கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, July 31, 2024

ஆதி திருவரங்கம்

ஆதி திருவரங்கம்


திருவண்ணாமலை கோவிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு, எங்களுக்கு தரிசனம் செய்வித்த அன்பர் வீட்டிற்குச் சென்று விட்டு வந்ததில் ஆஸ்ரமங்கள் எல்லாம் மூடி விட்டன, அதனால் நேராக ஆதி திருவரங்கம் சென்றோம். ஆதி திருவரங்கம் கோவில் காலை ஆறு மணிக்கு திறந்தால் இரவு எட்டு மணி வரை திறந்துதான் இருக்கும். நடுவில் நடை சாத்த மாட்டார்கள்.

இந்த கோவில் ஸ்ரீரெங்கத்திற்கும் முற்பட்டது. அதனால்தான் ஆதி திருவரங்கம் என்று பெயர். பாம்பணை மேல் பள்ளிகொண்ட பிரும்மாண்டமான ரங்கனாதர். 29 அடி நவபாஷண திருமேனியாம்! தாயாரின் மடியில் தலை வைத்து சயனித்திருக்கிறார். அவருடைய கால்மாட்டில் பூமா தேவி. தலைக்கு கீழே அவரை வணங்கியபடி கருடன். வலது கரத்தை தலைக்கு அணையாக கொடுத்து, இடது கை சற்று உயர்த்தி, நான்கு விரல்களை மடக்கியபடி உள்ளன. இது பிரம்மாவிற்கு உபதேசம் செய்யும் கோலம் என்றும், நான்கு விரல்கள் நான்கு வேதங்களை குறிக்கின்றன என்றும் கருத்துகள் உண்டு. கைக்கு அருகில் பிரும்மா.

சோமுகன் என்னும் அசுரன் பிரும்மாவிடமிருந்து வேதங்களை அபகரித்து சென்றுவிட, அவனை மத்ஸ்ய(மீன்)அவதாரம் எடுத்து, சோமுகனை அழித்து வேதங்களை மீட்டுக் கொடுத்து விட்டு ஓய்வெடுத்துக் கொள்ள, தாயாரின் மடிமீது தலை வைத்து படுத்ததாக ஐதீகம். தனி சன்னிதியில் கோவில் கொண்டுள்ள ரங்கநாயகி தாயார் படிதாண்டா பத்தினி. பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால்தான் இந்தக் கோவிலுக்கு வர முடியுமாம்.

தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த கோவில் பராந்தக சோழனால் திருப்பணி செய்யப்பட்டதாம். பின்னர் விஜயநகர மன்னர்களால் விரிவு செய்யப்பட்டதாம். தற்பொழுது கும்பாபிஷேகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.


கோவில் வாசலில் செங்கலால் கட்டப்பட்ட ஒரு பெரிய குதிர்(பத்தாயம்) இருக்கிறது. அந்தக் காலத்தில் தானியங்களை இதில் சேமித்து வைத்து, பஞ்சகாலத்தில் எடுத்து மக்களுக்கு வழங்குவார்களாம். இது உள்ளுக்குள் மூன்று அடுக்குகளாக அமைந்திருக்கும், கீழே நெல், நடுவில் கம்பு, மேலே கேழ்வரகு சேமிப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்.  

இப்படிப்பட்ட புராதன பெருமை வாய்ந்த கோவில்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று காட்ட வேண்டும்.


15 comments:

  1. ஆதி திருவரங்கம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றா?

    ReplyDelete
    Replies
    1. இல்லை, 108 வைணவ திருக்கோவில்கள் எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகின்றன என்பது தெரியவில்லை. ஒரு வேளை ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த கோவில்கள்தான் 108 வைணவ கோவில்கள் ஆகுமோ? மிகவும் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவில் கூட 108 வைணவ கோவில்களில் ஒன்று கிடையாது. இதை வைணவர்கள் யாராவது தெளிவு படுத்தலாம். கருத்துக்கு நன்றி

      Delete
  2. நல்ல தகவல்.  குறைந்த அளவு புகைப்படங்கள்.  இந்தக் கோவில் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.  இன்னும் திருவண்ணாமலை சென்றதில்லை.  இங்கும் செல்லவேண்டும், தரிசிக்க வேண்டும் என்று குறித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. திருக்கோவிலூரில் அட்ட வீரட்டான கோவில்களில் ஒன்றான வீரட்டானேஸ்வரர் கோவில் இருக்கிறது. அங்கு ஒளவையார் விநாயகர் அகவல் பாடிய பெரியானை விநாயகர் சன்னிதியும் உண்டாம். அதியும் குறித்துக் கொள்ளுங்கள். நானும் சென்றதில்லை. நன்றி

      Delete
  3. புராணக்கதைகள் சொல்கிறோம்.  உண்மையில் அந்த சிற்பங்களுக்கு என்ன அர்த்தம் இருந்திருக்கும், வேறு ஏதாவது பொருள் இருந்திருக்குமா என்று மனம் அவ்வப்போது மாத்தி மாத்தி யோசிக்கும்!!  படித்தவர்கள் அல்லது வடிக்கச் சொன்னவர்கள் என்ன மறைபொருளை சொல்ல நினைத்தார்களோ..  இன்றைய விஞ்ஞானத்துடன் தொடர்பிருக்கும் வகையில் கூட இருக்கலாம்.

    ReplyDelete
  4. முகநூலிலும் வாசித்தேன். சிறப்பான தகவல். திருவண்ணாமலை சென்றால் பார்த்து வரலாம்.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. ஆதி திருவரங்கம் கோவில் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டேன். நான் இதுவரை மைசூர் செல்லும் வழியில் ஸ்ரீ ரங்கபட்டிணா அனந்தசயன பெருமாள் கோவிலைத்தான் ஆதி திருவரங்கம் என நினைத்திருந்தேன். அவன் அழைத்ததால் இப்போது கூட சென்று வந்தோம்.

    நீங்கள் சொன்ன தகவல்களை படித்த பின்தான். கள்ளக் குறிச்சியில் இருக்கும் ஆதி திருவரங்க கோவிலைப்பற்றி அறிந்து கொண்டேன். ஸ்ரீ ரங்க பட்டிணம் கோவில் பஞ்சதல அனந்தசயன பெருமாள் கோவில்களில் ஒன்றெனவும் கூகுளில் படித்து அறிந்து கொண்டேன். எத்தனையோ கோவில்கள், தெரியாத தகவல்கள், எல்லாவற்றையும் அறிந்து கொள்ள ஆரோக்கியமான உடல் நிலையை உடைய வயதும், நல்ல நேரங்களும் அமைய வேண்டும். அதுவும் இறைவன் செயல். அவனன்றி எதுவும் அசையாது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் சமீபத்தில் ஸ்ரீரங்கபட்டிணம் சென்றோம். அதையும் ஆதி திருவரங்கம் என்கிறார்கள். இந்தக் கோவில் மிகவும் புராதனமான, மத்ஸ்ய அவதாரத்தில் சம்பந்தப்பட்டிரெப்பதால் ஆதி திருவரங்கம் ஆகியிருக்கலாம். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
    2. நாங்கள் சமீபத்தில் ஸ்ரீரெங்கபட்ணம் சென்றோம். அதையும் ஆதி ரெங்கம் என்கிறார்கள். ஒருவேளை இந்தக் கோவில் மத்ஸ்ய அவதாரத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால் ஆதிரங்கம் எனப்படுகிறதோ? வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

      Delete
  6. ஆதி திருவரங்கம் கோவில் அதைபற்றிய விரிவான தலவரலாறு அருமை.
    படங்கள் நன்றாக இருக்கிறது. குதிர் படம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. குதிர் காப்பாற்றப்படுவது நல்ல விஷயம். இப்போது கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயாராகிக்கொண்டிருக்குறது. குதிரும் செப்பனிட்டு.

      Delete
  7. வாங்க கோமதி அக்கா. அந்த குதிர் நன்றாக பராமரிக்கப்படுகிறது. இப்போது கும்பாபிஷேகத்திற்காக வேலைகள் நடக்கின்றன,அந்தக் குதிரும் செப்பனிடப்படுகிறது. நன்றி

    ReplyDelete
  8. கோவிலும் வரலாறும் தகவல்களும் சிறப்பு. குதிர் படம் ரொம்ப சூப்பர். அழகா இருக்கு.

    கீதா

    ReplyDelete