கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, July 18, 2019

மசாலா சாட் - 10

மசாலா சாட் - 10


புனேயில் ஒரு சினேகிதரின் மகனுக்கு திருமணம். அதற்காக நானும் என் கணவரும் புனே செல்லும் பொழுது அப்படியே பண்டரிபுரம் செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால் தற்சமயம் ஆஷாட ஏகாதசி யை ஒட்டி வருவதால் பண்டரிபுரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றார்கள். எனவே கோலாப்பூர், சதாராவில் இருக்கும் உத்திர சிதம்பரம் நடராஜர் கோவில் சென்று வரலாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் லோகமான்யதிலக் விரைவு வண்டியில்  கிளம்பினோம்.

மெஜஸ்டிக் ரயில் நிலயத்தை சரியான நேரத்திற்கு வந்த வண்டி அங்கிருந்து தாமதமாக கிளம்பியது. நீண்ட தூர ரயில் பயணங்களில் என்னை மிரட்டும் விஷயம் இந்த தாமதமும், சக பிரயாணிகளும். சினேக ஸ்வபாவம் கொண்ட சக பிரயாணிகள் வாய்க்க வேண்டுமே என்று நினைத்துக் கொள்வேன்.

இந்த முறை தாமதமாக கிளம்பினாலும் சரியான நேரத்தில் புனேயை அடைந்து விட்டது. அதைப்போலவே சக பிரயாணிகளும் நட்புணர்வு கொண்டவர்களாகவே இருந்தார்கள். 

மும்பையிலிருந்து பாண்டிச்சேரி, 
ஏற்காடு போன்ற இடங்களுக்குச் சென்று விட்டு வந்த இரு சகோதரிகள் இருவருக்கும் (இருவரும் சீனியர் சிட்டிசன்கள் என்பது குறிப்பிடத்தக்கது) எப்போது சப்பாத்தி சாப்பிடுவோம் என்றாகி விட்டதாம். ஒரு வாரம் தமிழ் நாட்டில் இருந்தாலும் ஒரே ஒரு நாள்தான் பொங்கல் சாப்பிட முடிந்தது என்று குறைப்பட்டுக் கொண்டார்கள்.

எங்கள் ஊரில் பொங்கல் ப்ரேக் ஃபாஸ்ட் என்றோம்.  அவியல் கிடைக்கவில்லை என்றார்கள். அடிப்படையில் அவியல்  கேரள ஸ்பெஷல். தமிழகத்தில் எல்லா நாட்களும் போட மாட்டார்கள் என்றது அவர்களுக்கு வியப்பாக இருந்தது.

சத்தியசாய் பிரசாந்தி நிலயத்தில் ஏறிய திவாகர் என்பவர் ஒரு தகவல் களஞ்சியமாக இருந்தார். அவரோடு பேசிக் கொண்டிருந்த பொழுது நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

சாயி பக்தரான அவர் வங்கிப்பணியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் சத்திய சாயி பாபா சேவா நிறுவனத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு விட்டாராம். இப்போது கூட ஆஷாட ஏகாதசி சேவைக்காக புட்டபர்த்தி சென்று மும்பைக்கு திரும்பி கொண்டிருப்பதாக கூறினார். அவரோடு வந்த அவர் மனைவி குரு பூர்ணிமா வரை அங்கு தங்கி விட்டு விமானத்தில் மும்பை திரும்புவாராம்.

"இப்போதெல்லாம் விமான டிக்கெட்டுகள் மிகவும் சல்லிசாக கிடைக்கின்றன. இருந்தாலும் எனக்கு ரயிலில் பயணிப்பது மிகவும் பிடிக்கும். எங்கள் அப்பா ரயில்வேயில் பணிபுரிந்ததால் அதன் மீது ஒரு பாசம்" என்றார்.  அது மட்டுமல்ல இந்தியன் ரயில்வேயைப் பற்றி மிகவும் உயர்வாக பேசினார். "இவ்வளவு பரந்த நெட் வொர்க், இத்தனை வசதிகளோடு உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. எனக்கு முன்னால் ஒரு கதை புத்தகம், மற்றும் ரயில்வே கைடு இருந்தால், நான் ரயில்வே கைடைத்தான் தேர்ந்தெடுப்பேன். அதிலிருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்" என்றார்.
அவர் கூறிய சில விஷயங்கள் ஆச்சர்யமூட்டின.

மும்பையிலிருந்து கிளம்பும் ஒரு ரயில் வண்டி (மன்னிக்கவும், பெயர் மறந்து விட்டது)ஒரு குறிப்பிட்ட தூரம் வரை எக்ஸ்பிரஸ்ஸாகவும், பின்னர் ஒரு குறிப்பிட்ட தூரம் பாசன்ஜர் வண்டியாகவும், பின்னர் மெயிலாகவும் ஓடுகிறதாம்.

கரக்பூர் ரயில் நிலைய நடை மேடைதான் இந்தியாவிலேயே மிக நீண்ட நடை மேடையாம். உலகின் மூன்றாவது நீண்ட நடை மேடையாம் (1.72 கி.மீ. என்கிறார் கூகுள் ஆன்டி)ஆங்கிலேயர்கள் காலத்தில் ஆங்கிலேய உயரதிகாரிகள் வாக்கிங் செல்வதற்காக அமைக்கப்பட்டதாம்

ராஜதானி எக்ஸ்பிரஸ்ஸில் முதல் வகுப்பில் பயணித்தால் நமக்கு ராஜோபசாரம் கிடைக்குமாம். பயணிகளை ஒரு ரோஜாவோடு வரவேற்பார்களாம். சாப்பிட டைனிங் டேபிள் கொண்டு வந்து வைப்பதோடு, மெனு கார்டில் இருக்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமாம். ம்ம்ம்.. இதையும் ஒரு முறை பார்க்கலாம்.

ரயில்வே உயரதிகாரிகள் அலுவலக வேலைக்காக பயணிப்பதற்காக சலூன் என்றழைக்கப்படும் அலுவலகம் உட்பட அனைத்து வசதிகளும் கொண்ட சிறப்பு கோச்சுகள் உண்டாம். அவை கடைசியில் கார்ட் வேனுக்கு முன்பாக இணைக்கப்படுமாம்.


அரசு நிறுவனங்கள் என்றாலே அவை பற்றி குற்றங்களையும், குறைகளையும் மட்டுமே கேட்டிருந்ததற்கு மாற்றாக எத்தனை சிறப்புகள் என்று கேட்டது நன்றாக இருந்தது. இருந்தாலும் புனே ஜங்ஷனில் இறங்கியதும் இவ்வளவு முக்கியமான ஜங்ஷனில் எஸ்கலேட்டரோ, லிஃப்டோ இல்லையே என்று நினைப்பு வந்ததை தவிர்க்க முடியவில்லை.


22 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. //ராஜதானி எக்ஸ்பிரஸ்ஸில் முதல் வகுப்பில் பயணித்தால் நமக்கு ராஜோபசாரம் கிடைக்குமாம். பயணிகளை ஒரு ரோஜாவோடு வரவேற்பார்களாம்.// ஷதாப்தி விரைவு வண்டியிலும் உபசாரங்கள் உண்டு. டைனிங் டேபிள் அதிலேயே இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் மெனு கார்ட் எல்லாம் கொடுத்து நாம் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் உணவுகளைக் கொடுப்பார்கள். தமிழ்நாடு விரைவு வண்டி, ஜி.டி. போன்றவற்றில் முதல்வகுப்பில் பயணித்தாலும் உணவு உபசாரங்கள் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஷதாப்தியில் முதல் வகுப்பு உண்டா? எக்ஸிக்யூட்டிவ் க்ளாஸ் உண்டு.

      Delete
    2. எக்ஸிக்யூடிவ் க்ளாசைத் தான் முதல் வகுப்புனு சொல்றேன் போல!

      Delete
  3. //ரயில்வே உயரதிகாரிகள் அலுவலக வேலைக்காக பயணிப்பதற்காக சலூன் என்றழைக்கப்படும் அலுவலகம் உட்பட அனைத்து வசதிகளும் கொண்ட சிறப்பு கோச்சுகள் உண்டாம். அவை கடைசியில் கார்ட் வேனுக்கு முன்பாக இணைக்கப்படுமாம்.// இந்த சலோன் எனப்படும் கோச் உயரதிகாரிகளுக்கு மட்டுமில்லாமல் சில சமயம் முக்கியமான அமைச்சர்களுக்கும் உண்டு. இந்திரா காந்தி பிரதமராக இருந்தப்போ ரயில்வே போர்ட் சேர்மனாக இருந்த "கங்கூலி" என்பவரை இந்திரா காந்தி தனிப்பட்ட பகைக்காக இந்த சலோனைக் கழட்டி விட்டு அவரைப் பிரயாணம் செய்ய விடாமல் தடுத்தார்.

    ReplyDelete
    Replies
    1. யெஸ் யெஸ்,நீங்கள் சொன்னதும் இந்திரா காந்தியின் இந்த சின்னத்தனத்தை பேப்பரில் படித்து விட்டு அவரை திட்டியது நினைவுக்கு வருகிறது. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  4. அனுபவங்கள் தொடர்ந்து வரட்டும்...

    ReplyDelete
  5. ரயில் பயணம் என்றுமே ரசனை தான்...

    ReplyDelete
  6. ஆமாம். உடன் பயணிப்பவர்களின் பங்கு கணிசமானது. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. கோலாப்பூர் தரிசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
    அந்த ஸாயி பக்தர் கொடுத்த தகவல்கள் மிக அற்புதம்.

    என் கணவரின் பாட்டி இதே போல் சலூன் வண்டியில்
    தன் தகப்பனாருடன் ஜயா வரை சென்று வந்திருக்கிறார்.
    நதிக்கரைகள் தோறும் நீராடி, தங்கள் சமையல்களைச் செய்து சாப்பிட்டு,
    ஒரு மூன்று மாதம் பயணம் செய்தார்களாம்.

    புனே அழகான நகரம். இப்பொழுதும் அப்படியே இருக்கிறதோ தெரியவில்லை.
    நன்றி பானு மா.

    ReplyDelete
    Replies
    1. //என் கணவரின் பாட்டி இதே போல் சலூன் வண்டியில்
      தன் தகப்பனாருடன் ஜயா வரை சென்று வந்திருக்கிறார்.
      நதிக்கரைகள் தோறும் நீராடி, தங்கள் சமையல்களைச் செய்து சாப்பிட்டு,
      ஒரு மூன்று மாதம் பயணம் செய்தார்களாம்.// ஆஹா நினைக்கவே இனிக்கிறது. என் அப்பாவின் அத்தையின் மைத்துனர் அப்பொழுதே கலெக்டராக இருந்தாராம். அவர் குடும்பத்தோடு இப்படிப்பட்ட சலூன் வண்டியில் இந்தியா முழுவதும் பயணித்திருக்கிறாராம். நேரு, ராஜாஜி போன்றவர்கள் குடும்ப நண்பர்கள். ஹிராகுட் அணை கட்டப்படும் பொழுது பார்த்ததாக சொல்லுவார்.
      எல்லா வளர்ந்து வரும் நகரங்களைப் போல புனேயும் கொஞ்சம் அழகாகவும் கொஞ்சம் கந்தரகோளமாகவும் இருக்கிறது.
      வருகைக்கு நன்றி அக்கா.

      Delete
  8. பயண அனுபவம் நன்றாக இருக்கிறது. ஆடிமாதம் ஒரு முறை காசி சென்று விட்டு கூட்டத்தில் மிகவும் கஷ்டபட்டது நினைவுக்கு வருது. ஆடி சோமவாரம் இன்னும் அதிகமாம்.அன்றுதான் போய் நீண்ட வரிசையில் (மெதுவாய் நகரும் வரிசை) சென்று காசி விஸ்வநாதர் கோவில் வாசலில் எல்லோரும் கலந்து விடுவார்கள் அங்கு வரிசை இல்லை. எப்படியோ அவர் அருளால் வணங்கி வந்தோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆடி வெள்ளி என்பதாலோ என்னவோ மஹாலக்ஷ்மி கோவிலில் கூட்டம் இருந்தது.ஆனால் நகர்ந்து கொண்டே இருந்தது. ஆகஸ்ட் இறுதியில் காசி செல்வதாக இருக்கிறோம்.அப்போது ஆடி மாதம் முடிந்து விடும். தகவலுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  9. வணக்கம் சகோதரி

    பயண அனுபவங்கள் நன்றாக உள்ளது. ரயில் சினேகத்தில் நிறைய விபரங்களை சேகரித்து எங்களுக்கும் அறிய தந்துள்ளீர்கள். அடுத்து புனே சென்று திருமண வைபவம் இனிதாக முடிந்த பின் கோவில்கள் தரிசித்த பதிவை எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் எதிர்பார்ப்பு உற்சாகமூட்டுகிறது. கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. கருத்துக்கு நன்றி.

      Delete
  10. இரயில் பயணங்களில் சக பயணிகள் சரியாக அமைந்து விட்டால் பயண அலுப்பு தெரியாமல் பயணிக்கலாம். பல முறை தில்லியிலிருந்து சென்னை/திருச்சி வந்து போகும்போது சக பயணிகளால் கிடைத்த அனுபவங்கள் - சில நல்லவை/சில பிடிக்காதவை - நிறையவே...

    ஸ்வாரஸ்யமாக இருந்த பயணம் அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  11. ஆமாம், உங்களுக்கு நிறையவே அனுபவம் இருக்கும். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. அருமை
    அனுபவங்கள் தொடரட்டும்

    ReplyDelete
  13. பானுக்கா நானும் நம்மூர் ரயில்வே நினைத்து மிகவும் வியப்பாகவும் பெருமையாகவும் நினைப்பதுண்டு. நானும் பயணங்கள் மற்றும் ரயில் காதலி. அவர் சொல்லியிருக்கும் ரயில் பெருமைகள் அனைத்தையும் நான் டிட்டோ செய்வேன்.

    கரக்பூர் ரயில் நிலைய நடை மேடை பற்றி முன்பு ஜிகேயில் (எத்தனை காம்பெட்டிட்டிவ் எக்சாம் எழுதியிருப்பேன் ஹிஹிஹிஹி!!) படித்திருக்கிறேன்.

    ரயில் பயணம் தான் மிகவும் பிடிக்கும். அதுவும் நீங்க சொல்லிருப்பது போல நட்புடன் ஆன மக்களுடன்.

    இத்தனை வசதிகளை ரயில்வே செய்திருந்தாலும் கடைசில ஒரு பஞ்ச் வைத்தீர்கள் பாருங்கள்!!!! ஹா ஹா ஹா ஹா...

    சுவையான அனுபவம்.

    கீதா

    ReplyDelete