கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, September 6, 2021

பார்த்தேன், ரசித்தேன்..

 பார்த்தேன், ரசித்தேன்..


கொடைகானலில் சாட்டிலைட் அமைக்கப்பட்டதும் திருச்சியில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை காண முடிந்தது. அப்போதெல்லாம் நேஷனல் கவரேஜில் ஹிந்தி நிகழ்ச்சிகளைத்தான் பார்க்க முடியும். ஹிந்தி திணிக்கப்படுகிறது என்று புலம்பிக் கொண்டே எல்லோரும் அந்நிகழ்ச்சிகளை பார்த்தோம். அப்போது பெரும்பாலும் கருப்பு வெள்ளை டி.வி.தான். ஷட்டர்ஸ் வைத்த சாலிடேர், மற்றும் டயனோரா கோலோச்சிய காலம். சிலர் கிரௌன் டி.வி.கூட வைத்திருந்தார்கள்.  

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒரு சீரியல் இருக்கும். திங்களன்று பார்த்த நுக்கட், புதனன்று மால்குடி டேஸில் ஆர்.கே. நாராயணனின் ஸ்வாமி அண்ட்  ஹிஸ் பிரெண்ட்ஸ்  புத்தகத்திலிருந்து கதைகள்  வியாழனன்று ஏக் கஹானி என்னும் அருமையான சீரியல். ஒவ்வொரு வியாழனும் இந்திய மொழிகளின் சிறந்த சிறு கதைகள் குறும் படங்களாக்கப் பட்டன. (அப்போது குறும்படம் என்னும் கான்செப்ட்டே கிடையாது. வெள்ளியன்று கர் ஜமாய் என்னும் நகைச்சுவை தொடர். அதைத் தவிர சத்யஜித்ரே இயக்கிய கதைகள். ஒவ்வொரு வாரமும் ஒரு கதை. மிக அருமையாக இருக்கும்.

ஞாயிறன்று காலை 'சீக்ரெட்ஸ் ஆஃப் தி சீ' என்னும் நல்ல, ஆனால் மெதுவாக நகரும் டாகுமெண்டரி. ஞாயிறு இரவு சித்தார்த் பாசு நடத்தும் க்விஸ் எல்லாம் பார்த்திருக்கிறேன். தினசரி இரவில் 'jewel on the crown' என்னும் ஆங்கில சீரியல் ஆங்கிலேயர்களுக்கும், இந்தியர்களுக்கும் இருந்த நல்ல உறவை சித்தரித்த சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவை பிரதிபலித்த கதை. 

1987ல் நான் வெளிநாடு சென்று விட இங்கே ரீஜினல் ஒளிபரப்பும் தெரிகிறது என்றார்கள்.  அங்கே செட் டாப் பாக்ஸ் என்னும் விஷயம் வரும் வரை வீடியோ காசெட்தான். ராமாயணம், மகாபாரதம் போன்றவைகளை வீடியோ காசெட்டில் பார்த்தோம். செட் டாப் பாக்ஸ் வந்ததும், என் குழந்தைகளோடு சேர்ந்து 'ஸ்மால் ஒண்டெர்' , 'டீன் ஏஜ் மியூடென்ட் நிஞ்சா டர்ட்ல்' போன்றவை களோடு  டெரிக் ஓ ப்ரெய்ன் நடத்திய போர்ன்விடா க்விஸ் கான்டெஸ்ட்டும் தவற விட்டதில்லை. அவர்களோடு சேர்ந்து  கிரேஸி மோகனின் சீரியல்களை அப்போது விரும்பி பார்த்திருக்கிறோம். ரமணி VS ரமணி மிகவும் ரசித்து பார்த்த சீரியல். அந்த நகைச்சுவை, வாசுகியின் நடிப்போடு மறக்க முடியாத சீரியல்.  அதே போல 'வீட்டுக்கு வீடு லூட்டி' என்னும் சீரியலும் சிறப்பான நகைச்சுவை தொடர். அதுவரை சினிமாக்களில் அழுமூஞ்சியாகவே பார்த்திருந்த சரண்யா இதில் நகைச்சுவையில் கலக்கியிருப்பார். 

குழந்தைகள் வளர,வளர அவர்கள் விரும்பி பார்த்த 'ஃபிரண்ட்ஸ்', 'டூ அண்ட் ஹாஃப் மென்' போன்ற சீரியல்களை அவ்வப்பொழுது பார்த்ததுண்டு. 

பின் 1998ல் இந்தியா திரும்பிய பொழுது, மதியம் ஒரு மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட 'சொந்தம்' என்னும் சீரியலை விடாமல் பார்த்தேன். சிவசங்கரியின் கதையான இதில் மௌனிகா  நடித்திருந்தார். எங்கேயாவது வெளியே சென்றால் ஒரு மணிக்குள்  வீடு திரும்ப வேண்டும் என்று மனம் 
பரக்கும்.அல்லது இந்த சீரியல் முடிந்ததும் கிளம்புவேன். "சே! கேவலம் ஒரு சீரியல் நம்மை முடக்குவதா?" என்று தோன்ற சீரியல்களை பார்ப்பதை நிறுத்தினேன்  ஆயினும் வீட்டில் மற்றவர்கள் பார்த்ததால் நானும் சித்தி, அண்ணி,சஹானா போன்ற சீரியல்களை பார்க்க நேர்ந்தது. எனக்கு ராதிகாவின்    நடிப்பு மிகவும் பிடிக்கும்.  தினசரி சீரியங்களில் அவரைப் பார்த்து எங்கேயாவது அவர் நடிப்பு அலுத்து விடப் போகிறது என்பதால் அவர் நடித்த அண்ணாமலை, வாணி,ராணி போன்ற சீரியல்களை பார்ப்பதை தவிர்த்து விட்டேன். 

எனக்கு ஒரு ராசி, நான் ஏதாவது சீரியலை பார்த்தால் அதன் முடிவை பார்க்க முடியாமல் போய் விடும். சமீபத்தில் ரேவதிக்காக அழகு என்னும் சீரியலை பார்த்தேன், அதை அவர்களே நிறுத்தி விட்டார்கள். ஹாஹா! எப்படி என் ராசி?   
--------------------

என்னுடைய சென்ற பதிவில் உணவின் பெயர் கொண்ட உணவகங்களின் பெயர்கள் கேட்டிருந்தேன். நிறைய பேர் அதை சாய்சில் விட்டு விட்டார்கள். எனக்குத் தெரிந்தவற்றை சொல்கிறேன்.
தலப்பாக்கட்டி பிரியாணி 
Coffee day
Chai point
99 Dosa
Pizza hut
Pizza inn
Dominos Pizza
Arun Ice creams
Burger King
முருகன் இட்லி கடை 
மதுரை இட்லி 



15 comments:

  1. உணவகங்கள் பெயர் நான் ஒன்றிரண்டு சொல்லி இருந்தேன். சுட்டேன் நினைவுக்கு வந்தவை.

    ReplyDelete
  2. தொலைக்காட்சி அனுபவங்கள் எங்களுக்கும் இருந்தது. ஒவ்வொருவர் வீட்டிலாக தொலைகாட்சி வரத்தொடங்க, நாங்களும் எப்போது வாங்குவது என்று காத்திருந்து வாங்குவது கட்டாயமாகி வாங்கினோம்! நாணல் முதலில் வாங்கியது கெல்ட்ரான். பின்னர் என் சம்பளத்தில் சேர்த்து வைத்து விடியோகான் கலர் டீவி!

    ReplyDelete
  3. இதில் சித்ரஹார், அப்புறம் வந்த ஒலியும் ஒளியும், எஸ் வி சேகரின் வண்ணக்கோலங்கள், ஞாயிறுகளில் ஒளிபரப்பாகும் மாநில மொழித்த்திரைப்படம், எல்லாம் பார்ப்போம். அட, நேயர் கடிதங்களை படிப்பிப்பதை உட்கார்ந்து பொறுமையாகக் கேட்போம்.. கண்ணன் நன்றாய் பதிலளிப்பார் என்று பேசிக்கொள்வோம்!

    ReplyDelete
    Replies
    1. ஞாயிறு மதியம் விருது பெற்ற மாநில மொழி திரைப்படங்கள் என்று கூறுங்கள். அவற்றை நானும் என் அப்பாவும் உட்கார்ந்து பொறுமையாக பார்ப்போம்.

      Delete
  4. இது ஏற்கெனவே வந்த பதிவின் மீள் பதிவா? அல்லது மத்யமரில் படிச்சேனா? தெரியலை. உணவகங்கள் பெயர் கேட்டிருந்ததைக் கவனிக்கலை. கவனிச்சிருந்தாலும் இத்தனை சொல்லி இருக்க மாட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. மத்யமரில் படித்திருப்பீர்கள்.

      Delete
  5. நாங்க முதலில் வாங்கினது மஸ்டங் தொலைக்காட்சிப் பெட்டி. கொரட்டூரில் இருந்து ஶ்ரீதர் என்னும் இளைஞர் அதற்கு உடல் நலம் இல்லைனா வந்து பார்ப்பார். குடும்ப நண்பராகவே இருந்தார். பின்னர் நாங்க ராஜஸ்தான் மாற்றல் ஆகிப்போனப்போவும் அதை எடுத்துக் கொண்டு போனோம். பின்னர் பிபிஎல் கலர் டிவி வாங்கினோம். 2000 வரைக்கும் அதான் இருந்தது. பின்னர் ஊட்டிக்கு மாற்றல் ஆனதால் இங்கே வீட்டில் ஃபிலிப்ஸ் டிவி வாங்கி வைச்சுட்டு அதைக் கொண்டு போனோம். 2003 வரை பிபிஎல் ஊட்டியில் இருந்தது. அங்கிருந்து கிளம்பறச்சே வீட்டைப் பார்த்துக்கொண்ட அம்மாவுக்கு தானம் கொடுத்தோம். இப்போதும் அதே ஃபிலிப்ஸ் தொலைக்காட்சிப் பெட்டி தான் வைச்சிருக்கோம். 22 வருடங்கள் ஆகின்றன. அதை ஒரு முறை வந்து பார்த்த தொலைக்காட்சி மருத்துவர், "இதைக் கொடுத்துடாதீங்க சார்! இப்போ வரதெல்லாம் ஐந்து வருஷங்கள் தான் தெரியும். பின்னர் மாத்தியாகணும். இது மாதிரி இப்போ வரதில்லை!" என்றார். அதுவரை பெரிய ஸ்க்ரீனுடன் கூடிய டிவி வாங்கணும்னு குதிச்சிட்டிருந்த நம்மவர் இப்போச் சும்மா இருக்கார். :)))))) எதுவுமே சட்டுனு மாத்தறது எனக்குப் பிடிக்காது.

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் இந்தியா வந்த புதிதில் பி.பி.எல்.கலர் டி.வி.தான் வைத்துக் கொண்டிருந்தோம்.பிறகுதான் சோனிக்கு மாறினோம்.

      Delete
  6. பல சீரியல்களை பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா! உங்கள் நோக்கம் புரிகிறது.

      Delete
  7. நல்ல கலகலப்பான பதிவு...

    ReplyDelete
  8. தமிழ் சீரியல்கள் எதையும் பார்ப்பதே இல்லை..

    Zee யில் ஜான்சி ராணி மட்டும் சில வாரங்கள் தொடர்ந்து குடும்பத்தோடு பார்த்தோம்..

    நிறைவுப் பகுதியில் மனம் தாளாது கண் கலங்கியது இன்னும் நினைவில் உள்ளது...

    ReplyDelete
  9. ஜான்சிராணியா? பார்த்ததில்லை. ஆன்லைனில் பார்க்க முடிகிறதா? என்று பார்க்கிறேன்.

    ReplyDelete
  10. நல்ல நினைவுகள். நினைவுத்திறன் பானுக்கா. இந்தத் திறனை அப்படியே பாதுகாத்து வைச்சுக்கோங்க அக்கா! சுவாரசியமான பதிவு. பழைய நினைவுகளை அசை போடுவதும் சுவாரசியம்தான்.

    அப்பா டிவி வாங்கியதில்லை. மாடியில் அத்தை வீட்டில்தான் டயனோரா. நான் படித்துக் கொண்டிருந்த நேரம் என்பதால் அதிலும் அத்தனை பார்த்ததில்லை. பாட்டி கிரிக்கெட் எல்லாமே ஆர்வத்துடன் பார்ப்பார். கிரிக்கெட் சீசன் தொடங்கிவிட்டால் எல்லோரும் அதில்தான் இருப்பார்கள்.

    அவார்ட் படங்கள் எப்போதேனும் பார்த்ததுண்டு. மாலையில் இலங்கை சானல் ரூபவாஹினி இடையில் வரும் காற்றில் ஆன்டெனா அசையும் போது. உடனே மாடிக்குச் சென்று ஆன்டெனாவை சரி செய்து ரூபவாஹினி தெரிய வைப்பதற்குப் போராடுவோம். அத்தை பாட்டி நாங்கள் எல்லோரும் இலங்கையில் இருந்ததாலோ என்னவோ ஓர் ஈர்ப்பு.

    அதன் பின் மகன் வளர்ந்த போதும் அவனும் டிவி கேட்டதில்லை நாங்களும் வாங்கவில்லை. அவன் கொஞ்சம் பெரியவனானதும் மிகச் சிறிய ஸ்க்ரீன் உள்ள டிவி வாங்கினோம். அதில் டாம் அண்ட் ஜெர்ரி, டொனால்ட் டக், பப்பாய் ஷோ போன்றவை மகன் பார்த்த போது நானும் பார்த்ததுண்டு.

    மகனுக்கும் எனக்கும் படம் பார்க்கும் ஆர்வம் உண்டு. என்றாலும் வாய்ப்பு குறைவுதான். மகனும் டிவி என்றெல்லாம் எதுவும் கேட்டு ஆசைப்பட்டதில்லை.

    இப்போது வீட்டில் டிவி இல்லை. ஆனால் கணினி, நெட் இருக்கிறதே!!!!! தேவையானதை நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் பார்ப்பதுண்டு.

    கீதா

    ReplyDelete