கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, September 24, 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும் நவ கைலாசமும் - 5

பரவசம் தந்த நவ திருப்பதியும் 
நவ கைலாசமும் - 5 திருச்செந்தூரிலிருந்து நாங்கள் சென்ற கோவில் தென் திருப்பேரை என்னும் சுக்கிர ஷேத்திரம். 

திருமகளைப் போல தான் அழகாக இல்லாததால்தான் பெருமாள் தன்னை விட லட்சுமியிடம் அதிக பிரேமை கொண்டிருக்கிறார் என்று நினைத்த பூமி பிராட்டி திருமாலின் அஷ்டாக்ஷர மந்திரத்தை  துர்வாச மகரிஷியிடம் உபதேசமாக பெற்று, அதை ஜபித்து வருகிறாள். ஒரு பங்குனி மாத பௌர்ணமி அன்று மந்திர ஜபத்தை முடித்து ஆற்றிலிருந்து நீரை அள்ளி எடுக்க, அதில் இரண்டு மகர குண்டலங்கள்(மீன் வடிவ குண்டலங்கள்) கிடைக்கின்றன. அதை அங்கு அப்போது பிரத்யக்ஷமான திருமாலுக்கு அணிவித்து மகிழ்கிறாள். அவளுடைய தவத்திற்கு மகிழ்ந்த திருமால் அவளுக்கு மகாலட்சுமிக்கு நிகரான அழகை அளிக்கிறார். பூமி பிராட்டியால் அளிக்கப்பட்ட மகர குண்டலங்களை அணிந்து கொண்டதால் இங்கிருக்கும் பெருமாள் மகர நெடுங்குழைக்காதன் என்று அறியப்படுகிறார்.  பேரை என்றால் குண்டலம் என்று பொருள். பெருமாள் காதில் அணிந்து கொண்டிருக்கும் குண்டலத்தால் புகழ் பெற்றிருப்பதால் இத்தலம் தென் திருப்பேரை என்னும் பெயர் பெற்றுள்ளது.

வருணன் அசுரர்களிடம் போரிட்டு  இழந்த தன் ஆயுதத்தை இந்த தலத்திற்கு வந்து மீண்டும் பெற்றதால், இங்கு செய்யப்படும் வருண ஜெபங்கள் பொய்ப்பதில்லை என்கிறார்கள். 

மூலவர் மகர நெடுங்குழைக்காதன். வீற்றிருந்த திருக்கோலம். உற்சவர் நிகரில் முகில்வண்ணன் . குழைக்காது நாச்சியார், திருப்பேரை நாச்சியார் என்று இரண்டு தாயார்கள் தனித்தனி சந்நிதிகளில் கோவில் கொண்டுள்ளனர்.

நாங்கள் சென்ற அன்று ஸ்ரீ ஜெயந்தி என்பதால் அர்த்த மண்டபத்தில் அரையர் போல தலையில் பரிவட்டம் கட்டிக்கொண்ட ஒருவர்  ஸ்ரீ கிருஷ்ணஜெனனம் கதை படித்துக் கொண்டிருந்தார். பட்டாச்சாரியர்கள் உள்ளே அமர்ந்திருக்க வெளியில் இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தார்கள். உள்ளே போவதற்கு அனுமதி இல்லை போலிருக்கிறது என்று நினைத்து நான் நின்று கொண்டிருந்தேன். ஒரு பட்டாச்சாரியார் என்னை உள்ளே வரச் சொல்லி ஜாடை காட்டினார். 

உள்ளே சென்ற நான் பெருமாளின் திருநாமம் என்ன என்று கேட்க," மகரநெடுங்குழைகாதன், என்றும் இந்தக் கோவிலில் எல்லாக் கோவில்களையும் போல கருடன் பெருமாளுக்கு நேராக இருக்க மாட்டார், பக்கவாட்டில் இருக்கிறார் பாருங்கள்" என்றம் கூறி விட்டு, "கிருஷ்ண ஜனனம் படிக்கிறா பேசக்கூடாது, அது முடிந்த பின்னர்தான் தீர்த்தமும்,ஜடாரியும் சாதிக்க முடியும்" என்றும் கூறினார். நான் கருடாழ்வாரை சேவித்துக் கொண்டு வெளியே வந்தேன். 

வேதம் ஓதி வரும் வேத வித்துக்களை காணவும், விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சிசையைக் காணவும் கருடாழ்வாரை கொஞ்சம் ஒதுங்கி இருக்கச் சொன்னாராம் பெருமாள். அதனால்தான் கருடன் பக்கவாட்டில் இருக்கிறார்.

அதன் பிறகு செவ்வாய் ஷேத்திரமாகிய திருக்கோளூர் என்னும் தலத்தில் வைத்தமாநிதி பெருமாளை தரிசித்ததோடு எங்கள் நவ திருப்பதி யாத்திரை நிறைவு பெற்றது.

திருக்கோளூர்தான் மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம்.

சிவ பெருமானை வழிபட ஒரு முறை கைலாயம் சென்ற குபேரன், பார்வதி தேவியை தீய எண்ணத்தோடு நோக்க, சினம் கொண்ட பார்வதி குபேரனை சபிக்கிறாள். இதனால் குபேரன் உருவம் விகாரமாவதோடு, அவனிடமிருந்த நவ நிதிகளும் அவனை விட்டு அகன்று விடுகின்றன. அந்த நவநிதிகள் இங்கிருக்கும் பெருமாளை தஞ்சமடைகின்றன. நவநிதிகளை பெற்றிருக்கும் பெருமாள் வைத்தமாநிதிபெருமாள் ஆகிறார். 

குபேரன் தன் பிழையை உணர்ந்து சிவபெருமானிடம் மன்னிப்பு கோருகிறான். சிவபெருமான் அவனை பார்வதி தேவியிடம் மன்னிப்பு கோரச்சொல்கிறார். பார்வதியின் பாதம் பணிந்த அவனிடம்," உனக்கு ஒரு கண் தெரியாது, உடலில் விகாரம் மாறாது, இழந்த நவ நிதிகளை வைத்தமாநிதிப் பெருமாளை வேண்டி பெற்றுக் கொள் என்று கூறி விடுகிறாள். அதன்படி, இந்த ஊர் பெருமாளை நோக்கி கடும் தவம் செய்து இழந்த செல்வங்களை பெற்றான். எனவே இழந்த செல்வங்களை மீண்டும் பெற விரும்புவார்கள் இக்கோவிலுக்கு வந்து பெருமாளை வழிபடுதல் சிறப்பு. 

மூலவர் வைத்தமாநிதிப் பெருமாள்(நிஷேதவிந்தன்).கிடந்த திருக்கோலம். புஜங்க சயனம். இரு தனி சந்நிதிகளில் குமுதவல்லி, கோளூர்வல்லி என்று இரெண்டு தாயார்கள்.

நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்
'உண்ணும் சோறு பருகும் நீர்  தின்னும் வெற்றிலை ..'  என்னும் எனக்குப் பிடித்த நம்மாழ்வார் பாசுரம் இங்கிருக்கும் பெருமாள் மீது  நம்மாழ்வாரால் நாயகி பாவத்தில் எழுதப்பட்டது. மொத்தம் பன்னிரண்டு பாசுரங்கள் எழுதியிருக்கிறார். 

நவத்திருப்பதி கோவில்கள் எல்லாமே நம்மாழ்வாரால் மட்டுமே மங்களாசாசனம் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இறையருளாலும், குருவருளாலும், பெரியோர்கள் ஆசியாலும் நவதிருப்பதி யாத்திரை நல்லவிதமாக முடிந்தது. குறிப்புக்கள் தந்து உதவிய கீதா அக்காவுக்கும், சகோதரர் நெல்லை தமிழனுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  தொடர்ந்து வருபவர்களுக்கு நன்றி. 

 அடுத்து நவ கைலாசங்களை தரிசிக்கலாம். 

22 comments:

 1. வைத்தமானிதிப் பெருமாளின் அழகே அழகு. தென் திருப்பேரை பெருமாள் பக்தர் நெடு நாட்கள் வலைப்பதிவில் எழுதி க் கொண்டிருந்தார். படங்களும் மிக அழகு. ஸ்தல புராணமும் அழகு. அன்பு வாழ்த்துகள் பானு மா.

  ReplyDelete
  Replies
  1. ஏன் பள்ளி கொண்டீர் ஐயா என்று பாடலாம் போல விஸ்ராந்தியாக பள்ளி கொண்டிருக்கிறார். அவர் அழகிற்கு என்ன குறை? நன்றி வல்லி அக்கா.

   Delete
 2. ​மகர நெடுங்குழைக்காதன் விவரங்கள் சிறப்பு.

  ReplyDelete
 3. "டோன்டு" ராகவன் என்னும் பெரியவர் வலைத்தளங்களில் ரொம்பப் பிரபலம். நான் வலைப்பக்கம் எழுத வந்தப்போ என்னை ஆதரித்தவர்களில் அவரும் ஒருவர். அவர் தென் திருப்பேரை மகரநெடுங்குழைக்காதரின் பக்தர். நான் போயிட்டு வந்து அவருக்காகப் பிரார்த்திக் கொண்டதைச் சொன்னேன். ரொம்பவே சந்தோஷம் அடைந்தார். அவர் தான் முதல் முதல் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பை மெரினா பீச்சில் ஆரம்பித்து வைத்தார். என்னால் கலந்துக்க முடியவில்லை. அப்போல்லாம் வலைப்பதிவர் சந்திப்பெனில் போண்டா தான் முக்கிய உணவு. :)

  ReplyDelete
  Replies
  1. மறைந்த டோண்டு ராகவன் ஸார் பதிவுகளை படித்திருக்கிறேன். துணிச்சலான மனிதர்.

   Delete
  2. ஆமாம், மிகவும் துணிச்சலாக பதிவுகள் போடுவார், படித்திருக்கிறேன்.

   Delete
 4. அடுத்து நவ கைலாயங்கள் தரிசனத்துக்குக் காத்திருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு குட்டி பயணமாக சென்னை வந்திருக்கிறேன். பங்களூர் திரும்பியதும் தொடங்க வேண்டும். உங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு சந்தோஷமாகவும் இருக்கிறது, பயமாகவும் இருக்கிறது.

   Delete
 5. பார்க்க ஆசைப்பட்ட கோயிலை உங்கள் பதிவு மூலமாக கண்டேன். நன்றி.

  ReplyDelete
 6. தலத்தின் சிறப்புகள் அருமை...

  ReplyDelete
  Replies
  1. ஆம், ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு. வருகைக்கு நன்றி.

   Delete
 7. நாம இப்போ இந்தக் கோவில்களை தரிசனம் செய்வது ஓரளவு சுலபமாகத்தான் இருக்கு. ஆனால், சுலபமாகப் பயணிக்க முடியாத அந்தக் காலத்தில் இப்படி ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று அங்குள்ள இறைவனைப் பாடி அனுபவித்திருக்கிறார்கள் என்று நினைத்தாலே அவர்களது பக்தி புரிபடும்.

  உங்கள் நவதிருப்பதி தரிசனம் முடிய 8 மணிக்கு மேலாகிவிட்டதுபோல் தெரிகிறதே.

  ReplyDelete
  Replies
  1. அவர்களால் தான் பாடப்பட வேண்டும் என்று இறைவனே சில கோவில்களில் தன்னை பாட வைத்துள்ளான். "எம்மை மறந்தனையோ சுந்தரா" என்று விருத்தாசலத்தில் உறையும் சிவ பெருமான் சுந்தரரை கேட்டது போல.

   Delete
  2. நாங்கள் தொடங்கவே 8:30 ஆகி விட்டது. ஆகவே முடியவும் 8:30 ஆகி விட்டது.

   Delete
 8. Replies
  1. நன்றி ஆதிரா. எல்லாம் இறையருள்.

   Delete
 9. மகர நெடுங்குழைக்காதன்..தரிசனம் தங்கள் வழியாக.

  மிகவும் நன்றி ..

  ReplyDelete
 10. மகர நெடுங்குழைக்காதன் - ஆஹா என்னவொரு அருமையான பெயர்.

  உங்கள் தயவில் எங்களுக்கும் நவதிருப்பதி தரிசனம். நவ கைலாச தரிசனம் காண காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 11. ஆமாம், மிகவும் அழகான பெயர்தான். நிகரில் முகில் வண்ணன், பொலிந்து நின்ற பிரான், இவைகளும் அழகுதான் இல்லையா? தொடர்ந்து வந்ததற்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete