Saturday, February 9, 2019

பவானி அத்தைகள் இறப்பதில்லை.

பவானி அத்தைகள் இறப்பதில்லை.

நான் சிறு வயதில் எங்கள்   கிராமத்தில் சந்தித்த சில சுவாரஸ்யமான மனிதர்களை என்னால் மறக்கவே முடியவில்லை.ஒவ்வொருவரையும் பற்றி ஒரு பதிவு எழுதலாம்.

அதில் முக்கியமானவர் பவானி அத்தை. அத்தை என்றால் நேரடியாக அத்தை கிடையாது. என் அப்பாவிற்கு அத்தை முறை, எந்த வகையில் என்று தெரியாது. ஏதோ தூரத்து சொந்தம்.
அதையெல்லாம் நாங்கள் கேட்டதில்லை. அப்பா, அம்மா, அத்தைகள் எல்லோரும் அத்தை என்று அழைப்பார்கள், அதனால் நாங்களும் அப்படியே அழைத்தோம். 

இளம் வயதில் விதவையானவர், என்பது பின்னாளில் தெரிந்தது. குழந்தைகளும் கிடையாது. தன் வீட்டில் தனியாகத்தான் வசித்து வந்தார் . எப்பொழுதாவது அவருடைய நெருங்கிய சொந்தங்கள் வருவார்கள் என்று நினைவு. எங்கள் சின்ன தாத்தா, பெரிய அத்தை (அப்பாவின் அத்தை) இவர்களை பெயர் சொல்லி அழைப்பார், அவர்கள் கோபமாக இருக்கும் பொழுது, வீட்டில் இருக்கும் மற்றவர்கள் சொல்ல நினைப்பதை அவர்கள் சார்பாக சொல்லுவார். அதே போல் வீட்டு பெரியவர்களின் கருத்தையும் சிறியவர்களுக்கு எடுத்துச் சொல்லுவார். அதை வைத்து குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்று புரிந்து கொண்டோம். 

நியூக்ளியர் ஃபாமிலியாக இருக்கும் இந்த காலத்து குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட உறவுகள் புரியுமோ என்று தெரியவில்லை. அப்போதெல்லாம் ஒரு வீடு என்றிருந்தால் அதில் தாத்தா, பாட்டி, அவர்தம் சகோதர, சகோதரிகள், பெரியப்பா, சித்தப்பா, அத்தான், அம்மாஞ்சி, மட்டுமல்ல, ஆதரவில்லாத தூரத்து சொந்தங்களும் புழங்கும் இடம்.  

அதனாலோ என்னவோ, பவானி அத்தை பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான் சாப்பிடுவார். அவர் சாப்பிடுவது எங்களுக்கெல்லாம் சிரிப்பாக இருக்கும். ஏனென்றால், "சாப்பிடவே பிடிக்கவில்லை, என்னது கத்தரிக்காய் சாம்பாரா? கத்தரிக்காய் எனக்கு பிடிக்காது கொஞ்சமா விடு.." தொட்டுக்க என்ன இருக்கு? புடலங்கா கறியா? ஐயோ வேண்டியே இருக்கவில்லை, கொஞ்சம் போடு, போறும்.." ஊறுகாய் என்ன இருக்கு? வடு மாங்காயா? வடு மாங்காய் எல்லாம் முன்ன  மாதிரி எங்க இருக்கு?" ரெண்டே ரெண்டு போடு, " என்ன சொல்லு, மோருஞ்சாதத்திற்கு ஈடு இல்ல, ஐயோ மோர் ஒரே புளிப்பு.. வேண்டாம் நார்த்தங்காய் இருந்தா போடு, சாப்பிடவே பிடிக்கல.." என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் ஒரு  கை பார்ப்பார். நாங்கள் அப்போது ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வோம்.

இப்போதும் பவானி அத்தை பல வீடுகளில் இருக்கிறார் ஆனால் வேறு வடிவில் என்றுதான் தோன்றுகிறது. என் மாமியாருக்கு காலை கண் விழிக்கும் பொழுதே தொலைகாட்சி பெட்டியை ஆன் செய்தாக வேண்டும். " முன்ன விஜய் டி.வி.யில் நல்ல சத் விஷயங்கள் போட்டுக் கொண்டிருந்தார்கள்,  ஜெயாவுக்கு மாத்து,  இவர் நன்றாகத்தான் சொல்கிறார், ஆனால் ஏன் இந்த சைவ துவேஷம்?" " ஏழு மணியாகி விட்டதா? ஹரிகேச நல்லூர் ஜோசியம் போடு, இவர் எல்லாருக்கும் நாள் பிரமாதமா இருக்கும்பார், என்னவோ, கடக ராசிக்கு என்ன சொல்றர்னு பார்ப்போம்... என்னது திருமண ப்ராப்தியா?" (அது கல்யாண வயதில் இருப்பவர்களுக்கு என்று புரியாதா?) "எல்லாத்துலேயும் யோகா.."  (அதைப் பார்த்து கையை, காலை கொஞ்சம் அசைத்தால் நன்றாக இருக்கும்). 

காலை நேர நிகழ்ச்சிகளுக்கு இப்படி என்றால்,சீரியல் தொடங்கி விட்டால் வேறு விதம். " எல்லா சீரியலிலும் மாமியாரை கெட்டவளாகவே காட்டுகிறார்கள். ஏன் இப்படி பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரே நெகட்டிவிடி மணி பதினொன்னு ஆயிடுத்தா? ... ஆரம்பித்திருக்குமே? போடு போடு. நேத்திக்கு அந்த மாமியார் கடன்காரி மாட்டுப் பெண்ணை கொல்ல ஏற்பாடு பண்ணப் போறாள். நன்னா இருப்பாளா?" என்ற ரீதியில் கமெண்டுகள் கொடுத்துக் கொண்டே பார்ப்பார்.  
இதனால் அவர் வெறும் சீரியல்கள் மட்டும்தான் பார்ப்பார் என்று நினைத்துவிட வேண்டாம். நியூஸ் சேனல்களையும் விட்டு வைக்க மாட்டார். "இவன் ஏன் இப்படி கத்தறான்? எங்கேயாவது ஹார்ட் அட்டாக் வந்துவிட போகிறது. இவாளெல்லாம் இப்படி கத்துவதால் என்ன மாறி விடப் போகிறது?" என்பாரே தவிர,பார்க்காமல் இருக்க மாட்டார். 

எனக்கு சின்ன வயதில் பார்த்த பவானி அத்தைதான் நினைவுக்கு வருவார்.  

27 comments:

 1. எனக்கு ஷாக் அடித்தது. இப்போதுதான் பவானி அத்தை அப்புவை,
  //அம்மா வந்தாளைப் பத்தாம் முறை பாராயணம் செய்கிறேன்.//ரயிலில் ஏற்றிவிட்டு நின்று கொண்டிருக்கிறாள், பானுவின் பதிவுக்கு எங்கே வந்தாள் என்று சந்தேகம்.
  இங்க வந்தால் லௌகீக அத்தை கோலோச்சுகிறார்.
  எங்கள் மலை அத்தை தான் நினைவுக்கு வந்தார். தலை மேல் இருக்கும் நார்மடியையை இழுத்துக் கொண்டும் பெண்சிங்கம் போல் வந்தால் நாங்கள் எல்லாம் அட்டென்ஷனில் இருப்போம்.
  அவர் என் பாட்டியின் நாத்தனார்.
  அம்மாவுக்கு அத்தை. சகல வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்.
  எப்படி இருந்த உலகம் தான் எப்படி மாறிவிட்டது. மிக நன்றி பானுமா.

  ReplyDelete
  Replies
  1. //எப்படி இருந்த உலகம் தான் எப்படி மாறிவிட்டது// மிகவும் வருத்தமான விஷயம்தான். முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி மா.

   Delete
 2. ஆஹா அற்புதமான ஒப்பீடுஅன்றாடம்
  நாங்களும் இதுபோல் இரசித்துச் சிரிக்கும்
  அத்தைகள் இருந்தாலும் இவ்வளவு
  நேர்த்தியாய் சுருக்கமாய் சொல்லமுடியுமா
  என்பது சந்தேகமே..வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

   Delete
 3. ஆனந்த விக்டனில் வருமே, 'காரக்டர்'.. அந்த மாதிரியும் ஆச்சு; வர்ணனை, ஓவிய அச்சாய், யதார்த்த பாணி பூத்துக் குலுங்க... என்னன்னமோ, சோதனை செய்கிறீர்கள்.. எல்லாமே புதுமை, புதுமை, புதுமையன்றி வேறொன்றில்லை!...

  ReplyDelete
  Replies
  1. //ஆனந்த விக்டனில் வருமே, 'காரக்டர்'.. அந்த மாதிரியும் ஆச்சு;// இந்த வாக்கியம் மட்டுமல்ல, உங்கள் பின்னூட்டமே மிகப் பெரிய பாராட்டு. அதற்கு முழுமையாக தகுதி உடையவளாக என்னை ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன். மிக்க நன்றி.

   Delete
 4. வணக்கம் சகோதரி

  நல்ல சுவாரஸ்யமான அறிமுகந்தான் பவானி அத்தை.! எனக்கும் என் சின்ன வயதில் இந்த மாதிரி சில உறவுகளை கண்டு வியந்தது (அப்பா வழி, அம்மா வழி,) நினைவுக்கு வந்தது. மிகவும் அழகாக தங்கள் உறவினையும் தைரியமாக குறிப்பிட்டு விட்டீர்களே.. அந்த கால மனிதர்கள் சுபாவங்கள் ஒரு சிறிதும் மாற்ற முடியாதது. பதிவை ரசித்தேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

   Delete
 5. ஸ்வாரஸ்யம்... எங்கள் வீட்டில் ருக்கு அத்தை. அம்மாவின் அத்தை - எல்லோருக்கும் அத்தை! அற்புதமான மனுஷி...... முன்னரே அவர் பற்றி என் பக்கத்தில் எழுதிய பதிவின் சுட்டி கீழே...

  http://venkatnagaraj.blogspot.com/2017/01/blog-post_3.html?m=1

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ருக்கு அத்தை பற்றி படித்து கண் கலங்கியிருகிரேன். அதை பின்னூட்டதிலும் குறிப்பிட்டிருந்தேன். நன்றி.

   Delete
 6. எங்கள் வீட்டிலும், அநேகமாக அனைவர் வீடுகளிலும் இம்மாதிரி ஒரு குணச் சித்திரங்கள் கொண்டவர் உண்டுனு நினைக்கிறேன். ஆனால் உங்க மாமியார் நியூஸ் சானல்களையும் விட மாட்டார்னு சொன்னீங்களே, கிட்டத்தட்ட அந்தக் காரக்டர் தான் எங்க மாமியார். வாசல் தெளிக்கும்போதே பேப்பர்காரன் போடும் புத்தகங்களில் "துக்ளக்" "மங்கையர் மலர்" போன்றவற்றைத் தனியாய் எடுத்து வைத்துக் கொண்டு விடுவார். ஸ்லோக புத்தகத்துக்குள் வைத்துக் கொண்டு படித்துவிட்டுத் தான் வெளியேயே போடுவார். நாங்க புத்தகமே வரலைனு பேப்பர்காரரைத் திட்டிக் கொண்டு இருப்போம். :) அதே போல் தொலைக்காட்சிச் செய்திகள் வந்துட்டால் போதும், என்ன வேலை என்றாலும் விட்டுட்டு செய்திகளைக் கவனிப்பார். எப்போவானும் நாம் போடாமல் இருந்தாலும் சொல்லிப் போடச் சொல்லுவார். அவங்களுக்காகவே தினமலர் தினசரி வாங்கினோம். தினம் மத்தியானம் சாப்பிட்டுட்டு உட்கார்ந்தால் எல்லாத் தாள்களையும் உருப்போட்டுவிட்டுத் தான் மத்தியானம் படுப்பார். :)

  ReplyDelete
  Replies
  1. //எங்கள் வீட்டிலும், அநேகமாக அனைவர் வீடுகளிலும் இம்மாதிரி ஒரு குணச் சித்திரங்கள் கொண்டவர் உண்டுனு நினைக்கிறேன்.//ஆமாம், இதைத்தான் எல்லோரும் ஆமோதித்திருகிறார்கள். வருகைக்கு நன்றி.

   Delete
 7. // இப்போது பவானி அத்தை பல வீடுகளில் இருக்கிறார் //

  ஆம், எங்கள் வீட்டிலும்.

  பல வழக்கங்கள் புன்னகைக்க வைத்து, 'இங்கேயும் இங்கேயும்' என்று சொல்ல வைத்தன.

  ஒருவேளை எங்கள் வீட்டு அத்தையைத்தான் நீங்கள் பார்த்து எழுதி விட்டீர்களா என்ற சந்தேகமே வந்தது!

  ReplyDelete
  Replies
  1. //ஒருவேளை எங்கள் வீட்டு அத்தையைத்தான் நீங்கள் பார்த்து எழுதி விட்டீர்களா என்ற சந்தேகமே வந்தது!// ஹா ஹா ஹா!

   Delete
 8. ஆதரவில்லாத சொந்தங்களும் அந்நாளில் வீட்டுக்குள் புழங்குவார்கள்...

  ஆம், அது ஒரு கனா காலம்! இப்போது உறவினர்கள் வீட்டுக்கு வந்தால் கூட எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று மனம் கனக்குப் போடுகிறது! முன்னர் நம் வீட்டுக்கு யாராவது உறவினர்கள் வந்து கொண்டே இருக்க மாட்டார்களா என்று தோன்றும்.

  ReplyDelete
  Replies
  1. //ஆம், அது ஒரு கனா காலம்!// அந்த நாளும் வந்திடாதோ?

   Delete
 9. இப்போதெல்லாம் வயதான பெரியவர்களை நிறைய வீடுகளில் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பது வேதனையான உண்மை.

  ReplyDelete
 10. அப்போதெல்லாம் ஒரு வீடு என்றிருந்தால் அதில் தாத்தா, பாட்டி, அவர்தம் சகோதர, சகோதரிகள், பெரியப்பா, சித்தப்பா, அத்தான், அம்மாஞ்சி, மட்டுமல்ல, ஆதரவில்லாத தூரத்து சொந்தங்களும் புழங்கும் இடம். //

  ஹையோ பானுக்கா எனக்கு என் சிறு வயது அனுபவனள், நினைவுகளைக் கொண்டு வந்துட்டீங்க....இப்படியான கேரக்டர்கள் நிறைய பார்த்திருக்கேன்.

  அதுவும் ஐயே இதுவா எனக்கு வேண்டாம்...கொஞ்சமா போடு என்று சொல்லி ஆனால் நிறைய சாப்பிடுவாங்க...நாங்களும் அதாவது நாங்கள் கஸின்ஸ் அனைவரும் சேர்ந்து வாயைப் பொத்திக் கொண்டு நம்ம கீதாக்கா ஸ்டைல்ல இஃகி இஃகி நு சிரிப்போம்...!!!!!!!!!!!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எல்லா குடும்பங்களிலும் ஒரு பவானி அத்தை இருந்திருக்கிறார்.

   Delete
 11. ஹா ஹா ஹா உங்கள் மாமியார் பற்றி சொல்லியிருப்பது செம...அப்படித்தான் எங்க வீட்டிலும் முன்னாடி சீரியல்கள் ஓடும்...மாமியார் மாமனார் இருவருமே பார்ப்பார்கள். கிரிக்கெட் வந்துவிட்டால் மாமனார் கிரிக்கெட்டிலேயேதான் இருப்பார். மாமியாருக்கு சீரியல்கள் பார்க்க முடியாது!!!!!! மாமனாருக்கு அல்ஜிமர் வந்ததும் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து....அவரும் போன பிறகு இப்போது ஒன்லி திருப்பதி சானல் மாமியாருக்கு. அப்புறம் யுட்யூப் கலெக்ஷன் இந்த சத்சங்க் நிறைய இருக்கே அதை எல்லாம் மைத்துனர் போட்டுவிடுவார் டிவியில். அதைப் பார்ப்பார் இல்லைனா தினமும் 1 மணி வரை திருப்பதி கல்யாணம் தான் ஓடிக் கொண்டிருக்கும். மாமியாருக்குப் பிடித்தவர் தற்போது துஷ்வந்த் ஸ்ரீதர். அப்புறம் சுதா சேஷையன்.

  கீதா

  ReplyDelete
 12. என் மாமனார் இருந்தவரையில் அவரும் டி வி நிகழ்ச்சிகளை உணர்வு பூர்வமாகத்தான் பார்ப்பார். நீங்க சொல்லிருப்பது போல்.

  அப்படி இப்போதும் கேரக்டர்கள் இருக்காங்க ஆனா வேற வடிவில் நீங்க சொல்லிருப்பது போல்...

  கீதா

  ReplyDelete
 13. அட! நம்ம வீட்டுலயும் உண்டே அப்படினு நினைக்க வைத்தது உங்க பதிவு!!!

  ஆனால் இப்படியான பெரியவர்களுக்கு அவர்களுடன் அமர்ந்து பேச யாருக்கும் பொறுமையோ, நேரமோ இல்லாததால் டிவி, பத்திரிகைகள் கதி என்று இருப்பதால் அவங்களும் அதுலயே மூழ்கிவிடறாங்க. பொழுது போகனுமே.

  இது பரவால்ல. ஆனால் பெரியவங்கள் கவனிக்கப்படாமலேயே போவதும் இருக்கே. வேதனையான விஷயம் அது.

  கீதா

  ReplyDelete
 14. தொலைக்காட்சியே கதி என்று இருப்பவர்கள் இங்கும்...

  ReplyDelete
  Replies
  1. எல்லா வீடுகளிலும் இருக்கிறார்கள் சார். வருகைக்கு நன்றி.

   Delete
 15. நல்லா எழுதியிருக்கீங்க... பலவித கேரக்டர்களை சின்ன வயதில் பார்த்தன் ஞாபகமும், அதனை நாங்க எங்களுக்குள்ளேயே கேலி செய்துகொண்டதும் நினைவுக்கு வருது.

  ஸ்ரீராம் சொன்ன மாதிரி, இப்போதெல்லாம் பலர் தங்களுக்குள்ளேயே சுருங்கிக்கிட்டாங்க. உறவினர் வந்தாலே தொந்தரவு என்ற எண்ணமும் வந்துவிட்டது.

  ReplyDelete