கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, March 1, 2023

விந்தை உலகம்!

விந்தை உலகம்!

என் மகன், மருமகள் இருவரும் தொலைகாட்சியில் மிகவும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி 'ஷார்க் டேங்க்'. இதில் சிறு தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை பற்றி தெரிவித்து, அதற்கு முதலீட்டார்களை பிடிக்க வேண்டும். நடுவர்களாக வந்திருக்கும் தொழிலதிபர்கள் இவர்களிடம் நிறைய கேள்விகளை கேட்பார்கள், அவர்களுக்கு திருப்தியானால் முதலீடு செய்ய முன்வருவார்கள். பேரங்களும் நடக்கும். 

அதில் ஒரு இளம் பெண் தான் பெண்டெண்டுகள் செய்து தருவதாக கூறினார். எல்லாம் விலை உயர்ந்த பதக்கங்கள். விலை உயர்வுக்கு காரணம் அவை எக்ஸ்க்லூசிவ்! மேலும் சாதரணமாக பதக்கங்கள் என்றால் வைரம், வைடூர்யம், போன்றவைதானே நமக்குத் தெரியும்? இவர் தாய்ப்பால், ரத்தம் போன்றவைகளை உறையச் செய்து, அதில் நாம் விரும்பும் உருவங்கள், படங்கள் இவைகளை பதித்துக் கொடுப்பாராம். இவைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்றார். அது மட்டுமல்ல, ஆணின் விந்துக்களில் கூட லாகெட் செய்து தரச் சொல்லி சிலர் கேட்கிறார்களாம்.  இதை அவர் கூறியதும், நடுவர்களில் ஒருவராக அமர்ந்திருந்த அனுபம் மிட்டலின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே..!  

(எங்கள் கேள்வி : சமீபத்தில் நீங்கள் பார்த்த / படித்த / கேள்விப்பட்ட வித்தியாசமான செய்தி எது?) - இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படவில்லை. இருந்தாலும் இதை பார்த்ததும் எனக்கு நினைவில் வந்ததை பகிர்ந்து கொண்டிருகிறேன்.

***************************************************************************************************************

ஸமீபத்தில் ரசித்த திரைப்படம் 'கமலி ஃப்ரம் நடுக்காவேரி'  



வரிசையாக, ரத்தக்களரி, பிரும்மாண்டம், துப்பாக்கி சூடு என்றே படங்களை பார்த்து அலுத்த கண்களுக்கு ஒரு நல்ல மாற்று 'கமலி ஃப்ரம் நடுக்காவேரி' நேற்று ஓ.டி.டி.யில் பார்த்தேன்.  

நடுக்காவேரி என்னும் சின்ன கிராமத்தில் இருக்கும் குறும்புக்கார கமலி என்னும் பெண், சி.பி.எஸ்.சி. தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த அஸ்வின் என்னும் மாணவன், தொலைகாட்சியில் பேட்டி கொடுப்பதை பார்த்து விட்டு அவனிடம் மனதை பறி கொடுக்கிறாள். அவன் ஐ.ஐ.டி. மெட்றாஸில் படிப்பதை அறிந்து, தானும் அங்கு சேர  என்று ஆசைப்படுகிறாள்.  ஐ.ஐ.டி. என்பது என்ன? அதன் நுழைவுத் தேர்வுக்கு எப்படி தயாராவது போன்ற விஷயங்களைத் அறிந்து கொண்டு, ஒய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர்(பிரதாப் போத்தன்) பயிற்சி அளிக்க ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் 258வது ரேங்க் எடுத்து, ஐ.ஐ.டி. மெட்ராஸில் கம்பியூட்டர் சயின்ஸ் கிடைத்து சேருகிறாள். முதல் நாள்,தன் ரூம் மெட்டான, நல்ல ரேங்க் கிடைக்காததால் கெமிக்கல் இன்ஜினீயரிங் கிடைத்த கடுப்பில் இருக்கும் நகரத்து பெண்ணிடம், வெள்ளந்தியாக, தான் ஒரு பையனை காதலிப்பதாகவும், அவனைக் காணவே  அங்கு வந்திருப்பதாகவும் கூறி விடுகிறாள். அந்தப் பெண் இவளுக்கு சிண்ட்ரெல்லா என்று பெயர் வைத்து, அதை எல்லோரிடமும் பரப்பி விடுகிறாள். 

இதற்கிடையில் அந்த மாணவனை பார்த்து விட்ட கமலி, அவனை தொடர்வதிலும், கனவு காண்பதிலும் தி நேரத்தை வீணாக்க, முதல், வகுப்புத்  தேர்வில் எல்லாப் பாடங்களிலும் 
தோற்கிறாள். ஆசிரியர் அவளிடம், " நல்ல ரேங்க் வாங்கி இங்கு வந்திருக்கும் உனக்கு என்ன பிரச்னை?" என்று வினவ, ஒரு மாணவி,"அவள் இங்கு படிக்க வரவில்லை, தன் காதலனைத் தேடி வந்திருக்கிறாள்" என்று கூறுகிறாள். இந்த செய்தி காம்பஸ் முழுவதும் பரவுகிறது. எல்லோரும் கேலி செய்யும் சிண்ட்ரெல்லா தான்தான் என்பது அவளுக்குத் தெரிய வந்து மிகவும் அவமானப்படுகிறாள். யாரைத் தேடி அவள் அங்கு வந்தாளோ  அவனே அவளை இது குறித்து கேலியாக பேசுவதை கேட்க நேர்ந்து, மனம் உடைந்து, படிப்பை தொடர விருப்பமின்றி  ஊர் திரும்புகிறாள். அங்கு இவளை முன் மாதிரியாகக் கொண்டு இன்னும் சில மாணவிகளுக்கு, இவளுக்கு பயிற்சி அளித்த பேராசிரியர் பயிற்சி கொடுப்பதை பார்த்து தான் இனிமேல் செய்ய வேண்டியது என்ன என்பதை உணர்ந்து, கல்லூரிக்குத் திரும்பும் அவள் படிப்பில் தீவிர கவனம் செலுத்துவதோடு, ஆல் இந்தியா ஐ.ஐ.டி. வினாடி வினாவில் கலந்து கொள்ள தேர்வாகி, அதே அஸ்வினோடு டில்லி வரை பயணித்து, அங்கு வெற்றி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறாள். திரும்பி வரும்பொழுது அஸ்வின் அவளிடம்,"நான்தானே அது?" என்று கேட்க, அவள் நாணி,காணாமல், அல்லது புளகாங்கிதமடையாமல் "மே பி" என்று கூறுவதோடு படம் முடிகிறது. 

இந்தப் படத்தில் பறந்து பறந்து அடிக்கும் சண்டை காட்சிகள் கிடையாது, தனி காமெடி ட்ராக் கிடையாது, குத்துப் பாட்டு கிடையாது, ஆடம்பரமான செட்டுகள் கிடையாது. மிகவும் இயல்பான அமைதியான, அழகான நிலைக்களன்(எங்கள் ஊருக்கு அருகில்), யதார்த்தமான மனிதர்கள், இயல்பான வசனம், எல்லாவற்றுக்கும் மேலாக படித்த பெண், படிக்காத ரௌடியை காதலிக்கிறாள்  என்னும் அபத்தம் கிடையாது. மலையாள படங்களுக்கு நிகரான தமிழ்ப் படம். Zee5 ல் பார்க்கலாம்.   

ஆனந்தி(பரியேறும் பெருமாளில் நடித்தவர்), ரோஹித் சராஃப், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி போன்றவர்கள் நடித்திருக்கும் படத்தை இயக்கியிருக்கும் ராஜசேகர் துரைசாமிக்கு இது முதல் படமாம். நல்ல முயற்சி!



14 comments:

  1. விந்தை உலக செய்தி கேட்டு வியப்புதான். பட விமர்சனம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

      Delete
  2. கமலி - குறித்துக் கொண்டேன். பார்க்கிறேன். விந்தை உலகம் எவ்வளவு விதமான மாற்றுச் சிந்தனைகள் என்று எண்ண வைத்தது.

    ReplyDelete
  3. பேஸ்புக்கிலேயே கமலி விமர்சனம் படித்திருந்தேன்.  குறித்தும் வைத்திருக்கிறேன்.   நானும் சிலபல படங்கள் பார்த்திருக்கிறேன்.  அதை பற்றி எழுதவேண்டும் என்று என்றும் நினைத்து அப்படியே போய்விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அப்படி ஆகும். ராங்கி பற்றி கூட எழுத நினைத்தேன்.

      Delete
  4. சிறப்பான பகிர்வு. கமலி படம் பார்க்கத் தோன்றுகிறது. லாக்கெட் - எல்லாம் வியாபாரம்! :(

    ReplyDelete
  5. விந்தை உலகம் விந்தையான சிந்தனைகள்!

    கமலி படம் வித்தியாசமான கருவாக இருக்கிறதே! வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன். குறித்துக் கொண்டுவிட்டேன்.

    கீதா

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    விந்தையான உலகந்தான். வியப்புதான் மேலிடுகிறது. திரைப்பட விமர்சனம் அருமை. முடிவு பார்க்கத்தூண்டுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா. நீண்ட நாட்களுக்குப் பிறகு எல்லோரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி!

      Delete
  7. கமலி படத்தை ரசித்து பல மாதங்கள் ஆச்சி...? அருமையான திரைப்படம்...

    ReplyDelete
  8. வாங்க டி.டி., சமீபதில்தான் ஓ.டி.டி.யில் பார்த்தேன்.

    ReplyDelete
  9. விந்தையான உலகம் தான். கமலி படம் வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கணும். ஒரு பெரிய பட்டியலே வைச்சிருக்கேன். எப்போ என்ன முடியுமோ பார்க்கலாம். நான் ஓடிடியில் எல்லாம் பார்ப்பதில்லை. ஓ.சி.க்கு அந்தப் படம் வந்தால் தான். அப்படித்தான் 2 படங்கள் பார்த்தேன்.

    ReplyDelete