கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, August 10, 2019

கேட்ட வரம்

கேட்ட வரம்
 

உப்பரிகையில் நின்று கொண்டிருந்த தசரத சக்கரவர்த்தியின் கண்களில், கீழே நந்தவனத்தில் நடந்து கொண்டிருந்த ராமனும், சீதையும் பட்டார்கள். சீண்டலும்,சிணுங்கலும், சிரிப்புமாக நடந்து கொண்டிருந்த அவர்களை பார்க்க பார்க்க அவருக்கு மகிழ்ச்சி பொங்கியது. 


"எதைப்பார்த்து இத்தனை சந்தோஷம் உங்களுக்கு?"  குரல் கேட்டதும்தான், கௌசல்யா அங்கு வந்திருப்பதை உணர்ந்தார். 

"அங்கே பார், நம் குழந்தைகளின் சந்தோஷத்தை? அதை விட வேறு எது நமக்கு மகிழ்ச்சி தரும்?"

தசரதர் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்த கௌசல்யா,"நம் குழந்தைகளாகவே இருந்தாலும், தனிமையில் இருக்கும் தம்பதிகளை கவனிப்பது தவறு. மேலும், பெற்றோர்களின் கண் மிகவும் பொல்லாதது. அவர்களுக்கு கண்ணேறு பட்டு விடப்  போகிறது நகர்ந்து வாருங்கள்." கணவரை நகர்த்தி அருகில் இருந்த ஊஞ்சலில் அமர வைத்தாள். 

" நேற்றுதான் நடந்தது போல இருக்கிறது...! விஸ்வாமித்திரர் வந்து தன் யாகத்தை பாதுகாக்க ராமனை துணைக்கு அழைத்தது, நான் தயங்கியது, பிறகு வசிஷ்டர் ஆலோசனைப்படி அனுப்பி வைத்தது, பிறகு ராமன் ஜனகரின் சிவ தனுசை முறித்து சீதையை மணக்கும் வாய்ப்பை பெற்று விட்டான் என்று செய்தி வந்தது...எல்லாம் நேற்றுதான் நடந்தது போல இருக்கிறது." பழைய நினைவுகளில் ஆழ்ந்த தசரதர் தொடர்ந்து, "அப்போது குழந்தை பருவத்தை கடந்து, யுவனாக மாறிக் கொண்டிருந்த ராமன், இன்று கட்டிளம் காளையாகி விட்டான், அவனுக்காகவே பிறந்தது போன்ற, எல்லாவற்றிலும் அவனுக்கு ஈடான மனைவி சீதா. சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள், என்றாலும்.. " என்று இழுத்து நிறுத்த, 

"அவர்களின் சந்தோஷத்திற்கு சாட்சியாக இன்னும் ஒரு மழலைச் செல்வம் வாய்க்கவில்லை என்பதுதானே உங்கள் வருத்தம்?" என்ற கௌசல்யா, தொடர்ந்து "என்ன செய்வது இது சூரிய வம்சத்திற்கு ஏற்பட்ட சாபமோ? ஹரிச்சந்திர மஹாராஜாவுக்கே நீண்ட காலம் கழித்துதான் லோகிதாசர் பிறந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் பாட்டனார் திலீப சக்ரவர்த்திக்கும் இது நிகழ்ந்தது, நமக்கும் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த பிறகுதானே மழலைச் செல்வம் வாய்த்தது? ராமனுக்கும்  பிறக்கும். ஆனால் அதற்கு முன்னால் ராமனுக்கு இன்னும் கூடுதல் பொறுப்புகள் கொடுப்பது நல்லதில்லையா?"

"பொறுப்புகளை சுமக்க ஆரம்பித்து விட்டால் இறக்கி வைக்க முடியாது கௌசல்யா, பாவம் அவன் குழந்தை, இன்னும் சிறிது நாட்கள் சந்தோஷமாக இருக்கட்டுமே. நான் திடமாகத்தானே இருக்கிறேன்.."ஊஞ்சலில் நன்கு சாய்ந்து உட்கார்ந்து கொண்டு கைகள் இரண்டையும் பக்கவாட்டில் போட்டுக்கொண்டார்.

பதில் எதுவும் சொல்லாத கௌசலை, மெல்ல சிரிப்பதை பார்த்த தசரதர்,"எதற்காக இந்த சிரிப்பு?" என்றதும்,

"வேறு ஒன்றும் இல்லை, பெண்களைப் பெற்றவர்களுக்கும், பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை நினைத்தேன், சிரிப்பு வந்தது"

"என்ன வித்தியாசம்?"

"பெண்ணைப் பெற்றவர்கள், அந்த பெண்ணை குழந்தையாக கருதுவது சொற்ப காலத்திற்குத்தான். மிகச்சிறிய வயதிலிருந்தே எதிர்காலத்தில் அவள் ஒரு குடும்பத்தலைவியாக விளங்க வேண்டியதற்காக அவளை தயார் செய்யத் தொடங்கி விடுவார்கள். ஆனால் பிள்ளையைப் பெற்றவர்களோ பிள்ளைக்கு எத்தனை வயதானாலும் அவனை குழந்தையாகவே நினைக்கிறார்கள்."

"நீ ஏதோ பூடகமாக பேசுகிறாய் கௌசல்யா.."

"இல்லை அரசே, தெளிவாகத்தான் கூறியிருக்கிறேன். எனக்கு மாலை நேர பூஜைக்கு நேரமாகி விட்டது, வருகிறேன்"

"பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாதியில் விட்டுவிட்டு செல்வது தவறான பழக்கம்"

"என்ன செய்வது? அரங்கன் அழைக்கிறானே..?"

"ம்ம்.. நீ ரங்கநாதனை பூஜித்து, பூஜித்து, அவனே கீழே இறங்கி வந்து விடப் போகிறான்.."

"அப்படி வந்தாலும் வந்திருப்பது அவன்தான் என்று புரிந்து கொள்ளும் ஞானம் வாய்க்க வேண்டாமா?"

"என்ன, இன்றைக்கு ஏதோ பூடகமாகவே பேசுகிறாய்?"

பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே கௌசல்யா சென்று விட, தசரதனின் மனதுக்குள் ஏகப்பட்ட எண்ணங்கள் , ரிஷி பத்தினியாகியிருக்க வேண்டியவள் நாடாளும் அரசனின் பட்ட மகிஷி ஆகி விட்டாள். என்ன சொல்கிறாள்? ராமனுக்கு முடி சூட்ட வேண்டும் என்கிறாளா? எதையும் உடைத்து பேசும் பழக்கம் கிடையாது. அவள் மனதில் உள்ளது சுமித்ராவுக்கு தெரிந்திருக்கும், ஆனால் அவள் தனக்கென்று கருத்து எதுவும் இல்லாதவள். கைகேயிடம்தான் கேட்க வேண்டும். அதற்கு முன்னால் நம் குலகுரு வசிஷ்டரிடம் சென்று ஆலோசனை பெற்று வரலாம்.

*******************************************************************************************
வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு அரசர் தசரதர் வரப்போகிறார் என்பதை அறிந்து அங்கிருந்த மாணாக்கர்கள் பரபரப்பு அடைந்தார்கள். 

"தசரத சக்கரவர்த்தி வருகை தரப்போகிறாராமே? என்ன விஷயம்? ஏதாவது அரசாங்க ஆலோசனையா? நம்மால் அவரை அருகில் பார்க்க முடியுமா? பேச முடியுமா?" ஏகப்பட்ட யூகங்கள், ஹேஷ்யங்கள், ஆனால் அரசர் வரும்பொழுது அவர்கள் யாரும் அருகில் இருக்க அனுமதிக்கப்படவில்லை. சற்று தொலைவில் இருந்தபடிதான் அரசரை பார்க்க முடிந்தது.

வந்து தன்னை வணங்கிய தசரதனை ஆசிர்வதித்த வசிஷ்டர், எதுவும் பேசாமல் அருகிலிருந்த மரத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். அதில் தாய்  பறவை ஒன்று கொஞ்சம் வளர்ந்து விட்ட தன் குஞ்சிற்கு பறக்க கற்றுக் கொடுப்பதை தீவிரமாக வேடிக்கைப் பார்த்தார். 

தாய்க்கு அருகில் உட்கார்ந்திருக்கும் குஞ்சினை பலவிதமாக பறக்கத் தூண்டும் தாய் பறவை, அதை சுற்றி சுற்றி பறந்து, குஞ்சின் கண்ணிற்குப் படாமல் மறைந்து கொள்ள, குஞ்சு பறக்கத் தொடங்கியது. 

"பார்த்தாயா தசரதா? பறவைகள், விலங்குகள் எல்லாமே உரிய பருவம் வந்ததும் தம் குழந்தைகள் சுயமாக பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் செயல்படுகின்றன.  தன்னையே சார்ந்து இருப்பதை விரும்புவதில்லை."  என்று கூறியதும், தசரதனுக்கு சட்டென்று மனதுக்குள் ஒரு பொறி தட்டியது. 

"நீ வந்த விவரத்தை கூறவே இல்லையே? என்ன விஷயமாக வந்தாய்?"

"இப்போது இந்த பறவை செய்ததைத்தான் நானும் செய்ய விரும்புகிறேன். ராமனுக்கு முடிசூட்ட விரும்புகிறேன். அதுவும் கூடிய விரைவில் அதை நடத்த முடிந்தால் மிகவும் மகிழ்ச்சி. அதற்கு ஒரு பொருத்தமான நாளை தாங்கள்தான் பார்த்து சொல்ல வேண்டும்." 

முகம் மலர தசரதனை மீண்டும் ஆசிர்வதித்த வசிஷ்டர், "சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ஜோதிடம் பார்க்கக்கூடாது. நாளை காலை நானே அரண்மனைக்கு வருகிறேன், அப்போது முடிவு செய்யலாம்." என்றதும், ஒரு விடுதலை உணர்ச்சியோடும், மகிழ்ச்சியோடும், தசரதன் நிம்மதியாக உறங்கச் செல்ல, தன் அரண்மனையில், உறங்காமல் விழித்துக் கொண்டிருந்தான் ராமன்.

*******************************************************************************************
ராமா என்ன இது?  உன் தந்தை உனக்கு பட்டம் கட்ட ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார். இதற்காகவா நீ இங்கு வந்தாய்? கர தூஷணர்களை அழிக்க வேண்டும். கபந்தனுக்கு மோட்சம் அளிக்க வேண்டும். இதை எல்லாவற்றையும் விட ராவண சம்ஹாரம். நமக்கு உதவி செய்வதற்காக வந்த வாலி, வந்த நோக்கத்தை மறந்து எதிரியோடு கை கோர்த்துக் கொண்டு விட்டான், அவனை அவனறியாமல் அப்புறப் படுத்த வேண்டும். அது மட்டுமா? எத்தனை ரிஷிகள் உனக்காக வனத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? சபரி உனக்காகவே தவம் இயற்றிக் கொண்டிருக்கிறாள். இவை எல்லாவற்றையும் மறந்து நீ பட்டம் கட்டிக் கொண்டு அரச போகத்தை அனுபவிக்கப் போகிறாயா? இந்த பட்டாபிஷேகம் நடக்கக்கூடாது. 



பலவிதமாக சிந்தித்த ராமன் பட்டாபிஷேகத்தை எப்படி நிறுத்துவது என்று யோசித்தான். மிகவும் மகிழ்ச்சியோடு எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் தந்தையிடம் எப்படி இதை கைவிடுங்கள் என்று சொல்வது? இதற்கு சிற்றன்னை கைகேயிதான் உதவ முடியும். ராமன் கைகேயியை சந்திக்க முடிவு செய்தான். 

அவன் சிற்றன்னை கைகேயியின் அரண்மனைக்குள் நுழைந்த பொழுது, அவனை வணங்கி, நின்ற தாதிப்பெண்களை ஜாடைக் காட்டி, வெளியே போகச்சொன்னான். தன் பஞ்சணையில் அமர்ந்து தன்னுடைய குதிரைக்காக வாங்கியிருந்த கழுத்து மணியை அழகு பார்த்துக் கொண்டிருந்த கைகேயியின் பின்புறமாகச் சென்று அவள் கண்களை பொத்தினான். 

பஞ்சு போன்ற அதே சமயத்தில் உறுதியான கரங்கள். மேனியிலிருந்து புறப்பட்ட சுகந்தம், "ராமா, என்ன இது விளையாட்டு? சிறு குழந்தை போல? 

"உங்களுக்கு நான் எப்போதுமே குழந்தைதானே அம்மா?"

"சரிதான், இதை சீதா கேட்டால் என்ன நினைத்துக் கொள்வாள்? ஆமாம், என்ன நீ மட்டும் வந்திருக்கிறாய்? சீதா எங்கே?" 

"ஏன்? நான் தனியாக வந்தால் ஆகாதா? பரதன் வேறு மாமா வீட்டிற்கு சென்றிருக்கிறான், தனியாக இருப்பீர்களே? பேசிக் கொண்டிருக்கலாம் என்று வந்தால்.." ராமன் போலிக் கோபத்தோடு எழுந்திருக்க, 

"இன்னும் நீ அதே பழைய ராமன்தான். சிடுக்கென்று வரும் அதே கோபம். நீ சிறுவனாக இருந்த பொழுது, பரதன் என் மடியில் அமர்ந்தால் உனக்கு காணப்  பொறுக்காது.."கைகேயி சிரித்துக் கொண்டே ராமன் தோளில் கை வைத்து இருக்கையில் அமர வைத்தாள். 

"என்ன சாப்பிடுகிறாய்?" என்று கை தட்டி தாதியரை அழைக்க முற்பட, அவளை தடுத்த ராமன்," எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம்.." என்று இழுத்து நிறுத்த, 

"வேறு என்ன வேண்டும்?" என்று அவனை கூர்மையாக பார்த்தபடி அவனுக்கு எதிரே இருந்த ஆசனத்தில் அமர்ந்த கைகேயியை பார்த்த ராமன் மனதுக்குள் வியந்தான். இந்த கூர்மைதான் தந்தைக்கு இவள் மீது அதிக ப்ரேமையை உண்டாக்கியதோ? அழகு, ஆளுமை, போர் களத்தைக் கண்டு அஞ்சாமல் லாகவமாக தேரை செலுத்தும் திறமை, எந்த அரசனுக்குத்தான் பிடிக்காது? அரசப்பதவி என்பது யானையின் மீது சவாரி செய்வதைப் போன்றது. கீழிருந்து பார்க்கிறவர்களுக்கு அதன் கம்பீரம் மட்டுமே தெரியும், அதிலிருக்கும் ஆபத்தையும், சிரமங்களையும் உணர்ந்து நடந்து கொள்ளும் மனைவியை கொண்டாடத்தானே தோன்றும். 

எதுவோ சொல்ல வந்துவிட்டு எதுவும் பேசாமல் தன்னையே வெறித்து  பார்த்தபடி அமர்ந்திருக்கும் மகனை பார்த்த கைகேயி," "என்ன ராமா? ஏதோ வேண்டும் என்றாய்..?"

சிற்றன்னையின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் வைத்திருந்த குதிரைக்கான கழுத்து மணியை கைகளில் எடுத்துக் கொண்ட ராமன்,"குதிரைகள் மீது நீங்கள் கொண்டிருக்கும் பிரேமை இன்னும் குறையவே இல்லை"

"ஆமாம், ஏழு சகோதரர்களுக்குப் பிறகு ஒரு சகோதரியாக பிறந்ததாலோ என்னவோ ஆண்களைப் போலவே அவர்களுக்குரிய எல்லா விளையாட்டுகளையும் கற்றுக் கொண்டேன். குறிப்பாக, குதிரை ஏற்றமும், தேர் ஓட்டுவதிலும் தனி ஈடுபாடு". 

"அந்த திறமையை கொண்டுதான் சம்பாசுரனுக்கு எதிராக நடத்தப்பட்ட யுத்தத்தில் என் தந்தைக்கு தேர் ஓட்டி உதவினீர்களோ?"

"அதெல்லாம் பழைய கதை. நீ என்னிடம் ஏதோ கேட்க நினைக்கிறாய், அதை நேரிடையாக சொல்லாமல் சுற்றி வளைக்கிறாய்"

"சில நொடிகள் தாமதித்த ராமன், அரசாங்கம் என்றால் எத்தனை போர்? எதற்கு இவ்வளவு யுத்தம்?

"சரிதான், விரைவில் பட்டம் சூட்டிக்கொண்டு நாட்டை ஆள வேண்டியவன் பேசுகிற பேச்சா இது?"

"அம்மா, உண்மையில் என்னை விட பரதனுக்குத்தான் நாட்டை ஆளும் தகுதி நிறைய இருக்கிறது என்று தோன்றுகிறது."

"ராமா, என்ன ஆயிற்று இன்று உனக்கு? இது என்ன பேச்சு? மூத்தவன் நீ இருக்க, இளையவன் பரதன் அரசனாவதா? உன் தந்தை உனக்கு விரைவில் பட்டம் கட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார்".

"எனக்கும் அது தெரியும் தாயே" என்று கூறியபடியே தன் ஆசனத்தில் இருந்து எழுந்த ராமன், கைகேயியின் கரங்களைப் பற்றிக் கொண்டு, அவள் கண்களை உற்றுப் பார்த்து, "ஆனால் அது நடக்கக் கூடாது.தாங்கள்தான் என் பட்டாபிஷேகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த வரத்தை எனக்கு அருள வேண்டும்" என்றதும், 

"ராமா என்ன பிதற்றுகிறாய்?" 

"இல்லை தாயே, நான் வந்த நோக்கம் அயோத்தியில் அரசனாக ராஜா போக வாழ்க்கையை இப்போது அனுபவிப்பது அல்ல, எனக்கு வேறு சில கடமைகள் இருக்கின்றன."

இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க முயலுவது போல அப்படி என்ன பொல்லாத கடமை. 

அம்மா, எல்லாவற்றையும் உடைத்துக் கூற முடியாது. சில வருடங்கள் நான் வனவாசம் மேற்கொண்டுதான் ஆக வேண்டும்.

ராமன் கூறியதை கேட்ட கைகேயி காதுகளை பொத்திக் கொண்டாள். "என்ன விபரீதம்? நாடாள வேண்டியவன் காட்டிற்குச் செல்வதா? ராஜாங்கம் என்னவாகும்? 
"அதற்குத்தான் என் தம்பி பரதன் இருக்கிறானே?"

"கொஞ்சம் கூட நியாயமில்லாத செயல். அதற்கு பரதன் உடன்படுவான் என்று எப்படி நினைக்கிறாய்?" 

"பரதன் தன் பொறுப்பை தட்டிக் கழிக்க மாட்டான். நான் சொன்னால் ஏற்றுக் கொள்வான். அவனை சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு."

"இந்த அடாத செயலுக்கு உன் தந்தை உடன்படுவாரா?"

"அவரை உடன்படச் செய்யத்தான் உங்களை வேண்டுகிறேன். உங்களால்தான் அது முடியும்." 

"உங்கள் அரசியல் சதுரங்கத்தில் என்னை பகடைக் காயாக்கப் பார்க்கிறாய்." 

ராமன் கைகேயியின் கரங்களை எடுத்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். "வேறு வழியில்லை அம்மா. என்னை மன்னித்து விடுங்கள்". 

ராமனின் பார்வையும், ஸ்பரிசமும் கைகேயியின் வாதிடும் குணத்தை மாற்றின. 

"நான் என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?" 

"எனக்கு பட்டம் கட்டப் போவதாக தந்தை கூறினால், அதற்கு ஒப்புக் கொள்ளாதீர்கள். அது போதும்." 

"இப்படி ஒரு இழி செயலை புரிந்த என்னை காலமெல்லாம் உலகம் தூற்றாதா?" 

"என்ன செய்வது அம்மா? காரணமில்லாமல் காரியம் இல்லை. எல்லா செயல்களும் நல்லதா கெட்டதா என்பதை அது நிகழும் நேரத்தை வைத்து மட்டும் முடிவு செய்ய முடியாது.  மேலும் சில நன்மைகள் நடக்க வேண்டுமென்றால், சிலர் தியாகம் செய்துதான் ஆக வேண்டும். உங்களுடைய இந்த தியாகத்தின் பரிசை வருங்கால பெண் குலத்திற்கு நான் வழங்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் இந்த தேசத்தில் பெண்கள் அரசியலில் ஈடுபட்டு பெரிய பதவிகளை வகிப்பார்கள். ஆண்கள் மட்டுமே கோலோச்சிய துறைகளிலும் அவர்கள் தன் முத்திரையை பதிப்பார்கள்." 

"இதுதான் உன் சங்கல்பம் என்றால் அது நிறைவேற தடையேது சீதாராமா?" பேசிக்கொண்டே கைகேயி உறக்க நிலைக்குச் செல்ல, அவளை படுக்கையில் கிடத்திய ராமன் மின்னலென வெளியேறினான்.

அவன் செல்லும் வழியில் தூரத்தில் மந்தரை வருவதைப் பார்த்து புன்முறுவல் பூத்துக் கொண்டான். மனதிற்குள் சரஸ்வதி தேவியை துதித்தான். "வாக் தேவி தாயே, என் சிற்றன்னை கைகேயியை பார்க்கச் செல்லும் இந்த மந்தரையின் வாக்கை செல்லும் வாக்காகச் செய். இவள் சொல்வதை என் தாய் கைகேயி கேட்க வேண்டும். என்று பிரார்த்தனை செய்தான். 

அங்கே   கண் விழித்த கைகேயி குழம்பினாள்."என்ன இது பகலில் இத்தனை நேரம் தூங்கி விட்டேன்? என்னென்னவோ கனவு. அது கனவா? நிஜமா? ராமன் மட்டும் வந்தது போல இருக்கிறது. என்னென்னவோ பேசினான். அவனுக்கு பட்டாபிஷேகமாம், ஆனால் பரதன்தான் அரசனாக வேண்டுமாம், எனக்கு கெட்ட பெயர் ஏற்படுவது போலக்கூட தோன்றியது... என்ன கனவு இது? என்று அவள் குழம்பிக் கொண்டிருக்க, ஒரு தேவ நாடகத்தை அரங்கேற்ற மந்தரை அவள் அரண்மனைக்குள் நுழைந்தாள்.

15 comments:

  1. // ஆனால் பிள்ளையைப் பெற்றவர்களோ பிள்ளைக்கு எத்தனை வயதானாலும் அவனை குழந்தையாகவே நினைக்கிறார்கள்.//

    ஆனால்...

    ஒரு தந்தை வாழ்வது
    - மகள்(கள்) இந்த உலகத்தில் வாழும் வரை அவர்களின் மனதில் தான்...!

    ReplyDelete
    Replies
    1. //ஒரு தந்தை வாழ்வது - மகள்(கள்) இந்த உலகத்தில் வாழும் வரை அவர்களின் மனதில் தான்...!// உண்மைதான். சமீபத்தில் ராமேஸ்வரம் சென்றிருந்த பொழுது என் அப்பாவைத்தான் நினைத்துக் கொண்டேன்.

      Delete
  2. அங்கே வாசித்ததை ஏதாவது செழுமை படுத்தியிருப்பீர்களோ என்ற எண்ணம் இங்கு வாசிக்கும் பொழுது இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. இல்லை. எ.பி.க்கு வராத சிலர் முகநூலில் மட்டும் நான் பகிர்வதை வாசிப்பார்கள். அவர்களுக்காக இது. வருகைக்கு நன்றி.

      Delete
  3. மீண்டும் ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த சந்தோஷமும், நன்றியும். சமீபத்தில் ராமேஸ்வரம் சென்றுவிட்டு திரும்பும் பொழுது, தேவகோட்டையை தாண்டும் பொழுது உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன்.

      Delete
  4. எ.பி.யில் படித்தது இங்கேயும் ஒரு சேமிப்பாக! மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. "பூடகமாக பேசின பேச்சு - மிகவும் பிடித்தது..." எனும் எனது கருத்துரைக்கு, தங்களின் மறுமொழி - "அதற்கு பொருத்தமாக தோன்றிய பாடலை குறிப்பிடவில்லையே" என்று சொல்லி இருந்தீர்கள்...

    பாடல் தானே அம்மா...? இதோ :-

    வரிகள் : 'அவா' எல்லாம் வைய்ர வைய்ரமுத்து... சே... இங்குமா அரசியல் ? மன்னிக்கவும் அம்மா... வரிகள் :வைரமுத்து
    படம் : சந்தித்தவேளை...! (தசரத "மெகா" ராசாவும், அவரின் நூறில் ஒன்று கௌசல்யா அவர்களும்)

    கௌசல்யா :- வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது... உள்மனம் பேசாமல் உண்மை தோன்றாது...

    தசரதர் :- வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது... பெண்கிளி பொய் சொன்னால் ஆண்கிளி தூங்காது...

    கௌசல்யா :- ஆண்கிளியே ஆண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு... பாட்டு வரி புரிந்து கொண்டால் - உன் பல்லவியை நீ மாற்று...

    தசரதர் :- பெண் கண்களே நாடகம் ஆடுமா...? பெண் நெஞ்சமே பூடகம் ஆகுமா...?

    கௌசல்யா :- யார் சொல்லியும் பெண்மனம் கேட்குமா...? கை தட்டினால் மொட்டுக்கள் பூக்குமா...?

    தசரதர் :- விடை கேட்டேன் - கேள்வி தந்தாய்...! இது புதிரான புதிர் அல்லவா...?

    கௌசல்யா :- கேள்விக்குள்ளே பதில் தேடு.. அது சுவையான சுவை அல்லவா...?

    தசரதர் :- உள்ளத்தின் வண்ணம் என்ன தெரியவில்லை... உடைத்து சொல்லும்வரை புரிவதில்லை...

    கௌசல்யா :- மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை... (!)

    ReplyDelete
    Replies
    1. வரிகள் அருமை, மெட்டுதான் பிடிபடவில்லை. ஸ்ரீராமிடம் சொல்லி வெள்ளி வீடியோவில் போடச்சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நன்றி டி.டி.

      Delete
  6. ரஞ்சனி அக்கா எபியில் சொல்லியிருக்கும் காட்சிகள் நானும் ரசித்த காட்சிகள். மிகவும் நுண்ணியமாக காட்சி அமைப்பு. மனதில் அந்தக் காட்சி விரிவது போல...

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி

    அருமையான கதை. அங்கும் படித்து ரசித்தேன். தங்களுக்கு நல்ல சுருக்கமான நடையில் மிகவும் அழகாக கதை எழுத வருகிறது. இது போன்ற புராண கதைகளையும் தொடரவும். வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. இப்போதுதான் எ.பி.யில் வந்தது. அங்கும் படித்து விட்டு, மீண்டும் இங்கும் படித்து கருத்தும் இட்டவர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி.


    ReplyDelete