கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, August 30, 2017

விளாம்பழ பச்சிடி

விளாம்பழ பச்சிடி 
















தேவையான பொருள்கள்: 

விளாம்பழம் - 2(விநாயகர் சதுர்த்திக்கு வாங்கியது இருக்குமே)
வெல்லம்(பொடித்தது) - விளாம்பழ விழுது அளவு. இனிப்பு பிடித்தவர்கள் கொஞ்சம் அதிகம் போட்டுக் கொள்ளலாம்.
உப்பு - 1/2 டீ ஸ்பூன் 
தாளிக்க - கடுகு - 1/4 டி ஸ்பூன், மிளகாய் வற்றல் - 1, எண்ணெய் 




செய் முறை:

விளாம்பழம் பழுத்ததும்(முகர்ந்து பார்த்தால் வாசம் வரும்) அதை தரையில் கொஞ்சம் வேகமாக தட்டினால் உடைந்து விடும். உள்ளே இருக்கும் சதைப்பகுதியை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, கொஞ்சம் வெதுவெதுப்பான வெந்நீரை ஊற்றி ஊற வையுங்கள். இரண்டு நிமிடங்கள் கழித்து ஊறவைத்த விளாம்பழத்தை சாம்பாருக்கு புளி கரைப்பது போல பிசைந்தால், பழத்தின் கோது (நார் போன்ற பகுதி) கையில் தட்டுப்படும். அவற்றை தனியே வைத்து விட்டு, உப்பு, வெல்லம் இவைகளை சேர்த்து, அடுப்பில் சின்ன தீயில் வைத்து வெல்லம் நன்றாக கரையும் வரை அடி பிடிக்காமல் கிளறவும். பின்னர் இறக்கி வைத்து, கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து இறக்கினால் சுவையான, சத்தான விளாம்பழ பச்சிடி தயார். இதை சாம்பார் சாதம், புளி சேர்க்காமல் செய்யும் பொறித்த குழம்பு, மிளகூட்டல் போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம்.    


விளாம்பழத்தின் பயன்கள்:

வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பல வயிற்று உபாதைகளுக்கு நல்ல மருந்து. சர்க்கரை நோயை குணப்படுத்துவதிலும், புற்று நோய் வராமல் தடுப்பதிலும் சிறப்பான பங்கு வகிக்கிறது. ஆடி, ஆவணி, புரட்டாசியில்தான் அதிகம் கிடைக்கும். தவற விடாமல் வாங்கி சாப்பிடுங்கள். 

14 comments:

  1. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. சுவைத்து ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனக்குதான் பிடிக்காது! ஹி ஹி ஹி ஹி ​

    ReplyDelete
    Replies
    1. அடடா! அப்படியா? முன்பே தெரியாமல் போய் விட்டதே? தெரிந்திருந்தால் பார்சல் அனுப்பியிருப்பேனே ;)

      Delete
  3. யெஸ் வாங்கிச் சாப்பிட்டும் ஆச்சு! விளாம்பழப் பச்சடி.. ஆனால் என்ன வாங்கியது அவ்வளவாகப் பழுத்திருக்கவில்லை. உள்ளே கொஞ்சம் வெள்ளையாகத்தான் இருந்தது. அதனால் அதன் துவர்ப்பு அதிகமாக இருந்தது....மிக மிக நல்ல சத்துள்ள பழம். மிகவும் பிடிக்கும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. விளாம்பழ சீசனில் நான் தவற விடவே மாட்டேன். சில சமயங்களில் பழுக்கும் என்று காத்திருந்தால் பழுக்காமல் உள்ளே பூசணம் பிடித்து விடும். எனவே பழுக்க வேண்டும் என்று காத்திருக்காமல் சீக்கிரம் உடைத்து விடுவேன். இந்த முறை சரியான நேரத்தில் உடைத்தேன்.

      Delete
  4. நீங்கள் வாங்கியிருப்பது நன்றாகப் பழுத்திருப்பது தெரிகிறது...நல்ல மணமாக இருந்திருக்குமே..

    துளசி: விளாம்பழம் தெரியும் ஆனால் அதை இப்படி எல்லாம் செய்தது இல்லை எங்கள் வீட்டில்..

    ReplyDelete
    Replies
    1. // நீங்கள் வாங்கியிருப்பது நன்றாகப் பழுத்திருப்பது தெரிகிறது...நல்ல மணமாக இருந்திருக்குமே..//
      நான் வாங்கிய பழத்தை புகைபடமெடுக்க மறந்து விட்டேன். இது கூகுளார் வீட்டினது..ஹி..ஹி

      Delete
  5. இம்முறை பச்சடியாகப் பண்ணாமல் பழத்தோடு வெல்லத்தூள், ஏலக்காய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டோம். பச்சடி செய்தாலும் நான் அடுப்பில் வைத்தது இல்லை. நல்ல பெரிய பழம், நிறையக் கதுப்பு உள்ளே!

    ReplyDelete
    Replies
    1. //பச்சடி செய்தாலும் நான் அடுப்பில் வைத்தது இல்லை.// அடுப்பில் அதிக நேரம் வைக்க மாட்டேன், பச்சை வாசனை போவதற்காக ரெண்டு நிமிடமும் மட்டுமே.
      //நல்ல பெரிய பழம், நிறையக் கதுப்பு உள்ளே!// நீங்கள் வாங்கிய பழத்தை சொல்கிறீர்களா?

      Delete
  6. அருமையான குறிப்பு! ஆனால் பெருமூச்சும் கூடவே எழும்புகிறது! நல்ல விளாம்பழத்தை இப்போதெல்லாம் பார்க்கவே முடியவில்லை!

    ReplyDelete
  7. இந்த முறை நல்ல இனிப்பாய் கிடைத்தது அதை ஜூஸ் செய்து குடித்து விட்டோம். நன்றாக இருந்தது.
    இந்த தடவை வாங்கியது மிக நல்ல விளாம்பழம்.
    உங்கள் பச்சடி செய்முறை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. விளாம்பழத்தில் ஜூஸா? ரெசிபி ப்ளீஸ்! பாராட்டுக்கு நன்றி!

      Delete