கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, September 8, 2017

தெருவில் ஒலித்து மறைந்த குரல்கள்

தெருவில் ஒலித்து மறைந்த குரல்கள் 

என்னுடைய பால்ய காலம் முதல் இளமைக் காலம் வரை நம் ஊரில் பெரும்பாலும் தனி வீடுகள்தான் இருந்தன. பிரிட்ஜ், டி.வி., வாஷிங் மெஷின், போன்றவை 90% வீடுகளில் கிடையாது. கிரைண்டர், மிக்ஸி, டூ வீலர் போன்றவையே ஆடம்பரம்தான். ஏ.சி.யா? அப்படீன்னா..என்ன? சிந்தாமணி,அமராவதி, டி.யூ.சி.எஸ்., போன்றவை தவிர சூப்பர் மார்க்கெட் என்னும் கான்செப்ட் பெரிதாக வளரவில்லை. எல்லோரும் பக்கத்தில் இருக்கும் நாடார் கடையிலோ, செட்டியார் கடையிலோதான் மாதாந்திர கணக்கில் சாமான்கள் வாங்குவார்கள். அதற்கென்று ஒரு குட்டி நோட்டு உண்டு. அந்த கடைகளில் பிளாஸ்டிக் பை தர மாட்டார்கள். நாம்தான் சாமான்கள் வாங்க துணிப் பையும், எண்ணெய் வாங்க தூக்கும் கொண்டு செல்ல வேண்டும்.    

எனவே அப்போதெல்லாம் தெருக்களில் நிறைய சாமான்கள் விற்றுக் கொண்டு வருவார்கள். விதம் விதமான குரல்களிலும், தொனி-  களிலும் தங்கள் பொருள்களை விற்றுக் கொண்டு போவார்கள். 

வீடுகளில் அம்மியும், ஆட்டுக்கல்லும் மட்டுமே இருந்ததால் "ஆட்டுக்கல் குத்தலையோ, அம்மிக்கல் குத்தலையோ" (ஆட்டுக்கல்லையும், அம்மிக்கல்லையும் பொள்ளுவதை  "குத்தலையோ?" என்பார்கள்). என்றபடி தலையில் ஒரு சிறிய சாக்கு பையை வைத்துக் கொண்டு   ஒருவர் கூவிக் கொண்டே செல்வார். 

ஒவ்வொரு ஞாயிறென்றும் பகல் மூன்று மணி அளவில் கடிகாரம், பேனா ரிப்பேர் செய்வதாக ஒருவர் ஒரு பெரிய மரப்பெட்டியை சுமந்து கொண்டு வருவார். அதில் வித விதமான பேனாக்கள் வைத்திருப்பார். கடிகாரத்தை சர்வீஸ் செய்யக் கொடுத்தால் கண்களில் ஒரு லென்ஸை மாட்டிக் கொண்டு, "பார் எத்தனை அழுக்கு" என்று நம்மிடம் காட்டுவார். "ஸ்ப்ரிங் சரியில்லை, முள் சரியில்லை" என்று ஏதோ கூறி, என்னவோ செய்து ஓடவிட்டு செல்லுவார். அந்த கடிகாரம் கொஞ்ச நேரம் ஓடும் பிறகு நின்று விடும். சரி செய்தவரிடம் கேட்கலாம் என்றால் கொஞ்ச நாள் தலையை காட்ட மாட்டார்.

இவரைத் தவிர, "பூ...ட்... ரிப்பேர்(பூட்டு ரிப்பேர்), கொடை ரிப்பேர் என்று கூவியபடி ஒரு ஆள் அடிக்கடி வருவார். மழைக் காலங்களில் சிலர் அவரிடம் தங்கள் வீட்டு குடைகளை ரிப்பேர் செய்து கொள்வார்கள். 

வெள்ளிக் கிழமை என்றால் காலையில்," உப்பு, வெள்ள வெள்ள (வெள்ளை, வெள்ளை) உப்பு.." என்று கை வண்டியில் உப்பை தள்ளிக் கொண்டு விற்க வருபவரிடம் பெரும்பாலும் எல்லோரும் உப்பு வாங்குவார்கள். வெள்ளிக் கிழமை உப்பு வாங்க வேண்டும் என்பது ஐதீகம் அல்லவா?     

வாரத்தில் இரண்டு முறை கெரசின் ஆயில் விற்றுக் கொண்டு வருபவர் அந்த வண்டியில் உள்ள மணியால் ஒலி எழுப்பும் பொழுது தாய்மார்கள்  தெரிந்து கொள்வார்கள் கெரசின் என்று. அப்போ- தெல்லாம் எல்லா வீடுகளிலும் கேஸ் அடுப்பு கிடையாது.கேஸுக்கு  புக் பண்ணிவிட்டு கனெக்ஷனுக்காக காத்திருக்க வேண்டும். சிலிண்டர் தீர்ந்து விட்டாலும் புது சிலிண்டர் அத்தனை சீக்கிரம் வந்து விடாது. எனவே எல்லோர் வீட்டிலும் மண்ணெண்ணெய் அடுப்பும், அதற்கு தேவையும் இருக்கும். 

மண்ணெண்ணெயை ட்ரம்மில் வாங்கி வைத்துக் கொள்வார்கள். அதிலிருந்து ஒரு பாட்டிலுக்கு இறைத்து வைத்துக் கொள்வார்கள். அப்படி இறைக்க ஒரு பம்பும்  எல்லார் வீடுகளிலும் இருக்கும். 1974-75 கால கட்டங்களில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இருந்தது. விற்பவர் ஒரு வீட்டுக்கு இரண்டு லிட்டருக்கு மேல் விற்க மாட்டார். 
எனவே மண்ணெண்ணைக்காக காத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு அந்த வண்டியின் மணி சத்தம் இன்பத் தேன் வந்து காதில் பாய்ந்தது போல இருக்கும்.

அந்த சமயத்தில் ரா.கி.ரெங்கராஜன் அவர்கள் குமுதத்தில் 'ஷ்ணாயில் ' என்று எழுதிய கதையை படித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. பதினோராம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனின் அண்ணா கெரசின் ஆயில் விற்பவர். நன்றாக படிக்கும் அந்த மாணவன், எப்போதாவது அண்ணாவோடு உதவிக்கு செல்லும் போதெல்லாம் அண்ணாவிடம் அதை 'ஷ்ணாயில்' என்று சொல்வது தவறு, கெரசின் ஆயில் என்றுதான் கூறவேண்டும் என்பான். தம்பி கூறுவதை கேட்டுக் கொண்டாலும் அண்ணா ஷ்ணாயில் என்று கூவுவதை மாற்றிக் கொள்ள மாட்டார். பள்ளி இறுதி தேர்வு விடுமுறையில் அண்ணாவுக்கு ஒரு விபத்தில் காலில் அடிபட்டு நடக்க முடியாமல் போய் விடும். எனவே அவன் மண்ணெண்ணெய் விற்கச் செல்வான். அவனோடு படித்த பெண் வந்து கெரசின் வாங்குவாள், இவனைத் தெரிந்தது போல காண்பித்துக் கொள்ள மாட்டாள். அவன் முதலில் கெரசின் ஆயில் என்று கூவுவான், அது அவனுக்கே வித்தியாசமாக ஒலிக்க, 'ஷ்ணாயில்' என்றே அவனும் குரல் கொடுக்கத்  தொடங்குவான். என்று முடியும் கதை. 

இதைத் தவிர அந்தந்த ஸீசன்களுக்கு ஏற்றாற்போல கோல மாவு, வடு மாங்காய் எல்லாம் தெருவில் வரும். மல்லி, ஜாதி, கனகாம்பரம் போன்ற பூ விற்கும் பெண்கள், மாலையில்தான் வருவார்கள். மல்லிகைப் பூ சீசனில் மதியம் இரண்டு மணிக்கே உதிரிப் பூவை சைக்கிளில் விற்றுக் கொண்டு வருவார்கள்.   

பால்காரர்கள் சைக்கிளில்தான் வருவார்கள். சைக்கிள் பாரில் சற்று பெரிய மணியை கட்டி வைத்து, அதை அசைத்துதான் ஒலி எழுப்புவார்கள். ஒவ்வொரு பால்காரரின் மணியும் வித்தியாசமாக ஒலிக்கும். காலை,மாலை என இரு வேளை மட்டுமே பால் கிடைக்கும். பாக்கெட் பாலும் கிடையாது, அதை வைத்துக் கொள்ள குளிர்சாதன பெட்டியும் கிடையாது. நடுவில் யாராவது விருந்தாளிகள் வீட்டுக்கு வந்து விட்டால், அக்கம் பக்கத்தில் யார் வீட்டிலாவது பால் இருக்குமா என்று கேட்க வேண்டும்.  

பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் கூட சிறிய மணியை ஒலி எழுப்பியபடிதான் வருவார்கள்.

இரவில் எட்டு மணிக்கு மேல் கடலை வருத்தபடி செல்லும் வண்டிக் காரர் அந்த இரும்பு சட்டியில்  தட்டி 'டங் டங்' என்று ஒலி எழுப்புவார். பத்து பைசாவுக்கு ஒரு பொட்டலம் கடலையில் அடியில் ஒரு சிறு வெல்லத் துண்டும் போட்டு கொடுப்பார்.

தலை நரைத்து, வெள்ளை புடவை கட்டிக்கொண்டு வெண்ணை,நெய் கொண்டு வரும் கவுண்டர் பெண்மணியின் அருகில் சென்றாலே வெண்ணை வாசம் அடிக்கும். அதற்கு பிறகு எங்கள் வீட்டிற்கு சனிக்கிழமைதோறும் வெண்ணை கொண்டு வருபவர் அரை கிலோ வெண்ணை அளந்து போட்ட பிறகு, கையை நீட்டினால் ஒரு உருண்டை வெண்ணை கையில் போடுவார். 

பெரும்பாலும் மதியத்தில்தான் "பழைய சேலைகளுக்கு பாத்திரம், பிளாஸ்டிக் பக்கெட்" என்று குரல் எழுப்பியபடி எவர்சிவர், அலுமினிய பாத்திர வியாபாரிகள்   வருவார்கள். 

விடுமுறை நாட்களில் வண்டியில் ஐஸ் க்ரீம் விற்பவர்கள் மற்றும் பலூன்காரர்கள் சிறு குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் நகராமல் 'பாம் பாம்'  என்று ஹாரன் ஒலி எழுப்புவார்கள். 

ஒவ்வொரு வியாழக் கிழமையும் பாத்திரங்கள் துலக்க அரப்புத்தூள் கொண்டு வரும் பெண்மணி பசலைப்  பொடி என்று பச்சை நிறத்தில் ஒரு பொடி கொண்டு வருவார், கொஞ்சம் கொழகொழப்பாக இருக்கும் அதை சிகைக்காயோடு சேர்த்து தலைக்கு தேய்த்துக் குளிப்போம். என் மகளுக்கு அரப்புத்தூள் என்றால் என்னவென்றே தெரியாது. 

இதைத் தவிர காவடி போல நீண்ட கழியின் இரு புறங்களிலும் தொங்க விடப்பட்டிருக்கும் பானைகளை சுமந்தபடி 'பதநி , பதநி' என்று விற்றுக் கொண்டு செல்லும் பதநீர் வியாபாரிகள். ஒரு அடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் சூடான சேமியா பாயசத்தை,'சே..மி..யா.. பா..ய..ஸ்.." என்று விற்றுச் சென்றவர்களை பார்த்திருக்கிறேன், ஆனால் இவை இரண்டையும் ருசித்ததில்லை. சேமியா பாயசம் பிரமாதமாக இருக்கும் என்பார் என் அண்ணா. 

காலை வேளைகளில் கீரை, காய் கறி இவைகளைக்கொண்டு வருபவர்களின் அழைப்பு. ஒரு கைப்பிடி அரிசிக்கு ஒரு கட்டு கொத்தமல்லி தரும் பாட்டி. இதே ஒரு கைப்பிடி அரிசிக்கு இலந்தை பழம்,களாக்காய் எல்லாம் வாங்கி சாப்பிட்டிருக்கிறோம்.

இதில் விளக்குமாறு விற்பவர்களும், ஒட்டடை கம்பு விற்பவர்களும்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.  எல்லோரையும் போல அவர்களும் தங்கள் பொருளின் பெயரை குறிப்பிட்டுதான் கூவுவார்கள். நாமும் அவர்களை கவலையேப் படாமல் ஏ! விளக்குமாறு! ஏ! ஒட்டடை கம்பு! என்று அழைப்போம், கொஞ்சம் கூட பாதிப்படையாமல் அவர்கள் வருவார்கள். சாதாரணமாக யாரையாவது இப்படி அழைத்து விட முடியுமா? 

எண்பதுகளின் இறுதியிலிருந்து நிலைமை மாற ஆரம்பித்தது. மிக்ஸியும், கிரைண்டரும் ஆடம்பரம் என்பதிலிருந்து அத்தியாவசியம் என்னும் நிலைமைக்கு மாறத் துவங்கின. தொன்னூறுகளின் இறுதியில் ஐ.டி. பூம் ஏற்பட்ட பிறகு, குளிர்சாதன 
பெட்டியும், வாஷிங் மிஷினும் அத்தியாவசியமாகி விட்டன. கடன் அட்டைகள் புழங்க ஆரம்பித்த பிறகு நாடார் கடைகளின் இடத்தை  சூப்பர் மார்கெட்டுகள் பிடித்துக் கொண்டன. 

தனி வீடுகள் குறைந்து கேட்டட் கம்யூனிட்டிகள் பெருகிய பிறகு வீதியில் சாமான்கள் விற்றுக் கொண்டு வருபவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. 

இப்போதெல்லாம் ஆன் லைனில் ஆர்டர் கொடுத்தால் சாமான்கள் அட்டை பெட்டியில் அழகாக வந்து விடுகின்றன. மாறுதல்தானே வாழ்க்கை! 

29 comments:

 1. எத்தனை மாற்றம்..... சில விஷயங்கள் நானும் இப்படி பார்த்திருக்கிறேன்..... இப்போது இவற்றில் பல கிடையாது.

  ReplyDelete
 2. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பாட்டுதான் ஞாபகத்திற்கு வருகிறது.முற்றிலும் உண்மை

  ReplyDelete
 3. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பாட்டுதான் ஞாபகத்திற்கு வருகிறது.முற்றிலும் உண்மை

  ReplyDelete
 4. உண்மை, இவற்றில் பலவற்றைக் குறித்து நானும் முன்னர் எழுதினேன். :) என்றாலும் இப்போவும் இங்கே ஶ்ரீரங்கத்தில் உதிரிப்பூ விற்பவர் வருகிறார். அதோடு தினம் காலை வேளையில் "இடியாப்பம்" என நினைக்கிறேன். எட்டிலிருந்து ஒன்பதுக்குள் விற்றுக் கொண்டு போவார். அதே போல் மாலையும் அதே எட்டு மணியிலிருந்து ஒன்பதுக்குள்!

  ReplyDelete
 5. கீரை, கொத்துமல்லி, காய்கள் போன்றவற்றை இன்னமும் கூடையில் வைத்துச் சுமந்து வந்து விற்பவர்களும் இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. அபூர்வம்னு நினைக்கிறேன்.. சிறிய கிராமங்களில் இருக்கலாம். மதுராந்தகம் தாண்டி ஒரு இடத்தில் தற்செயலாகப் பார்த்த போது நெடுஞ்சாலை வழியில் ஒரு கடை போட்டு பச்சைக் காய்கறி விற்றுக்கொண்டிருந்தார்கள். யார் வந்து வாங்குவார்களோ தெரியவில்லை.

   Delete
  2. எங்கள் குடியிருப்புக்குள் முன்பு ஒரு பெண்மணி கீரை கொண்டு வருவார். ஆனால் கீரை கீரை என்று குரல் கொடுக்க மாட்டார். ஒவ்வொரு வீட்டின் பெல்லையும் அழுத்தி, கீரை வேண்டுமா என்று கேட்பார். வருகைக்கு நன்றி!

   Delete
 6. உண்மைதான் தெருவில் கூவிக் கூவி வியாபாரம் செய்தவர்களை இன்று காண முடிவதில்லை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி! அவர்கள் எல்லாம் கார்ப்பரேட் கடலில் கரைந்து போய் விட்டார்கள்.

   Delete
 7. சாப்பாடுகூட ஆன்லைனில் வந்துவிடுகிறது. அனைத்திலும் இயந்திரத்தனம் பெருகிவிட்டது. ஒரு வகையில் மனிதம், நட்பு, தொடர்பு அனைத்தையும் இழந்துகொண்டிருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. //ஒரு வகையில் மனிதம், நட்பு, தொடர்பு அனைத்தையும் இழந்துகொண்டிருக்கிறோம்.//
   ஆம்! எதிர்காலத்தில் நட்பு, உறவு எல்லாமே ஊடகங்கள் வழியேதான் தொடருமோ என்னவோ..? வருகைக்கு நன்றி ஐயா!

   Delete
 8. 1940 களில் சென்னையில் தயிர் விற்பவர்கள் கூ என்று கூவிக்கொண்டு போவார்கள் 1960 களில் பெங்களூரில் இரவில் தாட்டி நுங்கு என்று விற்றுக் கொண்டு போவார்கள் இப்போதும் அப்படியா தெரியவில்லை மணி அடித்துக் கொண்டு சன்னா ஜோர் கரம் என்று பாடியு ம் மணி அடித்தும் கடலை விற்பார்கள் பாலக்காட்டில் மதிய வேளைகளில் பால்ரொட்டி பிஸ்கட் என்று விற்றுபோவார்கள்

  ReplyDelete
  Replies
  1. நுங்கு இப்போதெல்லாம் யாராவது எங்கேயாவது விற்கிறார்களா தெரியவில்லை. யுகமாச்சு பார்த்து!

   Delete
  2. முன்பெல்லாம் சென்னையில் இரவில் மணி அடித்தபடி குல்பி ஐஸ் க்ரீம் விற்றுக் கொண்டு போவார்கள். வருகைக்கு நன்றி ஐயா!

   நுங்கு சீசனில் பிளாட்பாரத்தில் வைத்துக் கொண்டு விற்கிறார்களே.

   Delete
 9. பழைய நினைவுகள்...தமிழ் நாட்டில் இருந்த வரை இதெல்லாம் உண்டு. கேரளத்திற்குச் சென்றபின் இல்லை....

  கீதா: இப்போதும் கூட கீரை, சாணை பிடித்தல், காய்கறி, கோலமாவு, வளையல், தோடு சீப்பு வருகின்றன...அம்மி உரல் குத்தல் இல்லை...மண்ணெண்ணெய் கிருஷ்ணாயில் வருவதில்லை, உப்பு வருவதில்லை...ஆனால் கொல்லி மலை மிளகு, ஜீரகம், சோம்பு, புளி மசாலா, மலைப்பூண்டு வருகிறது.... புடவைகள், சல்வார் மெட்டீரியல் வருவதுண்டு...ஐஸ் க்ரீம், குச்சி பால் ஐஸ் எப்போதேனும் வரும்...

  ஆனால் இப்போதெல்லாம் ஆன்லைன் ஷாப்பிங்...இனி வரும் நாட்கள் மனிதன் ஒருவரை ஒருவர் பார்ப்பதும் அருகிவிடும் அபாயம் உள்ளது....

  நல்ல பதிவு

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசிதரன்.
   கீதா நீங்கள் ஏகப்பட்ட ஐட்டம்களை பட்டிலயலிட்டு உள்ளீர்கள். எங்கள் குடியிருப்புக்கு பக்கத்தில் இருக்கும் தெருவில்
   சமயங்களில் பழைய பட்டுப் புடவைகளுக்கு புது புடவை அளிப்பதாக அறிவித்தபடி ஆட்டோவில் வருவார்கள். குடியிருப்பின் உள்ளே அவர்களை அனுமதிப்பது இல்லை.

   Delete
 10. முன்பு எங்கள் தளத்தில் நானும் இந்தப் பழைய நினைவுகளில் மூழ்கி இருக்கிறேன். கை வளைந்த ஒருவர் கொண்டு வரும் காய்கறி- அவரே சில நாட்களில் கருவாடும் விற்பார் என்று தெரிந்ததும் அம்மா அவரிடம் காய் வாங்குவதை நிறுத்தி விட்டார்!!. 'கோய்கறி....' என்று எழுத்துப்பிழையுடன் ராமாக சற்றே நாணத்துடன் சொல்வது போல குரல் கொடுத்து வரும் ஒரு பெண், பூக்கூடையை சைக்கிளின் முன்பக்கத்தில் வைத்து விற்று வரும் ஒரு இளைஞன், ஏராள குட்டி குட்டி மஞ்சள் பைகளில் வாசனை வாசனையாக ஊதுபத்தி விற்று வரும் வயதான ஒரு பெரியவர்,

  பன்ரொட்டிகளை ட்ரைசைக்கிளில் மணியடித்தபடி விற்று வருவார் ஒருவர். தெரு முனையில் அந்த மணி சத்தம் கேட்கும்போதே எங்கள் மோதி சிலிர்த்து எழுந்து விடும். அது அருகில் வரவர இது துடிக்கும் துடிப்பு.. எங்களிடம் ஓடிவருவதும், வாசலுக்குத் சென்று பார்ப்பதும்... சும்மா இருந்தோமானால் வண்டியின் குறுக்கே சென்று நிறுத்தி விடும். மறுபடியும் மின்னலென ஓட்டமாக உள்ளே ஓடி வந்து என்னை வட்டமடித்து மறுபடி வண்டியருகில் ஓடும். வாங்கும் வரை புண்ணாகியுடன் அந்த வண்டிக்காரரும் நகரமாட்டார்! 'சில்த்தூர் (ஸ்ரீவில்லிப்புத்தூர்) கோவா...பால்கோவா' என்று விற்கும் இளைஞன் (இவர் குரலை நான் டேப்பில் ரெகார்ட் செய்து அவர் வரும்போது என் வீட்டுக்கருகில் வரும்போது போட்டு விட, அவர் திகைத்தும் சிரித்துச் சென்றது நினைவில் இருக்கிறது!) இன்னும் ராஜஸ்தான் ஸ்டவ், விறகடுப்பு, கரி அடுப்பு பற்றியெல்லாம் எழுதி நினைவுகளை மலரவிட்டிருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம்! லிங்க் அனுப்பினால் நாங்களும் படிப்போமே.அப்பாதுரை சார், இந்த சூப்பர் ஸ்ரீராமுக்கா?

   Delete
 11. பசுமையான நினைவுகள். இவற்றை எல்லாம் படங்களில்தான் பார்த்து தெரிந்துகொள்கிறோம்.. இதுக்கும் கொஞ்சம் மேலே போய் நம் காலம்.. அதைக்கூட சொல்லித்தான் நம் பிள்ளைகளுக்கு தெரிகிறது..

  அதேபோல்.. இப்போதிருக்கும் விஞ்ஞான வளர்ச்சி அடைந்த காலம் கூட.. வருங்காலத்தில் பழமையானதாகிப் போகலாம்.. உலகம் அழியும்வரை.. மாற்றங்கள் அழியாது:).

  ReplyDelete
  Replies
  1. //அதேபோல்.. இப்போதிருக்கும் விஞ்ஞான வளர்ச்சி அடைந்த காலம் கூட.. வருங்காலத்தில் பழமையானதாகிப் போகலாம்.. உலகம் அழியும்வரை.. மாற்றங்கள் அழியாது:).//
   ரொம்பவும் உண்மை ஆதிரா! வருகைக்கு நன்றி!

   Delete
 12. சுவாரசியமாக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்.
  நிறைய நினைவுகளைக் கிளறின இந்தப் பதிவு. ஷ்ணாயில் படிக்காமல் தவற விட்டேனே!

  ReplyDelete
  Replies
  1. மீள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

   Delete
 13. ஊத்துக்குளி வெண்ணை என்று ஒருவர் கொண்டுவருவார். கமகம. காய்ச்சினால் நெய் அதற்கு மேல் கமகம. சமீபத்தில் கும்பகோணம் அருகே ஊத்துக்குளி வெண்ணை என்று விற்றுகொண்டிருந்தார்கள். சகிக்கவில்லை. ருசியும் இல்லை. மணமும் இல்லை. ஊத்துக்குளிக்காத வெண்ணை போல.

  ReplyDelete
  Replies
  1. ஊத்துக்குளி வெண்ணை என்று சென்னையில் கிடைக்கும் வெண்ணையும் நன்றாக இருப்பதில்லை. ஸ்ரீரங்கத்தில் நன்றாக இருக்கும்.

   Delete
 14. சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்!
  இப்போதும்கூட தஞ்சை வீதிகளில் கீரை, காய்கறிகள், கருவாடு, கம்பளங்கள்., பாய்கள், பதனீர் என்று சைக்கிள்களிலும் நடையிலுமாக கூவி விற்றுக்கொன்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மேம்! தஞ்சாவூர் பற்றி தெரியவில்லை. ஆனால் எங்கள் சொந்த கிராமத்தில் மாதம் ஒரு முறையோ, இரு முறையோ லாரியில் காய் கறிகள், பழங்கள் இவற்றை கொண்டு வந்து விற்பதாக கேள்விப்பட்டேன்.

   Delete