கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, March 11, 2026

அந்த 37 வருடங்கள் - நூல் விமர்சனம்

அந்த 37 வருடங்கள்

ஆசிரியர் : பாக்கியம் ராமசாமி

குமுதத்தில் துணை ஆசிரியராக இருந்த திரு.ஜ.ரா.சுந்தரேசன் அவர்கள் அவருடைய இளமைக் காலத்தைப் பற்றி சுவைபட எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். அவருக்கே உரிய நகைச்சுவை பொங்கி வழிகிறது. பல இடங்களில் வாய் விட்டு சிரிக்கிறோம். 

பள்ளியிறுதி முடித்து விட்டு, சென்னை சென்று சொந்தமாக ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்ற அவரது ஆசைக்கு பெரிய அண்ணா முட்டுக்கட்டை போட்டதால் அவருடைய பள்ளியிலேயே ஆசிரியராக பணிபுரியத் தொடங்கிய அனுபவத்தை விவரிப்பதில் தொடங்குகிறது.

அவர் மூன்றாம் வகுப்பு ஆசிரியராக இருந்த பொழுது, ஒரு நாள் டிக்டேஷன் கொடுத்தாராம். லோகநாதன் என்னும் மாணவன், அழகான கையெழுத்தில் ஒரு பக்கம் முழுவதும் 'கண்டு,கண்டு, டிங்கி டிங்கி' என்று மட்டும் எழுதியிருந்தானாம். என்னடா இது பாஷை? என்று கேட்டதற்கு மற்ற பசங்கள், "அவன் இதுதான் சார் எழுதுவான்" என்றார்களாம். இப்படிப்பட்ட பையன் எப்படி இரண்டு வகுப்புகளை பாஸ் பண்ணினான் என்று சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கேட்டதற்கு, "அவன் குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை, அவனாவது சீக்கிரம் படித்துவிட்டு வரட்டுமே" என்றார்களாம்.

சேலத்தில் தங்கியிருந்தபொழுது ஓட்டலில் அளவு சாப்பாடு, அரிசி சோறு பறிமாறும் முன் சோள சாதம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்திய சர்வர் நாகராஜனைப் பற்றி தான் நடத்தி வந்த 'சுந்து நேசன்' பத்திரிகையில், 'சப்ளையர் நாகராஜனின் அட்டூழியம்! சோளச்சோறு சாப்பிட வேண்டுமென்று கட்டாயப் படுத்துகிற கசடா!டேய் நாகராஜா உன் லீலைகளை நிறுத்திக் கொள். இல்லாவிட்டால் நீ உன் மடியில் பீடிக்கட்டு மறைத்து வைத்திருக்கும் ரகசியம் அம்பலமாகிவிடும். கபர்தார்! உஷார்!  என்றெல்லாம் எழுதுவாராம். அதென்ன சுந்து நேசன் என்று தோன்றுகிறதா?

லக்ஷ்மிகாந்தன் நடத்திய இந்து நேசன் என்னும் பத்திரிகை பரபரப்பாக விற்பனை ஆனதால் தான் நடத்திய கையெழுத்துப் பத்திரிகைக்கு 'சுந்து நேசன்' என்று பெயர் கொடுத்திருந்தாராம். லக்ஷ்மிகாந்தன் இறந்தபிறகும் தொடர்ந்து வந்து கொண்டிருந்த அந்த பத்திரிகையில் மாஜி ஆசிரியர் லக்ஷ்மிகாந்தன் என்று இருந்ததால், மாஜி என்பதற்கு என்ன பொருள் என்று தெரியாமலேயே தன்னுடைய சுந்து நேசனிலும் மாஜி ஆசிரியர் சுந்து என்றே குறிப்பிட்டாராம். 

ஊரில் சில ஓட்டல்கள் இருந்ததாம். அத்ற்கெல்லாம் அந்த விலாஸ்,இந்த விலாஸ் என்ற பெயரெல்லாம் கிடையாது. ஓட்டல் அதிபரின் பழக்க வழக்கத்தை அனுசரித்து அழுக்கைய்யர் கடை, சிகரட்டைய்யர் கடை என்றுதான் பெயராம். எந்த ஓட்டலில் அழுக்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு ருசி சிறப்பாக இருக்குமாம்.

சிறு வயதில் அவர் நட்பாக இருந்த கன்னடம் பேசும் ஒரு நெசவாளரின் மகனோடு பழகியதுதான் பின்னாளில் அப்புசாமி கதைகளில் பீமாராவ் பாத்திரத்தை படைக்க உதவியது போலும்.

பிறகு சென்னைக்கு வந்து டாக்டருக்கு படித்துக் கொண்டிருந்த தன் இரண்டாவது அண்ணனோடு தங்கிய வீட்டில் இருந்த சேஷய்யர் என்பவர் கால் அலம்பும் வைபவத்தை விவரித்திரிப்ப்தை படித்துதான் ரசிக்க வேண்டும்.

ஆனால் அந்த வீட்டில் இவர் திண்ணையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கும்பொழுது பேசிக் கொண்டே வரும் பெண்கள்,"எழுத்தாளர் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்" என்று சட்டென்று தங்கள் குரலை தழைத்துக் கொள்வார்களாம்.

அண்ணன் சிபாரிசில் ஒரு ரேடியோ கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த அவரிடம் அவர் முதலாளி "நீதான் பெரிய எழுத்தாளனாச்சே, என் மனைவிக்கு கடிதம் எழுத உதவி செய், சும்மா ஜிலுஜிலுன்னு எழுதணும்" என்று கேட்டாராம். இப்படி பா சம்பவங்கள், நான் ஒன்றிரண்டைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். 

எல்லாம் சரி, 'அந்த 37 வருடங்கள் என்று பெயர்', 37 வருடங்கள் குமுதத்தில் பணி புரிந்ததுதான் எனக்கு எழுத்தாளன் என்ற அந்தஸ்து கிடைத்தது என்றாலும், ஒரு சினிமா விமர்சனத்தில் தாங்க்ஸ் என்று எழுதியிருந்த ஒரு வார்த்தை குமுதம் எடிட்டர் திரு.எஸ்.ஏ.பி. அவர்களை கோர்ட்டுக்கு இழுத்தது என்று ஒரே ஒரு சம்பவத்தைதான் குறிப்பிட்டிருக்கிறாரே தவிர வேறு குமுதம் அனுபவங்கள் இல்லையே என்று தோன்றுகிறது. இருந்தாலும் படித்து,ரசித்து, அனுபவிக்கக்கூடிய புத்தகம்.





 


 


20 comments:

  1. ஒருவேளை குமுதம் அலுவலக அனுபவத்தை எழுதுவதைத் தவிர்த்துவிட்டாரோ?

    ReplyDelete
    Replies
    1. பானுமதி வெ.March 11, 2026 at 8:23 PM

      அப்படி இருந்திருக்காது. ஒருவேளை இதன் தொடர்ச்சி வந்திருக்கும். அல்லது எழுத நினைத்திருக்கலாம். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
    2. பானுமதி.வெ.March 11, 2026 at 8:41 PM

      குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. பற்றி பாக்கியம் ராமசாமி எழுதியிருந்ததை படித்த நினைவு இருக்கிறது.

      Delete
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நூல் விமர்சனம் நன்றாக உள்ளது. எழுத்தாளர் பா. ரா. அவர்களின் எழுத்துக்கள் எப்போதுமே சிரிப்பை வரவழப்பவை. அவர் எழுதிய நூலைப்பற்றிய தங்களது விமர்சனங்களை படித்து ரசித்தேன்.

    /எந்த ஓட்டலில் அழுக்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு ருசி சிறப்பாக இருக்குமாம். /

    அழுக்குகளுக்கென்றே தனி சுவை உண்டு போலும்.!! அதனால்தான் கறை நல்லது என்ற வாசகம் அனைவரையும் கவர்ந்தது.:))

    .கனடா செய்தியாக க்ரௌண்ட்ஹாக் படித்தறிந்தேன். மதுரையில் இறைவன் ப. பட்டுடுத்தி வந்தால் அந்த வருடம் செழுமை . இல்லாவிடில், செழுமை குறையும் என்பார்கள் ஆனால் இறைவன் எப்போதுமே அதே உடையில்தான் வருவார். அதுதான் இறைவன் அருள். இதைப்படிக்கையில் ஏனோ, இந்த நினைவும் வந்தது. தகவலுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. பானுமதி வெ.March 11, 2026 at 8:37 PM

      நன்றி கமலா.
      க்ரௌண்ட்ஹாக் செய்தியோடு வேறு சில கனடா செய்திகளும் இந்தப் பதிவிலேயே பகிரலாம் என்று நினைத்தேன், பிறகு சம்பந்தாசம்பந்தமில்லாமல் இருக்குமே என்று கருதி தனிப்பதிவாக போடலாம் என்று தொடங்கி விட்டேன். கட் பண்ணாமல் வெளியாகி விட்டதை இப்போதுதான் பார்க்கிறேன். உங்கள் கருத்தை அதற்கு எடுத்துக் கொள்கிறேன். ஹிஹி!

      Delete
    2. ஓ.. சரிசரி.. அதையே நீக்கி விட்டீர்களா? ஆனால், என் கருத்தைப் படிக்கும் அனைவரும் "சம்பந்தா சம்பந்தமில்லாமல் இது என்ன கருத்து" என யோசிப்பார்கள். ஹா ஹா ஹா.

      Delete
  3. நல்லதொரு நூல் அறிமுகம். இவரது நூல்கள் முன்பு நிறைய படித்துக் கொண்டிருந்தேன். தற்போதும் படிக்க ஆசை உண்டு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட். ரசிக்கக் கூடிய புத்தகம், விடாதீர்கள்.

      Delete
  4. இவரது இந்த நூல் நான் படித்ததில்லை. கிடைக்கிறதா பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பானுமதி வெ.March 12, 2026 at 8:54 AM

      புஸ்தகாவில் இருக்கிறது

      Delete
  5. மொபைலில் படிக்க சிரமமாக இருக்கிறது. வெள்ளை எழுத்துகள். நாளை சிஸ்டத்தில் படிக்க வேண்டும். சாதாரணமாக உங்கள் பதிவுகள் கொஞ்சம் ஷார்ட்டாக இருக்கும். இது கொஞ்சம் நீளமாக இருக்கிறது போல... நாளை தான் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  6. பெரிய பதிவெல்லாம் இல்லை என்பது கணினியில் பார்க்கும்போது தெரிகிறது.  மொபைலில் அப்படித் தெரிந்தது.  என் பதிவுகளை மொபைலில் படிக்கும் செல்வாண்ணா, கமலா அக்காவின் சிரமமும் தெரிகிறது!

    ReplyDelete
    Replies
    1. பானுமதி வெ.March 12, 2026 at 8:56 AM

      மொபைல் கஷ்டம்தான். I Pad பரவாயில்லை.

      Delete
  7. சுவாரஸ்யமான புத்தகம். கட்டாயம் தேடி எடுத்து விடுகிறேன்!

    ReplyDelete
  8. இந்துநேசன், சுந்துநேசன், மாஜி விவரங்கள் சிரிப்பைத் தந்தன.

    ReplyDelete
  9. பல இடங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. வருகைக்கும், தனித்தனியாக கருத்திட்டதற்கும் நன்றி.

    ReplyDelete
  10. அளவுச் சாப்பாடு என்று சொல்லியிருட்ந்தாலும் சுவாரசியமான சிரிப்பு ரேஷன் இல்லாமல் வரும் என்பது உறுதி. கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். தேடித்தான் பார்ப்போமே!!

    அக்கா இங்கு வர வேண்டிய கமென்ட் அடுத்த பதிவுக்குப் போய்விட்டது...

    கீதா

    ReplyDelete