நினைவலைகள்!
எல்லா பண்டிகைகளின் பொழுதும் அம்மாவின் நினைவு வரும். குறிப்பாக கோகுலஷ்டமியிலும், நவராத்திரியிலும், தீபாவளியின் பொழுதும் அம்மாவின் நினைவை தவிர்க்கவே முடியாது.
அம்மாவின் இஷ்ட தெய்வம் ஸ்ரீ குருவாயூரப்பன் என்பதால் அதிக பட்ச ஈடுபாட்டோடு பட்சணங்கள் செய்வாள். அன்று முழுவதும் முழு பட்டினி! ஜுரம் வந்தது போல வித விதமான பலகாரங்கள் அலுக்காமல் சலிக்காமல் செய்து கொண்டே இருப்பாள். ஓரிரு முறை தானே நெல்லை ஊற வைத்து, உரலில் இடித்து வீட்டிலேயே அவல் கூட தயாரித்திருக்கிறாள்! ஒவ்வொரு செயலிலும் தென்படும் கிருஷ்ணனின் மீதான அம்மாவின் அன்பு! மற்றபடி உட்கார்ந்து சுலோகம் சொல்வதோ பூஜை செய்வதோ அம்மாவின் வழக்கம் இல்லை. பூஜைக்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பாள். நாங்கள் பஜனை செய்வோம்!
இதைப் போலவே நவராத்திரி! ஒன்பது படி கட்டி, அழகாக பார்க் அமைத்து கொலு வைப்பாள். வைதீகர் ஒருவரை வைத்து தேவி மஹாத்மியம் பாராயனதிற்க்கு ஏற்பாடு செய்வாள். அந்த சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகள். அதைத் தவிர தினசரி வீட்டில் உள்ளவர்கள் செய்யும் பூஜைக்கான ஏற்பாடு, பாயசம் வடையோடு சமையல், மாலையில் சுண்டல், வெள்ளிக்கிழமை அன்று புட்டு, இதற்க்கு நடுவில் எங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு வேடம், வருபவர்களுக்கு வெற்றிலை பாக்கு வழங்குவது, தானும் மற்றவர் வீடுகளுக்கு செல்வது, என்று எத்தனை விஷயங்களை அனாயசமாக செய்திருக்கிறாள்..! இத்தனைக்கும் இப்போது போல மிக்ஸி, கிரைண்டர் போன்ற வசதிகள் கிடையாது. ஏன் தண்ணீர் கூட வெளியிலிருந்து பிடித்துக் கொண்டு வர வேண்டும். இதில் வெள்ளிக் கிழமை அன்று ஒரு சுமங்கலியை சாப்பிட சொல்லி புடவை வைத்து கொடுப்பதும் நடக்கும்.
தீபாவளி அன்றும் அம்மாவுக்கு பட்சண ஜுரம் பிடிக்கும். அதற்க்கு நடுவில் எங்களுக்கு டிரஸ் கூட தைத்து கொடுத்திருக்கிறாள். விடியல் காலை தீபாவளி மருந்து கிளறி விட்டு, சுடச் சுட மைசூர்பாக் கிளறி கொட்டுவது அம்மாவின் வாடிக்கை. எங்களையெல்லாம் எண்ணை தேய்த்து குளிக்க வைத்து, புதிது அணியச் செய்து, நாங்கள் ஒரு கோர்ஸ் பட்டாசு வெடித்து விட்டு உள்ளே வந்ததும் எங்களுக்கு காபி கொடுத்து விட்டு துலா ஸ்நானம் செய்ய காவிரிக்கு கிளம்பி விடுவாள். வீட்டில் வேலை செய்பவர் உட்பட அத்தனை பேருக்கும் புது துணி வாங்கி கொடுக்கும் அம்மா ஒரு முறை கூட புதுசு அணிந்து கொண்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. நாங்கள் யாரும், "உனக்கு என்னம்மா வாங்கிக் கொண்டாய்"? என்று கேட்டதும் இல்லை.
No comments:
Post a Comment