கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, October 7, 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் - 7

பரவசம் தந்த நவ திருப்பதியும், 
நவ கைலாசமும் - 7

நவ கைலாச ஷேத்திரங்கள் -2ம் பகுதி 
திங்கள் கிழமை ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயிலோடு அன்றைய கோவில் விசிட்டுகளை முடித்த நாங்கள், மறுநாள் காலை குளித்து, உணவருந்தி விட்டு முதலில் சென்ற கோவில்  கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில். 


சிறிய கோவில் சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் சிவகாமி தெற்கு நோக்கியும் இருக்கிறார்கள். சுவாமியின் கருவறையில் நுழையும் முன், இடது பக்கம் விநாயகரும், வலது புறம் சுப்பிரமணிய ஸ்வாமியையும் வணங்கிக் கொள்கிறோம். நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய க்ஷேத்திரமாக கருதப் படுகிறது. அன்று செவ்வாய் கிழமையாக இருந்ததால், அம்மன் சந்நிதியில் ஒரே கும்பல். ஏதோ சிறப்பு பூஜை. அம்பிகை மஞ்சள் நிற புடவை உடுத்திக்கொண்டு மிக அழகாக இருந்தாள். ஸ்வாமியையும் அழகாக அலங்கரித்திருந்தார்கள். புகைப்படம் எடுக்கலாமா என்று நினைத்தேன். மூல ஸ்தானத்தை எடுக்க வேண்டாம் என்று தவிர்த்து விட்டேன். அப்போது  அம்மன் சந்நிதியில் இருந்த அர்ச்சகர் ஒரு படம் மற்றும் குங்குமம், விபூதி பிரசாதங்களை கொடுத்தனுப்பினார். மிகவும் சந்தோஷமாக இருந்தது. 
கோவிலை வலம் வந்து நமஸ்கரித்தோம். எல்லா சிவன் கோவில்களையும் போலவே சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், பைரவர் தனி சந்நிதிகளில். கோவில் வளர்ந்து கொண்டிருப்பது தெரிகிறது. பிரகாரத்தில் நந்தவனம் அமைத்திருக்கிறார்கள்.  ஆனால் கொடி மரம், கோபுரம் போன்றவை இல்லை.  பச்சரிசி, வெல்லம் எண்ணெய் போன்றவை பிரசாதத்திற்காக பெற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிப்பு காணப்பட்டது. செவ்வாய் கிழமைகளில் மட்டும் பரிகாரத்திற்காக நிறைய பேர்கள் வருவார்கள் போலிருக்கிறது. 

அங்கிருந்து சந்திரன் தலமான சேரன்மாதேவி நோக்கிச் சென்றோம்.  அந்த கோவில் சீக்கிரம் மூடி விடுவார்களாம். எங்கள் காரோட்டி கோவில் அர்ச்சகருக்கு ஃபோன் செய்து, எங்கள் வருகையை தெரிவித்தார். அவர், "ஏற்கனவே அம்மன் சந்நிதியை மூடி விட்டேன். சுவாமி சந்நிதியை மட்டும் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறேன் சீக்கிரம் வாருங்கள்" என்றார்.  கோபுரம், கொடி மரம், பலி பீடம், நந்தியம் பெருமான், நடராஜர் சந்நிதி  என்று எல்லாம் முறையாக அமைந்திருக்கும் கற்றளி கோவில். ராஜ ராஜ சோழன்,ராஜேந்திர சோழன் ஆகிய இருவருமே திருப்பணி செய்திருப்பதற்கு சான்றாக கல்வெட்டுகள் உள்ளதாம். இப்போது பக்தர்கள் வருகை குறைவாக இருப்பதால் அர்ச்சகர் வந்து காலை பூஜையை முடித்து விட்டு சென்று விடுகிறார்.

நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய கோவில். இங்கு வழிபடுவது திருவையாற்றுக்கருகில் இருக்கும் சந்திர க்ஷேத்ரமான திங்களூரில் சென்று வழிபடுவதற்கு சமம் என்று அர்ச்சகர் கூறினார். ரோமச முனிவர்  கைலாயம் அடைந்து நித்தியத்துவம் பெற வேண்டும் என்று இங்குதான் ஆல மரத்தின் அடியில் சிவ லிங்கம் அமைத்து வழிபட்டார் என்றும் அவருக்கு சிவ பெருமான் காட்சி அளித்ததாகவும் தல புராணம் கூறுகிறது. அதனாலோ என்னவோ இங்கு ஸ்தல விருட்சம் ஆல மரம்தான்.  இங்கிருக்கும் தூண்களில் ஒன்றில் ரோமச ரிஷிக்கு சிலை இருக்கிறது. 


சகோதரிகளும் அவர்கள் பயன் படுத்திய உரலும், உலக்கையும் மற்றொரு தூணில் இரண்டு பெண்கள் உரலில் நெல் குத்துவது போன்ற சிற்பம் ஒன்றும் இருக்கிறது. அதற்கு பின்னால் சுவாரஸ்யமான கதை ஒன்று இருக்கிறது. இங்கு வசித்து வந்த சகோதரிகள் இருவர் தினமும் உரலில் நெல் குத்தி அரிசியாக்கி, அதைக் கொண்டு அன்னதானம் செய்து வந்தனராம். அவர்களுக்கு இந்தக் கோவிலின் மூலஸ்தானத்தை கட்டுவதற்கு ஆசை, ஆனால் அதற்கான பொருள் தங்களிடம் இல்லையே என்று வருத்தம். ஒரு நாள் சிவ பெருமானே ஒரு அந்தணராக வடிவெடுத்து வந்து இவர்களிடம் பிட்சை பெற்று, அவர்களை ஆசிர்வதித்துச் சென்றாராம். அதன் பிறகு அவர்களின் செல்வ செழிப்பு வளர, அவர்கள் இந்த கோவிலாய் கட்டினார்கள் என்பது வரலாறு. அதற்கு சாட்சியாக இருப்பதுதான் பெண்கள் இருவர் உரலில் நெல் குத்தும் சிலை. 

ஸ்வாமி அம்மநாதர், அம்பாள் ஆவுடையம்மை. சுயம்பு லிங்கம். ஸ்வாமி, அம்மன் இருவருமே கிழக்கு நோக்கிய திருக்கோலம். இப்போது சேரன்மாதேவி என்று அழைக்கப் பட்டாலும், இதன் புராண பெயர் சதுர்வேதி மங்கலம்.தொடரும்..


11 comments:

 1. நல்லா இருக்கு. மறுபடியும் அந்தக் கோயில்களுக்கு எல்லாம் போன உணர்வு. நாங்க நவ கைலாயக் கோயில்களில் முதலில் போனதே கோடகநல்லூர் தான். நாங்க போனப்போ காலை நேர வழிபாடு நடந்து கொண்டிருந்தது. இப்போ நீங்க சொல்லும் அளவுக்குக் கோயில் பெரிசா இல்லை. ஓர் ஓதுவார் தேவாரம், திருவாசகம் பண்கள் அமைத்துப் பாடிக் கொண்டிருந்தார்.மிகக் குறைந்த சம்பளம்! கோயிலே கவனிப்பார் இல்லாமல் இருந்தது, இப்போக் கொஞ்சம் கவனிப்பு இருக்குனு நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் கோடகநல்லூருக்குச் சென்றிருந்தோம். அங்கு பெருமாள் கோவிலைத் தரிசனம் செய்தோம், உறவினர்களைப் பார்த்தோம். ஆனால், அங்கு நவகைலாச கோவில் இருக்கிறது என்று தெரியவில்லை அப்போ (தெரிந்திருந்தாலும், உறவினர்களுக்குச் சொல்லாமல்தான் சென்று தரிசித்திருப்பேன்..ஹாஹாஹா)

   Delete
  2. பெரும்பான்மையான நவ கைலாச கோவில்கள் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கின்றன. கோவில்கள் உள்ளடங்கி இருப்பதாலோ என்னவோ, செல்பவர்கள் குறைவு எங்கிறார்கள். அந்தந்த கிராம மக்கள் தயவால் ஏதோ காப்பாற்றப் படுகிறது.

   Delete
 2. http://aanmiga-payanam.blogspot.com/2009/10/3.html எழுதும்போது பாபநாசத்தை முதல்லே எழுதி இருந்தாலும் நாங்க போனது என்னமோ முதல்லே கோடகநல்லூர் தான்! அங்கே அப்போ ஏழ்மை நிலையில் கோயில் இருந்தது.

  ReplyDelete
 3. படித்தேன். தெரிந்து கொண்டேன். படங்கள் அழகாய் இருக்கின்றன.

  ReplyDelete
 4. என்ன என்னமோ கோயில்களெல்லாம் அறுமுகப் படுத்துறீங்கள்.. பார்த்துப் பரவசமடைகிறேன்ன்.

  ReplyDelete
  Replies
  1. நாங்களும் போயிட்டு வந்திருக்கோமே! :)

   Delete
  2. சந்தோஷம் அதிரா.

   Delete
 5. கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள் பற்றித் தெரியுமா? அவரோட அதிஷ்டானம் இங்கே புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கிறது என்கின்றனர்.

  ReplyDelete
  Replies
  1. கேள்விப் பட்டதில்லை.

   Delete