கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, January 10, 2018

டிசம்பர் சீசனில் ஒரு விமர்சனம்

டிசம்பர் சீசனில் ஒரு விமர்சனம்

சும்மா சொல்லக் கூடாது, இந்த வருட சீசன் ஆரம்பமே அமர்க்களம். ராமா கான சபையில் அஷ்டபதி பஜனை முடிந்து தொன்னையில் சுடச் சுட வழங்கப்பட்ட பொங்கல் மார்கழி குளிருக்கு வெகு சுகம்! அதில் ஊற்றப்பட்டிருந்த நெய் ஆண்டாள் விரும்பியபடி உள்ளங்கையில் எடுத்தால் முழங்கையில் வழிந்தது. பொங்கலின் சிறப்பே அதில் ஆங்காங்கே முழித்துக் கொண்டிருக்கும் மிளகும், சரியான பதத்தில் வறுத்துப் போடப்பட்ட முந்திரியும்தான். கறிவேப்பிலை இருக்க வேண்டும், ஆனால் அதிகமாகி விடக் கூடாது. ஒரு தொன்னைக்கு ஒரு கறிவேப்பிலை வரும்படி எப்படித்தான் சேர்த்தார்களோ..?! என்னிடம் யாராவது உங்களுக்கு இட்லி வேணுமா? வடை வேணுமா? என்று கேட்டிருந்தால், நான் ராமா கான சபாவின் பொங்கல்தான் வேண்டும் என்று சொல்லியிருப்பேன்.கொத்ஸு உண்டா? என்று யாரோ கேட்கிறார்கள், கொத்ஸு என்னங்காணும் கொத்சு? அப்படிப்பட்ட பக்க வாத்தியங்கள் எதுவும் தேவையே இல்லை, சோலோவாகவே ரசிக்க முடிகிறது அந்த பொங்கலை. 

காலையில் சாப்பிட்ட பொங்கலுக்கு சற்றும் குறைந்ததில்லை மதியம் சாப்பிட்ட லன்ச்! சாதாரணமாக ஹோட்டல்களில் முழு சாப்பாடு ஆர்டர் கொடுப்பது வேஸ்ட் என்று சொல்பவர்கள் உண்டு. 
ஆனால் கூல் சிப்ஸில் நாங்கள் ஆர்டர் கொடுத்த முழு சாப்பாடு பிரமாதம்! முதலில் வந்தது தக்காளி சூப். டின் சூப்பாக இல்லாமல் அசல் தக்காளியில் தயாரிக்கப்பட்டிருந்த அந்த சூப் ஆஹா ரகம்!

அடுத்து வந்த பூல்கா சப்பாத்தி மிருதுவாகவும்,நன்றாக வெந்தும் சீராக நெய் தடவப்படும் நம் தொண்டைக்கு இடம் அளித்தது. அதற்கான சைட் டிஷான சன்னா மசாலாவில் சன்னா வாயில் போட்டதும் கரையும்படி வெந்திருந்தது. சாம்பாரும்,புளிகுழம்பும் கொஞ்சம் காரம்தான். அடுத்து வந்ததம்மா ஒரு பைனாப்பிள் ரசம்! அடடா! அதன் பிறகு வந்த எல்லாமே சூப்பர் ரகங்கள்தான். புளிக்காத கட்டித் தயிர், கடாரங்காய் ஊறுகாய், செர்ரி சொருகப்பட்ட ஐஸ்க்ரீம்..! எதைச் சொல்ல? எதை விட? ஓஹோ!

மாலை ஜன ரஞ்சக சபா கேண்டீனின் மெது பக்கோடாவும், தயிர் வடையும் ஏமாற்றமளித்தன. அதுவும் தயிர் வடையின் மீது தூவப்பட்டிருந்த காரா பூந்தி கண்ராவி ராகம் சாரி ரகம்! போகட்டும், காபி குடிக்கலாம் என்றால் சூடு இல்லாமல், ஆடை படிந்த காபி..!  ஹும்! மூன்று தலைமுறைக்கு முன் மாயவரத்தில் கொடி கட்டி பறந்தவர்கள் வாரிசு. அப்போதெல்லாம் இந்த ஹோட்டலின் ரவா தோசைக்காகவும், டிகிரி காபிக்காகவும் கும்பகோணத்திலிருந்து வண்டி கட்டிக் கொண்டு வருவார்களாம். 

இரவு எட்டு மணி கிருஷ்ணன் கிருதி நடத்திய கச்சேரியின் உணவுத் திருவிழாவில் தென்னிந்திய உணவு, வட இந்திய உணவு இவற்றோடு மேற்கத்திய உணவும் கலந்து கட்டி எதை சாப்பிட்டோம், என்ன சாப்பிட்டோம் என்றே தெரியாமல் முழி பிதுங்கினோம். 

ஆனந்தசிரிப்பின் ஆஸ்தான விமரிசகர் குப்புடு தான் எழுத வேண்டிய சங்கீத விமர்சனத்திற்க்காக கூட அழைத்து வந்த தன் உதவியாளர் பப்படுவிடம் விமர்சனத்தை எழுத சொல்லி விட்டு ஸ்டார் ஹோட்டலில் போய் சுகமாக தூங்கி விட்டு மறு நாள் எந்தெந்த கான்டீன்களுக்குச் செல்வது என்று பட்டியலிட்டுக்  கொண்டிருந்த பொழுது  அவர் அறையின் டெலிபோன் விடாமல் ஒலித்தது. எடுத்தால் எதிர் முனையில் ஆ.சி.யின் ஆசிரியர்.

"என்ன சார் இப்படி பண்ணிடீங்க?"

"என்ன சார் யாராவது விட்டேனா பார் அந்த குப்புடுவை என்று கத்தினானா?"

"நானேதான்" என்று மனசுக்குள் கருவிக்கொண்ட பத்திரிகையாசிரியர், "நீங்க எழுதி அனுப்பி இருப்பதை உங்கள் ஐ.டி.க்கு மெயில் அனுப்பி இருக்கிறேன், ஒரு முறை பார்த்து விட்டு திருப்பி அனுப்புங்கள்" என்று கூறி போனை துண்டித்தார்.  

"அப்படி என்ன எழுதி விட்டான்? என்னை விட குத்தல் அதிகமோ..?"என்று யோசித்துக் கொண்டே மெயில் இன் பாக்ஸை திறந்து மேலே நீங்கள் படித்த விமரிசனத்தை படித்த குப்புடு அதிர்ந்தார். "அடப் பாவி! கெடுத்தானே குடியை..!" வரட்டும் என்று வன்மத்தோடு காத்திருக்க, "இன்றைக்கு எந்த காண்டீனுக்கெல்லாம் என்னை அழைத்துச் செல்லப் போகிறாரோ" என்று ஆவலோடு நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு பப்படு உள்ளே நுழைய, அங்கே ஆரம்பமாகியது ஒரு தனி ஆவர்த்தனம்.

படங்கள் உபயம் கூகுள் 

16 comments:

 1. ஆண்டாள் விரும்பியபடி உள்ளங்கையில் எடுத்தால் முழங்கையில் வழிந்தது - ஆண்டாள் சர்க்கரைப் பொங்கலுக்கல்லவா அந்த விளக்கம் தந்தாள்.

  கூல்சிப்ஸ் - ஆன்லைன் ஆர்டரிங்கா? அல்லது சபா கேன்டீனா?

  நல்லவேளை, ராகம், பாடகர்/பாடகி பற்றி எழுதியிருக்கீங்களோன்னு வந்தேன் (ஆனா பொங்கல் படம் பார்த்துட்டுத்தான் வந்தேன். ஏதாவது பாடகி படம் போட்டால் அப்புறமாத்தான் வந்திருப்பேன்). இந்த இடுகை உருப்படியானது. பாராட்டுகள்.

  இதைவிட, எந்த எந்த சபா, அங்கு என்ன கேன்டீன், யாரோடது நல்லா இருந்தது, என்ன ஐட்டம்கள் என்று எழுதினீங்கன்னா, என்னைப்போல சங்கீத ரசிகர்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும். (ஆடு மேய்த்தாப்பலயும் ஆச்சு, அண்ணணுக்கு பொண் பார்த்தாப்பலயும் ஆச்சுங்கறமாதிரி, ஹஸ்பண்டை இசை கேட்க விட்டுட்டு, நாம கேன்டீன்ல பொழுதப் போக்கலாம்)

  ReplyDelete
  Replies
  1. என்னுடையது முழுக்க முழுக்க கற்பனை. நீங்கள் நிஜத்தை எழுதச் சொல்கிறீர்கள். வருகைக்கு நன்றி!

   Delete
 2. டிசம்பர் இசை சீசனா உணவு சீசனா

  ReplyDelete
  Replies
  1. இரண்டும்தான். மூன்று மணி கச்சேரிகள் பெரும்பாலும் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் கலைஞர்களின் கச்சேரிதான் இருக்கும். அப்போதெல்லாம் ஆடிட்டோரியத்தை விட கேண்டீனில் அதிக கூட்டம் இருக்கும்.
   லக்ஷ்மன் ஸ்ருதி சென்னையில் திருவையாறு மற்றும் உணவுத் திருவிழா இரண்டையும் சேர்ந்துதான் நடத்துவார்கள்.

   சென்னை புத்தகத் திருவிழாவும் அப்படித்தான் உள்ளே அரங்கில் இருக்கும் அதே அளவு கூட்டம் வெளியே கேண்டீனிலும் இருக்கும்.

   Delete
 3. ஸூப்பர். நல்ல ட்விஸ்ட் கடைசியில்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம்! ரொம்ப நாளாச்சோ இப்படி ட்விஸ்டுடன் கதை எழுதி?

   Delete
 4. சூப்பர் மெனு.

  ஃபுல்கா!

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட்! ஃ என்னும் ஆய்த எழுத்து சில சமயம் வருகிறது, பல சமயங்களில் வருவதில்லை. அதனால்தான் ஃபூல்கா பூல்காவாகிவிட்டது. இப்போது எப்படி வந்தது என்று நினைத்துக் கொள்கிறீர்களா? கொஞ்சம் கஷ்டப்பட்டுதான்

   Delete
 5. நல்ல மெனு! எஸ்.வி.வி.பாணியில் வந்திருக்கு! ஹிஹிஹி, சுப்புடுவே எழுதி இருந்தாலும் இப்படித் தான் எழுதி இருப்பார்னு நினைக்க வைச்சது! பின்னிட்டீங்க! :)))))

  ReplyDelete
 6. மிகப் பெரிய பாராட்டு! சந்தோஷம் கலந்த நன்றி!

  ReplyDelete
 7. ,மெனு ஆறிப்போச்சு!!!!! லேட்டாயிடுத்து...கச்சேரினு வந்தா இங்க சாப்பாடு கச்சேரி!!! வாவ்!! அக்கா கடைசில வைச்சீங்க பாருங்க !!! சூப்பர்!!! ட்விஸ்ட்!! சுப்புடு தாத்தா நினைவுக்கு வந்தார்!! ஆனந்த சிரிப்பு எந்தப் பத்திரிகைனும் தெரிஞ்சுது....இந்த முறையும் போக முடியலை..என்னால...பையன் இங்க ஸ்கூல் படிச்ச வரை அவனோடு போய்ட்டு வருவேன் கிறிஸ்த்துமஸ் லீவா இருக்குமா அதனால...ஜாலியா ரெண்டுபேரும் ரவுன்ட் அடிப்போம்...

  ரொம்ப ரசித்தேன் அக்கா...செம!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதா! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

   Delete


 8. தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

  ReplyDelete
 9. அமக்களமாக இருக்கு! அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கமும் நன்றியும்!

   Delete