கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால்...
இப்போதெல்லாம் தொலை காட்சியில் நிறைய ஜோதிட நிகழ்சிகள் இடம் பெறுகின்றன. அதில் ஜாதகத்தில் என்னென்ன தோஷங்கள் இருந்தால் எந்தெந்த கோவில்களுக்குச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். அதைத் தவிர கோவில்களைப் பற்றி சிறப்பு நிகழ்சிகளும் காண்பிக்கப்படுகின்றன. அவைகளிலும் அந்த ஆலயங்களில் சென்று வழி படுவதால் ஒருவருக்கு என்ன நன்மைகள் நடக்கும் என்று சிறப்பித்து சொல்கிறார்கள். இந்த நிகழ்சிகளைப் பார்க்கும் மக்கள் எப்படியாவது தன் துன்பம் தீராதா என்ற ஆதங்கத்தோடு அந்த கோவிலுக்குச் செல்கிறார்கள். ஆனால் அங்கு நடப்பது என்ன? பெரும்பாலான பெரிய கோவில்களில் அர்ச்சனை செய்வதே கிடையாது. நாம் வாங்கிச் செல்லும் தேங்காயை வெளியிலேயே உடைத்து விட்டு நம்மிடம் திருப்பித் தந்து விடுகிறார்கள்.
கடவுளுக்கு மாலை சாற்றுவது மிகவும் சிறப்பு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன் எனவே திருச்சிக்கு அருகில் உள்ள அந்த பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலுக்குச் சென்ற பொழுது மாலை வாங்கி சென்றேன் ஆனால் அங்கிருந்த அர்ச்சகரோ மாலையிலிருந்து ஒரு ரோஜாப் பூவை பிய்த்து என் கையில் கொடுத்து விட்டு மாலையை நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்த படியே சந்நிதியை நோக்கி விட்டெரிந்தர் அது அம்மன் காலடியில் போய் விழுந்தது. நான் மனம் நொந்து போனேன்.
இன்னொரு முறை சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு தேங்காய் மாலை சாற்ற சொன்னதால் தேங்காய் மாலை வாங்கிக்கொண்டு கோவிலுக்குச் சென்றேன். அங்கு, "நாங்கள் ஏற்கனவே ஒரு மாலை சாற்றி விட்டோம் எனவே இதை நாளை சாற்றுகிறோம் என்றார்கள்". சதுர்த்தி அன்று சாற்ற வேண்டிய மாலையை அவர்கள் மறு நாள் சாற்றுவர்களாம்...!
அதை விட கொடுமை அன்றைக்கு விநாயகருக்கு அர்ச்சனை செய்ய அர்ச்சனை தட்டு வாங்கிக் கொண்டு சென்றோம். அவர்கள் அஷ்டோத்திரம்(108) சொல்லி அர்ச்சனை செய்யாமல் விநாயகருக்கு உரிய ஷோடச நாமாக்களை (16 மட்டும்) சொல்லி அர்ச்சித்து கொடுத்து விட்டார்கள். இதன் பிறகும் நமக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தோன்றுமா? ஒரு வேளை விளக்கு ஏற்றக் கூட வழி இல்லாமல் இருந்த கோவில்களில் இன்று கும்பல் நெரிகிறது, அதை நல விதமாக அங்குள்ளோர் பயன் படுத்திக்கொண்டால் பக்தர்களுக்கும் மனம் நிறையும் கோவில்களும் செழிக்கும்!
No comments:
Post a Comment