கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, August 10, 2019

கேட்ட வரம்

கேட்ட வரம்
 

உப்பரிகையில் நின்று கொண்டிருந்த தசரத சக்கரவர்த்தியின் கண்களில், கீழே நந்தவனத்தில் நடந்து கொண்டிருந்த ராமனும், சீதையும் பட்டார்கள். சீண்டலும்,சிணுங்கலும், சிரிப்புமாக நடந்து கொண்டிருந்த அவர்களை பார்க்க பார்க்க அவருக்கு மகிழ்ச்சி பொங்கியது. 


"எதைப்பார்த்து இத்தனை சந்தோஷம் உங்களுக்கு?"  குரல் கேட்டதும்தான், கௌசல்யா அங்கு வந்திருப்பதை உணர்ந்தார். 

"அங்கே பார், நம் குழந்தைகளின் சந்தோஷத்தை? அதை விட வேறு எது நமக்கு மகிழ்ச்சி தரும்?"

தசரதர் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்த கௌசல்யா,"நம் குழந்தைகளாகவே இருந்தாலும், தனிமையில் இருக்கும் தம்பதிகளை கவனிப்பது தவறு. மேலும், பெற்றோர்களின் கண் மிகவும் பொல்லாதது. அவர்களுக்கு கண்ணேறு பட்டு விடப்  போகிறது நகர்ந்து வாருங்கள்." கணவரை நகர்த்தி அருகில் இருந்த ஊஞ்சலில் அமர வைத்தாள். 

" நேற்றுதான் நடந்தது போல இருக்கிறது...! விஸ்வாமித்திரர் வந்து தன் யாகத்தை பாதுகாக்க ராமனை துணைக்கு அழைத்தது, நான் தயங்கியது, பிறகு வசிஷ்டர் ஆலோசனைப்படி அனுப்பி வைத்தது, பிறகு ராமன் ஜனகரின் சிவ தனுசை முறித்து சீதையை மணக்கும் வாய்ப்பை பெற்று விட்டான் என்று செய்தி வந்தது...எல்லாம் நேற்றுதான் நடந்தது போல இருக்கிறது." பழைய நினைவுகளில் ஆழ்ந்த தசரதர் தொடர்ந்து, "அப்போது குழந்தை பருவத்தை கடந்து, யுவனாக மாறிக் கொண்டிருந்த ராமன், இன்று கட்டிளம் காளையாகி விட்டான், அவனுக்காகவே பிறந்தது போன்ற, எல்லாவற்றிலும் அவனுக்கு ஈடான மனைவி சீதா. சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள், என்றாலும்.. " என்று இழுத்து நிறுத்த, 

"அவர்களின் சந்தோஷத்திற்கு சாட்சியாக இன்னும் ஒரு மழலைச் செல்வம் வாய்க்கவில்லை என்பதுதானே உங்கள் வருத்தம்?" என்ற கௌசல்யா, தொடர்ந்து "என்ன செய்வது இது சூரிய வம்சத்திற்கு ஏற்பட்ட சாபமோ? ஹரிச்சந்திர மஹாராஜாவுக்கே நீண்ட காலம் கழித்துதான் லோகிதாசர் பிறந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் பாட்டனார் திலீப சக்ரவர்த்திக்கும் இது நிகழ்ந்தது, நமக்கும் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த பிறகுதானே மழலைச் செல்வம் வாய்த்தது? ராமனுக்கும்  பிறக்கும். ஆனால் அதற்கு முன்னால் ராமனுக்கு இன்னும் கூடுதல் பொறுப்புகள் கொடுப்பது நல்லதில்லையா?"

"பொறுப்புகளை சுமக்க ஆரம்பித்து விட்டால் இறக்கி வைக்க முடியாது கௌசல்யா, பாவம் அவன் குழந்தை, இன்னும் சிறிது நாட்கள் சந்தோஷமாக இருக்கட்டுமே. நான் திடமாகத்தானே இருக்கிறேன்.."ஊஞ்சலில் நன்கு சாய்ந்து உட்கார்ந்து கொண்டு கைகள் இரண்டையும் பக்கவாட்டில் போட்டுக்கொண்டார்.

பதில் எதுவும் சொல்லாத கௌசலை, மெல்ல சிரிப்பதை பார்த்த தசரதர்,"எதற்காக இந்த சிரிப்பு?" என்றதும்,

"வேறு ஒன்றும் இல்லை, பெண்களைப் பெற்றவர்களுக்கும், பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை நினைத்தேன், சிரிப்பு வந்தது"

"என்ன வித்தியாசம்?"

"பெண்ணைப் பெற்றவர்கள், அந்த பெண்ணை குழந்தையாக கருதுவது சொற்ப காலத்திற்குத்தான். மிகச்சிறிய வயதிலிருந்தே எதிர்காலத்தில் அவள் ஒரு குடும்பத்தலைவியாக விளங்க வேண்டியதற்காக அவளை தயார் செய்யத் தொடங்கி விடுவார்கள். ஆனால் பிள்ளையைப் பெற்றவர்களோ பிள்ளைக்கு எத்தனை வயதானாலும் அவனை குழந்தையாகவே நினைக்கிறார்கள்."

"நீ ஏதோ பூடகமாக பேசுகிறாய் கௌசல்யா.."

"இல்லை அரசே, தெளிவாகத்தான் கூறியிருக்கிறேன். எனக்கு மாலை நேர பூஜைக்கு நேரமாகி விட்டது, வருகிறேன்"

"பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாதியில் விட்டுவிட்டு செல்வது தவறான பழக்கம்"

"என்ன செய்வது? அரங்கன் அழைக்கிறானே..?"

"ம்ம்.. நீ ரங்கநாதனை பூஜித்து, பூஜித்து, அவனே கீழே இறங்கி வந்து விடப் போகிறான்.."

"அப்படி வந்தாலும் வந்திருப்பது அவன்தான் என்று புரிந்து கொள்ளும் ஞானம் வாய்க்க வேண்டாமா?"

"என்ன, இன்றைக்கு ஏதோ பூடகமாகவே பேசுகிறாய்?"

பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே கௌசல்யா சென்று விட, தசரதனின் மனதுக்குள் ஏகப்பட்ட எண்ணங்கள் , ரிஷி பத்தினியாகியிருக்க வேண்டியவள் நாடாளும் அரசனின் பட்ட மகிஷி ஆகி விட்டாள். என்ன சொல்கிறாள்? ராமனுக்கு முடி சூட்ட வேண்டும் என்கிறாளா? எதையும் உடைத்து பேசும் பழக்கம் கிடையாது. அவள் மனதில் உள்ளது சுமித்ராவுக்கு தெரிந்திருக்கும், ஆனால் அவள் தனக்கென்று கருத்து எதுவும் இல்லாதவள். கைகேயிடம்தான் கேட்க வேண்டும். அதற்கு முன்னால் நம் குலகுரு வசிஷ்டரிடம் சென்று ஆலோசனை பெற்று வரலாம்.

*******************************************************************************************
வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு அரசர் தசரதர் வரப்போகிறார் என்பதை அறிந்து அங்கிருந்த மாணாக்கர்கள் பரபரப்பு அடைந்தார்கள். 

"தசரத சக்கரவர்த்தி வருகை தரப்போகிறாராமே? என்ன விஷயம்? ஏதாவது அரசாங்க ஆலோசனையா? நம்மால் அவரை அருகில் பார்க்க முடியுமா? பேச முடியுமா?" ஏகப்பட்ட யூகங்கள், ஹேஷ்யங்கள், ஆனால் அரசர் வரும்பொழுது அவர்கள் யாரும் அருகில் இருக்க அனுமதிக்கப்படவில்லை. சற்று தொலைவில் இருந்தபடிதான் அரசரை பார்க்க முடிந்தது.

வந்து தன்னை வணங்கிய தசரதனை ஆசிர்வதித்த வசிஷ்டர், எதுவும் பேசாமல் அருகிலிருந்த மரத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். அதில் தாய்  பறவை ஒன்று கொஞ்சம் வளர்ந்து விட்ட தன் குஞ்சிற்கு பறக்க கற்றுக் கொடுப்பதை தீவிரமாக வேடிக்கைப் பார்த்தார். 

தாய்க்கு அருகில் உட்கார்ந்திருக்கும் குஞ்சினை பலவிதமாக பறக்கத் தூண்டும் தாய் பறவை, அதை சுற்றி சுற்றி பறந்து, குஞ்சின் கண்ணிற்குப் படாமல் மறைந்து கொள்ள, குஞ்சு பறக்கத் தொடங்கியது. 

"பார்த்தாயா தசரதா? பறவைகள், விலங்குகள் எல்லாமே உரிய பருவம் வந்ததும் தம் குழந்தைகள் சுயமாக பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் செயல்படுகின்றன.  தன்னையே சார்ந்து இருப்பதை விரும்புவதில்லை."  என்று கூறியதும், தசரதனுக்கு சட்டென்று மனதுக்குள் ஒரு பொறி தட்டியது. 

"நீ வந்த விவரத்தை கூறவே இல்லையே? என்ன விஷயமாக வந்தாய்?"

"இப்போது இந்த பறவை செய்ததைத்தான் நானும் செய்ய விரும்புகிறேன். ராமனுக்கு முடிசூட்ட விரும்புகிறேன். அதுவும் கூடிய விரைவில் அதை நடத்த முடிந்தால் மிகவும் மகிழ்ச்சி. அதற்கு ஒரு பொருத்தமான நாளை தாங்கள்தான் பார்த்து சொல்ல வேண்டும்." 

முகம் மலர தசரதனை மீண்டும் ஆசிர்வதித்த வசிஷ்டர், "சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ஜோதிடம் பார்க்கக்கூடாது. நாளை காலை நானே அரண்மனைக்கு வருகிறேன், அப்போது முடிவு செய்யலாம்." என்றதும், ஒரு விடுதலை உணர்ச்சியோடும், மகிழ்ச்சியோடும், தசரதன் நிம்மதியாக உறங்கச் செல்ல, தன் அரண்மனையில், உறங்காமல் விழித்துக் கொண்டிருந்தான் ராமன்.

*******************************************************************************************
ராமா என்ன இது?  உன் தந்தை உனக்கு பட்டம் கட்ட ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார். இதற்காகவா நீ இங்கு வந்தாய்? கர தூஷணர்களை அழிக்க வேண்டும். கபந்தனுக்கு மோட்சம் அளிக்க வேண்டும். இதை எல்லாவற்றையும் விட ராவண சம்ஹாரம். நமக்கு உதவி செய்வதற்காக வந்த வாலி, வந்த நோக்கத்தை மறந்து எதிரியோடு கை கோர்த்துக் கொண்டு விட்டான், அவனை அவனறியாமல் அப்புறப் படுத்த வேண்டும். அது மட்டுமா? எத்தனை ரிஷிகள் உனக்காக வனத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? சபரி உனக்காகவே தவம் இயற்றிக் கொண்டிருக்கிறாள். இவை எல்லாவற்றையும் மறந்து நீ பட்டம் கட்டிக் கொண்டு அரச போகத்தை அனுபவிக்கப் போகிறாயா? இந்த பட்டாபிஷேகம் நடக்கக்கூடாது. 



பலவிதமாக சிந்தித்த ராமன் பட்டாபிஷேகத்தை எப்படி நிறுத்துவது என்று யோசித்தான். மிகவும் மகிழ்ச்சியோடு எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் தந்தையிடம் எப்படி இதை கைவிடுங்கள் என்று சொல்வது? இதற்கு சிற்றன்னை கைகேயிதான் உதவ முடியும். ராமன் கைகேயியை சந்திக்க முடிவு செய்தான். 

அவன் சிற்றன்னை கைகேயியின் அரண்மனைக்குள் நுழைந்த பொழுது, அவனை வணங்கி, நின்ற தாதிப்பெண்களை ஜாடைக் காட்டி, வெளியே போகச்சொன்னான். தன் பஞ்சணையில் அமர்ந்து தன்னுடைய குதிரைக்காக வாங்கியிருந்த கழுத்து மணியை அழகு பார்த்துக் கொண்டிருந்த கைகேயியின் பின்புறமாகச் சென்று அவள் கண்களை பொத்தினான். 

பஞ்சு போன்ற அதே சமயத்தில் உறுதியான கரங்கள். மேனியிலிருந்து புறப்பட்ட சுகந்தம், "ராமா, என்ன இது விளையாட்டு? சிறு குழந்தை போல? 

"உங்களுக்கு நான் எப்போதுமே குழந்தைதானே அம்மா?"

"சரிதான், இதை சீதா கேட்டால் என்ன நினைத்துக் கொள்வாள்? ஆமாம், என்ன நீ மட்டும் வந்திருக்கிறாய்? சீதா எங்கே?" 

"ஏன்? நான் தனியாக வந்தால் ஆகாதா? பரதன் வேறு மாமா வீட்டிற்கு சென்றிருக்கிறான், தனியாக இருப்பீர்களே? பேசிக் கொண்டிருக்கலாம் என்று வந்தால்.." ராமன் போலிக் கோபத்தோடு எழுந்திருக்க, 

"இன்னும் நீ அதே பழைய ராமன்தான். சிடுக்கென்று வரும் அதே கோபம். நீ சிறுவனாக இருந்த பொழுது, பரதன் என் மடியில் அமர்ந்தால் உனக்கு காணப்  பொறுக்காது.."கைகேயி சிரித்துக் கொண்டே ராமன் தோளில் கை வைத்து இருக்கையில் அமர வைத்தாள். 

"என்ன சாப்பிடுகிறாய்?" என்று கை தட்டி தாதியரை அழைக்க முற்பட, அவளை தடுத்த ராமன்," எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம்.." என்று இழுத்து நிறுத்த, 

"வேறு என்ன வேண்டும்?" என்று அவனை கூர்மையாக பார்த்தபடி அவனுக்கு எதிரே இருந்த ஆசனத்தில் அமர்ந்த கைகேயியை பார்த்த ராமன் மனதுக்குள் வியந்தான். இந்த கூர்மைதான் தந்தைக்கு இவள் மீது அதிக ப்ரேமையை உண்டாக்கியதோ? அழகு, ஆளுமை, போர் களத்தைக் கண்டு அஞ்சாமல் லாகவமாக தேரை செலுத்தும் திறமை, எந்த அரசனுக்குத்தான் பிடிக்காது? அரசப்பதவி என்பது யானையின் மீது சவாரி செய்வதைப் போன்றது. கீழிருந்து பார்க்கிறவர்களுக்கு அதன் கம்பீரம் மட்டுமே தெரியும், அதிலிருக்கும் ஆபத்தையும், சிரமங்களையும் உணர்ந்து நடந்து கொள்ளும் மனைவியை கொண்டாடத்தானே தோன்றும். 

எதுவோ சொல்ல வந்துவிட்டு எதுவும் பேசாமல் தன்னையே வெறித்து  பார்த்தபடி அமர்ந்திருக்கும் மகனை பார்த்த கைகேயி," "என்ன ராமா? ஏதோ வேண்டும் என்றாய்..?"

சிற்றன்னையின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் வைத்திருந்த குதிரைக்கான கழுத்து மணியை கைகளில் எடுத்துக் கொண்ட ராமன்,"குதிரைகள் மீது நீங்கள் கொண்டிருக்கும் பிரேமை இன்னும் குறையவே இல்லை"

"ஆமாம், ஏழு சகோதரர்களுக்குப் பிறகு ஒரு சகோதரியாக பிறந்ததாலோ என்னவோ ஆண்களைப் போலவே அவர்களுக்குரிய எல்லா விளையாட்டுகளையும் கற்றுக் கொண்டேன். குறிப்பாக, குதிரை ஏற்றமும், தேர் ஓட்டுவதிலும் தனி ஈடுபாடு". 

"அந்த திறமையை கொண்டுதான் சம்பாசுரனுக்கு எதிராக நடத்தப்பட்ட யுத்தத்தில் என் தந்தைக்கு தேர் ஓட்டி உதவினீர்களோ?"

"அதெல்லாம் பழைய கதை. நீ என்னிடம் ஏதோ கேட்க நினைக்கிறாய், அதை நேரிடையாக சொல்லாமல் சுற்றி வளைக்கிறாய்"

"சில நொடிகள் தாமதித்த ராமன், அரசாங்கம் என்றால் எத்தனை போர்? எதற்கு இவ்வளவு யுத்தம்?

"சரிதான், விரைவில் பட்டம் சூட்டிக்கொண்டு நாட்டை ஆள வேண்டியவன் பேசுகிற பேச்சா இது?"

"அம்மா, உண்மையில் என்னை விட பரதனுக்குத்தான் நாட்டை ஆளும் தகுதி நிறைய இருக்கிறது என்று தோன்றுகிறது."

"ராமா, என்ன ஆயிற்று இன்று உனக்கு? இது என்ன பேச்சு? மூத்தவன் நீ இருக்க, இளையவன் பரதன் அரசனாவதா? உன் தந்தை உனக்கு விரைவில் பட்டம் கட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார்".

"எனக்கும் அது தெரியும் தாயே" என்று கூறியபடியே தன் ஆசனத்தில் இருந்து எழுந்த ராமன், கைகேயியின் கரங்களைப் பற்றிக் கொண்டு, அவள் கண்களை உற்றுப் பார்த்து, "ஆனால் அது நடக்கக் கூடாது.தாங்கள்தான் என் பட்டாபிஷேகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த வரத்தை எனக்கு அருள வேண்டும்" என்றதும், 

"ராமா என்ன பிதற்றுகிறாய்?" 

"இல்லை தாயே, நான் வந்த நோக்கம் அயோத்தியில் அரசனாக ராஜா போக வாழ்க்கையை இப்போது அனுபவிப்பது அல்ல, எனக்கு வேறு சில கடமைகள் இருக்கின்றன."

இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க முயலுவது போல அப்படி என்ன பொல்லாத கடமை. 

அம்மா, எல்லாவற்றையும் உடைத்துக் கூற முடியாது. சில வருடங்கள் நான் வனவாசம் மேற்கொண்டுதான் ஆக வேண்டும்.

ராமன் கூறியதை கேட்ட கைகேயி காதுகளை பொத்திக் கொண்டாள். "என்ன விபரீதம்? நாடாள வேண்டியவன் காட்டிற்குச் செல்வதா? ராஜாங்கம் என்னவாகும்? 
"அதற்குத்தான் என் தம்பி பரதன் இருக்கிறானே?"

"கொஞ்சம் கூட நியாயமில்லாத செயல். அதற்கு பரதன் உடன்படுவான் என்று எப்படி நினைக்கிறாய்?" 

"பரதன் தன் பொறுப்பை தட்டிக் கழிக்க மாட்டான். நான் சொன்னால் ஏற்றுக் கொள்வான். அவனை சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு."

"இந்த அடாத செயலுக்கு உன் தந்தை உடன்படுவாரா?"

"அவரை உடன்படச் செய்யத்தான் உங்களை வேண்டுகிறேன். உங்களால்தான் அது முடியும்." 

"உங்கள் அரசியல் சதுரங்கத்தில் என்னை பகடைக் காயாக்கப் பார்க்கிறாய்." 

ராமன் கைகேயியின் கரங்களை எடுத்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். "வேறு வழியில்லை அம்மா. என்னை மன்னித்து விடுங்கள்". 

ராமனின் பார்வையும், ஸ்பரிசமும் கைகேயியின் வாதிடும் குணத்தை மாற்றின. 

"நான் என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?" 

"எனக்கு பட்டம் கட்டப் போவதாக தந்தை கூறினால், அதற்கு ஒப்புக் கொள்ளாதீர்கள். அது போதும்." 

"இப்படி ஒரு இழி செயலை புரிந்த என்னை காலமெல்லாம் உலகம் தூற்றாதா?" 

"என்ன செய்வது அம்மா? காரணமில்லாமல் காரியம் இல்லை. எல்லா செயல்களும் நல்லதா கெட்டதா என்பதை அது நிகழும் நேரத்தை வைத்து மட்டும் முடிவு செய்ய முடியாது.  மேலும் சில நன்மைகள் நடக்க வேண்டுமென்றால், சிலர் தியாகம் செய்துதான் ஆக வேண்டும். உங்களுடைய இந்த தியாகத்தின் பரிசை வருங்கால பெண் குலத்திற்கு நான் வழங்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் இந்த தேசத்தில் பெண்கள் அரசியலில் ஈடுபட்டு பெரிய பதவிகளை வகிப்பார்கள். ஆண்கள் மட்டுமே கோலோச்சிய துறைகளிலும் அவர்கள் தன் முத்திரையை பதிப்பார்கள்." 

"இதுதான் உன் சங்கல்பம் என்றால் அது நிறைவேற தடையேது சீதாராமா?" பேசிக்கொண்டே கைகேயி உறக்க நிலைக்குச் செல்ல, அவளை படுக்கையில் கிடத்திய ராமன் மின்னலென வெளியேறினான்.

அவன் செல்லும் வழியில் தூரத்தில் மந்தரை வருவதைப் பார்த்து புன்முறுவல் பூத்துக் கொண்டான். மனதிற்குள் சரஸ்வதி தேவியை துதித்தான். "வாக் தேவி தாயே, என் சிற்றன்னை கைகேயியை பார்க்கச் செல்லும் இந்த மந்தரையின் வாக்கை செல்லும் வாக்காகச் செய். இவள் சொல்வதை என் தாய் கைகேயி கேட்க வேண்டும். என்று பிரார்த்தனை செய்தான். 

அங்கே   கண் விழித்த கைகேயி குழம்பினாள்."என்ன இது பகலில் இத்தனை நேரம் தூங்கி விட்டேன்? என்னென்னவோ கனவு. அது கனவா? நிஜமா? ராமன் மட்டும் வந்தது போல இருக்கிறது. என்னென்னவோ பேசினான். அவனுக்கு பட்டாபிஷேகமாம், ஆனால் பரதன்தான் அரசனாக வேண்டுமாம், எனக்கு கெட்ட பெயர் ஏற்படுவது போலக்கூட தோன்றியது... என்ன கனவு இது? என்று அவள் குழம்பிக் கொண்டிருக்க, ஒரு தேவ நாடகத்தை அரங்கேற்ற மந்தரை அவள் அரண்மனைக்குள் நுழைந்தாள்.

Tuesday, August 6, 2019

நழுவ விட்ட மஹாலக்ஷ்மி, கை கொடுத்த சஹாயாத்ரி

நழுவ விட்ட மஹாலக்ஷ்மி, 
கை கொடுத்த சஹாயாத்ரி

கோலாப்பூர் ஹோட்டலிலிருந்து கிளம்பும் பொழுது என் கணவர் சாதாரணமாகத்தான் இருந்தார். அந்த கொண்டை ஊசி வளைவுகளில் ஏறி இறங்கியது வயிற்றை பிரட்டுவதாக கூறினார். அதோடு பகல் காட்டில் குடித்த சாய்,  உடனே கீழே காளேஸ்வர் கோவில் வாசலில் குடித்த லஸ்ஸி எல்லாம் வயிற்றுக்கு   ஒவ்வாமல் வாமிட்டிங், வயிற்றுப்போக்கு என்று அவஸ்தைப்பட அங்கிருந்த ஸ்டேஷன் இன்சார்ஜிடம் நிலைமையை விளக்கி, என் கணவரை எங்காவது படுக்க வைக்க முடியுமா? என்று கேட்டதற்கு "அதெல்லாம் முடியாது,  பிளாட்பாரத்தில் இருக்கும் பெஞ்சுகள் ஏதாவது ஒன்றில் படுக்க வையுங்கள்" என்று கூறி விட்டார்.  இத்தனைக்கும் நாங்கள் முதல் வகுப்பில் பயணச்சீட்டு எடுத்திருந்தோம். அங்கு முதல் வகுப்பு பிரயாணிகளுக்கு என்று தனி வெயிட்டிங் ரூம் இல்லை. எனவே பொதுவான தங்கும் அறையில்தான் நாங்கள் இருக்க வேண்டியிருந்தது.  சற்று நேரம் ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு சற்று தெளிவானார்.

நாங்கள் மும்பை சென்று என் நாத்தனாரின் கணவரை பார்த்து விட்டு அங்கிருந்து மந்த்ராலயம்        சென்று விட்டு பெங்களூர்            திரும்புவது என்று திட்ட மிட்டிருந்தோம், ஆனால் என் கணவரின் உடல் நிலையை கருதி மும்பையிலிருந்து பெங்களூர் திரும்பி விடலாம் என்று திங்கட்கிழமை பயணம் செய்ய விமானத்தில் டிக்கெட் புக் பண்ணிய என் கணவர் மும்பை, பெங்களூர் ரயில் டிக்கெட்டை கான்சல் செய்தார். அதில் எது தவறாகியது என்று தெரியவில்லை. கோலாப்பூர், மும்பை ரயில் டிக்கெட்டும் கான்சலாகி விட்டது. நேரிடையாக டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் எனறால் மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் இல்லை, வேண்டுமானால் சஹாயாத்ரி எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.  அவசர அவசரமாக ரிசர்வேஷன் விண்ணப்பத்தை பூர்த்தி பண்ணி, கார்டோடு நீட்டினால், "கார்ட் என்றால் நீங்கள் முன்பே சொல்லியிருக்க வேண்டும், இப்போது முடியாது கேஷ்தான் வேண்டும்" என்று ஹிந்தியில் பாத் கர்த்தினார் ஒரு வார்த்தை ஆங்கிலம் பேச மாட்டேன் என்று விரதம் எடுத்திருந்த கவுண்டரில் இருந்த டிப்டாப் ஆசாமி. நல்ல வேளையாக கையில் பணம் இருந்ததால் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் வெயிட்டிங் அறையில் தேவுடு காக்கத் தொடங்கினோம்.

நான் மட்டும் இரவு உணவு சாப்பிட காண்டீனுக்குச் சென்ற பொழுது அங்கிருந்த ஒரு தம்பதியினர் தாங்கள் ஏதோ ஒரு பாசன்ஜர் ரயிலுக்காக காத்திருப்பதாக ஹிந்தியில் கூறினார்கள். அப்போது ஹிந்தியில் வந்த அறிவிப்பு ஒன்று பாசன்ஜர் ரயில் ஒன்று ஒன்றாம் எண் பிளாட்ஃபாரத்தில் வரும் என்றது.
சற்று நேரத்தில் ஒரு வண்டி முதலாம் பிளாட்ஃபாரத்தில் வந்து நின்றது. அது கிளம்பி சென்ற பிறகு சஹாயாத்ரி வரும் என்று நினைத்தோம். என் கணவர், "எதற்கும் இங்கே விசாரிக்கலாம், ஒரு வேளை சஹாயாத்ரி இரண்டாவது பிளாட்ஃபாரத்தில் வந்தால் மாடிப்படி ஏறி இறங்க வேண்டும், போர்ட்டரும் இல்லை, நாம்தான் லக்கேஜை தூக்கி க்கொண்டு செல்ல வேண்டும்." என்றார். எனவே அங்கிருந்த ரயில்வே ஊழியர் ஒருவரிடம்,"சஹாயாத்ரி எந்த பிளாட்ஃபாரத்தில் வரும்?" என்றதும், "இதோ நிற்கிறதே, இதுதான் சஹாயாத்ரி" என்றதும் தூக்கி வாரி போட்டது. நல்லவேளையாக வெயிட்டிங் ரூமிற்கு எதிராகவே செகண்ட் ஏ.சி. கோச் நின்றது. ஏறி உட்கார்ந்து ஒரு பெரிய பெருமூச்சு விட்டோம்.

ரயிலில் இருந்த போர்டில் ஹிந்தியில் மட்டுமே பெயர் எழுதப்பட்டிருந்தது. அறிவிப்புகளும் ஹிந்தியில் மட்டுமே செய்தார்கள். ஹிந்தி தெரியாதவர்களுக்கு கஷ்டம்தான். நம் ஊர் தொலைகாட்சிகளில் ஹிந்தியை எதிர்ப்போம் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று முழங்குகிறார்கள். வாழ்க!




  . 

Friday, August 2, 2019

கோலாப்பூர் உலா

கோலாப்பூர் உலா

New Palace @ Kolhapur
சதாராவிலிருந்து வந்ததும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டு, மாலை கடை வீதிக்குச் சென்றோம். கோலாப்பூர் சென்று விட்டு கோலாப்பூரி செப்பல் வாங்காமல் வர முடியுமா? ஒரு வீதி முழுவதும். செருப்பு கடைகளே இருந்தன. எனக்கு மட்டும் ஒரு ஜோடி வாங்கி கொண்டு அந்த கடைக்காரரிடம், "புடவைக்கடைகள் எங்கே இருக்கின்றன? என்று கேட்டதற்கு அவர் என்ன சார் நீங்கள் தமிழ் நாட்டிலிருந்து வருகிறீர்கள், காஞ்சீபுரத்திலிருந்து இங்கு புடவைகள் வருகின்றன, நீங்கள் இங்கே போய் புடவைகள் வாங்க விரும்புகின் றீர்கள்?, இந்த ஊரில் செருப்பு, மற்றும் வெல்லம்தான் ஃபேமஸ்" என்றார் நாங்கள் மீண்டும் கேட்டதும், எதிர்த்தாற்போல் இருக்கிறது இன்று கை காட்டினார்.  அங்கு ஒரு கடையில் இரண்டு புடவைகள் வாங்கினேன்.

கோலாப்பூர் கார்ப்பரேஷன் கட்டிடத்தின் முன்புற, பக்கவாட்டுத் தோற்றம்  


அடுத்த நாள் கோலாப்பூரை சுற்றிப் பார்த்துவிட்டு, மும்பை செல்ல இரவு 8:30 மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரெஸ்ஸில் டிக்கெட் புக் பண்ணியிருந்தோம். அன்று காலை முதல் ஆடி வெள்ளி என்பது என் நினைவில் இல்லை. ஆனால் வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் அன்னை மஹாலக்ஷ்மியை தரிசித்து விட விரும்பினேன். என் கணவர் வரவில்லையென்று கூறிவிட்டதால், நான் மட்டும் தனியாக கோவிலுக்குச் சென்றேன். காலை நேரத்திலேயே நல்ல கும்பல். ஆனால் வரிசை நகர்ந்து கொண்டே இருந்ததால் சுலபமாக தரிசிக்க முடிந்தது.  அம்மனுக்கு அருகில்தன கொஞ்சம் தேக்கம். சிறப்பு பூஜைக்காக பணம் கட்டியவர்களை பின் பக்கம் சென்று அமரச் சொன்னார்கள் போலிருக்கிறது. அதில் இருந்த ஆண்களும் பெண்கள் வரிசையை பிளந்து கொண்டு செல்ல வேண்டியிருந்ததால் கொஞ்சம் தள்ளுமுள்ளு, அதனால் சலசலப்பு. பெண்கள் ஏன் இத்தனை கூச்சல் போடுகிறார்கள் என்று தோன்றியது. இருந்தாலும் தாயாரை நிதானமாக நன்றாக தரிசனம் செய்ய முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி!.

அன்று காலை பூ போன்ற இட்டிலியும், நன்றாக வெந்து ஆனாலும் உதிர் உதிராக, சுவையாக இருந்த போகாவும் காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக்பாஸ்டில் இருந்தன. தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, சாம்பார் என்ற பெயரில் அடர்ந்த சிவப்பில் ஒரு திரவம். அதை தவிர்த்து விட்டு, சட்னி எடுத்துக் கொண்டேன். ப்ரெட் டோஸ்டும் இருந்தது. அவர்களுக்கு காபி மட்டும் போடத் தெரியவில்லை. அதனால் டீ.

அந்த ஹோட்டல்காரர்களே டூரிஸ்ட் வண்டி ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.  முதலில் நியூ பேலஸ் எனப்படும். ஷாஹு மஹாராஜின் இருப்பிடமான அரண்மனையே தற்சமயம் மியூசியமாக மாற்றப்பட்டிருக்கிறது. உள்ளே செல்லும் பொழுது செல்போனை ஆஃப் செய்து விடுங்கள் என்கிறார்கள். ஷாஹு மஹராஜ் என்றதும் மிகவும் கம்பீரமாக இருப்போரோ என்று எதிர்பார்த்தால், நம்மூர் மயில்சாமிக்கு ராஜா வேஷம் போட்டது போல், கண்களில் கொஞ்சம் பயத்தோடு இருக்கிறார்.

அவர் உபயோகித்த பொருள்கள், அமர்ந்த ஆசனம், ஆடை, போன்றவை காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. தர்பார் மண்டபம் என்னை மிகவும் கவர்ந்தது. எந்தனை உயரமான, வேலைப்பாடோடு கூடிய விதானம்! அதைப்  போல அந்தக் கால ஆயுதங்கள், விதம் விதமான கத்திகள், ஈட்டிகள், சிறிய கைத்துப்பாக்கி முதல், பீரங்கி வரை.. கருத்தை கவருகின்றன. இரும்பாலான தலைக்கவசம் அழகாக இருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தை தற்போது ஷாஹூஜி மஹாராஜின் வாரிசுகள் நிர்வகிக்கின்றனராம்.

அங்கிருந்து ஓவியங்களில் ஒரு ஓவியம் என்னைக் கவர்ந்தது. கைக்குழந்தையோடு தனியே செல்லும் ஒரு பெண்ணை, கவர்ந்து செல்லும் ஒருவன், அவன் கீழே தள்ளி விட்ட குழந்தையை அணைத்து பாதுகாக்கும் ஒரு சிங்கம். அந்த மனிதனின் கண்களில் தெரிந்த வெறி, பெண்ணின் பயம், சிங்கத்திடம் காணப்பட்ட அமைதி. இதில் யார் மனிதன்? யார் மிருகம்?

அங்கிருந்த ஆவணங்களில் இங்கிலாந்தின் அரசர் ஜார்ஜ், ஷாஹூஜியை, கோலாப்பூரின் அரசராக நியமித்து, மகாராஜா என்று அழைக்கப்பட  உரிமை வழங்குவதாகவும் எழுதப்பட்ட கடிதத்தை பார்த்ததும் கொஞ்சம் கோபம் கூட வந்தது. யாருடைய மண்ணிற்கு ராஜாவை யார் நியமிப்பது? இது கூட உரைக்காமல் நம் நாட்டு அரசர்கள் இருந்ததால்தான் அன்னியர்க்கு அடிமை ஆனோம்.

அங்கிருந்து, கோட்டை ஒன்றை பார்க்கச் சென்றோம். நிறைய கொண்டை  ஊசி வளைவுகளோடு இருக்கும் மலைப்பாங்கான சாலையில் பயணித்தால்
சத்ரபதி சிவாஜி அமைத்த பகல்காட் கோட்டை, தானியங்கள் சேமிப்பதற்காக பன்ஹாலா என்னும் இடத்தில் கட்டப்பட்ட இடம் போன்றவற்றை பார்த்தோம்.

காட்டுராணி கோட்டையிலே கதவுகள் இல்லை 
பகல்காட் கோட்டை பிக்கினிக் ஸ்பாட்டாக விளங்குகிறது. இந்த கோட்டை மூன்று அடுக்குகளை கொண்டது, கீழ் அடுக்கு விருந்தினர் தங்குவதற்கும், மத்தியில் ஆயுதங்களை சேமிக்கவும், மேல் அடுக்கு தண்ணீரை சேமிக்கவும் பயன்பட்டதாம். அங்கு வந்திருந்த ஒருவர் கூறினார்.

பகல்காட் கோட்டையிலிருந்து கீழே தெரியும் காட்சி 
அங்கிருக்கும் சாலையோர உணவு விடுதிகள் ஒன்றில் சாய் குடித்தோம். தந்தூரி சாய் என்றார் கடை வைத்திருந்த பெண்மணி. ஒரு மண் குவளையை அடுப்பில் வைத்து நன்றாக சூடு படுத்துகிறார். பின்னர் அதில் கலக்கப்பட்ட தேநீரை ஊற்றித் தருகிறார். புகை வாசனையோடு இருக்கும் அதுதான் தந்தூரி சாய்!

பனாலா என்னும் இடத்தில் தன்னுடைய படையில் இருந்த வீரர்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் தானியங்களை சேமித்து வைக்க சத்திரபதி சிவாஜி  கட்டப்பட்ட கோட்டையில் அவரும் அவ்வப்பொழுது வந்து தங்குவாராம். மிக அழகாக இருக்கிறது. இதுவும் தொல்பொருள் இலாகாவின் பாதுகாப்பின் கீழ் வருகிறது.




வசதிகள் பெருகியிருக்கும் இந்தக் காலத்தில் இங்கெல்லாம் பயணிப்பது சுலபமாக இருக்கிறது. மலைப்பாங்காகவும், அடர்ந்த வனமாகவும் இருக்கும் இங்கெல்லாம் கோட்டைகள் கட்டுவது என்பது நினைக்கும் பொழுதே பிரமிப்பாக இருக்கிறது.  சிவாஜியின் கொரில்லா தாக்குதல்களுக்கு அதுதான் மிகவும் வசதியாக இருந்திருக்கிறது போலும்.

அங்கிருந்து கீழிறங்கும் வழியில் ஒரு சிவன் கோவிலுக்குச் சென்றோம். லிங்கமாகவும் இல்லாமல், ஆவுடையார் மீது, சிவபெருமானின் திருமுகம் என்றும் இல்லாமல், அமர்ந்த திருக்கோலத்தில் கருப்பு நிறத்தில், முண்டாசு அணிந்து கொண்டு வித்தியாசமான ரூபம். பிரகாரத்தில் ஒரு பெரிய காமதேனு பிம்பம்.

கோவில் வளாகம் முழுவதும் கத்தரிப்பூ நிற குங்குமம் சிதறிக் கிடக்கிறது. கோவிலுக்குள் நுழையும் பொழுது, நம்மிடம் இருக்கும் தேங்காயை வாங்கிக்கொண்டு, தக்ஷனை போடுங்கள் என்று தட்டை நீட்டி, நம் நெற்றியில் கத்தரிப்பூ நிற குங்குமத்தை இட்டு விடுகிறார்கள்.

கோலாப்பூரில் பார்க்க வேண்டிய இடங்களில் மற்றொன்று ரங்காலா ஏரி. நல்ல சுத்தமான  நீர் நிரம்பி இருக்கும் நீர் நிலை. அதுவும் சமீபத்திய மழையினாலோ என்னவோ நீர் அலையடிக்க ததும்பிக் கொண்டிருந்தது. மாலை நேரங்களை கழிக்க உள்ளூர் வாசிகளுக்கு ஒரு இடம். குழந்தைகளுக்கு விளையாடுமிடங்கள், சாட் ஐட்டங்கள், ஐஸ் க்ரீம்கள் என்று எல்லாம் இருக்கின்றன. ஏரியின் ஒரு புறத்தில் போட்டிங் போக வசதி இருக்கிறது. ஆனால் நாங்கள் சென்றது அதன் எதிர் புறம், அதனால் ஐஸ் க்ரீம் மட்டும் சாப்பிட்டு விட்டு வந்து விட்டோம்.
நடுவில் தெரியும் கட்டிடம் நீராழி மண்டபமாக இருக்கலாம்
அதிக பட்ச நீரால் பெரும்பான்மை மஇருக்கிறது 

மொத்தத்தில் கோலாப்பூர் பயணம் நன்றாக இருந்தது, கடைசியில்தான் எதிர்பாராத சில விஷயங்களால் வெகு சீக்கிரம் ரயில் நிலையத்திற்கு சென்று விட்டாலும் எங்களால் திட்டமிட்டபடி மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ்ஸில் பயணிக்க முடியவில்லை, அதை தவர விட்டோம்.







Wednesday, July 31, 2019

சிதம்பரத்தில் ஒரு மதுரை

சிதம்பரத்தில் ஒரு மதுரை





கோலாப்பூரிலிருந்து சதாராவிற்கு ஒரு கார் அமர்த்திக்கொண்டு சென்றோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே காம்ப்ளிமென்ட்ரி ப்ரேக்ஃபாஸ்ட் இருந்தது. உப்புமா, ப்ரெட் டோஸ்ட், கார்ன் ஃபிளேக்ஸ் இருந்தன. நான் ப்ரெட் டோஸ்டும், கார்ன் பிளேக்ஸ்சும் எடுத்துக் கொண்டேன்.  காலை 9:30க்கு கோலாப் பூரிலிருந்து கிளம்பிய நாங்கள் 11:30க்கு சதாராவை அடைந்தோம். சுகமான, சௌகரியமான சாலைப் பயணம். மலை, வயல், ஓடை என்று கண்ணையும், கருத்தையும் கவரும் காட்சிகள்

சதாராவில் ரத்ன சபாபதிக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. அபிஷேகம் முடிந்து தீபாராதனையில் ஆடலரசனை தரிசித்தோம். சிதம்பர ரகசியத்தை தரிசிக்க முடியுமா? என்று கேட்டதும், தலைக்கு 50 ரூபாய் டிக்கெட் வாங்க வேண்டும் என்றார்கள். புனாவிலிருந்து வந்திருந்த மற்றொரு குடும்பத்தினர்களுக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாதாம், "உங்களால் நாங்களும் பார்த்தோம்" என்றார்கள். 

1980ஆம் வருடம் சாதுர்மாஸ்ய விரதத்தின் பொழுது சதாராவில் தங்கிய மஹா பெரியவராகிய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள், சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் கோவிலைப்போல போல ஒரு கோவிலை சதாராவில் நிர்மாணிக்க விரும்பினார். சாமண்ணா என்னும் பெரியவாளின் பக்தர் நிலம் கொடுக்க, தமிழ் நாடு, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநில அரசுகள் ஒவ்வொரு கோபுர கட்டுமான செலவை ஏற்றுக்கொள்ள, கோவிலின் பிரதான மண்டபத்தை கட்ட தேவையான தேக்கு மரங்களை கேரள அரசு வழங்க, நல்ல மனம் கொண்ட பக்தர்களின் நன்கொடையால் இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டு 1984 வருடம் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.



பூர்வ சிதம்பரத்தோடு ஒப்பிடுகையில் மிகச்சிறியது. தெற்குப் பார்த்த நடராஜர். இந்த பிரதான கோபுரத்தைத்தான் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழக அரசு கட்டிக் கொடுத்தது.

விநாயகி போல தோற்றமளிக்கும் விநாயகர்

உள்ளே நுழைந்ததும் இடது புறம் கிழக்குப் பார்த்த விநாயகர் சந்நிதி. பிரும்மாண்டமான விநாயகர். அதற்கு அடுத்து நின்ற கோலத்தில் கூப்பிய கரங்களோடு இருக்கும் பெரிய ஆஞ்சனேயருக்கு ஒரு சந்நிதி. மேற்கு கோபுரத்தை அடுத்து ராதா கிருஷ்ணர் சன்னிதி. அதை அடுத்து ஆதி மூலநாதர் சந்நிதி. அங்கு தரிசித்து விட்டு, வலம்  வரும்பொழுது நவக்கிரக சன்னிதி. இங்கெல்லாம் வணங்கி விட்டு கிழக்கு வாசல் வழியே வெளியே சென்றால் ஐயப்பனுக்கு ஒரு சிறிய கோவில்.

கோவில் பிரகாரத்திலேயே குளம்
முழுவதும் தேக்கு மரத்தால் கூரை அமைக்கப்பட்ட பிரதான மண்டபத்தில் மஹா பெரியவரின் படம் ஒரு சிறிய பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிரதான மண்டப சுவர்களில் பரத நாட்டிய கரணங்களை சிற்பங்களாக வடித்திருக்கிறார்கள். பழைய கோவிலின் சிற்பங்களின் அழகு, துல்லியம், உயிர்ப்பு இவைகளோடு ஒப்பிடுகையில்...ஹும்! தென்னிந்திய பாணியில் ஒரு கோவில் என்ற வகையில் செல்லலாம். செல்லாவிட்டாலும் பெரிதாக எதையும் தவற விட்டவர்களாக மாட்டோம். ஒரிஜனல் கோவிலில் கிடைக்கும் இறையனுபவத்தையெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்.



இந்த கோவிலில் செய்யப்படும் பூஜைகள், அதற்கான கட்டணங்கள் இவைகள் அலுவலகம் போன்ற ஒன்றின் போர்டில் 
குறிப்பிடப்பட்டிருக்கின்றன.  அங்கேயே உருத்திராட்சம், ஸ்படிக மாலை, ஊதுபத்தி, சூடம் போன்ற பூஜைபொருள்களும், ஸ்வாமிக்கும் அம்மனுக்கும் சாற்றுவதற்கு வேஷ்டி மற்றும் புடவை போன்றவைகளும் கிடைக்கின்றன. செப்டம்பரில் விமானங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைகளை துவங்க உள்ளார்களாம்.   





நாங்கள் கோவிலுக்குள் நுழைந்த பொழுது, அங்கு வேலை செய்யும் ஒருவர், "வாங்கம்மா, ஊரிலிருந்து வரீங்களா? நான் மதுரை.." என்று வரவேற்றார். சிதம்பரமும், மதுரையும் பிரிக்க முடியாதவைதான்  போலிருக்கிறது.  

Friday, July 26, 2019

கோலாப்பூர் மஹாலக்ஷ்மி தரிசனம்

கோலாப்பூர் மஹாலக்ஷ்மி தரிசனம்

மூல ஸ்தான வடிவம் 
நாங்கள் தரிசித்த அலங்காரம் 

புனேயிலிருந்து கோலாப்பூருக்கு காலை 6:30 மணிக்கு பஸ். வால்வோ பஸ் என்றாலும், நம் ஊர் வால்வோ பஸ் போல் இடைஞ்சலாக இல்லாமல்  தாராள லெக் பேசோடு சௌகரியமாக இருந்தது. 11:30க்கு கோலாப்பூருக்கு சென்று விட்டோம். இங்கிருந்தே ஆன் லைனில் புக் செய்திருந்த பாலாஜி ரெசிடென்சி  கோலாப்பூரின் பிரதான மார்க்கெட்டான மஹாரான பிரதாப் ரோட்டுக்கு  அருகில் ஒரு சந்தில் இருந்தது. அமைந்திருந்த இடம் சுமாராக இருந்தாலும், ஹோட்டல் மிக வசதியாகவும், நவீனமாகவும் இருந்தது. அங்கிருந்து மஹாலக்ஷ்மி கோவில் ஆட்டோவில் சென்றால் இருபது ரூபாய் தொலைவுதான், ஆனால், முப்பது கேட்கிறார்கள். நடந்தும் செல்லலாம். 

மஹாலக்ஷ்மி கோவில் ரொம்பவும் பெரிது என்று கூற முடியாது. நான்கு புறமும் வாசல்கள் உள்ளன. புராதனமான கோவில் என்பது அதன் கட்டுமானத்தைப் பார்த்தால் தெரிகிறது.  


சக்தி பீடங்களில் முக்கியமான ஒன்று. கரவீரபுரமாக இருந்த இந்த இடத்தில் மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த கோலாஸுரனை, தேவி மஹாலக்ஷ்மியாக வந்து அழித்த இடம். அவன் இறக்கும் தருவாயில் இந்த இடம் தன் பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்க அதன்படி கோலாப்பூர் ஆயிற்றாம்.   லக்ஷ்மி அஷ்டோத்திரத்தில் "நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி.." என்று குறிப்பிடப்படுவது நினைவு கூரத்தக்கது. 

17ஆம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பின் பொழுது இந்தக் கோவிலின் பூஜாரி ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட மூல விக்கிரகம் சத்திரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜியின் முயற்சியால் கண்டெடுக்கப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். சிவாஜியின் மருமகள் ராணி தாராபாய் கோலாப்பூர் சமஸ்தானத்தை ஸ்தாபித்த பிறகு இந்த கோவிலை விரிவு படுத்தியிருக்கிறாராம்.

கோவில் பெரியது என்று கூற முடியாது. கோபுரத்தில் நிறைய அழகான சிலைகள். சில உடைக்கப்பட்டிருக்கின்றன. பிரதான மண்டபத்திற்குள் நுழையும் முன் இடது புற சுவற்றில் இருக்கும் விநாயகர் புடைப்புச் சிற்பத்தை சாட்சி கணபதி என்கிறார்கள்.  நுழைவு வாயில் கொஞ்சம் குறுகலாக, உயரம் குறைவாக இருக்கிறது. உள்ளே நுழைந்து சிறிது தூரத்தில் மஹா காளி சந்நிதி.

அங்கிருந்து மஹாலக்ஷ்மி குடியிருக்கும் பிரதான வாயிலுக்கு செல்லும் வழியில் சூரியநாராயண மூர்த்தியின் சிலையை காண முடிகிறது. கர்பக்ரஹத்தின் வாயிலில் பிருமாண்டமான ஜெய,விஜய துவாரபாலகர்கள். 

சூரிய நாராயண மூர்த்தி 

துவார  பாலகர்களில் விஜயன் 

சாட்சி கணபதி 


தீப ஸ்தம்பங்கள் 

உள்ளூர் மக்கள் தாயாரை அம்பா, அல்லது அம்பாபாய் என்று குறிப்பிடுகிறார்கள். நின்ற திருக்கோலம். நான்கு கரங்கள். ஒன்றில் மாதுளம் பழம், இன்னொன்றில் பூமியில் ஊன்றப்பட்ட கதை, மற்ற இரு கரங்களில் சக்கரம், மற்றும் அமிர்த கலசம் ஏந்தி, ஆதி சேஷன் குடை பிடிக்க காட்சி அளிக்கிறாள் என்று குறிப்பிடப் பட்டாலும், நாங்கள் சென்ற பொழுது செய்யப்பட்டிருந்த அலங்காரத்தால் கதை, மாதுளம் பழத்தை ஏந்தியிருக்கும் கரம் இவைகளை காண முடியவில்லை. இங்கிருக்கும் அம்மனின் விசேஷம் தன்னை வணங்கும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதோடு, பந்தங்களிலிருந்து விடுவித்து மோட்சத்தையும் அளிப்பவள் என்பதாகும்.கண்குளிர தரிசனம் செய்து கொண்டு வெளியே வரும் வழியில் தனி சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் மஹாசரஸ்வதியை தரிசித்துக் கொண்டு வெளியே வருகிறோம். 

வெளியே வந்ததும் புகைப்படங்கள் 





வெளிசுற்றில் சித்தி விநாயகருக்கென்று ஒரு தனி சந்நிதியும், தத்தாத்ரேயருக்கு தனி சந்நிதியும் இருக்கின்றன.  நுழைவு வாயிலுக்கு எதிராக மகாவிஷ்ணுவுக்கு தனி சந்நிதி இருக்கிறது. 

அம்மன் சந்நிதிக்கு மேற்கே உள்ள ஜன்னல் வழியே ரத சப்தமியை ஒட்டி வரும் ஜனவரி 31, பிப்ரவரி 1, பிப்ரவரி 2 ஆகிய  வருடத்தில் மூன்று நாட்கள் சூரியனின் கிரணங்கள் அம்பாளின், பாதம், மார்பு, திருமுகம் ஆகிய மூன்று பகுதிகளிலும் விழுவது இங்கு கிரனோத்ஸவ் என்று சிறப்பாக கொண்டாடப்படுமாம். அதைத்தவிர நவராத்திரியும் சிறப்பு. 

சென்ற வெள்ளியன்று கோலாப்பூர் மஹாலக்ஷ்மியை தரிசிக்கும் பாக்கியம் வாய்த்தது. கோவிலில் கும்பல் இருந்தாலும் வரிசை நகர்ந்து கொண்டே இருந்ததால் நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது. இரண்டாவது ஆடி வெள்ளியான இன்று, லக்ஷ்மி தேவியின் அருளால், எல்லோர் வாழ்விலும் சகல சௌபாக்கியங்களும் நிறைய அம்பா பாயை வேண்டுகிறேன். 

கோலாப்பூரின் மற்ற பகுதிகளை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். 

Wednesday, July 24, 2019

புதன் புதிர்

புதன் புதிர்  


நாங்கள் புனே ரயில் நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு செல்லும் வழியில் என் கணவர் ஏதாவது ஒரு ஏ.டி.எம்.ல் நிறுத்தச் சொன்னார். வழியில் ஒரு ஏ டி.எம். கண்ணில் பட்டது. மரக்கிளைகள் மறைத்துக் கொண்டிருந்ததால் எந்த வங்கியின் ஏ.டி.எம். என்று தெரியவில்லை. பெயர்ப் பலகை நீல நிற பின்னணியில் இருந்ததால் நாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம். என்று நினைத்து விட்டோம். அருகில் சென்றதும்தான் வேறு வங்கியின் ஏ.டி.எம். என்று தெரிந்தது. அப்போதுதான் நிறைய வங்கிகளின் பெயர்ப்பு பலகை நீல நிறப் பின்னணியில் இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். அதிலிருந்து தோன்றியதுதான் இந்த புதிர். நீண்ட நாட்களுக்குப் பிறகு புதன் கிழமை ஒரு புதிர்.  

1. உங்களுக்கு தெரிந்து எத்தனை வங்கிகளின் பெயர் பலகைகள் நீல நிற பின்னணியில் இருக்கின்றன என்று கூற முடியுமா? கூகிள் ஆன்டியிடம் கேட்காமல், விளம்பரங்களை பார்க்காமல், உங்கள் நினைலிருந்து சொல்லுங்கள்.

2. இந்தியாவின் பழமையான பொதுவுடைமை வங்கி எது?

3. மகாத்மா காந்தி தொடங்கி வைத்த வங்கி எது?

4. இந்தியாவில் முதல் முதலாக ஏ.டி.எம். சேவையைத் தொடங்கிய வங்கி எது? 

5. எத்தனை இந்திய வங்கிகளின் பெயர்கள் 'S' என்னும் ஆங்கில எழுத்தில் தொடங்குகின்றன?  

Monday, July 22, 2019

குரு பூர்ணிமா @ புனே

குரு பூர்ணிமா @ புனே


தகடு சேட் கணபதி கோவில்
புனே ஆட்டோ ஓட்டுனர்கள் சென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல.  நம்மை ஏற்றிக்கொண்டு விட்டு, இறங்கும் பொழுது மேலே போட்டு கொடுக்கச் சொல்லி தகராறு செய்கிறார்கள்.

கேரளாவுக்கும், பெங்களூருக்கும் பிறந்த குழந்தை போல இருக்கிறது புனே. சாலையின் இரு ஒரங்களிலும் நிழல் தரும் மரங்களை நட்டது யார் என்று தெரியவில்லை. அவற்றில் ஆலமரம் உட்பட பெரும்பான்மையை அப்படியே பராமரிக்கிறார்கள்.  நிறைய ஆலமரங்களை பார்க்க முடிந்தது. புதிய இடம் என்றாலும் புனே மீது ஒரு பாந்தவ்யம் உண்டாயிற்று.

நாங்கள் குளித்து, உடை மாற்றி, திருமண மண்டபத்திற்கு வந்த பொழுது, திருமண முதல் நாள் காலை நிகழ்ச்சிகளான விரதம், நிச்சயதார்த்தம் போன்றவை முடிந்து விட்டன.

மாலையில் சங்கீத். நம் சம்பிரதாயத்தில் இல்லாத மெஹந்தி, சங்கீத் போன்றவை இப்போது எல்லா திருமணங்களிலும் இடம் பெற தொடங்கி விட்டன. ஜானவாசம் விடை பெற்று விட்டது. விருந்தில் பானி பூரி, பேல் பூரி போன்ற சாட் அயிட்டங்களையும் சேர்த்து 21 அயிட்டங்கள். இளம் பெண்களின் தட்டில் வெள்ளரிக்காய், கேரட்,  வெங்காயம் இவைகளைதான் பார்க்க முடிந்தது. ரத்த அழுத்தத்திற்கும், சர்க்கரைக்கும் மாத்திரை சாப்பிடும் முதியவர்கள் இரண்டு குலாப் ஜாமூன்கள், கப் நிறைய ரஸமலாய், ஐஸ்கிரீம் என்று ஒரு கட்டு கட்டினார்கள்.

மறுநாள் திருமணத்தன்று காலை ஒரு சிறு தட்டில் மூணு ஸ்பூன் பைனாப்பிள் கேசரி, (இப்போது பைனாப்பிள் சீஸனோ? நேற்று பைனாப்பிள் ரசம், இன்று கேசரி)அரை தோசை, ஒரு ரவா இட்லி, சரவணபவன் மினி டிபனில் வழங்கப்படும் வடையை விட சற்றே பெரிய வடை என்று திட்டமாக டிஃபன்(செகண்ட் சர்விங் இருந்தது). மதியம் பால் பாயசம், வெள்ளரிக்காய் பச்சடி, பீன்ஸ் பருப்பு உசிலி, உ.கி.கார கறி(இதை யாரவது நன்றாக செய்வார்களா?), அவியல் என்று அதே சலிப்பூட்டும் மெனு. இந்த மெனுவை மாற்றுகிறவர்களுக்கு அவர்கள் விரும்பும் உணவகத்தில் ஒரு மாதத்திற்கு உணவு டோக்கன் வாங்கித்தரலாம்.

மாலை எங்கள் உறவினர் ஒருவரைப்பார்ப்பதற்காக சென்றோம். அவர்கள் இருப்பது வளர்ந்து வரும் கான்கிரீட் காடான புனே. அவர்களிடம் புனேயில் பார்க்க வேண்டிய இடங்கள் எவையெவை? என்று கேட்டதற்கு டாகுதாஷ் சேட் கணபதி கோவில், சனிவார் வாடா, பாலாஜி டெம்பிள் என்று அடுக்கினார்கள். என்னைப் பொருத்தவரை பாலாஜி என்றால் அவர் திருப்பதியில் இருப்பவர்தான். கீதா அக்கா பார்வதி ஹில்லுக்கு சென்று விட்டு வாருங்கள் என்றார். ஆனால் அங்கு 800 படிகள் ஏற வேண்டுமாமே...?

ஷாப்பிங் சென்று பூனா காட்டன் சாரி வாங்கலாம் என்று நினைத்தேன். நண்பரின் மனைவியோ,"பூனா காட்டன் சாரியெல்லாம் சென்னை யிலேயே கிடைக்கும், இங்கெல்லாம் ஷாப்பிங் எல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள்" என்று கூறி விட அதுவும் கேன்சல்ட்.


மறுநாள் தகடு சேட் கணபதி கோவிலுக்குச் சென்றோம்.  ஊரின் மத்தியில், பிரதான சாலையில் இருக்கிறது அந்த கோவில். குரு பூர்ணிமாவோடு கூடிய செவ்வாய் கிழமை என்பதாலோ என்னவோ கூட்டம் இருந்தது. ஆனால் நகர்ந்து கொண்டே இருந்ததால் நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது. கோவில் வாசலிலேயே கடைகளில் விதம் விதமான மோதகங்கள் விற்கப்படுகின்றன. கோவில் சிறியதுதான், ஆனால் தங்க மயமாக ஜொலிக்கிறார் விநாயகர்.  வெளியே பெரிய மூஞ்சூறு வாகனம். நம் ஊரில் சிவனுக்கு எதிரே இருக்கும் நந்தியின் காதில் தங்கள் வேண்டுதல்களை சொல்வதைப்போல இங்கு மூஞ்சூரின் காதில் தங்கள் பிரார்த்தனைகளை சொல்லி வேண்டுகிறார்கள்.

நீட் தேர்வில் தேற வேண்டுமா? காதலிப்பவனை கைப்பிடிக்க வேண்டுமா?
என்ன வேண்டுதலோ?

என் கணவருக்கு ஏனோ மகாத்மா காந்தியை வீட்டுச் சிறையில் வைத்திருந்த, கஸ்தூரிபா இறந்த ஆகாகான் அரண்மனைக்குச் செல்வதில் அத்தனை விருப்பம் இல்லை. நாங்கள் அதை முன்பு ஒரு முறை பார்த்திருக்கிறோம்.  அங்கு கஸ்தூரிபாவுக்கு சமாதி உண்டு.



சனிவார் வாடா நுழை வாயில் 
மாலை சனிவார் வாடாவுக்குச் சென்றோம். நாங்கள் அந்த இடத்தை அடையும் பொழுது 5:35. 5:30 வரைதான் உள்ளே அனுமதிப்பார்களாம். வெளியே இருந்து புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் கொண்டோம். வாடா என்னும் மராட்டிய வார்த்தைக்கு புராதனமான கட்டிடம் என்று பொருளாம்.  "உள்ளே என்ன இருக்கிறது?" என்று எங்கள் உறவினர் பையனை கேட்ட பொழுது, " ஒரு பெரிய கதவு இருக்கும், அதன் உள்ளே சென்றால் அரண்மனையின் இடிபாடுகள்" என்று அவன் கூறியது நினைவுக்கு வர சரி பெரிதாக எதையும் மிஸ் பண்ணவில்லை என்று நினைத்துக் கொண்டேன். "இந்த இடத்திற்கு ஏன் சனிவார் வாடா என்று பெயர்?" என்று ஆட்டோ ஓட்டுனரை கேட்டேன். "இங்கு கிழமைகளின் பெயர்களில் சோம் வார் பேட், புத்வார் பேட் என்றெல்லாம் இடங்கள் உண்டு. அது போல இந்த இடம் சனிவார் பேட், இங்கிருக்கும் வாடா சனிவார் வாடா" என்றார்.

பின்னர் ஜங்கிலி மஹராஜ் சாலையில் இருக்கும் பாதாளீஸ்வரர் சிவன் கோவிலுக்கும், அதற்கு அருகில் இருந்த ஜங்கிலி மஹராஜ் என்னும் மஹானின் அதிஷ்டானத்திற்கும் சென்றோம்.

பாதாளீஸ்வரர் ஆலயம் மிகவும் புராதனமானதாம் 1500 வருடங்களுக்கு முந்தையது என்று அங்கு அமர்ந்திருந்த ஒருவர் கூறினார். அந்த கட்டிடம் தொல்பொருள் இலாகாவுக்கு சொந்தமானது என்ற அறிவிப்பினை பார்க்க முடிந்தது.

சிறிய சிவலிங்கத்தை நாம் தொட்டு வணங்கலாம். எதிரே ஒரு வட்ட வடிவ மண்டபத்தில் நந்தி இருக்கிறது.


அந்த பூங்காவில் இருக்கும் 92 வயதான ஆலமரம்
அருகில் இருக்கும் ஜங்கிலி மஹராஜ் அதிஷ்டானத்தில் குரு பூர்ணிமா என்பதால் சிறப்பு பூஜைகள் இருந்தன. குரு பூர்ணிமா அன்று ஒரு மஹானின் அதிஷ்டானத்திற்கு செல்ல முடிந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியிலே. அத்தனை பேருக்கும் நம் வணக்கங்கள்.












Thursday, July 18, 2019

மசாலா சாட் - 10

மசாலா சாட் - 10


புனேயில் ஒரு சினேகிதரின் மகனுக்கு திருமணம். அதற்காக நானும் என் கணவரும் புனே செல்லும் பொழுது அப்படியே பண்டரிபுரம் செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால் தற்சமயம் ஆஷாட ஏகாதசி யை ஒட்டி வருவதால் பண்டரிபுரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றார்கள். எனவே கோலாப்பூர், சதாராவில் இருக்கும் உத்திர சிதம்பரம் நடராஜர் கோவில் சென்று வரலாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் லோகமான்யதிலக் விரைவு வண்டியில்  கிளம்பினோம்.

மெஜஸ்டிக் ரயில் நிலயத்தை சரியான நேரத்திற்கு வந்த வண்டி அங்கிருந்து தாமதமாக கிளம்பியது. நீண்ட தூர ரயில் பயணங்களில் என்னை மிரட்டும் விஷயம் இந்த தாமதமும், சக பிரயாணிகளும். சினேக ஸ்வபாவம் கொண்ட சக பிரயாணிகள் வாய்க்க வேண்டுமே என்று நினைத்துக் கொள்வேன்.

இந்த முறை தாமதமாக கிளம்பினாலும் சரியான நேரத்தில் புனேயை அடைந்து விட்டது. அதைப்போலவே சக பிரயாணிகளும் நட்புணர்வு கொண்டவர்களாகவே இருந்தார்கள். 

மும்பையிலிருந்து பாண்டிச்சேரி, 
ஏற்காடு போன்ற இடங்களுக்குச் சென்று விட்டு வந்த இரு சகோதரிகள் இருவருக்கும் (இருவரும் சீனியர் சிட்டிசன்கள் என்பது குறிப்பிடத்தக்கது) எப்போது சப்பாத்தி சாப்பிடுவோம் என்றாகி விட்டதாம். ஒரு வாரம் தமிழ் நாட்டில் இருந்தாலும் ஒரே ஒரு நாள்தான் பொங்கல் சாப்பிட முடிந்தது என்று குறைப்பட்டுக் கொண்டார்கள்.

எங்கள் ஊரில் பொங்கல் ப்ரேக் ஃபாஸ்ட் என்றோம்.  அவியல் கிடைக்கவில்லை என்றார்கள். அடிப்படையில் அவியல்  கேரள ஸ்பெஷல். தமிழகத்தில் எல்லா நாட்களும் போட மாட்டார்கள் என்றது அவர்களுக்கு வியப்பாக இருந்தது.

சத்தியசாய் பிரசாந்தி நிலயத்தில் ஏறிய திவாகர் என்பவர் ஒரு தகவல் களஞ்சியமாக இருந்தார். அவரோடு பேசிக் கொண்டிருந்த பொழுது நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

சாயி பக்தரான அவர் வங்கிப்பணியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் சத்திய சாயி பாபா சேவா நிறுவனத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு விட்டாராம். இப்போது கூட ஆஷாட ஏகாதசி சேவைக்காக புட்டபர்த்தி சென்று மும்பைக்கு திரும்பி கொண்டிருப்பதாக கூறினார். அவரோடு வந்த அவர் மனைவி குரு பூர்ணிமா வரை அங்கு தங்கி விட்டு விமானத்தில் மும்பை திரும்புவாராம்.

"இப்போதெல்லாம் விமான டிக்கெட்டுகள் மிகவும் சல்லிசாக கிடைக்கின்றன. இருந்தாலும் எனக்கு ரயிலில் பயணிப்பது மிகவும் பிடிக்கும். எங்கள் அப்பா ரயில்வேயில் பணிபுரிந்ததால் அதன் மீது ஒரு பாசம்" என்றார்.  அது மட்டுமல்ல இந்தியன் ரயில்வேயைப் பற்றி மிகவும் உயர்வாக பேசினார். "இவ்வளவு பரந்த நெட் வொர்க், இத்தனை வசதிகளோடு உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. எனக்கு முன்னால் ஒரு கதை புத்தகம், மற்றும் ரயில்வே கைடு இருந்தால், நான் ரயில்வே கைடைத்தான் தேர்ந்தெடுப்பேன். அதிலிருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்" என்றார்.
அவர் கூறிய சில விஷயங்கள் ஆச்சர்யமூட்டின.

மும்பையிலிருந்து கிளம்பும் ஒரு ரயில் வண்டி (மன்னிக்கவும், பெயர் மறந்து விட்டது)ஒரு குறிப்பிட்ட தூரம் வரை எக்ஸ்பிரஸ்ஸாகவும், பின்னர் ஒரு குறிப்பிட்ட தூரம் பாசன்ஜர் வண்டியாகவும், பின்னர் மெயிலாகவும் ஓடுகிறதாம்.

கரக்பூர் ரயில் நிலைய நடை மேடைதான் இந்தியாவிலேயே மிக நீண்ட நடை மேடையாம். உலகின் மூன்றாவது நீண்ட நடை மேடையாம் (1.72 கி.மீ. என்கிறார் கூகுள் ஆன்டி)ஆங்கிலேயர்கள் காலத்தில் ஆங்கிலேய உயரதிகாரிகள் வாக்கிங் செல்வதற்காக அமைக்கப்பட்டதாம்

ராஜதானி எக்ஸ்பிரஸ்ஸில் முதல் வகுப்பில் பயணித்தால் நமக்கு ராஜோபசாரம் கிடைக்குமாம். பயணிகளை ஒரு ரோஜாவோடு வரவேற்பார்களாம். சாப்பிட டைனிங் டேபிள் கொண்டு வந்து வைப்பதோடு, மெனு கார்டில் இருக்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமாம். ம்ம்ம்.. இதையும் ஒரு முறை பார்க்கலாம்.

ரயில்வே உயரதிகாரிகள் அலுவலக வேலைக்காக பயணிப்பதற்காக சலூன் என்றழைக்கப்படும் அலுவலகம் உட்பட அனைத்து வசதிகளும் கொண்ட சிறப்பு கோச்சுகள் உண்டாம். அவை கடைசியில் கார்ட் வேனுக்கு முன்பாக இணைக்கப்படுமாம்.


அரசு நிறுவனங்கள் என்றாலே அவை பற்றி குற்றங்களையும், குறைகளையும் மட்டுமே கேட்டிருந்ததற்கு மாற்றாக எத்தனை சிறப்புகள் என்று கேட்டது நன்றாக இருந்தது. இருந்தாலும் புனே ஜங்ஷனில் இறங்கியதும் இவ்வளவு முக்கியமான ஜங்ஷனில் எஸ்கலேட்டரோ, லிஃப்டோ இல்லையே என்று நினைப்பு வந்ததை தவிர்க்க முடியவில்லை.


Thursday, July 11, 2019

மன்னிப்பு

மன்னிப்பு 

அன்று அயோத்தி நகரமே சந்தோஷத்திலும், கொண்டாட்டத்திலும் மூழ்கி திளைத்தது. பின்னே தசரத குமாரன் ஸ்ரீ ராமனின் பிறந்த நாள் என்றால் சும்மாவா? அதுவும் ராமனுக்கு திருமணமானபின் வரும் முதல் பிறந்த நாள், கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்? அயோத்தியில் கால் வைத்த அத்தனை பேரும் ஏதோ ஒரு பரிசோடுதான் திரும்பினார்கள். 

வழக்கம் போல அந்தணர்களுக்கு விதை நெல்லும், கறவை மாடுகளும் தானமாக தரப்பட்டன என்றால், மற்றவர்களுக்கு அவரவர் தேவைக்கேற்ப பொன்னும் பொருளும் வழங்கப்பட்டன. 

கொடுத்து கொடுத்து கைகளும், புன்னகைத்து, புன்னகைத்து கன்ன கதுப்புகளும் லேசாக வலிக்கத் துவங்கி இருந்தன தசரத குமாரனுக்கு. பெரியவர்களிடமும், குல குரு வஸிஷ்டரிடமும் பெற்ற ஆசிகள், மாமனார் ஜனகர் மாப்பிளைக்காக அனுப்பியிருந்த தாராள  ஸ்ரீதன பொருள்கள், அருமையான ராஜ விருந்து இவைகளால் ராமனுக்கு தலை சற்றே கிறுகிறுக்க சீதையை சீண்டிப் பார்க்கலாம் என்று தோன்றி விட்டது. 

மிகவும் அசதியாக இருப்பது போல சோம்பல் முறித்தபடி படுக்கையில் சரிந்தான். 

"கொடுத்து கொடுத்தே இன்றைக்கு மிகவும் களைத்து விட்டீர்கள்  போலிருக்கிறது" என்றபடி ராமனின் கரங்களை எடுத்து மெல்ல நீவி விட்டபடியே சீதை கூற, 

அதெல்லாம் ஒன்றுமில்லை, கொடுப்பதற்கு அலுப்பு கொள்பவர்கள் நாங்கள் இல்லை.." என்றவன் தொடர்ந்து,

" உனக்கு பிறந்த தின கொண்டாட்டங்கள் உண்டா?" என்றான் 

"ஏன் இல்லாமல்? எனக்கு மட்டுமல்ல, என் சகோதரிகளுக்கும் உண்டு..'', 

''நான் சித்திரை மாதம் புனர்வசு நட்சத்திரத்தன்று பிறந்தவன் என்பது தெரிந்திருப்பதால் என் ஜென்ம தினத்தை கொண்டாடுகிறோம். நீ பிறந்த தினம், நட்சத்திரம் எதுவுமே தெரியாதே எதை 
கொண்டாடுவீ ர்கள்?''

"ஏன்? என் தந்தை என்னை கண்டெடுத்த நாளைத்தான் என் பிறந்த நாளாக கொண்டாடுவார்.."

"உன்னை பெற்றவர்கள் யார் என்பதும் தெரியாது, எங்கே, எப்பொழுது பிறந்தாய் என்றும் தெரியாது, ஜனக மஹாராஜா யாகத்திற்க்காக நிலத்தை உழும் பொழுது அவரால் கண்டெடுக்கப் பட்டதால் ஜானகி ஆகி விட்டாய். ஆனால் நானோ, ரிஷ்ய ஸ்ரிங்கர்  தலைமையில் என் தந்தை புத்திர காமேஷ்டி யாகம் செய்ய, யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவ புருஷன் கொணர்ந்த பாயசத்தை என் தாய் அருந்தியதால் பிறந்தவன். அழகிலும், குணத்திலும் நீ எனக்கு இணையாக இருக்கலாம், ஆனால் பிறப்பால் நான்தான் உன்னைவிட மேம்பட்டவன். ஒருவருடைய பிறப்புதானே எல்லாவற்றையும் நிர்ணயம் செய்யும்... அந்த வகையில் உன்னை விட உசத்தியான நான் அதை பொறுப்படுத்தாமல் உன்னை மணந்து கொண்டிருக்கிறேன்" குறும்பாக கூறினான் ராமன்.

சுருக்கென்று தைத்தது சீதைக்கு. விளையாட்டாக கூறப்பட்டதா? அல்லது அந்த போர்வையில் மனதில் இருப்பது வெளியில் வந்து விட்டதா? நான் இழி குலத்தை சேர்ந்தவளா? பாதிக்கப்பட்ட மனது பதில் சொல்ல தீர்மானித்தது. 

"இருக்கலாம்.. என்னை விட நீங்கள்தான் உயர்ந்தவராக இருக்கலாம். ஆனால், உலக வழக்கில் உயர்ந்த ஒரு விஷயம் தன்னை விட தாழ்ந்த விஷயத்தை தேடிச் செல்லுமா? தன்னை விட உயர்ந்த விஷயத்தைதானே அடைய விரும்பும்? அதன்படி பார்த்தால் நான் அல்லவோ உங்களை நாடி வந்திருக்க வேண்டும்? ஆனால் நடந்தது என்ன? நீங்கள் அல்லவா மிதிலைக்கு வந்து, என் தந்தை வைத்த சுயம்வர போட்டிக்கு கட்டுப்பட்டு, சிவ தனுசை உடைத்து என்னை மணந்து கொண்டீர்கள்.. இதிலிருந்தே நம் இருவரில் யார் உசத்தி என்று தெரியவில்லையா?" 

காலையிலிருந்து புகழ்ச்சி, பாராட்டு இவற்றில் திளைத்துக் கொண்டிருந்த ராமனுக்கு சீதையின் இந்த பதில் யாரோ முகத்தில் குத்தி கீழே தள்ளியது போல இருந்தது. விருட்டென்று சீதையின் கையை உதறினான். திரும்பி படுத்துக்க கொண்டான். அவன் விழித்துக் கொண்ட பொழுது சீதை அங்கு இல்லை. 

மற்றவர்கள் முன்னிலையில் சாதாரணமாக இருப்பது போல 
காட்டிக் கொண்ட சீதை, தனிமையில் ராமனை புறக்கணித்தாள். அவளின் இந்த பாரா முகம் ராமனுக்கு புதிது. அப்படியே இரண்டு நாட்கள் சென்றன. அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என்று ராமனுக்கு தோன்றியது. தவறு தன்னுடையது என்பதால், தானேதான் இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தான். 

அன்று பகல் உணவு முடித்து ஓய்வு எடுத்துக் கொள்ள அவர்களின் பிரத்யேக அரண்மனைக்கு வந்தவன், சீதை வருவதற்கு முன், தன் கை விரல் மோதிரத்தை கழட்டி, அறையின் ஒரு மூலையில் போட்டான். அவள் வந்து உறங்கி விழித்து விட்டாள் என்று தெரிந்ததும் அவனும் அப்போதுதான் விழிப்பவன் போல எழுந்து கொண்டு,'' உனக்கு என் மேல் என்ன கோபம் இருந்தாலும் நான் தூங்கி கொண்டிருக்கும் பொழுது உன் தந்தை எனக்களித்த மோதிரத்தை கழட்டி வைத்துக் கொள்வது சரி கிடையாது.." 

"இது என்ன புது கதை? நான் எதையும் கழட்டவில்லை. எந்த மோதிரத்தை சொல்கிறீர்கள்?" 

"நம் திருமணத்தின் பொழுது உன் தந்தை எனக்களித்த மோதிரம்.."

"அதையா காணவில்லை? ஐயோ! அது சப்த ரிஷிகளில் ஒருவராகிய காஸ்யபர் என் தந்தைக்கு அளித்தது. அதை அவர் மிகுந்த மரியாதையோடும், கவனத்தோடும் பாதுகாத்து வந்தார், நம் திருமணத்தின் பொழுது உங்களுக்கு அணிவித்தார், அதையா  காணவில்லை..? காலையிலிருந்து எங்கெல்லாம் சென்றீர்கள்? கடைசியாக எப்போது அதை பார்த்தீர்கள்? 

"இங்கு வரும்வரை அது என் கையில்தான் இருந்தது. இப்போதுதான் காணவில்லை"

"திருமணத்தில் போடப்பட்ட மோதிரம் தொலைந்து போவது துர் சகுனம் அல்லவா?" பதட்டமும் துக்கமும் சீதையை பற்றிக் கொண்டன. 

"இரு இரு, அவசரப்பட வேண்டாம்,அந்த மோதிரம் கொஞ்சம் தளர்வாகத்தான் இருக்கும், அதுவும் கொஞ்ச நாட்களாக நழுவி விழுந்து விடுமோ என்று தோன்றியது, ஒரு வேளை படுக்கையில் விழுந்திருக்கிறதா என்று பார்க்கலாம்.." பேசிக் கொண்டே படுக்கையை உதறி தேடுவது போன்ற தன் நடிப்பை துவங்கினான்.

சீதை நிஜமாகவே தேட, அவள் கையில் சிக்கியது தொலைக்கப்பட்ட மோதிரம். "இதோ இங்கே இருக்கிறது! அப்பாடா!  காஸ்யபர் என் தந்தைக்கு அளித்தது.."கண்கள் பனிக்க அந்த மோதிரத்தை கண்களில் ஒற்றிக் கொண்டு கணவனிடம் நீட்டினாள்.

"அட! நானும் இத்தனை நேரமாக ததேடிக் கொண்டிருக்கிறேன், என் கண்களில் படவேயில்லை, நீ கண்டு பிடித்து விட்டாயே..! நிஜமாகவே நம் இருவரில் நீதான் உசத்தி. நீயே எனக்கு அணிவித்து விடு" என்று தன் கரத்தை அவள் முன் நீட்ட

இன்னும் இரு வேறு தருணங்களில் அவனை மன்னிக்க வேண்டும் என்று அறியாமல், கணவன் விரலில் மோதிரத்தை அணிவித்த சீதை ராமனை மன்னித்தாள்.

பின் குறிப்பு:

இந்த சம்பவம் அனந்தராம தீக்ஷதர் எழுதியிருக்கும் சுந்தரகாண்ட பாராயண புத்தகத்தில் குறிப்பிட பட்டிருக்கும். 

இந்த கதை 'சீதை ராமனை மன்னித்தாள்' என்று முடியும்படி சிறுகதை எழுத வேண்டும் 
என்று 'எங்கள் பிளாகில்' கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நான் எழுதிய சிறுகதை. எங்கள் பிளாகில் படிக்காதவர்கள் இதில் படிக்கலாம்.   

Saturday, July 6, 2019

எண்ணச்சிதறல்

எண்ணச்சிதறல்

கல்வி சிறந்த தமிழ் நாடு என்பது பாரதியின் வாக்கு. பங்களூர் வந்த பிறகு அது உண்மைதானோ என்று தோன்றுகிறது. இங்கே புத்தகங்கள் தொங்கும் பொட்டி கடைகள் கண்களில் படவே இல்லை. இந்த ஊர்காரர்கள் புத்தகமே படிக்க மாட்டார்களா? பஸ் ஸ்டாண்டில் கூட புத்தகக் கடை இல்லை. 


நம் ஊரில் இப்படியா இருக்கும்? எத்தனை பொட்டி கடைகள்? அவற்றில் எத்தனை புத்தகங்கள்? ஒரு திருமண ரிசப்ஷனில் பஞ்சு மிட்டாய், பாப்கார்ன்


 இவைகளோடு பொட்டி கடையும் வைத்திருந்தார்கள். அதில் கூட பேப்பர், நக்கீரன், ஜுனியர் விகடன் போன்றவைகளை தொங்க விட்டிருந்தார்கள்.

பெங்களூர் வந்த புதிதில் புத்தகங்களை தேடி நான் அலைந்ததை ஒரு பதிவாக போட்டிருந்தேன்.  பிறகு புத்தக கடையை கண்டு பிடித்தேன் அதற்குள் வீட்டிலேயே ம.மலரும், குமுதம் சினேகிதியும் கொண்டு வந்து போட ஆள் கிடைத்தார். புது வீட்டில் பேப்பர் போடுகிறவர் தமிழ் புத்தகங்கள் கிடையாது என்று கூறி விட்டார். மீண்டும் தேடல். சப்ஸ்கிரிப்ஷன் கட்டி விடலாம் என்று தோன்றுகிறது.

புது வீடு வந்து ஒரு மாதமாகி விட்டது. சின்ன சின்னதாய் ஏதேதோ வேலைகள். இப்போதுதான் ஒரு வழியாய் முடிவுக்கு வந்தன. அதனாலோ என்னவோ, எதையும் கோர்வையாக சிந்திக்கக்கூட இயலவில்லை.  எண்ணங்கள் சிதறுகின்றன(அப்பாடா டைட்டிலை ஜஸ்டிஃபை பண்ணி விட்டேன்).

சென்ற வெள்ளியன்று இரவு அமசான் பிரைமில் எஸ்.ஜே. சூர்யா நடித்த 'மான்ஸ்டர்'  படம் பார்த்தேன். எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்று நினைக்கும், வள்ளலாரின் தீவிர பக்தரான,  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும், திருமணத்திற்கு பெண் தேடி எதுவும் தகையாத எஸ்.ஜெ.சூர்யா வாடகை வீட்டில் தண்ணீர் கஷ்டத்திலும் தவிக்கிறார். சொந்தமாக ஒரு வீடு வாங்கி விட்டால் வீட்டு ஓனரின் தொந்தரவிலிருந்தும் தப்பிக்கலாம், பெண் கிடைத்தாலும் கிடைக்கும் என்று நண்பன் கருணாகரன் ஆலோசனை கூற ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி, கொஞ்ச காலம் சந்தோஷமாக இருக்கிறார். அழையா விருந்தாளியாக அங்கு குடியேறும் ஒரு எலி அவரை ஆட்டி வைப்பதுதான் கதை. 


சும்மா சொல்லக்கூடாது எஸ்.ஜே. சூர்யா பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவர் நண்பனாக வரும் கருணாகரன், கதாநாயகி பிரியா பவானி சங்கர் இருவருமே தங்கள் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள். பிரியா பவானி சங்கரை சீரியலிலும், ஒரு சில விளம்பரங்களிலும் பார்த்திருக்கலாம். அழகான, திறமையான நடிகை. ஆனால் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிப்பாரா என்று தெரியவில்லை. படம் முழுவதும் புடவையும், சூடிதாரும் மட்டுமே அணிந்து வருகிறார். நோ கவர்ச்சி. எஸ்.ஜே.சூர்யாவோடு நடித்தும், கடைசி காட்சியில் கையை கோர்த்துக் கொள்வதைத் தவிர தொடாமல் நடித்திருக்கிறார்!!. இவையெல்லாம் போணி ஆகுமா?  இப்போதைய இளம் இயக்குனர்கள் புதிது புதிதாக கதைகளை யோசிப்பதும் அதை திறம்பட எடுப்பதும் சந்தோஷமான விஷயம். 

சாய் சங்கரா மேட்ரிமோனியல் சர்வீஸுக்கான விளம்பரத்தில் ரிஜிஸ்டர் செய்யும் மணமகனின் குறைந்த பட்ச வருமானம் ரூ.30000/-  என்று குறிப்பிடுகிறார்கள்.  

இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் தன் முதல் பட்ஜெட்டை சமர்ப்பித்து விட்டார். இதுவரை இப்படிப்பட்ட ஒரு வீராவேசமான பட்ஜெட் உரையை கேட்டதில்லை. பட்ஜெட்டின் சாதக, பாதகங்களை நிபுணர்கள் அலசட்டும். நான் விடை பெறுகிறேன். பிறகு சந்திக்கலாம்.