பெரியோரைப் பணிவோம்!
மேலை நாடுகளில் ஸ்டார் ஹோட்டல்களில் தங்குபவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக பைபிளின் சிறிய பிரதி ஒன்றை வைத்திருப்பார்களாம். அதை ஒட்டி நம் நாட்டிலும் ஸ்டார் ஹோட்டல்களில் பைபிளின் கை அடக்க பிரதி ஒன்று வைக்கப்பட்டு வந்தது. மேலை நாடுகள் கிருத்தவ மதத்தை சார்ந்தவை என்பதால் அங்கு பைபிள் வைக்கப்படுவது நியாயம். நம் நாடு இந்து மதத்தை தழுவியதுதானே, இங்கு ஏன் பைபிளை வைக்க வேண்டும்? பகவத் கீதையின் கை அடக்க பிரதியை வையுங்கள் என்று கூறி, அதை செயல் படுத்த வைத்தவர். இவரை நினைத்தால் பகவத் கீதையை நினைப்போம். பகவத் கீதையை நினைத்தால் ஒரு நாடகம் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்த, அழகான ஆங்கிலத்தில் இவர் ஆற்றிய அருமையான பேருரைகள்தான் நினைவுக்கு வரும். இப்போது தெரிந்திருக்குமே நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று..?
ஆமாம், சுவாமி சின்மயானந்தா என்று அறியப்படும் ஸ்வாமி சின்மயானந்த சரஸ்வதிதான். 1916 ம் ஆண்டு,மே மாதம் 8ம் தேதி எர்ணாகுளத்தில் பாரு குட்டி, குட்டன் மேனன் தம்பதியினருக்கு மகனாக பிறந்த அவருக்கு பாலகிருஷ்ணன் என்று பெயரிட்டு பாலன் என்று அழைத்தனர். பெயருக்கு ஏற்றார் போல் சுட்டித்தனமும், குறும்பும் மிகுந்திருந்த அந்தக் குழந்தைக்கு புத்திசாலித்தனத்திலும் குறைவிருக்கவில்லை. ஐந்து வயதிலேயே தாயை இழந்தாலும் உறவினர்கள் மூலம் பாசம் நிறையவே கிடைத்ததது.
1940ஆம் ஆண்டு லக்னோ சர்வகலாசாலையில் ஆங்கில இலக்கியம் மற்றும் சட்டம் படிக்க சேர்ந்தார். அப்பொழுது தீவிரமாக இருந்த சுதந்திர போராட்டம் இவரையும் ஈர்க்க 1942 ஆம் ஆண்டு நேரடியாக அதில் ஈடுபட்டார்.அதன் பயனாக சிறை வாசம், அங்கு அவரை பீடித்த டைபாய்டு நோய். அந்த நோயால் இறந்து கொண்டிருந்த கைதிகளுள் இவரும் ஒருவராகி விடப் போகிறாரே என்று பயந்த ஜெயில் வார்டன் அவரை சிறைச் சாலைக்கு வெளியே தெருவோரம் வீசி எறிந்து விட்டு சென்று விட்டாராம். இரக்க குணம் கொண்ட ஒரு கிருத்தவ மாது இவரை காப்பாற்றி நோயிலிருந்து மீட்டாராம். பிறகு தன் படிப்பை தொடர்ந்து, முடித்து, 1945 ஆம் ஆண்டு டெல்லியில் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அங்கு அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் வரவேற்பை பெற்றன. அங்கிருந்த காலத்தில்தான் அவருக்கு வாழ்க்கையை பற்றியும், ஆன்மிகம் குறித்தும் நிறைய கேள்விகள் மனதில் பிறந்தன. அதற்கு விடை காணும் பொருட்டு அரபிந்தோ, ரமணா மகரிஷி, ஸ்வாமி சிவானந்தா போன்ற பெரியோர்களின் புத்தகங்களை படித்திருக்கிறார். அவற்றுள் ஸ்வாமி சிவானந்தாவின் போதனைகள் இவரைக் கவரவே அவரை நேரில் சந்தித்து தன் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று ஸ்வாமி சிவானந்தாவை சந்திக்க சென்றார். அவரோடு ஒரு மாதத்தை கழித்தப் பிறகு ஒரு புதிய பால கிருஷ்ணனாக டில்லி திரும்பினார். அதன் பிறகு பலமுறை டில்லிக்கும் ரிஷிகேஷிற்கும் பயணம் மேற்கொண்டார்.
இறுதியாக 1945 பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி அவருக்கு துறவற தீக்ஷையும், சின்மயானந்த சரஸ்வதி என்னும் பெயரையும் அளித்தார். அதன் பிறகு தன் சீடர் பகவத் கீதை, பிரம்ம சூத்திரம், உபநிஷத் இவைகளை கற்றுத் தேரர் வேண்டும் என்று விரும்பிய ஸ்வே சிவானந்தா, சின்மயானந்தாவை தபோவன் என்னும் ஆசானிடம் பயிற்ச்சி சொல்லி உத்திர காசிக்கு அனுப்பி வைத்தார். தபோவன் என்ற அந்த கண்டிப்பான ஆசிரியரிடம் அவர் பயின்ற எட்டு வருடங்கள் மிகவும் கடுமையானவை. அதில் தேர்ந்த பிறகு தான் கற்றுக் கொண்டதை, தன் ஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று விரும்பிய சின்மயானந்த தன விருப்பத்தை தபோவன் அவர்களிடம் வெளியிட்டார். ஆனால் தபோவன் குருஜியோ, மக்கள் அதற்க்கு இன்னும் தயாராகவில்லை, "நீ சொல்வதை புரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு கிடையாது. உபதேசம் செய்வதற்கு பதிலாக நீ ஒரு ஆறு மாதம் இந்தியா முழுவதும் ஒரு பக்கிரியைப் போல சுற்றி, மக்களை சந்தித்து விட்டு வா" என்றார்.
அந்த அறிவுரையை ஏற்று சின்மயானந்தாவும் கால் நடையாகவே பல ஊர்களுக்கும் பயணப்பட்டார். மக்களிடம் பிச்சை பெற்றும், தெரு ஓரங்களிலும், கோவில்களிலும் படுத்து உறங்கி பலதரப்பட்ட மக்களை சந்தித்த பின் மறந்து போன நம் ஆன்மீக விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகவே அவருக்குத் தோன்றியது, தன கருத்தை தபோவனிடம் வெளியிட இந்த முறை அவர் சம்மதம் அளித்தார், சரி, சொற்பொழிவு செய் ஆனால் உன் பேச்சை கேட்பதற்கு குறைந்த பட்சம் நான்கு பேராவது இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்.
சின்மயானந்த கீதை பேருரைகளை தொடங்கினார். அது அத்தனை எளிதாக இருக்கவில்லை. ஓர் பக்கம் படித்த, ஆங்கிலேய மோகம் கொண்ட மேல்தட்டு வர்க்கம் இதை கேட்க விரும்பவில்லை. மறுபக்கம் சனாதனிகள் என்று என்று தங்களை சொல்லி கொண்ட தானும் வேதாந்த விஷயங்களை படிக்காமல், மற்றவர்களையும் படிக்க விடாமல் செய்து கொண்டிருந்த மேல் ஜாதியினர் ரகசியமாக வைத்திருந்த வேதாந்த விஷயங்களை எல்லோருக்கும் இவர் போதித்ததை அதுவும் ஆங்கிலத்தில், சுத்தமாக விரும்பவில்லை. ஆனாலும் மெல்ல மெல்ல நிலை மாறியது. 60களில் வேர் விட்டு இந்தியா மட்டுமல்ல வெளி நாடுகளிலும் சின்மயா மிஷிகளுக்கு கிளைகள் உள்ளன. 62 பள்ளிகள், அதைத் தவிர பாலவிஹார், மற்றும் யுவ கேந்த்ரா அமைப்புகள் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் வழி காட்டுகின்றன. அதைத் தவிர ஸ்வாமி தயானந்த சரஸ்வதி, ஸ்வாமி ஏ. பார்த்தசாரதி, தயானந்த சரஸ்வதியின் சீடரான ஸ்வாமி ஓம்காரானந்த, என்று வாழை அடி வாழையாக வரும் திருக் கூட்ட மரபை தோற்றுவித்திருக்கிறார். அவர்கள் இவர் காட்டிய பாதையில் கீதையையும், உபநிஷதத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவை எல்லாவற்றையும் தாண்டி எத்தனை நூல்கள்? ஆன்மீக விஷயங்கள் மட்டுமல்லாது அன்றாட வாழ்க்கைக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள் அவை. ஒரு முறை ஒரு குழந்தை அவரிடம்,"ஸ்வாமிஜி, நீங்கள் எங்கு வசிக்கிறீர்களா"? என்று கேட்டது, அதற்க்கு அவர் சிரித்துக் கொண்டே ரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும்" என்று கூறினாராம். அங்குள்ள புத்தக கடைகளில் இவருடைய புத்தகங்கள் வைக்கப்பட்டிருப்பதையே அப்படி கூறினார். ஆம் புத்தகங்கள் வடிவில் அவர் அங்கெல்லாம் வசித்துக் கொண்டுதான் இருக்கிறார். நாம்தான் தேடி கண்டு கொள்ள வேண்டும்.
எங்கெல்லாம் பகவத் கீதையும், உபநிஷத்தும், விவேக சூடாமணியும் படிக்கப் படுகிறதோ, அங்கெல்லாம் ஸ்வாமி சின்மயானந்தா சூக்ஷும ரூபத்தில் அதை ரசித்துக் கொண்டிருப்பார்.
ஹரி ஓம்!
சின்மயானந்தர் குறித்த பகிர்வு அருமை.
ReplyDeleteபாராட்டுதல்களுக்கு நன்றி! உங்கள் பாராட்டுதல்களை குருவிற்கு சமர்ப்பிக்கிறேன்.
Deleteஸ்வாமி சின்மயானந்தருக்கும் இது நூற்றாண்டு என்பதை அறிந்து கொண்டேன். அருமையான பதிவு.
ReplyDeleteபாராட்டுதல்களுக்கு நன்றி! உங்கள் பாராட்டுதல்களை குருவிற்கு சமர்ப்பிக்கிறேன்.
Deleteஎன் அப்பா ஸ்வாமி சின்மயானந்தாவை குருவாய் ஏற்றுக் கொண்டவர். அவர்கள் சொற்பொழிவு எங்கு நடந்தாலும் சென்று கேட்பார்கள். தயானந்தா சரஸ்வதி அவர்கள் சொற்பொழிவுகளையும் கேட்போம்.
ReplyDeleteசின்மாயா மிஷ்னில் துணைதலைவராக இருந்தார்கள். கோவையில். 1970ல்.
ஸ்வாமியை பற்றி விரிவான பகிர்வுக்கு நன்றி.
பாலவிஹாரில் சேர்ந்து பாடல்கள்(பஜன்) கற்றேன். பகவத்கீதை, பஜகோவிந்தம் எல்லாம் கற்றேன்.
என் சிறுவயது நினைவு வந்து விட்டது.
குருவிற்கு வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.
வருகைக்கும் உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!
Delete