கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, May 16, 2018

பாலகுமாரன்

பாலகுமாரன் 

Image result for balakumaran images

















எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார் என்று தொலைக்காட்சியில் அறிவிப்பு வந்த பொழுது அதிர்ச்சியாக இருந்தது. சில வருடங்களாகவே நோயோடு போராடிக்கொண்டிருந்தார். மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்ததை 'சொர்க்கம் நடுவிலே' என்னும் நாவலாக எழுதியிருக்கிறார். 

குமுதத்தில் அவர் எழுதிய 'கெட்டாலும் ஆண் மக்கள்' என்னும் சிறுகதை அட! யார் இந்த பாலகுமாரன்? பிரமாதமாக எழுதுகிறாரே? என்று எண்ண வைத்தது. அப்போது குமுதத்தில் அடிக்கடி சிறுகதைகள் எழுதுவார். அப்படி எழுதிய 'சுழல் பந்து' என்னும் கதையும் கவர்ந்தது. அந்தக் கதையை படித்த என் அப்பா கூட,"யாருமா இந்த பால குமாரன்?  சுழல் பந்து என்னும் கதையை ரொம்ப லைவ்லியாக எழுதியிருக்கிறானே?" என்று சிலாகித்தார். 

அதன் பிறகு அவருடைய பெரும்பாலானவற்றை படித்திருக்கிறேன். அவருடைய புதினங்களை படித்தவுடன் அவரோடு தொலைபேசியில் பேசி அந்த நாவலைப் பற்றிய என் கருத்தை, எனக்கு பிடித்த விஷயங்கள், பிடிக்காத, ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்கள் இவற்றை கூறுவேன்.  கல்லூரிப் பூக்கள் என்னும் கதையைப் படித்து விட்டு, "பாலகுமாரன் கதை படித்த உணர்வு இல்லை" என்று நான் கூறியதும்," ஆமாம், அது குப்பைதான்" என்றார். அதனால்தானோ என்னவோ அவர் 'கங்கை கொண்ட சோழன்' எழுதியவுடன்  என்னை தொலைபேசியில் அழைத்து,"நான் கங்கை கொண்ட சோழன் என்று ஒரு நாவல் எழுத்திருக்கிறேன், அதை  படித்து விட்டு சொல்" என்றார்.  இதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக நினைக்கிறேன். 

நாவலைத்தவிர எனக்கு ஏற்படும் சில சந்தேகங்களையும் அவரிடம் தெளிவு செய்து கொள்வேன். பாரதியாரின் குயில் பாட்டு பெண்ணடிமைத்தனத்தைத்தான் குறிக்கிறதோ என்று எனக்கு ஒரு எண்ணம். அவரிடம் இதைக் கூறி,"நம் ஊரில் குயில் போன்ற ஒருத்தியை குரங்கு போன்றோ, காளை போன்றோ இருக்கும் ஆணுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அப்போது அவள் என்ன செய்ய முடியும்? மானுடற்கு உம்மைப் போல் வாலுண்டோ?" என்றுதானே பேச முடியும்?" என்றேன். அவர் அதை மறுதலித்து விட்டார். "இல்லை குயில் பட்டு ஏதோ பெரிய விஷயத்தைப் பற்றி பேசுகிறது. எல்லாப் பெண்களும் நல்லவர்கள் கிடையாது, அடுத்தவர்களை வாழ விடாத ராக்ஷஸிகள் உண்டு" என்றார். 

"பொறாமை உணர்வை எப்படி வெல்வது?" என்று கேட்ட பொழுது, " பொறாமை வருகிறதா? எப்பொழுதெல்லாம் பொறாமை உணர்வு தோன்றுகிறதோ, அப்பொழுதெல்லாம்  உன்னை நீயே கண்டபடி திட்டிக் கொள்" என்றார். அதை கடை பிடித்துதான் பொறாமையை ஒழித்தேன்.

ஸ்ரீ ஸ்ரீ யின் சுதர்ஷன் க்ரியா செய்கிறேன் என்று கேட்டதும், "அடடா! அற்புதமான விஷயமாயிற்றே அது என்றார். நம்முடைய புராணத்தில் பாற்கடல் கடைவதைப் பற்றி கதை உள்ளதே அதன் தத்துவம் என்ன என்று யோசித்து சொல்" என்றார்.  என் சிற்றறிவுக்கு அது எட்டாததால் அவரிடமே பொருள் கேட்டேன். பாற்கடல் என்பது என்ன? மத்தாக வைக்கப்பட்ட மந்திர மலை என்பது எது?  அது அசையாமல் தாங்கிப் பிடித்த கூர்மம் எது? பாம்பு எது? கடைதல் எப்படி? தேவர் யார்? அசுரர் யார்? கடையும் பொழுது வெளிவரும் விஷயங்கள் என்னென்ன? என்று மிகத் தெளிவாக அவர் விளக்கிய பொழுது எனக்கு  பாற்கடலை கடையும் கதையின் தத்துவத்தோடு சுதர்ஷன் க்ரியா வெரும் மூச்சுப் பயிற்சி மட்டுமல்ல என்பதும் புரிந்தது.   

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் ஐந்தாம் தேதி, யோகி ராம் சூரத்குமார் ஜெயந்தி விழாவுக்கு எனக்கு அழைப்பு அனுப்புவார். எனக்குத்தான் போக முடியாமல் ஏதோ இடைஞ்சல் வரும்.  இரண்டு மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சியின் ஏதோ ஒரு சேனலில் பாலகுமாரனின் பேட்டி ஒளி பரப்பினார்கள். அதில் தன் இரு மனைவிகளைப் பற்றியும் மிகவும் பெருமையாக குறிப்பிட்டு," அவர்களின் உதவி இல்லையென்றால் என்னால் இவ்வளவு சிறப்பாக செயல்பட முடியாது.அவர்களின் கால்களை தொட்டு நான் வணங்குவேன்" என்று அவர் சொன்னதும், எனக்கு பளிச்சென்று திருப்புகழில் வரும்,"பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா.." என்னும் வரிகள்தான் நினைவுக்கு வந்தன. உடனே, அவரை தொலைபேசியில் அழைத்து,"நீங்கள் குறிப்பிட்ட அந்த அன்பைத்தான் அருணகிரிநாதரும் குறிப்பிட்டிருக்கிறாரோ?" என்று தோன்றுகிறது என்றேன். " "சரியாகத்தான் இருக்கிறது" என்று ஆமோதித்தார். ஒரு முறை நேரில் சந்திக்க அனுமதி கேட்டேன், வரச்சொன்னார். ஆனால், நான் ஒரு சோம்பேறி, சட்டென்று வெளியே கிளம்ப மாட்டேன். ஏதோ காரணங்களால் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். இனிமேல் நினைத்தாலும் நேரில் பார்க்க முடியாது.  

13 comments:

  1. பானுக்கா, பாலகுமாரனுடனான உங்கள் நினைவுகளை, அனுபவங்களை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் போய் நேரில் சந்தித்திருந்திருக்கலாம். அருமையான சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டீர்களே. இனி நினைத்தாலும் முடியாதே. அக்கா இனி இப்படி ஏதேனும் நீங்கள் விரும்பிச் செய்ய நினைத்தால் கூடியவரை உடனே செய்துவிடுங்கள் சந்தர்ப்பத்தை நழுவவிடாதீர்கள். இந்த நொடி போனது போனதுதானே கிடைக்காதே....

    சுதர்சனக் க்ரியா என்பது பாற்கடல் கடையும் தத்துவம் தான் சொல்லப்படுகிறது....மூச்சுப் பயிற்சியே அப்படித்தான் எங்கள் யோகா வகுப்பில் சொல்லிக் கொடுத்தார்கள்.

    கீதா

    ReplyDelete
  2. உங்கள் நினைவுகளை அழகாகச் சொல்லி அஞ்சலி செலுத்தி இருக்கிறீர்கள். பாற்கடல் விளக்கத்தை விளக்கமாகக் கொடுத்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஹய்யோ ஸ்ரீராம் பாற்கடல்...இன்னும் விளக்கமா சொல்லியிருக்கலாமோன்னு நானும் நினைத்தேன் சொல்ல நினைத்தே ன்....என் தோழி டயர்டா கிவிட்டாள்.... நீங்கள் சொல்லிவிட்டீர்கள்....

      கீதா

      Delete
  3. திரு.. பாலகுமாரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி..

    ReplyDelete
  4. எனது அஞ்சலிகளும்..... நல்ல எழுத்தாளர். அவர் மறைவு பெரிய இழப்பு.

    ReplyDelete
  5. உங்களுடன் நானும் சேர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன்.

    ReplyDelete
  6. நல்ல நினைவுகள் பகிர்வு.
    உங்கள் நினைவுகளை தொகுத்து அஞ்சலி ஆக்கிஇருப்பது அருமை.
    என் அஞ்சலிகளும்.

    ReplyDelete
  7. என்னோடு சேர்ந்து அஞ்சலி செலுத்திய எல்லோரையும் திரு.பாலகுமாரன் அவர்களின் ஆன்மா ஆசிர்வதிக்கும்.

    ReplyDelete
  8. //பாற்கடல் விளக்கத்தை விளக்கமாகக் கொடுத்திருக்கலாம். //

    அது ஒரு குரு சிஷ்ய பாவத்தோடு கேட்டு பெறப்பட்டது. எல்லோருக்கும் பொதுவாக பகிர்வது சரியாக இருக்காது.

    ReplyDelete
  9. யோகம் சம்பந்தப்பட்டது பாற்கடல். நம்முடைய ஒவ்வொரு புராண, இதிஹாசக் கதைகளீலும் உள்ளார்ந்த பொருள் உண்டு.

    ReplyDelete
  10. சித்தப்பாவைத் தவிர்த்த எழுத்தாளர்கள் பலரையும் பார்த்திருக்கேன், பழக்கம் இல்லை. பாலகுமாரனைப் பல வருடங்கள் முன்பிருந்தே படிப்பது இல்லை என்பதால் விமரிசிப்பது சரியாக இருக்காது! ஆரம்பத்தில் கவர்ந்தார்,பின்னர் ஓர் அலுப்பு, எரிச்சல் வந்து விட்டது! இப்போ ஜெயமோகனும்! எழுதிக் குவிக்கிறார். ஆனாலும் எல்லாமும் ரசிக்கலை! :(

    ReplyDelete
  11. நமது சில மன உணர்வுகளைப் புரிந்து கொள்ள பல நேரங்களில் நம்மைத் தவிர வேறு யாரும் கிடைப்பதில்லை.

    ReplyDelete