கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, August 25, 2018

தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே

தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே


மதுரா, விஜயத்திற்குப் பிறகு ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு சுதந்திர தின பட்டிமன்றங்களை தொலைக்காட்சியில் ரசித்து விட்டு, மாலை ஜெ.என்.யூ.விற்கு எதிரே இருக்கும் காமாட்சி கோவிலுக்கும், அங்கிருந்து மலை மந்திருக்கும்சென்றோம். ஒரு சிறு குன்றின் மீது அமைந்திருக்கும் முருகன் கோவில். சுவாமிமலையில் இருக்கும் ஸ்வாமிநாத ஸ்வாமியைப் போன்ற தோற்றம். படிகள் அதிகம் இல்லை. இப்போது படிகள் இல்லாமல் மேலே செல்வதற்கு ராம்ப் போல சரிவுப் பாதை அமைத்திருக்கிறார்கள். என்றாலும் நாங்கள் படிகள் வழியாகவே சென்றோம். செல்லும் வழியில் எய்ம்ஸில் டி.வி. சேனல்களின் வாகனங்களை பார்த்து உள்ளே இருக்கும் வி.ஐ.பி. யார் என்று யோசித்தோம். மறு நாள்தான் தெரிந்தது. 


மலை மந்திரில் ஓர் செல்ஃபி  
மறுநாள் காலை கிளம்பிய நாங்கள் காலை சிற்றுண்டிக்காக மூர்த்தல் என்னும் இடத்தில் வண்டியை நிறுத்தினோம். அங்கு பராத்தாக்கள் மிகவும் நன்றாக இருக்கும் என்றும். அதற்காக நொய்டாவிலிருந்தும், டில்லியிலிருந்தும் அங்கு வருபவர்கள் உண்டு என்றும் சொன்னார்கள். இருந்தாலும், காலை வேளையில் ஸ்டஃப்ட் பராத்தா சாப்பிட முடியாது என்பதால் தாவா பராத்தா ஆர்டர் கொடுத்தோம். வெண்ணையோடு பரிமாறப்பட்ட அந்த பராத்தாவும்,அதற்குப் பிறகு குடித்த மசாலா சாய்யும் மிகவும் நன்றாக இருந்தன.

ஹோட்டலில் அரை கப் வெண்ணை கொடுத்தார்கள்.
எங்கள் வண்டி ஓட்டுனர் குரு ஷேத்திரத்தில் பிரம்ம சரோவர் என்னும் பிரும்மாண்ட ஏரிக்கு எதிரே இருந்த ஓர் ஆஸ்ரமத்தின் வாயிலில் வண்டியை நிறுத்தி விட்டு, "பிரும்ம சரோவர், அதன் நடுவில் இருக்கும் சிவன் கோவில், கீதோபதேச ரதம் இவைகளை பார்த்துவிட்டு வாருங்கள்" என்றார். 

பிரம்ம சரோவர் பின்னணியில் 
நாங்கள் முதலில் எங்களுக்கு எதிரே இருந்த ஆஸ்ரமத்திற்கு உள்ளே சென்று பார்க்க முடிவு செய்தோம். அங்கு இருந்தது பசுபதிநாத் என்னும் சிவன் ஆலயம்.  அதைத்தவிர ஒரு வேதபாட சாலையும் இயங்குகிறது. மேலும் சிறு மியூசியம் ஒன்றும் இருந்தது.  அழகான பூக்கள் பூத்துக் குலுங்கும், நன்கு பராமரிக்கப்படும் நந்தவனம் எல்லாம் இருக்கின்றன. 


செம்பருத்தி பூ தான், சற்று பெரியதாக, சிவப்பாக இல்லாமல் பின்கிஷ் ஆக இருந்தது
அவைகளை பார்த்து விட்டு, பிரும்ம சரோவரின் மத்தியில் அமைந்திருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்றோம். சிருஷ்டியின் ஆரம்பத்தில் பிரும்மா தன் தபோ பலத்தால் உருவாக்கியதால் பிரும்ம சரோவர் என அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தன்று இதில் நீராடுவது சிறப்பு என்கிறார்கள். பாரதப்போரின் இறுதியில் துரியோதனன் ஒளிந்து கொண்ட மடு இதுதான் என்கிறார்கள்.

அதன் நடுவே இருக்கும் சிவன் கோவிலில் தரிசனம் முடித்துக் கொண்டு கீதோபதேச ரதத்தை காணச்சென்றோம். அதற்கு ஒரு பாலத்தை கடக்க வேண்டும். வெய்யில் சுட்டெரித்தது.  கையில் ஒரு சிறிய குடை, அல்லது தலைக்கு ஒரு தொப்பி கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது.

கீதா ரதம் 

பாலத்தை கடந்தால் ஒரு  புல்வெளி, அதைத்தாண்டி ஒரு பெரிய மைதானம். புல்வெளியில் இரும்பினால் ஆன கீதோபதேச ரதம், முப்பத்தைந்து டன் எடையாம். நிச்சயம் இருக்கும். ஏனென்றால் அந்த ரதமும் சரி, அதில் பூட்டப்பட்டிருக்கும் குதிரைகளும் சரி, க்ரிஷ்ணார்ஜுனர்களும் சரி அசல் பரிமாணத்தில் உள்ளன. 



அங்கிருந்து கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்த ஜ்யோதிசர் என்று வழங்கப்படும் இடத்திற்குச் சென்றோம். அங்கு இரண்டு பெரிய ஆல மரங்கள் உள்ளன. அதில் ஒன்று இருக்கும் இடம்தான் கீதை பிறந்த இடம் என்கிறார்கள். ஒரு மேடையின் மீது இருக்கும் இதன் கீழ் ராதா கிருஷ்ண விக்ரஹம் இருக்கிறது. அதை ஒட்டி வைக்கப்பட்டிருக்கும் கீதோபதேச சிலை காஞ்சி காமகோடி மடத்தால் நிறுவப்பட்டது என்கிறது கல்வெட்டு. 

அங்கிருந்து கல்பனா சாவ்லா பிளானட்டோரியம் பார்த்தோம். பிறகு பீஷ்ம பிதாமகர் அம்பு படுக்கையில் விழுந்த பீஷ்ம குண்ட் சென்றோம். சிறிய கோவில். பிரதானமாக அம்பு படுக்கையில் இருக்கும் பீஷ்மர். அவருக்குப் பின்னால் கை கூப்பியபடி பஞ்ச பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலி. தலை மாட்டில் சங்கு சக்கர கதாதாரியாக மஹாவிஷ்ணு. 

எப்படிப்பட்ட தியாகி! அம்பு படுக்கையில் இருந்தபடி ஆயிரம் நாமங்களால் இறைவனை துதிப்பதுஎன்பது லேசான விஷயமா?  பகவத் கீதை மனிதனுக்கு கடவுள் உபதேசித்தது. விஷ்ணு சஹஸ்ரநாமம் மனிதன் கடவுளை நோக்கி துதித்தது. இந்த இரண்டுமே பிறந்த இடங்களை ஒரே நாளில் தரிசிக்க முடிந்தது இறையருள்தான். அங்கு அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தோம். நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன்.

உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் கேக்கிறதா?
என் தந்தையின் நினைவு வந்தது. அவர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தினமும் இரண்டு வேளை தவறாமல் பாராயணம் செய்தவர். காஞ்சி காமகோடி மட பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களிடம் என் தந்தையின் பெயரை குறிப்பிட்டு அறிமுகம் செய்து கொண்டால் "விஷ்ணு சஹஸ்ரநாமம்?" என்பார். என் அப்பாவின் அந்த பாராயண பலனால் தான் எனக்கு இது கிடைத்தது.



பீஷ்ம குண்டத்திற்கு அருகே ஒரு குளம் இருக்கிறது. அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மருக்கு தாகம் எடுக்கிறது. அவருக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வர துரியோதனன் ஓடுகிறான்,அவரோ அவனைத்தடுத்து, "என் பேரன் அர்ஜுனனே என் தாகத்தை தீர்ப்பான்,அர்ஜுனா எனக்கு  குடிக்க தண்ணீர் வேண்டும்" என்று கேட்க, அர்ஜுனன் பூமியை நோக்கி ஒரு அம்பு போடுகிறான். அது ஆழ்துளை கிணறு தோண்டுவது போல பூமியை பிளந்து செல்ல, பீஷ்மரின் தாயாகிய கங்கா தேவியே தன் மகனின் விடாயைத் தணிக்க, பிரவாகமாக பொங்கி வந்தாளாம். அந்த நீர்தான் இந்த குளம் என்கிறார்கள்.

பீஷ்ம குண்டத்தை ஒட்டி பத்ர காளி கோவில் ஒன்று உள்ளது. கோவில் நடை அடைக்கும் நேரம் வந்து விட்டதால் அங்கு செல்லாமல் சாப்பிட வந்து விட்டோம். அங்கு ஒரு நண்பர், "ஏன் பத்ர காளி கோவில் செல்லவில்லை? ஐம்பத்தோரு சக்தி பீடங்களில் அதுவும் ஒன்றாயிற்றே? சதி தேவியின் வலது முழங்கால் விழுந்த இடம் அது" என்றார். சரி அடுத்த முறை பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டோம்.

சாப்பிட்டு முடித்ததும் ஊர் திரும்ப வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டோம். ஆனால் வண்டி ஓட்டுனரோ, நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணா மியூசியத்தை பார்க்காமல் போனால் இந்த ட்ரிப் முழுமை அடையாது என்று கூறி எங்களை அங்கு அழைத்துச் சென்றார். 

நான்கு தளங்களில், ஒன்பது காலரிகளில் விரிந்திருக்கும் அந்த மியூசியம் நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒன்று. அகில இந்தியாவிலிருந்தும் தருவிக்கப்பட்ட கிருஷ்ணர் சிலைகள், வெவ்வேறு பாணி கிருஷ்ண ஓவியங்கள், பாகவத ஓலைச்சுவடிகள், பழங்கால புத்தகங்கள், கடைசி தளத்தில் மல்டி மீடியாவின் துணையோடு  மஹாபாரத காட்சிகள், இறுதியாக அபிமன்யு மாட்டிக்கொண்ட சக்ர வியூகம் என்று புதுவித அனுபவத்தை தருகின்றது. ஒவ்வொரு தளத்திலும் கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட க்விஸ் விளையாட சிறு கம்பியூட்டர். 

இந்த மியூசியத்தின் உள்ளே நுழைந்ததும் கீழ் தளத்தில் அம்பு படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரின் சிலையைப்  பார்க்கிறோம். அப்போது அது  நமக்கு ஏற்படுத்தும் பாதிப்பு வேறு. அதே சிலையை மேல் தளத்திற்கு சென்று அங்கு நமக்கு எதிரே பீஷ்மர் உடலெங்கும் அம்புகள் தைத்திருக்க நிலை குலைந்து ரதத்திலிருந்து கீழே விழுவது போல ப்ரமாண்டமாக வரையப்பட்டிருக்கும் ஓவியத்தோடு பார்க்கும் பொழுது ஏற்படும் பாதிப்பு வேறு. அதாவது நான்காவது தளத்தில் நம் கண் எதிரே ரதத்திலிருந்து கீழே விழும் பீஷ்மரின் ஓவியம், நம் பார்வை கீழே போகும் பொழுது பீஷ்மர் அம்பு படுக்கையில் கிடக்கும் சிலை. அந்த ஓவியத்திற்கும், சிலைக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இணைப்பு சிறப்பாக இருக்கிறது. 

அதன் பிறகு அபிமன்யு கவுரவர்களிடம் தனியாக மாட்டிக் கொண்டு கொலையுண்ட சக்ர வியூகம் போன்ற அமைப்பு. அதன் உட்புறச் சுவர்களில் பாரதப் போர் காட்சிகள். நாம் அதற்குள் நுழைந்து சுற்றி சுற்றி வெளியே வருகிறோம். இப்படி ஒரு அமைப்பில் படைகளை அமைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.  

வீடு திரும்பியவுடன் பிதாமகர் என்று அறியப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பேயி காலமானதாக செய்தி. நாட்டு நலனுக்காக சொந்த வாழ்க்கையை தியாகம் செய்த மாமனிதர்! நம் நாட்டின் ஜீவாதாரமே தியாகம்தான். அந்த தியாகம் தந்த வலுவால்தான் அம்பு படுக்கையில் கிடக்கும் பொழுது விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபிக்கவும், மார்பில் குண்டு பாயும் போது 'ஹே ராம்' என்று விளிக்கவும் முடிந்திருக்கிறது சில மகாத்மாக்களால்.

இப்படி பொது வாழ்க்கையில் மட்டும் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையிலும் குடும்பத்திற்காக, உடன் பிறந்தவர்களுக்காக தன் சொந்த சுகத்தை தியாகம் செய்தவர்கள்  நம் நாட்டில் உண்டு. இப்படிப்பட்ட தேசத்தில் கோழைகள்தான் தியாகம் செய்வார்கள் என்னும் மேலை நாட்டு சிந்தனை எப்படியோ புகுந்து சுயநலமிகள் அதிகமாகி விட்டார்கள். நாம் இழந்த பெருமையை மீண்டும் பெற வேண்டும். 

"யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத 
அப்யுதான அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்"
(எப்பொழுதெல்லாம் அறம் அழிந்து போய் மறம் மேலெழுகிறதோ, அப்போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்.    

என்று வாக்குறுதி அளித்துள்ள கீதாச்சார்யானை நம் நாட்டிற்கு தன்னலமற்ற தலைவர்களை தருமாறு வேண்டுவோம். ஜெய் ஹிந்த்! ஜெய் ஸ்ரீராம்! ராதே கிருஷ்ணா!

26 comments:

  1. அட சமீபத்தில் தான் வந்திருக்கிறீர்கள். தெரிந்திருந்தால் சந்தித்திருக்கலாம். வாஜ்பாய் அவர்கள் இறந்த அன்று அதே AIIMS அருகில் தான் இருந்தேன். நீங்கள் மலை மந்திர் வந்தது தெரிந்திருந்தால் சந்தித்து இருக்கலாம்! அடுத்த முறை வரும் போது தகவல் சொல்லுங்கள்.

    குருக்ஷேத்திரா - நல்ல ஊர். பிரம்ம சரோவர் பிரம்மாண்டம். குருக்ஷேத்திரத்தில் நிறைய கோவில்கள் உண்டு. சக்தி பீடம் அழகாக இருக்கும். மிகப் பெரிய கோவில்.

    ReplyDelete
    Replies
    1. டெல்லிக்கு பயணப்பட்ட பொழுதே நான் உங்களையும், காமாட்சி அம்மாவையும் நினைத்துக் கொண்டேன். ஆனால் தொலைபேசி எண் இல்லாததால் எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. அடுத்த முறை பார்க்கலாம்.

      Delete
    2. //குருக்ஷேத்திரத்தில் நிறைய கோவில்கள் உண்டு// 365 கோவில்கள் இருக்கிறதாமே? தினமும் ஒரு கோவிலுக்குச் செல்லலாம்.

      Delete
    3. அக்கா... நீங்கள் இருக்கும் வாட்ஸாப் க்ரூப்பில் வெங்கட்டும் இருக்கிறாரே....

      Delete
  2. பல முறை டெல்லிக்கு சென்றிருந்தாலும் நீங்கள் சொல்லி இருக்கும் இடங்கள் பார்த்திராதவை டெல்லியில் மலை மந்திரை மலாய் மந்திர் என்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. //டெல்லியில் மலை மந்திரை மலாய் மந்திர் என்பார்கள்// ஹா ஹா! தமிழ் தெரியாததால் அப்படி என்று நினைக்கிறேன்.

      Delete
    2. மலாய் மந்திர் என்பது வடமாநிலத்தவரின் உச்சரிப்பு. தமிழர்கள் மற்றத் தென்னிந்தியர்கள் மலை மந்திர் என்றே சொல்வார்கள்.

      Delete
  3. அருமையான இடுகை. நல்ல தரிசனம். விஷ்ணு சஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும் எனக்கும் இந்தத் தரிசனங்கள் வாய்க்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. 'அவனருளால் அவன் தாள் பணிந்து' என்பார்களே. நிச்சயம் பெருமாள் உங்களுக்கும் இந்த தளங்களுக்குச் சென்று சேவிக்கும் பாக்கியத்தை அருளுவார்.

      Delete
  4. எந்த இடங்களின் என்ன உணவை மிஸ் பண்ணக்கூடாது என்பதைத் தெரிந்தவர் கூட வருவது மிகுந்த நன்மை. படத்தையும் விளக்கத்தையும் பார்க்கும்போதே மீண்டும் பசிக்கும்போல் இருக்கிறது.

    ReplyDelete
  5. //படத்தையும் விளக்கத்தையும் பார்க்கும்போதே மீண்டும் பசிக்கும்போல் இருக்கிறது.// ஸ்டஃப்ட் பராத்தா சாப்பிட முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு. அடுத்த முறை பார்க்கலாம். மூர்த்தலில் பராத்தா உணவகங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

    ReplyDelete
  6. ப்ளானடோரியம் இப்போ வந்திருக்கோ? அதுவும் பார்க்கலை. நீங்க சொன்ன ம்யூசியமும் பார்க்கலை. நாங்க போய் சுமார் 15 வருடங்கள் இருக்கும். :) என்றாலும் அங்கே போய் இவற்றை எல்லாம் பார்க்கையில் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க முடியாது. அதிலும் கிருஷ்ண ஜன்ம பூமி, ராம ஜன்ம பூமி இரண்டிலும் ரொம்பவே உணர்ச்சி வசப்படுவோம்.

    ReplyDelete
    Replies
    1. //அங்கே போய் இவற்றை எல்லாம் பார்க்கையில் உணர்ச்சிவசப் படுவதைத் தவிர்க்க முடியாது.//
      மதுராவைவிட குருஷேத்திரம் என்னை அதிகம் பாதித்தது.

      Delete
  7. பராட்டா வட மாநிலங்களிலேயே நல்லா இருக்கும். பழைய தில்லியில் பராட்டாக்களுக்கென ஒரு தெருவே இருக்கு/ அல்லது இருந்தது. முக்கால்வாசி பராட்டா நானும் பண்ணிடுவேன் வீட்டிலேயே. என்றாலும் பஞ்சாபிலும், உபியிலும் பண்ணும் பட்டர் பராட்டாவும் ஆலு மடரும் அருமையா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Parathe Wali Gali - இப்போதும் இருக்கிறது. பழைய தில்லியின் மிகவும் பிரபல வீதி இது. எத்தனை வித பராட்டாக்கள் அங்கே.... போன வாரம் அப்பகுதிக்குச் சென்ற போது செல்ல நினைத்தேன் - ஆனால் சாப்பிட்ட பிறகு அங்கே போனதால், அத்தெருவிற்குப் போகவில்லை.

      Delete
  8. சொல்ல மறந்துட்டேனே, செம்பருத்தி எல்லா நிறங்களிலும் எங்க அம்பத்தூர் வீட்டில் வைச்சிருந்தோம். அதில் மெரூன் பிங்க் கலரில் பூக்கும் பாருங்க, அட்டகாசம்!

    ReplyDelete
  9. >>> பகவத் கீதை மனிதனுக்கு கடவுள் உபதேசித்தது.
    விஷ்ணு சஹஸ்ரநாமம் மனிதன் கடவுளை நோக்கி துதித்தது.
    இந்த இரண்டுமே பிறந்த இடங்களை ஒரே நாளில் தரிசிக்க முடிந்தது இறையருள்தான்..<<<

    நல்லதொரு தரிசனம்...

    ஹரே க்ருஷ்ண.. ஹரே க்ருஷ்ண..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  10. இப்போதும் குருக்ஷேத்திரம் தர்மக்ஷேத்திரமாக இருக்கிறதா

    ReplyDelete
  11. மதுராவை ஒப்பிடும் பொழுது, குருஷேத்திரம் ஃபார் பெட்டெர். இங்கு ஏமாற்று வேலைகள், காசு காசு என்று பிடுங்குவது எல்லாம் இல்லை. அந்த வகையில் தர்ம ஷேத்திரம்தான்.

    ReplyDelete
  12. நல்லதொரு ஆன்மிகப் பயணம் அமைந்திருக்கிறது. குடும்பத்தோடு போய்வருதல் விசேஷமானதுதான். ஆனால் கடும் கோடையில் போய் கால்வைத்துவிட்டீர்கள். குளிர்காலமாயிருந்தால் ஸ்வெட்டர், குல்லாயெல்லாம் போட்டுக்கொண்டு, ஸ்டஃப்டு பராட்டாவை ஒரு பிடி பிடித்திருக்கலாம்! பசிக்கப் பசிக்க உள்ளே போவதற்கான சங்கதிகள் கிடைக்கும் அங்கெல்லாம். ஜிஞ்சர் டீயோ, மசாலா டீயோ துணைக்குவரும்!

    குருக்ஷேத்ரம் உணர்ச்சிவசப்படவைத்திருக்கிறது உங்களை. இடமே அப்படிபோலும். நான் போனதில்லை.

    ReplyDelete
    Replies
    1. முதல் முறையாக வந்திருக்கிறீர்கள். வருக,வருக.
      //குளிர்காலமாயிருந்தால் ஸ்வெட்டர், குல்லாயெல்லாம் போட்டுக்கொண்டு, ஸ்டஃப்டு பராட்டாவை ஒரு பிடி பிடித்திருக்கலாம்!//
      இதற்காகவே ஒரு முறை குளிர் காலத்தில் சென்று விட்டால் போகிறது.

      Delete
  13. சுவாரஸ்யம். புகைப்படங்கள் படங்கள் இருக்கின்றன.

    ReplyDelete
  14. நீங்கள் ஒரு செல்ஃபி பிரியை! இல்லையா?!!

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம். தன் கையே தனக்கு உதவி என்றிருக்க முடிகிறதே.

      Delete