுத்து படிக்க ஆரம்பித்து விடுவேன், அப்படி ஒரு புத்தகப் பைத்தியம்! 

இதில் நான் மிகவும் ரசித்த விஷயம் கைக்குள் பொத்தி வைத்திருக்கும் கனகாம்பர விதைகள் கை சூட்டிலும் வியர்வையிலும் 'பட்'  'பட்' என்று வெடித்ததைதான்!

இப்படி அவ்வப்பொழுது செடிகளையும் விதைகளையும் வாங்கி  வந்து நட்டு
எப்படி கவனித்தாலும் பெரிதாக  எதுவும்  வளரவில்லை.   ஒரே  ஒரு  முறை  ஒரு  ரோஜா  செடி நன்கு வளர்ந்து  நான்கைந்து பூக்களைக்  கொடுத்து   எங்களுக்கு  சந்தோஷம் அளித்தது. அதற்கு மேல் அதோடு மெனக்கெட முழு பரீட்சையும், கோடை  விடுமுறையும் இடம் கொடுக்கததால் ரோஜா செடி பட்டு போனது.  அதன் பிறகு என் தோட்ட கலை, வீட்டில் இருந்த துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றுவது மட்டும்தான்.

திருமணமாகி மஸ்கட் சென்ற பொழுதும் பின்னர் சென்னை திரும்பிய பிறகும் மணி பிளான்ட் வளர்க்கலாம் என்று இரண்டு மூன்று முறை முயற்சி செய்தேன். மணி பிளான்ட் நன்றாக இருக்கும் வரை ஓகே தான், அது காய்ந்தலோ கையில் இருக்கும் கொஞ்சம் சேமிப்பும் தடாலென்று கரையும்  வண்ணம்  பெரிய செலவு  ஏதாவது வந்து விடும். எதற்கு வம்பு என்று மணி பிளான்ட் ஆசைக்கு முடிவு கட்டினேன்.

அப்பொழுதுதான் கள்ளிச்செடி(cactus) வீட்டில் வளர்ப்பது நல்லது, திருஷ்டி தோஷங்களை நீக்கும் என்று  ஒரு புத்தகத்தில் படித்தேன். எனவே ஒரு கள்ளிச் செடியை வாங்கிக் கொண்டு வீட்டில் ஒரு தொட்டியில்
வைத்தேன். அதை வாங்கிக்கொண்டு வரும் பொழுது வேறு சில வேலைகளும்
இருந்ததால் வண்டியை இரண்டு மூன்று இடங்களில் நிறுத்தி அந்த
வேலைகளை முடித்துக்கொண்டு வந்தேன். நிறுத்திய இடங்களிலெல்லாம் எல்லோரும், " கள்ளி செடியா ? வீட்டுல வைக்க போறீங்களா" ? என்று விசாரித்தார்கள். இத்தனை பேர்களின் கண்களில்  விழுந்து விட்டது, அவ்வளவுதான் இது வந்த மாதிரிதான் என்று நினைத்தபடிதான் அதை 
வைத்தேன்.

பக்கத்தில் இருந்த ரோஜா செடிக்கு அளித்த கவனத்தில் பத்தில் ஒரு பங்கு கூட
இதற்க்கு கிடையாது. தண்ணீர் கூட எப்போதாவது விட்டால் போதுமே, ஆனாலும்  வஞ்சனை  இல்லாமல்  ரோஜாவை  விட நன்றாகவே வளர்ந்தது.

நான் ஊரில் இல்லாத மூன்று மாதங்களில் என் குழந்தைகள் அதை சுத்தமாகவே புறக்கணித்து விட்டார்கள் போலிருக்கிறது, வாடிப் போய்  விட்டது. அதை வைத்து ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது, அதன் லைப் அவ்வளவுதான் போலிருக்கிறது என்று நானும் பேசாமல் இருந்து விட்டேன். கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கியது தினசரி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போல  அன்றைக்கும் சென்றவளுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது... காய்ந்து விட்டது என்று நினைத்த கள்ளிச் செடி மீண்டும் துளிர்த்திருந்தது..! காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சியே துளிர்த்து விடுமாமே! மீண்டும் துளிர்த்த கள்ளிச்செடியை இப்போதெல்லாம் நன்கு கவனித்துக் கொள்கிறேன்! இப்போது எனக்கு அதிகம் அலட்டிக் கொள்ளும் ரோஜாவை விட இந்த கள்ளியே மிகவும் பிடித்திருக்கிறது. தரையில் படுத்தபடி புத்தகம் வாசிக்கும் நான் யதேச்சையாக கள்ளியை பார்க்கிறேன், இந்த கோணத்தில் பூர்ண கும்பம் போலஅழகாகத்  தெரிகிறது.

வாழ்ந்தால் கள்ளி  போல வாழ வேண்டும் என்று தோன்றுகிறது. குறைந்த தேவைகள், எளிமையான வாழ்க்கை, தீமை தரும் புறச் சூழலை எதிர்த்து நிற்கும் உறுதி, அதோடு மற்றவர்களுக்கு உதவும் (மருத்துவ) குணம்.. அழகு கொஞ்சம் குறைச்சலாக இருந்தால்தான் என்ன?







 





   

Tuesday, April 24, 2012

அது ஒரு வேனிற் காலம்

அது ஒரு வேனிற் காலம்!

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்றல் உடனே அவர்களை எந்த சம்மர்  கோர்ஸில்  சேர்க்கலாம்  என்று ஆலோசித்து  அமல் படுத்துகிறார்கள், கூடவே  குழந்தைகளையும்  விடுமுறையை  அனுபவிக்க விடாமல்  படுத்துகிறார்கள்.  நாங்கள்  குழந்தைகளாக  இருந்த பொழுது  இதெற்கெல்லாம்  அவசியம் கிடையாது.  எல்லோருக்கும் கிராமத்தில்  தாத்தா பாட்டி இருந்தார்கள்.  அங்கு சென்று விடுவோம். ஒன்றரை மாதத்தை கிராமத்தில் சந்தோஷமாக
கழித்து விட்டு திரும்புவோம்.

மார்ச் மாதம் பிறந்த உடனேயே எங்கள் தாத்தா குழந்தைகளுக்கு எப்பொழுது பள்ளிக்கூடம் லீவு விடுகிறார்கள்? என்று கேட்டு கடிதம் எழுதி
விடுவார். அடுத்த கடிதத்தில் நாங்கள் ஊருக்குச் செல்ல நல்ல நாள் எது என்றும்
குறித்து அனுப்பி விடுவார். பரீட்சை முடிந்ததும் அந்த நாளில் நாங்கள் பெரும்பாலும்
ஒரு அம்பாசிடர் வாடகை கார் எடுத்துக் கொண்டு ஊருக்கு கிளம்புவோம்.
அந்த காரில் எங்கள் குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர்களோடு பாட்டி, பெரும்பாலும்
ஒரு மாமா மற்றும் டவுனில் வசித்து வந்த எங்கள் அத்தையும் சேர்ந்து கொள்வார்.
கால் வலிக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. கொஞ்ச நேரம் பொறுத்துக்
கொள்ள முடியாதா? என்று அம்மா அதட்டுவாள். பெரும்பாலும்  காரை  விட்டு  இறங்கும் பொழுது கால் மரத்து போய் விடும்.

சில சமயம் புகை வண்டியிலும் சென்றிருக்கிறோம். அது ஒரு பெரிய ப்ராசெஸ். திருச்சியிலிருந்து பூதலூருக்கு புகை வண்டியில்
சென்று விட்டு அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு பேருந்தில் செல்ல வேண்டும்.
பிறகு திருவையாறு அல்லது தஞ்சாவூர்  செல்லும் மற்றொரு  பேருந்தில்
பயணித்து எங்கள்  ஊரின்  மெயின்  ரோடில்  இறங்கிக்  கொள்ள  வேண்டும்.  அங்கே நாங்கள் வருவது தெரிந்திருந்தால் மாமா மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வந்து எங்களுக்காக காத்திருப்பார். அப்படி இல்லாவிட்டால் மெயின் ரோடில் இறங்கிக் கொண்ட நாங்கள் வந்திருப்பதை அங்கிருக்கும் யார் மூலமாவது சொல்லி அனுப்பினால்
கொஞ்ச நேரத்தில் மாமா வண்டி கட்டிக் கொண்டு வருவார். அவர் வரும் வரை கும்மிருட்டில் காத்துக்கொண்டு இருப்போம். அப்படி காத்துக்கொண்டிருக்கும் பொழுது பக்கத்தில் இருக்கும் டீ கடையிலிருந்து மினுக் மினுக் என்ற வெளிச்சமும், ரேடியோவில் 'மாலை பொழுதின் மயக்கத்திலே.. ' பாடலும் வரும். இப்பொழுது கூட அந்தப் பாடலை கேட்க நேரும் பொழுதெல்லாம் ஒரு அமானுஷ்ய உணர்வு என்னை ஆட்கொள்ளும்.

நாங்கள் ஊருக்குச் சென்றதும் வண்டியில் இருந்து இறங்கும் எங்கள் ஒவ்வருவரையும் குறட்டில் (குறடு என்பதை போர்டிகோ என்று கூறலாம்)நின்று கொண்டிருக்கும் தாத்தா  தனித்தனியாக பெயர் சொல்லி வாஞ்சையோடு வரவேற்பார்.

மறு நாள் முதல் எங்கள் கோடை விடு முறை தொடங்கும். அப்பொழுதெல்லாம்
அகிரஹாரங்களில் காலையில் பிரேக் ஃபாஸ்ட்  பெரும்பாலும் கிடையாது. ப்ரெட்? (அதெல்லாம் ஜுரம் வந்தால்தான் சாப்பிடனும்.), ஓட்ஸ் (அப்படினா..?) போன்றவைகளும் பழக்கம் கிடையாது.   குழந்தைகளுக்கு பழைய  சாதத்தைதான்  பிசைந்து போடுவார்கள்.  சமையல்  அறையில் பழையது மேடை என்றே தனியாக ஒன்று இருக்கும்.முதல் நாள் இரவு மீந்து போகும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு கல் சட்டியில் வைத்து விடுவார்கள், ஒரு வேளை சாதம் மீறவில்லை என்றால்  மறு நாள் குழந்தைகளுக்கு  போடுவதர்க்காகவே  சாதம்  வெடித்து  அதில் தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். அடுத்த நாள் ஊறிய சாதத்தில் கெட்டி தயிர்  ஊற்றி பிசைந்து கோடை கால  சிறப்பு  ஊறுகாய்   வகைகளான  வடு மாங்காய், ஆவக்காய்,   மாங்காய்  தொக்கு  இவைகளோடு  சேர்த்து   போடும் வேலை அம்மா  வீட்டில்  மாமிகளுள்  ஒருவருக்கு,  அப்பா  வீட்டில்  கடைசி  அத்தைக்கு.  நாங்களெல்லாம் அப்பொழுது குழைந்தைகளாக இருந்தோம் இன்னும் சம்பாதிக்க ஆரம்பிக்கவில்லை ஒரு வேளை சம்பாதிக்க   ஆரம்பித்திருந்தால் எங்கள் சம்பளத்தை அந்த பழையது,ஊறுகாய் சுவைக்கு அப்படியே கொடுத்திருப்போம்!

எங்கள் அம்மாவிற்கு பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டுமே ஒரே ஊரிலேயே அமைந்து விட்டதால் எங்களுக்கு இரண்டு தாத்தா  வீடுகளுமே அதே ஊராகி விட்டது. அதில் இருந்த ஒரு சௌகரியம் ஒரு தாத்தா வீட்டில் கீரை மசியல், அரிசி உப்புமா போன்ற பிடிக்காத ஐட்டம்கள் இருந்தால் மற்றொரு வீட்டிற்க்கு சென்று விடுவோம். சில சமயங்களில் இரண்டு வீடுகளிலுமே அரிசி உப்புமா செய்து எங்களுக்கு
பல்ப் கொடுப்பார்கள்.

அம்மா வீட்டில் (தெற்குத் தெரு) காலை சமையல் சீக்கிரம் ஆகி விடும். அங்கு சாப்பிட்டு விட்டு அப்பா வீட்டிற்கு (வடக்குத் தெரு) சென்றால் அப்போதுதான் சாப்பிட உட்கார்ந்திருப்பார் கள். "வா சாப்பிட உட்கார்" என்று அழைக்கும் சின்னத் தாத்தாவிடம் "அந்தாத்தில் சாப்பிட்டு விட்டேன்" என்றால் கோபம் வந்து விடும். "அங்கே சாப்பிட்டு விட்டு இங்கே எதற்கு வருகிறாய்?" என்று கோபிப்பார். அதனால் பேசாமல் சாப்பிட உட்கார்ந்து விடுவோம். அம்மாவிற்கு நாங்கள் அங்கு சாப்பிட்டிருப்போம் என்பது தெரியும். அதனால் கொஞ்சமாக பரிமாறுவார்.

ஸ்நாக்ஸ்...? முறுக்கு, பொருவிளங்கா உருண்டை, மனோகரம் போன்றவைதான். பாட்டியின் மனோகரம் டென்னிஸ் பந்து சைஸில் இருக்கும். அம்மா வீட்டில் ஆணோ, பெண்ணோ தலைக்கு இரண்டு முறுக்கு, ஒரு பொ.வி.உருண்டை கிடைத்து விடும். அப்பா வீட்டில் கொஞ்சம் பாரபட்சம் உண்டு. ஆண் பிள்ளைகளுக்கு இரண்டு முறுக்கு ஒரு பொ.வி.உருண்டை என்றால் பெண் குழந்தைகளுக்கு ஒரு முறுக்கு, ஒரு பொ.வி. உருண்டைதான். எங்கள் அத்தையின் பையன்கள் பட்டத்தை வினியோகிக்கும் பெரிய அத்தையை (அப்பாவின் அத்தை) ஏமாற்றி எங்களுக்கும் இரண்டு முறுக்கு கள் வாங்கித் தருவார்கள்.

பகல் வேளைகளில் வீட்டிற்குள் புளியங்காய், பல்லாங்குழி, தாயகட்டம்(இதில் சண்டை வராமல் இருக்காது), கேரம், பெரியவர்களுக்கும் தெரியாமல் சீட்டாட்டம், சிறிது நாட்களுக்குப் பிறகு பெரியவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். அதில் ட்ரம்ப் விளையாடும் பொழுதும் சண்டை வரும்.  மாலையில் ஐ ஸ்பை, நொண்டி போன்றவை விளையாட ஊரில் இருக்கும் குழந்தைகள், விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் குழந்தைகள் என்று ஒரு பட்டாளம் களத்தில் இறங்கும். 

இரவு ஏழரைக்கு சாப்பாடு ஆகி விடும். பெரும்பாலும் ஒரு துவையல் சுட்ட அப்பளம், அல்லது வற்றல் குழம்பு, வதக்கல் கறி இதுதான் மெனு.  சில நாட்கள் இரண்டு பெரிய அடுக்குகளில் ஒன்றில் ரசம் சாதம், இன்னொன்றில் தயிர் சாதத்தை மாமி பிசைந்து கொண்டு வந்து வைக்க, பாட்டி கையில் உருட்டி போடுவார். 

அதன் பின்னர் சாயங்காலமே தண்ணீர் கொட்டி காய்ந்த முற்றத்தில் ஜமக்காளத்தை விரித்துப் படுத்தால் வானில் கொட்டிக் கிடக்கும் ஆயிரம் நட்சத்திரங்களும் நமக்குத்தானே..!

கோடைக்கால இன்னும் சில சுவாரஸ்யங்கள் அடுத்த பதிவில்.


    



 








    

Tuesday, March 6, 2012

காதலில் சொதப்புவது எப்படி?


தமிழ் சினிமாவுக்கு இப்போது பரிசோதனை காலம்.  புதுப்புது இளைஞர்கள் புத்தம் புது ஐடியாக்களோடு
தமிழ் சினிமாவை ஒரு கை பார்த்து விடுவது என்று பரிக்ஷார்த்த
முயற்சிகளில் இறங்குகிறார்கள். பரிக்ஷார்தம் என்றதும் பயந்து
விட வேண்டாம், உலகத்து சோகத்தையே சுமக்கும் கதாநாயகி,
இருட்டு, அதீத வன்முறை போன்றவைகள் கிடையாது. யதார்த்தமான
கதை, சுவாரஸ்யமான சம்பவங்கள், நமக்கு மிகவும் பரிச்சயமான கதா
பாத்திரங்கள் என்று நம்முடைய உலகத்தையே ஒரு தூரப்பார்வையாக
நம்மை பார்க்க வைக்கும் முயற்சி! அப்படி ஒரு நல்ல முயற்சிதான் அறிமுக
இயக்குனர் பாலாஜி மோகனின் 'காதலில் சொதப்புவது எப்படி?' படம்.

கதை என்று  சொல்ல  பெரிதாக   எதுவும்  இல்லை, பொறி இயல் கல்லூரியில் படிக்கும் அன்பான குடும்ப சூழலை கொண்ட சித்தார்த்துக்கும்,   அதே கல்லூரியில் படிக்கும் எப்போதும் சண்டை போட்டு கொண்டிருக்கும் விவகாரத்தை எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கும் பெற்றோரை  
உடைய அமலா பாலுக்கும்  இடையே துளிர்க்கும் காதல், அது சந்திக்கும் நெருக்கடிகள்தான் தீம். கதையை நகர்த்திச் செல்வதற்காக பிரியப் பார்க்கும் அமலா பாலின் பெற்றோர்களின் ஊடலும், சித்தார்த்தின் நண்பர்களின் காதல் சொதப்பல்களும் ஊறுகாயாக உதவுகின்றன. ஆனால்
சைட் டிஷ்ஷின் அளவு மெயின் உணவின் அளவை விட அதிகமாக இருப்பது கொஞ்சம் தமாஷ்தான். இட்லியை சாம்பாரில் தோய்த்து சாப்பிடுபவர்களும் உண்டு, சாம்பாரில் மூழ்க வைத்து குடிப்பவர்களும் உண்டு. பாலாஜி மோகன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் போலிருக்கிறது.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து காட்சிகளை அமைத்திருப்பதில் தவறில்லை
அதற்காக அமலா பாலின் பெற்றோர்கள் மீண்டும் சேரும் காட்சியை கூட அப்படி காமெடி
ஆகியிருக்க வேண்டுமா என்ன?

பாத்திரங்களுக்கான  நடிகர்கள் தேர்வு கச்சிதம்! டைலர் மேட் ரோலில் சிக்கென
பொருந்துகிறார் சித்தார்த். ஒரு முழுமையான கத நாயகி ஆகிவிட்டார் அமலா பால்.
தன்னுடைய குரலால் அவருடைய நடிப்புக்கு உயிரூட்டியுள்ள தீப வெங்கட்டிற்கு
ஸ்பெஷல் சபாஷ்! ஒருவருக்கு மற்றவர் காம்ப்ளிமேன்றியாக ஒரு ஜோடியை
திரையில் பார்த்து எத்தனை நாட்களாகிவிட்டது?

படத்தின் ஆரம்ப காட்சிகள் நாளைய இயக்குனரை பெரிய திரையில் பார்ப்பது போல
அமெச்சூர் தனமாக இருந்தாலும் பின் பாதியில் நல்ல முதிர்ச்சி  வந்து விடுகிறது. இயக்குனர்
பாசாகி விடுகிறார், ஆனால் போக வேண்டிய தூரம் அதிகம். 

 பால்,சக்கரை, டிகாஷன் எல்லாம் சரியான விகிதத்தில்  கலந்த  இன்ஸ்டன்ட்  காபி!  இளைஞர்களுக்கு ருசிக்கும்.

     


  



      


Wednesday, February 29, 2012

Ra.Ganapathy

ரா.கணபதி கலியுக வியாசர்!
 


ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட புத்தகப் பிரியர்களால் மறக்கப்பட முடியாத பெயர். இவருடைய 'அறிவுக்கனலே அருட்புனலே' புத்தகத்தை படித்து விட்டு நெகிழாதவர் இருக்க முடியுமா? இன்னும் 'காற்றினிலே வரும் கீதம்'-மீராவின்  சரிதம்,   சாரதா  தேவியின்  வாழ்க்கை  வரலாறான   அம்மா'... இப்படிஎத்தனை  நூல்கள்..! எல்லாவற்றிற்கும் சிகரமாக காஞ்சி மஹா பெரியவர்களின் உபதேசந்களை நேரில் அவர் வாய் மொழியாகவே கேட்பது போல அவர் தொகுத்து கொடுத்திருந்த 'தெய்வத்தின் குரல்'ஐ
கலியுக வேதம் எனலாம். மகாபாரதத்தை வேதா வியாசர் கூற கணபதி எழுதியதாக புராணம் கூறும். இக்கலியிலோ நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மஹான் உபதேசம் வழங்க அதை இந்த கணபதி தொகுத்து வழங்கி இருக்கிறார்!


இவரின் இன்னொரு சிறப்பு காஞ்சி பெரியவரின் சீடராக இருப்பவர் சாய்பாபாவை ஒப்புக்கொள்ள மாட்டார் என்னும் கருத்துக்கு மாற்றாக புட்டபர்த்தி சாய்பாபாவின் பரம பக்தராகி அவரைப் பற்றியும் பல அற்புத நூல்களை எழுதி இருக்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு நல்ல ஆத்மா சிவராத்திரி அன்று தன் உடலை உகுத்திருப்பது. சாதாரணமாக சைவர்கள் யாராவது இறந்து விட்டால் சிவனடி சேர்ந்தார் என்பார்கள், இவரோ சிவ ராத்திரி அன்றே மரணமடைந்திருப்பது எப்படிப் பட்ட பாக்யம்!    
         
             

Sunday, January 1, 2012

திருச்சேறை சரநாதப் பெருமாள்



திருச்சேறை சரநாதப் பெருமாள் 




அடுத்து நாங்கள் சென்றது திருச்சேறை சாரநாத பெருமாள் கோவிலுக்கு.
108 வைணவ திருப்பதிகளுள் ஒன்று.  சார பெருமாள்,சார நாயகி(தாயார்),சார விமானம், சார புஷ்கரிணி என்னும் பெருமைகளை உடையது! இதைத் தவிர இங்கு ஐந்து தாயார்களை சேவிக்கலாம்.

தனி சந்நிதி கொண்டுள்ள சரநாயகி, உற்சவரோடு ஸ்ரீ தேவி, பூதேவி,
அகலகில்லேன் என்று பெருமாளின் திருமார்பில் உறையும் திருமகள்,அவர்
அணிந்திருக்கும் பதக்கத்தில் மஹா லக்ஷ்மி இப்படி இந்த ஒரு கோவிலில் மட்டும் தாயார் ஐந்து வடிவங்களில் எழுந்தருளி நமக்கு அருள் செய்ய காத்திருக்கிறாள்! இந்த கோவிலின் தல புராணமும் மிகச் சுவையான ஒன்று!

ஒரு முறை கங்கை, காவேரி, யமுனை, கோதாவரி போன்ற புண்ணிய
நதிகள் யாவும் பேசி, விளையடிக்கொண்டிருந்தன! அப்போழ்து அவ்வழியே வந்த முனிவர் ஒருவர் உனக்கு வணக்கம் என்று கூறிச் சென்றார். அவர்
தன்னைத்தான் வணங்கினார் என்று  கங்கையும்  காவிரியும்  தங்களுக்குள்  வாக்குவாதம் செய்து கொண்டனர். அந்த சமயத்தில் அதே முனிவர்  மீண்டும்    அவ்வழியே திரும்பி வர அவ்விரு நதிப் பெண்களும் அந்த முனிவரிடம் சென்று," நீங்கள் யாரை வணங்கினீர்கள்"? என்று வினவ அவர், "உங்கள் இருவரில் யார் உயர்ந்தவரோ அவரை வணங்கினேன்" என்று  சாமர்த்தியமாக பதில் சொல்லிவிட்டு சென்று விட்டார்.

மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவ்விருவரும் ப்ருஹ்மாவிடம் சென்று தங்களுள் உயர்ந்தவர் யார் என்று கேட்க, அதற்கு பிரம்மா, "கங்கை  தேவ லோகத்தில் இருந்து வந்தது, சிவ பெருமான் தன் சிரசில் அதை சூடிக் கொன்டுள்ளார், திருமால் வாமனனாக வந்து த்ரிவிக்ரமனாக  உயர்ந்த  பொழுது விண்ணுலகுக்கு சென்ற அவர் திருவடியை நான் ஆகாய
கங்கையால்தான் நீராட்டினேன், எனவேதான் கங்கையில் குளிப்பது சகல பாபங்களையும் போக்க வல்லது, இத்தகைய புண்ணிய தன்மைகளால் உங்கள் இருவரில் கங்கையே உயர்ந்தவள்" என்று கூறிவிட, இதனால் வருத்தம் அடைந்த காவிரி தானும் கங்கையைப் போல் புனிதத் தன்மை அடைய என்ன செய்ய வேண்டும் என்று வினவ, திருமாலை குறித்து தவம் புரிய வேண்டும் என்றார். உடனே காவேரி இங்குதான் திருமலை குறித்து தவம் இயற்றத் தொடங்கினாள் அவளது தவத்தில் மகிழ்ந்த திருமால் அவள் விரும்பும் வரத்தை கேட்க,காவிரி தானும் கங்கைக்கு ஈடான புனித தன்மையைப் பெற வேண்டும் என்று வேண்ட திருமால் அதை அருளியதோடு துலா  மாதத்தில் (ஐப்பசி   மாதத்தில்) காவிரியில் நீராடுவதால் கங்கையில் நீராடிய பலனை அடையலாம் என்று அருளியதோடு தான் ஒரு சிறு குழந்தையாக மாறி அவள் மடியில் தவழ்ந்து விளையாடினார். இன்றும் கருவறையில் சாரநாத பெருமாளுக்கு அருகே தவம் செய்யும் காவிரியின் திருவுருவச் சிலையையும் தரிசிக்கலாம். அதோடு மட்டுமல்ல காவிரியின் மடியில் குழந்தையாக பெருமாள் தவழும் அற்புத சிறிய மூர்த்தத்தை நம் கையில் கொடுத்து வணங்கச் சொல்கிறார்கள். நெக்குருக வணங்குகிறோம்! பெருமாளை மட்டுமல்ல இத்தனை விஷயங்களையும் எங்களுக்கு அழகாக விளக்கி சிறப்பாக தரிசனம் செய்துவித்த பட்டாசாரியாரையும்தான்!

தை பூசத்தன்று இங்கு தீர்த்தவாரி விசேஷம்! திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட இக்கோவில் கும்பகோணம் திருவாரூர் சாலையில் திருநாரையூரிலிருந்து   3  km  தொலைவில் உள்ளது.குடந்தையிலிருந்து ஏராள பேருந்து,கார் மற்றும் ஆட்டோ வசதி உண்டு. ஒரு முறை சென்று சாரநாத பெருமாள், ஐந்து  தாயார்கள் மற்றும் காவேரி அம்மனை வழிபட்டு வாருங்கள்.