ஜோசியம் பார்கலையோ..? ஜோசியம்
ஒரு மனிதரை பார்த்து சில நாட்களிலேயே அவருடைய பிறந்த தேதியை கணிக்க முடியுமென்றால்...? அது எப்படி சாத்தியம் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நியூமராலஜி சம்பத்தப்பட்ட புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன்.
அந்த சமயத்தில் ராமண்ணா என்று ஒரு ஜோசியர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார்.அவரை நாங்கள் ஜோசியர் மாமா என்போம். பரம்பரை ஜோதிடரான அவரின் கணிப்புகள் மிகவும் துல்யமாக இருக்கும். அவரிடம் நான் அதிகம் விவாதித்திருக்கிறேன். ஒருமுறை சாரதா தேவியின் ஜாதகத்தை யாரென்று சொல்லாமல் அவரிடம் காண்பித்து என்ன சொல்கிறார் பார்க்கலாம் என்று அதிகப்ரசங்கித் தனமாக பரீட்சை கூட செய்தேன். ஆனால் அவர் மிகச் சரியாக கூறி என் வாலை நறுக்கினார். அப்போது பால ஜோதிடம் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது. அதை படித்து விட்டு ஜோசியர் மாமாவிடம் சந்தேகங்கள் கேட்பேன்.
எனவே ஜாதகத்தில் கொஞ்சம் நம்பிக்கை வர ஆரம்பித்தது. என் மூத்த சகோதரி கை ரேகை ஜோதிட சம்பந்தமான புத்தகங்கள் வைத்திருந்தார். அவைகளை படித்து விட்டு நானும் அவரும் கருத்து பரிமாறிக் கொள்வோம். ஒரு முறை என் தோழி ஒருத்தியின் கைய முதலில் நான் பார்த்தேன், பிறகு என் அக்கா பார்த்துவிட்டு,"உங்க வீட்டில் உங்கள் முன்னோர்கள் யாராவது கோவில் கட்டியிருக்கிறார்களா?" என்று கேட்டார். உடனே என் தோழி,"ஆமாம் என் அம்மா சிறிய பிள்ளையார் கோவில் ஒன்று கட்டி அதை பராமரிக்கவும் செய்கிறார்" என்றாள்.
எனக்கு என்னை குறித்து அதாவது என் ஜோதிட அறிவைக் குறித்து மிகவும் வெட்கமாக போய் விட்டது. நாம் இருவரும் ஒன்றாகத்தானே படித்தோம், பிறகு ஏன் அவரால் கணிக்க முடிந்த ஒரு விஷயத்தை என்னால் கணிக்க முடியவில்லை? இதிலிருந்து வெறும் ஏட்டறிவு மட்டும் குறி சொல்வதற்கு போதாது. இன்ட்யூஷன் வேண்டும் என்னும் விஷயம் தெளிவானது. இன்ட்யூஷனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் பூஜைகள்,மந்திர ஜெபங்கள் போன்றவை அவசியம் என்பதால் அதை அதோடு முடித்துக் கொண்டேன். ஆனாலும் ஜாதகம், நியூமராலஜி,நேமாலஜி போன்றவற்றில் ஆர்வம் குறையவில்லை. அது சம்பத்தப்பட்ட புத்தகங்கள் படிப்பதும், அதை பற்றிய ஞானம் உள்ளவர்களோடு உரையாடுவதும் மிகவும் பிடிக்கும்.
இப்படி ஜாதகம், கை ரேகை ஜோதிடம், நியூமராலஜி எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் ஞானம் உண்டு. நம்பிக்கை நிறைய உண்டு. என்றாலும் தொலைகாட்சியில் வரும் ராசி பலன் நிகழ்ச்சிகள், பத்திரிகைகளில் வரும் ராசி பலன்கள் போன்றவற்றை அவ்வளவாக நம்புவதில்லை. இருந்தாலும் பார்ப்பேன். காரணம், ஜோசியர்கள் "எதிர்பார்த்த நன்மை நடக்கும், வழக்குகளில் வெற்றி, உத்தியோக உயர்வு, வீடு மனை வாங்கும் யோகம்" என்று அடுக்குவதற்கு இடையே விருச்சிக ராசிக்காரர்களையும், மகர ராசியில் ராகு இருப்பவர்களையும் ராகு காலம் பாதிக்காது, சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டமி, நவமி நன்மையையே செய்யும். போன்ற சின்ன சின்ன ஜோதிட டிப்ஸ் கொடுப்பார்கள். அதை கேட்பதற்காகவே ராசி பலன் நிகழ்ச்சியை கேட்பேன்.
தொன்னூறுகளில் மங்கையர் மலரில் ஜெயலட்சுமி கிருஷ்ணன் என்பவர் எழுதி வந்த ராசி பலன்கள் எனக்கு பலிக்கும். ஒரு முறை அனுபவித்து கழிக்க வேண்டிய மாதம் என்று எழுதியிருந்தார். என்னடா இது? இப்படி எழுதியிருக்கிறாரே என்று நினைத்தேன். அந்த மாதம் என் கணவர் கீழே விழுந்து, வலது கை பந்து கிண்ண மூட்டு உடைந்து பெரிதும் அவதிக்கு உள்ளானோம். இப்போது பாமா கோபாலன் எழுதும் ராசி பலன்களும் ஓரளவிற்கு பலிக்கின்றன. மிக சமீபத்தில் ஒன்று பலித்தது.
குடும்பத்தில் ஒரு திருமணம்,அதற்காக புடவை, வேஷ்டிகள் வாங்க வேண்டும். தீபாவளி நெருங்கிக் கொண்டிருப்பதால், காலையில் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிவிடலாம் என்று நினைத்தோம். சனிக் கிழமை ராகு காலம் காலை ஒன்பதிலிருந்து பத்தரை வரை, எனவே அதற்கு முன்பே கிளம்பி விட வேண்டும் என்று முடிவு செய்தோம்.
கிளம்பிக்கொண்டே இருக்கும் பொழுது ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் புதல்வர் சொன்ன
ராசி பலனை செவி மடுத்தேன். என்னுடைய ராசிக்கு, "இன்றைக்கு உங்கள் செயல்பாட்டில் ஒரு பெரிய மற்றம் இருக்கும். நீங்கள் செய்யப்போவதை கேள்விப்படும் எல்லோரும் நம்ப முடியாமல் வாயைப் பிளப்பார்கள்" என்றார். அப்படி என்ன வித்தியாசமாக செய்து விடப்போகிறேன் என்று நினைத்தேன்.
தீபாவளி சமயமாச்சே, கடைகள் எல்லாம் சீக்கிரம் திறந்து விடுவார்கள் என்று நினைத்து, வீட்டிலிருந்து 8:30க்கு கிளம்பி, 8:45க்கு கடையை அடைந்து விட்டோம். என்ன ஆச்சர்யம்! கடையே திறக்கவில்லை. அங்கு வேலை செய்யும் பணியாளர்களே வாசலில் காத்துக் கொண்டிருந்தார்கள். என் கணவரோ, இப்போதுதான் கடையே திறக்கிறார்கள், வா, நாம் போய் சிற்றுண்டியை முடித்து விட்டு வந்து விடலாம். என்றார். சரி, என்று உட்லண்ட்ஸ் சென்று சிற்றுண்டியை முடித்துக் கொண்டு திரும்பினோம். சாதாரணமாக நாங்கள் தீபாவளி பர்சேஸ் முடித்து விட்டு உட்லண்ட்ஸில் சாப்பிட்டு விட்டு வருவோம். இந்த முறை வித்தியாசமாக நேர்மாறாக செய்தோம். கும்பலே இல்லை(தீபாவளி நெருங்கி கொண்டிருக்கும் இரண்டாவது சனிக்கிழமை)!!. நிதானமாக பார்த்து வாங்க முடிந்தது. நாங்கள்தான் முதல் போணியாம். நம்ப முடிகிறதா? இதைக் கேட்ட எல்லோரும் ஜீ தமிழ் ஜோதிடர் சொன்னதையே செய்தார்கள். நீங்கள்...?
அடுத்து என்னோட கைரேகையை படமெடுத்து உங்களுக்கு அனுப்பிடவேண்டியதுதான். பெர்முடேஷன் காம்பினேஷனில் சிலவைகள் பலித்துவிடும், மற்றபடி தொலைக்காட்சி ஜோதிடத்தில் நம்பிக்கையில்லை.
ReplyDeleteஹா ஹா ! கண்டவர்களிடம் கையை காட்டாதீர்கள். வருகைக்கு நன்றி!
Deleteசூரிய உதயத்திலிருந்து மூன்றே முக்கால் நாழிகை (ஒரு முகூர்த்தம்)நல்ல நேரம் என்று சொல்வார்கள்..
ReplyDeleteகுலதெய்வ வழிபாடு கோள் வினைகளைத் தீர்க்கும்..
அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
//குலதெய்வ வழிபாடு கோள் வினைகளைத் தீர்க்கும்.// தகவலுக்கு நன்றி! தீபாவளியை சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள் என நம்புகிறேன்.
Deleteதீபாவளி வாழ்த்துகள். எனக்கும் ஜோதிடம் கற்பதில் ஆர்வம் உண்டு என்றாலும் என்னளவில் பெரிதாக ஜோசியம் எல்லாம் பார்த்துக்கொள்ள மாட்டேன். இந்த விஷயத்தில் நம்ம ரங்க்ஸை அடிச்சுக்க ஆள் இல்லை. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை உள்ள எல்லா ஜோசியர்களிடமும் எங்க குடும்ப ஜாதக நோட்டைக் கொடுத்து ஜோசியம் பார்த்திருக்கார். அவங்க சொன்னது எதுவுமே பலிக்கவில்லை என்பதே உண்மை! :)
ReplyDeleteஇந்த விஷயம் பத்தி ஏற்கெனவே சொல்லி இருந்தாலும் மறுபடி சொல்றேன். எங்க கல்யாணம் கிட்டத்தட்ட நின்று போனது. மாமனாருக்குத் தங்கை பெண்ணைத் தான் மருமகளாக ஏற்கணும்னு! ஆனால் நம்ம ரங்க்ஸுக்கோ உறவே வேண்டாம்னு! இவங்க பெண் பார்த்துட்டு முதலில் பிடிச்சிருக்குனு சொல்லிட்டு அப்புறமா வேண்டாம்னு சொல்லவே என் அப்பா சரினு பேசாம இருந்துட்டார். ஆனால் எங்க வீட்டுக்கு வழக்கமாக வரும் ஜோசியர் மட்டும் இந்தப் பையனுக்கு உங்க பெண் தான் மனைவி! வைகாசி 3 தேதிக்குள்ளாகக் கல்யாணம் ஆயிடும். அப்படி அவங்க வீட்டில் சம்மதிக்கலைனாலும் பையர் இஷ்டப்படி தான் திருமணம் நடக்கும்! உங்க பெண்ணுக்கும் வேறு பிள்ளை இனி அமையாது! இந்தப் பிள்ளை தான்! என்று தீர்மானமாகச் சொல்லிட்டார். அப்படியே நடந்தது! தேதி கூடச் சொல்லி இருந்தார்.
ReplyDeleteஇது ஒரு உதாரணம் தான். அந்த ஜோசியர் சொன்ன பல விஷயங்கள் எங்க விஷயத்தில் சரியாக இருந்திருக்கு! எனக்கு முதலில் பெண் தான் பிறக்கும் என்றார். என் கடைசி நாத்தனாருக்குத் திருமணம் தாமதம் ஆகும் என்றார். இப்படி எத்தனையோ!
ReplyDeleteஜோசியம் பலிப்பதற்கும், நாம் கேட்கும் நேரம், அந்த ஜோசியரின் வாக் பலிதம் போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. வருகைக்கு நன்றி!
Deleteஜோதிடம் என்பதும் ஓர் அறிவியல்...கோள்களின் பலன்கள் என்று நம்பிக்கை இருந்தாலும், ஜோதிடம் பார்ப்பதில்லை அதைப் பற்றித் தீவிரமாகச் சிந்திப்பதுமில்லை. எல்லாம் இறைவன் செயல் என்று போய்விடுவது!
ReplyDeleteகீதா: எனக்கு ஏனோ ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை பானுக்கா. என் விஷயத்திலுமே திருமணம் முடிந்த பின் பொருத்தமே இல்லை என்றுதான் அனைத்து ஜோசியர்களும் சொன்னார்கள் எந்த ஜோசியர் பொருத்தினாரோ அவரே சொன்னார். ஜோதிடம் உண்மையாக இருக்கலாம் ஆனால் எனக்கு என் அனுபவங்களின் காரணத்தினால் பிடிக்காமல் போய்விட்டது. சில சமயம் நெகட்டிவ்வாகச் சொல்லப்பட்டால் மனம் எப்போதுமே நெகட்டிவைத்தானே எளிதாகப் பற்றிக் கொள்ளும். அதை நினைத்து ஒரு வித பயம், டென்ஷன், மன அதையே நினைத்திருப்பது என்பதற்கு உட்படுவதை விட..டோட்டல் சரண்டர் டு காட் என்று.... எனவே நான் எப்போதும் சொல்லுவது அப்படி கோள்கள் என்று ஒன்று படுத்தும் என்றால்..
"வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல
அடியார வர்க்கு மிகவே."
அதே போன்று
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
காக்க காக்க கனகவெல் காக்க..
இதுதான் என் மந்திரம்!
@கீதா: என் தோல்விகள்தான் என்னை ஜோதிடம் பக்கம் திருப்பின. கொஞ்சம் தெளிவையும் தந்தன. ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே என்பதில் நிறைய விஷயம் உண்டு. அடியவர்களுக்கு நாலும், கோளும் நல்லதுதான். Sorry,I have pasted a wrong reply to your comment.
Deleteஜோதிடம் அவரவர் நம்பிக்கையைப் பொறுத்து அமைகிறது...தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDeleteஉண்மைதான் ஐயா! வாழ்த்துக்களுக்கு நன்றி!
Deleteஒரே பாடம்படிக்கு பல மாணவர்களும் வெவ்வேறு மதிப்பெண்பெறுகிறார்கள் ஜோதிடமும் அதுபோலதான் எனக்கு நம்பிக்கை இல்லை நண்பர் ரமணி கூட ஒரு பதிவு வெளி இட்டிருந்தார்
ReplyDeleteஅறிவு,திறமை, உழைப்பு,முயற்சி எல்லாம் இருந்தும் ஆசைப்பட்ட சில விஷயங்கள் நடக்கவில்லை. அப்படி எதுவும் இல்லாமல் சில
Deleteவிஷயங்கள் அனாயசமாக நடக்கின்றன. இதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு ஜோதிடம் விடை அளித்தது. வருகைக்கு நன்றி!
எனக்கு ஜோசியம் எதுவும் பலித்ததாய் நினைவு இல்லை. சில வருஷங்களுக்கு முன் ரேஷன் கார்ட் மாற்றும்போது அஷ்டமி அன்று சென்றேன். கூட்டம் மிகக் குறைவாய் இருந்தது. சட்டென முடித்துக் கொண்டு வந்து விட்டேன். ரேஷன் கார்டில் இன்றுவரை பிரச்னை எதுவும் இல்லை!
ReplyDeleteஎன் பெயரை வைத்து ஜோசியம் சொல்லுங்களேன்!
ஶ்ரீராம்... எனக்கு சில ஜோஸ்யங்கள் ஆச்சர்யகரமான விதத்தில் பலித்திருக்கிறது. ஆனால் எல்லா predictionsம் பலித்ததில்லை.
Deleteஅறிமுகமில்லாத எண்கணித்த்தில் நிறைய ஆராய்ச்சி செய்தவரிடம் போனில் என் பிறந்ந தினத்தைச் சொன்னேன். கட கடவென்று உங்களுக்கு இத்தனை சகோதர்ர்கள், இந்த இந்த தேதியில் பிறந்திருப்பார்கள் என்றார். Permutation Combinationஆ என்று தெரியலை, ஆனால் something is there in these sciences.
ஸ்ரீராம் நீங்கள் சிம்ம ராசிக்காரரா? அஷ்டமி நன்மை செய்திருக்கிறதே..!
Deleteஸோடை போகாத பெயர்களில் ஸ்ரீராம் என்பதும் ஒன்று.
கடகம்!
Deleteகே.பி.வித்யாதரன் சொல்வது பெரும்பாலும் பலிக்கிறது. ஷெல்வீ யின் ஜோதிடம் வெறும் பேத்தல்....பொதுவாகவே, சில வார இதழ்களில் வரும் ராசி-பலன்கள் பல நேரங்களில்ஜோதிடர்களால் எழுதப்படுவதில்லை, அந்தந்த உதவி ஆசிரியர்களே எழுதுவதுதான் என்ற உண்மை எவ்வளவு பேருக்குத் தெரியும்?
ReplyDelete-இராய செல்லப்பா சென்னை
செல்லப்பா சார்... இல்லஸ்டிரேட் வீக்லில வந்த வார ஜோதிடக்குறிப்பு பற்றி குஷ்வந்த்சிங் எழுதியதைப் படித்திருப்பீர்கள். (ஒரு வாரம், அந்த ஜோதிட ஆசிரியர் பலன்களை அனுப்பாததால் குஷ்வந்த்சிங்கே கடந்த வாரத்தில் வந்ததை-அல்லது முன்பு வந்ததை மாற்றி பிரசுரித்தாராம். அந்த வாரம் நிறையபேர், பத்திரிகையில் வந்தபடியே நடந்தது என்று கடிதங்கள் எழுதியதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியையே பத்திரிகையிலிருந்து நீக்கிவிட்டாராம்)
Delete//சில வார இதழ்களில் வரும் ராசி-பலன்கள் பல நேரங்களில்ஜோதிடர்களால் எழுதப்படுவதில்லை, அந்தந்த உதவி ஆசிரியர்களே எழுதுவதுதான் என்ற உண்மை எவ்வளவு பேருக்குத் தெரியும்?//
Deleteநிறைய பேருக்குத் தெரியும் என்றுதான் நினைக்கிறேன். வருகைக்கு நன்றி சார்!
@நெல்லைத் தமிழன் எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு பிரபலமான பதிப்பகத்திற்கு ப்ரூப் ரீடராக இருந்தார். ஒரு ஜோதிட புத்தகத்திற்கு புரூப் பார்க்கும் பொழுது, எந்தெந்த கட்டங்களில் எந்தெந்த கிரகம் இருந்தால் என்னென்ன பலன் என்று குறிப்பிட பட்டிருந்த தலைப்பில் ஒரே கட்டத்தில் சனி, ராகு என்ற இரண்டு கிரகங்களின் பெயர் இருந்ததாம் பதிப்பாளரை கேட்ட பொழுது, ஏதாவது ஒரு பெயரை மட்டும் போடுங்கள் என்றாராம், இவர் ராகுவின் பெயரை எடுத்து விட்டாராம். இதைக் கேள்விப்பட்ட பிறகு அந்த பதிப்பகத்தின் ஜோதிட புத்தகங்களை வாங்குவதே இல்லை.
Deleteஎனக்கு மிகவும் நம்பிக்கை , கைரேகையிலும், நியுமராலஜியிலும் தான்.
ReplyDeleteஅம்மா அதிகம் நம்புவார்.
சில எண்கள் சாதகம். சில எண்கள் ஒத்து வருவதில்லை. உங்களைச் சந்தித்துப் பேச ஆவலாக இருக்கிறது.
ப்.வி. ராமன் எண் ஜோதிடம் தேடி எடுது வாங்கிப் படித்தேன்.
வெகு சுவையான பதிவு. எத்தனையோ கேள்விகள் என்னிடம்
இருக்கின்றன. விடைகள் எப்பொழுது கிடைக்குமோ.