என் பின்னூட்டங்கள்
பெரும்பாலும் என் பின்னூட்டங்கள் கடைசியில்தான் வரும். காரணம் எனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தில் பதிவுகளை படித்து முடிக்கவே நேரம் சரியாக போய் விடும். பிறகு தனியாக பின்னூட்டம் இடுவேன். சில சமயம் ரொம்ப நாளாகி விட்டது, இனிமேல் பின்னூட்டம் அளித்தாலும், அதை எழுதியவரே படிப்பாரோ மாட்டாரோ என்ற தயக்கம் எழுத விடாது. சில சமயங்களில் போன் வழியாக அனுப்பும் பின்னூட்டங்கள் போய் சேரவே சேராது :((
எதற்கு இவ்வளவு வியாக்கியானம்? கீதா அக்காவின் யார் யாரை மன்னிப்பது என்னும் பதிவிற்கு பின்னூட்டம் எழுத நினைத்தேன், ஆனால் நாட்கள் மிக அதிகமாகி விட்டதால் தனி பதிவாகவே எழுதி விடலாம் என்று தோன்றியது. நீங்களும் என் பதிவை படிக்கும் முன் கீதா அக்காவின் மேற்படி பதிவை ஒரு முறை படித்து விட்டால், தொடருவது சுலபமாக இருக்கும்.
கீதா அக்கா தன்னுடைய பதிவில் ராமன் ராவண வாதத்திற்குப் பிறகு சீதையை தீக்குளிக்கச் சொன்னதை தவறு கிடையாது என்று நியாயப்படுத்தி இருக்கிறார். மேலும், தனக்கு கம்ப ராமாயணத்தில் அத்தனை பரிச்சயம் கிடையாது என்றும், வான்மீகி ராமாயணம் மற்றும் துளசி தாஸரின் ராமா சரித மாநஸ் படித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இன்னும் துளசி தாசரும், கம்பரும் ராமனை தெய்வமாகவே சித்தரித்திருக்க, வான்மீகி மட்டுமே ராமனை ஒரு மனிதனாக கண்டுள்ளார் என்றும் கூறியிருக்கிறார்.
இதிலெல்லாம் எனக்கும் உடன்பாடுதான். என்னுடைய ஒரே சந்தேகம் சீதை அக்னி பிரவேசம் செய்தாள் என்றால் நிஜமாகவே நெருப்பில் புகுந்து எந்த வித சேதாரமும் இல்லாமல் வெளிப்பட்டாளா? என்பதுதான். ராமனையும், சீதையையும் அவதாரங்களாக கருதினால் இதை மறு பேச்சில்லாமல் ஒப்புக் கொள்ளலாம்,அப்படி இல்லாமல் சாதாரண மனிதர்கள் என்னும் பொழுது இது சாத்தியமா? என்று சந்தேகம் வருகிறது.
எனக்குத் தெரிந்த ஒரு பேராசிரியர்,"புராணங்களை படிக்கும் பொழுது சில விஷயங்களை ஓவர் லுக் செய்ய வேண்டும், சில விஷயங்களை நுட்பமாக ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும், சிலவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பார். லக்ஷ்மணன் பதினான்கு வருட வனவாசத்தில் தூங்கவே இல்லை என்பதை ஓவர் லுக் செய்ய வேண்டும், அவன் அப்படி கண்ணும் கருத்துமாக ராமனை கவனித்துக் கொண்டான் என்பதுதான் அதற்குப் பொருள் என்பார். இந்த அக்னி பிரவேச விஷயமும் அப்படிப்பட்ட ஒன்று என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
ஒவ்வொரு கால கட்டத்திலும் சில சொற்கள், அல்லது pharseகள் புழக்கத்தில் இருக்கின்றன. இப்போது, "அவனை செஞ்சுடணும்", "வெச்சு செய்யணும்" என்றெல்லாம் கூறினால், அது நல்லவிதமானது அல்ல. அதைப் போல, ''கேக் வாக்" என்றால் மிகவும் சுலபமானது என்றுதானே பொருள் கொள்வோம். நிஜமாகவே கேக்கின் மீது நடப்பது கிடையாதே. அதைப் போல அந்த கால கட்டத்தில் எதிர் கொள்ள மிகவும் கடினமாக இருப்பதை அக்னி பிரவேசம் என்று குறிப்பிட்டிருக்கலாம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய அரசியல் வாழ்க்கையை பற்றி கூறும் பொழுது, "நெருப்பு ஆற்றில் நீந்தி வந்தேன்" என்றதை எப்படி புரிந்து கொண்டோம்?
இப்படி abstract ஆக பல விஷயங்கள் நம் புராணங்களிலும், இதிகாசங்களிலும் உண்டு. ஒரு முறை திரு.ஜெய ராமா சர்மா அவர்கள் ராமாயண பிரவசனம் ஒன்றில் அகலிகையின் சாபத்தை பற்றி கூறும் பொழுது, "அகலிகையை கல்லாக போகும்படி கௌதமர் சபித்தார் என்றால், நாம் எல்லோரும் நினைக்கும்படி அவள் உணர்ச்சிகள் அற்ற வெறும் பாறையாக சமைந்து விடவில்லை. அவளுக்கு எல்லா உணர்வுகளும் இருக்கும் ஆனால், அனுபவிக்க முடியாது. பசிக்கும், சாப்பிட முடியாது, தாகம் எடுக்கும், தண்ணீர் அருந்த முடியாது, நகர வேண்டும் போலிருக்கும் ஆனால் இயலாது(அப்பா எத்தனை கொடுமை?) என்றார். காரணம், தன்னோடு இருப்பது தன் கணவர் அல்ல என்று அகலிகைக்கு தெரிந்து விடுகிறது, ஆனாலும், சரீர சுகத்தை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் அவள் இருந்ததால் சரீர சுகம் எதையும் அனுபவிக்க முடியாமல் கல் போல கிடக்க வேண்டும் என்று சபித்தாராம் கௌதமர்.
மஹா பாரதத்தில் குந்தியும், மாதுரியும் surrogate motherகளாக இருந்து பாண்டவர்களை ஈன்றிருக்கிறார்கள் என்பது விஞ்ஞானம் வளர்ந்து இருக்கும் இந்த கால கட்டத்தில் நமக்கு புரிகிறது. துரோணரின் பிறப்பு பரிசோதனை குழாய் குழந்தையின் பிறப்பை ஒத்து இருக்கிறது. அதே சமயத்தில் திரௌபதி ஐவரை மணந்து கொண்டதை அப்படியேதான் ஏற்றுக் கொள்கிறோம்.
மஹாபாரத யுத்தத்தின் பொழுது துரோணரை கொல்வதற்காக அவரிடம் தர்மபுத்திரர்,"அஸ்வத்தாமா அதஹா:குஞ்சரஹ:(இறந்தது அஸ்வத்தாமா என்னும் யானை) என்று கூறியவுடன் அதுவரை தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த அவருடைய தேர் தரையில் இறங்கியது. என்கிறார் வியாசர். இதன் உட் பொருள் என்ன? அவருடைய தேர் அத்தனை நாட்கள் பரந்து கொண்டா இருந்தது? இல்லை, அதுவரை நடை முறை உலகில் இல்லாமல் ஒரு லட்சிய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தர்மபுத்திரர் நடை முறை உலகிற்கு இறங்கி வருகிறார் என்பதுதானே. இப்போதும் நாம் லட்சியவாதிகளை பார்த்து "பூமியில் கால் ஊன்றி நில்" என்றுதானே சொல்கிறோம்? இந்துமதி, 'தரையில் இறங்கும் விமானங்கள்' என்று ஒரு அருமையான நாவல் எழுதியிருக்கிறார்.
ராமனை விட்டு விட்டு கிருஷ்ணனை நோக்கி வருவோம். பெரும்பாலோனோர் கிருஷ்ணனை பற்றி கூறும் ஒரு குற்றச்சாட்டு அவன் ஒரு ஸ்த்ரீ லோலன் என்பதாகும். கோபிகைகளோடு ராஸக்ரீடை புரிந்ததவன், அவர்கள் குளிக்கும் பொழுது அவர்கள் ஆடைகளை கவர்ந்து சென்றவன் என்றெல்லாம் கிருஷ்ணனை பழி கூறுகிறார்கள். உண்மையில் கிருஷ்ணன் ஒரு வாலிபனாக இதைச் செய்யவில்லை. சிறு குழந்தையாக இருந்த பொழுதுதான் இந்த லீலைகளை செய்திருக்கிறான். சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும் எல்லா குழந்தைகளும் செய்வதுதான் இது போன்ற விஷமங்கள் என்பது. மகா பெரியவரே இதைப் பற்றி, " இப்போதெல்லாம் கிருஷ்ணனை ஒரு வாலிபனாக சித்தரித்து,அவன் கோபியரோடு ராசக்ரீடை செய்வது போல காலண்டர் போடு- கிறார்கள், அது தவறு" என்று கூறியிருக்கிறார்.
மேலும் ஸ்ரீ கிருஷ்ணன் பிரமச்சாரி என்பதற்கு பாகவதத்தில் உள்ள சாட்சி பரீக்ஷித்தின் பிறப்பு. மகாபாரத யுத்த சமயத்தில் உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த சிசு ப்ரம்மாஸ்திரத்தால் தாக்கப்பட, பிறக்கும் பொழுதே இறந்துதான் பிறக்கிறது. அந்த குழந்தைதான் பாண்டவர்களின் ஒரே வாரிசு.அதுவும் இப்படி ஆகி விட்டதே என்று எல்லோரும் துக்கத்தில் இருக்க, அங்கு வரும் வியாசர் நைஷ்டிக பிரமச்சாரி ஒருவர் இந்த குழந்தையை தொட்டால் அது உயிர் பெரும் என்கிறார். நாரதர் உட்பட யாருக்கும் அந்த பிண்டத்தை தொடும் தைரியம் வரவில்லை. அப்போது குழந்தையை பார்க்க வரும் கிருஷ்ணர் உயிரில்லாத அந்த பிண்டத்தை தீண்ட அது உயிர் பெற்று விடுகிறது. அப்போதுதான் குந்தி, கிருஷ்ணரிடம்,"எங்களுக்கு எப்போதும் துன்பத்தையே தா, அப்போதுதான் நாங்கள் உன்னை மறக்காமல் இருப்போம் என்று வேண்டுகிறாள். நிறைய பெண்களை மணந்து கொண்ட கிருஷ்ணன் எப்படி பிரும்மச்சாரியாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு,"அந்த பெண்களை அடைய வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்பி அவர்களை மணக்கவில்லை. அந்த பெண்கள் கிருஷ்ணனை அடைய வேண்டும் என்று விரும்பி அவனை அடைந்தார்கள். எனவே மனதால் அவன் ப்ரம்மச்சாரிதான். என்று கூறப் படுகிறது. ஒரு விஷயத்தை செய்வதை விட எப்படி செய்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை வலியுறுத்த இந்த நிகழ்ச்சி கூறப் பட்டிருக்கலாம்.
இப்படி பல விஷயங்கள்.. சொல்லிக்கொண்டே போகலாம். சாதாரணமாக விநாயகரில் ஆரம்பிப்பதுதான் நம் மரபு. நாம் விநாயகரோடு முடிக்கிறேன். ஜி.எம்.பி. அவர்கள் விநாயகர் அகவலுக்கு பொருள் எழுதியிருந்தார். அதில் வரும் "மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே" என்பதை பூடகமாக விளக்குவதுதான் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைத்தார்கள் என்னும் கதை. பாற்கடலை கடைந்த பொழுது காமதேனு, கற்பக விருட்சம், அப்சரஸ்கள், லட்சுமி, சரஸ்வதி, தன்வந்திரி போன்ற பல விஷயங்கள் வெளி வந்தன. ஆல கால விஷமும் வந்தது, இறுதியில் அமுதமும் வந்தது. இவை எல்லாமே குறியீடுகள்தான். இதன் பொருளை பின்னர் கூறுகிறேன். இந்த பதிவு மிகவும் நீண்டு விட்டது.
படங்கள் நன்றி Google
சாதாரண வழக்கில் இருக்கும் உரையாடல்களுக்கே வருவோம்.
ReplyDeleteஅனல் கக்கும் பேச்சு என்றால் என்ன அர்த்தம்?..
இதைத்தான் சார் நானும் கேட்கிறேன். அனல் கக்கும் பேச்சு என்றால் நிஜமாக நெருப்புத் துண்டங்களா வரும்? அது ஒரு உருவகம்தானே? அதைப்போல சீதையின் அக்னி பிரவேசம் என்பதும் ஒரு குறியீடு என்கிறேன்.
Delete//பாற்கடலை கடைந்த பொழுது காமதேனு, கற்பக விருட்சம், அப்சரஸ்கள், லட்சுமி, சரஸ்வதி, தன்வந்திரி போன்ற பல விஷயங்கள் வெளி வந்தன. ஆல கால விஷமும் வந்தது, இறுதியில் அமுதமும் வந்தது. //
ReplyDeleteஅமரர் லா.ச.ரா. அவர்கள் தமது பாற்கடல் கதையை முடிக்கும் பொழுது இதைச் சொல்லித் தான் அழகாய் முடித்திருப்பார்.
அந்தக் காலத்தில் கழகத்தினர் "முருகனுக்கு சளி பிடித்தால் எந்தக் கையால் சிந்துவான்?" என்று கேட்பார்கள்.
ReplyDeleteஅந்த மாதிரி இருக்கிறது இந்த மாதிரியான விளக்கங்கள்.
கடவுள் புராணக்கதைகளுக்கு அப்பாற்பட்டவர். அல்லது சம்பந்தமே இல்லாதவர்.
குழந்தைகள் ஆர்வத்தோடு கதை கேட்பதில்லையா? அந்த மாதிரி குழந்தைப் பருவத்தோடு இந்த மாதிரியான கதைகளை மறந்து விட வேண்டும்.
கடவுள் நம்பிக்கையில் வளர்ச்சி, அவரைப் பற்றிய கதைகளை விட்டு அவரை விலக்கிப் பார்ப்பதே. அந்த விலகல், அவர் இருப்பை நமக்குத் தெரியப்படுத்தும்.
கடவுள் புராணக்கதைகளுக்கு அப்பாற்பட்டவர். அல்லது சம்பந்தமே இல்லாதவர்.
Deleteகுழந்தைகள் ஆர்வத்தோடு கதை கேட்பதில்லையா? அந்த மாதிரி குழந்தைப் பருவத்தோடு இந்த மாதிரியான கதைகளை மறந்து விட வேண்டும்.
கடவுள் நம்பிக்கையில் வளர்ச்சி, அவரைப் பற்றிய கதைகளை விட்டு அவரை விலக்கிப் பார்ப்பதே. அந்த விலகல், அவர் இருப்பை நமக்குத் தெரியப்படுத்தும்.// ஸார் நான் மிகவும் ரசித்து வாசித்தேன்...என் மகனுக்கு நான் சொல்லியது...வார்த்தைகள் இப்படியெ இல்லை என்றாலும் இதே கருத்து....இப்போதும் நான் நினைப்பது...சொல்லுவது...
கீதா
//அந்தக் காலத்தில் கழகத்தினர் "முருகனுக்கு சளி பிடித்தால் எந்தக் கையால் சிந்துவான்?" என்று கேட்பார்கள்.//
Deleteஅரசியலிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி எந்த வித எதிக்ஸும் இல்லாதவர்கள்தான் கழகத்தினர். கடைந்தெடுத்த சுய நலமிகள். இவர்களின் பகுத்தறிவு சாயமெல்லாம் எப்போதோ வெளுத்து விட்டது. வேலூர் ஸ்ரீபுரம் திறப்பு விழாவின் பொழுது ஆன்மீகமும் விஞ்ஞானமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று பேசிய பகுத்தறிவுவாதிதான் கலைஞர். பகவான் சத்ய சாயி பாபாவை எந்த பகுத்தறிவின் அடிப்படையில் தன் வீட்டிற்கு அழைத்தார்? எந்த பகுத்தறிவின் அடிப்படையில் அவருடைய இறுதிச் சடங்கில் புட்டபர்த்தி சென்று ஸ்டாலின் கலந்து கொண்டார்?
முன்பு ஹிந்தி எதிர்ப்பை வைத்து அரசியல் செய்தார்கள். இன்றைக்கு நீட் தேர்வு கிடைத்திருக்கிறது, அதற்கு உதவி செய்ய அனிதாவின் மரணம். அனிதா ஒரு அந்தணப் பெண்ணாக இருந்தால் இத்தனை போராட்டம் நடக்குமா?
கழகங்களை விட்டு விடுவோம். நம்முடைய அக்கறை நிஜமான ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்காக.
நான் சொன்ன காலத்தில் தீவிர கடவுள் மறுப்பாளர்களாய் இருந்தவர்களைச் சொன்னேன். திராவிட முன்னேற்ற கழகம் தோன்றாததற்கு முற்பட்ட காலம் அது.
Deleteபுராணக் கதைகளை விட்டு கடவுளை விலக்கிப் பார்க்கும் நாள் எந்நாளோ?..
//கடவுள் புராணக்கதைகளுக்கு அப்பாற்பட்டவர். அல்லது சம்பந்தமே இல்லாதவர்.//
Deleteசாரி! இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.
'உளன் எனில் உளன் அவன் உரு இவ்வுருவுகள்,
இலன் எனில் இலன், அவன் அரு இவ்வருவுகள்" என்று நம்மாழ்வார் கூறியதைப் போல, கடவுள் புராண கதைகளுக்கு சம்பந்தப்பட்டவர், அப்பாற்பட்டவர், சம்பந்தப் பட்டு சம்பந்தப்படாதவர். புராண கதைகளுக்கு அப்பாற்பட்ட கடவுளை புராணங்கள் மூலம் உணர்வது எளிது.
குழந்தைகள் ஆர்வத்தோடு கதை கேட்பதில்லையா? அந்த மாதிரி குழந்தைப் பருவத்தோடு இந்த மாதிரியான கதைகளை மறந்து விட வேண்டும்.
மறக்கவே கூடாது என்கிறேன் நான். ஏனென்றால் மறுபடி மறுபடி மனதுக்குள் ஓட்ட அந்த கதைகள் ஒவ்வொன்றும் உணர்த்தும் விஷயங்கள் நமக்கு வயதும் அனுபவமும் ஏற ஏற இன்னும் நன்றாக புரியும்.
நம்முடைய புராண கதைகள் பெரும்பாலும் அப்ஸ்ட்ராக்ட்தான். அவற்றின் உள் பொருளை உணர்ந்து கொண்டால், அடடா! எவ்ளோ பெரிய விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள்! என்று தோன்றும்.
பாரதியாரின் குயில் பாட்டில் வரும் குயில், மாடு,குரங்கு என்பவை இதைக் குறிக்கின்றன என்ற இன்று வரை சரியாக தெரிந்தவர் இல்லை. அதற்க்காக அதை படிக்காமல் தூக்கி போட்டு விடலாமா?
கடவுள் நம்பிக்கையில் வளர்ச்சி, அவரைப் பற்றிய கதைகளை விட்டு அவரை விலக்கிப் பார்ப்பதே. அந்த விலகல், அவர் இருப்பை நமக்குத் தெரியப்படுத்தும்.
//கடவுள் நம்பிக்கையில் வளர்ச்சி, அவரைப் பற்றிய கதைகளை விட்டு அவரை விலக்கிப் பார்ப்பதே. அந்த விலகல், அவர் இருப்பை நமக்குத் தெரியப்படுத்தும்.//
Deleteகதைகளோடு சேர்த்துப் பார்த்தாலும் அவரை உணர முடியும்.
ஜீவி சார்... முதலில், "உம்மாச்சி கண்ணக் குத்துவார்" என்று ஆரம்பிக்கும் கடவுள் அறிமுகம் அப்புறம் புராணக் கதைகள். அதிலேயே இருந்துவிடாமல் ஆன்மீகத்தில் நாமே முன்னேறவேண்டும். அடுத்த அடுத்த படிகளில் வளர்ச்சியடைய வேண்டும். வெறும்ன எனக்கு இதைக் கொடு, நான் நடந்துவந்து உன்னைப் பார்க்கிறேன் என்ற பேரத்தோடு வாழ்க்கையை முடித்துவிடலாகாது. ஆனமீக வளர்ச்சி நம் முயற்சியால் மட்டும்தான் நிகழும். அதுக்கும், அவன் அருள் வேண்டும்னு நான் நினைக்கிறேன் (அவனருளாலே அவன் தாள் வணங்கி)
Delete// ஆன்மீகத்தில் நாமே முன்னேற வேண்டும். அடுத்த அடுத்த படிகளில் வளர்ச்சியடைய வேண்டும்..//
Deleteஆன்மிகத்தில் முன்னேறுதல் என்றால் என்ன?
அடுத்த அடுத்த படின்னா என்ன?.. சொல்லுங்கள்.
நானும் அதற்குத் தான் வருகிறேன்.
ஜீவி சார்... எனக்கு கடைசி படிக்கு முந்தையது நிச்சயமாத் தெரியும். தன்னில் மற்றவர்களையும் மற்றவர்களில் தன்னையும் எல்லோரிலும் இறையையும் காணுவது. கெட்டவர்களிடம், அவர்கள் விதி என்னும் மாயையால் சூழப்பட்டிருப்பதைக் கண்டுணர்ந்து அவர்கள் அத்தளையிலிருந்து விடுபட நல்லாசிகள் கூறுவது, ப்ரார்த்திப்பது. இதற்கு அடுத்த "படி" இறையுடன் ஒன்றுதல்.
Deleteபொதுவாக ஆன்மீக முன்னேற்றம் என்பது, நாம் பிறர்மீது கொண்டிருக்கும் அன்பு நிலை அதிகமாவது. Selfishness என்ற நிலை மறைவது. இந்த நிலை இல்லாதவர்களெல்லாரும் இன்னும் முதல் "படி"யே கடக்காதவர்கள்.
"அக்கம் பக்கம் பாருடா சின்னராசா" பாடல் பாரத்துக் கேளுங்கள். எனக்கு அந்தப் பாடல் இந்தச் சிந்தனையைத் தொட்டதுபோல் ஞாபகம்.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நல்ல குணங்கள் எல்லாம் இறைவழிபாடு இல்லாவர்களிடமும் காணப்படுவதே.
Deleteஆனால் இறைவழிப்பாடு கொண்டுள்ளோரிடம் இந்த நல்ல குணங்கள் குடிகொண்டிருக்க வேண்டும் என்பது அடிப்படை விஷயம்.
இறைவழிபாட்டினால் 'கற்றதும் பெற்றதும்' நடந்திருக்க வேண்டும். அது இல்லை என்பதினால் தான் இவ்வளவும் எழுத வேண்டியிருக்கிறது.
பானுமதி மேடத்தின் தளத்தில் இதற்கு மேலும் இப்படி ஆக்கிரமிப்பு கொண்டிருப்பது சரியல்ல.
என் பூவனம் தளத்தில் சாவகாசமாக வைத்துக் கொள்ளலாம்.
நல்ல அலசல். ஜீவி ஸார் விளக்கங்கள் படிச்சாச்சு. வெயிட்டிங் ஃபார் கீதாக்கா.
ReplyDeleteநல்ல ஆழ்ந்து படிக்கும்படி எழுதியிருக்கீங்க. நிறைய செய்திகளை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதும் முக்கியம். இலக்கியச் சுவை வேறு.
ReplyDeleteஜீவி சார் படிக்கும்போது உணர்ச்சிகரமா இருக்க, "விடத்தை உமிழும் பேச்சு", "நெஞ்சு வெடிக்கும் அழுகை" "ரத்தக் கண்ணீர் வருகிறது" "ஆற்றொழுக்கு நடை" "கலகல வென்ற சிரிப்பு" போன்ற பல சொற்றொடர்கள் நினைவுக்கு வருகிறது. அது உணர்ச்சியைக் கடத்தும் விதமாக எடுத்துக்கொள்கிறோம். Literal meaning பார்க்க முடியாது.
மொழியில் உவமை இல்லாவிட்டால் உவகை எது?
Deleteநன்றி! நெல்லை தமிழன்!
Delete@ ஸ்ரீராம்
ReplyDelete//வெயிட்டிங் ஃபார் கீதாக்கா..//
அண்ட் பானுமதி மேடம்.
ஒரு ஓவியக் கண்காட்சியில்:
ReplyDeleteஒருவர்: (ஒரு படத்தைக் காட்டி) இந்தக் கடவுள் விஷ்ணு தானே?
இன்னொருவர்: நோ. தலைலே கங்கை பார். விஷ்ணு இல்லே, சிவன்.
இப்படித்தான் விஷ்ணு, சிவன் என்று வேறு படுத்திப் புரிய வைத்திருக்கின்றன, புராணக் கதைகள்.
இந்த ஆரம்ப வகுப்பு கடவுள் கல்வியைத் தாண்டி வர வேண்டும். தாண்டி வர வர வாழ்க்கை பூரா தோன்றாத் துணையாய் கூட இருக்கும் கடவுளின் சக்தி மனத்தில் பதிந்து கண்ணுக்குத் தட்டுப்பட அவசியமே இல்லாது போகும்.
'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி'.. மணிவாசகரின் அருள்மொழி மனத்திற்கு வசமாகும்.
கடவுளின் உருவங்களைப் பார்த்து கடவுளை அடையாளம் கண்டு கொண்டிருந்தால் என்றைக்குத் தான் நம் மனதில் உறையும் கடவுளை நாமே தரிசிப்பது?..
வாவ்!! மை காட்! ஜீவி ஸார் சத்தியமாக என் மனதில் உள்ளவை...சொன்னால் தப்பாகிவிடுமோ என்று நினைத்துச் சொல்லாமல் இருப்பவை..மற்றோன்றும் என் மனதிலுண்டு...இறைவன் உருவங்களுக்கும் அப்பாற்பட்டவன் என்ற எண்ணம் அது...
Deleteமிகவும் ரசித்தேன் சார்...
கீதா
உருவ வழிபாடுகளையே கடவுள் வழிபாடாகக் கொண்டு சாடுவது தான் கடவுள் மறுப்பாளர்களின் ஒரே ஆயுதம்.
Deleteஅந்த ஆயுதமும் இப்பொழுது கூர் மழுங்கிக் கிடக்கிறது.
ஜீவி சார்.. சிலை வழிபாடு ஒரு சுலப வழி, அவனை மனதில் இருத்த.
Deleteஇதில் கூட சுலப வழியா?..
Deleteமனத்தில் இருத்துதல் என்றால் என்ன, நெல்லை?..
வட்டவாதம் நினைவுக்கு வருகிறது.நம்பிக்கை என்பது ஒரு வட்டம். அவநம்பிக்கையும். கண்மூடித்தனமும். இப்படிப்பட்ட ஐயங்களுக்கு கருத்துக்களை சொல்லி நமக்கு நாமே சமாதானம் செய்துகொள்ளும் விதமும் வட்டமே என்று நினைக்கிறேன்.
ReplyDeleteபுரியாதபடிக்கு ஒரு பெரிய வட்டம் போட்டு விட்டீர்கள்.
Deleteநமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்வதற்கு என்ன அவசியம் வந்தது என்று தெரியவில்லை.
அப்பாதுரை சார் முதன் முறையாக வந்திருக்கிறீர்கள். வருகைக்கு நன்றி! வட்டவாதம் என்பதை சற்று விரிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்.
Deleteதுளசி: அருமையான அலசல்! நல்ல விளக்கங்கள்!
ReplyDeleteகீதா: பானுக்கா தொடக்கத்திலிருந்து முடிவு வரை பல என் மனதில் எழுபவமை தோன்றியவை. ஆனால் எனக்குக் கொஞ்சம் பயம் இருந்தது இதைப் பொதுவெளியில் எழுத. விவாதங்கள் கிளம்பிவிடுமோ என்ற ஒரு சிறு பயம் இருந்தது என்பது உண்மை. இப்போது நீங்கள் சொன்னதும் எனக்குமிகவும் மகிழ்ச்சி. ரசித்துப் படித்தேன்...
//பானுக்கா தொடக்கத்திலிருந்து முடிவு வரை பல என் மனதில் எழுபவமை தோன்றியவை. ஆனால் எனக்குக் கொஞ்சம் பயம் இருந்தது//
Deleteஎனக்கும் தயக்கம் இருந்தது. எப்படியோ எழுதி விட்டேன்.
ஹப்பா ஸ்ரீராம் குறியீடுகள் இப்போது புரிந்துவிட்டது!!! ஹிஹிஹி.....ஆ இந்த அப்பா துரை சார் இங்கு வந்தால் இந்தக் குறியீடு படும் பாடு என்னவோ!!! ஹாஹாஹா..
ReplyDeleteகீதா
பானுக்கா ஜி வி சார் சொன்ன //கடவுள் புராணக்கதைகளுக்கு அப்பாற்பட்டவர். அல்லது சம்பந்தமே இல்லாதவர்.
ReplyDeleteகுழந்தைகள் ஆர்வத்தோடு கதை கேட்பதில்லையா? அந்த மாதிரி குழந்தைப் பருவத்தோடு இந்த மாதிரியான கதைகளை மறந்து விட வேண்டும்.
கடவுள் நம்பிக்கையில் வளர்ச்சி, அவரைப் பற்றிய கதைகளை விட்டு அவரை விலக்கிப் பார்ப்பதே. அந்த விலகல், அவர் இருப்பை நமக்குத் தெரியப்படுத்தும்.// இதனை கடைசியில் எதிர்பார்த்தேன்..இப்படியே இல்லை என்றாலும் இதன் அர்த்தத்துடன் உங்கள் வரிகள். ஏனென்றால் என் மகனுக்குப் புராணக் கதைகளைச் சின்ன வயதில் சொல்லிய போது அவன் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது. இதோ உங்கள் பதிவின் சாராம்சமும், என் மனதில் எழுந்தவையும் என் மகன் வழி பிரதிபலிக்க அப்போது நான் ஜீ வி சார் சொல்லியிருப்பது போல் இதோ இதைத்தான்...க்டவுள் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்...என்று சொல்லுவது...இப்போதும் சொல்லிக் கொண்டிருப்பது...
ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் கீதாக்காவின் பதிலுக்கு வெயிட்டிங்க்.
கீதா
நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்று சொல்லாமல் இருந்தால் சரி.
Delete//ராமன் ராவண வாதத்திற்குப் பிறகு சீதையை தீக்குளிக்கச் சொன்னதை தவறு கிடையாது என்று நியாயப்படுத்தி இருக்கிறார்.// ராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதாக நான் எழுதினதாக நினைவில் இல்லை. சீதை தானாக வலிய முன் வந்து தான் தீக்குளிக்க ஏற்பாடுகள் செய்யும்படி லக்ஷ்மணனை ஏவுகிறாள் என்பதே வால்மீகியில் நான் படித்தது. கம்பரும், துளசியும் கூட அதை ஒட்டித் தான் சொல்லி இருப்பார்கள். ஆனால் ராமன் கடுமையான வார்த்தைகளால் சீதையைத் திட்டுவதை எல்லாரும் கூறி இருக்கிறார்கள். மற்றபடி தீக்குளிக்க முடிவு எடுத்தது சீதை மட்டும் தான். அதை நான் நியாயப்படுத்தவே இல்லை! ராமன் சொன்ன கடுஞ்சொற்கள், சீதையைப் பின்னர் காட்டுக்கு அனுப்பும்படி நேர்ந்தது ஆகியவற்றுக்கே ராமனுக்கு வக்காலத்து வாங்கி இருந்தேன். ஆகவே இரண்டுக்கும் முதலில் வித்தியாசம் உண்டு. நல்லவேளையாக் கடைசியில் வந்ததால் அனைவரின் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. மீண்டும் கருத்துச் சொல்வதற்குப் பதில் பதிவாகப் போடலாமா எனத் தோன்றுகிறது. மறுபடி வால்மீகியையும், கம்பரையும், துளசியையும் பார்க்கணும். பின்னர் வருகிறேன்.
ReplyDelete// கருத்துச் சொல்வதற்குப் பதில் பதிவாகப் போடலாமா எனத் தோன்றுகிறது. //
Deleteசபாஷ்...... சரியான போட்டி!
//ராமன் சொன்ன கடுஞ்சொற்கள், சீதையைப் பின்னர் காட்டுக்கு அனுப்பும்படி நேர்ந்தது ஆகியவற்றுக்கே ராமனுக்கு வக்காலத்து வாங்கி இருந்தேன்.//
Deleteஇதைத்தான் நான் ராமன் சீதையை தீக்குளிக்கச் சொன்னதை நியாய படுத்தி என்று உள்ளீர்கள் புரிந்து கொண்டேன்.
//அந்த மாதிரி குழந்தைப் பருவத்தோடு இந்த மாதிரியான கதைகளை மறந்து விட வேண்டும்.
ReplyDeleteகடவுள் நம்பிக்கையில் வளர்ச்சி, அவரைப் பற்றிய கதைகளை விட்டு அவரை விலக்கிப் பார்ப்பதே. அந்த விலகல், அவர் இருப்பை நமக்குத் தெரியப்படுத்தும்.// ராமாயணமோ, மஹாபாரதமோ குழந்தைப்பருவத்தில் கேட்பதோடு முடிந்து விடுவதில்லை. தொண்டு கிழங்கள் கூடக் கேட்டும், படித்தும் வருகின்றனர். ஆகவே அதில் உள்ளவற்றிலிருந்து வெளியே வந்து கடவுளைத் தனக்குள் தேடுவதோ, அறிந்து கொள்வதோ என் போன்றவர்களால் இயலாத ஒன்று. இது குழந்தைப்பருவத்துக் காக்காய் கதைகள் போலவும், குருவி பாயசம் குடிச்ச கதை போலவும் இல்லை! அவையே இன்னும் மறக்காமல் இருக்கும்போது ராமன் என்னும் அரசன் ஒருவன் இருந்தான் என்பதையோ அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் நடந்தவற்றையோ மறப்பது எல்லோராலும் இயலாத ஒன்று.
//மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே" என்பதை பூடகமாக விளக்குவதுதான் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைத்தார்கள் // இதற்கு எங்கள் குருநாதர் அளித்த விளக்கம் வேறு மாதிரியானது. முழுக்க முழுக்க யோகம் சம்பந்தப்பட்டது! இப்போதைக்கு இவ்வளவே. பின்னர் வருகிறேன்.
ReplyDeleteகாலை வேளையில் பதிவைப் பார்த்ததும் விநாயகர் அகவலின் வரிகளுக்கான உங்கள் அர்த்தம் என்னை அப்படி பதில் அளிக்கத் தூண்டியது. ஆனால் அப்புறமாய் நிதானமாய் யோசிக்கையில் பாற்கடல் கடைவதன் தாத்பரியம் புரிந்தது. தவறு செய்து விட்டோமே என உடனே தோன்றியது. நீங்கள் சொல்லி இருக்கும் பொருள் சரியானதே! நான் சொன்னது வேறு கோணம். குருநாதர் கூறியதால் பகிர்வது கடினம்! என்றாலும் நீங்கள் சொல்லி இருப்பதும் யோகத்தின் ஓர் முறையே!
ReplyDelete//காலை வேளையில் பதிவைப் பார்த்ததும் விநாயகர் அகவலின் வரிகளுக்கான உங்கள் அர்த்தம் என்னை அப்படி பதில் அளிக்கத் தூண்டியது. ஆனால் அப்புறமாய் நிதானமாய் யோசிக்கையில் பாற்கடல் கடைவதன் தாத்பரியம் புரிந்தது. தவறு செய்து விட்டோமே என உடனே தோன்றியது. நீங்கள் சொல்லி இருக்கும் பொருள் சரியானதே!//
Deleteதவறு செய்து விட்டோம் என்று தோன்றினாலும், அதை ஒப்புக் கொள்ளும் பெரிய மனசு பெரும்பாலானோர்க்கு இருக்காது. உங்கள் பெரிய மனதை வணங்குகிறேன்.
//நீங்கள் சொல்லி இருப்பதும் யோகத்தின் ஓர் முறையே!//
Deleteஆமாம். முழுக்க முழுக்க யோகம்தான்.
http://sivamgss.blogspot.in/2008/07/72_12.html
ReplyDeletehttp://sivamgss.blogspot.in/2008/07/blog-post_13.html
இப்போதுதான் உங்களின் தளத்திற்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பதிவுகள் வழியாகத் தொடர்வோம். உருவகங்களுக்கான விளக்கங்களை அலசி நுட்பமாக ஆராய்ந்த விதம் பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்.
ReplyDeleteஇரு கரம் கூப்பி தங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.பாராட்டுகளுக்கு நன்றி!
ReplyDelete