கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, May 29, 2022

சூடாக ஒரு கப் டீ!

சூடாக ஒரு கப் டீ!


காலை எழுந்தவுடன் சூடாக அருமையான ஃபில்டர் காபி குடித்த வாயோடு மத்யமரில் உமா சஷிகாந்தின் டீ பற்றிய பதிவை குடித்தேன் , சாரி ஃபார் த  டங்க் ஸ்லிப் படித்தேன். சிறிது நேரத்திலேயே அருணா ரகுராமனின் டீ பற்றிய பதிவு. என் பங்கிற்கு ஒரு கப் சாய்!

என்ன இருந்தாலும்  மதராஸிகளிடம் காபியா? டீயா? என்று கேட்டால் காபி என்றுதான் கூறுவோம். திராவிட மாடல்! அதுவும் வீட்டில். மாடு இருந்து, கறந்த பாலில் காபி குடித்து பழகிய என்னைப் போன்றவர்கள் காபி பிரியர்களாகத்தானே இருக்க முடியும்?

ரயில் பயணங்களில் தமிழ் நாடு எல்லையைத் தாண்டினால் காபி கிடைக்காது. திரும்பி வரும் பொழுது "காபி காபி.." என்னும் குரல் கேட்டால் இன்பத்தேன் வந்து பாயும் காதினிலே.

எங்கள் வீட்டில் டீ வாங்கியதே இல்லை. அப்போதெல்லாம் டீ என்றால் ஒரு சின்ன சாஷேயில் கட்டி தொங்கவிடப் பட்டிருக்குமே அதுதான். எங்கள் உறவில் இரண்டு பெண்மணிகள் மஹா பெரியவரின் பக்தைகள். அவர் காபி குடிக்க கூடாது என்று சொன்னதால் காபியை துறந்து டீயை பற்றிக் கொண்டவர்கள்.  அவர்கள் மற்றவர்கள் வீடுகளுக்குச் செல்லும் பொழுது டீ பாக்கெட்டுகளோடு டீ வடிகட்டியும் கொண்டு வந்து விடுவார்கள்.

என் மூன்றாவது அக்கா கருவுற்றிருந்த பொழுது அவளுக்கு காபி பிடிக்கவில்லை, டீ குடிப்பாள். அப்போதுதான் எங்கள் வீட்டில் டீ வாங்க ஆரம்பித்தோம். எனக்கும் இதே கதை.  கருவுற்றிருந்த பொழுது காபி ஒரு துளி கூட உள்ளே தங்காது. அப்போதுதான் டீ குடிக்க ஆரம்பித்தேன். இருந்தாலும் நான் போடும் டீ எனக்கு அவ்வளவு திருப்தி தந்ததில்லை. பலவிதமான காம்பினேஷன்கள் முயற்சி பண்ணினேன். 

மஸ்கட்டில் இருந்த பொழுது சிலோன் டீ என்று கிடைக்கும் பிராண்ட்தான் என் சாய்ஸ். இந்தியா திரும்பிய பிறகு நட்ஸ் & ஸ்பைஸில் கிடைக்கும் ஒரு பிராண்ட் டீ நான் போட்டால் கூட நன்றாக இருக்கும். 

ஒரு முறை பெங்களூர் மால் ஒன்றில் சாய் பாய்ண்ட் என்னும் டீக்கடையில் என் மகன் இஞ்சி டீ வாங்கித் தந்தான். லோட்டா போன்ற பெரிய கப்பில் வந்த சூடான, காரமான அந்த டீயை குடிப்பதற்குள் வியர்த்து, விறுவிறுத்து விழி பிதுங்கினேன்.

டீயோடு கொஞ்சம் பூஸ்ட் அல்லது கோகோ சேர்த்த பூஸ்ட் டீ எனக்கும் என் மகளுக்கும் பிடிக்கும். 

தோழி ஒருத்தி லைட்டான டீ டிகாஷனில் பனங்கல்கண்டு சேர்த்து தந்த பிளாக் டீ அருமையாக இருந்தது. நானும் அவ்வப்பொழுது அந்த பிளாக் டீ குடிப்பதுண்டு. அதில் புதினா இலைகளும் போடலாம்.

லெமன் டீ குடித்தால் உடல் இளைக்குமாம். கொழுப்பு குறைகிறதோ இல்லையோ, சில நாட்கள் கேரா இருக்குமே, அப்போது லெமன் டீ நல்ல பரிகாரம். 

டில்லியில் எங்கள் சம்பந்தி வீட்டில் வேலை செய்யும் பெண்மணி டீயில் கொஞ்சமாக உப்பு சேர்த்து அருந்துவார்.

டீயை குடிப்பதற்கு மட்டுமல்லாமல், தலைக்கு ஹேர் பேக் போடவும் பயன்படுத்துவார்கள்.

சரித்திரத்தில் ஒரு முக்கியமான சம்பவம் அமெரிக்க சுதந்திர போரோடு சம்பந்தப்பட்ட பாஸ்டன் டீ பார்ட்டி என்னும் நிகழ்வு.


ஜப்பானிய கலாசாரத்தில் சனோயூ அல்லது சாடோ எனப்படும் க்ரீன் டீ தயாரித்து வழங்கும் தேநீர் சடங்கு ஒரு முக்கியமான விஷயம். இதற்கு நிழலில் வளர்க்கப்பட்டு, நிழலிலேயே உலர்த்தப்பட்ட மாச்சா என்னும் பச்சை நிற தேயிலைத்தூளே பயன்படுத்தப் படும். 

கனடாவில் டொரொண்டோவில் ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் தேநீர்த் திருவிழா கொண்டாடப்படுமாம். பலவிதமான தேநீரை அங்கே சுவைக்க முடியுமாம். ஆனால் மூன்று வருடங்களாக கொரோனா காரணமாக அந்நிகழ்ச்சி நடைபெறவில்லை. கனடாவில் சில மால்களில் 'சாய் டீ' என்ற அறிவிப்பை பார்த்தேன். இங்கே இருப்பவர்கள் தேநீரில் பால் சேர்க்காமல்தான் அருந்துவார்கள். பால்சேர்த்த இந்திய தேநீர் தான் சாய் டீ என்ற விளக்கம் கிடைத்தது.

நம் நாட்டில் அஸ்ஸாமிலும் நவம்பரிலிருந்து ஜனவரிக்குள் இப்படி ஒரு டீ ஃபெஸ்டிவல் உண்டு.

பிரிட்டிஷ் கலாசாரத்தில் முக்கியமானது 'ஹை டீ'. இதில் ஸ்பைஸி உணவுகளோடு டீ பரிமாறப்படும். உணவை விட அரட்டையும், உரையாடலும் முக்கியம் என்றாலும் எந்த விதமான பாத்திரங்களை பயன்படுத்தவேண்டும், எப்படிப்பட்ட மேஜை விரிப்புகள், திரைச்சீலைகள் இருக்க வேண்டும் என்று  பலவித கோட்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு தங்கள் அந்தஸ்தை வெளிப்படுத்தும் விஷயமாக ஆனது. 

ஒரு கப் சாறோடு உலகத்தையே சுற்றி  விட்டேன் போலிருக்கிறது. 



என் தளத்திற்கு வருகை தந்து படிக்கப் போகும் அனைவருக்கும் நன்றி. பிளாக்கர் பிரச்சனையினால் கருத்திட முடியவில்லை. மன்னிக்கவும் 🙏🙏


13 comments:

  1. வணக்கம் சகோதரி

    நலமா? பதிவு அருமை. தங்கள் பாணியில் டீ புராணம் ரொம்ப அருமையாக இருந்தது உலகம் சுற்றிய டீயின் மஹாத்மிய பதிவில் டீயைப் பற்றிய பல தகவல்களை தெரிந்து கொண்டேன். டீயோடு பூஸ்ட் சேர்த்து குடிக்கலாம் என்ற தகவல் எனக்குப் புதிது. அப்படி ஒரு சமயம் முயற்சித்துப் பார்க்கிறேன்.

    எனக்கு பெரும்பாலும் காஃபி தான் பிடித்தமானது. ஆனால், என் கணவருக்கு டீ என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவருக்கு தயாரித்து தரும் சமயம் டீ யும் குடித்திருக்கிறேன். தொடர்ந்து தேயிலை உபயோகித்தால் எனக்கு சில பிரச்சனைகள் வரும் என்பதினால், காஃபி தான் உசிதமாக கருதி குடிக்கிறேன் . காஃபியும் கெடுதல்தான். ஆனாலும் அது ஒரு சம்பிரதாய பழக்கமாக நம்முடன் எப்படியோ தொற்றிக் கொண்டு விட்டது. என்ன செய்வது? பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. தேநீர் பற்றிய விபரங்கள் அருமை. நானும் காஃபி, தேநீர் பற்றிப் பத்தாண்டுகள் முன்னால் பதிவுகள் போட்டிருந்தேன். எங்களுக்கெல்லாம் சின்ன வயசிலேயே தேநீர் அறிமுகம். அப்போதெல்லாம் லிப்டன் கம்பெனிக்காரங்க தேநீரை விளம்பரப் படுத்துவதற்காகத் தெருத்தெருவாக இளம்பெண்களிடம் சின்னத் தேயிலைப் பாக்கெட்டைக் கொடுத்து வீடு வீடாகத் தேநீர் பற்றிப் பிரசாரமும் செய்வார்கள். அந்த அக்காக்களெல்லாம் வீட்டுக்கு சமையலறைக்கு வந்து தேநீரைப் போட்டும் காட்டுவார்கள். அப்படிப் பழக்கமானது தான். எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து தேநீரைப் பற்றி அறிவேன்.

    ReplyDelete
  3. ஒரு கலக்கு கலக்கிட்டீங்க -> Tea

    ReplyDelete
  4. அவசரத்துக்கு ஒரு டீ, நீங்க போன இடத்தில் கிடைக்காததால், ஒரு பதிவே எழுதி ஆறுதல்பட்டுக்கறீங்களே.... எனக்கு டீ, காபி சாப்பிடும் வழக்கமே கிடையாது. அதனால் நான் செல்லும் வீடுகளுக்கு பிரச்சனையே இல்லை

    ReplyDelete
  5. டீ மணம் வீசுகிறது! லோக டீ முழுவதும்.

    மிகச் சிறு வயதில் பாட்டி ஓவல் டின் என்று அப்போது வருமே அதுதான் எல்லாருக்கும் கொடுப்பார். அதன் காஃபிதான் பழக்கம் என்றாலும் டீ குடிக்கும் பழக்கம் அவ்வப்போது உண்டு. அப்போதெல்லாம் வீட்டில் தருவதுதானே. என்றாலும் காஃபி க்கு என் கை ஓங்கி உயரும்!!!

    சாக்கோ டீ சூப்பரா இருக்கும் அக்கா. அதுவும் நுரை ததும்ப நன்றாக அடித்துக் கலந்தால்.

    சாக்கோ காஃபி/காஃபி மோக்கா, காஃபி காரமல் வெனிலா மோக்கா, லாட்டே என்று விரும்பிக் குடிப்பேன்.

    நீங்க டீ பற்றி பதிவு...நான் காஃபி பத்தி பதிவு எழுதிய நினைவு வருகிறது!!!

    உங்கள் டீயையும் ரசித்துச் சுவைத்தேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நானெல்லாம் சின்ன வயசில் பால்/பசும்பால்/பின்னர் காஃபி என்னும் திரவத்தைப் பழக்கப்படுத்தினாலும் பழகலை. ஆகவே போர்ன்விடா/ என்னோட இரண்டாவது பிரசவம் வரை போர்ன்விடாதான். அதற்குப் பின்னரே வலுக்கட்டாயமாகக் காஃபிக்கு மாற நேர்ந்தது. எங்க குழந்தைகள் எல்லாம் பதினைந்து வயது வரை கஞ்சி தான். அதன் பின்னரே தேநீர் பழக்கப்படுத்தினேன். பெண் கல்யாணம் ஆகிக் காஃபி சாப்பிட ஆரம்பித்து இப்போ விட்டுட்டா. பையர் கல்யாணம் ஆகித் தேநீரையும் விடலை/எப்போவானும் காஃபியையும் விடலை.

      Delete
    2. https://sivamgss.blogspot.com/2017/06/blog-post_16.html
      http://sivamgss.blogspot.com/2014/03/blog-post_22.html
      http://sivamgss.blogspot.com/2014/03/blog-post_23.html
      http://sivamgss.blogspot.com/2006/11/148.html விருப்பம் உள்ளவங்க இந்தச் சுட்டிகளில் போய்க் காஃபி மஹாத்மியத்தைப் பார்க்கலாம்.

      Delete
  6. மகன் ஜப்பானியர்களின் Tea Ceremony பற்றி Project செய்து அதை வகுப்பு மாணவர்களுடன் எப்படி இருக்கும் என்று நிகழ்த்தியும் காட்டினான் பள்ளியில்.

    அந்த Project செய்யும் போது பிரிட்டானிய நிகழ்வு பற்றியும் தெரிந்து கொண்டோம். நீங்கள் சொல்லியிருப்பது,

    இலங்கை டீ மிகவும் மணமாக இருக்கும். அது போல கேரளத்து டீயும். ஊட்டி டீயும் ஆனால் நம்மூரில் கடைகளில் கிடைப்பவை 3 வது அலல்து 4 வது தரம் டீ என்பதை நான் சுற்றிப் பார்த்த மூன்று Tea Factories ம் சொல்லியிருக்கிறார்கள், முதல் தரம் இரண்டாம் தரம் எல்லாம் ஏற்றுமதியாகிவிடுமாம்.

    ஆம் Nuts and Spices கடையில் வித விதமாகக் கிடைக்கும். அங்கு தரமானதும் கிடைக்கும் விலையும் அதற்கு ஏற்றார் போல்.

    கீதா

    ReplyDelete
  7. எனக்கு டீ எனது பள்ளிப்பருவத்தின் பிற்பகுதியில்தான் அறிமுகமானது.  வீட்டில் போட்ட நினைவில்லை.  கடையில் நண்பர்களோடு குடித்துப்  பழகியதுதான்!  காபியை மீறி அப்போது அவ்வளவு விருப்பம் அதன்மேல் இருந்ததில்லை.  இப்போது வீட்டில் இரண்டு வேலை டீ குடித்தாலும் காலை எழுந்த உடன் காஃபிதான்! 

    ReplyDelete
  8. சீனாக்காரன் கொடுத்தானோ, ஜப்பான்காரன் கொடுத்தானோ... இந்தியாவில் இப்போதைக்கு டீ உழைப்பாளிகளின் பயணமாகி விட்டது!

    ReplyDelete
  9. மிக உயர்ந்த விலையில் லட்சக்கணக்கான விலையில் கூட டீத்தூள் கிடைக்கிறது என்று படித்த ஞாபகம்.  சில டீக்கள் நன்றாய் இருக்கின்றன.  சில நிறத்தைக் கொடுப்பதோடு சரி, சுவையில்  'சல்லு'ன்னு இருக்கும்!

    ReplyDelete
  10. இப்போது இருக்கும் ஊரில் என்ன குடிக்கிறீர்கள் - காப்பியா, டீயா?

    ReplyDelete
  11. எனக்கு காபி அல்லது டீ என எதுவானாலும் ஓகே. குடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. தில்லியில் பலநாட்கள் ஒன்றுமே அருந்துவதில்லை. டீ மகாத்மியம் சிறப்பு.

    ReplyDelete