கூத்தாடிகள்
அன்று
வெளியில் சென்றுவிட்டு திரும்பிய பொழுது என் சகோதரியின் வீட்டிற்கு அருகில் ஒரு சினிமா
ஷூட்டிங் நடப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கேரவன் ஒன்று, அவுட்டோர் யூனிட் வேன் ஒன்று,
காமிராக்கள், ரிஃப்ளெக்டர்கள், ஜீன்ஸ் அணிந்த இளைஞர்கள், சந்தேகமேயில்லை, சினிமா ஷூடிங்தான்.
என் அக்கா வீட்டு வாசலில் அமர்ந்திருந்த ஒரு இளைஞரிடம், “தமிழ்ப் படமா?” என்றேன். “ஆமாம்”
என்றார். “யார் நடிக்கிறார்கள்?” “ஷ்ரத்தா ஸ்ரீ” என்றார்.
“அவங்க
வருவாங்களா?”
“வந்துட்டு
போய்ட்டாங்க”
எதிரே,
ஒருவர் சில முகமூடிகளை தயாரித்துக் கொண்டிருப்பதை பார்த்ததால், “க்ரைம் த்ரில்லரா?”
என்று கேட்டதற்கு, “ஆமாம்” என்றார்.
ஓரு
காரின் முன்னால் காமிராவை இணைத்து சில காட்சிகளை படமாக்குவதைப் பார்த்தேன். உள்ளே போய்
விட்டேன். மாலையில் சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கினார்களாம்.
இரவு
ஒன்பது மணிக்கு மேல் என் அக்கா வீட்டு வாசலிலேயே படப்பிடிப்பு நடந்ததால் வேடிக்கைப்
பார்த்தோம்.
கதாநாயகியாக
நடிக்கும் நடிகை ஒரு சேரில் அமர்ந்திருக்க, அவரோடு ஒரு பெண்(துணை நடிகை?) பேசிக்கொண்டிருந்தார்.
காமிரா கோணங்களை அமைத்து விட்டு, அவரை அழைத்ததும், எழுந்து சென்றவர் அட! ஷ்ரத்தா ஸ்ரீ!
மதியம் அவர் சரியாக சொல்லவில்லையா? நான் சரியாக காதில் வாங்கவில்லையா? படங்களில் தெரிவதை
விட ஒல்லியாகத்தான் இருக்கிறார். அதிகம் மேக்கப் இல்லை.
உள்ளே
சென்று என் அக்காவை அழைத்து வந்தேன்.
“ஷ்ரத்தா
ஸ்ரீநாத் நடிக்கிறா”
“யார்
அவள்?”
‘விக்ரம்
வேதா’வில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவள், ‘இறுகப்பற்று’வில் விக்ரம் ப்ரபுவிற்கு ஜோடியாக
நடித்தாளே..?”
“நான்
சினிமாவே பார்ப்பது கிடையாது” என்றாலும் ஷூட்டிங் பார்ப்பதில் என் அக்காவிற்கு எந்த
விரோதமும் இல்லை. வாசலுக்கு வந்தாள்.
ஷ்ரத்தா
ஸ்ரீநாத் நடந்து வரும் பொழுது, அவரைத் தொடர்ந்து வரும் முகமூடியணிந்த இருவர் அவரைப்
பற்றி இழுத்துச் செல்வது போல காட்சி.
முதலில்
அவர் நடந்து வர, என்ன இப்படி நடக்கிறார்? என்று தோன்றியது. குடித்து விட்டு நடந்து
வருவது போல காட்சியோ?, அப்படித்தான் இருக்க வேண்டும், ஏனென்றால், டைரக்டர் அவரிடம்
ஏதோ சொல்ல, நடையில் இன்னும் கொஞ்சம் தள்ளாட்டத்தை கூட்டி, ஒரிடத்தில் தடுக்கி விழுவது
போல செய்தார். இந்த காட்சியையே ஆறேழு முறை எடுத்திருப்பார்கள்.
பிறகு,
அவர் கையில் வைத்திருக்கும் ட்ராஃபியை முகமூடி அணிந்திருக்கும் வேறு ஒருவர், வாங்கிக்
கொண்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காருக்கு அருகில் செல்ல, ஷ்ரத்தாவை இரு முகமூடிக்காரர்கள்
காருக்குள் செலுத்துவது போல காட்சி.
என்
சகோதரியின் வீட்டு போர்டிகோவில் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்கை அணைக்கச் சொன்னார்கள்.
ட்ராஃபியை வாங்கிக்கொண்டு செல்ல வேண்டிய இளைஞரின் நடை டைரக்டருக்கு திருப்தி தரவில்லை,
அவரே செய்து காட்டினார். அதை ஒரு ஆறேழு முறை எடுத்திருப்பார்கள். எங்களுக்கு போர் அடித்ததால்
உள்ளே சென்று விட்டோம். இரண்டு காட்சிகளையே இப்படி திரும்பத் திரும்ப எடுக்கிறார்களே,
முழு படத்தையும் எத்தனை முறை எடுக்க வேண்டும்? அதுவும் பாடல் காட்சி மற்றும் சண்டைக்
காட்சிகளை நினைத்தால் கண்ணைக் கட்டியது. இரவு வெகு நேரம், “காமிரா ரோல், ஆகஷன்..” என்று
குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.
சினிமாவை
நாம் வெகு ஈசியாக விமர்சனம் செய்து விடுகிறோம், எத்தனை பேர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது?
நாங்கள் பார்த்த காட்சி புகை மூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்காக ஒரு
பெரிய சட்டியை பக்கெட் போல தூக்கிக் கொள்ளும் விதமாக அமைத்து,“ஸ்மோக்” என்று குரல்
வந்ததும் அதில் நிறைய புகை வரும்படி சாம்பிராணி போட்டு, முன்னும் பின்னும் ஊஞ்சலாட்டியபடி
அந்த தளம் முழுவதும் சுற்றி வருகிறார் ஒருவர். மூன்று காமிராக்கள்,அதன் ஆபரேட்டர்கள்,
ஒருவர் ஒரு பேடில் என்னவோ எழுதிக் கொண்டே இருந்தார். டச் அப் உமன், என்று நிறைய பேர்கள்
இருந்தார்கள். நாங்கள் பார்த்த காட்சி படத்தில் இடம் பெறுமா? இடம் பெற்றாலும் எத்தனை
நிமிடங்கள் இருக்கும்? அதற்கு இவ்வளவு உழைப்பு. கூத்தாடிகள் என்று துச்சமாக சொல்லக்
கூடாது என்று தோன்றியது.
எனக்கு அமிதாப்பை ரொம்பப் பிடிக்கும். ஊட்டியில் அக்கா வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கு ஓரிடத்தில் தி கிரேட் காம்ப்ளர் பட ஷூட்டிங் நடந்தது. அருகில் சென்று அமிதாப்பைப் பார்த்தேன். நாற்காலியில் நீண்ட கால்களுடன் உன்னதமான வெள்ளையில் பேண்ட்ஸ் அணிந்து அமர்ந்திருந்தவர் ரெடி சொன்னதும் சட்டென எழுந்து பர்வீன் பாபி கையைப் பிடித்துக் கொண்டு சில அடிகள் முன்னே சில அடிகள் பின்னே என்று நடந்தார். என் துரதிருஷ்டம் ஷாட் ஓகே ஆகிவிட அமிதாப் உடனே புறப்பட்டு காணாமல் போய்விட்டார்.
ReplyDeleteஹாஹா!
Deleteஷ்ரத்தா ஸ்ரீ யாரென்று எனக்கும் தெரியாது. படம் பெயர் என்ன என்று சொன்னார்களா?
ReplyDeleteகேட்கவில்லையே...
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. திரைப்படத்தில் நடிப்பவர்களின் உழைப்பு பற்றி அழகாக சொல்லியுள்ளீர்கள். திரைப்படத்திற்கான சூட்டிங் நாங்களும் சென்னையில் இருக்கும் போது எங்கள் வீட்டருகில் பார்த்துள்ளேன். நடிகர் பார்த்திபன் நடித்த படமொன்றிற்காக, அந்த ஒரு சீனுக்காக அந்த குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து வந்திருந்தனர். அந்த சீன் படத்தில் ஒரு சில நிமிடங்கள்தான் வரும். அதற்காக அந்த யூனிட் முழுவதும் பட்ட சிரமங்களை பார்த்தேன். நீங்கள் சொல்வதனைத்தும் உண்மைதான். உழைப்பு என்று வரும் போது அத்தனை வேலைகளும், ஏதோ ஒரு வகையில் சிரமமானதுதான். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சரியான புரிதலும் நன்றி.
Deleteஉழைப்பு அங்கே அதிகம் தேவை தான். அவர்கள் பல சமயங்களில் கடினமான உழைப்பை தருகிறார்கள் என்றாலும் படம் பார்க்கும் நாம் விதம் விதமான விமர்சனங்களை வைப்பதோடு ஒரே வரியில் படம் வேஸ்ட் என்று சொல்லி விடுகிறோம். படங்களை படங்களாக மட்டுமே பார்த்தால் மட்டுமே நல்லது.
ReplyDeleteஉழைப்பும் அதிகம், ஊதியமும் அதிகம்.
Deleteஉழைப்பு, ஊதியம், போட்டி, பொறாமை எல்லாமே அதிகம்.
Deleteஷ்ரத்தாஸ்ரீ இப்படி ஒருவர் இருப்பதை தாங்கள் சொல்லித்தான் அறிந்து கொண்டேன்.
ReplyDeleteஒரு திரைப்படம் உருவாக பலநூறு தொழில் நுட்ப வல்லுநர்கள், தொழிலாளர்கள் உழைக்கின்றார்கள். ஆனால் படம் வெற்றி பெற்றால் கசா'நாயகன் என்ற ஒற்றைக் கூத்தாடனுக்கு மட்டும் மிகப் பெரிய பலன் கிடைப்பதைத்தான். ஏற்க முடியவில்லை
நானும் தேவகோட்டையில் பங்களாவுக்குள் நடந்த படப்பிடிப்பை காண சென்றவன் வெறுத்து வெளியே வந்து விட்டேன்.
குறிப்பு- கூலி தூக்குபவர்களை கூலிக்காரர் என்று சொல்வது போல, நடத்துநர்களை நடத்துநர் என்று சொல்வது போல, கூத்தாடன்களை கூத்தாடன் என்றும், கூத்தாடிகளை கூத்தாடி என்று சொல்வதுதான் தொழில்முறை வழக்கம்.
கருத்துக்கு நன்றி. கூத்தாடிகள் என்பது தொழில் பெயர்தான், ஆனால் அதை கேலியாகத்தானே பயன்படுத்துகிறோம்?
Deleteநான் பெங்களூரில் வாசித்த நாட்களில் கோரமங்களா நேஷனல் கேம்ஸ் வில்லேஜில் அடிக்கடி சினிமா ஷூட்டிங்கு நடக்கும். நின்று வேடிக்கை பார்ப்பதுண்டு. அப்படிப் பார்த்துவிட்டால், அடுத்த பதினேழு ஜென்மங்களில் சினிமா பார்க்கும் ஆசையே விட்டுப் போய்விடும். அந்த அளவுக்கு பொறுமையை சோதிக்கும் விதமாக ஒரே காட்சியைப் பலமுறை எடுப்பார்கள். குறிப்பாகச் சண்டைக் காட்சிகளைப் பார்ப்பது, குழந்தைகள் அட்டை கத்தியை வைத்துக்கொண்டு சண்டையிடுவது போலவே இருக்கும்.
ReplyDeleteஹாஹா!
Delete