கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, February 7, 2013

uratha sindhanai

உரத்த சிந்தனை!

எங்கள் வீட்டிக்குப் பக்கத்தில் ஒரு வீட்டில் திருமணம். இரண்டு நாட்களாக லவுட் ஸ்பீக்கரில் பாடல்களை அலற விட்டு படுத்தி எடுத்து விட்டார்கள். நமக்கு  இவ்வளவு சத்தம் போட யார் உரிமை கொடுத்தார்கள்?

எல்லாவற்றையுமே நாம் சத்தமாகத்தான் செய்கிறோம். "கெட்டி மேளம்" "கெட்டி மேளம்" என்று எல்லோரும் அலற, 'டம' 'டம' வென்று மேளம் சத்தமாக கொட்டிதான் கல்யாணம் செய்து கொள்கிறோம். இறுதி ஊர்வலத்தில் கூட தாரை, தப்பட்டை அதிர் வேட்டு என்று அதிர அடிக்கிறோம்.
பூப்பு நீராட்டு போன்ற அந்தரங்க விஷயங்கள் கூட பகிரங்கமாக்கப்படும் பொழுது பாண்டு கச்சேரி, மெல்லிசை என்று அமர்களப்படுத்தபடும்.  
அது மட்டுமா? இறை வழிபாட்டிலும் நாம் சோடை போவதில்லை அம்மனுக்கு கூழ் வார்த்தாலும் சரி, ஐயப்பனுக்கு மாலை போட்டாலும் சரி லவுட் ஸ்பீக்கர் நிச்சயம் தேவை.

போனில் எவ்வளவு பேர் மெதுவாக பேசுகிறோம்? எஸ்.டி.டி. கால் என்றால் உரக்கத்தான் பேச  வேண்டும்  என்று  இன்றும்  சிலர்  நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர் பொது இடம் என்றும் பாராமல் தங்கள் குடும்ப விவகாரங்களையும், முக்கிய  தகவல்களையும்  பகிர்ந்து  கொள்கிறார்கள்.  

ஹார்ன்  அடிக்காமல் வண்டி ஓட்டத் தெரியாது. நான் வெளி நாடு சென்ற புதிதில் அங்கு கார்கள் ஒலி எழுப்பாமலேயே விரைவதைப் பார்த்து இங்கு கார்களுக்கு ஹார்னே கிடையாதா? என்று அப்பாவித்தனமாக கேட்க நண்பர் ஒருவர்,"உண்டே", என்று ஒலி எழுப்பிக் காண்பித்தார். அங்கெல்லாம்  எப்படிப்பட்ட  டிராபிக்  ஜாமிலும் ஹார்ன் அடிக்க மாட்டார்கள். 

சமீபத்தில் காஸ் அடுப்பு விலாசம் மாற்ற ஏஜென்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு புதிய இணைப்பிற்காக விண்ணப்பம் கொடுக்க வந்திருந்தவர்களின் கூட்டம். இங்கு விஷயம் கூட்டமில்லை, அது போட்ட கூச்சல், அதனால் விளைந்த குழப்பம்....அம்மம்மா..! ஏன் இப்படி இரைச்சல் போடுகிறார்கள்?


நம் திரைப் படங்களிலோ மணி ரத்னம் வரும் வரை, "கிட்ட வா உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லணும்"  என்னும்  வசனத்தைக்  கூட   ஹை  டெசிபெல்லில்தான்  கூறுவார்கள்.  

   
இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்தப்பொழுது ஒன்று தோன்றியது. அமைதியாக இருக்கும் மேலை நாடுகளை விட இரைச்சலாக  இருக்கும்  நம் நாட்டில்தான் தியானம், யோகம்  போன்ற  விஷயங்களும்  இருக்கின்றன. மௌன  விரதம்  அனுஷ்டிக்கும்  பழக்கமும்  நம்  மதத்தில்  ஒரு வழிபாட்டு முறை. ஒரு  வேளை  நம்மை  சுற்றி  இத்தனை  சத்தம்  இருப்பதால்தான் ஒரு  சிலராவது  அமைதியை  தேடிச்  செல்கிறார்கள்  போலிருக்கிறது.  பெரும் பாலோர் சைவமாக இருக்கும் இந்தியர்களுக்கு செல்லப் பிராணிகள் வளர்ப்பு என்பது குறைவு. ஆனால் முழுக்க முழுக்க அசைவமாக இருக்கும் மேலை நாட்டினருக்கு செல்ல பிராணிகள் வளர்ப்பில் 
ஈடுபாடு அதிகம் என்பது ஒரு இனிய முரண்பாடு என்பார்கள். அதைப்போலத்தான் இதுவுமோ?


No comments:

Post a Comment