சிதம்பரத்தில் ஒரு மதுரை
கோலாப்பூரிலிருந்து சதாராவிற்கு ஒரு கார் அமர்த்திக்கொண்டு சென்றோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே காம்ப்ளிமென்ட்ரி ப்ரேக்ஃபாஸ்ட் இருந்தது. உப்புமா, ப்ரெட் டோஸ்ட், கார்ன் ஃபிளேக்ஸ் இருந்தன. நான் ப்ரெட் டோஸ்டும், கார்ன் பிளேக்ஸ்சும் எடுத்துக் கொண்டேன். காலை 9:30க்கு கோலாப் பூரிலிருந்து கிளம்பிய நாங்கள் 11:30க்கு சதாராவை அடைந்தோம். சுகமான, சௌகரியமான சாலைப் பயணம். மலை, வயல், ஓடை என்று கண்ணையும், கருத்தையும் கவரும் காட்சிகள்
சதாராவில் ரத்ன சபாபதிக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. அபிஷேகம் முடிந்து தீபாராதனையில் ஆடலரசனை தரிசித்தோம். சிதம்பர ரகசியத்தை தரிசிக்க முடியுமா? என்று கேட்டதும், தலைக்கு 50 ரூபாய் டிக்கெட் வாங்க வேண்டும் என்றார்கள். புனாவிலிருந்து வந்திருந்த மற்றொரு குடும்பத்தினர்களுக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாதாம், "உங்களால் நாங்களும் பார்த்தோம்" என்றார்கள்.
1980ஆம் வருடம் சாதுர்மாஸ்ய விரதத்தின் பொழுது சதாராவில் தங்கிய மஹா பெரியவராகிய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள், சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் கோவிலைப்போல போல ஒரு கோவிலை சதாராவில் நிர்மாணிக்க விரும்பினார். சாமண்ணா என்னும் பெரியவாளின் பக்தர் நிலம் கொடுக்க, தமிழ் நாடு, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநில அரசுகள் ஒவ்வொரு கோபுர கட்டுமான செலவை ஏற்றுக்கொள்ள, கோவிலின் பிரதான மண்டபத்தை கட்ட தேவையான தேக்கு மரங்களை கேரள அரசு வழங்க, நல்ல மனம் கொண்ட பக்தர்களின் நன்கொடையால் இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டு 1984 வருடம் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பூர்வ சிதம்பரத்தோடு ஒப்பிடுகையில் மிகச்சிறியது. தெற்குப் பார்த்த நடராஜர். இந்த பிரதான கோபுரத்தைத்தான் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழக அரசு கட்டிக் கொடுத்தது.
உள்ளே நுழைந்ததும் இடது புறம் கிழக்குப் பார்த்த விநாயகர் சந்நிதி. பிரும்மாண்டமான விநாயகர். அதற்கு அடுத்து நின்ற கோலத்தில் கூப்பிய கரங்களோடு இருக்கும் பெரிய ஆஞ்சனேயருக்கு ஒரு சந்நிதி. மேற்கு கோபுரத்தை அடுத்து ராதா கிருஷ்ணர் சன்னிதி. அதை அடுத்து ஆதி மூலநாதர் சந்நிதி. அங்கு தரிசித்து விட்டு, வலம் வரும்பொழுது நவக்கிரக சன்னிதி. இங்கெல்லாம் வணங்கி விட்டு கிழக்கு வாசல் வழியே வெளியே சென்றால் ஐயப்பனுக்கு ஒரு சிறிய கோவில்.
![]() |
| கோவில் பிரகாரத்திலேயே குளம் |
முழுவதும் தேக்கு மரத்தால் கூரை அமைக்கப்பட்ட பிரதான மண்டபத்தில் மஹா பெரியவரின் படம் ஒரு சிறிய பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிரதான மண்டப சுவர்களில் பரத நாட்டிய கரணங்களை சிற்பங்களாக வடித்திருக்கிறார்கள். பழைய கோவிலின் சிற்பங்களின் அழகு, துல்லியம், உயிர்ப்பு இவைகளோடு ஒப்பிடுகையில்...ஹும்! தென்னிந்திய பாணியில் ஒரு கோவில் என்ற வகையில் செல்லலாம். செல்லாவிட்டாலும் பெரிதாக எதையும் தவற விட்டவர்களாக மாட்டோம். ஒரிஜனல் கோவிலில் கிடைக்கும் இறையனுபவத்தையெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்.
இந்த கோவிலில் செய்யப்படும் பூஜைகள், அதற்கான கட்டணங்கள் இவைகள் அலுவலகம் போன்ற ஒன்றின் போர்டில்
குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அங்கேயே உருத்திராட்சம், ஸ்படிக மாலை, ஊதுபத்தி, சூடம் போன்ற பூஜைபொருள்களும், ஸ்வாமிக்கும் அம்மனுக்கும் சாற்றுவதற்கு வேஷ்டி மற்றும் புடவை போன்றவைகளும் கிடைக்கின்றன. செப்டம்பரில் விமானங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைகளை துவங்க உள்ளார்களாம்.
நாங்கள் கோவிலுக்குள் நுழைந்த பொழுது, அங்கு வேலை செய்யும் ஒருவர், "வாங்கம்மா, ஊரிலிருந்து வரீங்களா? நான் மதுரை.." என்று வரவேற்றார். சிதம்பரமும், மதுரையும் பிரிக்க முடியாதவைதான் போலிருக்கிறது.



















































