கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, March 1, 2018

மாசி மகம்

மாசி மகம்

ஹிந்து மதம் ஒரு மனிதனுக்குரிய ஆன்மீக வளர்ச்சிக்கு தேவையான விஷையங்களை அந்தர்முக சாதனை, பகிர்முக சாதனை என இரண்டாகப் பிரிக்கிறது. அந்தர்முக சாதனை பிராணாயாமம், ப்ரித்யாகாரம், தாரணை,த்யானம்,சமாதி என விரிந்தால்  பகிர்முக  சாதனையில்  தினசரி வழிபாடு, தான தர்மங்கள் செய்தல், ஆலய தரிசனம், புனித நீராடுதல் என்பவை அடங்கும்.  

முக்கிய புண்ணிய நதிகளாக கருதப்படும் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி, போன்ற  நதிகளில் நீராடுவதும்,  ஒரு சில கோவில்களில் உள்ள குளங்களில்(உ,ம். மாமங்க குளம்,மற்றும் திரு நள்ளார் குளம்)   முழுகுவதும், சமுத்திரத்தில் ஸ்நானம் செய்வதும் சிறப்பானதாக கருதப்படுகின்றன. ஆனாலும் எல்லா சமுத்திரங்களும்   எல்லா நாட்களிலும் ஸ்நானம் செய்ய ஏற்றதாகது. ராமேஸ்வரம் தவிர மற்ற  கடல்களில்  குறிப்பிட்ட  நாட்களில்  மட்டும்தான் புனித நீராடலாம்  என்பது  சாத்திர  விதி.   அப்படிப்பட்ட  கடல் நீராடலுக்கு ஏற்ற சிறப்பான  நாள் மாசி மகம்! மாசி மாதத்தில் பௌர்ணமியும் மக நட்சத்திரமும் சேரும் நாளே மாசி மகம் ஆகும். சைவர்கள், வைணவர்கள், சாக்தர்கள்  ஆகிய  எல்லோருக்குமே  இது ஒரு சிறப்பான நாள் ஆகும்.

பிரளயத்திற்குப் பிறகு பிரபஞ்சத்தை படைக்க தேவையான பொருள்கள் அடங்கிய அமுத கலசத்தை சிவ பெருமான்  உடைத்து  பிரும்மாவிடம்  கொடுத்த நாள் மாசி மக திருநாள் ஆகும்.

திருவண்ணாமலையில் இருந்த   வல்லாளன்  என்னும்  அரசனுக்கு  குழந்தைகள் கிடையாது, பெரும்  சிவ பக்தனான அவன், தான் இறந்து  போனால்  தனக்கான  இறுதிச்  சடங்குகளைச் செய்ய ஒரு மகன்  இல்லையே  என வருந்த, சிவ பெருமான் அவனுக்கு முன் ஒரு சிறுவனாக  தோன்றி அவனுடைய இறுதிச் சடங்குகளை  தானே  செய்யவதாக  வாக்குறுதி அளித்தார். அந்த மன்னன் இறந்து போனது ஒரு மாசி மகமாக அமைய, சிவ பெருமான் அவனுக்குரிய  சம்ஸ்காரங்களை  கடற் கரையில்  செய்ததோடு அன்று கடலில் நீராடுபவர்களுக்கு முக்தி அளிப்தாகவும் அருளினார்.    

 மேலும் மீனவப்  பெண்ணாக பிறந்த பார்வதி தேவியை, யாராலும் கொல்ல முடியாத ராட்சச திமிங்கலத்தை  மீனவ தோற்றத்தில் வந்த  சிவ பெருமான் கொல்வதன் மூலம்    மணம் முடித்த நாளும் ஒரு மாசி  மகத்திலேதான்!(திரு விளையாடல் படத்தில் ஜிங்கு சக்கு.. ஜிங்கு சக்கு என்று  பின்னணி     ஒலிக்க  சிவாஜி  கணேசன்  நடந்தது  நினைவிற்கு  வருகிறதா?அதே தான்...!)  பராசக்தியே தனக்கு மகளாகப் பிறந்தது குறித்து மகிழ்ந்த மீனவ குல அரசன், சிவனும் பார்வதியும் மணக்கோலத்தில் தனக்கு காட்சி தந்தது போல உலக மக்கள் அத்தனை பேருக்கும் காட்சி தர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள மாசி மகத்தன்று பார்வதி தேவியோடு சிவ பெருமானும் கடற் கரையில் எழுந்தருள்கிறார்!வைணவ சம்பிரதாயத்தில் சமுத்திர ராஜன் மகளான லட்சுமி தேவியை திருமால் மணந்து கொண்டதால், சமுத்திர ராஜன் திருமாலுக்கு  மாமனாராகிறார்! 
தொலை  தூரத்தில்  மகளை  திருமணம்  செய்து கொடுக்கும்  எல்லா  தந்தையரையும்  போலவே கடலரசனும் தான் தான் மகளையும்  மருமகனையும்  எப்போது பார்ப்பது என 
கேட்க, ஒவ்வொரு வருடமும் மாசி மகத்தன்று தான் கடற் கரைக்கு வந்து காட்சி தருவேன் என பெருமாள் வாக்களித்து, அப்படியே கடற் கரைக்கு எழுந்தருளுகிறார். எனவேதான் கடற்கரையை ஒட்டிய நகரங்களில் உள்ள பெருமாள் கோவில்களிலெல்லாம் அன்று பெருமாள் கடற் கரைக்குச் செல்வதும் தீர்த்தவாரி கொண்டருள்வதும் இன்றும் வழக்கமாக உள்ளன.      

இந்த வருடம் மாசி மகம் 18 .02 .2011  வெள்ளைக் கிழமையன்று வந்தது. நானும் என மகளும் கடற் கரையை(மெரினா பீச்) அடைந்த பொழுது கலை மணி 6:30 . அப்பொழுதே  அங்கு  பலர்  பெருமாளின்  வருகைக்காக  காத்திருந்தனர். முதலில் எழும்பூரிலிருந்து  ஸ்ரீனிவாச பெருமாள் எழுந்தருளினார்.

கண்ணகி சிலை சிக்னலுக்கு எதிரே பெருமாளின் குடை தெரிந்தது, அதுவரை  அமர்ந்து கொண்டிருந்த மாமிகள் பரபரவென்று பெருமாளை  வரவேற்க  பெரிதாகவும் அழகாகவும் கோலங்கள் போட்டனர்.

பின்னர்  பெருமாளோடு பக்தர்களும் கடலுக்குச் சென்று நீராடினர். அதன் பின்னர் திருவல்லிகேணியில் இருந்து பார்த்தசாரதி பெருமாள் கடற்கரைக்கு  எழுந்தருளினார்.  அவரோடும்  தீர்த்தவாரியில்  உற்சாகமாக  பங்கெடுத்துக்   கொண்டோம்.  


  
அதன் பின்னர் திருவடீஸ்வரன்பேட்டையில்ருந்து  கடற் கரைக்கு வந்த சிவன் பார்வதி தேவியை தரிசனம் செய்து கொண்டு உடல்   முழுக்க நர நரத்த மணலோடும், மனம் முழுக்க கொப்பளித்த சந்தோஷத்தோடும்  வீடு வந்தோம்.  
19 comments:

 1. //கண்ணகி சிலை சிக்னலுக்கு எதிரே பெருமாளின் குடை தெரிந்தது, அதுவரை அமர்ந்து கொண்டிருந்த மாமிகள் பரபரவென்று பெருமாளை வரவேற்க பெரிதாகவும் அழகாகவும் கோலங்கள் போட்டனர். //

  சென்னையில் கூட இதெல்லாமா என்று ஆச்சரியமாகவும் அதே சமயத்தில் ஆனந்தமாகவும் இருக்கிறது.
  படக் கோலங்கள் தெளிவு. இந்தப் பதிவே மனசை நிர்மலமாக்கிய உணர்வு. கிறுக்கி வைத்திருந்த சிலேட்டை ஸ்பான்ஞ் கொண்டு துடைத்தமாதிரி.

  ReplyDelete
  Replies
  1. //இந்தப் பதிவே மனசை நிர்மலமாக்கிய உணர்வு//
   ஆஹா! எவ்வளவு பெரிய பாராட்டு!சந்தோஷமாக இருக்கிறது. மிக்க நன்றி🙏🙏

   Delete
 2. எனக்கும் இந்நிகழ்வு சென்னையில் என்றதும் ஆச்சர்யம். மாசி மகம் பற்றிய தகவல்கள் சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. சென்னை மட்டுமல்ல மஹாபலிபுரம்,பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் சிறப்பாக இருக்கும். பாண்டியில் மாசி மகத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை. நன்றி ஶ்ரீராம்.

   Delete
 3. மாசி மகம் பற்றிய விளக்கம் நன்று. ரோட்டில் கோலம் அழகாகவும் புதுமையாகவும் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அதிரா! ஐயங்கார்கள் கோலம் வரைவதில் விற்பன்னர்கள். பெரிய பெரிய கோலங்களை அனாயாசமாக போடுவார்கள்.

   Delete
 4. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளும் மாசி மகத்தன்றுதானே சந்தேகம் நிவர்த்திக்க வேண்டி

  ReplyDelete
  Replies
  1. ஆம், ஜெ. மாசி மகத்தன்று பிறந்தவர்தான். சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடிய பொழுது ,"நான் மக நட்சத்திரத்தில் பிறந்தவள்,எனக்கு தண்ணீர் ராசி உண்டு" என்று பேசினார்.

   Delete
 5. கடந்த மகாமக நினைவுகளை நினைவூட்டின இந்த மாசி மகப் பதிவு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா!

   Delete
 6. மீள் பதிவா? பெருமாள் மற்றும் சிவன் ஆகியோர் சமுத்திரக்கரையில் எழுந்தருளி அருள் பாலிப்பது குறித்து முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே என் பெரியப்பா சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் இப்போவும் அப்படியே நடக்கிறது என்பது தெரியாது! நல்ல தரிசனம்.

  ReplyDelete
  Replies
  1. ஆம். மீள் பதிவுதான். காணொளியும் இருக்கிறது, ஆனால் ஏனோ இதில் அப் லோட் செய்ய முடியவில்லை. நன்றி!

   Delete
 7. அப்புறமா இந்தக் கோலங்கள் பற்றி! சிதம்பரத்திலும் இப்போவும் இம்மாதிரிக் கோலங்கள் கீழ, மேல, வடக்கு, தெற்கு ரத வீதிகளில் திருவாதிரை, ஆனித்திருமஞ்சனம், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் தீக்ஷிதர் குடும்பப் பெண்மணிகள் போடுகின்றனர். இங்கே ஶ்ரீரங்கத்திலும் நம்பெருமாள் உலா வரும் தெருக்களில் கோலங்களைப்பார்க்கலாம். அவ்வகையில் இங்கே அம்மாமண்டபம் ரோடில் சித்திரா பௌர்ணமிக்கும் ஆடிப்பெருக்குக்கும் தெருவை அடைத்துக் கோலம் போடுவார்கள். இப்போ இரு வருடங்களாகக் கொஞ்சம் குறைந்திருக்கு என்றே சொல்லணும்!

  ReplyDelete
  Replies
  1. மயிலையில் இப்போதும் பெரிய கோலங்கள் போடப்படுகின்றன என்றுதான் நானும் கேள்விப்பட்டேன். ஸ்ரீரங்கத்தில் அழகிய பெரிய கோலங்களை பார்த்திருக்கிறேன்.

   Delete
 8. மயிலையில் மார்கழி மாதம் முழுவதும் எல்லா மாடவீதிகளிலும் கோலங்கள் போடுவார்கள். அது இப்போதும் நடந்து வருகிறதாகக் கேள்வி!

  ReplyDelete
 9. துளசி: மாசி மகம் பற்றி தகவல்கள் பல அறிந்து கொள்ள முடிந்தது தங்களின் பதிவின் மூலம்

  கீதா: பானுக்கா சென்னையில இப்படி நடக்குதா..? அட! சூப்பர்..ஆனால் மாசி மகம் பற்றி உங்க பதிவு மூலம் தான் இத்தனை இருக்கு இதுக்கு பின்னாடினு தெரிஞ்சுது...எங்க ஊர்ல எல்லா மக்களுமே நல்லா கோலம் போடுவாங்க பானுக்கா...

  ReplyDelete
 10. மாயவரத்தில் இருக்கும் போது சாமி வீதி உலா வரும் போது எல்லோர் வீடுகளிலும் கோலம் போடுவார்கள்.

  மாசி திருவிழாவிற்கு கும்பகோணம் போன போதும் சுவாமி தீர்த்தவாரிக்கு வரும் போது எல்லோர் வீடுகளிலும் கோலம் போடுவதைப் பார்த்து இருக்கிறேன். சென்னைபோன்ற நகரத்திலும் நடைபெறுவது மகிழ்ச்சி தான்.

  மாசி மகம் திருவெண்காட்டிலிருந்த போது அகோரமூர்த்தி திருவிழா நடைபெறும் பூரம் நட்சத்திர திருவிழா நினைவும் வருகிறது.

  படங்கள் , செய்திகள் அருமை.

  ReplyDelete
 11. வாங்க கோமதி அக்கா! வருகைக்கு நன்றி.
  கோலம் நம் வாழ்க்கையில் அதுவும் திருவிழா காலங்களிலும், சுவாமி புறப்பாட்டின் பொழுதும் பிரிக்க முடியாத ஒரு விஷயம் அல்லவா?
  அகோரா மூர்த்தி விழாவைப் பற்றி எழுதுங்களேன்.

  ReplyDelete