கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, December 3, 2022

ஸ்ரீ திருமலாகிரி லக்ஷ்மிவெங்கடேஸ்வரஸ்வாமி கோவில் ஜே.பி.நகர், பெங்களூர்

 ஸ்ரீ திருமலாகிரி லக்ஷ்மிவெங்கடேஸ்வரஸ்வாமி கோவில் 
ஜே.பி.நகர், பெங்களூர் 


சமீபத்தில் மத்யமர் மூலம் அறிமுகமானவர்களில் ஒருவர் ரேவதி ஜானகிராமன். இந்தியன் வங்கியில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கலகல, பரபர, சுறுசுறு வார்த்தைகளுக்கு சொந்தக்காரர். பெங்களூரில் எங்கள் வீட்டிற்கு கொஞ்சம்  அருகாமையில் இருக்கிறார். ஓலா ஆட்டோவில் சென்றால் ரூ,130 ஆகும். 

சென்ற வாரம் சந்தித்தப் பொழுதே கோவில்கள் எங்காவது சேர்ந்து செல்லலாம் என்றார்.  "3.12.22, சனிக்கிழமை, ஏகாதசி இரண்டும் சேர்ந்து வருகிறது, கார்த்திகை மாதத்து ஏகாதசியை குருவாயூர் ஏகாதசி என்பார்கள், எனவே அருகில் ஏதாவது குருவாயூரப்பன் கோவில் இருந்தால் போகலாமா?" என்று கேட்டேன். 

அவர் குருவாயூரப்பன் கோவிலுக்கு பதிலாக ஜே.பி.நகரில் இருக்கும் லட்சுமி வெங்கடேஸ்வரா பெருமாள் கோவிலுக்குச் செல்லலாமா? என்று கேட்டார். ஏதோ ஒரு பெருமாள் கோவில் ஓ.கே. என்று சொல்லி விட்டேன். 

காலை எட்டரைக்குள் கோவிலில் இருக்கும்படி வரச் சொன்னார். எங்கள் வீட்டிலிருந்து கோவிலுக்குச் செல்ல நாற்பது நிமிடங்களாகும் என்று கூகுள் சொன்னாலும், ஒரு மணி நேரம் ஆனது. 

கோவில் ரொம்ப பெரியது என்று சொல்ல முடியாது, ஆனால் விநாயகர், யோக நரசிம்மர், வெங்கடேச பெருமாள், லக்ஷ்மி, பள்ளிகொண்ட பெருமாள் மூர்த்தங்கள் பெரிதாகத்தான் இருக்கின்றன. 


முதலில் விநாயகர், ஆஞ்சநேயர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சந்நிதிகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை பிரதி எடுத்ததை போன்றே இரண்டு கரங்கள், வலது கரத்தில் சிவலிங்கத்தோடு காட்சி அளிக்கிறார். இன்று வெள்ளிக்கவசம் சாற்றியிருந்தார்கள். 

ஆஞ்சநேயரும், கிருஷ்ணரும் அளவில் சற்று சிறிய மூர்த்தங்கள். காளிங்க நர்தனருக்கு கீழே வேலோடு முருகன்!! ஆச்சர்யமாக இருந்தது.

அந்த சன்னதிகளில் தரிசனம் செய்து விட்டு பள்ளிகொண்ட பெருமாள் சன்னதிக்கு பிரதட்சிணமாக சென்றால் வலது பிரகாரத்தில் ஒரு சிறிய ஜன்னல் போன்ற அமைப்பின் வழியாக பெருமாளின் திருவடியை மட்டும் சேவிக்க முடிகிறது.(நவதிருப்பதிகளில் ஒரு கோவிலில் இப்படியிருக்கும்). சயனித்திருக்கும் பெருமாளின் காலடியில் மஹாலக்ஷ்மி தாயாரும், ஆண்டாளும் எழுந்தருளியிருக்கிறார்கள்.  


இந்த தரிசனங்களை முடித்துக் கொண்டு வெங்கடேச பெருமாளின் சந்நிதிக்கு வருகிறோம். சாஷாத் திருப்பதி பெருமாள். சங்கு, சக்கரம், வட்சஸ்தலம், வெள்ளியில் யக்னோபவீதம்(பூணூல்), சாளக்கிராம மாலை, என்று அற்புதமாக காட்சியளிக்கிறார். 

ரேவதியின் மகன் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கி வைத்திருந்தார். எனவே உட்கார்ந்து உற்சவருக்கு நடந்த பால் அபிஷேகம்  பார்க்க முடிந்தது. அர்ச்சனை, தீபாராதனை முடிந்து ஸ்வாமிக்கு வெகு அருகில் சென்று தரிசிக்க அனுமதித்தார்கள். பெருமாளின் காலடியில் சிறிய கருடாழ்வாரையும் தரிசிக்க முடிந்தது. பெருமாளுக்கு அடுத்து தனி சந்நிதியில் தாயாரையும் தரிசித்து வெளியே வந்தோம். சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கியவர்களுக்கு ஒரு டப்பா நிறைய புளியோதரை பிரசாதம் கொடுத்தார்கள். மனதிற்கு நிறைவைத் தந்த தரிசனம்!


ரேவதியும் நானும் 

13 comments:

  1. சூப்பர் வர்ணனை டியர்...நேரில் பார்ப்பது போன்று...

    ReplyDelete
  2. நேரில் பார்த்தது போல் இருந்தது. வீட்டில் இருந்த படியே ஏகாதசி பெருமாள் தரிசனம் செய்தேன். நன்றி🙏

    ReplyDelete
  3. excellent write up.👍👍👍

    ReplyDelete
  4. அங்கிருந்து சிறிது தூரத்தில்தான் ராகிகுட்டா கோவிலும் அதன் அருகில் எங்கள் வீடும் (தற்போது வாடகையில்) இருக்கிறது

    ReplyDelete
  5. கோயில் பற்றிய விவரங்கள் நன்றாக கோர்வையாக அழகாக சொல்லி இருக்கிறீர்கள் பெங்களூர் வரும் போது போகணும் என்று தோன்றுகிறது ஃபோட்டோக்கள் எல்லாம் சூப்பர்

    ReplyDelete
  6. பானுக்க நல்லா சொல்லியிருக்கீங்க. நான் இக்கோயில் சென்றிருக்கிறேன். இதோடு ராகிகுட்டா கோயில் ஆஞ்சுவையும் பார்த்துவிட்டுத்தான் வருவது வழக்கம். முன்பு இங்கு பி டி எம் லே அவுட்டில் இருந்தப்ப பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் கோயிலில் தெரிந்தது.

    ஆரம்பத்தில் ரங்கநாதர் கோயில் அப்புறம் திருப்பதி பெருமாள் கோயிலானது.அதன் பின் தான் திருபதி பெருமாள் அங்கு

    கீதா

    ReplyDelete
  7. படங்கள் நன்றாக இருக்கின்றன அக்கா

    கீதா

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி

    பதிவும் படங்களும் நன்றாக உள்ளது. கோவில் பற்றி அழகாக விபரமாக சொல்லியுள்ளீர்கள். கைசிக ஏகாதசிக்கு நல்லதொரு பெருமாள் கோவில் தரிசனம் தங்களுக்கு கிடைத்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. இந்தக் கோவிலை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை. பல முறை ராகிகுட்டா ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து தரிசித்துள்ளோம். இனி அங்கு வரும் சமயம் இக்கோவிலுக்கும் சென்று வர இறைவன் அழைக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. கைசிக ஏகாதசிக்கு கோவில் விஜயம் சிறப்பு.  புதிய தோழி கிடைத்திருப்பதும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  10. இங்கெல்லாம் கைசிக ஏகாதசி ஞாயிற்றுக் கிழமை தான். நம்பாடுவான் உற்சவம் ஸ்ரீரங்கத்திலும் ஞாயிறன்றே. ஆனால் என்ன? சனிக்கிழமை ரங்கநாதர்/திருப்பதி ஏழுமலையான்/கற்பக விநாயகர் தரிசனம் கிடைத்ததும் சிறப்புத் தானே! நல்ல அழகான தொகுப்பு. ஏற்ற படங்கள். சிறப்பான எப்போவும் போல் சுருக்கமான பதிவு.

    ReplyDelete
  11. இவங்க தான் நீங்க சொன்ன ரேவதியா? எனக்குப் பார்த்த நினைவு இல்லை. தாத்தா பெயர் தெரிந்தால் ஒரு வேளை தெரிஞ்சவரானு யோசிக்கலாம். என் அப்பா சேதுபதி ஹைஸ்கூலில் ஆசிரியராக இருந்தார் என்று அவரிடம் சொல்லிக் கேளுங்க. நாங்க பல வருடங்கள் மேலாவணி மூல வீதியில் தான் இருந்தோம். என் கல்யாணத்துக்குப் பின்னர் மேலமாசி வீதி தலைவிரிச்சான் சந்துக்குப் போனாங்க அப்பாவும் அம்மாவும். 80 வரை அங்கே தான். பின்னரே மதுரையை விட்டுச் சென்னைக்கே வந்தார்கள்.

    ReplyDelete
  12. திருமலாகிரி பெயரைப் பார்த்ததும் எனக்கு சிகந்திராபாதில் உள்ள திருமல்கிரி கன்டோன்மென்ட் நினைவில் வந்தது.

    ReplyDelete