கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, December 28, 2019

என்ன என்ன வார்த்தைகளோ...?

என்ன என்ன வார்த்தைகளோ...?

என்னுடைய சென்ற பதிவில் காத்திருப்பதைப் பற்றி எழுதும் பொழுது சதாசிவ ப்ருமேந்திரரைப்பற்றி எழுதியிருந்தேன். "பசிக்கிறது சாப்பாடு போடு" என்று கேட்ட அவரிடம் அவருடைய தாய், "பத்துநிமிடம் பொறுத்துக் கொள்" என்று கூறிய வார்த்தை ஏற்படுத்திய தாக்கத்தையும் அதனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தையும் சிந்தித்த பொழுது, வேறு சில மகான்களின் வாழ்க்கையில் இப்படி ஒரு வார்த்தை, அல்லது ஒரு வாக்கியம் ஏற்படுத்திய மாற்றங்கள் நினைவுக்கு வந்தன.

சதாசிவ ப்ருமேந்திரரிடமே தொடங்கலாம். மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான புலவராக சதாசிவம் இருந்த பொழுது, தமிழ் நாட்டிலிருந்து வரும் புலவர்களுக்கு ஒரு தலைவலியாக விளங்குகிறார். மைசூர் மகாராஜாவை சந்தித்து, அவரிடம் தங்கள் புலமையை காட்டி, பரிசுகள் பெறலாம் என்று நோக்கத்தோடு வரும் புலவர்களை மெச்சி அரசன் பரிசு கொடுக்க முன் வந்தாலும், அங்கிருக்கும் சதாசிவம் அவர்கள் இயற்றிய செய்யுளில்  குற்றம் கண்டு பிடித்து, கேள்விகள் கேட்டு, பரிசுகள் பெறவொட்டாமல் செய்து விடுகிறார். இதனால் எரிச்சலடைந்த புலவர்கள், அப்போதைய காமகோடி பீடாதிபதியிடம் சென்று, "இந்த சதாசிவத்தால் எங்கள் பிழைப்பில் மண் விழுகிறது. அரசன் பரிசு கொடுக்க தயாராக இருந்தாலும், இவன் குறுக்கே பேசி எங்களுக்கு அது கிடைக்காமல் செய்து விடுகிறான்"  என்று குற்றம் சொல்கிறார்கள். பீடாதிபதி சதாசிவம் அவர்களை அழைத்து," உன்னால் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாதா?" என்று கேட்கிறார். குருவின் அந்த கேள்வியை அவருடைய கட்டளையாக பாவித்து அன்றிலிருந்து மௌன விரதத்தை மேற்கொள்கிறார். வாயால் மட்டுமல்லாமல் மனதாலும் பேசாமல், மந்திரத்தை மட்டும் ஜபித்தபடி இருக்க, அது அவருக்கு சித்தியாகிறது.



திருச்சுழியில் பிறந்து, மதுரையில் வாழ்ந்த வெங்கடரமணன் என்னும் அந்த சிறுவனுக்கு பதிமூன்று வயதாகும் பொழுது அவனுடைய பக்கத்து வீட்டுக்காரர் இறந்து விடுகிறார். மரணம் என்றால் என்ன? என்னும் கேள்வி அவனுக்குள் பிறக்கிறது. அப்பொழுது அவன் வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர், "திருவண்ணாமலையிலிருந்து வருகிறேன்" என்று கூறியதை கேட்ட அந்த நொடியில், தான் திருவண்ணாமலை செல்ல தீர்மானித்து விடுகிறான். திருவண்ணாமலை எங்கு இருக்கிறது? அதற்கு எப்படி செல்ல வேண்டும்?  என்பது எதுவும் தெரியாத அந்த குழந்தை விழுப்புரம் வரை ரயிலில் வந்து, அங்கிருந்து கால்நடையாகவே திருவண்ணாமலையை அடைந்து, அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் நுழைந்து, ஓடிப்போய், அந்த லிங்கத்தை,"அப்பா,வந்துட்டேன்ப்பா" என்று கட்டிக் கொண்டதாம்.  அந்த சிறுவனைத்தான் பகவான் என்றும், ரமண மகரிஷி என்றும் உலகம் கொண்டாடுகிறது. அவரை செலுத்தியது உறவினர் கூறிய "திருவண்ணாமலையிலிருந்து வருகிறேன்" என்னும் வாசகம்.



அதே திருவண்ணாமலையில் இசை வேளாளர் மரபில் பிறந்த அவன் ஆணழகன், இசையிலும், தாளத்திலும் விற்பன்னன். பெண்கள் மீது அவனுக்கும், அவன் மீது பெண்களுக்கும் மோகம் அதிகம். இளமை, செல்வம் இரண்டும் இருக்கும் வரை உல்லாசத்திற்கு குறைவில்லை. இரண்டும் குறைந்து, நோயும் வந்தவுடன் அவனை விரும்பிய அதே பெண்கள் அவனை புறக்கணிக்கிறார்கள். இதனால் மனம் வெதும்பும் அவனிடம் அவன் சகோதரி,"பெண் சுகத்திற்குத்தானே ஏங்குகிறாய்? நானும் ஒரு பெண்தான், என்னிடம் தணித்துக் கொள் உன் வேட்கையை" என்று கூற, அதிர்ந்து போகும் அவன், தன்னை வெறுத்து, உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்து அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் வெள்ளாள கோபுரத்தின் மேலேறி, அதிலிருந்து குதித்து உயிரை விட துணிந்த பொழுது, முருகப் பெருமானால் காப்பாற்றப் பட்டு அருணகிரிநாதராக மலர்ந்தது நாம் அறிந்ததுதானே.

கஞ்சக்கருமியாக இருந்த பட்டினத்தாரை மாற்றியது அவருடைய மகனாக வந்த சிவ பெருமான் ஓலை நறுக்கில் எழுதி அனுப்பிய, "காதறுந்த  ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" என்னும் வாசகம்.

குயவரான அவர் சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர். வீட்டிலே அழகான மனைவி இருந்தாலும் மற்ற பெண்களை நாடுவதிலும் அதிக விருப்பம் கொண்டவர். ஒரு நாள் வேறொரு பெண்ணோடு இருந்து விட்டு வீட்டிற்க்கு வரும் அவரிடம் அவர் மனைவி கோபமாக,"எம்மைத் தீண்டாதே திருநீலகண்டம்" என்று சிவன் மீது ஆணையிட்டு கூறுகிறாள். அவள் என்னைத் தீண்டாதே என்று கூறியிருந்தால் தன்னை மட்டும் இனிமேல் தீண்டக்கூடாது என்று எடுத்துக் கொள்ளலாம், ஆனால், எம்மை என்று பன்மையில் கூறியதால் பெண்கள் யாரையுமே தீண்டக் கூடாது என்று அவள் கூறியிருப்பதாக கொண்டு அன்று முதல் பிரும்மச்சரிய விரதத்தை மேற்கொண்டு திருநீலகண்ட நாயனாராக உருவெடுக்கிறார்.

இதே போல வேறொருவரையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது அவர் மனைவி கூறிய வார்த்தைதான். மனைவி மீது அதீத காதல் அவருக்கு. ஒரு நாள் கூட, அல்லது ஒரு இரவு கூட மனைவியை பிரிந்து இருக்க முடியாது. ஒரு முறை மனைவி அவருடைய பெற்றோர்களில் ஒருவருடைய திதிக்காக பிறந்த வீடு சென்றிருக்கிறார். அன்று இரவு இவர் மனைவியைத்  தேடிக்கொண்டு செல்கிறார். வழியில் ஒரு ஆற்றினைத் தாண்ட வேண்டும், நதியில் ஏதோ மிதக்கிறது,அதை மரக்கட்டை என்று நினைத்து நதியில் மிதக்கும் பிணத்தை பற்றிக்கொண்டு கடக்கிறார். அர்த்த ராத்திரியில் கதவைத்தட்டி மற்றவர்களை எழுப்ப வேண்டாம் என்று நினைத்து, ஓட்டிலிருந்து தொங்கும் பாம்பினை மரத்தின் விழுது என்று கருதி, அதை பற்றிக் கொண்டு மேல் ஏறி, ஓட்டினை பிரித்து உள்ளே குதிக்கிறார். அவரைக்  கண்ட அவர் மனைவிக்கு மிகுந்த கோபம் வந்து விடுகிறது. "சீ! ஒரு நாள் கூடவா உங்களால் நான் இல்லாமல் இருக்க முடியாது? அழியக்கூடிய இந்த உடலின் மேல் அப்படி என்ன விருப்பம்? இந்த பற்றினை பரம்பொருளான ராமன் மீது வைக்கக்கூடாதா?" என்ற அவளின் கேள்விதான் அவருடைய அகக்கண்களை திறக்கிறது.  ராம நாமத்தை விடாமல் ஜபித்து, ராமாயணத்தை ஹிந்தியில் ராம சரித மானஸ் என்னும் காப்பியமாக நமக்கு கொடுத்த துளசிதாஸரின் வாழ்க்கையை மாற்றியது மனைவியின் வசனங்கள்தான்.

மகான்களின் வாழ்க்கையில்தான் இம்மாதிரி நடக்குமா? இல்லை சாதாரண மனிதர்கள் வாழ்க்கையிலும் இம்மாதிரி சம்பவங்கள் நடந்து அவர்கள் வாழ்க்கையை புரட்டிப்போடலாம். அந்த இளம் வக்கீலுக்கு அதுதான் நிகழ்ந்தது. நாடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் திரைப்படங்களிலும் நகைச்சுவை நடிகராக தலைகாட்டிக் கொண்டிருந்தார். ஒரு முறை நண்பர்களோடு காரில் வந்து கொண்டிருந்த பொழுது அவர் அப்போதைய பத்திரிகைகளை கேலி செய்து ஏதோ கூறியிருக்கிறார். உடனே அவர் நண்பர் ஒருவர்,"எல்லோரையும் கிண்டல் செய்கிறாய். கேலி செய்வது எளிது.  இந்த அம்சங்கள் இல்லாமல் ஒரு பத்திரிகை ஆரம்பித்து, உன்னால் வெற்றிகரமாக நடத்த முடியுமா?" என்று கேட்டிட்டிருக்கிறார்.
"அப்படி நடத்தி காண்பித்தால் என்ன தருவாய்? "
"ஐம்பது ரூபாய் தருகிறேன்"
"நான் நடத்தி காண்பிக்கிறேன்" என்று நண்பரிடம் சவால் விட்டு ஐம்பது ரூபாய்க்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை  ஐம்பதாவது ஆண்டான பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பத்திரிகை எது என்று யூகித்திருப்பீர்களே.. ஆமாம், துக்ளக் தான் அந்த பத்திரிகை.













27 comments:

  1. என்ன என்ன வார்த்தைகளோ என்ற தலைப்புடன் மிகச் சிறப்பாக பல பெரியவர்களின் வாழ்க்கையில் நடந்த மாற்றத்திற்குக் காரணமான வார்த்தைகளைச் சிறப்பாகத் தொகுத்து அளித்த உங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். சில தகவல்கள் புதியவை - குறிப்பாக துக்ளக் பத்திரிகை பற்றிய செய்தி.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பானும்மா...

    ReplyDelete
    Replies
    1. //சில தகவல்கள் புதியவை - குறிப்பாக துக்ளக் பத்திரிகை பற்றிய செய்தி.//  'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' என்னும் தன் புத்தகத்தில் துக்ளக் ஆரம்பித்த விவரத்தை கூறியிருப்பார் சோ. 

      Delete
  2. வாங்க வெங்கட். நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். நலமா? கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பானும்மா... சற்றே இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறேன். நலமே... தாங்களும் நலமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

      Delete
  3. அருமை... சில கேள்விகளால் வெற்றிகளும் உருவாகிறது...

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    தலைப்பு அருமை. வார்த்தைகளின் கூர்மை ஈட்டியைப் போன்றது. "அதனால்தான் வாயிலிருந்து வரும் வார்த்தையை, சொல்லும் சொற்களை எளிதில் கொட்டி விடலாம். திருப்பி அள்ள முடியாது." என்பார்கள். ஆனால் விதியின் வசத்தால் நன்மை தரும் வாசகங்கள், ஒருவரின் பூர்வஜென்ம புண்ணியத்தால் அவரின் வாழ்க்கையின் பக்கங்களையே மாற்றி அமைத்து விடும் வாசகங்கள், அவர் சம்பந்தபட்டவர்களிடமிருந்து தீடிரென்று புறப்பட்டு வந்து விழுவது தெய்வ சங்கல்பம். அது அவர்கள் வாங்கி வந்த வரம் மும் கூட...

    இப்படி அத்தனை மஹான்களையும் நீங்கள் உதாரணம் காட்டி இவ்விதம் பதிவை தொகுத்தது மிகவும் நன்றாக உள்ளது. இதில் சாதாரண மானிடர்களும் அடங்குவர் என்பதை துக்ளக் பத்திரிக்கையை உதாரணம் காட்டி கூறியிருப்பதும் வெகு அருமை. அனைத்தையும் படித்து ரசித்தேன். தங்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் கமலா. நன்றி. 

      Delete
  5. ரமணர் மற்றும் மற்றப் பெரியோர்களைப் பற்றிய சுருக்கமான கட்டுரை அருமை. சொல்ல வந்ததைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறுவதில் நல்ல திறமை இருக்கிறது உங்களுக்கு! வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் கமலா. நன்றி. 

      Delete
    2. நன்றி கீதா அக்கா. துளசி தாஸர் பற்றிய என் சந்தேகத்தை தெளிவு படுத்தியதற்கு பதிவிலேயே நன்றி சொல்லியிருக்க வேண்டும். தாமதமாக சொல்லும் நன்றியை ஏற்றுக் கொள்ளவும். நன்றி நன்றி.

      Delete
    3. Hahahahaahaa! I am Geetha! You have answered to Kamala!

      Delete
  6. எதிர் கொள்ளும் வார்த்தைகள் அசட்டை செய்யப்பட்டு பலருக்கு முக்கியமில்லாது போன சம்பவங்களும் உண்டு என்பதினால் அந்த வார்த்தைளால் பாதிப்படைந்து தன்னை மாற்றிக் கொண்டவர்கள் தாம் முக்கியமாகிப் போகிறார்கள். அதனால் தம்மில் மாற்றம் கண்ட அவர்களுக்கே பெருமையெல்லாம் போய்ச் சேருகிறது. எதேச்சையாக வெளிப்பட்ட வார்த்தைகளுக்கல்ல.

    ReplyDelete
    Replies
    1. ஒரு தேர்வில் சில மாணவர்கள் தோல்வி அடைகிறார்கள், சிலர் மாநில அளவில் ரேங்க் வாங்குகிறார்கள். பெருமை மாணவர்களுக்குத்தான், அவர்களுக்கு பெருமை வாங்கித் தந்தது அந்த தேர்வுதானே?
      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  7. பல பல கதைகள் சொல்லியிருக்கிறீங்க, எங்கட அப்பப்பாவின் பெயரும் சதாசிவம் தான்.

    முந்தின காலத்திலும் காம உணர்வு அதிகமாக இருந்தவர்களே பின்னாளில் துறவிகளாக மாறியிருக்கினம் போல.. அப்போ இக்காலத்தில் பல தீய செயல்களில் ஈடுபடுவோரும் ஒரு காலத்தில் துறவறத்தை நாடுவர் என எடுக்க முடியுமோ பானுமதி அக்கா?.

    ReplyDelete
    Replies
    1. இதே சந்தேகம் எனக்குள்ளும் வந்திருக்கிறது அதிரா சகோதரி. புராணங்களை படிக்கும் போது நல்லவர்களை விட, அதாவது ஒழுக்கமானவர்களை விட தீயச்செயல்களை அவர்களின் முன் ஜென்ம வினைப்பயனால் செய்பவர்களைதான் முதலில் ஆட்கொள்ளுவது இறைவனின் விளையாட்டுகளில் ஒன்று போலும் என நினைத்திருக்கிறேன்.

      ஒவ்வொருவரும் "தீய செயல்களை முற்றிலும் துறந்து நல்லறவழியில் மட்டுமல்லாது தன் உயிரையும் அதை காக்கும் கவசமாகிய உடலையும், அது உண்டாக்கும் பந்த பாசமென்ற பற்றையும் துறந்து வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், ஆண்டவன் திருவடிகளை மட்டுமே தன் இரு பார்வையாக்கிக் கொண்டு அவனுடன் கலந்து விடுவதற்காக" அவர்கள் முழுவதுமாக விழித்திருக்கும் போது முழுத்துறவி ஆகிறார்கள். அதற்கு இன்னும் எத்தனைப் பிறவிகள் தவமாய் தவமிருந்து பெற வேண்டுமோ? முதலில் அவன் நாமங்களை மனதில் நிறுத்தி, வேறு சிந்தனைகளை தவிர்த்து தினமும் அகமும்,புறமும் தூய்மையாக்கவே இன்னும் எத்தனைப்பிறவிகள் எடுக்க வேண்டுமோ? அதை செய்விப்பவனும் ஆண்டவன் என்கிற கர்த்தாதானே..! "எப்போதும் ஆடுவது நாமென்றாலும் ஆட்டுவிப்பவன் அவனல்லவா.. !"

      ஏதோ எனக்குள் அவ்வப்போது உணர்வதை பிதற்றியிருக்கிறேன். தவறெனின் அனைவரும் மன்னிக்கவும்.

      Delete
    2. சரியாகத்தான் சொல்லியிருக்கீறீர்கள் கமலா.

      Delete
    3. விஞ்ஞானிகள், இசை வல்லுனர்கள்,விளையாட்டு வீரர்கள் போன்ற பலர் விமனைசர்கள் என்பது நீரூபிக்கப்பட்ட உண்மை அதிரா. அவர்கள் மாறுவது வினைப்பயன், கடவுள் அருள்.

      Delete
  8. ரோஷத்தைத் தூண்டி விடும் சில வார்த்தைகள் நம்முள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.  பெரிய அளவில் மகான்களாகாவிட்டாலும், பெரிய காரியங்கள் செய்யா விட்டாலும் நாமும் இதுபோல சில சிறிய வேலைகளை நாமும் முடிக்கலாம், முடித்திருப்போம்.   நினைவில்தான் இருக்காது.

    ReplyDelete
  9. நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்...

    வார்த்தைகள் தான் மனிதனை வார்த்தெடுக்கின்றன...

    சமயத்தில்
    வார்த்தைகள் தான் மனிதனை வறுத்தும் எடுக்கின்றன....

    ReplyDelete
  10. தலைப்பும் பதிவு மிக அருமை.

    சில வார்த்தைகள் வாழ்க்கை தடத்தை மாற்றும்.
    நல்வழியில் சென்ற மகான்கள் கதை, மற்றும் சாதித்து காட்டிய துக்ளக் ஆசிரியர் விவரம் எல்லாம். அற்புதம்.

    ReplyDelete
  11. நன்றி கோமதி அக்கா.

    ReplyDelete
  12. மிகவும் அருமையாக மஹான்களின் வாழ்க்கைக்குறிப்புகளைத்தொகுத்து வழங்கியிருக்கிறார்.மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. வார்த்தைகளின் வலிமை எத்தகையது.
    பானுமா, அருமையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள்.
    நம் வாழ்க்கையிலும் சிலசமயங்களில்
    தீவிரமாக சொற்கள் விளையாடி விடும்.
    ஆனால் இந்த மகான் கள் வாழ்வில் உன்னத
    நீதிவழியைக் காட்டி நம்மையும் வழி நடத்தி
    வருகின்றன. நன்றி மா.

    ReplyDelete
  14. நன்றி வல்லி அக்கா.

    ReplyDelete