விநாயகனே வினை தீர்ப்பவவனே
விநாயகர் என்றால் தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாதவர் என்று பொருள்.
அவருக்கு உரிய சிறப்பான நாமங்கள் 16. அதை ஷோடச நாமங்கள் என்பார்கள்.
தமிழ் நாட்டில் எப்படி முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருக்கிறதோ அப்படி விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உண்டு. அவை திருவண்ணாமலை, வி்ருதாச்சலம், திருக்கடையூர், திருநாரையூர், பிள்ளையார்பட்டி, மதுரை ஆலால சுந்தர விநாயகர் என்றும் திருச்சி உச்சிப்பிள்ளையார் என்றும் இரு வேறு கருத்துகள் உண்டு.
மஹாராஷ்டிரத்தில் அஷ்ட விநாயக் என்று பூனாவைச் சுற்றி எட்டு விசேஷமான கோவில்கள் உண்டு.
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை என்றுதான் விநாயகரை வணங்குவோம். ஆனால் அவர் மனித முகத்தோடு நரமுக விநாயகராக சிதம்பரம், திலதர்ப்பணபுரி, திருசெங்காட்டங்குடி போன்ற இடங்களில் காட்சி அளிக்கிறார்.
அதைப் போல நான்கு கரங்கள் மற்றும் ஒரு தும்பிக்கையோடுதான் விநாயகர் காட்சி அளிப்பார் ஆனால் பிள்ளையார்பட்டியில் அவருக்கு இரண்டு கரங்கள் + ஒரு தும்பிக்கை மட்டுமே. இடது கரத்தை இடுப்பில் வைத்து, வலது கரத்தில் ஒரு சிவ லிங்கத்தை ஏந்தியிருப்பார்.
திருவலஞ்சுழியில் வெண்மை நிறத்தில் ஸ்வேத விநாயகராக காட்சி அளிக்கிறார். பாற்கடலை கடைந்தபொழுது வெளிப்பட்ட நுரையால் உருவானதால் வெண்மை நிறத்தவராக இருக்கிறார் என்பது நம்பிக்கை. பத்து அங்குல அளவே இருக்கும் சிறிய திருமேனி. புனுகு சாத்துவார்கள். பச்சை கற்பூரத்தை இத்திருமேனியைத் தொடாமல் அர்ச்சகர் ு தூவுவார். அபிஷேகம் கிடையாது என்பதால் தீண்டாத் திருமேனி என்று அழைக்கப்படுகிறது.
திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் கணபதி அக்கிரஹாரம். பெயரே சொல்கிறதே விநாயகரின் முக்கியத்துவத்தை. இந்த ஊரில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்ப்படுவது வேறு எங்கும் காணப்படாத அதிசயம். இவ்வூரைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களைப்போல மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி, வீட்டில் வைத்து பூஜை செய்ய மாட்டார்கள். கோவிலில்தான் அர்ச்சனை.
எல்லோரும் தங்கள் தங்கள் வீடுகளில் செய்யப்பட்ட அப்பம், வடை, கொழுக்கட்டை போன்றவைகளை கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு நிவேதனம் செய்து, பின்னர் அவை ஒன்றாக கலக்கப்படும். அதாவது எல்லா பாயசங்களும் ஒரு பாத்திரத்திலும், வடைகள் ஒரு பாத்திரத்திலும், கொழுக்கட்டைகள் ஒரு பாத்திரத்திலும் கலக்கப்பட்டு பின்னர் அனைவருக்கும் வினியோகம் செய்யப்படும். அந்த காலத்தில் உறவினர்களுக்குள் நிலவிய பூசல் கூட அன்றுதான் தீர்த்து வைக்கப்படுமாம். பாகப்பிரிவினைகள் கூட அன்று விநாயகர் முன்னிலையில் தீர்த்து வைக்கப்பட்டனவாம்.
கணபதி அக்கிரகாரம், பிள்ளையார்பட்டி, திருவலஞ்சுழி போல் விநாயகர் பெயராலேயே வழங்கப்படும் இன்னொரு ஊர் கணபதீஸ்வரம் என்று அழைக்கப்பட்ட திருசெங்காட்டங்குடி. விநாயகர் கஜமுகாசுரனைக் கொன்ற பொழுது பீரிட்ட ரத்தத்தால் அந்தப் பகுதியில் இருந்த காடே சிவப்பு நிறமாக மாறியதாம் அதனால்தான் செங்காட்டங்குடி என்பது திரு சேர்ந்து திருச்செங்காட்டங்குடி என்னும் பெயர் பெற்றிருக்கிறது. கருத்த விநாயகரின் மேனியில் சிவப்பு நிற ரத்தம் தெளித்து அவர் உடல் கரும் சிவப்பாக மாறியதில் அவர் கபிலர் என்னும் பெயர் பெற்றார்.
கஜமுகாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க விநாயகர் சிவபெருமானை வழிபட்டதால் கணபதீஸ்வரம் என்னும் பெயர் பெற்ற தலம். ராமர் ஈஸ்வரனை வழிபட்ட தலம் ராமேஸ்வரம் ஆனது போல கணபதி ஈஸ்வரனை வழிபட்ட தலம் கணபதீஸ்வரம் என்று இதன் பெயர் காரணத்திற்கு அழகான விளக்கம் அளித்திருக்கிறார் காஞ்சி மாமுனிவர்.
விநாயகரோடு சம்பந்தப்பட்ட இன்னொரு இடம் சென்னைக்கு அருகில் இருக்கும் அச்சிறுபாக்கம். திரிபுரதகனம் செய்ய தேவர்கள் ஒவ்வொருவரையும் தேரின் ஒவ்வொரு பாகமாக கொண்டு சிவபெருமான் புறப்பட்டபொழுது விநாயகரை கவனிக்காமல் செல்கின்றனர். இதனால் மனம் வருந்திய விநாயகர் அந்தத் தேரின் அச்சு முறியும்படி செய்கிறார். அப்படி தேரின் அச்சு முறிந்த இடம்தான் அச்சிறுபாக்கம்.
பஞ்சபூதங்களில் ப்ருத்வி தத்துவத்தை குறிப்பவர். நவகிரகங்களில் கேதுவுக்கு உரிய தெய்வம். செவ்வாய் தரும் பலங்களைத்தான் கேதுவும் தருவார் என்பதாலோ என்னவோ வட இந்தியர்கள் செய்வாய் கிழமையைத்தான் விநாயகர் வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதுகிறார்கள்.
ஓம் கம் கணபதயே நமஹ: என்பதுதான் மஹாகணபதியின் மூல மந்திரம். “உன்னால் முடியலைனா கம்முனு இரு” என்று சாதாரணமாக சொல்வோம். இதில் வரும் கம் என்பது மஹா கணபதியின் மந்திரத்தைதான் குறிக்கிறது. நம்மால் இயலாத காரியங்களை இந்த மந்திரத்தை ஜபிப்பதன் மூலம் சாதிக்கலாம் என்பதைத்தான் இது குறிக்கிறது.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் வரும் சதுர்த்தியும், தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியும் விநாயகர் வழிபாட்டிற்கு உகந்தவை.
ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி மஹா சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதை அடுத்து வரும் சதுர்த்திதான் விநாயக சதுர்த்தி.
விநாயக சதுர்த்தி அன்று விநாயகரை 21 இலைகள்,(அன்று மட்டும் துளசி இலையால் விநாயகரை அர்ச்சிக்கலாம்) 21 பூக்களால் அர்ச்சித்து 21 வகை பழங்கள், பட்சணங்கள் படைத்து வணங்குவது மரபு. ஆனால் அன்பும், கருணையும் கொண்ட விநாயகர் நாம் ஒரே ஒரு இலையோ, ஒரு பூவோ சமர்பித்து, நம்மால் முடிந்ததை சமர்பித்தாலே நமக்கு அருள் புரிவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஓம் கம் கணபதயே நமஹ:
