எளிய மனிதர்கள்,பெரிய உண்மைகள்.
சில சமயங்களில் அதிகம் படிக்காத எளிய மனிதர்கள் மிக உயர்ந்த தத்துவங்களை அனாயசமாக சொல்லிச் சென்று விடுவார்கள். என் வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண் கோடை காலம் ஆரம்பித்ததிலிருந்து தினமும்," ராத்திரி தூக்கமே இல்லை, கரண்ட் போய் விட்டது வீட்டிற்குள் காற்று வருவதற்கு வழியே இல்லை. அதனால் தூக்கமே இல்லை.." என்று புலம்புவாள். அதைத்தவிர அவள் குடியிருப்பது முதல் மாடியில். தண்ணீர் வேறு கீழிருந்து மேலே வர வேண்டியிருக்கிறது என்பதும் குறை. வேறு வீடு மாற்றி விடலாம் என்று தேடித் கொண்டிருந்தாள். சென்ற மாத ஆரம்பத்தில் வீடு மாற்றியும் விட்டாள்.
அவள் வீடு மாற்றி ஒரு வாரம் கழிந்து, "புது வீடு வசதியாக இருக்கிறதா?" என்று அவளிடம் கேட்டேன். "யாரும் அப்போ சொல்லவில்லை இப்போ, அந்த வீட்டுக்கா போய் இருக்கிறாய்? தண்ணியே விடாதே அந்த பொம்பள என்கிறார்கள். ஒரு நாளைக்கு ரெண்டு குடம்தான் விடறாங்க, தெரு முனையிலிருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டி இருக்கு..." என்று அலுத்துக் கொண்டாள்.
"அட கஷ்டமே! முன்னாலேயே விசாரித்திருக்க மாட்டாயோ?" என்று நான் சொன்னதும், "என்னவோ போங்க, எதெல்லாம் அனுபவிக்கனும்னு இருக்கோ, அதை எல்லாம் அனுபவித்து கழித்து விடலாம். இப்படியேவா இருந்துடும்? எல்லாம் ஒரு நாள் மாறும்.. சுகப் படும் பொழுது யார்கிட்ட போய் சொன்னோம்? என்றாள்.
நான் அசந்து போனேன். பள்ளிக்கூட வாசலை கூட மிதிக்காதவள், எப்பேர்ப்பட்ட விஷயத்தை வெகு சாதாரணமாக சொல்லி விட்டாள்?
எதெல்லாம் அனுபவிக்கனும்னு இருக்கோ, அதை எல்லாம் அனுபவித்து கழித்து விடலாம். - எதிலிருந்தும் தப்பித்துக் கொள்ள நினைக்கக் கூடாது.
இப்படியேவா இருந்துடும்? எல்லாம் ஒரு நாள் மாறும்.. - இதுவும் கடந்து போகும்.
இந்த விஷயங்களைத்தானே நாம் மீண்டும் மீண்டும் ஆன்மீக சொற்பொழிவுகளில் கேட்கிறோம், அதை எத்தனை அனாயசமாக கூறி விட்டாள் படிப்பறிவில்லாத ஒரு எளிய பெண்!
இப்படிப்பட்டவர்களிடமிருந்து நிறைய நானும் கற்று தெளிவுபெற்றிருக்கிறேன் .நானும் யோசிப்பதுண்டு படிச்சா வேலையிருந்தா நிறைய சம்பளமிருந்தாலும் கிடைக்காத அறிவும் ஞானமும் இவர்களிடம் கொட்டி கிடக்கிறதே என்று ..
ReplyDeleteபாசிட்டிவ் திங்க்கிங் அணுகுமுறை என்பது தானாய் வரணும் போல
படிப்பதால் வருவது அறிவு. இது அனுபவத்தால் கிடைக்கும் தெளிவு!
Deleteவருகைக்கு நன்றி ஏஞ்சலின்.
சொன்னதும் அதை அழகாகச்
ReplyDeleteசொல்லியுள்ளதும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!
Deleteஎனக்கும் இது மாதிரி கேட்ட அனுபவங்கள் உண்டு. வாழ்க்கை அனுபவங்கள் அவர்களை பேசவைக்கிறது. அருமை.
ReplyDeleteஉண்மைதான் ஸ்ரீராம், வருகைக்கு நன்றி!
Deleteவாழ்வியல் அனுபவங்கள் பலருக்கும் ஞானத்தை வழங்கிவிடும்
ReplyDeleteஆமாம்! அனுபவத்தை விட வேறு சிறந்த ஆசான் உண்டா என்ன? வருகைக்கு நன்றி!
Deleteஇன்னும் குழந்தைகளிடமும் நிறைய கற்றுக் கொள்ளலாம்...
ReplyDeleteVery true! குழந்தை வளர்ப்பு என்று யாராவது கூறினால் நான்,நாமா குழந்தைகளை வளர்க்கிறோம், அவர்கள்தானே நமக்கு நிறைய கற்றுத் தருகிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன். வருகைக்கு நன்றி DD சார்.
Deleteபடித்தவர்கள் அனைவரும் அறிவாளிகள் அல்ல !
ReplyDeleteபடிக்காதவர்கள் அனைவரும் முட்டாள்களும் அல்ல !
என்ற வாக்கு உண்மையானது.
இதை அறிவு என்பதை விட தெளிவு என்று கூறலாமா? எழுத்து மூலம் பாராட்டியதோடு தொலைபேசியிலும் தொடர்பு கொண்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.
Deleteஎளியவர்கள் நமக்கு கற்று தரும் அனுபவ உண்மைகள் ஆனால் அதை நாம் இக்னோர் செய்துவிட்டு அதையே நாம் பட்டிமன்றங்களில் அல்லது சொற்பொழிவுகளில் கேட்க்கும் போது கைதட்டி பாராட்டி மகிழ்வோம்
ReplyDeleteஎல்லாவற்றிற்கும் ஒரு விளம்பரம் வேண்டியிருக்கிறதே..! வருகைக்கு நன்றி!
Deleteஆம் உண்மைதான் வாயிலில் வரும் யாசிப்பவர்களிடம் கூட நிறைய கற்றுக் கொள்ள முடியும். எல்லாம் கடந்து போகும்....நாம் தான் அரற்றிக் கொண்டிருக்கிறோம்.
ReplyDeleteஇந்தப் பாடல் நினைவுக்கு வருகிறது புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை....வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை. புத்திசாலித்தனம் என்பது நமது வாழ்க்கையைக் கடந்து செல்வதுதான் இல்லையா??!! அனுபவம் தான் உண்மையிலேயே மிகச் சிறந்த ஆசிரியர் அதிலிருந்து நாம் கற்றுக் கொண்டால்...
---துளசி, கீதா
மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள் துளசி, கீதா. நன்றி!
Deleteஅனுபவம் பேசுகிறது.
ReplyDeleteஉண்மை தான் கீதா அக்கா.நன்றி
Deleteபடித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு
ReplyDeleteகில்லர்ஜிக்கு கூறியதையே உங்களுக்கும் சொல்கிறேன். இதை அறிவு என்பதை விட தெளிவு என்று கூறலாம். வருகைக்கு நன்றி.
Deleteபடித்த அறிவை விட
ReplyDeleteபட்ட அறிவு (அனுபவம்) பெரிது
உண்மைதான் ஐயா. வருகைக்கு நன்றி
Delete"சுகப்படும்போது யார்கிட்ட சொன்னோம்" - நல்ல அனுபவ வரிகள்.
ReplyDeleteஇந்த பதிவே அனுபவத்தின் வெளிப்பாடுதான். நன்றி
Delete// "என்னவோ போங்க, எதெல்லாம் அனுபவிக்கனும்னு இருக்கோ, அதை எல்லாம் அனுபவித்து கழித்து விடலாம். இப்படியேவா இருந்துடும்? எல்லாம் ஒரு நாள் மாறும்.. சுகப் படும் பொழுது யார்கிட்ட போய் சொன்னோம்? //
ReplyDeleteபடிப்பறிவை விட பட்டறிவே சிறந்தது என்பதைத் தன் சொற்களால் நிரூபித்து விட்டாள், தங்கள் வீட்டில் வேலை செய்யும் அந்த பணிப்பெண்.
பகிர்வுக்கு நன்றிகள்.
ஏட்டு கல்வியை விட வாழ்க்கை கல்விதானே சிறந்தது. வருகைக்கு நன்றி.
Delete