நழுவ விட்ட மஹாலக்ஷ்மி,
கை கொடுத்த சஹாயாத்ரி
கோலாப்பூர் ஹோட்டலிலிருந்து கிளம்பும் பொழுது என் கணவர் சாதாரணமாகத்தான் இருந்தார். அந்த கொண்டை ஊசி வளைவுகளில் ஏறி இறங்கியது வயிற்றை பிரட்டுவதாக கூறினார். அதோடு பகல் காட்டில் குடித்த சாய், உடனே கீழே காளேஸ்வர் கோவில் வாசலில் குடித்த லஸ்ஸி எல்லாம் வயிற்றுக்கு ஒவ்வாமல் வாமிட்டிங், வயிற்றுப்போக்கு என்று அவஸ்தைப்பட அங்கிருந்த ஸ்டேஷன் இன்சார்ஜிடம் நிலைமையை விளக்கி, என் கணவரை எங்காவது படுக்க வைக்க முடியுமா? என்று கேட்டதற்கு "அதெல்லாம் முடியாது, பிளாட்பாரத்தில் இருக்கும் பெஞ்சுகள் ஏதாவது ஒன்றில் படுக்க வையுங்கள்" என்று கூறி விட்டார். இத்தனைக்கும் நாங்கள் முதல் வகுப்பில் பயணச்சீட்டு எடுத்திருந்தோம். அங்கு முதல் வகுப்பு பிரயாணிகளுக்கு என்று தனி வெயிட்டிங் ரூம் இல்லை. எனவே பொதுவான தங்கும் அறையில்தான் நாங்கள் இருக்க வேண்டியிருந்தது. சற்று நேரம் ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு சற்று தெளிவானார்.
நாங்கள் மும்பை சென்று என் நாத்தனாரின் கணவரை பார்த்து விட்டு அங்கிருந்து மந்த்ராலயம் சென்று விட்டு பெங்களூர் திரும்புவது என்று திட்ட மிட்டிருந்தோம், ஆனால் என் கணவரின் உடல் நிலையை கருதி மும்பையிலிருந்து பெங்களூர் திரும்பி விடலாம் என்று திங்கட்கிழமை பயணம் செய்ய விமானத்தில் டிக்கெட் புக் பண்ணிய என் கணவர் மும்பை, பெங்களூர் ரயில் டிக்கெட்டை கான்சல் செய்தார். அதில் எது தவறாகியது என்று தெரியவில்லை. கோலாப்பூர், மும்பை ரயில் டிக்கெட்டும் கான்சலாகி விட்டது. நேரிடையாக டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் எனறால் மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் இல்லை, வேண்டுமானால் சஹாயாத்ரி எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். அவசர அவசரமாக ரிசர்வேஷன் விண்ணப்பத்தை பூர்த்தி பண்ணி, கார்டோடு நீட்டினால், "கார்ட் என்றால் நீங்கள் முன்பே சொல்லியிருக்க வேண்டும், இப்போது முடியாது கேஷ்தான் வேண்டும்" என்று ஹிந்தியில் பாத் கர்த்தினார் ஒரு வார்த்தை ஆங்கிலம் பேச மாட்டேன் என்று விரதம் எடுத்திருந்த கவுண்டரில் இருந்த டிப்டாப் ஆசாமி. நல்ல வேளையாக கையில் பணம் இருந்ததால் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் வெயிட்டிங் அறையில் தேவுடு காக்கத் தொடங்கினோம்.
நான் மட்டும் இரவு உணவு சாப்பிட காண்டீனுக்குச் சென்ற பொழுது அங்கிருந்த ஒரு தம்பதியினர் தாங்கள் ஏதோ ஒரு பாசன்ஜர் ரயிலுக்காக காத்திருப்பதாக ஹிந்தியில் கூறினார்கள். அப்போது ஹிந்தியில் வந்த அறிவிப்பு ஒன்று பாசன்ஜர் ரயில் ஒன்று ஒன்றாம் எண் பிளாட்ஃபாரத்தில் வரும் என்றது.
சற்று நேரத்தில் ஒரு வண்டி முதலாம் பிளாட்ஃபாரத்தில் வந்து நின்றது. அது கிளம்பி சென்ற பிறகு சஹாயாத்ரி வரும் என்று நினைத்தோம். என் கணவர், "எதற்கும் இங்கே விசாரிக்கலாம், ஒரு வேளை சஹாயாத்ரி இரண்டாவது பிளாட்ஃபாரத்தில் வந்தால் மாடிப்படி ஏறி இறங்க வேண்டும், போர்ட்டரும் இல்லை, நாம்தான் லக்கேஜை தூக்கி க்கொண்டு செல்ல வேண்டும்." என்றார். எனவே அங்கிருந்த ரயில்வே ஊழியர் ஒருவரிடம்,"சஹாயாத்ரி எந்த பிளாட்ஃபாரத்தில் வரும்?" என்றதும், "இதோ நிற்கிறதே, இதுதான் சஹாயாத்ரி" என்றதும் தூக்கி வாரி போட்டது. நல்லவேளையாக வெயிட்டிங் ரூமிற்கு எதிராகவே செகண்ட் ஏ.சி. கோச் நின்றது. ஏறி உட்கார்ந்து ஒரு பெரிய பெருமூச்சு விட்டோம்.
ரயிலில் இருந்த போர்டில் ஹிந்தியில் மட்டுமே பெயர் எழுதப்பட்டிருந்தது. அறிவிப்புகளும் ஹிந்தியில் மட்டுமே செய்தார்கள். ஹிந்தி தெரியாதவர்களுக்கு கஷ்டம்தான். நம் ஊர் தொலைகாட்சிகளில் ஹிந்தியை எதிர்ப்போம் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று முழங்குகிறார்கள். வாழ்க!
.
















































