மதுரா விஜயம்(ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான்) - 2
ஸ்ரீகிருஷ்ண ஜென்மஸ்தான் நுழைவாயில் |
கோவில் வாசலில் செல் ஃபோன், கைப்பை இவைகளை க்ளோக் ரூமில் வைத்து விட்டு, நாங்கள் உள்ளே வந்த பொழுது கோவிலுக்குச் செல்லும் கதவை மூடிக் கொண்டிருந்தார்கள். மாலை நாலு மணிக்குத்தான் திறப்பார்களாம். நாங்கள் கிருஷ்ணர் பிறந்த இடம் என்று கருதப்படும் சிறைச்சாலை போன்ற அமைப்பிலேயே இருக்கும் ஜென்மஸ்தானை தரிசனம் செய்தோம். அமைதியாகவும், அழகாகவும் இருக்கிறது. பின்னர் அந்த வளாகத்தில் இருந்த செயற்கை குகை ஒன்றில் டிக்கெட் வாங்கிக்கொண்டு புகுந்து, கண்ணனின் வாழ்க்கையை விளக்கும் நிகழ்ச்சிகள் சிற்பங்களாக வடிக்கப் பட்டிருந்ததை பார்த்து விட்டு வெளியே வந்து, எதிரே இருந்த பாபிலோன் என்னும் ஹோட்டலில் பராத்தா, பாலக் பனீர், மிக்சட் வெஜிடபிள் சப்ஜி சாப்பிட்டு விட்டு வந்த பிறகும் நிறைய நேரம் இருந்ததால் கோவர்தன் கிரியை பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று அங்கு சென்றோம்.
கிருஷ்ண பக்தையான மீராவிற்கு கிருஷ்ணனின் திருநாமங்களில் மிகவும் பிடித்தது கிரிதாரி என்னும் நாமம்தானாம்.அதனால்தான் அவள் பாடல்கள் எல்லாம் 'மீரா கே பிரபு கிரிதர நாகர' என்னும் முத்திரையோடு முடிந்திருக்கும். எனக்கு மீரா அளவிற்கு பக்தி கிடையாது. ஆனாலும் எனக்கும் மீராவைப் போல கிருஷ்ணரின் பெயரில் கிரிதாரி என்னும் பெயர்தான் மிகவும் பிடிக்கும். அதனால் கோவர்தன் கிரியை தரிசிக்க வேண்டுமென்பதில் எனக்கு ஆவல் கொஞ்சம் அதிகம் இருந்தது.
கோவர்தன் கிரிராஜ் மந்திர் முகப்பு |
திருவண்ணாமலையை கிரி வலம் செய்வது போல் கோவர்தன மலையையும் கிரி வலம் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருந்ததால் திருவண்ணாமலையைப் போல பெரிய மலையாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை. சிறிய கோவிலாகத்தான் இருக்கிறது.
கோவில் உள்ளே நுழைந்ததும் வலது கை பக்கம் கிரிராஜ் சந்நிதி. அதற்கு பக்கத்திலேயே ஒரு கடையில் ஒரு சிறிய டம்பளரில் பாலும், இனிப்புகளும் விற்கிறார்கள். வட இந்தியர்கள் அங்கு பால் வாங்கி கிரிராஜுக்கு அபிஷேகம் செய்து விட்டு, இனிப்புகள் வாங்கி படைத்து விட்டுதான் கிருஷ்ணரை தரிசிக்க செல்கிறார்கள். கிருஷ்ணன் கோவர்த்தன கிரிக்கு பூஜை செய்யும்படி கோபர்களை பணித்த காரணமாக இருக்குமோ? எப்படியிருந்தாலும் அவர்களின் பக்தி பிரமிக்க வைக்கிறது.
உள்ளே பிரதானமாக இருப்பது வட இந்திய பாணி ராதா கிருஷ்ணர். அழகான தோற்றம். பிரதான மேடைக்கு இரு புறமும் சுவற்றில் பெரிய கோவர்த்தன கிரியை தூக்கி ஆயர்களை காக்கும் கிருஷ்ணன் படமும், காளிங்க மர்தன கிருஷ்ணனின் படமும் மாட்டப் பட்டிருக்கின்றன.
பிரதான மேடைக்கு இடது புறமும் வலது புறமும் உள்ள மேடைகளில் பஞ்சினால் கிருஷ்ணரும், கைலாச தோற்றமும் செய்திருந்தார்கள்.
இந்த கோவிலை பரிக்ரமா என்னும் கிரிவலம் இருபத்தோரு கிலோ மீட்டர்களை சுற்றி வர நன்கு மணி நேரம் ஆகும் என்றார்கள். ஒரு வேளை அப்படி சுற்றி வரும் பொழுது மலை கண்ணில் படலாம். இப்போது அந்த இடம் மேட்டுப்பாங்காக இருப்பதை வைத்தும், கிரிராஜ் சந்நிதியில் காணப்படும் பாறையை வைத்தும் ஒரு காலத்தில் மலையாக அல்லது குன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டோம்.
அங்கிருந்து மீண்டும் மதுரா திரும்பும் வழியில் மழை பிடித்துக் கொண்டது. நல்ல மழை. ட்ரைனேஜ் பொங்கி வழிந்து, சாலைகளெல்லாம் சாக்கடை வெள்ளம். கடுமையான போக்குவரத்து நெரிசல். நாங்கள் சென்ற பாதையில் திரும்பி வர முடியாமல் திருப்பி விட்டு விட்டார்கள். எப்படி எப்படியோ சுற்றி வளைத்து கிருஷ்ண ஜென்மஸ்தானை அடைந்தோம்.
மழை விட்டு விட்டது. கோவில் வாசலில் பாதுகாப்பு சோதனை செய்யுமிடத்தில் பயங்கர கும்பல். அப்போது ஒரு பள்ளி மாணவன் போலிருந்தொரு சிறு பையன் எங்களிடம் வந்து, "இந்த வரிசையில் நின்று நேரத்தை வீணாக்க வேண்டாம், நான் உங்களை வி.ஐ.பி. வரிசையில் அழைத்துச் செல்கிறேன், ஒருவருக்கு இருநூறு ரூபாய் கொடுங்கள்" என்றான். மூன்று பேருக்கும் சேர்த்து இருநூறு தருவதாக சொல்லி, அவனுடன் சென்றோம். எங்களை விறுவிறுவென்று பின் பக்கமாக அழைத்துச் சென்றான். உள்ளே சென்றால் நாங்கள் எதிர்பார்த்தது போல் கும்பல் இல்லை. நாங்கள் கொஞ்சம் பொறுமையாக பாதுகாப்பு பரிசோதனையை முடித்து விட்டு உள்ளே வந்திருந்தால் சுலபமாக உள்ளே சென்றிருக்கலாம்.
படிகளில் ஏறத்தேவையில்லாமல் லிஃப்ட்டில் அழைத்துச் சென்றான்.
உள்ளே பிரதானமாக ராதா கிருஷ்ணர், அதற்கு அருகில் ராமர்,சீதையோடு லக்ஷ்மணர் இருக்க அவர்களுக்கு நேர் எதிரே ஹனுமான். உள்ளேயே வலமாக வந்தால் துர்க்கா, இவர்கள் தனி சந்நிதி கொண்டிருக்கிறார்கள். இவர்களோடு நவகிரகங்களும் இருக்கின்றன. முதன்முறையாக வட இந்திய கோவில் ஒன்றில் நவகிரக சந்நிதியை பார்க்கிறேன்.
எல்லா சந்நிதிகளிலும் தரிசனத்தை முடித்து விட்டு விரைவில் வெளி வந்து விட்டோம். இங்கே காசு காசு என்று பிடுங்கவில்லை. அந்த பள்ளி மாணவனுக்கு இருநூறு ருபாய் கொடுத்தது எங்கள் தவறு. தவறான வழியில் சம்பாதிக்க முயலும் ஒரு சிறுவனை ஊக்குவித்தோமே என்று உள்ளம் குறுகுறுத்தது.
பிறப்பால் வைஷ்ணவரும், கிருஷ்ண லீலைகளை நடனமாடி சம்பாதித்தவருமான ஹேமமாலினி தன் தொகுதியான மதுராவின் மேம்பாட்டிற்கு எதுவும் செய்ததாக தெரியவில்லை.
சார்தாம் என்று அழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி,யமுனோத்ரிக்கு இணையாக சொல்லப்படும் இங்கிருக்கும் மதுரா, பிருந்தாவன்,நந்தகிராமம்,கோவர்தன்கிரி என்ற நான்கில் மூன்றை மட்டும் இந்த முறை தரிசிக்க முடிந்தது.
பிருந்தாவன தரிசனம் அந்த நந்தகுமாரன் மனது வைத்தால் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன். ராதே கிருஷ்ணா!
லிஃப்ட் எல்லாம் சமீபத்திய வரவு போல. நாங்க போய் 20 வருஷம் இருக்கும். ஆகையால் அப்போது லிஃப்ட் இல்லாமல் அந்தப் பெரிய படிகளில் ஏறியே போனோம். அதே போல் இம்மாதிரிப் பணம் வாங்கிக் கொண்டு எல்லாம் அப்போது உள்ளே அனுப்பியதில்லை. கடுமையான சோதனை இருந்தது.
ReplyDeleteகோவில்கள் வளரும் பொழுது ஏஜென்டுகளும் வளர்கிறார்கள்.
Deleteவிவரங்கள் சுவாரஸ்யம். வேகமாக ஒரு ரீடிங். பின்னர் வருகிறேன். பூஜை ஏற்பாடுகள் மும்முரம்.
ReplyDeleteநன்றி.
Deleteநன்றி.
Deleteநாங்க போனதும் ஆகஸ்ட் மாதமே. மழைப் பருவம் தான். ஆகவே ஒரு தூற்றல் போட்டாலே மத்ரா நகர் முழுவதும் அலங்கோலமாகி விடும் காட்சியை அப்போதும் கண்ணாரக் கண்டோம். அதிலும் அப்போப் பேருந்தில் வேறே பயணித்தோம் என்பதால் பேருந்து நிலையமே மழை நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இத்தனை வருடங்கள் கழித்தும் முன்னேறவில்லை!
ReplyDeleteஒரு பக்கம் ஃப்ளை ஓவர்கள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ட்ரைனேஜ் இல்லை.
Deleteஅங்கெல்லாம் நவகிரக சந்நிதி இருக்காதோ...?
ReplyDeleteபொதுவா வட இந்தியக் கோயில்களிலே நவகிரஹ சந்நிதி பார்ப்பது அரிது. குஜராத்தில் சில சிவன் கோயில்களில் உண்டு. காட்மாண்டு பசுபதிநாத் கோயிலில் தரையிலேயே கற்களால் நவகிரஹங்கள் எனச் செதுக்கி இருப்பார்கள். இதைப் பற்றி என்னை விடக் காமாட்சி அம்மா நன்கு சொல்லுவார்.
Deleteதென்னிந்தியாவில் கூட மிகவும் புராதனமான சிவன் கோவில்களில் நவகிரக சன்னதி தனியாக இருக்காது. பெருமாள்(விஷ்ணு)கோவில்களில் இருக்கவே இருக்காது.
Deleteநல்ல தரிசனம். எனக்கு எப்போது வாய்க்குமோ தெரியவில்லை.
ReplyDeleteதரிசிக்க வேண்டும் என்ற ஆவல்தான் முக்கியம். நல்ல விருப்பங்களை கடவுள் நிறைவேற்றுவார்.
Deleteதங்களுடன் நானும் தரிசனம் செய்து கொண்டேன்...
ReplyDeleteஹரே க்ருஷ்ண.. க்ருஷ்ண.. க்ருஷ்ண..
மிகவும் சந்தோஷம். ராதே கிருஷ்ணா!
Deleteமதுரா மட்டுமல்ல - உத்திரப் பிரதேசத்தின் பெரும்பாலான இடங்களில் பராமரிப்பு இருக்காது. மழை பெய்தால் அத்தனை சேறும் சகதியும்.
ReplyDeleteகோவிலில் லிஃப்ட் - நானும் பார்த்ததில்லை. சமீபத்திய சேர்ப்பாக இருக்கலாம்.
உத்திரப் பிரதேசத்தின் ////////
Delete//பெரும்பாலான இடங்களில் பராமரிப்பு இருக்காது. மழை பெய்தால் அத்தனை சேறும் சகதியும்.//
மக்களின் வரிப்பணம் எங்கே செல்கிறது?
Delete