பாரதி பாஸ்கர் செய்வது சரியா?
பாரதி பாஸ்கர் நல்ல பேச்சாளர் என்பதில் சந்தேகம் கிடையாது. பட்டிமன்றத்தில் மட்டுமல்லாது கம்பன் கழங்கங்களிலும் ஆழமாக உரையாற்றக் கூடியவர். சமீபமாக யூ டியூபில் கதைகளை சொல்கிறார். கவனியுங்கள், சொல்கிறார், படிப்பதில்லை. அவருடைய மேடை அனுபவங்கள் கதைகளை திறம்பட சொல்ல உதவுகின்றன. குரலில் நல்ல மாடுலேஷனோடு அழகாக சொல்கிறார்.
அவர் கதை சொல்வதில் ஒரு விஷயம் சற்று நெருடலாக இருக்கிறது. ஒரு கதையை அந்த கதாசிரியர் எந்த காலத்தில் எழுதினாரோ அப்பொழுதிருந்த சூழலைத்தான் அவர் தன் கதையில் குறிப்பிட்டிருப்பார். இவரானால் அந்த குறிப்பிட்ட சூழலை தற்காலத்திற்கேற்றார்போல மாற்றி விடுகிறார்.
சுஜாதாவின் மத்யமர் கதைத் தொகுப்பில் தாய் -2 என்று ஒரு கதை உண்டு. அதில் வயதான விதவைத் தாயை பராமரிக்கும் பொறுப்பை அண்ணன்,தம்பி இருவரும் தட்டிக் கழிக்கப் பார்ப்பார்கள். டில்லியில் உயர் பதவியில் இருக்கும் அண்ணன் அம்மாவை அழைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தனக்கு வெளிநாட்டு டெபுடேஷன் என்பான். தம்பியின் மனைவியோ நாம்தான் இளித்த வாயர்களா? என்பாள். இந்த சமயத்தில் ஊரிலிருந்து வரும் மாமா இவர்களின் அம்மாவுக்கு பிதுர்ராஜிதமாக கிடைக்க வேண்டிய சொத்திலிருந்து எட்டு லட்சம் கிடைக்கும், அந்த பணத்தில் திருச்சியில் ஒரு வீடு வாங்கிக் கொண்டு, மிச்ச பணத்தை வங்கியில் போட்டுக் கொண்டு வரும் வட்டியில் ஒரு ஆளை துணைக்கு வைத்துக் கொண்டு தனியாகவே இருக்கலாம் என்றுகூறுவார். உடனே தம்பிக்காரன், ராத்த்ரி ஒன்பது மணிக்கு மவுண்ட் ரோடு தபாலாபீசுக்குச் சென்று அண்ணனுக்கு," என்று தந்தி கொடுStarting by grand trunk express tomorrow to take mother Divakar த்துவிட்டு திரும்புவான். வந்தால் வீட்டில் அவனுக்கு அண்ணனிடமிருந்து, Changed plans regarding deputation. Mother stays with us Sudhakar என்று தந்தி வந்திருக்கும்.
இந்தக் கதையை கூறிய பாரதி பாஸ்கர் தந்தி என்று கூறாமல் SMS வருவதாக கூறுகிறார். சுஜாதா இந்தக் கதையை எழுதிய காலத்தில் எஸ்.எம்.எஸ். என்னும் ஒரு விஷயமே கிடையாது. அப்போது இருந்த தந்தி இப்போது இல்லை, ஆனால் இந்தக் கதையை படிக்கும் அல்லது கேட்கும் இளைய தலைமுறைக்கு தந்தி என்று ஒரு விஷயம் அப்போது இருந்தது. ராத்திரி எந்த நேரத்திலும் தந்தி கொடுக்க முடியும் போன்ற விவரங்கள் தெரிந்து கொள்ள முடியுமே.
அதைப் போல ஆர்.சூடாமணியின் 'அந்நியர்கள்' என்னும் கதையில் ஊரிலிருந்து வந்திருக்கும் தன் தங்கை சௌமியாவை தன்னுடைய லேடீஸ் கிளபிற்கு அழைத்துச் செல்லும் அக்கா சவிதா அங்கு ஒரு உடல் ஊனமுற்ற ஒரு ஏழை மாணவனுக்கு உதவுவதற்காக நிதி திரட்டப்பட்டபொழுது அக்கா பத்து ரூபாய் கொடுப்பாள், தங்கை சற்று யோசித்துவிட்டு ஐந்து ரூபாய் கொடுத்தாள் என்றுதான் சூடாமணி எழுதியிருப்பார். பாரதி பாஸ்கருக்கு பத்து ரூபாய், ஐந்து ரூபாயெல்லாம் ரொம்ப குறைவு என்று தோன்றியதோ என்னவோ, அதை ஐநூறு ரூபாயாக உயர்த்தி விட்டார். இப்போது வேண்டுமானால் பத்து ரூபாய்க்கு மதிப்பு இல்லாமல் இருக்கலாம். சூடாமணி அந்தக் கதை எழுதிய காலத்தில் பத்து ரூபாய்க்கு மதிப்பு இருந்திருக்கிறது என்பதை அந்தக் கதையை படிக்கும் இளைய தலைமுறை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பை பாரதி பாஸ்கர் தடுத்து விடுகிறார்.
அந்தக் கதையில் ஈராஸ் தியேட்டரில் ஓடும் எல்லாப் படங்களுக்கும் சவிதா தன் தங்கையை அழைத்துச் சென்றதாக சூடாமணி எழுதியிருப்பார். இப்போது ஈராஸ் தியேட்டரே இல்லை, அதற்காக இ.ஏ.மாலிலோ அல்லது ஃபீனிக்ஸ் மாலிலோ படம் பார்த்தார்கள் என்று சொல்லிவிட முடியுமா? அப்போது அடையாரில் ஈராஸ் என்று ஒரு தியேட்டர் இருந்தது என்னும் தகவல் நமக்கு கிடைக்கிறது, அதை காலத்திற்கு ஏற்றபடி மாற்றுகிறேன் என்று கதை சொல்கிறவர்கள் மாற்றினால் என்னவாகும்?இன்றைக்கு இவர் ஒன்றை மாற்றுவார், நாளைக்கு வேறு ஒருவர் வேறு ஒன்றை மாற்றுவார், கடைசியில் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான், பாடினவன் பாட்டை கெடுத்தான் என்பது போல கதை சொல்லிகள் கதையை கெடுத்து விடுவார்கள் போலிருக்கிறதே!
ஸாஹித்ய் கர்த்தாக்களின் கிருதிகளை(பாடல்களை) மாற்ற மற்றவர்களுக்கு எப்படி அதிகாரம் கிடையாதோ, அதைப்போல எழுத்தாளர்களின் படைப்புகளை அப்படியேதான் சொல்ல வேண்டும், அதை மாற்ற மற்றவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றுதான் நான் கருதுகிறேன்.

































