வானப்ரஸ்தம்(சிறுகதை)
முதியோர் விடுதியில் வேலை செய்யும் சாந்தி அந்த விடுதி மேலாளர் சங்கரிடம் கூறினாள்.
"அப்டியா? என்னனு விசாரிக்கிறேன்.என்று சொல்லிக்கொண்டே இருக்கும் பொழுது டெலிபோன் அடித்தது.
சொல்லுங்கோ மேடம், பிளம்பர் வரலையா? நான் நேத்திக்கே சொல்லிட்டேனே.. மறுபடியும் போன் பண்றேன், இன்னிக்கு கண்டிப்பா சரி பண்ணிடலாம் மேடம், கவலைப் படாதீங்கோ..
இருபதாம் நம்பரில் வசிக்கும் சாருமதி ராஜகோபால். பிறந்ததிலிருந்தே வசதியாக வளர்ந்து விட்டவர்,போதாத குறைக்கு குழந்தைகளும் வெளி நாட்டில் வசிப்பதால் அவருக்கு எல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டும். கொஞ்சம் தாமதத்தை கூட ஏற்றுக் கொள்ள மாட்டார். நேற்று மாலை பாத்ரூம் குழாய் ஒழுகுகிறது என்றார். இன்று மதியத்திற்குள் இது நாலாவது போன். இன்று சரி செய்யா விட்டால், அமெரிக்காவில் எல்லாம் என்று ஆரம்பித்து அரை மணி பேசி, இந்த தேசம் எப்படி உருப்படும் என்று முடிப்பார்.
பிளம்பர் ராஜாவின் நம்பரைத் தேடி அழைத்தார், "சொல்லுங்க சார்"
"என்னப்பா நேத்திக்கு போன் பண்ணினேன், இன்னிக்கு கார்த்தாலே ஒன்பது மணிக்கு வரேன் சொன்ன... மணி இப்போ என்ன ஆறது.."?
"இல்ல சார்,பக்கத்துக்கு வீட்டு பையனுக்கு ஆக்சிடென்ட் ஆயிருச்சு.. ஆஸ்பத்திருக்கு அழைசிட்டு போக வேண்டியதா போச்சு..அதான்.., தோ வந்துட்டே இருக்கேன்.."
"சீக்கிரம் வா.." என்றவர் ஒழுகும் குழாயை அடைத்தால்தான் சாருமதியின் வாயை அடைக்க முடியும் என்று நினைத்துக் கொண்டார்.
அதற்குள் இண்டர்காமில் மற்றொரு அழைப்பு வந்தது. புதிதாக சேர்ந்திருக்கும் ராஜசேகர், " சார், நெட்லான் போடணும்னு சொல்லியிருந்தேனே.. உட்கார முடியல, கொசு ஆளை தூக்கிடும் போல இருக்கு.
சொல்லியாச்சு சார், மெஷர்மென்ட் எடுக்க நாளைக்கு வருவாங்க, அதுக்கு அப்புறம் டூ டேஸ்ல வந்து பிக்ஸ் பண்ணிடுவாங்க...
ஒ! அப்போ மூணு நாள் ஆகுமா? ஓகே, பக்கத்துல எங்க மெடிக்கல் ஷாப் இருக்கு? எனக்கு கொஞ்சம் மெடிசென்ஸ் வாங்கணுமே.."
பக்கத்துல.. ஒன்னும் கிடையாது, ரெண்டு கிலோமீட்டர் போகணும்.. என்ன வேணுங்கறதை எழுதி வையுங்க, ஈவினிங் கண்ணன் போவான், அவனிடம் கொடுத்தா வாங்கிண்டு வந்திடுவான்..
ஓகே! தாங்க்யூ!
சங்கர் இந்த முதியோர் இல்லத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்டு விளையாட்டு போல பத்து வருடங்கள் ஓடி விட்டன. அரசு வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி ஒய்வு பெரும் சமயத்தில் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் தான் நடத்தும் ஓல்ட் ஏஜ் ஹோமை நிர்வகிக்க தகுதியான ஆளை தேடிக்கொண்டிருப்பதாகவும், சங்கரால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்றும் கேட்டார்.
"தாராளமா சார். அப்படியே எங்களுக்கும் ஒரு வீடு அங்க குடுங்க.."
"இப்போ எல்லாம் புக் ஆயிடுச்சு, செகண்ட் பேஸ் ஆரம்பிக்கும் பொழுது புக் பண்ணிக்கங்க".
ஆனால் சங்கரின் மனைவிக்கு ஏனோ ஓல்ட் ஏஜ் ஹோம் என்னும் நினைப்பே பிடிக்கவில்லை.
"நம்பளை என்ன குழந்தைகள் கவனிக்காம ஹோமில் கொண்டு தள்ளிட்டாளா? எதுக்கு அங்க போகணும்"?
ஆனால் அந்த குழந்தைகளே, "ஏம்மா நீயும் அப்பாவும் தனியா இருக்கேள்? ஏதாவது நல்ல ஹோமில் இருங்களேன். பேப்பரில் படிக்கற நியூஸ் எல்லாம் பயங்கரமா இருக்கு... நீங்க ரெண்டு பெரும் ஹோமில் இருந்தால் நாங்களும் நிம்மதியா இருப்போம்..." என்று யோசனை சொன்ன பிறகு அரை மனதோடு ஒப்புக் கொண்டாள்.இருந்தாலும் அடிக்கடி மகனிடமும் மகளிடமும் செல்லாமல் இருக்க முடியாது. ஆரம்பத்தில் மனைவியோடு பயணித்த சங்கருக்கு அந்த நீ,,ண் ..ட பயணமும், அங்கெல்லாம் சென்றால் எல்லாவற்றிற்கும் குழந்தைகளை சார்ந்து இருக்க வேண்டி இருப்பதும், பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டி இருந்ததும் அலுப்பாக இருந்தது. ஹோமின் நிர்வாகத்தை காரணம் காட்டி வெளி நாட்டு பயணத்தை தவிர்க்க ஆரம்பித்தார்.
வங்கி மேலாளராக பலதரப்பட்ட மனிதர்களை சந்திப்பதற்கும், ஒரு முதியோர் இல்ல நிர்வாகியாக மனிதர்களை சந்திப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. அது ஒப்பனை செய்து கொண்ட முகம், இது வியர்த்துக் கொட்டிய, வேஷங்கள் கலைந்த நிஜ முகம்.
இங்கு வந்த பிறகுதான் தெரிகிறது கதைகளிலும், கவிதைகளிலும் படிப்பதை போல பெற்றோர்களை குழந்தைகள் கொண்டு வந்து தள்ளி விட்டு விட்டு ஓடி விடுவதில்லை. பெற்றோர்களிடமும் தவறு இருக்கிறது.
ஆறாம் நம்பர் விஜயராகவன் ஹோமிற்கு வந்ததற்கு ஒரு டி.வி. சீரியல் காரணம். அவர் வழக்கமாக பார்க்கும் சீரியலை பார்க்க விடாமல் பேரன் ஏதோ ஒரு ஆங்கில சீரியல் பார்க்க அதனால் ஏற்பட்ட வாக்குவாதம் பெரிய சண்டையில் முடிந்து கோபித்துக் கொண்டு இங்கே வந்து விட்டார்.
எட்டாம் நம்பர் ஸ்ரீனிவாசன் தஞ்சையில் நிலசுவான்தார், ஆள், படை இவைகளை மிரட்டி, உருட்டி வேலை வாங்கி பழக்கப்பட்டவர். மனைவி மறைந்த பிறகு மகனோடு சென்னைக்கு வந்தார். அந்த மண்ணுக்கே உரிய விகண்டை பேச்சு மருமகளுக்கும்,ஏன் மகனுக்குமே எரிச்சலூட்ட, "இந்த மிட்டா மிராசுத்தனத்தை எல்லாம் இங்க காட்டாதீங்க" என்று மகன் எச்சரிக்க, "போடா நீயும் உன் வீடும்" என்று கோபித்துக் கொண்டு வந்து விட்டார். மகனும்,மருமகளும் இரண்டு மூன்று முறை வந்து மன்னிப்பு கேட்டனர். அப்பொழுது கூட அவர் முகம் கொடுத்து பேசவில்லை. இப்போதும் அவ்வப்பொழுது வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்தான் முகம் கொடுத்து சரியாக பேச மாட்டார். அவர்கள் சென்ற பிறகு மற்றவர்களிடம் "இவன் எதுக்கு வரான்? சொத்தை நான் எங்கேயாவது இந்த ஹோமுக்கு எழுதி வெச்சுடேப் போறேன்னு பயம்". என்பார்.
மும்பையிலிருந்து வந்திருக்கும் ஹேமா ராகவன் அரசு வேலையிலிருந்து ஒய்வு பெற்றவர். மகன்கள் இருவரும் மும்பையிலேயே இருக்கிறார்கள். அவர்களோடு இவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், "நான் ஏன் அவர்களோடு இருக்க வேண்டும்? இத்தனை நாட்கள் நான் வீடு, வேலை, குழந்தைகள் என்று உழைத்து விட்டேன். இனிமேலாவது என் விருப்பப்படி கோவில், கச்சேரி என்று வாழ ஆசைப் படுகிறேன். அவர்களோடு இருந்தால் காலிங் பெல் அடிக்கும் பொழுது, திறந்து விட்டு, கூரியர் வாங்கி வைத்து, அவர்கள் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்தால் பால் கலந்து கொடுத்து, சாப்பிட கொடுத்து,, சம்பளமில்லாத வேலைக்காரர்கள் போல உழைக்க வேண்டி இருக்கிறது".
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கிறது. பல வருடங்களாக மனத்திலும், புத்தியிலும் பதிந்து போய் விட்ட விஷயங்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை. மாறுதல்களை புரிந்து கொள்ளாவும், ஏற்றுக் கொள்ளவும் விருப்பமில்லை இதில் மகனையும், மருமகளையும், ஏன் குறை கூற வேண்டும்?
ஐந்தாம் நம்பர் வரை போய் விட்டு வரலாம் என்று மேஜை ட்ராயரை மூடி, மின் விசிறியை நிறுத்திவிட்டு வெளியே வந்து ரூம் கதவை பூட்டும் பொழுது கண்ணன் வருவது தெரிந்தது.
வாங்கி வர வேண்டிய சாமான்களின் லிஸ்ட் நல்ல வேளையாக சட்டைப் பையில் இருந்தது. அதை எடுத்து கண்ணனிடம் கொடுத்து விட்டு, "புதுசா வந்திருக்காரே தாமோதரன், அவருக்கு ஏதோ மருந்து, மாத்திரை எல்லாம் வேணுமாம் என்னனு கேட்டு வாங்கி கொடு"
லிஸ்டை வாங்கி சென்றவன் சற்று நேரத்திற்கெல்லாம் செல்லில் கூப்பிட்டான், "சார், அவர் ரூம் பூட்டியிருக்கு, எங்கனா போயிருக்காரா"?
பூட்டியிருக்கா? என்னப்பா? இது? எங்கிட்ட எதுவும் சொல்லலியே..?
நடக்கப் போயிருப்பாரோ?
சாதாரணமாக ஹோமில் நடப்பவர்கள் அதைச் சுற்றித்தான் நடப்பார்கள், அங்கு எங்கும் தாமோதரனைக் காணவில்லை. வாட்ச்மேனை கேட்டபொழுது, ஆமா, சார், அரை அவருக்கு முன்னால வெளில போனாரே என்றான்.
எங்க போறார்னு கேட்டியா
அது எப்படி சார், நான் கேக்க முடியும், உங்க கைல சொல்லிட்டுதான் போறார்னு நினைச்சேன்.
கைலயும் சொல்லல, காதுலயும் சொல்லல..
இப்போ எங்க போய் தேடறது?
அவருடைய செல் போனில் தொடர்பு கொண்டால், அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக சொல்லியது. அவருடைய அண்ணா பிள்ளையின் தொலைபேசி எண்ணைதான் அவசரத்திற்கு அழைக்கக் கூடிய நபர் என்று குறிப்பிட்டிருந்தார். அவரை அழைத்த பொழுது, "சித்தப்பா இங்கே வரலையே" என்றார்.
மேற்கொண்டு என்ன செய்வது?...
(சங்கர் என்ன செய்தார் என்று தெரிந்து கொள்ள கொஞ்சம் காத்திருக்கலாம்)
நானும் அடுத்த பதிவில் வந்து பார்க்கிறேன்..!
ReplyDelete:))
Most welcome!
Deleteஅவசரம் பொறுக்க முடியாம அவரே மருந்தை வாங்கிண்டு வரப் போயிருப்பார். :)
ReplyDeleteit is true that abundant patience is required to handle certain senior citizens.....senior citizens should develop patience perseverance tolerance etc to enable their rest of their lives peaceful.....ji
ReplyDelete