கச்சேரி மாற்றங்கள்
இந்த உலகில் மாறுதல்தான் மாற்றம் இல்லாதது என்பார்கள். எத்தனையோ மாற்றங்களை நாம் சந்தித்து வருகிறோம், குறிப்பாக ஒரு முப்பது வருடங்களாக நடக்கும் மாற்றங்கள் அளவில் மிகப் பெரியதாக இருக்கின்றன.
இப்பொழுது கர்நாடக இசையை எடுத்துக் கொள்வோமே, முன்பெல்லாம் கர்நாடக இசை பாடுகிறவர்கள் சினிமா பாடல்களை பாடவே மாட்டார்கள்.
சினிமா பாடல்கள் பாடுவது என்பது ஏதோ ஒரு தவறான பாடல்கள் பாடுவதைக் போன்ற தவறான செயல் என்பது போல கருதப்பட்டது. ஏன் எங்கள் வீட்டிலேயே கூட சினிமா பாடல் கேட்பதற்கும் சினிமா பாடல் பாடுவதற்கும் தடை உண்டு. ரேடியோவில் சினிமா பாடல்களை சத்தமாக வைத்து கேட்டு விட முடியாது. நாங்கள் சினிமா பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது வீட்டு பெரியவர்கள் வந்தால், "என்ன டீக்கடை மாதிரி சினிமா பாட்டு? நிறுத்து" என்று அதை நிறுத்தி விடுவார்கள்.
என் மூத்த சகோதரி முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டவர். அவரும் சரி,அவருடைய தோழிகளும் சரி சினிமா பாடல்களை பாடி நான் கேட்டதே கிடையாது. அவர்கள் சினிமா பாடல்கள் பாடவே மாட்டார்கள் அது ஏன் என்று எனக்கு தெரியாது. ஒரு வேளை அவர்களுக்கு அந்த பாட்டு பாட வரவில்லையா? அல்லது பாடக்கூடாது என்று அவர்களுடைய ஆசிரியர்கள் கண்டித்தார்களா என்று தெரியாது.
ஆனால் இப்பொழுது பாருங்கள் ரஞ்சனி காயத்ரி என்னும் பிரபல பாடகிகள் பக்காவாக ஒரு கர்நாடக இசை கச்சேரி செய்வது போலவே இளையராஜாவின் சினிமா பாடல்களையே கச்சேரியாக செய்திருக்கிறார்கள். கேட்பதற்கும் நன்றாகத் தான் இருக்கிறது.
ராக ஆலாபனை, ஸ்வரமெல்லாம் பாடி ஒரு மெட்லியாக பாடல்களை அவர்கள் தொகுத்துக் கொடுத்து இருக்கும் விதம் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. அதையும் கர்நாடக இசை கச்சேரிக்கு உடை அணிவது போன்ற அதே முறையில் நல்ல பட்டுப் புடவை கட்டிக்கொண்டு தலையில் பூ வைத்துக் கொண்டு, அதே போல மேடை அமைப்பு வயலின், மிருதங்கம், போன்ற பக்கவாதிகளோடு அவர்கள் அந்த சினிமா பாடல்களை பாடியது மிகவும் ரசிக்கும் படியாகவும், வித்தியாசமாகவும் இருந்தது.
'ரங்கபுரவிகாரா.. ' என்னும் பாடலை ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் தன்னுடைய அகம் என்னும் Bandல் ஃபியூஷனாக பேண்ட்,சர்ட் அணிந்து கொண்டு பாடி இருந்ததையும் ரசித்தோம்.
இன்ஸ்டாகிராமில் பல பெண்கள் ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிந்து கொண்டு கர்நாடக இசையை பாடுகிறார்கள் நாம் அந்த பாடலை மட்டும் ரசிக்கிறோம் அவர்கள் உடையை ரசிக்காமல் பாடலை ரசிக்க கற்றுக் கொண்டு விட்டோம்.
சிந்து பைரவி படத்தில் சிவக்குமார் மீசை வைத்துக் கொண்டு நடித்ததை சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் இப்பொழுது பாருங்கள் கர்நாடக இசை பாடும் இளைஞர்கள் நவீனமாக உடை அணிந்து கொண்டு மெல்லிசை பாடகரைப் போல உடை அணிந்து கொண்டு கர்நாடக இசை பாடுகிறார்கள் இதையெல்லாம் வரவேற்கத்தக்க மாற்றங்களாகவே நான் கருதுகிறேன். அதற்காக வீம்புக்கு லுங்கி கட்டிக் கொண்டு கச்சேரி செய்ததை ஏற்க முடியவில்லை.

No comments:
Post a Comment