கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, October 3, 2022

கொலுவின் பரிணாமம்

 கொலுவின் பரிணாமம் 

எங்கள் வீட்டு குட்டி கொலு 

நவராத்திரி என்பதில் ஆஷாட நவராத்திரி,சாரதா நவராத்திரி, பௌஷ்ய அல்லது மக நவராத்திரி, வசந்த நவராத்திரி என்று நான்கு இருந்தாலும், வட இந்தியாவில் வசந்த நவராத்திரியும், தென்னிந்தியாவில் சாரதா நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. 

புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு சாரதா நவராத்திரி துவங்குகிறது. இதில் பொம்மை கொலு என்று மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப் படையில் படிகளை அமைத்து அதில் பொம்மைகளை வைத்து வழிபடுவது என்பது தமிழ் நாட்டில் மட்டுமே இருக்கும் பழக்கம் என்று நினைக்கிறேன். 

இந்த பொம்மை கொலு வைக்கும் பழக்கம் எப்போது தொடங்கியது என்று சரியாகத் தெரியவில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் தொடங்கியிருக்கலாம். முதலில் மரப்பாச்சி பொம்மைகள் வைப்பதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. இப்போதும் கூட கண்டிப்பாக இரண்டு மரப்பாச்சி பொம்மைகளையாவது வைக்க வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயம். எங்கள் அப்பா முதலில் மரப்பாச்சியைத்தான் வைக்க வேண்டும் என்பார். அதை இன்று வரை நாங்கள் கடை பிடிக்கிறோம். 

எங்கள் தாத்தா வீட்டு பொம்மைகளெல்லாம் இரண்டு அடி உயரம். அப்போதைய கிராமத்து வீடுகளின் பெரிய கூடங்களுக்கு ஏற்ப பெரிய பொம்மைகள், அவற்றை வைக்க பிரும்மாண்ட படிகள். அதற்கு அடுத்த கால கட்டத்தில் நகரத்து வீடுகளுக்கு ஏற்ப ஒரு அடியாக குறைந்தன. அடுக்கு மாடி குடியிருப்புகள் வந்ததும் பொம்மைகளும் சிறியதாகி விட்டன.  இப்போது எடை குறைந்த, சுலபத்தில் பொருந்தக்கூடிய ஃபைபர் படிகள் வந்து விட்டன. 

அப்போதெல்லாம் பெரும்பான்மையான வீடுகளில் கொலுப்படிகள் கிடையாது, வீட்டில் இருக்கும் பலகைகள், பெஞ்சுகள், ட்ரம்கள், அட்டைப் பெட்டிகள், போன்றவற்றைக் கொண்டு படிகளை கட்டுவார்கள். சில சமயம் "அம்மா அது என்னோட புக்.." என்று நாங்கள் அலறுவதை பொருட்படுத்தாமல்  முட்டுக் கொடுக்க எங்கள் புத்தகங்களைக் கூட  அம்மா எடுத்துக் கொண்டு விடுவாள்.  

அப்போதெல்லாம் கொலு வைப்பார்களே தவிர ஒரு சில வீடுகளைத் தவிர பெரும்பாலானோர்  பேக் ட்ராப் என்பதை பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அலங்காரங்களும் குறைவுதான். 

எழுபதுகளின் துவக்கத்தில் அழகான கொலுவிற்கு பரிசு கொடுக்கும் பழக்கம் துவங்கியது. அதன் பிறகே தோரணங்கள் கட்டுதல், டிஸ்கோ அலங்காரம் போன்றவை நவராத்திரி கொலுவில் இடம் பிடிக்க ஆரம்பித்தன. தீமட்டிக் கொலு என்னும் கான்செப்ட் வந்தது.

அப்போதெல்லாம் வருபவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழத்தோடு நியூஸ் பேப்பரில் மடித்துக் கொடுக்கும் சுண்டல் மட்டுமே. பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு என்று துவங்கும் சுண்டல் மெதுவாக வெல்லம் போட்டு காராமணி சுண்டல், புட்டு அல்லது ஒக்காரை, பட்டாணி என்று மொமண்டத்தை எட்டி, கொத்துக் கடலை சுண்டலோடு முடியும். கொத்துக் கடலையும் அப்போதெல்லாம் கருப்பு கொத்துக் கடலை தான் இப்போது போல வெள்ளை காபூலி சன்னா கிடையாது. 

இப்போது சோஷியல் மீடியாக்களில் நவராத்திரியின் 
முதல் நாள் என்ன கலரில் உடை அணிந்து கொள்ள வேண்டும், இரண்டாம் நாள் என்ன கலரில் உடை அணிந்து கொள்ள வேண்டும் என்று வருகின்றன. பெண்களும் அந்தந்த கலரில் புடவை கட்டிக்க கொண்டு செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் பகிர்கிறார்கள். 

அதைப்போல இப்போது நவராத்திரி கிஃப்ட் என்று கொடுப்பது போல் முன்பெல்லாம் கொடுக்க மாட்டார்கள். தாம்பூலத்தோடு கண்ணாடி, சீப்பு , ரவிக்கைத் துணி இவைகள் வைத்து கொடுப்பது நலம் என்பதால் அவைகளை வைத்துக் கொடுக்க ஆரம்பித்தார்கள், அந்த ரவிக்கைத் துணி சுற்றி வரத் தொடங்கியதாலும், இப்போது வரும் புடவைகளில் ரவிக்கையும் சேர்ந்து வருவதாலும் அதை தவிர்த்து விட்டு வேறு ஐட்டம்களுக்குத் தாவினார்கள். முதலில் எவர்சில்வர் கிண்ணங்களை கொடுத்தார்கள், இரும்பு தானம் செய்வது நல்லதில்லை என்று சொல்லப்பட்டதால் இப்போது பிளாஸ்டிக் கிண்ணங்கள், தட்டுகள், டப்பாக்கள், ஃபைபரில்  குட்டி குட்டி சுவாமி  விக்கிரகங்கள் இவற்றைத் தருகிறார்கள். எவ்வளவு ஸ்வாமி விக்கிரகங்களை வீட்டில் வைத்துக் கொள்ள முடியும்? பழையபடி வெற்றிலை பாக்கு, பழம், சுண்டலோடு நிறுத்திக் கொள்ளலாம். 

ரேவதி பாலாஜி வரைந்திருப்பது போல முன்பெல்லாம் சிறு பெண்கள் அழகாக பாவாடை,சட்டை அணிந்து கொண்டு எல்லா வீடுகளுக்கும் சென்று,"எங்காத்துல கொலு வெச்சிருக்கோம், வெற்றிலை பாக்கு வாங்கி கொள்ள வாங்கோ என்று அழைத்து விட்டு, தெரிந்த இரண்டு பாடல்களையே எல்லா வீடுகளிலும் வெட்கப்படாமல் பாடி வெற்றிலை பாக்கு, சுண்டல் வாங்கி கொண்டு வருவார்கள். நாங்களெல்லாம் அப்படித்தான் செய்தோம். துணைக்கு சகோதர்களை அழித்துச் செல்வதுண்டு. அவர்கள் உள்ளே வராமல் வாசலிலேயே அமர்ந்து கொள்வார்கள். மாமிகள் அவர்களுக்கு சுண்டல் மட்டும் கொடுப்பார்கள். கிருஷ்ணர், ராதை, பட்டு மாமி என்றெல்லாம் வேஷங்கள் போட்டுக் கொள்வதுண்டு. 

இப்போது எந்தக் குழந்தையும் அப்படி அழைக்கச் செல்வதில்லை. சில வருடங்களுக்கு முன்பு எந்த நாளில் தாம்பூலத்திற்கு வர வேண்டும் என்று போஸ்ட் கார்டில் அழைப்பு விடுத்தார்கள். இப்போது வாட்ஸாப்பில் அழைக்கிறார்கள். 

பல மாநிலத்தவர்களும் வாழும் எங்கள் குடியிருப்பு போன்ற இடங்களில் தாண்டியா போன்ற நிகழ்ச்சிகளில் எல்லா மாநிலத்தவர்களும் கலந்து கொள்கிறார்கள். அதற்கான பயிற்சிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. 

ஒரு பக்கம் பூஜை, இன்னொரு பக்கம் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வது, அவர்களை நம் வீட்டிற்கு அழைப்பது, வீட்டையும், தன்னையும் அழகாக அலங்கரித்துக் கொள்வது, ரங்கோலி, அழகான கோலம் இவைகள் வரைவதன் மூலம் தன்  திறமையை காட்டுவது, பாட்டுப் பாடுவது, விதம் விதமாக சுண்டலும், சிற்றுண்டிகளும் செய்வது போன்ற பெண்களின் பன்முகத் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு சிறப்பான  கொண்டாட்டம்  நவராத்திரி.  மாறுதல்களுக்கு உட்பட்டாலும், நவராத்திரி என்னும்  இந்த அழகான, பண்டிகை தொடர்ந்து கொண்டாடப்படுவது சந்தாஷம்தான். 

7 comments:

 1. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. தங்களுக்கு நவராத்திரி நல்வாழ்த்துக்கள். அந்தக்கால, இந்தக்கால கொலுவைப் பற்றி நல்ல விபரமாக சொல்லியுள்ளீர்கள். உங்கள் வீட்டு கொலு மிகவும் அழகாக உள்ளது.

  எங்கள் வீட்டிலும், படிக்கட்டுகள் என்று வைப்பதில்லை. (முதலில் இடமில்லை.) அந்த பொம்மைகளை பாதுகாக்கும் பெட்டிகள், கையில் கிடைக்கும், பெட்டிகள், என படிகளாக குடித்தனம் செல்லும் வீடுகளின் அந்தந்த அறைக்கு தகுந்தாரற்போல உருமாறி விடும். எங்கள் அம்மா வீட்டில், (அது பெரிய வீடாகையால்) எனக்கு விபரம் தெரிந்த சிறுமி காலம் முதற்கொண்டு பெரிய பலகைகளான ஒன்பது படிகளுடன் நிறைய பொம்மைகள் அணிவகுக்கும். இடத்திற்கு தகுந்த மாதிரி பொம்மைகளும், படிகளும் விரிந்து சுருங்குவது உண்மைதான். அழகாக சொல்லியுள்ளீர்கள்.

  /மாறுதல்களுக்கு உட்பட்டாலும், நவராத்திரி என்னும் இந்த அழகான, பண்டிகை தொடர்ந்து கொண்டாடப்படுவது சந்தாஷம்தான். /

  உண்மை. இப்போது கொலு வுக்கு அழைப்பது, மற்ற சம்பிரதாயங்கள் மாறி விட்டாலும் மக்கள் இன்னமும் இந்த விழாவை கொண்டாடுவது மகிழ்வாக த்தான் உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 2. நல்லதொரு தொகுப்பு. நவராத்திரியின் சிறப்பு.

  ReplyDelete
 3. இருக்கிற இடத்தில் பொம்மைகள் நெருக்கி அடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றன போல! அவை இரவில் ஒண்ணுக்கொண்ணு பேசிண்டால் உங்களைத் தான் திட்டிக் கொண்டு இருக்கும். :))))))))

  ReplyDelete
 4. நல்ல பதிவு. ஆனால் மத்யமரில் பார்க்கலை. நான் முகநூலுக்கே அதிகம் வரலை என்பதால்!

  ReplyDelete
 5. அக்கா செம ....எனக்குப் பல நினைவுகளை தட்டி எழுப்பியது உங்கள் பதிவு. ஊரில் குழந்தைகள் வந்து அழைப்பார்கள் கொலு வைத்திருக்கிறோம் என்று...தினமும் சென்று ஒரு பாட்டு பாடி சுண்டல் வாங்கிக் கொண்டு வந்ததுண்டு. பிறந்த வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இல்லை. எல்லாம் ஊரோடு போயாச்சு. சென்னைக்குப் புகுந்த வீட்டில் புகுந்ததும் அங்கு கொலு பெரிதாக வைப்பார்கள் என்று சொல்லி மைத்துனர் படிகள் எல்லாம் இறக்கு கட்டிக் கொடுத்து பொம்மைகள் எல்லாம் இறக்கி வைத்தார். நான்தான் வைத்தேன் எப்படி எந்தப் படியில் என்ன பொம்மைகள் என்று மாமியார் சொல்லிக் கொடுக்க ...முதல் மூன்று வருடங்கள். அப்போது கார்ட் போட்டு அழைத்தது எனக்குப் புதுமை.

  நான் தனியாக திருவனந்தபுரத்தில் தொடங்கினேன் ஆனால் தொடர முடியவில்லை.,

  எனக்குப் பழைய படி சுண்டல் வெற்றிலை பாக்கு பழம் வைத்துக் கொடுக்கும் பழக்கமே பிடித்தது. கிஃப்ட் கொடுக்கும் வழக்கம் பிடிப்பதில்லை. பொருள் சேர்ந்து விடுகின்றன ஒரு புறம் மறு புறம் அதையும் வேறு ஒருவருக்குக் கொடுக்கும் பழக்கமும் உண்டே....

  கொலு அழகு சின்னதாக அழகாக இருக்கிறது பேத்திக்காகச் சின்னதாகி உயரமாக வைத்துவிட்டீகள் இல்லையா?

  கீதா

  ReplyDelete