கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, August 16, 2016

இரண்டு உறுதி மொழிகள்!!

இரண்டு உறுதி மொழிகள்!!

உறுதி மொழிகளை புத்தாண்டு அன்றுதான் எடுக்க வேண்டுமா என்ன? எல்லா நல்ல நாட்களிலும் எடுத்துக் கொள்ளலாம். அதன்படி நான் சுதந்திர தினத்தன்று இரண்டு உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். 

ஆகஸ்ட் 1-15 மங்கையர் மலரில் பத்மவாசன் என்பவர் தண்ணீர் சிக்கனத்தை பற்றி எழுதியிருந்த கட்டுரையில் ஷவரில் குளிப்பதை விட, பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி அதில் குளிப்பது தண்ணீர் சிக்கனத்திற்கு உதவும். ஷவரில் குளிக்கும் பொழுது நம்மை அறியாமல் அதிக நேரம் குளிக்கும் அபாயம் உள்ளது என்றும், சச்சின் டெண்டுல்கர் கூட ஒரு பக்கெட் நீரில் குளிப்பதாக உறுதி எடுத்திருப்பதாகவும், அவர் குடும்பத்தினரையும் அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பதாகவும் படித்த பிறகு, நானும் ஒரு பக்கெட் நீரில் குளிப்பது என்று உறுதி எடுத்திருக்கிறேன். பல நாட்கள் ஷவரில் குளித்து பழகி விட்டதால் இப்போது ஒண்ணேகால் பக்கெட் தண்ணீர் தேவைப் படுகிறது. கூடிய விரைவில் ஒரு பக்கெட் நீரில் குளிக்க பழகி விடுவேன்.

இதை என் மகளிடம் சொன்னேன், "வாட் இஸ் த சைஸ் ஆப் த பக்கெட்? வேரியஸ் சைசெஸ் ஆர் அவைலபில்" என்கிறாள். என்ன செய்ய? 

அடுத்த உறுதிக்கு காரணம் நேற்று(15.8.2016), விஜய் டீ.வி.யில் ஒளிபரப்பான  சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றம். திரு.சுகி.சிவம் தலைமையில் இன்று மக்களிடையே மேலோங்கி இருப்பது வீட்டு நலமா? நாட்டு நலமா? என்னும் தலைப்பில் வாதிட்டார்கள். வீட்டு நலமே என்னும் கட்சிக்காக பேசிய முனைவர் ராமலிங்கம், நாம் எல்லோரும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளும் பொழுது நான் நன்றக இருக்க வேண்டும், என் குழந்தைகள் நன்றக இருக்க வேண்டும் என்றுதான் வேண்டுகிறோம், யாராவது என் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறோமா? என்றார். நியாயமான கேள்விதான். 

சாதாரணமாக என் தினசரி பிரார்த்தனை
வாழ்க அந்தணர், வானவர் ஆனினம் 
வீழ்க தண்புனல், வேந்தனும் ஒங்குக 
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க 
வையகமும் துயர் தீர்க்கவே 

என்னும் தேவாரப் பதிகம்  சொல்லி, "லோகா சமஸ்தா சுகினோ பவந்து", "சர்வ ஜனோ சுகினோ பவந்து" என்று கூறி நமஸ்கரிப்பதோடுதான் முடியும். ஆனால் குறிப்பிட்டு, என் தேசம் நலமாக  இருக்க வேண்டும் என்று வேண்டியதில்லை. இனிமேல் எங்கள் நாட்டிற்கு சுய நலம் அற்ற திறமையான தலைவர்களை கொடு, என் தேசம் தன்னிறைவு பெற்று விளங்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளப் போகிறேன், என் பிரார்த்தனையில் என்னோடு இணைந்து கொள்ள விரும்புகிறவர்கள் இணைந்து கொள்ளலாம். கூட்டுப் பிரார்த்தனைக்கு வலிவு அதிகம்!   

6 comments:

 1. படித்துக்கொண்டே வரும்போது எனக்குத் தோன்றியதையேதான் உங்கள் மகளும் கேட்டிருக்கிறார்!

  நான் கடவுளிடம் வேண்டுதலே வைப்பதில்லை. அவனுக்குத் தெரியும், என்ன செய்ய வேண்டுமென்று என்று விட்டு விடுவேன்! அதுசரி, கொனஷ்டையாக ஒரு கேள்வி.. எனது நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று சுயநலமாக வேண்டுதல் சரியா? உலகமே நன்றாயிருக்க வேண்டும் என்று வேண்ட வேண்டாமோ!

  :)))

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி! கடவுளிடம் எதுவும் வேண்டிக் கொள்ளாமல் இருப்பது ஒரு உயர்ந்த நிலை. நீங்கள் இந்த நிலையில் இருப்பது மகிழ்ச்சி, நீடிக்க வேண்டுகிறேன்.
   'லோகா சமஸ்தா சுகினோ பவந்து' என்பதும், 'வையகமும் துயர் தீர்க்கவே' என்பதும் உலகம் முழுமைக்குமான பிரார்த்தனைதானே? அது பொது நலத்தில் சேராதா?

   Delete
 2. நாங்க அமெரிக்கா போனாலும் கூட வாளியில் நீர் நிரப்பித் தான் குளித்து வருகிறோம். அதே போல் தினமும் நாடு நலமுறவும் பிரார்த்திப்பது உண்டு! :) அதிலும் தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்க்கும்போது பிரார்த்திப்பதைத் தவிர்க்கவே முடியாது.

  ReplyDelete
  Replies
  1. குழாயை திறந்து வீட்டுக் கொண்டே பல் தேய்ப்பது, பாத்திரங்கள் துலக்குவது போன்றவற்றை செய்வது இல்லை. ஆனால் குளிப்பதற்கு கொஞ்சம் அதிகமாகத்தான் நீர் வேண்டும் எனக்கு. முதலில் ஸ்ரீரெங்கம், திருமணமானவுடன் மஸ்கட் என்று தண்ணீர் பஞ்சம் இல்லாத ஊர்களில் இருந்தது காரணமாக இருக்கலாம், எனிவே அதற்கும் தண்ணீரை சிக்கனமாக உபயோகிக்க தீர்மானம்..

   உங்களிடம் எனக்கு பிடித்த விஷயம், எதையும் நான் என்று குறிப்பிட்டு உங்களை தனிமை படுத்திக்க கொள்ளாமல் நாம் என்று குறிப்பிடும் பொதுவுடைமை! வாழ்க!

   Delete
  2. ஹிஹிஹி, பாராட்டுக்கு நன்றி. எனக்கு ஷவரில் குளிக்கவே பிடிக்காது என்பதையும் சொல்லி இருக்கணும். ஜனவரியில் மைத்துனர் பிள்ளை கல்யாணத்திலே தங்கி இருந்த ஓட்டலிலே ஷவரில் தான் குளிக்க முடியும்! வாலி, சுக்ரீவன் எல்லாம் கிடையாது! திணறிப் போயிட்டேன். நம்ம ரங்க்ஸ் வந்து வெந்நீரைச் சரியானபடி வைத்துக் கொடுப்பார். எப்படியோ அது சூடு அதிகம் ஆகும் இல்லைனா ஜில் தண்ணீர் வரும். போதும், போதும்னு ஆயிடுச்சு! :)

   Delete
 3. ji scientists clearly predict the vast shortage of water
  in another fifty years.... better we regulate ourselves...

  ReplyDelete