கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, September 16, 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் - 3

பரவசம் தந்த நவ திருப்பதியும், 
நவ கைலாசமும் - 3 




திருப்புளியன்குடியில் தரிசனத்தை முடித்துக் கொண்டு நாங்கள் அடுத்ததாக ஆழ்வார் திருநகரிக்குச் சென்றோம். நாங்கள் சென்ற பொழுது நம்மாழ்வார் சந்நிதியில் தான் பலர் வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். நாங்கள் பெருமாளை சேவித்து விட்டு வரலாம் என்று அங்கு சென்ற பொழுது, அங்கு அவர்கள் எங்களிடம் "முதலில் ஆழ்வார் சந்நிதிக்குச் செல்லுங்கள். அங்கு தீர்த்தமும், சடாரியும் பெற்றுக் கொண்டு, திருப்புளியாழ்வார் என்னும் புளியமரத்தை தரிசனம் செய்து விட்டு வாருங்கள்". என்றனர். சரி என்று நாங்கள் அங்கு வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களோடு சேர்ந்து கொண்டோம். நம்மாழ்வார் சந்நிதியில் பாசுரம்  படித்துக்(அனுஸந்தானம் செய்து) கொண்டிருந்தார்கள். 

ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் இரண்டு ஊர்களுக்குப் பிறகு இங்குதான் அரையர் சேவை உண்டாம்.  அதன் பிறகு கற்பூர ஆரத்திக்குப் பிறகு எல்லோருக்கும் நெய் வாயில் தொங்கும் படி கோதுமை ரவை கேசரி வழங்கப்பட்டது. பின்னர் தீர்த்தமும், சடாரியும் சாதிக்கப் பட்டன. பின்னர் வரிசையில் சென்று நம்மாழ்வாரை தரிசனம் செய்து விட்டு, கீழிறங்கி, பின்புறமாக நடந்து சில படிகள் ஏறி, திருப்புளியாழ்வார் எனப்படும் புளியமரத்தை தரிசனம் செய்து கொண்டோம். 

குருகூரில் பிறந்த ஒரு ஆண் குழந்தை பிறந்ததிலிருந்து அழவில்லை, பேசவில்லை, சாப்பிடவில்லை. அதன் பெற்றோர்கள் அந்த குழந்தையை இந்த புளிய மரத்தினடியில் விட்டு விட்டு சென்று விடுகிறார்கள். அந்த புளிய மரத்தில் இருக்கும் ஒரு பொந்தில் அமர்ந்து தன் தவத்தை தொடர்கிறார். இப்படி பதினாறு வருடங்கள் கழிகின்றன. 

குருகூருக்கு அருகில் இருக்கும் திருக்கோளூரைச் சேர்ந்த மதுரகவி ஆழ்வார்(இவருடைய இயற் பெயர் எனக்குத் தெரியவில்லை) ஒரு குருவைத் தேடி வட தேச யாத்திரை செல்கிறார். அங்கே விண்ணில் தோன்றும் ஒரு தெய்வீக ஒளியைத் தொடர்ந்து வந்து, குருகூரில் இருக்கும் இப்புளிய மரத்தினடியை அடைகிறார். அங்கு தேஜோ மயமாக விளங்கும் நம்மாழ்வரைப் பார்த்ததும் அவருக்கு இந்த சிறுவனா நமக்கு குரு? என்னும் எண்ணம் தோன்றுகிறது. அவரை பரிசோதிக்க நினைத்து,

"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்?" என்று வினவுகிறார். உடனே பதினாறு வருடங்கள் வாயைத் திறக்காமல் இருந்த அந்தக் குழந்தை,
அத்தை தின்று அங்கே கிடக்கும்" என்று பளிச்சென்று பதில் கூறுகிறது.  இங்கே செத்தது என்பது உடலைக் குறிக்கும். சிறியது என்பது ஜீவாத்மா. ஜடமாகிய ஒரு உடலுக்குள் ஒரு ஜீவன் புகுந்து பிறவியை எடுக்கும் பொழுது அது என்ன செய்யும்?(தின்பது என்பது உலக விஷயனுபவங்களை அனுபவிப்பது)

அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்பதற்கு, உலக விஷயங்களை அனுபவித்துக்கொண்டு உலகில் இருக்கும் என்பது பொருள். 

மதுரகவி ஆழ்வாருக்கு புரிந்து விடுகிறது, தான் தேடிய குரு இவர்தன் என்று. மற்ற ஆழ்வார்கள் பெருமாளை பாடினார்கள் என்றால் மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வரைதான் பாடினார். நம்மாழ்வார் விக்கிரகத்தை தன் தவ வலிமையால் வடித்தவர் மதுரகவி ஆழ்வார்தான். 

அந்த பேறு பெற்ற புளியமரத்தை விட்டு வேறு எங்கும் நம்மாழ்வார் செல்லவில்லை. பெருமாள், வெவ்வேறு தலங்களில் இருந்த வடிவில் இங்கே அவருக்கு காட்சி அளித்தார்.  

இந்த கோவிலில் நம்மாழ்வார் சந்நிதிக்கு முன்பும் ஒரு கொடி மரம் இருக்கிறது. 

புளிய மரம் ஆதிசேஷன் ஆகிய லக்ஷ்மணன் அம்சம், நம்மாழ்வார் ராமனின் அம்சம். ஆகவே வேறு எங்கும் இல்லாத வகையில் ராமனுக்கு ஆதிசேஷன் குடை பிடிக்கிறார் என்றார் அர்ச்சகர். இது பற்றி தெரிந்து கொள்ள துருவிய பொழுது, கிடைத்த தகவல்:

ஒரு முறை ஏகாந்தத்தில் இருக்க விரும்பிய ஸ்ரீ ராமன், தன் தம்பி லக்ஷ்மணனை காவலுக்கு வைத்து விட்டு, "யார் வந்தாலும் உள்ளே அனுப்ப கூடாது என்று எச்சரிக்கிறார். அப்பொழுது துர்வாசர் ராமனைக்காண வருகிறார். அவருடைய கோபத்திற்கு அஞ்சிய லக்ஷ்மணன் துர்வாசரை உள்ளே அனுமதித்து விடுகிறார். இதனால் வெகுண்ட ஸ்ரீராமன், தன் கட்டளையை மீறியதற்காக புளியமரமாகும்படி தம்பியை சபித்து  விடுகிறார். அண்ணனை விட்டுப் பிரிய முடியாத தம்பி லக்ஷ்மணர், "உன்னைப் பிரிந்து நான் எப்படி இருப்பேன் ராமா?" என்று கதற, தான் *சடகோபனாக அவதரிக்கும் பொழுது லக்ஷ்மணர் எந்த புளியமரமாக இருக்கிறாரரோ, அந்த புளியமரத்தையே தான் இருப்பிடமாக கொள்வதாக வாக்களிக்கிறார்.  இத்தனை பெருமைகள் உடைய அந்த புளியமரத்தையும் வணங்கி விட்டு, மூலவரை தரிசிக்க செல்கிறோம். 

Add caption


புளியமரத்தின் இரு வேறு தோற்றங்கள் 

மூலவர் ஆதிநாத பெருமாள். நின்ற திருக்கோலம். உற்சவர் பொலிந்து நின்ற பிரான். பெயருக்கு ஏற்றார் போல் பொலிவான தோற்றம். குருகூர் வல்லி, ஆதிநாத வல்லி என்று இரண்டு நாச்சியார்கள் தனித்தனி சந்நிதிகளில்.  

பிரம்மா பூமியில் தவம் இயற்ற சிறந்த இடம் எது என்று திருமாலைக் கேட்க, தான் ஏற்கனவே தாமிரபரணிக்கரையில் எழுந்தருளியிருப்பதாக பெருமாள் காட்டிய இடம்தான் இது. ஆரம்பத்திலிருந்தே(ஆதியிலிருந்தே) இருப்பதால் ஆதிநாதன்.  ஆற்றில் மிதந்து வந்த சங்கு இந்த பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால், திருசங்கன்னித்துறை, ஆதிசேஷன் அம்சமாகிய லக்ஷ்மணன் புளியமரத்தின் வடிவில் இருப்பதால் சேஷ ஷேத்திரம், வராஹ அவதாரத்தை காண வேண்டும் என்று தவம் இருந்த முனிவர்களுக்கு பெருமாள் வராஹ நாராயணனாக பிராட்டியுடன் காட்சி அளித்த ஷேத்திரம் ஆனதால் வராஹ ஷேத்திரம். நாய்க்கும் மோட்சம் அளித்த தீர்த்த கரை என்பதால் தீர்த்த கரை என்று பலவாறாக அறியப்படுகிறது.  

கோவில் மிகப்பெரியது என்று கூற முடியாது. ஆனால் மிக அழகான சிற்பங்கள் இங்கும் இருக்கின்றன. அவசியம் செல்ல வேண்டிய கோவில்களில் இதுவும் ஒன்று.





* நம்மாழ்வார் ஏறத்தாழ முப்பத்தி நான்கு பெயர்களால் அறியப்படுகிறார். அவற்றுள் சடகோபன் என்பதும்  ஒன்று. 

16 comments:

  1. "பொலிந்து நின்ற பிரான்" பெயரைப் படித்ததும், அதனைத் தொடர்ந்து வரும் (பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே) நம்மாழ்வார் பாசுரம் நினைவுக்கு வந்தது.

    போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே
    தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்னே
    சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கும் திருக்குருகூர் அதனுள்
    ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடுமினே

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அழகான பாசுரத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      Delete
  2. எழுத்துரு அளவுகள் மாறி மாறி வருகின்றன.

    அழகிய படங்கள். இந்த புராணக் கதைகளை படித்திருக்கிறேன். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் ஃபார்மட்டில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றாலும், ஏன் மாறியது என்று தெரியவில்லை.
      தொடர்வதற்கு நன்றி. ஒரு ஆணிடம் ஒரு பெண் தொடர்வதற்கு நன்றி என்று இங்குதான் கூற முடியும் என்று நினைக்கிறேன்.

      Delete
    2. //ஒரு ஆணிடம் ஒரு பெண் தொடர்வதற்கு நன்றி என்று// ஹாஹாஹா

      Delete
  3. கதைகள் அருமை...

    எழுத்தின் அளவு சிறிது பெரிதாக இருந்தால், வாசிப்பதற்கு எளிதாக இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. //எழுத்தின் அளவு சிறிது பெரிதாக இருந்தால், வாசிப்பதற்கு எளிதாக இருக்கும்...//
      மாற்றி விட்டேன். நன்றி.

      Delete
  4. இத்திருத்தலங்களுள் ஒன்றிரண்டை மட்டுமே தரிசனம் செய்திருக்கிறேன்...

    முறையாக திருத்தல தரிசனம் செய்திட வேண்டும்..

    அழகான படங்களுடன் இனிய பதிவு.....

    ReplyDelete
    Replies
    1. இறையருள் இருந்தால் எல்லாம் கை கூடும். வருகைக்கு நன்றி.

      Delete
  5. தலைப்பைத் திருத்துங்கள் பானுமதி! :)

    //இடம் எது என்று திருமாளைக் கேட்க, // இங்கேயும் திருமாலைக் கேட்க எனத் திருத்துங்கள். இன்னும் ஒன்றிரண்டு இருக்கு! சில வாக்கியங்கள் சின்னதாகவும், சில பெரிதாகவும் தெரிகின்றன. அதனால் கூட உங்களுக்கு எ.பி. தெரியாமல் போயிருக்கலாம். :)

    ReplyDelete
    Replies
    1. திருத்தி விட்டேன் அக்கா நன்றி.

      Delete
  6. நாங்க ஸ்ரீவைகுண்டம் போனப்போவும் ஆழ்வார் திருநகரி போனப்போவும் கோஷ்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல வருடங்கள் கழிச்சு கோஷ்டியில் கலந்து கொண்டதும் மனம் மகிழ்ச்சி அடைந்தது. என் கணவர் கோஷ்டியையே அப்போத் தான் பார்க்கிறேன் என்றார். கேள்விப்பட்டதே இல்லை என்பார்! :) உங்களுக்கு நீங்க போன சமயம் கிடைச்சிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. கீசா மேடம்... கோஷ்டி என்று நீங்க சொல்றது, கடைசியில் பிரசாதம், தீர்த்தம், சடாரி கொடுக்கும் கோஷ்டியைக் குறிப்பிடறீங்கன்னு நினைக்கிறேன்.

      மற்றபடி 'சேவாகாலம்' என்று சொல்லப்படுகிற, பிரபந்தம் சொல்லும் கோஷ்டியில் வெளியாருக்கு (அதாவது தலத்தைச் சேர்ந்த அதற்குரியவர்களைத் தவிர மற்றவர்களுக்கு) அனுமதியே கிடையாது. இதுதான் பெரும்பாலான (எல்லா) திவ்யதேச வழக்கம்.

      உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஸ்ரீரங்கத்தில், ப்ரபந்தம், வேதம் சொல்வதற்கென ஒரு குழாம் (குவாலிஃபைட்) உண்டு. அதற்கு மெம்பராவதற்கே பல்வேறு நிலைகளும் ப்ரபந்த அறிவும் அவசியம். அவர்களைத் தவிர வேறு யாரும் அங்கு இவற்றைச் சொல்ல இயலாது. இதைத்தான் கோஷ்டி என்று சொல்லுவோம்.

      Delete
    2. //கடைசியில் பிரசாதம், தீர்த்தம், சடாரி கொடுக்கும் கோஷ்டியைக் குறிப்பிடறீங்கன்னு நினைக்கிறேன்.// பானுமதி பிரசாதம் கொடுத்தது பத்திச் சொல்லி இருக்காங்க இல்லையா, அதைத் தான் நானும் இங்கே குறிப்பிட்டேன். :) ஆனால் நீங்கள் சொல்லும் கோஷ்டியிலும் நாங்க மதுரையில் இருந்தப்போக் கலந்து கொள்வோம். பாசுரங்கள் கூடவே மெதுவான குரலில் சொல்லுவோம். :) யாரும் தடுத்ததில்லை. பக்தர்கள் பலரும் சொல்வார்கள். இப்போல்லாம் தெரியலை. ஸ்ரீவைகுண்டம் போனப்போ அப்படி ஒரு கோஷ்டியில் கலந்து கொண்டோம். அதைத் தான் இங்கேயும் குறிப்பிட்டேன். :))))

      Delete
  7. சிறப்பான இடம் பற்றி உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். சிற்பங்கள் படம் அதிகம் எடுக்கவில்லையா?

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  8. ஆழ்வார் திருநகரி..நாங்கள் ஒவ்வொரு வருடமும் செல்ல நினைப்போம் ஆனால் இன்னும் அவன் அருள் கிட்டவில்லை..


    பசங்க பார்க்க வேண்டும் என மிக விரும்பும் தலம்..

    ReplyDelete