கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, February 14, 2019

காதலர்கள்

காதலர்கள்



'வேலண்டைன்ஸ் டே'  கொண்டாடும் வழக்கம் இல்லை. எ.பி.யில் ஸ்ரீராமின் கவிதையையும், வெங்கட்டின் பதிவையும் படித்த பிறகு இது சம்பந்தமான இரண்டு விஷயங்கள் நினைவிற்கு வந்தன. 

நான் மஸ்கட்டில் அலுவலக வண்டிக்காக காத்திருக்கும் நேரம் எனக்கு எரிச்சலாக இருக்கும். ஏனென்றால் அங்கு நானும், என் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு ஓமானி, ஒரு இந்தியன் யாவரும் தள்ளித் தள்ளி நின்று கொண்டிருப்போம். எனக்கு அருகில் நர்சரி ஸ்கூல் ஒன்றில் பணியாற்றிய கோவன் ஆசிரியை ஒருத்தி இருப்பாள். அவள் என்னைப் பார்த்து லே..சா..க சிரிப்பாள். அவ்வளவுதான். மற்றபடி பேசவோ, பார்க்கவோ யாரும், எதுவும் இருக்காது. 

சரி, சுற்றும் முற்றும் இப்படி இருக்கிறதே உருமாறும் மேகங்களையாவது வேடிக்கை பார்க்கலாம் என்றால்.. மேகமா? ம் ஹூம்!   மேகமாவது, ஒன்றாவது? துடைத்து விட்டது போல பளிச்சென்று சலிப்பூட்டும் நீல வானம். 

நம் ஊர் என்றால் இப்படியா இருக்கும்? டீ கடையிலிருந்து பாடல் அலறும், பூ வாங்கிக்கமா என்று ஒரு பெண் கூப்பிடுவார். அழகான  பெண்களை ரசிக்கலாம். என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன். அது போல ஒரு முறை கே.கே.நகர் அமுதம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பொழுது, பார்த்த ஒரு காட்சி:

பஸ் ஸ்டாப்பிலிருந்து கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம் ஒரு வாலிபன் எதற்கோ கெஞ்சி கொண்டிருந்தான், எங்கேயோ அழைத்தான் போலிருக்கிறது, அந்தப் பெண் மறுத்தாள், மிகவும் பலவீனமான மறுப்பு என்று நினைக்கிறேன்,ஏனென்றால், உடனே ஒப்புக்கொண்டு விட்டாளே, அந்த இளைஞனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை, அந்தப் பக்கம் சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தினான், அந்தப் பெண்ணை ஏறச்சொல்லி விட்டு அவள் கன்னத்தில் பச்சென்று ஒரு உம்மா கொடுத்தான். அவனுடைய மகிழ்ச்சி, அந்தப் பெண்ணின் திடுக்கிடல் இவை எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கின்றன.  (இது போன்ற காட்சிகளெல்லாம் மஸ்கெட்டில் காணக் கிடைக்குமா?)

இன்னொரு விஷயம் சற்று சோகமானது. சிட்டி சென்டர் துவங்கிய புதிதில்  அங்கிருக்கும் ஐனாக்ஸில் 'நினைத்தாலே இனிக்கும்' படம் பார்க்கச் சென்றிருந்தோம், டைரக்டர் பி.வாசுவின் மகன், பிரிதிவிராஜ், பிரியா மணி முதலியவர்கள் நடித்த மொக்கை படம். 

படத்திற்கு வந்திருந்த காதல் ஜோடிகளில் ஒரு பெண் படம் முடிந்து வெளியே வந்ததும் செல் போனை பார்த்து விட்டு பெரிதாக அழ ஆரம்பித்து விட்டாள். 

வீட்டிற்கு தெரியாமல் காதலனோடு சினிமாவிற்கு வந்திருந்த அந்த பெண், செல் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கிறாள். அந்த நேரத்தில் வீட்டில் அவள் தந்தை ஹார்ட் அட்டாக்கில் மரணமடைந்து விட்டார். அவளை தொடர்பு கொள்ள வீட்டிலிருந்து முயன்றிருப்பது தெரிந்து அவள் கதறிய கதறல்...!





22 comments:

  1. இரண்டாவது நிகழ்வு வேதனை...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அந்த பெண்ணுக்கு காதல் கசந்து கூட போயிருக்கலாம். வருகைக்கு நன்றி டி.டி.

      Delete
  2. இரண்டாவது நிகழ்வு மிகுந்த வேதனை. உடனே கடவுள், தண்டனை என்றெல்லாம் சிந்தித்திருப்பார்கள்.

    ReplyDelete
  3. ஐயோ... புதிய நினைத்தாலே இனிக்குமா? பெரிய அறுவை! பார்க்கவேண்டும் என்றே தோன்றவில்லை.. பார்க்கவும் இல்லை. ஒரு பாடலை கொஞ்சம் ரசிப்பேன். பியா பியா பியா ஓ பியா பியா என்று வரும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மஹா அறுவை. இந்த படப்பாடல் ஒன்றை காலர் ட்யூனாக வைத்திருந்ததற்கு எல்லோரும் என்னை கேலி செய்தார்கள்.

      Delete
  4. பானுக்கா நீங்க சொல்லிருக்காப்ல உள்ள சீன்ஸ் ஐ மீன் நேரடியாக நிறைய பார்த்திருக்கேன்...ஆனா பாருங்க சொல்லத் தோனலை..

    ரெண்டாவது நிகழ்வு ரொம்பவே வேதனை......

    அக்கா இந்தப் படம் மலையாளத் திரைப்படம் க்ளாஸ்மேட்ஸின் ரீ மேக் இல்லையா? தமிழ் மொக்கைனு கேள்விப்பட்டேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //பானுக்கா நீங்க சொல்லிருக்காப்ல உள்ள சீன்ஸ் ஐ மீன் நேரடியாக நிறைய பார்த்திருக்கேன்...ஆனா பாருங்க சொல்லத் தோனலை..//அங்கதான் பானு நிற்கிறாள்😝😝 இப்படி கொஞ்சம் என் ப்ளாக் பெயரை ஜஸ்டிஃபை பண்ணுகிறேன்.. ஹிஹி

      Delete
  5. முதல் நிகழ்வு ..என்னாச்சோ இவர்களின் காதல்னு தோணுது
    ஐரோப்பிய நாடாக இருந்தாலும் இந்தமாதிரி கெஞ்சும் கொஞ்சும் காட்சிகளை கண்டதில்லை ,முத்தமிட்டாலும் அதில் விரசம் ஆபாசமில்லாத மாதிரியிருக்கும் .க்ரீட் செய்யும்போதும் இங்கே அணைத்து முத்தமிட்டுக்கொள்வார்கள் லவ்வர்ஸ் .நம்மூர் லவ்ஸ் ம்ஹூம் இதோட கம்பேர் முடியாது
    இரண்டாவது சம்பவம் ..பாவம் அந்த பெண் ..வாழ்நாளெல்லாம் மறக்காத துன்பம்

    ReplyDelete
    Replies
    1. இதிலும் விரசமாக எனக்கு படவில்லை. இரண்டாவது நிகழ்வு..குற்ற உணச்சி அந்த பெண்ணுக்கு இருந்து கொண்டே இருக்கும்.

      Delete
  6. வணக்கம் சகோதரி

    காதலர் தினம் உங்களை வேகமாக பதிவு போட வைத்து விட்டது. இன்று எல்லோர் பதிவுகளிலும் இம்மாதிரியான சம்பவங்கள். இப்போதுதான்,DDயையும் சுசீயையும் கடைசியாக (நான்) பார்த்து விட்டு வந்தால், தங்கள் பதிவில் காதலர்கள். இரண்டாவது தந்த சோகத்தில் முதலாவது மனதிலிருந்து மறைந்து விட்டது. தன் தந்தையிடம் தெரிவித்து அவர் சம்மதத்துடன் திருமணம் நடத்திட ஒத்திகை பார்த்திருக்கும் அந்த பெண்ணுக்கு இவ்வளவு சோகம் வந்திருக்க வேண்டாம். முதலாவது மங்களகரமாய் நடந்தேறி இருக்கட்டும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. காதலர் தினம் இப்படி ஆகிறதா.
    எனக்கென்னவோ கணவன் மனைவி ஆன பிறகு

    காதலித்தால் தேவலை என்று தோன்றுகிறது.
    மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து, தந்தையை இழந்திருக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. திருமணத்திற்கு பிறகு வரும் இனக்கவர்ச்சி இல்லாத காதல்தான் நிஜம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது.

      Delete
  8. பலரும் இப்படித் தான் அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்கின்றனர். நலல்வேளையா எனக்கு அது இன்னமும் தெரியாது. அந்தப் பெண்ணின் நிலைமை பின்னால் என்ன ஆனதோ என நினைத்தால் கவலையாக இருக்கிறது. முதல் நிகழ்வில் அவர்கள் இருவரும் சேர்ந்திருப்பார்கள் என நம்புவோம்.

    ReplyDelete
  9. பாவம்.. ஸ்விட் ஆஃப் செய்த பெண்ணின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?..

    ReplyDelete
  10. இதற்குத்தான் தீயவை தீய பயத்தலால்.. என்று சொல்லியிருக்கின்றார்கள்...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சரி. தோண வேண்டியவர்களுக்கு தோணனும்.

      Delete
  11. ப்ரைவசி கெடக் கூடாது என்று சுவிட்ச் ஆஃப் செய்ததுஎத்தனைதவறு

    ReplyDelete
  12. அந்தப் பெண்ணால் தன்னை மன்னித்துக் கொள்ள முடியுமா
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  13. விளைவை உணராமல் செய்த விஷயம்.

    ReplyDelete