கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, February 5, 2017

இரண்டாம் தாரம்

இரண்டாம் திருமணம் 

"அக்கா, வர ஞாயிறு அயோத்யா மண்டபத்தில் சுயம்வர ஹோமம் நடக்கப்போறது, கார்த்தாலே எட்டு மணிக்கு ஆரம்பம். கிருஷ்ணாவோட ஜாதகத்தை எடுத்துண்டு நீயும் அத்திம்பேரும் வாங்கோ. அந்த ஹோமத்தில் கலந்துண்டா, நிச்சயம் கல்யாணம் ஆகிடும். எங்க நாத்தனாரோட மச்சினர் பொண்ணுக்கு கல்யாணம் தட்டிப்போயிண்டே இருந்தது. போன வருஷம் இந்த ஹோமத்தில் கலந்துண்டா, உடனே கல்யாணம் நிச்சயம் ஆயிடுத்து.. கிருஷ்ணாக்கும் சீக்கிரம் கல்யாணம் நிச்சயம் ஆகட்டும்.." சித்ரா பேசிக்கொண்டே போனாள். 

"ம்.. சரி.." என்றதோடு போனை துண்டித்தாள் சந்திரா. 

"யாரு?.. என்னவாம்"? என்ற கணவரின் கேள்விக்கு பதிலாக முதல் பாராவில் இருந்த விஷயங்களை சொல்ல, அவரும் பதில் பேசாமல் டி.வி.யை நிறுத்தி செய்தி தாளை கையில் எடுத்துக் கொண்டார்.  

இப்போதெல்லாம் எல்லா சம்பாஷணைகளும் கிருஷ்ணாவின் திருமண பேச்சில்தான் வந்து முடிகின்றன. 

பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும், கை நிறைய சம்பாதிக்கும், கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாத பையனுக்கு முப்பது மூன்று வயதாகியும் திருமணம் நடக்காததன் காரணம் தெரியவில்லை. 

கிருஷ்ணாவிற்கு இருபத்தைந்து வயதானபொழுது அவன் தங்கைக்கு திருமணம் ஆனது. அப்போது எல்லோரும் "கிருஷ்ணா உனக்கு லைன் க்ளியர்" என்றபோது "இன்னும் இரண்டு வருடங்கள் போகட்டும்" என்றான். 

அதைப் போலவே இரண்டு வருடங்கள் கழித்து, ஒரு நல்ல நாளில், மேட்ரிமோனியல் சைட் ஒன்றில் பதிவு செய்தார்கள். பெண்ணுக்கு பதிவு செய்து விட்டு வீடு திரும்புவதற்குள், புகைப்படம் அப் லோட் கூட ஆகவில்லை அழைப்புகள் வர தொடங்கி விட்டன. தினமும் ஏழெட்டு அழைப்புகளுக்கு குறையாது. ஆனால் க்ரிஷ்ணாவிற்கு அந்த அளவு ரெஸ்பான்ஸ் இல்லை. ஏன் என்று குழம்பிய பொழுது, ஏற்கனவே பிள்ளைகளுக்கு மேட்ரிமோனியல் சைட்டுகளில் பதிவு செய்து திருமணம் முடித்த உறவினர்களும், நண்பர்களும் "இப்படித்தான் இருக்கும், அது மட்டுமல்ல நாம் அழைத்தாலும் பதில் வராது" என்று தைரியம் அளித்தார்கள்/பயமுறுத்தினார்கள்
அப்பொழுது பார்த்து அவனுக்கு ஆன் சைட்டில் சுவீடன் செல்லும் வாய்ப்பு வந்தது. சுவீடனா? என்றார்கள். ஆறு மாதம்தான் அங்கிருப்பான், திரும்பி வந்து விடுவான் என்றாலும் மீண்டும் அழைக்கவில்லை.

ஒரு வருடம் கழித்து மீண்டும் ஆன்சைட்டில் அமெரிக்கா சென்றான். 
இவர்கள் மேட்ரிமோனியல் சைட்டில் பார்த்து சொல்லும் பெண்களை அவனுக்கு பிடிக்காது, அவனுக்கு பிடிக்கும் பெண்களின் ப்ரொபைலில் ஏதாவது குறை இவர்களுக்கு படும். 

இந்தப் பெண் பரத நாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறாளாம், அதைத் தொடர விருப்புகிறாளாம், அதெல்லாம் நமக்கு சரி படுமா? அவ டான்ஸ் ஆட போயிட்டா, இவன் நட்டுவாங்கம் பண்ணுவானா? என்றார் கணவர்.

இவர்களுக்கும் பொருத்தம் என்று தோன்றி, அவனுக்கும் பெண்ணை பிடித்திருந்தால், ஜாதகம் சேராது. அல்லது, எங்கள் பெண் இங்கு நல்ல வேலையில் இருக்கிறாள் அதை விட்டு விட்டு வெளிநாடு செல்ல அவளுக்கு விருப்பம் இல்லை என்பார்கள். 

எல்லாம் ஒத்து வந்து இவர்கள் வீடு வரை வந்த சிலர் அதற்குப் பிறகு எந்த பதிலும் சொல்லவில்லை. வீடு சிறியது என்று நினைத்தார்களோ என்னவோ. சிலர் நீங்கள் இன்னும் கார் வாங்கவில்லையா? என்று கேட்டார்கள். அவர்கள் வீட்டில் இரண்டு கார்கள் இருக்கிறதாம். 

அதற்காக பெண்ணைப் பெற்ற எல்லோரும் மோசம் என்று கூறி விட முடியாது. எளிமையாக, யதார்த்தமானவர்களும் இருந்தார்கள். வீடு, காரெல்லாம் எங்க ஓடிடப் போறது? வயதிருக்கிறது, படிப்பு இருக்கு, வேலை இருக்கு, எதிர்காலத்தில் வாங்காமலா இருப்பார்கள்? என்று கூறியவர்களும் இருந்தார்கள். ஆனால், அவர்களோடு உறவைத் தொடர முடியாமல் பாழாய்ப் போன ஜாதகம் தடுத்ததே. 

எப்படியோ கிருஷ்ணா முப்பது வயதை கடந்து விட்டான். அதற்குள் அவன் கார் வாங்கி விட்டான், பழைய இரண்டு பெட் ரூம் வீட்டை கொடுத்து விட்டு, நகருக்குள்ளேயே  செகண்ட் ஹாண்ட் மூன்று பெட் ரூம் வீடு வாங்கி அதை புதுப்பித்துக் கொண்டார்கள்.  ஆனால் தலை முடி பின்னோக்கிச் சென்று நெற்றி பெரிதாகி விட்டது சந்திராவுக்கு கவலை தந்தது. 

இதெல்லாம் பெரிய விஷயமில்லை, இன்னிக்கு நிறைய இளைஞர்களுக்கு சீக்கிரம் தலை வழுக்கையாகி விடுகிறது. பொல்யூஷன், கெமிக்கல்ஸ் கலந்த ஷாம்பூதான்  காரணம். என்று  
சமாதானம் கூறப் பட்டாலும் பெண்கள் அதை ஏற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வேண்டுமே?

பெண்ணுக்கு திருமணம் செய்யும் போது கூட இத்தனை கவலைப் படவில்லை. பிள்ளைக்குத்தான் ரொம்ப கவலையாக இருக்கிறது. அந்த கவலை அவளுக்கு சர்க்கரை நோயையும், கண்களுக்கு கீழ் கருவளையங்களையும் உண்டாக்கியது. 

மெல்ல மெல்ல உறவினர்களும் நண்பர்களும் பரிகாரங்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். ஓ.எம்.ஆரில் இருக்கும் நித்யகல்யாண பெருமாள் கோவிலுக்கு சென்று அவன் பெயரில் அர்ச்சனை செய்து அர்ச்சகர் தரும் மாலையை அவன் கழுத்தில் அணிந்து கொண்டு கோவிலை மூன்று முறை வலம் வந்தால்...

"அய்யய்யோ, அவன் இதையெல்லாம் செய்யவே மாட்டான்". 

"அவன் செய்யாவிட்டால் நீங்கள் செய்யுங்களேன்.."

அங்கு போன பொழுதுதான் ஊரில் இத்தனை பேருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையா? இது நம் வீட்டில் மட்டும் நடக்கும் கதை இல்லை போலிருக்கிறது என்று ஆறுதல் தோன்றியது. 

திருமணம்சேரி என்றார்கள், திருச்சிக்கு அருகில் திருப்பஞ்சீலி என்றார்கள், திருப்பதி பெருமாளுக்கு திருக்கல்யாணம் செய்யச் சொன்னார்கள் எவ்வளவு ஊர்களுக்கு செல்ல முடியும்?  பிரதோஷத்தன்று சிவன் கோவிலில் புது அகல் விளக்கில் விளக்கேற்ற சொன்னார்கள். இவர்களும் முடிந்ததை செய்தார்கள். ஒரு கட்டத்தில் யாராவது பரிகாரம் சொன்னால், நிறைய செய்து விட்டோம் என்று கூறியதை திமிர் என்றார்கள்.

சமீபத்தில் மேட்ரிமோனியல் விளம்பரத்தை புதுப்பிக்கலாம் என்று சென்ற பொழுது, அங்கிருப்பவர், "முப்பது மூணு வயசா? 

கஷ்டமாச்சே சார்.. பசங்களுக்கு முப்பது வயதிற்குள் திருமணம் முடித்து விட வேண்டும், அதற்குப் பிறகு பெண் கிடைப்பது கஷ்டம்.. " என்றார். எதற்கும் இருக்கட்டும் என்று புதுப்பித்தார்கள். ஆனால் பலன் ஏதுமில்லை.

நீ ஜாதகம் ரொம்ப அலசி பார்க்கிறாயா..? அதனால்தான் டிலே, " என்றார் மாமா. ஜாதகம் பார்க்கத் தொடங்கி விட்டு எப்படி நிறுத்துவது? நட்சத்திர பொருத்தம் மட்டும் போதும் என்று முடிவெடுத்தாள்.  

பிராமினாக இருந்தால் போதாதா? ஏன் ஐயர் பெண்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிற? ஐயங்காரோ, ராயரோ, தெலுங்கு பிராமினோ ஓகே னு சொல்ல வேண்டியதுதானே..

அதையும் முயற்சி செய்து பார்த்தாகி விட்டது. ஒரு ஐயங்கார் பெண்ணும், ஒரு மாத்வ பெண்ணும் பிடித்திருந்தது.அந்தப் பெண்களின் பெற்றோர்களும் முதலில் சரி என்றார்கள். பின்னர் எங்கள் வீட்டில் பெரியவர்கள் வேண்டாம் என்கிறார்கள் என்று கூறி விட்டார்கள். 

ஒரு முறை குடும்ப விசேஷம் ஒன்றிலும் வழக்கம்போல கிருஷ்ணாவின் திருமண பேச்சு வந்த பொழுது, அவன் அப்பா,":வெஜிடேரியனாக இருந்தால் போதாதா? எந்த ஜாதியாக இருந்தால் என்ன? என்றதும் அவர் தம்பி பையன் கார்த்திக் ," பெரிப்பா இந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் எடுக்காதீர்கள். ஊர் பக்கம் ஜாதி சங்கங்களில் அவர்கள் வீட்டு குழந்தைகள், குறிப்பாக பெண்கள் ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்து கொள்ள கூடாது என்று தீர்மானமே நிறைவேற்றி இருக்கிறார்கள். நீங்க பாட்டுக்கு ஏதாவது புரட்சி செய்து, எங்க அண்ணாவை போட்டுட்டாங்கன்னா..?எனக்கு என் அண்ணா வேணும் என்று கிருஷ்ணாவை கட்டிக் கொண்டான். 

"போடா, நீ சொல்றதை நம்ப முடியாது, ஏதாவது அடிச்சு விடுவ..."
.
ப்ராமிஸ்.. எங்க ஆஃபிஸில் ஒரு மதுரை பையனும், கோயம்புத்தூர் பக்கத்துல ஒரு ஊர் பெண்ணும் எட்டு வருஷமா லவ் பன்றாங்க. ரெண்டு பேர் வீட்டுலேயும் ஒத்துக்கலை, ஒரு வழியா பையன் வீட்டில் ஒப்புக் கொண்டார்கள், பெண் வீட்டில் நோ. கடைசீல இப்போ, "நீ அவனைத்தான் கல்யாணம் செஞ்சுப்ப என்றால் எங்களால் கல்யாணத்துக்கு வர முடியாது. நாங்கள் உன்னை ஏற்றுக் கொண்டோம் என்று தெரிந்தால், எங்களை ஜாதியிலிருந்து விலக்கி வைத்து விடுவார்கள். நீ வீட்டை விட்டு ஓடிப் போய்ட்டானு சொல்லி விடுகிறோம்.எங்கேயாவது போய் திருமணம் செய்து கொண்டு நன்றாக இரு என்று கூறி விட்டார்கள். அடுத்த வாரம் குன்றத்தூரில் கல்யாணம்.."

அவன் சொன்னதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. என்றாலும் ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் என்னும் ஐடியாவை கை விட்டார்கள்.

மாப்பிள்ளை கூட, "அவன் ஆஃபிஸில் எத்தனை பெண்கள் வேலை செய்வார்கள்? ஒருத்தி கூடவா இவன் கண்ணுக்கு படல? அவ்ளோ பழமா உங்க அண்ணா?" என்றாராம். 

அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது. அவ்வப்பொழுது பெண்களை வீட்டிற்கு அழைத்து வருவதுண்டு. சிலரை, கலீக் என்றும் சிலரை பிரெண்ட் என்றும் அறிமுகப் படுத்துவான். அவர்கள் வீடு சென்றதும், "யாருடா இந்தப் பொண்ணு? இவளுக்கு என்ன வயசு இருக்கும்? என்று அம்மா ஆரம்பித்தால், "நீ எங்க வரேன்னு தெரியும், ஷி இஸ் கமிடெட், வாயை மூடிண்டு வேலையைப் பாரு" என்பான்.

நேற்று வெள்ளிக்கிழமை அன்று, அம்மா, இந்த சண்டே  என்னோடு கலீக் ஒருத்தியை சாப்பிட கூப்பிட்டிருக்கேன், உனக்கு ஓகேவா என்றான். 

சாப்பிட வந்த பெண் அமரிக்கையாகவும், லட்சணமாகவும் இருந்தாள். 

"ஷி இஸ் சுஜாதா, அண்ணா நகரில் இருக்கிறாள். கொஞ்ச நாள் ஆஸ்திரேலியாவில்  இருந்தாள், இப்போதுதான் என்னோட ப்ரொஜெக்டில் சேர்ந்திருக்கிறாள் என்று அறிமுகப் படுத்தினான். 

அந்தப் பெண் அரட்டை அடிக்கவில்லை, ஆனால் சகஜமாக பழகினாள். சுஜாதா, ஆஸ்திரேலியா.... இவளை பற்றி முன்பு ஒரு முறை ஏதோ சொல்லியிருக்கிறான். சட்டென்று நினைவுக்கு வரவில்லை. 

சாப்பிட்டு முடித்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அந்தப் பெண் கிளம்பிச் சென்றது. மாலை தேநீரோடு வந்த பிஸ்கெட்டை எடுத்து ஒரு கடி கடித்து விட்டு, " நான் சுஜாதாவை கல்யாணம் செய்து கொள்ள போகிறேன்" என்றதும், 

யாரு சுஜாதா..? என்றார் அவன் தந்தை.

இன்னிக்கு மதியம் லஞ்சுக்கு வந்தாளே..

கிருஷ்ணா கூறியதும், சந்திராவின் மனசுக்குள் பொறி தட்டியது. 

"இந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவள் இல்லையோ"?
   
"ஆமாம், அவளோட எக்ஸ் ஹஸ்பாண்ட் ட்ரக் அடிக்ட். வெளிநாட்டு மாப்பிள்ளை என்று சரியாக விசாரிக்காமல் கொடுத்து விட்டார்கள். பாவம், ஒரு வருஷம் கஷ்டப்பட்டுவிட்டு, திரும்பி வந்து விட்டாள்".

"டைவர்ஸ் கிடைத்து விட்டதா? அல்லது லீகல் ப்ரோஸெடிங் போயிண்டிருக்கா"?

"போன மாதம்தான் கிடைத்தது". 

"பின்னல் பிரச்சனை எதுவும் வரக்கூடாது".

"அதெல்லாம் வராதுப்பா. டைவர்ஸ் கிடைக்கறதுக்கு முன்னாலேயே அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டான்.. ராஸ்கல்.."

"திடீர்னு ஒரு பெண்ணை கூட்டி வந்து, அவளை கல்யாணம் செய்து கொள்ளப் போறேன் என்கிறாய், அதுவும் ஒரு டிவோர்சியை.., குழந்தைகள் இருக்கா"? 

"இல்லை.." 

"கிவ் அஸ் சம் டைம் டு திங்க் "

"எவ்ளோ நாள்? ஒரு மாதம்"?

"அவ்ளோ வேண்டாம்... டக்குனு முடிவு பண்ற விஷயமா? பை த வே, அவ ஒப்புக்கொண்டு விட்டாளா"?

"இன்னும் அவளிடம் சொல்லவே இல்லை". 

"பிரமாதம்  ! அவளோட அபிப்ராயம் தெரியாது, எங்ககிட்ட ஏன் கேட்கிற"? 

அப்பாவின் கேள்வி கிருஷ்ணாவை கோப மூட்டியது. "உங்ககிட்ட கேட்காம,தெருவில் போகிறவர்களிடமா கேட்க முடியம்? என்ன பேசற"?

"கோப படாதே.. நீ க்ளியரா இருக்கியான்னு தெரியல.."

"நான் க்ளியராதான் இருக்கேன். நம்மளும் மேட்ரிமோனியல் சைட்டிலெல்லாம் ரிஜெஸ்டெர் பண்ணி பார்த்தாச்சு. நோ யூஸ். இந்த பெண்ணை எனக்கு பிடித்திருக்கிறது, அதனால்தான் கேட்டேன். உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லைனா, நான் அவ கூட பேசுவேன்.. அவளுக்கு நடந்தது ஒரு விபத்து.."

ஹாலில் கொஞ்சம் மௌனம் நிலவியது. 

"நீ என்னமா சொல்லற"

"ஏற்கனவே கல்யாணம் ஆன பெண்ணை ஏண்டா நீ கல்யாணம் பண்ணிக்கணும்? உனக்கு என்ன குறைச்சல்"?

கிருஷ்ணா மெல்ல சிரித்தான். "நீ ஒரு அம்மாவாகவே யோசிக்கற.., நேத்து என் பிரெண்ட் ஒருத்தன், இனிமே கொஞ்சம் சிக்கனமா செலவு பண்ணனும்டா, பொண்ணுக்கு அடுத்த வருஷம் மஞ்ச நீராட்டு விழா வந்துடுமோனு பயமா இருக்கு என்கிறான்.  தலை முடி குறையத் தொடங்கி விட்டது மட்டுமல்ல, நரைக்கவும் தொடங்கி விட்டது. தொந்தி விழுந்தாச்சு. கல்யாணம் ஆகலை என்பதால் நான் பையன் கிடையாது, மாமா.. உண்மையா யோசிச்சா எனக்கும் சுஜாதாவுக்கும் எட்டு வயது வித்தியாசம் இருக்கு"

"ஏற்கனவே கல்யாணம் ஆனவள்..." சந்திரா மீண்டும் அதையே சொன்னாள். 

"என்னம்மா தப்பு? முப்பத்தாறு வருஷம் முன்னால நீ செஞ்சதை நான் இப்போ பண்ணப் போறேன்.. அவ்ளோதானே.."?

எதிர் பார்க்காத இந்த தாக்குதலால் அடிபட்டுப் போன சந்திரா பதில் சொல்ல முடியாமல் மகனை வெறித்தாள். 

"சாரிமா , நான் எதுவும் தப்பா சொல்லல, மனைவியை இழந்த அப்பாவுக்கு நீ இரண்டாம் தாரமாகத்தானே வாழ்க்கைப் பட்டாய்? அதே  போன்ற  நிலையில் இருக்கும் ஒரு பெண்ணை நான் மணந்து கொள்வதில் என்ன தவறு"? 

"யாரோட யாரை நீ கம்பேர் பண்ற?  உங்கப்பாவுக்கு அப்போ வயது அதிகம் ஆகவில்லை, கல்யாணமான ஒரே வருடத்தில் மனைவி மூளைக் காய்ச்சலால் இறந்து விட்டாள். அந்த சமயத்தில் என் பிறந்த வீட்டில் ரொம்ப கஷ்டமான நிலைமை, பெண்ணுக்கு எப்படியாவது நல்லபடியா கல்யாணம் ஆனால் போறும்னு நினைச்ச உங்க தாத்தா என்கிட்டே கேட்டார், நானும் நிலைமையை புரிஞ்சுண்டு சரின்னேன். எனக்கு அதுல எந்த வருத்தமும் கிடையாது. உங்க அப்பாவும் என்னை நன்னாத்தான் வெச்சுண்டிருக்கார்".

"அதேதான்மா இங்கேயும். அப்பாவோட இடத்தில சுஜாதா இருக்கா. உனக்கு கல்யாணம் பண்றது கஷ்டமாக இருந்தது என்றால் எனக்கு கல்யாணம் ஆகறது கஷ்டமாக இருக்கு. நிலைமையை புரிஞ்சுண்டு நீ ரெண்டாம் தாரமா வாழ்க்கைப்பட்டாய், நிலைமையை புரிஞ்சுண்டு நான் அவளை ரெண்டாவது முறையா தாரமாக்குகிறேன். தப்பா? எனிவே, நீங்க யோசிச்சு வையுங்க. நான் சுந்தரம் பஜன் போயிட்டு வரேன்". கிருஷ்ணா கிளம்பினான். 

அவன் சென்ற கொஞ்ச நேரத்தில்," நான் அம்மன் கோவில் வரைக்கும் போயிட்டு வரேன், நீங்களும் வரேளா? 

"வரேனே...",என்றவர் சட்டையை மாட்டிக் கொள்ளும் போது, "இது ஏன் நமக்கு தோணவே  இல்லை? ஆண் மகனைப் பொறுத்த வரை திருமணமோ, மருமணமோ, பெண் கன்னி கழியாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் மாற வேண்டும் " என்றார்.

"இப்போ நிறைய மாறியாச்சு" என்று பதில் சொன்னாலும், அவளால் முழு மனதாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. கோவிலுக்கு செல்கிறேன், அங்கு எனக்கு ஏதாவது நல்ல சகுனம் கிடைக்கட்டும், இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

கோவிலில் விசேஷமாக எதுவும் நடக்கவில்லை. கொஞ்சம் நிம்மதியாகவும், ஒரு ஓரத்தில் கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது. 

வழக்கமாக செருப்பு விடும் பூக் கடையில் செருப்பை மாட்டிக் கொள்ள வந்த பொழுது, அவர், கொஞ்சம் இருங்கம்மா, என்றார். 

"நேத்து திருப்பதி போயிட்டு வந்தேன். திருக்கல்யாணம் பண்ணனும்னு ரொம்ப நாளா எண்ணம், இப்போதான் முடிஞ்சுது" இந்தாங்க பிரசாதம்,என்று, ஒரு பையில் லட்டு, திருமாங்கல்ய சரடு, குங்குமம், இவற்றோடு கொஞ்சம் பூவும் சேர்த்து கொடுத்தார். 

அதை கையில் வாங்கி கொண்டு கணவரை பார்க்க, அவள் மனது புரிந்து ஒரு பொருள் பொதிந்த புன்னகை புரிந்தார். 

வீட்டுக்கு வந்ததும் ஹாலில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணாவிடம் திருப்பதி லட்டுவை கொடுத்து விட்டு, "சுஜாதாவிடம் சீக்கிரம் பேசு. அவர்கள் வீட்டிலும் பேசி சீக்கிரம் முடிவு பண்ணலாம்" என்றாள்.   

19 comments:

  1. கதை(தானே?)யோட ஒன்றிப் போய்ப் படித்தேன். நம்ம அனுபவங்களோட ஒத்துப்போகும் எதுவுமே நமக்கு நெருக்கமான ஒன்றாக ஆகிடும். இதுவும் அப்படித்தான். வரிக்கு வரி, வரிக்கு வரி எங்கள் அனுபவம் போலவே... ஜோர்.

    ReplyDelete
    Replies
    1. சரிதான், நான் எழுதும் எல்லாவற்றிர்க்கும் இது சொந்த அனுபவம் அல்ல என்று டிஸ்கிளைமார் கொடுக்க வேண்டும் போலிருக்கிறதே! எங்கள் வீட்டில் என் மகனுக்கும் சரி, ஒரு முறை பதிவு செய்ததை மீண்டும் புதுப்பிக்க அவசியம் இல்லாமல் விரைவில் திருமணம் முடிந்து விட்டது. சுற்று வட்டாரத்திலும் நட்பிலும், உறவிலும் நான் பார்த்த, கேட்ட விஷயங்களைத்தான் கதையாக்கி இருக்கிறேன்.

      வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி!

      Delete
    2. இது உங்கள் அனுபவம் என்று சொல்லவில்லையே.. எங்கள் அனுபவத்தோடு ஒத்துப் போகிறது என்று சொல்லியிருக்கிறேன்!

      :)))

      Delete
  2. எங்க வீட்டுக் கதையை அப்படியே கிட்டே இருந்து பார்த்துட்டு எழுதிட்டீங்க! நான் எழுதலை. கிட்டத்தட்ட இதே டைலமாவில் தான் என் தம்பி, தம்பி மனைவி இருக்காங்க! :(

    ReplyDelete
    Replies
    1. நம் வீட்டு கதையை நாம் எழுத முடியாது. வருகைக்கு நன்றி!

      Delete
  3. யதார்த்தம்.சொட்டுவதால் ஒன்றி மனதில் ஓட்டி விட்டது. பல குடும்பங்கள் இப்படியான அவஸ்தையில்....ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மட்டும் என்றே தோன்றுகிறது.. அருமை...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் அதிகம் மாறி, அல்லது வளர்ந்து, ஆண்கள் மனப்பான்மை மாறாத எல்ல சமூகங்களிலும் இது நிகழும். பாராட்டுக்கு நன்றி!

      Delete
  4. எங்கள் கேரளத்தில் எந்தச் சமூகத்திலும் இது போன்ற பிரச்சனைகள் அவ்வளவாக இல்லை. சமீப காலத்தில் சிறிது அதுவும் சொல்லும் அளவிற்கு இன்னும் அவ்வளவாக இல்லை எனலாம். கதை மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. கேரளா பல விஷயங்களில் ஒரு முன்மாதிரிதான். பாராட்டுக்கு நன்றி!

      Delete
  5. கதைபோல் யதார்த்த நிலைகளை
    சொல்லிப்போனதால்
    மிகவும் இரசித்துப் படித்தோம்
    மனம் கவர்ந்த படைப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி!

      Delete
  6. வெளிநாடுகளில் வேலைக்குப் போகும் பையன்களுக்குத் திருமணம் ஆவது பெரும்பாலும் தள்ளிப்போகிறது. காரணம் அந்தப் பையன்களே. தனக்கு வரப்போகும் மனைவு H1 B யில் வர வேண்டும், தன்னைப்போலவே கணிசமாக சம்பாதிக்கவேண்டும் என்பது முதல் நிபந்தனை. இரண்டாவது நிபந்தனை, அவள், சினிமா நடிகையைப்போல ழகானவலாக இருக்கவேண்டும் என்பது. மூன்ன்றாவது நிபந்தனை, அவள் உயரமாக இருக்கவேண்டும் என்பது.குறிப்பாக, அமெரிக்க மாப்பிள்ளைகள் இதை வலியுறுத்துகிறார்கள். இந்த மூன்றுக்கும் உடன்பட்ட பெண் கிடைத்தால், மாமனார் மாமியார் பார்ப்பதற்கு சகிக்கவில்லை என்று மறுத்த பையன்களை எனக்குத் தெரியும். தவறு முழுக்க பையன்களிடமும் அவர்களைப் பெற்றவர்களிடமும்தான் இருக்கிறது. - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதை மறுக்க முடியாது. பல பையன்கள் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் பெண் அழகாக இருக்க வேண்டும், ஒல்லியாக இருக்க வேண்டும், உயரமாக இருக்க வேண்டும், நன்கு படித்திருக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும், நன்றாக சமைக்க வேண்டும், என்று டும்டும் கொட்டுவதால்தான், அவர்களின் டும்டும்டும் தள்ளிப் போகிறது. பிரென்ச், ஜெர்மன் போன்ற அந்நிய பாஷை அறிந்திருக்க வேண்டும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதனால்தான் என்னுடைய கதையில், பெண்ணை பெற்ற எல்லோரும் மோசம் என்று சொல்லிவிட முடியாது என்று ஒரு வரி சேர்த்திருந்தேன். வருகைக்கு நன்றி!

      Delete
  7. பெண்களுக்கு இரண்டாம் திருமணம் என்பதைப் பலராலும் நினைக்க முடியவில்லை

    ReplyDelete
    Replies
    1. இப்பொழுது இரெண்டாவது திருமணம் நடக்கிறது. ஆனால், விவாகரத்தான ஒரு பெண்ணை விவாகரத்தான ஒரு ஆண்தான் மணக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். வருகைக்கு நன்றி!

      Delete
  8. அருமையான கதை...ரொம்ப சுவாரஸ்யமா எழுத்தி இருக்கீங்க...

    ReplyDelete
  9. நீங்க போஸ்ட் போட்ட அன்னிக்கே படிச்சிட்டேன் ..மிக வித்தியாசமான எதிர்பாராத ட்விஸ்ட்..ஆண்களுக்கு மறுமணம் எனும்போது வரவேற்கும் சமூகம் பெண்கள் எனும்போது தயக்கம் காட்டுகிறார்கள் குறிப்பா நமது இந்தியரில்.. ..நோர்வே நாட்டு இளவரசன் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்தது விவாகரத்தான ஒரு பெண்ணை அப்பெண்ணுக்கு ஒரு மகனும் உண்டு ..நமது மக்களிடையே பார்வைகள் விசாலமாக வேண்டும்

    ReplyDelete
  10. வாங்க ஏஞ்சலின்! முதல் முறையாக வருகை தந்திருக்கிறீர்கள். வாசிப்புக்கும், கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete