கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, October 21, 2016

குங்கும பொட்டின் மங்கலம்!

குங்கும பொட்டின் மங்கலம்!


ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கும் கணவரை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்த பிரபா குளித்து விட்டு, உடை அணிந்து கொண்டு, கண்ணாடியை பார்த்து ஸ்டிக்கர் பொட்டை வைத்துக் கொண்டாள்.
"இப்போ வெச்சுக்கறேன், இன்னும் எத்தனை மணி நேரம் இது என் நெற்றியில் இருக்குமோ"? என்று தோன்றியது.

பிரிட்ஜை திறந்து இட்லி மாவை எடுத்து வெளியே வைத்தாள். ஸ்வாமி விளக்கேற்றி நமஸ்கரித்து எழுந்த பொழுது வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

மகள்தான்... " ஆட்டோவுக்கு சில்லறை கொடுத்து விட்டு, கையில் குழந்தையோடு உள்ளே நுழைந்தவள் பரபரப்பாக," என்னமா ஆச்சு அப்பாவுக்கு? இப்போ எப்படி இருக்கா"?

"பயப்படும்படியா ஒண்ணும் இல்ல.."

"அப்படீன்னா ஏன் ஹாஸ்ப்பிட்டலில் அட்மிட் பண்ணனும்"?

"விழுந்த அதிர்ச்சியில் பி.பி. கொஞ்சம் ஷூட் அப் ஆயிடுத்து.. அதனால்தான் அப்செர்வேஷனில் இருக்கட்டும்னு அங்க வெச்சுருக்கா."

"எப்படி நடந்தது இது? அப்பா ரொம்ப ஜாக்கிரதை ஆச்சே.."?

"ஜாக்ரதைதான்.. இன்னிக்கு என்னவோ டைம் சரியில்ல.. தெரு முனை திரும்பும் பொழுது அப்பா கவனிக்கலையா? அல்லது எதிர்த்தார்போல் வந்தவன் ஓவர் ஸ்பீடா தெரியலை, மோதிட்டான். நல்லவேளை அப்பா ஹெல்மெட் போட்டிருந்ததால் தலையில் அடி படவில்லை.
விழுந்த வேகத்தில் மயக்கம் போட்டு விட்டார். பக்கத்தில் இருக்கும் ஆட்டோமொபைல் ஷாப்காரர் ஓடி வந்து எனக்கு தகவல் சொன்னார். அப்புறம் ஹாஸ்பிடல் கூட்டிண்டு போனேன்..."

"அவர்தான் எனக்கும் அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆய்ருச்சுனு மெசேஜ் அனுப்பினார். எனக்கு ஒண்ணுமே புரியலை. உனக்கு போன் பண்ணினா ஆஸ் யூசுவல் நீ போன் எடுக்கல... எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல.. எந்த ஹாஸ்பிடல்னும் தெரியல.. ராகவ் வேற ஊருல இல்ல, சரி முதலில் வீட்டுக்கு வந்து பார்க்கலாம்னு வந்தேன்.... அப்பாடா"! சோஃபாவில் சரிந்து உட்கார்ந்தவள், குழந்தையை கீழே இறக்கி விட்டாள். 

அவள் கையிலிருந்து இறங்கிய குழந்தை, தளிர் நடை போட்டு வந்து பிரபாவின் காலை கட்டிக்கொண்டது. பிரபா குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டதும், அவள் முகத்தை உற்றுப் பார்த்த குழந்தை, அவளுடைய ஸ்டிக்கர் பொட்டை பிய்க்க முயற்சி செய்ய ஆரம்பித்தது.

" டேய்! பொட்டை ஏண்டா எடுக்கற"? மகள் தன் மகனை விரட்டினாள்
 
"விடுடி, குழந்தைனா அப்படித்தான் செய்யும். பொட்டு வெச்சுக்கும் போதே நான் நினைத்தேன், இப்போ வெச்சுக்கறோம், இந்த குட்டிப் பயல் வரும் வரைதான் அது இருக்கும்னு.. பிரபா பேரனுக்கு பரிந்து பேசினாள்.

"சரி,ஜாக்ரதைமா, அவன் கைல ஸ்டிக்கர் போட்டு ஒட்டிண்டு இருக்கு, வாயில் போட்டுக் கொண்டு விடப் போகிறான்..".! 

Saturday, October 15, 2016

இன்னும் கொஞ்ச நாள்...

இன்னும் கொஞ்ச நாள்...


"அப்பா.. ரொம்ப டையர்டா இருக்கு.. எப்போதான் இந்த பரீட்சை, படிப்பு எல்லாத்தையும் முடிப்போம்னு இருக்கு..." ராதிகா படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு அப்படியே சுருண்டு படுத்துக்க கொண்டாள்.

"ஆச்சு, இன்னும் கொஞ்சம்தான், படிச்சு முடிச்சு ஒரு நல்ல வேலையில் உட்கார்ந்து கொண்டு விட்டால் அப்புறம் நிம்மதியா இருக்கலாம்".. பக்கத்தில் வந்து உட்கார்ந்த அம்மா அவள் முதுகில் தட்டி அவளை எழுப்பி உட்கார வைத்தாள். 

"போம்மா நீ ஈஸியா சொல்லற, இது செகண்ட் இயர்தான், இன்னும் ஒரு வருஷம் படிக்கனும்.."
"ஒரே ஒரு வருஷம்தான்..ஓடிப்போய் விடும்...சூடா கொஞ்சம் டீ போட்டு தரட்டுமா"?
"நாங்களெல்லாம் படிக்கலை. எல்லாத்துக்கும் மற்றவர்கள் கையை எதிர்பார்த்து இருக்க வேண்டி இருக்கு, நீங்கள் அப்படி இருக்கக் கூடாது. சொந்தக் காலில் நிற்க வேண்டும்..."

அம்மாவின் தாரக மந்திரம் இது. "கொஞ்ச நாள் கஷ்டப்படு.. அப்புறம் சொளக்கியமா இருக்கலாம்". அவளும் அம்மாவின் சொல்படி கஷ்டப்பட்டு படித்தாள். படித்து முடித்த கையோடு வங்கி தேர்வில் தேறி வேலையிலும் சேர்ந்து விட்டாள். 

அப்பாடா! என்று இருக்க முடியவில்லை. "சி.ஏ.ஐ.ஐ.பி. எழுதுங்க மேடம், இன்க்ரீமெண்ட் கிடைக்கும், சீக்கிரம் ப்ரோமோஷன் வாங்கி செட்டில் ஆகிடலாம். கொஞ்சம் கஷ்டப்படுங்க,சின்ன வயசுதானே.."

அகௌண்ட்டெண்ட் அறிவுறுத்தினார். அது முடிப்பது அத்தனை சுலபமாக இல்லை. ஒரு முறைக்கு மூன்று முறை எழுத வேண்டி இருந்தது. அம்மா சொன்னபடி ரெஸ்ட் எடுக்க முடியவில்லை. 

இதற்கு இடையில் திருமணம் ஆகியது. முதல் இரவில் அவள் கணவன், "வேலையைத் தொடர்வதில் அவள் எண்ணம் என்ன"? என்று கேட்டான். "குழந்தை பிறக்கும் வரை வேலைக்குச் செல்வேன், அதன் பிறகு வேலையை விட்டு விடுவேன்" என்றாள். சிறிது நேரம் மௌனமாக இருந்தவன், அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டு, " எங்கள் வீட்டில் நான்தான் மூத்தப் பிள்ளை. ஒரு தங்கைக்கு கல்யாணம் செய்ய வேண்டும், தம்பி இப்போதுதான் பள்ளியில் படிக்கிறான், நீ கொஞ்ச நாள் வேலைக்குப் போனால் சௌகரியமாக இருக்கும். கொஞ்சம் கஷ்டம்தான்.. "

அவள் கொஞ்சம் கஷ்டப் பட தயாரானாள். நாத்தனாரின் திருமணம், மைத்துனனின் மேல் படிப்பு எல்லாவற்றுக்கும் அவளின் சம்பளமும் உத்தியோகமும் பெரிதும் உதவின.  
இதற்கிடையில் பிறந்த இரண்டு குழந்தைகளையும் அம்மாவிடம் கொஞ்சம், மாமியாரிடம் கொஞ்சம், வேலைக்காரியிடம் கொஞ்சம் என்று எப்படியோ வளர்த்தாள். 

மகனுக்கு பன்னிரெண்டு வயது, மகளுக்கு ஒன்பது வயது ஆன பொழுது வேலையை விட்டு விடலாம் என்று தோன்றியது. வீட்டில் நிம்மதியாக இருந்து கொண்டு நிதானமாக எழுந்து, சமைத்து, டி.வி. பார்த்து, குழந்தைகளை திட்டாமல் பாடம் சொல்லிக் கொடுத்து, சின்ன வயதில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்ட சங்கீதத்தையும் கற்றுக் கொள்ளலாமே..
அப்போதுதான் அவள் கணவன் ஒரு நாள் மாலை அவளையும், குழந்தைகளையும் "இன்னிக்கு வெளியே போகலாம்" என்று அழைத்துச் சென்றான். அண்ணா நகரின் விரிவாக்கமான அங்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் முளைத்துக் கொண்டிருந்தன. அதில் ஒரு வீட்டை காண்பித்து, "உனக்கு பிடித்திருக்கிறதா"? என்றான். 

ராதிகாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ""வீடு பிடித்ததுதான் இருக்கு, ஆனால் ஏன்?  வீடு மாத்தப் போறோமா என்ன? 
"வீடு வாங்கப் போறோம்.."
"வாட்"?
"எஸ்."!
"இது என் பிரெண்டோட மாமனார் வீடு. அவர் வீட்டை வித்துட்டு பணத்தை பாங்கில் போட்டுக் கொண்டு வரும் வட்டியில் சொச்ச காலத்தை ஓட்டலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம், எங்கிட்ட கேட்டான், அண்ணா நகரில் தனி வீடு.. ! லட்டு மாதிரி ஒரு ஆப்பர்சூனிட்டி, என்ன சொல்ற"?
"பணம்.."?
"நீ லோன் போடு, பேங்க் எம்பிளாயி, இன்ட்ரெஸ்ட் கம்மியா இருக்கும்". 

இரவு ஒரு மணி வரை இருவரும் வீடு வாங்கப் போவதால் வரும் சாதக,பாதகங்களை ஆராய்ந்தார்கள்.. சமாளித்து விட முடியும் என்று தோன்றியதும் நிம்மதியாக உறங்கினார்கள்.
புது வீட்டில் கிரகப் பிரவேசம் செய்த பொழுது சந்தோஷமாக இருந்தது. வந்தவர்கள் எல்லோரும் பாராட்டி, இப்படி ஒரு வீடு அமைந்தது அதிர்ஷடம்தான் என்று கூறியதை கேட்ட பொழுது, இந்த சந்தோஷத்துக்காக இன்னும் கொஞ்ச நாள் வேலை பார்க்கலாம் என்று தோன்றியது. 

வருடம் செல்லச் செல்ல, உத்யோக உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் அவர்கள் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தின. அவ்வப்பொழுது சுற்றுலாக்கள் சென்றார்கள். மகனையும், மகளையும் அவர்கள் ஆசைப்பட்ட கல்லூரியில் மேனேஜ்மேண்ட் கோட்டாவில் சேர்க்க முடிந்தது. அப்போதெல்லாம் ராதிகாவுக்கு வேலையை விட வேண்டும் என்று தோன்றவே இல்லை. இத்தனை நாட்கள் உழைத்து விட்டோம், இன்னும் கொஞ்ச நாள்தானே.. என்று தேற்றிக்கொண்டாள்.

மகனுக்கு கேம்பஸ் இன்டெர்வியூவில் முன்னணி ஐ.டி. கம்பெனியில் வேலை கிடைத்தது.அவனுடைய ஆபர் லேட்டரைப் பார்த்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. நாம் எந்த வயதில் சம்பாதித்ததை இவர்கள் எடுத்த எடுப்பில் ஈட்டுகிறார்கள் என்று பிரமிப்பாக இருந்தது. 
மகன்தான் வேலைக்கு வந்து விட்டானே, "நீ ஏம்மா இன்னும் கஷ்டப் படற, வேலையை விட்டு விடு. நான்தான் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டேனே" என்று சொல்லுவான் என்று எதிர்பார்த்தாள். அவனோ, இரவு சாப்பிடும் பொழுது, அப்பாவிடம்," நான் வீட்டு செலவுக்கு எவ்வளவுப்பா கொடுக்கணும்? ஏன்னா, இங்க ரெண்டு வருஷம் ஒர்க் பண்ணிட்டு, எம்.எஸ். படிக்க அமெரிக்கா போகணும், அதுக்கு ஐ ஹவ் டு சேவ்.." என்றான்.

அதன்படியே இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவன் அமெரிக்கா செல்வதற்கும், மகள் வேலைக்கு வருவதற்கும் சரியாக இருந்தது. 

"போறும்மா நீ வேலை பார்த்தது, நாங்கதான் செட்டில் ஆகிவிட்டோமே, நீ வேலையை விட்டு விடு"  என்றாள் மகள்.

"உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிட்டு வேலையை விடுகிறேன். இன்னும் கொஞ்ச நாள்தானே.."
சொன்னதோடு நிற்காமல் முனைந்து வரன் தேடினார்கள். மகன் அமெரிக்காவில் வசிப்பதால் மகளுக்கும் அங்கேயே மாப்பிளை கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று அமெரிக்கா வரங்களுக்கே முன்னுரிமை அளித்தார்கள். அதே போல கிடைத்தது. திருமணம் முடிந்து அமெரிக்கா செல்ல விமானம் ஏறும் முன், நீயும் அப்பாவும் பாஸ்போர்ட் ரெடி பண்ணிக்கோங்கோ என்று சொல்லி விட்டுதான் சென்றாள். மகள் கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்ததும் ராதிகா தன் வேலையை ராஜினாமா செய்தாள்.

மகளின் பிரசவத்திற்கு உதவ கிளம்பிக் கொண்டிருந்த பொழுது அவளின் சிநேகிதி ஒருத்தி தொலைபேசியில் அழைத்து, "பான் வாயேஜ்"! என்று வாழ்த்தி விட்டு, "இனிமேல் நீ ராதிகா ஐ.ஏ.எஸ்.தான்." என்றாள் 

"ஐ.ஏ.எஸ்.சா .."??

"ஆமாம், இந்தியன் ஆயா சர்வீஸ்..."என்று கூறி விட்டு, சிரித்தாள்.

"இது வயிற்று எரிச்சல், இவளுடைய குழந்தைகள் அமெரிக்காவில் இருந்து கொண்டு அழைத்தால் இவள் போகாமல் இருந்து விடுவாளா? ஜஸ்ட் இக்னோர்" என்றார் அவள் கணவர்.
மகனுக்கும் திருமணம் ஆனது. அவன் வேலை பார்த்த நிறுவனம் அவனை சிங்கப்பூருக்கு மாற்றியது. இப்போது கிழக்கில் ஒருவர், மேற்கில் ஒருவர் என்றாகி விட்டது. 

"அமெரிக்கா என்றால்தான் செல்வீர்களா? சிங்கப்பூர் என்றல் வர மாட்டிர்களா"?  எமோஷனல் ப்ளாக் மெயில் செய்தான் மகன். 

சிங்கப்பூர் விமானத்தில் ஏறுவதற்க்காக  விமான நிலையத்தில் காத்திருந்த பொழுது, "அங்கேயும் இங்கேயும் அலைவது அலுப்பாக இருக்கு, எப்போ நம்ம வீட்டில் அக்கடான்னு இருப்போன்னு இருக்கு.".கணவரிடம் குறைபட்டுக் கொள்ள,

"நம்மளால முடியற வரை செய்யப்போறோம், அப்புறம் வீட்டில் இருக்க வேண்டியதுதானே.. இன்னும் கொஞ்ச நாள்".

Thursday, September 29, 2016

கடைசி ஆசை!!

கடைசி ஆசை!!


"நான் வந்து பதினைந்து நாட்கள் ஆகி விட்டது... இன்னும் எவ்வளவு நாள் லீவு போட முடியும்"?

"எனக்கும் அதுதாண்டா. ஜானுவோட மாமியாருக்கு அடுத்த வாரம் ஒரு கல்யாணம் அட்டென்ட் பண்ண மதுரை போணுமாம். இல்லாட்டிலும் மாமிக்கு குழந்தையை பார்த்துக்கறது கொஞ்சம் கஷ்டம்தான். இவ கொஞ்சம் ஒர்க் பிரம் ஹோம் போட்டுண்டு சமாளிக்கறா.  விக்கி எம்.பி.ஏ. எண்ட்ரன்ஸ்க்கு ப்ரிபேர் பன்றான். தனியா வீட்டை மேனேஜ் கஷ்டமா இருக்குங்கறான். இவருக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்காது. எவ்ளோ நாள் இப்படியே ஓடும்னு தெரியலையே..". 

அத்தையும் சித்தப்பாவும் பேசிக் கொண்டிருந்தது அசோக் காதில் விழுந்தது. மரணப் படுக்கையில் இருக்கும் தாத்தாவை பார்க்க வந்திருந்த அவருடைய பெண்ணும் பையனும் தங்கள் இயலாமையை குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பேசுவதால் அவர்களுக்கு தங்கள் அப்பா மீது பாசம் குறைவு என்று சொல்லி விட முடியாது. அந்தக் கால தமிழ் சினிமா கதா நாயகன் போல கடமையா? பாசமா? என்ற ஊசலாட்டத்தின் விளைவு. 

எண்பத்தொன்பது வயதிலும் திடமாக தன் வேலைகளை தானே கவனித்துக் கொண்டிருந்த தாத்தா திடீரென்று படுத்த படுக்கையாகி விடுவார் என்று யார் எதிர் பார்த்திருக்க முடியும்? ஒரு வைரல் பீவர் அவரை வீழ்த்தி விட்டது. அவ்வப்பொழுது கண் திறந்து பார்க்கிறார், ஆனால் யாரையும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. " ஹி இஸ் சிங்கிங், யாருக்கெல்லாம் சொல்ல வேண்டுமோ சொல்லி விடுங்கள்" என்று டாக்டர் கூறியதன் பெயரில் அப்பா தன் தம்பிக்கும் தங்கைக்கும் செய்தி அனுப்பினார். அதைப் பார்த்து விட்டு அப்பா கிளம்பி விடுவார் என்று நினைத்துக் கொண்டு வந்தவர்களுக்கு அப்பா இன்னும் இழுத்துக் கொண்டே போவது அலுப்பைத் தர ஆரம்பித்து விட்டது.   

தாத்தாவை பார்க்க வந்த உறவினர்கள் சிலர் அவருக்கு பிடித்த உணவு வகைகளை வாங்கிக் கொண்டு வந்தனர். "ஏதாவது நிறைவேறாத ஆசை இருந்தால் இப்படித்தான் இழுத்து பறித்துக் கொண்டு நிற்கும். அதனால் அவருக்கு இஷ்டமான பதார்த்தங்களை கொடுத்து விடுங்கள்" என்றார்கள். தாத்தா எங்கே அதை எல்லாம் சாப்பிட்டார்? "ஏதோ வாயில் கொஞ்சம் அந்த ருசி தெரிந்தால் போதும்" என்றார்கள். 

அசோக் உள்ளே சென்று படுத்துக் கொண்டிருக்கும் தாத்தாவைப்  பார்த்தான். வயது வேண்டுமானால் எண்பத்தொன்பது இருக்கலாம், மனதால் அவர் இருபத்தொன்பது வயது இளைஞர்தான். தாத்தா இருக்குமிடம் எப்போதுமே கலகலப்பாக இருக்கும். இந்த வயதிலும் புத்தகங்கள் படித்து, தொலைக்காட்சியில் நியூஸ் சேனல் பார்த்து எல்லா செய்திகளையும் விரல் நுனியில் வைத்திருப்பார். ஏ.ஆர்.ரஹ்மானையும்,கௌதம் வாசுதேவ் மேனனையும் ரசிப்பார். ஸ்ரீதருக்குப் பிறகு கௌதம் மேனன் தான் காதல் ஸ்பெஷலிஸ்ட் என்பார். விண்ணைத் தாண்டி வருவாயா பார்த்த பிறகு த்ரிஷாவின் ரசிகனாகி விட்டார். கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி அடைந்தால் தாத்தாவின் சந்தோஷம் அளவிட முடியாது. தினமும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பார்.

அசோக் வேலைக்கு சேர்ந்த புதிதில் அவருக்கு ஒரு செல் போன் வாங்கி கொடுத்தான். தினமும் அவனோடு பேசி விடுவார். பேசாத நாட்களில் அசோக்கின் மனைவி திவ்யா கூட, "என்ன இன்னிக்கு உன் பிரெண்டோட பேசலையா"? என்று கிண்டலாக கேட்பாள். 

சென்ற முறை ஊருக்கு வந்திருந்த பொழுது, "உங்க அப்பா தன்னோட போனிலேயே உன் குழந்தையின் போட்டோக்களை நீ அனுப்பினதாக காட்டுகிறான், அது எப்படி? போனில் போட்டோ கூட அனுப்ப முடியுமா"? என்று கேட்டார்.

"அதுக்கு வாட்சாப் னு பேரு,அதில் போட்டோ அனுப்ப முடியும்" 

"அப்போ ஏன் என் போனில் வருவதில்லை"?

"நீ வைத்துக் கொண்டிருப்பது ஓல்ட் மாடல்," என்று கூறி விட்டு அவருக்கு புதிதாக ஒரு போன் வாங்கி கொடுத்து, அதில் எப்படி புகைப் படம் எடுப்பது, எடுத்த படத்தை எப்படி மற்றவர்களுக்கு அனுப்புவது என்று எல்லாம் சொல்லிக் கொடுத்து விட்டு, அவரோடு ஒரு செல்ப்பி எடுத்து அதையே ப்ரொபைல் படமாக வைத்து அவரை வாட்சாப்பிலும் சேர்த்து விட்டான்.

அவனுடைய அப்பாவுக்கு கூட அதில் அவ்வளவு விருப்பம் இல்லை. "அவருக்கு போய் எதுக்கு டச் போன்? அதை எல்லாம் ஆபரேட் பண்ணாத தெரிய வேண்டாமா"? 

தாத்தா நன்றாகவே ஆபரேட் செய்தார். ஆட்டோ ஸ்பெல் அதிக பிரசங்கியையும் நன்றாகவே சமாளித்தார். தினமும் ஒரு செல்பி எடுத்து குடும்ப குழுமத்தில் போட்டு விடுவார். ஒரு முறை உடம்பு சரி இல்லாமல் ஆஸ்பத்திரிக்குச் சென்ற போது கூட அங்கும் ஒரு செல்பி  எடுத்து போட்டிருந்தார்.

வெளியே யாரோ ஒரு உறவினர் சொல்லிக் கொண்டிருந்தார். உங்க அப்பாக்கு இந்த வீட்டு மேலே ரொம்ப பாசம். அவர் சுய சம்பாத்தியத்துல வாங்கின முதல் வீடு, நல்ல மெயின்டைன் பண்ணுவார். நிறைய செலவு செய்திருக்கிறார். இந்த வீட்டை விட்டு அவர் வெளியில் போனது அபூர்வம். ஒரு வேளை வீட்டு பாசம்தான் அவரை போக விடாமல் செய்கிறதோ என்னவோ? இந்த வீட்டு மண் எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்து அவர் வாயில் விடுங்கள்..ஒரு வேளை அதன் பிறகு உயிர் பிரிந்தாலும் பிரியலாம்..."

இந்த பேச்சு காதில் விழுந்ததும் அசோக்கிற்கு சட்டென்று பொறி தட்டியது. தாத்தாவை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான். "தாத்தா, இங்க பாரு நம்ம ரெண்டு பேரும் ஒரு செல்பி எடுத்துக்கலாம்.." அவரோடு நெருங்கி உட்கார்ந்து ஒரு செல்பி எடுத்தான், அதை அவரிடம் காட்டினான். அதைப் பார்த்ததும் தாத்தாவின் முகம் மலர்ந்தது. தன் கடைசி ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில் புன்னகைத்தப்படியே கண்களை மூடினார். 

Wednesday, September 21, 2016

ஐ.ஆர்.சி.டி.சி. குழப்பங்கள்.

ஐ.ஆர்.சி.டி.சி. குழப்பங்கள்.

சமீபத்தில் கேரளாவில் வசிக்கும் என் நாத்தனாரின் கணவர் திடீரென்று காலமாகிவிட, நாங்கள் கேரளா செல்ல வேண்டிய நிர்பந்தம். ஓணம் சமயமாதலால் எந்த ரயிலிலும் டிக்கெட் கிடைக்கவில்லை. எனவே கோயம்புத்தூர் வரை  சதாப்தியில் சென்று, அங்கிருந்து இரண்டு பேருந்துகள் மாறி பெரும்பாவூர் சென்றோம். திரும்பி வரும்பொழுது தன்பாத் எக்ஸ்பிரஸில் செகண்ட் ஏ.சி.யில் டிக்கெட் கிடைத்தது. பயண நேரம் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், உட்கார்ந்து கொண்டே வரவேண்டாம், படுத்துக்க கொள்ள முடியும் என்பதால் என் கணவர் அந்த ரயிலில் புக் பண்ணினார். 

திருச்சூரில் அந்த ரயில் வந்து கொண்டிருக்கிறது என்னும் அறிவிப்பு செய்த பொழுது திருவனந்தபுரத்திலிருந்து கோயம்புத்தூர், சென்னை வழியாக என்று அறிவிக்கவில்லை. இது முதல் குழப்பம். அந்த ரயிலில் திருவனந்தபுரம் டு டாட்டா நகர் என்றிருந்தது. தன்பாத் என்னும் பெயரே இல்லை. நாம் ஏற வேண்டிய ரயில் இதுதானா என்று குழப்பம், உடன் ஏறியவர்களிடம் இது தன்பாத் எக்ஸ்பிரெஸ்தானே என்று கேட்டுக் கொண்டு ஏறினோம். 
தன்பாத் எக்ஸ்பிரஸ் என்னும் பெயரை டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றி கொஞ்ச நாள் ஆகி விட்டதாம். ஆனால், irctc வெப் சைட்டில் தன்பாத் என்றுதான் இருக்கிறது.

கோவையில் திருவள்ளூர் செல்ல வேண்டிய ஒரு குடும்பத்தினர் ஏறினார்கள். சேலம் வந்ததும் அந்த குடும்பத்த தலைவர் டி.டி.ஈ யிடம் இந்த வண்டி சென்னை செல்லுமா என்று கேட்டார். அதற்கு, டி.டி.ஈ., "இல்லை போகாது, சென்னை செல்பவர்கள் எல்லோரும் பெரம்பூரில் இறங்கி லோக்கல் ட்ரெயின் யில் செல்ல வேண்டும்" என்றார். நல்ல வேளை இப்போதாவது தெரிந்ததே என்று நினைத்துக் கொண்டோம்.  ஆன் லைனில் புக் செய்தவர்களுக்கு மெசேஜ் வந்திருக்கும் என்றார். (அதை யார் பார்க்கிறார்கள்?). அவர் சொன்ன பிறகுதான் மெசேஜ் செக் செய்தார் என் கணவர். வந்திருந்தது. டி.டி.ஈ. நம் டிக்கெட்டை செக் பண்ணும் பொழுது இந்த தகவலை தெரிவித்திருக்கலாமே..!

நாங்கள் பெரம்பூரில் இறங்கும் பொழுது ஒரு பெண்மணி இது எந்த ஸ்டேஷன்? என்று கேட்டார். பெரம்பூர் என்று கூறி விட்டு, என் கணவரின் ஆலோசனைப்படி அவர் எங்கு செல்கிறார் என்று கேட்க, அந்த பெண்மணி,"சென்னை, சென்னை சென்ட்ரல்.." என்றார். "சென்னை சென்ட்ரலுக்குச் செல்லாது, இங்கேயே இறங்கி விடுங்கள்." என்றதும், அட கடவுளே, இது எனக்குத் தெரியாது, ரொம்ப தாங்ஸ்ங்க" என்றபடி இறங்க ஆயத்தமானார். வேறு யாராவது தெரியாமல் விஜயவாடா போயிருப்பார்களோ என்று கவலையாக இருந்தது.

கீழே இறங்கினால் திருவனந்தபுரத்திலிருந்து டாடா நகர் செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் செல்லாது. சென்ட்ரலில் இறங்க வேண்டிய பயணிகள் இங்கே இறங்கவும் என்று ஒலி பெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த அறிவிப்பு ஏ.சி. கோச்சில் கேட்காது.

 இரவு நேரத்தில் ஏ.சி. கோச்சில் பயணிக்கும் பொழுது எந்த ஸ்டேஷன் வந்திருக்கிறது என்பது அங்கிருக்கும் ஜன்னல் கண்ணாடி வழியே தெளிவாகத் தெரியாது. சென்னையிலிருந்து திருச்சிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸில் செல்லும் பொழுது, இப்படி எந்த ஸ்டேஷன் என்று தெரியாமல் அவஸ்தை படுவோம். டெக்னாலஜி எத்தனையோ வளர்ந்திருக்கிறது எந்த ஸ்டேஷன் வந்திருக்கிறது என்பதை டிஜிட்டல் டிஸ்பிலே செய்ய ஏற்பாடு செய்யலாம், அல்லது, அறிவிக்கலாம். 
 

Sunday, September 11, 2016

வானப்ரஸ்தம்(சிறுகதை- தொடர்ச்சி)

                  வானப்ரஸ்தம்(சிறுகதை- தொடர்ச்சி) 

சங்கருக்கு கோபமாக வந்தது. என்ன பொறுப்பற்ற செயல்? தாமோதரன் எக்ஸ் சர்வீஸ் மேன். அவரே இப்படி நடந்து கொண்டால் என்ன செய்வது?

இந்த ஹோம் இருப்பதோ ஹைவேயில், ஏதாவது விபத்தில் மாட்டிக் கொண்டால் யார் பதில் சொல்வது?

நல்ல வேளை அவரை ரொம்பவும் தவிக்க விடாமல் தாமோதரன் வந்து விட்டார். 

"எங்கே சார் போய்ட்டிங்க? சொல்லம கொள்ளாம.."? 

"சும்மா கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம்னு.."  

நல்லாப் போனீங்க? இனிமே எங்கேயாவது போறதுனா சொல்லிட்டு போங்க சார் 

இது என்ன பாய்ஸ் ஹாஸ்டலா? நாங்க வார்டன் கிட்ட பெர்மிஷன் வாங்கி கொண்டு போக?

"தப்பா புரிஞ்சுக்காதீங்க, இங்க இருக்கறவங்க எல்லோரும் சீனியர் சிட்டிசன்ஸ், வெளில போகும் போது மயக்கம்போட்டு விழுந்துவிடுகிறர்கள், அல்லது.."  

"எனக்கு அப்படி எல்லாம் எதுவும் ஆகாது. ஐ ஆம் பெர்பெக்ட்ல்லி  ஆல்ரைட்..

"ஒத்துக்கறேன், பட், இங்க ஒரு பார்மாலிட்டி இருக்கு, அதை அனுசரிக்கனும்" 

"ஓகே ஓகே, ஐ அண்டர்ஸ்டாண்ட்"

சற்று கோபமாக தாமோதரன் அந்த இடத்தை விட்டுச் சென்றார். 

சங்கர் ஐந்தாம் நம்பர் விஸ்வநாதனை பார்க்கச் சென்றார். டி.வி.பார்த்துக் கொண்டிருந்த விஸ்வநாதன்,இவரைக் கண்டதும் டி.வி.யை நிறுத்தினார்.

சற்று நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்து விட்டு, என்ன ரெண்டு நாளா சரியா சாப்பிடலையாமே? ஏன்?

ஏய்! அதெல்லாம் ஒண்ணுமில்லை.எங்கோ பார்த்தபடி பதில் சொன்னார். 

இல்ல, சாந்தி சொன்னாள் நீங்க ரெண்டு நாளா காய், கீரை இரண்டையும் தொடவே இல்லையென்று..

இன்னிக்கு என் வைஃப் திதி.. எனக்கு கீரை பிடிக்காது என்று கீரை மசியல் செய்யும் பொழுதெல்லாம் எனக்கு வேறு காய் செய்வாள், சில சமயம் அப்பளத்தை பொரித்து போடுவாள். அப்போதெல்லாம் வேண்டுமென்றே கீரை மசியலை போடச் சொல்லி அதை வழித்து எறிவேன். பாகற்காய் கறியும் அப்படித்தான். நேற்றும் இன்றும் எனக்கு அந்த நினைவுகள் வந்தன. பேசிக்கொண்டே வந்தவருக்கு தொண்டை அடைத்து, கண்களில் நீர் பெருகியது...

வருத்தப் படாதீங்க, என்று அவர் தோளில் காய் வைத்து ஆதரவாய் தடக் கொடுத்தபடியே இப்போ ஏதாவது வாங்கிக் கொண்டு வரச்  சொல்லட்டுமா?  

வேண்டாம் வேண்டாம். செஞ்ச பாவத்தை சொல்லி தீர்த்துக்கலாம் என்று உங்க கிட்ட சொன்னேன். 

அதெல்லாம் ஒண்ணுமில்லை, ஏதோ, சின்ன வயசு, ரத்தத் திமிரு, என்ன செய்யறோம்னு தெரியாம ஏதாவது செஞ்சுடறோம் , அவ்வளவுதான், உங்க பையன் எப்போ வரார்?

அடுத்த மாசம். என்னை அமெரிக்காவுக்கு கூப்படறான். தனியா போய் என்ன பண்ண போறேன்?

நோ,நோ, கண்டிப்பா போயிட்டு வாங்க.. ஒரு தடவ நிச்சயம் பார்க்கலாம்..

சினிமா ரெவியூ மாதிரி சொல்றீங்க..

அவசியம் போய்ட்டு வாங்கனு சொன்னேன்.. சரி, நான் கிளம்பறேன், நாளைக்கு உருளைக் கிழங்கு கறி பண்ணிடலாமா? 

விஸ்வநாதன் சிரித்துக் கொண்டே வழி அனுப்ப, சங்கர் அங்கிருந்து கிளம்பினார்.

அன்றைய விசாரிப்புகளும், வேலைகளும் முடிந்து விட்டன என்று தோன்றியது. சாப்பிட்டு விட்டு படுத்தவர் நன்றக உறங்கியிருக்க வேண்டும். யாரோ கதவை பலமாக இடிக்கும் சத்தம் கேட்டு முழித்துக் கொண்டார். 

வெளியே கண்ணன் நின்று கொண்டிருந்தான்.  என்ன சார் அசதியா? 

என்னவோ தெரியல..? மணி என்ன?

ஆறு பத்து 

ஓ? இவ்ளோ நேரமா தூங்கியிருக்கேன்?  மெடிடேஷன் ஹால் விளக்கு போட்டாச்சா?

தியாகு சாரும். அவர் வைஃப்உம் இருக்காங்கனு நினைக்கிறேன், அங்க லைட் எரியுது. வெளியே எட்டி பார்த்தபடியே சொன்னான். 

நீங்க கேட்ட சாமானெல்லாம் இதுல இருக்கு, தாமு சாருக்கு மாத்திரை வாங்கி கொடுத்து விட்டேன், நான் கிளம்பட்டுமா?

சரி. ஜாக்கிரதையா போ" என்று அவனை அனுப்பி வைத்தவர், முகம் கழுவி விபூதி இட்டுக் கொண்டு கேண்டீனில் அவருக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்த காபியை குடித்து விட்டு, மெடிடேஷன் ஹாலுக்கு வந்தார். தியாகுவும் அவர் மனைவியும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து கொண்டிருந்தனர். 

சங்கர் அவர்களுக்கு பின்னல் அமர்ந்து கொண்டு கணைகளை மூடி அவர்கள் ஜெபிப்பதை கேட்டார். இந்த ஹோமில் கிட்டத்தட்ட ஐம்பது வீடுகள் உள்ளன. ஆனால் அதில் தினசரி மெடிடேஷன் ஹாலுக்கு தினசரி வருவது தியாகராஜன் தம்பதியினர்தான். வெள்ளி,செவ்வாய் கிழமைகளில் பெண்கள் சிலர் வருவார்கள். அறுபது,எழுவது பேர் சொகரியமாக உட்காரலாம் என்னும்படியான கூடம். அதில் கிழக்கே பார்த்து ஒரு மேடை அதில் பிள்ளையார், முருகன், வெங்கடாஜலபதி, குருவாயூரப்பன், துர்கை படங்கள். இரண்டு பக்கங்களிலும் விளக்கு, அதை தவிர வலது பக்க சுவரில், ஓம் என்று சமஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட நீல நிற படம். 

தியாகராஜனின் மனைவி இங்கிருக்கும் நாட்களில் தினசரி கோலம் போட்டு, படங்களுக்கு இங்கு பூக்கும் மலர்களையே மாலையாக தொடுத்துப் போடுவார். கணவன், மனைவி இரெண்டு பெரும் இரண்டு வேளையும் ஸ்லோகங்களைச் சொல்வார்கள். மற்ற நாட்களில் சான்டிங் பாக்சின்  அலுப்பூட்டும் மந்திர உச்சாடனம். 

இங்கிருக்கும் எல்லோரிடமிருந்தும் வேறுபட்டவர் தியாகராஜன். புலம்பல், குற்றம் கண்டு பிடித்தல் என்று எதுவும் கிடையாது. அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்து ஒய்வு பெற்றவர். இரண்டு மகள்கள், ஒரு மகன். மருமகன்களில் ஒருவர் டாக்டர், ஒருவர் ஆடிட்டர், மகன் வெற்றினேரி டாக்டர் என்று எல்லோரும் வசதியாக இருந்தாலும், இவர் யாரோடும் இருக்க விரும்பவில்லை. 

நம்மளுடைய சாஸ்த்ரமே வாழ்க்கையை நாலா பிரிச்சிருக்கு. பிரம்மச்சர்யம். கிரஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம், சன்யாசம்னு. ப்ரம்மச்சர்யத்தில் படிக்கிறோம், அப்புறம் கல்யாணம் பண்ணிண்டு குழந்தை, குட்டி, அவர்களை முன்னுக்கு கொண்டு வருவது என்று கிரஹஸ்தாச்ரம வாழ்க்கை செல்கிறது. குழந்தைகள் செட்டில் ஆயாச்சுனா நாம அங்கிருந்து நகர்ந்துடனும், அங்கேயே இருந்தோம்னா நம்ம ஐடியாக்களை அவர்கள் மீது திணித்து, அவர்கள் வாழ்க்கையை வாழ விட மாட்டோம். அந்த காலத்தில் காட்டில் போய் தபஸ் செய்வது என்று காலத்தை கழித்தார்கள். இப்போ காட்டிற்கு போக முடியாது. இம்மாதிரி சீனியர் சிடிஸின் ஹோம்களை வானப்ரஸ்த வாழ்க்கையாக  நினைத்து கழிக்க வேண்டும். கடைசி கட்டம் சன்யாசம். வழக்கை எடுத்ததன் நோக்கம் என்ன என்பதை ஆன்ம விசாரம் செய்ய வேண்டும். அதற்க்கு வானப்ரஸ்த வாழ்க்கையைத்தான் பயன் படுத்திக்க கொள்ள வேண்டும். 

இப்படி வெறும் பேச்சோடு நிற்காமல் அதை நடை முறைப் படுத்தவும் செய்வார். காலையில் யோகா, பிறகு வாக்கிங். குளியலுக்குப் பின்னர் பூஜை, அதன் பிறகுதான் காலை சிற்றுண்டி சாப்பிடுவார். பின்னர் புத்தகங்கள் வாசிப்பது, எப்போதாவது டி.வி.பார்ப்பது, மாலையில் மீண்டும் பாராயணம், மெடிடேஷன் என்று பொழுது ஓடும். பெரும்பாலும் மௌனமாகத்தான் இருப்பார். ஆனால் சிடுமூஞ்சி அல்ல. முகத்தில் எப்போதும் சிரிப்பு இருக்கும். முகத்தின் அந்த சிரிப்பும், கணங்களின் ஒளியும் நிஜமாகவே வானப்ரஸ்த வாழ்க்கையை கடைபிடிக்கிறாரோ என்றுதான் தோன்றும். 

இங்கிருக்கும் பெரும்பான்மையோர் சாப்பாட்டை பற்றி குறை பட்டுக் கொள்ளும் பொழுது குறை சொல்லாத ஒரே ஆள் இவர்தான். அவரே கொஞ்ச நாட்களுக்கு முன்னால், "எல்லோரும் பணம் கட்டி இங்கு வசிக்கிறார்கள், சாப்பாடு நன்றாக இருக்க வேண்டாமா"? என்றார்.

"நாங்க சமையல் சாமான்கள் வாங்கித்தான் தர முடியும், ராஜூகிட்ட சொல்றேன்.."

சமையலுக்கு ஆள் கிடைப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த ஹோம் ஆரம்பித்ததிலிருந்து சமைத்து கொண்டிருந்த ராவ் மிக நன்றாக சமைப்பார். அவர் சென்ற பிறகு இரண்டு வருடங்களில் நான்கு சமையல்காரர்கள் மாறி விட்டார்கள். சமைக்க வருபவர்கள் மிகவும் குறைவு, வந்தவர்கள் நிலைத்து நிற்பது அதை விட கடினம். 

இப்போது இருக்கும் ராஜுவுக்கு மூட் நன்றாக இருந்தால் சமையல் நன்றாக இருக்கும். வாரத்தில் ஆறு நாட்கள் மூட் நன்றாக இருக்காது.

சமையல் சரி இல்லை என்பதை காரணம் காட்டியே நாராயணன் என்பவர் ஹோமை விட்டு சென்று விட்டார்.

நாராயணன் பாலக்காட்டுக்காரர் . மிளகூட்டல், புளிப் பச்சிடி, அவியல், எரிசேரி, துவரன், காளன்,ஓலன்,மெழுக்கு வரட்டி, என்று வித விதமாக சாப்பிட்டு பழகிய நாக்கு.  

பொங்கல் என்றால், குறுமிளகு இருக்கணும், முந்திரி பருப்பு இருக்கணும், நெய் நிறைய விடணும், அவியலுக்கு என்ன இப்படி காய் நறுக்கி இருக்கிறீர்கள்? நீளமாக நறுக்க வேண்டாமா? என்றெல்லாம் வக்கணை பேசுவார்.

அதிகம் சாப்பிடுதல், அதிகம் பேசுதல் என்னும் இருவகையான பாவங்களை நாக்கு செய்கிறது என்று ஒரு மகான் கூறியிருக்கிறார். சாப்பிடுவதைப் பற்றி அதிகம் பேசுதல் மூன்றாவது பாவம். ஆனால் என்ன செய்வது ருசிக்கு அடிமையான நாக்கு பேசத்தான் செய்கிறது.

இன்றைய செய்திதாளில் தலையங்கம் படிக்கவில்லை, படித்து விடலாம் என்று பேப்பரை பிரித்து வைத்துக் கொண்ட பொழுது, தியாகராஜன் செல்லில் அழைத்தார். பதட்டமான குரலில், சார் கொஞ்சம் சீக்கிரம் ஏதாவது வண்டி அரேன்ஜ் பண்ண முடியுமா?
ஏன்? என்னாச்சு?
என் மிஸ்ஸஸ் என்னவோ மாதிரி இருக்கா. உடனே ஹாஸ்பிடலுக்கு கூட்டிண்டு போகணும்....
அவர் இருப்பிடத்திற்கு விரைந்து சென்ற பொழுது, குத்திட்ட பார்வையோடு நாற்காலியில் சரிந்து உட்காந்திருப்பதை காண முடிந்தது. சங்கருக்கு உண்மை புரிந்தாலும் அதை சொல்ல விருப்பமின்றி கால் டாக்சி புக் செய்தார். அதற்குள் தியாகராஜன் தன் மாப்பிளைக்கு போன் செய்திருந்தார். ஆனால் அவர் வருவதற்குள் மாமியார் முடிவு தெரிந்து விட்டது. 

இங்கே ஹோமில் பலருக்கும் தியாகுவின் மனைவியின் மரணம் பெரும் அதிர்ச்சியை தந்தது. இவருக்காவது ஹெல்த் இஷ்யூஸ் உண்டு, அவங்க நல்லாத்தானே இருந்தாங்க.. அவங்க ரெண்டு பெரும் ராமர் சீதை மாதிரி இருப்பாங்க, இவர் எப்படி இந்த அதிர்ச்சியை தாங்கிக்க போறாரோ?

தியாகராஜன் அந்த அதிர்ச்சியை நன்றாகவே தாங்கிக் கொண்டார். மனைவின் காரியங்கள் முடிந்த பிறகு மகள்களும், மகனும் வற்புறுத்திய பொழுதும் அவர்களோடு தங்காமல் ஹோமிற்கே திரும்பி வந்தார். 

இப்பொழுது அவருடைய வானப்ரஸ்த வாழ்க்கை முறை மிகவும் தீவிரமடைந்தது. உணவிலும் கட்டுப்பாடுகள் அதிகமாயிற்று. இதய நோயாளியான அவர் சாப்பிட வேண்டிய மருந்துகளை சாப்பிடுகிறாரா? என்ற சந்தேகம் வந்தது. 

"மாத்திரைகளை எல்லாம் ஒழுங்காக சாப்பிடுகிறீர்களா"? என்று சங்கர் கேட்டதற்க்கு 

மாத்திரை டப்பாவை தூக்கி அவர் முன் போட்டு, "இவ்ளோ மாத்திரை சாப்பிட்டு நான் என்ன செய்யப் போகிறேன்? என் கடமைகளை எல்லாம் முடிச்சாச்சு.. இனிமே எதுக்காக நான் மாத்திரை சாப்பிட்டு சாப்பிட்டு என் லைஃப்ஐ நீட்டித்துக் கொள்ளணும்?போதும் .."
என்றார். 

"ஐயோ அதெல்லாம் தப்பு. இருக்கிற வரைக்கும் நன்னா இருக்கணும். மாத்திரை சாப்பிடாம ஸ்ட்ரோக் வந்து டோட்டலி டிபெண்டெண்ட் ஆகி விட்டோம் என்றால் மற்றவர்களுக்கு பாரமாகி விடுவோம். இந்த ஹோமிலேயே நாங்கள் வைத்துக் கொள்ள மாட்டோம். அப்புறம் நீங்கள் வேறு இடம்தான் பார்க்கணும்.."

"வேற எந்த வீட்டிற்கு போவது? இனிமேல் போக வேண்டிய வீடு அதுதான்" என்று மேலே கை காட்டினார். 

"அதெல்லாம் நம்ம கைல இல்ல", 

"நம்ம கைலதான் இருக்கு. இந்த மாத்திரைகளை நிறுத்தி விட்டால் சீக்கிரம் போய் விடலாம். அந்தக் காலத்தில் வடக்கிருத்தல் என்று ஒரு விஷயம் உண்டு. ராஜாக்கள் தாங்கள் உயிர் வாழ்ந்தது போதும் என்று நினைத்தால், அரச பதவியைத் துறந்து, ஊர் எல்லையில் வடக்கு நோக்கி அமர்ந்து சோறு, தண்ணீர் எல்லாவற்றையும் படிப்படியாக குறைத்து உயிரை விடுவார்களாம். இப்போது சோறு, தண்ணீர் எதையும் விட வேண்டாம், இந்த மாத்திரைகளை நிறுத்தினால் போதும்... கோப்பெருஞ்சோழன்..."

 "வாட் இஸ் திஸ்? கம் ஆன்! பக்கத்து கோவிலில் கும்பாபிஷேகம் ஆகியிருக்கு, தினமும் சாயந்திரம் கச்சேரி எல்லாம் இருக்கு. இன்னிக்கு ராஜேஷ் வைத்யா வீணை..போலாமா"? 

சங்கர் பேச்சை மாற்றினார்.  அதன் பிறகு தியாகு அவரிடம் மரணம் பற்றி பேசுவதில்லை.

இடையில் சில முறைகள் மகன், மகள்கள் வீடுகளுக்குச் சென்று வந்தார். 

மனைவியின் முதல் திவசம் முடிந்து வந்த பொழுது கொஞ்சம் தெளிவாகவே இருந்தார். சோகத்திலிருந்து மீண்டு விட்டார் என்றுதான் தோன்றியது. 

ஒரு நாள் மாலை, "சங்கர், எனக்கு சாப்பாடு ரூமுக்கு கொடுத்தனுப்ப முடியுமா"? என்று கேட்டார் 

"ஓ எஸ்! தாராளமா? உடம்புக்கு முடியலையா"?

"கொஞ்சம் டயர்டா இருக்கு.."

அனுப்பறேன். என்றவர், கேண்டீன் பையனிடம், "தியாகராஜன் சாப்பாடு கேக்கறார், கொடுத்துட்டு வந்துரு" என்றார்.

சாப்பாடு கொண்டு போன பையன், "சார், சார், இங்க வாங்க.." என்று உரக்க குரல் கொடுத்தான்.

சங்கர் அங்கே சென்ற பொழுது, தியாகு கீழே விழுந்து கிடப்பதை பார்க்க முடிந்தது. 

"சாப்பாட்டை வாங்க எழுந்தார், அப்படியே விழுந்துட்டார்.."
குரலும், கைகளும் பதற பையன் விவரித்தான். 

தியாகராஜன் ஆசைப்பட்டபடியே அவருக்கு முடிவு வந்து விட்டது. அவருடைய மகன் வந்து கணக்கை செட்டில் செய்து, அறையை ஒழித்த பொழுதுதான் அவர் மாத்திரைகள் எதையும் சாப்பிடவில்லை என்று தெரிந்தது. அவர் பாஷையில் வடக்கிருந்து உயிர் விட்டு விட்டாரா? கடவுளே! 


Thursday, September 8, 2016

வானப்ரஸ்தம்(சிறுகதை)

வானப்ரஸ்தம்(சிறுகதை)

அஞ்சாம் நம்பர்ல இருக்குற பெரியவர் சரியா சாப்பிடறதில்லை உடம்பு கிடம்பு சரியில்லையோ என்னவோ"

முதியோர் விடுதியில் வேலை செய்யும் சாந்தி  அந்த விடுதி மேலாளர் சங்கரிடம் கூறினாள். 

"அப்டியா? என்னனு விசாரிக்கிறேன்.என்று சொல்லிக்கொண்டே இருக்கும் பொழுது டெலிபோன் அடித்தது. 

சொல்லுங்கோ மேடம், பிளம்பர் வரலையா? நான் நேத்திக்கே சொல்லிட்டேனே.. மறுபடியும் போன் பண்றேன், இன்னிக்கு கண்டிப்பா சரி பண்ணிடலாம் மேடம், கவலைப் படாதீங்கோ..
இருபதாம் நம்பரில்  வசிக்கும் சாருமதி ராஜகோபால். பிறந்ததிலிருந்தே வசதியாக வளர்ந்து விட்டவர்,போதாத குறைக்கு குழந்தைகளும் வெளி நாட்டில் வசிப்பதால் அவருக்கு எல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டும். கொஞ்சம் தாமதத்தை கூட ஏற்றுக் கொள்ள மாட்டார். நேற்று மாலை பாத்ரூம் குழாய் ஒழுகுகிறது என்றார். இன்று மதியத்திற்குள் இது நாலாவது போன். இன்று சரி செய்யா விட்டால், அமெரிக்காவில் எல்லாம் என்று ஆரம்பித்து அரை மணி பேசி, இந்த தேசம் எப்படி உருப்படும் என்று முடிப்பார். 

பிளம்பர் ராஜாவின் நம்பரைத் தேடி அழைத்தார், "சொல்லுங்க சார்"
"என்னப்பா நேத்திக்கு போன் பண்ணினேன், இன்னிக்கு கார்த்தாலே ஒன்பது மணிக்கு வரேன் சொன்ன... மணி இப்போ என்ன ஆறது.."?
"இல்ல சார்,பக்கத்துக்கு வீட்டு பையனுக்கு ஆக்சிடென்ட் ஆயிருச்சு.. ஆஸ்பத்திருக்கு அழைசிட்டு போக வேண்டியதா போச்சு..அதான்.., தோ வந்துட்டே இருக்கேன்.."

"சீக்கிரம் வா.." என்றவர் ஒழுகும் குழாயை அடைத்தால்தான் சாருமதியின் வாயை அடைக்க முடியும் என்று நினைத்துக் கொண்டார்.

அதற்குள் இண்டர்காமில் மற்றொரு அழைப்பு வந்தது. புதிதாக சேர்ந்திருக்கும் ராஜசேகர், " சார், நெட்லான் போடணும்னு சொல்லியிருந்தேனே.. உட்கார முடியல, கொசு ஆளை தூக்கிடும் போல இருக்கு. 

சொல்லியாச்சு சார், மெஷர்மென்ட் எடுக்க நாளைக்கு வருவாங்க, அதுக்கு அப்புறம் டூ டேஸ்ல வந்து பிக்ஸ் பண்ணிடுவாங்க... 

ஒ! அப்போ மூணு நாள் ஆகுமா? ஓகே, பக்கத்துல எங்க மெடிக்கல் ஷாப் இருக்கு? எனக்கு கொஞ்சம் மெடிசென்ஸ் வாங்கணுமே.."

பக்கத்துல.. ஒன்னும் கிடையாது, ரெண்டு கிலோமீட்டர் போகணும்.. என்ன வேணுங்கறதை எழுதி வையுங்க, ஈவினிங் கண்ணன் போவான், அவனிடம் கொடுத்தா வாங்கிண்டு வந்திடுவான்..

 ஓகே! தாங்க்யூ!

சங்கர் இந்த முதியோர் இல்லத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்டு விளையாட்டு போல பத்து வருடங்கள் ஓடி விட்டன. அரசு வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி ஒய்வு பெரும் சமயத்தில் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் தான் நடத்தும் ஓல்ட் ஏஜ் ஹோமை நிர்வகிக்க தகுதியான ஆளை தேடிக்கொண்டிருப்பதாகவும், சங்கரால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்றும் கேட்டார். 

"தாராளமா சார். அப்படியே எங்களுக்கும் ஒரு வீடு அங்க குடுங்க.."
"இப்போ எல்லாம் புக் ஆயிடுச்சு, செகண்ட் பேஸ் ஆரம்பிக்கும் பொழுது புக் பண்ணிக்கங்க".  
ஆனால் சங்கரின் மனைவிக்கு ஏனோ ஓல்ட் ஏஜ் ஹோம் என்னும் நினைப்பே பிடிக்கவில்லை. 
"நம்பளை என்ன குழந்தைகள் கவனிக்காம ஹோமில் கொண்டு தள்ளிட்டாளா? எதுக்கு அங்க போகணும்"?

ஆனால் அந்த குழந்தைகளே, "ஏம்மா நீயும் அப்பாவும் தனியா இருக்கேள்? ஏதாவது நல்ல ஹோமில் இருங்களேன். பேப்பரில் படிக்கற நியூஸ் எல்லாம் பயங்கரமா இருக்கு... நீங்க ரெண்டு பெரும் ஹோமில் இருந்தால் நாங்களும் நிம்மதியா இருப்போம்..." என்று யோசனை சொன்ன பிறகு அரை மனதோடு ஒப்புக் கொண்டாள்.இருந்தாலும் அடிக்கடி மகனிடமும் மகளிடமும் செல்லாமல் இருக்க முடியாது. ஆரம்பத்தில் மனைவியோடு பயணித்த சங்கருக்கு அந்த நீ,,ண் ..ட  பயணமும், அங்கெல்லாம் சென்றால் எல்லாவற்றிற்கும் குழந்தைகளை சார்ந்து இருக்க வேண்டி இருப்பதும், பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டி இருந்ததும் அலுப்பாக இருந்தது. ஹோமின் நிர்வாகத்தை காரணம் காட்டி வெளி நாட்டு பயணத்தை தவிர்க்க ஆரம்பித்தார். 

வங்கி மேலாளராக பலதரப்பட்ட மனிதர்களை சந்திப்பதற்கும், ஒரு முதியோர் இல்ல நிர்வாகியாக மனிதர்களை சந்திப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. அது ஒப்பனை செய்து கொண்ட முகம், இது வியர்த்துக் கொட்டிய, வேஷங்கள் கலைந்த நிஜ முகம். 

இங்கு வந்த பிறகுதான் தெரிகிறது கதைகளிலும், கவிதைகளிலும் படிப்பதை போல பெற்றோர்களை குழந்தைகள் கொண்டு வந்து தள்ளி விட்டு விட்டு ஓடி விடுவதில்லை. பெற்றோர்களிடமும் தவறு இருக்கிறது.

ஆறாம் நம்பர் விஜயராகவன் ஹோமிற்கு வந்ததற்கு ஒரு டி.வி. சீரியல் காரணம். அவர் வழக்கமாக பார்க்கும் சீரியலை பார்க்க விடாமல் பேரன் ஏதோ ஒரு ஆங்கில சீரியல் பார்க்க அதனால் ஏற்பட்ட வாக்குவாதம் பெரிய சண்டையில் முடிந்து கோபித்துக் கொண்டு இங்கே வந்து விட்டார்.

எட்டாம் நம்பர் ஸ்ரீனிவாசன் தஞ்சையில் நிலசுவான்தார், ஆள், படை இவைகளை மிரட்டி, உருட்டி வேலை வாங்கி பழக்கப்பட்டவர். மனைவி மறைந்த பிறகு மகனோடு சென்னைக்கு வந்தார். அந்த மண்ணுக்கே உரிய விகண்டை பேச்சு மருமகளுக்கும்,ஏன் மகனுக்குமே எரிச்சலூட்ட,  "இந்த மிட்டா மிராசுத்தனத்தை எல்லாம் இங்க காட்டாதீங்க" என்று மகன் எச்சரிக்க, "போடா நீயும் உன் வீடும்" என்று கோபித்துக் கொண்டு வந்து விட்டார். மகனும்,மருமகளும் இரண்டு மூன்று முறை வந்து மன்னிப்பு கேட்டனர். அப்பொழுது கூட அவர் முகம் கொடுத்து பேசவில்லை. இப்போதும் அவ்வப்பொழுது வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்தான் முகம் கொடுத்து சரியாக பேச மாட்டார். அவர்கள் சென்ற பிறகு மற்றவர்களிடம் "இவன் எதுக்கு வரான்? சொத்தை நான் எங்கேயாவது இந்த ஹோமுக்கு எழுதி வெச்சுடேப் போறேன்னு பயம்". என்பார்.

மும்பையிலிருந்து வந்திருக்கும் ஹேமா ராகவன் அரசு வேலையிலிருந்து ஒய்வு பெற்றவர். மகன்கள் இருவரும் மும்பையிலேயே இருக்கிறார்கள். அவர்களோடு இவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், "நான் ஏன் அவர்களோடு இருக்க வேண்டும்? இத்தனை நாட்கள் நான் வீடு, வேலை, குழந்தைகள் என்று உழைத்து விட்டேன். இனிமேலாவது என் விருப்பப்படி கோவில், கச்சேரி என்று வாழ ஆசைப் படுகிறேன். அவர்களோடு  இருந்தால் காலிங் பெல் அடிக்கும் பொழுது, திறந்து விட்டு, கூரியர் வாங்கி வைத்து, அவர்கள் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்தால் பால் கலந்து கொடுத்து, சாப்பிட கொடுத்து,, சம்பளமில்லாத வேலைக்காரர்கள் போல உழைக்க வேண்டி இருக்கிறது". 

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கிறது. பல வருடங்களாக மனத்திலும், புத்தியிலும் பதிந்து போய் விட்ட விஷயங்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை. மாறுதல்களை புரிந்து கொள்ளாவும், ஏற்றுக் கொள்ளவும்  விருப்பமில்லை இதில் மகனையும், மருமகளையும், ஏன் குறை கூற வேண்டும்?

 ஐந்தாம் நம்பர் வரை போய் விட்டு வரலாம் என்று மேஜை ட்ராயரை மூடி, மின் விசிறியை நிறுத்திவிட்டு வெளியே வந்து ரூம் கதவை பூட்டும் பொழுது கண்ணன் வருவது தெரிந்தது.

வாங்கி வர வேண்டிய சாமான்களின் லிஸ்ட்  நல்ல வேளையாக  சட்டைப் பையில் இருந்தது. அதை எடுத்து கண்ணனிடம் கொடுத்து விட்டு, "புதுசா வந்திருக்காரே தாமோதரன், அவருக்கு ஏதோ மருந்து, மாத்திரை எல்லாம் வேணுமாம் என்னனு கேட்டு வாங்கி கொடு"

லிஸ்டை வாங்கி  சென்றவன் சற்று நேரத்திற்கெல்லாம் செல்லில் கூப்பிட்டான், "சார், அவர் ரூம் பூட்டியிருக்கு, எங்கனா போயிருக்காரா"?

பூட்டியிருக்கா? என்னப்பா? இது? எங்கிட்ட எதுவும் சொல்லலியே..?

நடக்கப் போயிருப்பாரோ?

சாதாரணமாக ஹோமில் நடப்பவர்கள் அதைச் சுற்றித்தான் நடப்பார்கள், அங்கு எங்கும் தாமோதரனைக் காணவில்லை. வாட்ச்மேனை கேட்டபொழுது, ஆமா, சார், அரை அவருக்கு முன்னால வெளில போனாரே என்றான். 

எங்க போறார்னு கேட்டியா 

அது எப்படி சார், நான் கேக்க முடியும், உங்க கைல சொல்லிட்டுதான் போறார்னு நினைச்சேன். 

கைலயும் சொல்லல, காதுலயும் சொல்லல..

இப்போ எங்க போய் தேடறது?

அவருடைய செல் போனில் தொடர்பு கொண்டால், அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக சொல்லியது. அவருடைய அண்ணா பிள்ளையின் தொலைபேசி எண்ணைதான் அவசரத்திற்கு அழைக்கக் கூடிய நபர் என்று குறிப்பிட்டிருந்தார். அவரை அழைத்த பொழுது, "சித்தப்பா இங்கே வரலையே" என்றார்.

மேற்கொண்டு என்ன செய்வது?...

(சங்கர் என்ன செய்தார் என்று தெரிந்து கொள்ள கொஞ்சம் காத்திருக்கலாம்)

Friday, September 2, 2016

விநாயகர் குறித்த ஒரு வினாடி வினா

விநாயகர் குறித்த ஒரு வினாடி வினா



1. விநாயகருக்கு விசேஷமான நாமாக்கள் எத்தனை?

2. முருகனைப் போலவே விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உண்டு, அதில் குறைந்த பட்சம் மூன்றினை குறிப்பிடுங்கள்.

3. பொல்லாப்   பிள்ளையார்/பொள்ளாப் பிள்ளையார் இரண்டில் எது சரி? ஏன்?

4. விநாயகருக்காக பிரத்யேகமாக எட்டு கோவில்கள் ஒரு                         தொகுப்பாக அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?

5. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் தோற்றச் சிறப்பு என்ன?

6. குன்றிருக்கும் இடத்தில் எல்லாம் குமரன் இருப்பான் என்பது வழக்கு, ஆனால் ஊரின் மத்தியில் இருக்கும் இந்த குன்றின் உச்சியில் விநாயகர் அமர்ந்து ஊருக்கே பெருமை சேர்க்கிறார். நான் குறிப்பிடுவது எந்த ஊரை?  

7. "முப்புரம் எரி செய்த அச்சிவன் உரை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா" திருப்புகழில் குறிப்பிடப் படும் இந்நிகழ்ச்சி நடைப் பெற்றதாக நம்பப்படும் சென்னைக்கு அருகில்  உள்ள அந்தத் தலம் எது?  

8. ஒரு முறை மகா விஷ்ணுவின் சக்கரத்தை குழந்தை கணேசன் வாய்க்குள் போட்டுக்                   கொண்டு விட்டான். அதை அவனிடமிருந்து வரவழைக்கும் பொருட்டு மாமா மஹா                   விஷ்ணுஒரு செயல் செய்தார். அதைப் பார்த்து சிரித்த கணேஷ் சக்கரத்தை வெளியே                 துப்பி விட்டாராம். மகா விஷ்ணு செய்த அந்த செயலை நாம் இன்றைக்கும் விநாயகருக்கு        முன் செய்கிறோம். அந்த செயலை மூளைக்கான யோகா என்று மேல் நாட்டினர் இன்று                கொண்டாடுகின்றனர். சுருக்கமாக அந்த செயலை நாம் எப்படி குறிப்பிடுவோம்?  

9. நவ கிரஹங்களில் எந்த கிரஹத்திற்கு அதிபதியாக விநாயகர் கருதப் படுகிறார்?

10. விநாயக சதுர்த்தி அன்று இருபத்தோரு இலைகளால் பிள்ளையாரை அர்ச்சிக்க வேண்டும்,        அதில் ஒரு இலையால் அன்று மட்டும்தான் அர்ச்சிக்க வேண்டும். அது எந்த இலை?

Wednesday, August 24, 2016

பெரியோரைப் பணிவோம்!

பெரியோரைப் பணிவோம்!

இந்த வருடம் எழுத்தாளர் சாவி, இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி ஆகிய இருவருக்கும் நூற்றாண்டு என்பது பலருக்கும் தெரியும், மற்றொரு மாமனிதருக்கும் இது நூற்றாண்டு என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.  

மேலை நாடுகளில் ஸ்டார் ஹோட்டல்களில் தங்குபவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக பைபிளின் சிறிய பிரதி ஒன்றை வைத்திருப்பார்களாம். அதை ஒட்டி நம் நாட்டிலும் ஸ்டார் ஹோட்டல்களில் பைபிளின் கை அடக்க பிரதி ஒன்று வைக்கப்பட்டு வந்தது. மேலை நாடுகள் கிருத்தவ மதத்தை சார்ந்தவை என்பதால் அங்கு பைபிள் வைக்கப்படுவது நியாயம். நம் நாடு இந்து மதத்தை தழுவியதுதானே, இங்கு ஏன் பைபிளை வைக்க வேண்டும்? பகவத் கீதையின் கை அடக்க பிரதியை வையுங்கள் என்று கூறி, அதை செயல் படுத்த வைத்தவர். இவரை நினைத்தால் பகவத் கீதையை நினைப்போம். பகவத் கீதையை நினைத்தால் ஒரு நாடகம் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்த, அழகான ஆங்கிலத்தில் இவர் ஆற்றிய அருமையான   பேருரைகள்தான் நினைவுக்கு வரும். இப்போது தெரிந்திருக்குமே நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று..? 

ஆமாம், சுவாமி சின்மயானந்தா என்று  அறியப்படும் ஸ்வாமி சின்மயானந்த சரஸ்வதிதான். 1916 ம் ஆண்டு,மே மாதம் 8ம் தேதி எர்ணாகுளத்தில் பாரு குட்டி, குட்டன் மேனன் தம்பதியினருக்கு மகனாக பிறந்த அவருக்கு பாலகிருஷ்ணன் என்று பெயரிட்டு பாலன் என்று அழைத்தனர். பெயருக்கு ஏற்றார் போல் சுட்டித்தனமும், குறும்பும் மிகுந்திருந்த அந்தக் குழந்தைக்கு புத்திசாலித்தனத்திலும் குறைவிருக்கவில்லை. ஐந்து வயதிலேயே தாயை இழந்தாலும் உறவினர்கள் மூலம் பாசம் நிறையவே கிடைத்ததது. 


1940ஆம் ஆண்டு லக்னோ சர்வகலாசாலையில் ஆங்கில இலக்கியம் மற்றும் சட்டம் படிக்க சேர்ந்தார். அப்பொழுது தீவிரமாக இருந்த சுதந்திர போராட்டம் இவரையும் ஈர்க்க 1942 ஆம் ஆண்டு நேரடியாக அதில் ஈடுபட்டார்.அதன் பயனாக சிறை வாசம், அங்கு அவரை பீடித்த டைபாய்டு நோய். அந்த நோயால் இறந்து கொண்டிருந்த கைதிகளுள் இவரும் ஒருவராகி விடப் போகிறாரே என்று பயந்த ஜெயில் வார்டன் அவரை சிறைச் சாலைக்கு வெளியே தெருவோரம் வீசி எறிந்து விட்டு சென்று விட்டாராம். இரக்க குணம் கொண்ட ஒரு கிருத்தவ மாது இவரை காப்பாற்றி நோயிலிருந்து மீட்டாராம். பிறகு தன் படிப்பை தொடர்ந்து, முடித்து, 1945 ஆம் ஆண்டு டெல்லியில் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அங்கு அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் வரவேற்பை பெற்றன. அங்கிருந்த காலத்தில்தான் அவருக்கு வாழ்க்கையை பற்றியும், ஆன்மிகம் குறித்தும் நிறைய கேள்விகள் மனதில் பிறந்தன. அதற்கு விடை காணும் பொருட்டு அரபிந்தோ, ரமணா மகரிஷி, ஸ்வாமி சிவானந்தா போன்ற பெரியோர்களின் புத்தகங்களை படித்திருக்கிறார். அவற்றுள் ஸ்வாமி சிவானந்தாவின் போதனைகள் இவரைக் கவரவே அவரை நேரில் சந்தித்து தன் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று ஸ்வாமி சிவானந்தாவை சந்திக்க சென்றார். அவரோடு ஒரு மாதத்தை கழித்தப் பிறகு ஒரு புதிய பால கிருஷ்ணனாக டில்லி திரும்பினார். அதன் பிறகு பலமுறை டில்லிக்கும் ரிஷிகேஷிற்கும் பயணம் மேற்கொண்டார். 

இறுதியாக 1945 பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி அவருக்கு துறவற தீக்ஷையும், சின்மயானந்த சரஸ்வதி என்னும் பெயரையும் அளித்தார்.  அதன் பிறகு தன் சீடர் பகவத் கீதை, பிரம்ம சூத்திரம், உபநிஷத் இவைகளை கற்றுத் தேரர் வேண்டும் என்று விரும்பிய ஸ்வே சிவானந்தா, சின்மயானந்தாவை தபோவன் என்னும் ஆசானிடம் பயிற்ச்சி சொல்லி உத்திர காசிக்கு அனுப்பி வைத்தார். தபோவன் என்ற அந்த கண்டிப்பான ஆசிரியரிடம் அவர் பயின்ற எட்டு வருடங்கள் மிகவும் கடுமையானவை. அதில் தேர்ந்த பிறகு தான் கற்றுக் கொண்டதை, தன் ஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று விரும்பிய சின்மயானந்த தன விருப்பத்தை தபோவன் அவர்களிடம் வெளியிட்டார். ஆனால் தபோவன் குருஜியோ, மக்கள் அதற்க்கு இன்னும் தயாராகவில்லை, "நீ சொல்வதை புரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு கிடையாது. உபதேசம் செய்வதற்கு பதிலாக நீ ஒரு ஆறு மாதம் இந்தியா முழுவதும் ஒரு பக்கிரியைப் போல சுற்றி, மக்களை சந்தித்து விட்டு வா" என்றார்.   

அந்த அறிவுரையை ஏற்று சின்மயானந்தாவும் கால் நடையாகவே பல ஊர்களுக்கும் பயணப்பட்டார். மக்களிடம் பிச்சை பெற்றும், தெரு ஓரங்களிலும், கோவில்களிலும் படுத்து உறங்கி பலதரப்பட்ட மக்களை சந்தித்த பின் மறந்து போன நம் ஆன்மீக விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகவே அவருக்குத் தோன்றியது, தன கருத்தை தபோவனிடம் வெளியிட இந்த முறை அவர் சம்மதம் அளித்தார், சரி, சொற்பொழிவு செய் ஆனால் உன் பேச்சை கேட்பதற்கு குறைந்த பட்சம் நான்கு பேராவது இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்.

சின்மயானந்த கீதை பேருரைகளை தொடங்கினார். அது அத்தனை எளிதாக இருக்கவில்லை. ஓர் பக்கம் படித்த, ஆங்கிலேய மோகம் கொண்ட மேல்தட்டு வர்க்கம் இதை கேட்க விரும்பவில்லை. மறுபக்கம் சனாதனிகள் என்று என்று தங்களை சொல்லி கொண்ட தானும் வேதாந்த விஷயங்களை படிக்காமல், மற்றவர்களையும் படிக்க விடாமல் செய்து கொண்டிருந்த மேல் ஜாதியினர் ரகசியமாக வைத்திருந்த வேதாந்த விஷயங்களை எல்லோருக்கும் இவர் போதித்ததை அதுவும் ஆங்கிலத்தில், சுத்தமாக விரும்பவில்லை. ஆனாலும் மெல்ல மெல்ல நிலை மாறியது. 60களில் வேர் விட்டு இந்தியா மட்டுமல்ல வெளி நாடுகளிலும் சின்மயா மிஷிகளுக்கு கிளைகள் உள்ளன. 62 பள்ளிகள், அதைத் தவிர பாலவிஹார், மற்றும் யுவ கேந்த்ரா அமைப்புகள் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் வழி காட்டுகின்றன. அதைத் தவிர ஸ்வாமி தயானந்த சரஸ்வதி, ஸ்வாமி ஏ. பார்த்தசாரதி, தயானந்த சரஸ்வதியின் சீடரான ஸ்வாமி ஓம்காரானந்த, என்று வாழை அடி வாழையாக வரும் திருக் கூட்ட மரபை தோற்றுவித்திருக்கிறார். அவர்கள் இவர் காட்டிய பாதையில் கீதையையும், உபநிஷதத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

இவை எல்லாவற்றையும் தாண்டி எத்தனை நூல்கள்? ஆன்மீக விஷயங்கள் மட்டுமல்லாது அன்றாட வாழ்க்கைக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள் அவை. ஒரு முறை ஒரு குழந்தை அவரிடம்,"ஸ்வாமிஜி, நீங்கள் எங்கு வசிக்கிறீர்களா"? என்று கேட்டது, அதற்க்கு அவர் சிரித்துக் கொண்டே ரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும்" என்று கூறினாராம். அங்குள்ள புத்தக கடைகளில் இவருடைய புத்தகங்கள் வைக்கப்பட்டிருப்பதையே அப்படி கூறினார். ஆம் புத்தகங்கள் வடிவில் அவர் அங்கெல்லாம் வசித்துக் கொண்டுதான் இருக்கிறார். நாம்தான் தேடி கண்டு கொள்ள வேண்டும். 

எங்கெல்லாம் பகவத் கீதையும், உபநிஷத்தும், விவேக சூடாமணியும் படிக்கப் படுகிறதோ, அங்கெல்லாம் ஸ்வாமி சின்மயானந்தா சூக்ஷும ரூபத்தில் அதை ரசித்துக் கொண்டிருப்பார். 
ஹரி ஓம்! 

Tuesday, August 16, 2016

இரண்டு உறுதி மொழிகள்!!

இரண்டு உறுதி மொழிகள்!!

உறுதி மொழிகளை புத்தாண்டு அன்றுதான் எடுக்க வேண்டுமா என்ன? எல்லா நல்ல நாட்களிலும் எடுத்துக் கொள்ளலாம். அதன்படி நான் சுதந்திர தினத்தன்று இரண்டு உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். 

ஆகஸ்ட் 1-15 மங்கையர் மலரில் பத்மவாசன் என்பவர் தண்ணீர் சிக்கனத்தை பற்றி எழுதியிருந்த கட்டுரையில் ஷவரில் குளிப்பதை விட, பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி அதில் குளிப்பது தண்ணீர் சிக்கனத்திற்கு உதவும். ஷவரில் குளிக்கும் பொழுது நம்மை அறியாமல் அதிக நேரம் குளிக்கும் அபாயம் உள்ளது என்றும், சச்சின் டெண்டுல்கர் கூட ஒரு பக்கெட் நீரில் குளிப்பதாக உறுதி எடுத்திருப்பதாகவும், அவர் குடும்பத்தினரையும் அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பதாகவும் படித்த பிறகு, நானும் ஒரு பக்கெட் நீரில் குளிப்பது என்று உறுதி எடுத்திருக்கிறேன். பல நாட்கள் ஷவரில் குளித்து பழகி விட்டதால் இப்போது ஒண்ணேகால் பக்கெட் தண்ணீர் தேவைப் படுகிறது. கூடிய விரைவில் ஒரு பக்கெட் நீரில் குளிக்க பழகி விடுவேன்.

இதை என் மகளிடம் சொன்னேன், "வாட் இஸ் த சைஸ் ஆப் த பக்கெட்? வேரியஸ் சைசெஸ் ஆர் அவைலபில்" என்கிறாள். என்ன செய்ய? 

அடுத்த உறுதிக்கு காரணம் நேற்று(15.8.2016), விஜய் டீ.வி.யில் ஒளிபரப்பான  சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றம். திரு.சுகி.சிவம் தலைமையில் இன்று மக்களிடையே மேலோங்கி இருப்பது வீட்டு நலமா? நாட்டு நலமா? என்னும் தலைப்பில் வாதிட்டார்கள். வீட்டு நலமே என்னும் கட்சிக்காக பேசிய முனைவர் ராமலிங்கம், நாம் எல்லோரும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளும் பொழுது நான் நன்றக இருக்க வேண்டும், என் குழந்தைகள் நன்றக இருக்க வேண்டும் என்றுதான் வேண்டுகிறோம், யாராவது என் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறோமா? என்றார். நியாயமான கேள்விதான். 

சாதாரணமாக என் தினசரி பிரார்த்தனை
வாழ்க அந்தணர், வானவர் ஆனினம் 
வீழ்க தண்புனல், வேந்தனும் ஒங்குக 
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க 
வையகமும் துயர் தீர்க்கவே 

என்னும் தேவாரப் பதிகம்  சொல்லி, "லோகா சமஸ்தா சுகினோ பவந்து", "சர்வ ஜனோ சுகினோ பவந்து" என்று கூறி நமஸ்கரிப்பதோடுதான் முடியும். ஆனால் குறிப்பிட்டு, என் தேசம் நலமாக  இருக்க வேண்டும் என்று வேண்டியதில்லை. இனிமேல் எங்கள் நாட்டிற்கு சுய நலம் அற்ற திறமையான தலைவர்களை கொடு, என் தேசம் தன்னிறைவு பெற்று விளங்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளப் போகிறேன், என் பிரார்த்தனையில் என்னோடு இணைந்து கொள்ள விரும்புகிறவர்கள் இணைந்து கொள்ளலாம். கூட்டுப் பிரார்த்தனைக்கு வலிவு அதிகம்!   

Saturday, August 6, 2016

குருவே சரணம்

                  குருவே சரணம்


ஹிந்து ஆன்மீக பொருட்காட்சியில் ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவர்கள் பாத பூஜை செய்ததை குறித்து கனிமொழி பார்லிமெண்ட் டில் சர்ச்சை கிளப்பியுள்ளார்,என்னவோ செய்யக் கூடாததை செய்ய வைத்ததைப்போல. கனிமொழியிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? மாணவர்களை தூண்டி விட்டு 'ஒழிக' கோஷம் போடச் சொல்லி தான் படிக்கும் பள்ளிகளில் மற்றும் கல்லூரிகள் மீது கல்லெரியக் கற்றுக் கொடுத்த கூட்டத்தின் வாரிசு தானே இவர்.

மாணவர்கள் ஆசிரியர்களை வணங்குவதால் அவர்களிடம் கேள்வி கேட்க முடியாதாம்...!! எங்கே போய் முட்டிக் கொள்வது? உலகிலேயே கேள்வி பதில் மூலம் ஒரு மதக் கொள்கைகள் பரப்பப்பட்டது என்றால் அது ஹிந்து மதம் தான். உபநிஷத் முழுவதுமே மாணவன் கேள்விகள் கேட்க அதற்கு ஆசரியர் அளித்த பதில்கள்தான்.

ஆசிரியர்களை மதிப்பதும் வணங்குவதும் உயரிய பண்பு. அது ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டது. நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அவர்கள் ஓமான் நாட்டிற்கு விஜயம் செய்த போது அந்த நாட்டின் அரசரான சுல்தான் காபூஸ் அவரகள் சங்கர் தயாள் சர்மாவிற்கு அளிக்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையில்  தானும் கலந்து கொண்டதோடு திரு.சர்மா நாற்காலியில் அமர்ந்த பிறகே தான் தன் ஆசனத்தில் அமர்ந்தார். காரணம் சுல்தான் காபூஸ் புனேயில் படித்த பொழுது அவருடைய ஆசிரியராக சங்கர் தயாள் சர்மா இருந்திருக்கிறார். தான் ஒரு நாட்டின் அரசர், அதற்கு வருகை தந்திருக்கும் மற்றொரு நாட்டின் அதிபர் சங்கர் தயாள் சர்மா என்று நினைக்காமல் அவர் தன்னுடைய முன்னாள் ஆசிரியர் என்று வணங்கிய சுல்தான் காபூஸ் பண்பாளர்.




Friday, July 29, 2016

அரிசி,தேங்காய் வெல்லப்பாயசம்

    அரிசி,தேங்காய் வெல்லப் பாயசம்
              ( ஆடி வெள்ளி ஸ்பெஷல்)

தேவையான பொருள்கள்:


அரிசி    ---- 1/2 கப்
தேங்காய் துருவல் ----- 1/2 கப்
வெல்லம் ------- 200கிராம்
ஏலக்காய் ----- 4
முந்திரி பருப்பு  ----- 6

அரிசியை கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.  ஊறியதும் தேங்காய் துருவலை சேர்த்து அரைக்கவும். மாவு போல நைசாக இருக்க வேண்டாம், அதிகம் கொரகொரப்பாகவும் இருக்கக் கூடாது. அரைத்த மாவோடு ஒரு கப் தண்ணீர் சேர்த்து,அடுப்பில் மிதமான தீயில் வைத்து கை விடாமல் கிளறவும். மாவு வெந்ததும், வெல்லத்தூளை சேர்த்து மீண்டும் அடி பிடிக்காமல் கிளறவும். வெல்லம் நன்கு கறைந்து பச்சை வாசனை போனவுடன்(ஏறத்தாழ 10 நிமிடங்கள் அடுப்பில் இருக்க வேண்டும்), கீழே இறக்கி வைத்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு, முந்திரி பருப்பை சிறியதாக ஒடித்து நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். சுவையான, பாயசம் ரெடி. அடிப் பிடித்து விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தவிர இது செய்வதற்கு மிகவும் சுலபமானது.
 

Sunday, July 24, 2016

மழையில் நனைந்தபடி மலை நாட்டிற்கு - 3


மழையில் நனைந்தபடி மலை நாட்டிற்கு - 3
நம்முடைய வழிபட்டு முறையில் குல தெய்வம்,இஷ்ட தெய்வம், தவிர கிராம தேவதை, அல்லது காவல் தெய்வம் என்றும் உண்டு. இந்த காவல் தெய்வங்கள் பெரும்பாலும் ஊர் எல்லையில் இருக்கும் பெண் தெய்வங்களாகத்தான் இருக்கும். அய்யனார் விதி விலக்கு. பாலக்காட்டு காரர்கள் இந்த காவல்தெய்வங்கள் இருக்கும் கோவில்களை 'காவு' என்கிறார்கள். அது போல எங்கள் குடும்பத்திற்கான தெய்வம் எமூர் என்னும் இடத்தில் இருக்கும் கல்லெகுளக்கற பகவதி என்று அறியப்படும் ஹேமாம்பிகை ஆகும். பாலக்காட்டிலிருந்து மலம்புழா செல்லும் வழியில் இருக்கிறது எமூர்.
















இந்த கோவிலில் கர்பகிரஹத்தில் அம்மன் விக்கிரஹம் எதுவும் இருக்காது. அபயஹஸ்தமாக இரண்டு கைகள் மட்டுமே காணப்படும்.

குரூர்,மற்றும் கைமுக்கு என்னும் இரு நம்பூதிரிகள் தினசரி அடர்ந்த காட்டினுள் அமைந்திருக்கும் துர்கை அம்மன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தனர். ஒரு நாள் அவர்கள் இருவரும் மிகவும் அசதியோடு ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டிருந்த பொழுது, ஒரு வயதான மூதாட்டி அவர்கள் இருவருக்கும் சில பழங்களை உண்ணத்தருகிறாள், அதை சாப்பிட்டவுடன் அவர்களுடைய அசதி மறைந்து விடுகிறது. இது குறித்து அவரை வியப்படையும் பொழுது அவர்களுக்கு எதிரே தங்கம் போல ஜொலித்துக் கொண்டு ஒரு யானைக்கு அருகில் நின்ற கோலத்தில் அம்பிகை அவர்களுக்கு கட்சி தருகிறாள். வயது ஏற,ஏற, தினசரி காட்டிற்குள் சென்று அம்பாளை தரிசனம் செய்வது கடினமாக ஆவதை எண்ணி கவலை கொள்கிறார்கள். அப்போது அம்மன் அவர் கனவில் தோன்றி, தான் இதே இடத்தில் அவர்களுக்காக எழுந்தருளப் போவதாக கூறுகிறாள். மறு நாள் அங்கிருக்கும் குளத்திலிருந்து முதலில் தங்க மயமான இரு கரங்கள் மட்டும் வெளி வருகின்றன. அதைக்  கண்டதும் உணர்ச்சி வசப்பட்ட குரூர் நம்பூதிரி குளத்தில் குதித்து அந்தக் கரங்களை பற்றிக் கொள்கிறார். உடனே, அந்த இரு கரங்களும் கல்லாக சமைந்து விடுகின்றன. அந்த கரங்களையே வழிபட உத்தரவாகின்றது. சுற்றி இருக்கும் குளத்தை தூர்த்து கோவிலாக கட்டி வழிபட தொடங்கினர். இங்கு தேவி காலையில் சரஸ்வதி அம்சமாகவும், மதியம் லட்சுமி அம்சமாகவும், மாலை துர்கையின் அம்சத்தோடும் இருப்பதாக ஐதீகம்.

சிறிய கோவில். உள் சுற்றில் ஒரு சிறிய கதவு வழியாக குளத்திற்கு சென்று விடலாம். கொஞ்சம் அதிகமாக மழை பெய்தால் தண்ணீர் கோவிலுக்குள் வந்து விடும் என்றுதான் தோன்றுகிறது. அம்மன் சன்னதிக்கு வெளியே மர விதானத்தில் நவகிரஹங்களை காண முடிகிறது. நாங்கள் சென்ற பொழுது பெண்கள் லலிதா சஹஸ்ரநாமம் வாசித்துக் கொண்டிருந்தார்கள். கோவிலை வலம் வந்து நமஸ்கரித்தோம்.

அப்போது உன்னி என்பவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டு எங்களை பற்றி விசாரித்தார். பிறகு எங்களை அங்கிருக்கும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவருடைய மற்ற சகாக்களை அறிமுகம் செய்தார். முன்பெல்லாம் இந்த குளத்தில் யாரும் குளிக்க மாட்டார்கள். இப்போது குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களால் குளம் அசுத்தமாகி விட்டது. மேலும் மிகவும் புராதனமான இந்த கோவிலை செப்பனிட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது குளத்தை சீர் செய்து, கோவிலை புதுப்பிக்க ஒரு கமிட்டி அமைத்திருக்கிறோம். எப்பொழுது புனருத்தாரணம் என்று முடிவு செய்து பிறகு உங்களுக்கு தெரிவிக்கிறோம், உங்கள் விலாசம் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று விலாசம் கேட்டு வாங்கிக் கொண்டார்.  

அங்கிருந்த மற்றொரு நபர், இந்திரா காந்தி இந்தக் கோவிலுக்கு வந்து தொழுத பிறகுதான் 'கை' சின்னத்தை காங்கிரஸ் கட்சியின் சின்னமாக தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றார் என்னும் ஒரு ஸ்வாரஸ்யமான தகவலையும் சொன்னார். அதோடு மட்டும் இல்லாமல் அருகில் இருக்கும் ஒரு சிவன் கோவிலில் இன்றுதான் பிரதிஷ்டை தினம், அங்கும் சென்று விட்டு செல்லுங்கள் அப்போதுதான் உச்சிகால பூஜை நேரமாக இருக்கும். என்றார். நாங்களும் அவ்விதமே அந்த சிவன் கோவிலுக்கும் சென்று வணங்கினோம். அந்த சிவன் கோவிலில் தக்ஷிணாமூர்த்திக்கென்று தனி சந்நிதி இருக்கிறது. கேரளாவில் சாதாரணமாக எந்தக் கோவிலிலும் தக்ஷிணாமுர்த்திக்கென்று தனி சந்நிதி கிடையாது. அங்கு எங்களுக்கு தனியாக பிரசாதமும் திரு.உன்னி வாங்கித் தந்தார். மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினோம்.

எங்க வீட்டு ஐயாவுக்கு ஏனோ மலம்புழா நீர் தேக்கத்திற்கு செல்ல வேண்டும் என்று ஒரு ஆசை. அங்கு தண்ணீர் எல்லாம் இருக்காது என்று நாங்கள் சொல்வதை கேட்காமல் மலம்புழாவிற்கு வண்டியை விடச் சொன்னார். வந்து விட்டோமே என்று சில புகைப் படங்கள் எடுத்துக் கொண்டு கோவை நோக்கி பயணித்தோம். 

எங்கேயாவது பகல் உணவு சாப்பிட வேண்டுமே.. நல்ல ஹொட்டேல் எங்கே இருக்கும் என்று தேடிக் கொண்டே வந்தோம். என்னுடைய சாய்ஸ் அன்னபூர்ணா கௌரிசங்கர். ஆனால் சரவணபவன் 6 கி.மீ. சரவண பவன் 5கி.மீ. என்ற போர்ட் எங்கள் பசியை அதிகப் படுத்தியது. கேரள எல்லை முடிந்து, தமிழ் நாடு தொடங்கும் இடத்திலேயே இருக்கிறது. சரவண பவன் இருக்கிறதே, இங்கேயே சாப்பிட்டு விடலாம் என்று உள்ளே சென்றதும்தான் தெரிகிறது, அது சரவண பவன் இல்லை, ஸ்ரீ சரவண பவன். அதே போன்ற போர்ட், அதே போன்ற எழுத்துக்கள், ஆனால் கண்ணுக்கு தெரியாமல் ஸ்ரீ என்னும் எழுத்து. இப்படியும் ஒரு ஏமாற்று!

@Marudhamalai, taken in Panorama mode

என் மகன் வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா சென்டருக்கு செல்ல வேண்டும் என்று விரும்பியதால், நேரே அங்கு சென்று விட்டோம். மிகப் பெரிய, அழகிய வளாகம். காற்று நம்மைத் தள்ளுகிறது. என்கணவரும்  மகனும் ஆண்களுக்கான சூரிய குண்டத்தில் குளித்தார்கள், நானும் என் மருமகளும் பெண்களுக்கான சந்திர குண்டத்தில் குளிக்காமல் அவர்கள் சொல்லிய முறைப்படி நீரை ப்ரோக்ஷித்துக் கொண்டோம். பின்னர் லிங்க பைரவியை தரிசித்து,  

தியான லிங்கத்தின் முன் அமர்ந்து தியானம் செய்ய முயற்சித்தோம். 
பின்னர் அங்கிருக்கும் காண்டீனில் வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டு, காபி அருந்தி அங்கிருந்து கிளம்பி கோவை ரயில் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கினோம்.

Esha Centre


இங்கே உள்ளே செல்லும் முன் நம்முடைய செல்ல போனை செருப்பு வைக்கும் இடத்திலேயே தனியாக ஒரு பையில் பூட்டு கொடுத்து விட்ஸ் வேண்டும். ஆனால் சிலர் செல் போனை உள்ளே கொண்டு வந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். எப்படி என்று புரியவில்லை.

"இரவு உணவுக்கு அன்னபூரணா செல்லலாமே" என்றேன், "அதற்க்கு மூன்று கி.மீ. போகணும், இப்போது இங்கேயே ஏதாவது சாப்பிடலாம்".என்றார்கள். சரி என்று பக்கத்தில் இருந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம். ஆஹா! இதுவல்லாயோ இட்லி! இதுவல்லவோ சாம்பார்! என்றாள் அனு. "அட சாப்பாட்டு ராமி! ரெண்டு நாளில் உனக்கு நாக்கு செத்துப் போய் விட்டதா?"
"என்ன செய்வது? எண் சாண் உடம்புக்கு வயிறுதானே பிரதானம்?"
"திருத்த முடியாது..."

மறு நாள் மதியம் 3:30க்கு எங்களுக்கு சென்னை செல்லும் சதாப்தியில் டிக்கெட். நிறைய நேரம் இருக்கிறதே மருத மலை சென்று வரலாம் என்று முடிவு கட்டினோம். மறு நாள் காலையில் என் அண்ணா அனுப்பியிருந்த வாட்ஸ் ஆப் மெஸேஜ் பார்த்த பிறகுதான் எனக்கு அன்று நக்ஷத்திர பிறந்த நாள் என்று தெரிய வந்தது. ஆஹா! பிறந்த நாள் அன்று மருத மலை முருகன் கோவிலுக்குச் செல்லப் போகிறோமா? என்ன பாக்கியம்! என்று புளகாங்கிதமடைந்தேன்! ஆகவே, கோவிலுக்கு செல்லும் முன் எதுவும் சாப்பிட வேண்டாம் என்று அண்ணா பூர்ணாவுக்குச் சென்றாலும் எதுவும் சாப்பிடாமல் ஜூஸ் மட்டும் குடித்தேன். 

மருத மலைக்கு சென்று இருபது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. எக்கச்சக்க வித்தியாசம்!. சமீபத்தில் குடமுழுக்கு ஆகியிருக்கிறதோ என்னவோ, கோபுரம் பளிச்சிட்டது. எங்கள் ஊரில் தரிசிக்க முடியாத வரதராஜ பெருமாளை இங்கு ஒரு தனி சந்நிதியில் தரிசித்தோம். 
முருகனை வணங்கி கீழே இறங்கினோம்.

தாகமாக இருந்ததால் இளநீர் அருந்தினோம். முதலில் குடித்த இளநீர் அத்தனை சுவையாக இல்லை, அதை கடைக்காரரிடம் சொன்னதும் வேறு ஒரு இளநீர் சீவிக் கொடுத்தார். இது சுவையாக இருந்தது. முதலில் குடித்தது மூன்று வாரங்களில் காய்க்கும்  மரத்தின் இளநீராம், இரெண்டாவதாக குடித்தது மூன்று மாதங்களில் முறையாக காய்க்கும் மரத்தின் இளநீராம். 
"அட! காலக் கொடுமையே" என்றாள் அனு

மதிய உணவை என் அத்தை பெண் வீட்டில் முடித்துக் கொண்டு, ரயிலைப் பிடித்தோம். அதில் எங்களுக்கு வாய்த்தது நடு வரிசையாகப் போய் விட்டது. எதிர் எதிரே இருக்கைகள் அமைந்து விட்டதால் காலை நீட்ட முடியாமல் ஒரே பொசிஷனில் உட்கார்ந்த படியே பயணிக்கும்படியாகி விட்டது. மூன்று நாட்களுக்கு மேல் கஷ்டப் பட்டேன். கடுகு எண்ணெய் வேப்ப  எண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் இரும்பு கரண்டியில் சூடு செய்து, எங்கெல்லாம் வலிக்கிறதோ அங்கெல்லாம் தடவி, ஊற வைத்து,வெந்நீர் ஊற்றி குளித்து கொஞ்சம் சரி செய்து கொண்டிருக்கிறேன், அடுத்த டூர் காத்துக்கொண்டிருக்கிறதே...! ராதே கிருஷ்ணா!