படித்ததில் பிடித்தது!
சமீபத்தில் இரண்டு புத்தகங்கள் படித்தேன். ஒன்று சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' இரண்டாம் பாகம், மற்றது சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் திரு.SP.சொக்கலிங்கம் அவர்கள் எழுதியுள்ள 'பிரபல கொலை வழக்குகள்' என்னும் புத்தகம்.
கற்றதும் பெற்றதும்:
ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகளாக வந்த பொழுது இருந்த சுவாரஸ்யம் அத்தனை கட்டுரைகளையும் மொத்தமாக படிக்கும் பொழுது இல்லை. ஒரு புத்தகம் வெளியிட்டதுமே குறிப்பாக கவிதை தொகுப்பு தனக்கு அனுப்பிவிடுவதாக மீண்டும் மீண்டும் பல இடங்களில் குறை பட்டுக்கொண்டிருக்கிறார். அதைப்போலவே அசல் ஹைகூவிற்க்கும் ஹைக்கூ என்று நினைத்துக் கொண்டு அடுக்கப்படும் வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க பல முறை முயன்றிருக்கிறார். சுவாரஸ்யமான இரண்டு விஞ்ஞான கட்டுரைகள். வீரமாமுனிவர் தமிழில் மட்டுமில்லை மத மாற்றத்திலும் வல்லவராக இருந்திருக்கிறார் என்னும் புது விஷயத்தையும் அவருடைய பரமார்த்த குரு கதைகள் இந்து மத சாமியார்களையும் நம்பிக்கைகளையும் கேலி செய்து எழுதப்பட்டவை என்பதும் கொஞ்சம் அதிர்ச்சி அளித்தன.
பிரபல கொலை வழக்குகள்:
ஒவ்வொரு கால கட்டத்திலும் பல் வேறு ஸ்வாரஸ்யமான வழக்குகள் நீதி மன்றத்தில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. நாம் அவற்றைப் பற்றி கொஞ்ச நாள் பேசி விட்டு, அடுத்த பரபரப்பு செய்தி வந்தவுடன் மறந்து விடுகிறோம். அப்படி பேசப்பட்ட சில வழக்குகளைப் பற்றி துப்பறியும் நாவல் போல விவரித்துள்ளார் புத்தகாசிரியர்.
நமக்கு கொஞ்சம் பரிச்சயமான வாஞ்சிநாதன் சம்பந்தப்பட்ட ஆஷ் கொலை வழக்கு, லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு, எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு இவைகளோடு சிங்கம்பட்டி கொலை வழக்கு, பாவ்லா கொலை வழக்கு, ஆளவந்தான் கொலை வழக்கு, பகூர் கொலை வழக்கு, நானாவதி கொலை வழக்கு, விஷ ஊசி வழக்கு மற்றும் மர்ம சன்யாசி வழக்கு என்று மொத்தம் பத்து கொலை வழக்குகளைப் பற்றி சரளமான நடையில் விறுவிறுப்பு குறையாமல் எழுதப் பட்டிருப்பதால் புத்தகத்தை கையில் எடுத்து விட்டால் கீழே வைக்க முடியவில்லை. நூலாசிரியர் வக்கீலாக இருந்தாலும் வழக்கு சம்பத்தப்பட்ட தொழில் நுட்ப தகவல்களை அளவுக்கு அதிகமாக தராமல் வாசகர்களுக்கு எவ்வளவு கொடுத்தால் அவர்களால் உள் வாங்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவு மட்டும் விஷய தானம் செய்திருப்பது ஒரு சிறப்பு. சம்பவங்களால் பிரபலமான வழக்குகள், பிரபலமான மனிதர்கள் சம்பந்தபட்டிருப்பதால் பிரபலமான வழக்குகள் என இரண்டு வகையான வழக்குகளையும் சேர்த்திருப்பது இன்னும் ஒரு சிறப்பு.
ஆஷ் துரை கொலை வழக்கில் முதல் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்விற்காக சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்ட பொழுது அதை விசாரணை செய்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் P.R.சுந்தரம் ஐயரும் ஒருவர் என்பதும் அவர் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியாகுமா என்று சந்தேகம் தெரிவித்தார் என்பதையும் அறிய ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.
எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கில் எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக் கொண்டார் எம்.ஆர். ராதா. ஆனால் ஆச்சர்யம் இருவருக்கும் உயிர் போகவில்லை. காரணம் 17 ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கப்பட்டு எம்.ஆர்.ராதாவின் மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த அந்த குண்டுகள் ஒவ்வொரு முறை மேஜை டிராயர் திறந்து மூடப்பட்ட பொழுதும் அதிர்ச்சிக்கு உள்ளானதால் தன் வீர்யத்தை இழந்து விட்டிருக்கின்றன எனவே துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட பொழுது அவைகளால் போதுமான வேகத்தில் சென்று இலக்கை தாக்க முடியவில்லை என்னும் தகவல் மற்றொரு ஆச்சர்யம்.
அந்தக் கால சூப்பர் ஸ்டார்களான எம்.கே. தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் சம்பத்தப்பட்ட லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு மேல் முறையீடிர்க்காக சென்னை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்காக வந்த பொழுது அதை விசாரித்த நீதிபதிகளுள் ஒருவராக இருந்த ஷஹாபுதீன் பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான் சென்று அங்கு உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஒய்வு பெற்றார் என்பதை அறிய ஆச்சர்யமாக இருக்கிறது என்றால் அதை விட ஆச்சர்யம் லக்ஷ்மிகாந்தனை கொலை செய்தது யார் என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது என்னும் செய்தி.
நானாவதி கொலை வழக்கு விசாரணை 1959ஆம் ஆண்டு நடை பெற்ற பொழுது அஹுஜா டவல்களும் நானாவதி விளையாட்டு துப்பாக்கிகளும் அமோகமாக விற்பனையாகினவாம்.
பாவ்லா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரானவர் முகமது அலி ஜின்னா, அனால் அவரால் இந்த கேசில் வெற்றி அடைய முடியவில்லை.
எல்லாவற்றையும் விட மிக மிக சுவாரஸ்யமானது இறந்து விட்டதாக கருதப்பட்ட ஜமீன் வாரிசு மீண்டு வந்த 'மர்ம சாமியார்' வழக்கு. தற்போதைய பங்களா தேஷின் டாக்காவில் இருந்த மேஜோ குமார் என்னும் ஜமீன் இளவரசரைப் பற்றி living with the Himalayan Masters என்னும் புத்தகம் படித்தவர்கள் அறிந்திருக்கலாம். எனக்கு நான் மிகச் சிறிய வயதில் பார்த்த 'இதய கமலம்' படம்தான் நினைவுக்கு வந்தது. உண்மை கற்பனையை விட விநோதமானது என்பதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகள்.
நல்ல புத்தகம்! கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு. ஆசிரியர் எஸ்.பி.சொக்கலிங்கம்.
No comments:
Post a Comment