தனிமையில் ஒரு கொண்டாட்டம்!
எங்கள் வீட்டு விநாயகர் |
என் வாழ்க்கையில் நானும் என் கணவரும் மட்டும் தனியாக கொண்டாடிய முதல் விநாயகர் சதுர்த்தி இந்த வருடம்தான்.
திருமணத்திற்கு முன்பு எங்கள் வீட்டில் எல்லா பண்டிகைகளும் உறவினர்களோடு சேர்ந்துதான் கொண்டாடுவோம்.
திருச்சியிலேயே இருந்த எங்கள் மாமாக்களின் குடும்பத்தார்கள் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள். வீடு நிறைய மனிதர்கள் இருப்பார்கள். குறிப்பாக விநாயகர் சதுர்த்தியும், தீபாவளியும் எல்லோரும் சேர்ந்துதான் கொண்டாடுவோம்.
*நாங்கள் கணபதி அக்கிரஹாரத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் வீட்டில் பிள்ளையார் சிலை வாங்கி பூஜிக்கக்கூடாது. என் அப்பா பிள்ளையார் படம் ஏன் பிள்ளையார் படம் போட்ட காலண்டர் கூட வைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டார். கோவிலுக்கு சென்றுதான் அர்ச்சனை செய்து, நைவேத்தியம் செய்து விட்டு வர வேண்டும். அதனால் காலை எட்டரை மணிக்குள் பிரசாதம் ரெடியாகி விடும். அப்பா எங்களை அழகிரி குதிரை வண்டியில் திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச் செல்வார். அங்கிருக்கும் மாணிக்க விநாயகருக்கு அர்ச்சனை செய்து விட்டு, பட்டர் ஒர்த் ரோடில் இருந்த அத்தை வீட்டிற்கு சென்று பிரசாதம் கொடுத்து விட்டு வருவார். வண்டியிலிருந்து எங்களை இறங்க விட மாட்டார். நாங்களெல்லாம் இறங்கினால் நேரமாகி விடும் என்று பயம். அத்தை வீட்டில் பெரும்பாலும் பூஜை நடந்திருக்காது, சில சமயம் பூஜை முடிந்திருந்தால் அத்தை அவர்கள் வீட்டு பிரசாதம் கொடுப்பாள். எல்லா வருடமும், "வாசல் வரை வந்து விட்டு, உள்ளே வராமல் போகிறீர்களே" என்பாள். அப்பாவும் எல்லா வருடமும்," மணியாகி விட்டது, அங்கே எல்லோரும் காத்துக் கொண்டிருப்பார்கள்,போய் சாப்பிட வேண்டும்" என்பார்.
அம்மா, பாட்டி,மாமி என்று நாங்கள் எல்லோரும் சேர்ந்து கொழுக்கட்டை செய்வோம். குழந்தைகளாகிய நாங்கள் கொழுக்கட்டைக்கு சொப்பு செய்து கொடுப்போம், அம்மாவும், மாமியும் பூர்ணம் வைத்து மூடுவார்கள். மாமி கொழுக்கட்டையின் மூக்கு பெரிதாக இருந்தால், "உன் மூக்கு மாதிரி பெரிய மூக்கு, இது என் மூக்கு மாதிரி சின்ன மூக்கு, இது ஜப்பான்காரன் போல சப்பை மூக்கு" என்றெல்லாம் பேசிக் கொண்டே செய்வார். காலையில் எல்லோருக்கும் இலையில் போடுவதற்கு கொஞ்சம் செய்து விட்டு, மாலையில் மீண்டும் ஒரு செஷன் கொழுக்கட்டை செய்வோம். பூர்ண கொழுக்கட்டையும் அம்மணி கொழுக்கட்டையும் மாலை மற்றும் இரவு நேர மெனு.
திருமணமாகி மஸ்கட்டில் இருந்த பொழுது நண்பர்கள் யாராவது வருவார்கள். பிறகு குழந்தைகள் இருந்தார்கள். இருவருக்கும் திருமணமாகி அவரவர் வீட்டில் கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் எங்களாலும் மகன் வீட்டிற்கு செல்ல முடியவில்லை, அவர்களுக்கும் இங்கு வர இயலவில்லை. எனவே நாங்கள் மட்டும் தனியாக கொண்டாடுகிறோம். தனியாக பண்டிகை கொண்டாடுவதைப் போல் போர் வேறொன்றும் இல்லை.
கணவருக்கு இனிப்பு சாப்பிட முடியாது, வெறும் பழங்களை மட்டும் வைத்து நைவேத்தியம் செய்து விடலாமா? என்று தோன்றியது. ஆனலும் பழக்கத்தை விட மனமில்லாமல் பாயசம், வடை, அப்பம், கொழுக்கட்டை(பூர்ணம்,எள்ளு பொடி) என்று எல்லாம் செய்து விட்டேன். யார் சாப்பிடுவது? சுண்டல் வேறு இருக்கிறது..
வலை உலக நண்பர்கள் யாரையாவது கூப்பிட்டிருக்கலாம்.ஏனோ கில்லர்ஜியின் பெயர்தான் நினைவுக்கு வருகிறது. :)
-------------------------------------------------------------------------------------------------------------
* கணபதி அக்கிரகாரம் என்பது திருவையாருக்கும் கும்பகோணத்திற்கும் இடையில் உள்ள கிராமம். இங்கு வசிப்பவர்களுக்கு விநாயகரே எல்லாமும். பிள்ளையார் என்றால் கணபதி அக்கிரஹார பிள்ளையார்தான் என்பதால்தான் வீட்டில் வேறு பிள்ளையார் படங்கள் வைத்துக் கொள்வதில்லை. அந்த ஊரில் விநாயக சதுர்த்தி அன்று எல்லா வீட்டிலிருந்தும் வரும் பிரசாதங்களை ஒன்றாக கலந்து ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து பிறகு எல்லோரும் எடுத்துக் கொள்வார்கள். அன்று வழக்குகள் தீர்த்து வைக்கப்படும், சகோதரர்களுக்குள் பாகப் பிரிவினை கூட அன்றுதான் நடக்கும் என்றெல்லாம் கேள்வி பட்டிருக்கிறேன்.
நாங்கள் பல தலைமுறைகளுக்கு முன்பாக கண்டமங்கலத்தில் வந்து செட்டில் ஆகி விட்டாலும், விநாயக சார்த்தி அன்று எங்கள் ஊரில் உள்ள பிள்ளையார் சன்னிதியில் எங்கள் தாயாதிகள் எல்லோரும் ஒன்றாக அர்ச்சனை செய்து, எல்லார் வீடு ப்ரசாதங்களையும் கலந்து நைவேத்தியம் செய்து பின்னர் பகிந்து கொள்வார்கள்.
தஞ்சாவூரில் கணபதி அக்ராஹாரம் என்று ஒரு ஸ்டாப்பிங் உண்டு. அதுவோ என்று நினைத்தேன். நீங்களே விளக்கம் கொடுத்து விட்டீர்கள்!
ReplyDeleteவிரிவாக முன்பு ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.வருகைக்கு நன்றி!
Deleteமிக்க மகிழ்சி உன் மனதில் தோன்றியதை அருமையாக பகிற்ததற்கு 😊👏
ReplyDeleteநன்றி
Deleteதுளசி: அழகான விவரணம்!!! விநாயகர் சதுரித்தி எல்லாம் கேரளத்தில் ஏனோ லீவு எல்லாம் விட்டு கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு இருந்தால் அவர்கள் வீட்டில் கொண்டாடிப் பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteஏதாவது கோயிலில் இந்தக் கொழுக்கட்டை கிடைத்தால் உண்டு. இங்கு பிரசாதம் வழங்கும் பழக்கமும் இல்லையே.
கீதா: ஹை எள்ளுப் பூரணம்!! ரொம்பப் பிடிக்கும்! நேற்று நான் நிலக்கடலைப் பூரணம் செய்தேன். பூரணமாகச் செய்யாமல் அப்படியே மாவில் கலந்து விட்டு கொழுக்கட்டைகளாக உருட்டியும் விட்டேன் வழக்கமாகச் செய்யும் பூரணக் கொழுக்கட்டையுடன்...உப்புப் பூரணமும் செய்தேன். எப்படியோ பிள்ளையார் வந்தார்தானே!!
@துளசி: கேரளீயர்களிடம் ஒரு விசித்திரம்,இந்தியா முழுவதும் ஜோராக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியையும்,தீபாவளியையும் அவர்கள் கொண்டாட மாட்டார்கள். அவர்கள் சிறப்பாக கொண்டாடும் ஓணம் மற்றும் விஷுவை மற்ற மாநிலங்களில் அத்தனை சிறப்பாக கொண்டாடுவதில்லை. வருகைக்கு நன்றி!
Delete@கீதா: விநாயகரை வரவழைத்ததில் மகிழ்ச்சி.😊
கணபதி அக்ரஹாரம் நடைமுறை பற்றி ஜீவி சாரும் ஒரு முறை பகிர்ந்திருக்கிறார். அவருக்கும் அந்த ஊர் தான் என நினைக்கிறேன். எள்ளுப் பூரணம் எங்க அம்மாவ் ஈட்டில் கட்டாயமாய் உண்டு. இங்கே செய்யும் வழக்கம் இல்லை என்பதால் பிறந்த வீட்டிலிருந்து வரும் எள்ளுக் கொழுக்கட்டைக்கு ஆவலுடன் காத்திருப்பேன். மதுரை முக்குறுணி விநாயகருக்கு அரிசியோடு எள், தேங்காய் சேர்த்துத் தான் கொழுக்கட்டை செய்வார்கள். உங்கள் தகவலுக்கு நன்றி. நேற்று எங்களுக்கு எதிர்வீட்டுக் கொழுக்கட்டை கிடைத்தது. நாங்கள் பல வருடங்களாகத் தனியாய்த் தான் கொண்டாடி வருகிறோம். பழகி விட்டது. அம்பத்தூர் என்றால் அக்கம்பக்கம் கொடுக்கவோ அவங்க நமக்குக் கொடுக்கவோ செய்வது உண்டு. இங்கே அப்படி யாரும் கொடுத்து வாங்குவதில்லை. நேற்று வந்ததே எதிர்பாரா ஆச்சரியம்! :)
ReplyDeleteஆமாம் ஜி.வி.சாருக்கும் கணபதி அக்கிரகாரம்தான் சொந்த ஊர் என்று சொன்னார்.
Deleteநாங்கள் இனிமேல்தான் தனிமையில்பண்டிகைகள் கொண்டாட பழகிக் கொள்ள வேண்டும்.
"அம்மா வீட்டில்" என்று படிக்கவும். கவனிக்கவில்லை! :(
ReplyDeleteIt's O.K.,
Deleteபதிவர் ஜீவியின் ஊரும்கணபதி அக்ரகாரமென்றுபகிர்ந்த நினைவு,அந்த ஊர் நடைமுறைப் பழக்கங்கள்கேள்விப்படாதது
ReplyDeleteஆமாம்!
Deleteகணபதி அக்ரஹாரம் - புதிய தகவல் எனக்கு.
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
முன்பு கணபதி அக்கிரகாரம் குறித்து பதிவு எழுதியிருக்கிறேன். இது போல வித்தியாசமான பழக்கங்கள் கொண்ட பல கிராமங்கள் நம் நாட்டில் உண்டு. வாழ்த்திற்கு நன்றி!
Deleteமுன்பு கணபதி அக்கிரகாரம் குறித்து பதிவு எழுதியிருக்கிறேன். இது போல வித்தியாசமான பழக்கங்கள் கொண்ட பல கிராமங்கள் நம் நாட்டில் உண்டு. வாழ்த்திற்கு நன்றி!
Delete