கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, September 20, 2018

படித்ததில் பிடித்தது!

படித்ததில் பிடித்தது!


சமீபத்தில் இரண்டு புத்தகங்கள் படித்தேன். ஒன்று சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' இரண்டாம் பாகம், மற்றது  சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் திரு.SP.சொக்கலிங்கம் அவர்கள் எழுதியுள்ள 'பிரபல கொலை வழக்குகள்' என்னும் புத்தகம்.

கற்றதும் பெற்றதும்: 

ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகளாக வந்த பொழுது இருந்த சுவாரஸ்யம் அத்தனை கட்டுரைகளையும் மொத்தமாக படிக்கும் பொழுது இல்லை. ஒரு புத்தகம் வெளியிட்டதுமே குறிப்பாக கவிதை தொகுப்பு தனக்கு அனுப்பிவிடுவதாக மீண்டும் மீண்டும் பல இடங்களில் குறை பட்டுக்கொண்டிருக்கிறார். அதைப்போலவே அசல் ஹைகூவிற்க்கும் ஹைக்கூ என்று நினைத்துக் கொண்டு அடுக்கப்படும் வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க பல முறை முயன்றிருக்கிறார். சுவாரஸ்யமான இரண்டு விஞ்ஞான கட்டுரைகள். வீரமாமுனிவர் தமிழில் மட்டுமில்லை மத மாற்றத்திலும் வல்லவராக இருந்திருக்கிறார் என்னும் புது விஷயத்தையும் அவருடைய பரமார்த்த குரு கதைகள் இந்து மத சாமியார்களையும் நம்பிக்கைகளையும் கேலி செய்து எழுதப்பட்டவை என்பதும் கொஞ்சம் அதிர்ச்சி அளித்தன. 

 பிரபல கொலை வழக்குகள்:

ஒவ்வொரு கால கட்டத்திலும் பல் வேறு ஸ்வாரஸ்யமான வழக்குகள் நீதி மன்றத்தில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. நாம் அவற்றைப்  பற்றி கொஞ்ச நாள் பேசி விட்டு, அடுத்த பரபரப்பு செய்தி வந்தவுடன் மறந்து விடுகிறோம். அப்படி பேசப்பட்ட சில வழக்குகளைப் பற்றி துப்பறியும் நாவல் போல விவரித்துள்ளார் புத்தகாசிரியர். 

நமக்கு கொஞ்சம் பரிச்சயமான வாஞ்சிநாதன் சம்பந்தப்பட்ட  ஆஷ் கொலை வழக்கு, லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு, எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு இவைகளோடு   சிங்கம்பட்டி கொலை வழக்கு, பாவ்லா கொலை வழக்கு, ஆளவந்தான் கொலை வழக்கு, பகூர் கொலை வழக்கு, நானாவதி கொலை வழக்கு, விஷ ஊசி வழக்கு மற்றும் மர்ம சன்யாசி வழக்கு என்று மொத்தம் பத்து கொலை வழக்குகளைப் பற்றி சரளமான நடையில் விறுவிறுப்பு குறையாமல் எழுதப் பட்டிருப்பதால் புத்தகத்தை கையில் எடுத்து விட்டால் கீழே  வைக்க முடியவில்லை. நூலாசிரியர் வக்கீலாக இருந்தாலும் வழக்கு சம்பத்தப்பட்ட தொழில் நுட்ப தகவல்களை அளவுக்கு அதிகமாக தராமல் வாசகர்களுக்கு எவ்வளவு கொடுத்தால் அவர்களால் உள் வாங்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவு மட்டும் விஷய தானம் செய்திருப்பது ஒரு சிறப்பு. சம்பவங்களால் பிரபலமான வழக்குகள், பிரபலமான மனிதர்கள் சம்பந்தபட்டிருப்பதால் பிரபலமான வழக்குகள் என இரண்டு வகையான வழக்குகளையும் சேர்த்திருப்பது இன்னும் ஒரு சிறப்பு.

ஆஷ் துரை கொலை வழக்கில் முதல் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்விற்காக சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்ட பொழுது அதை விசாரணை செய்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் P.R.சுந்தரம் ஐயரும் ஒருவர் என்பதும் அவர் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியாகுமா என்று சந்தேகம் தெரிவித்தார் என்பதையும்  அறிய ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. 

எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கில் எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக் கொண்டார்  எம்.ஆர். ராதா. ஆனால் ஆச்சர்யம்  இருவருக்கும் உயிர் போகவில்லை. காரணம் 17 ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கப்பட்டு எம்.ஆர்.ராதாவின் மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த அந்த குண்டுகள் ஒவ்வொரு முறை மேஜை டிராயர் திறந்து மூடப்பட்ட பொழுதும் அதிர்ச்சிக்கு உள்ளானதால் தன் வீர்யத்தை இழந்து விட்டிருக்கின்றன எனவே துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட பொழுது அவைகளால் போதுமான வேகத்தில் சென்று இலக்கை தாக்க முடியவில்லை என்னும் தகவல் மற்றொரு ஆச்சர்யம். 

அந்தக் கால சூப்பர் ஸ்டார்களான எம்.கே. தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் சம்பத்தப்பட்ட லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு மேல் முறையீடிர்க்காக   சென்னை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்காக வந்த பொழுது அதை விசாரித்த நீதிபதிகளுள் ஒருவராக இருந்த ஷஹாபுதீன் பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான் சென்று அங்கு உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஒய்வு பெற்றார் என்பதை அறிய ஆச்சர்யமாக இருக்கிறது என்றால் அதை விட ஆச்சர்யம் லக்ஷ்மிகாந்தனை  கொலை செய்தது யார் என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது என்னும் செய்தி.

நானாவதி கொலை வழக்கு விசாரணை 1959ஆம் ஆண்டு நடை பெற்ற பொழுது அஹுஜா டவல்களும் நானாவதி  விளையாட்டு துப்பாக்கிகளும் அமோகமாக விற்பனையாகினவாம்.

பாவ்லா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரானவர் முகமது அலி ஜின்னா, அனால் அவரால் இந்த கேசில் வெற்றி அடைய முடியவில்லை.

எல்லாவற்றையும் விட மிக மிக சுவாரஸ்யமானது இறந்து விட்டதாக கருதப்பட்ட ஜமீன் வாரிசு மீண்டு வந்த 'மர்ம சாமியார்' வழக்கு. தற்போதைய பங்களா தேஷின் டாக்காவில் இருந்த மேஜோ குமார் என்னும் ஜமீன் இளவரசரைப் பற்றி living with the Himalayan Masters என்னும் புத்தகம் படித்தவர்கள் அறிந்திருக்கலாம். எனக்கு நான் மிகச்  சிறிய வயதில் பார்த்த 'இதய கமலம்' படம்தான் நினைவுக்கு வந்தது.  உண்மை கற்பனையை விட விநோதமானது என்பதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகள்.

ஸ்வாரஸ்யமான நல்ல புத்தகம்! கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு. ஆசிரியர் எஸ்.பி.சொக்கலிங்கம்.


குறிப்பு: இது ஒரு மீள் பதிவு.

21 comments:

  1. பல மர்மங்கள் மர்மமாக இருக்கட்டும் என்றே பலரும் நினைப்பதால் மர்மமாக இருக்கிறதா..? - என்று தான் மர்மமாக இருக்கிறது...!

    ReplyDelete
    Replies
    1. இல்லை பல மர்மங்களுக்கு,சிலருக்காவது விடை தெரியும். அது நமக்குத் தெரியாது.வருகைக்கு நன்றி.

      Delete
  2. வணக்கம் சகோதரி

    நல்ல புத்தகங்களின் விமர்சனங்கள். தாங்கள் விமர்சித்து எழுதிய இவ்விரு புத்தகங்களின் விமர்சனங்களும் படித்துப் பார்க்கும் போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

    வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் யார் அறிவீனர்கள் என்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என நீருபிப்பது போல் எழுதப்பட்டிருக்கும் ஒரு நகைச்சுவைக் கதையமைப்பை கொண்டது. இதற்குள்ளும் மதங்களும் கேலிகளும் உள் நுழைந்து விட்டனவா? உண்மையிலேயே அதிர்ச்சிதான்.!

    மற்றதும் அனைத்தும் சுவையாக இருந்தது.

    உபயோகிக்காமல் வைத்திருக்கும் பொருள்கள் எதற்கும் பயன்யடாது அதன் சக்தியை நாளடைவில் இழந்து விடும் என்பதற்கு துப்பாக்கி குண்டும் விதி விலக்கல்ல போலும். விசித்திரமான தகவல்தான்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் மறைவுக்குப் பின்னும், குற்றவாளி யார் என தெரியாமல் மர்மாயிருக்கும் தகவலும் புதுசு.

    மற்றும் செய்திகளும் தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். வியப்பான, பல அரிய சுவாரஸ்யமான தகவல்களை தாங்கள் நூல்களை படித்ததில் மூலம் பிடித்ததாக தெரிவித்து அறிவித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு நூல் விமர்சனத்திர்க்கு இத்தனை விரிவாக விமர்சனம் எழுதிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  3. கற்றதும் பெற்றதும் முழுப் புத்தகமாக கிழக்கிலிருந்து வாங்கி வைத்திருக்கிறேன். ஓரிரு பழைய புத்தகங்களும் உண்டு!! ஆமாம், புத்தகத்தில் எல்லாமே சுவாரஸ்யமாய் இருக்கும் என்று சொல்லி விட முடியாதுதான். அவர் ஒருமுறை ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனா உடன் எழுதிய கட்டுரை மிகப் பிரபலம். தன் முடிவை உணர்ந்தவர் போல எழுதியிருப்பார். அதில்தான் பிராக்ரெஸிவ் காம்ப்ரமைஸ் பற்றியும் எழுதி இருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் தொடரில் புலப்படாத பல விஷயங்கள், ஆசிரியரின் விருப்பு,வெருப்புகள் போன்றவை புத்தகத்தில் புலப்படும்.

      Delete
  4. பிரபல கொலை வழக்குகள் பற்றி எங்கள் தளத்தில் நான் எழுதி இருந்த பதிவின் லிங்க் கீழே..

    http://engalblog.blogspot.com/2013/12/blog-post_18.html

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவு படித்தேன். நான் பறவைப் பார்வையாக எழுதியிருப்பதை நீங்கள் ஆழ்ந்து அலசியிருக்கிறீர்கள்.

      Delete
    2. ஸ்ரீராம் உங்க லிங்க் நோட் பண்ணிட்டேன்...வாசிக்கிறேன்....எனக்கு கொலை வழக்குகள் வாசிப்பது ரொம்பவே பிடிக்கும்..ஆனால் ஸ்வாரஸ்யமாய் இருக்கணும். ஒரு பதிவர் கூட அவர் பெயர் தளம் மறந்து விட்டது எதற்கோ தேடிய போது சிக்கியது. செமையா இருந்துச்சு. ஒரு கேஸை அப்படியே கோர்ட் இபிகோ செக்ஷன் எல்லாம் விலாவாரியாக குற்றவியல் என்ன என்று எல்லாம் செம விளக்கம் கொடுத்து உண்மைக் கதையை மிக அழகான கதையாகவே மிகவும் ஸ்வாரஸ்யமாக எழுதியிருந்தார். செம இன்ட்ரெஸ்டிங்க்....விறுவிறுப்பு....நுணுக்கமான விளக்கங்கள். இத்தனைக்கும் அவர் லாயர் அல்ல...வங்கியில் பணி புரிந்தவர் ஆனால் சட்டத்தில் ஆர்வமிருந்ததால் அதைப் படித்து ஒரு நிபுணராய்ச் சொல்லியிருந்தார். அடுத்து தில்லி கொலை வழக்கு எழுதணும் என்று சொல்லியிருந்தார் ஆனால் எழுதியதாகத் தெரியவில்லை....

      கீதா

      Delete
  5. நான் மைனஸாக நினைத்ததை எல்லாம் நீங்கள் ப்ளஸ்ஸாக உணர்ந்திருக்கிறீர்கள்.

    ஆஷ் கொலை வழக்கு பற்றி இன்னொரு புத்தகமும் படித்தேன். என்னிடமிருக்கும் பைண்டிங் புத்தகத்தில் இருக்கிறது. அதுவும் இன்னும் சில பரபரப்பான வழக்குகள் பற்றியும் மஞ்சரியில் (என்று நினைக்கிறேன்) வந்த தொடர்.

    "இந்தியாவை உலுக்கிய வழக்குகள்" என்கிற தலைப்பு என்று நினைவு. அதைப் பற்றி ஏதோ எழுத குறிப்பு எடுத்து வைத்திருந்தேன். எழுதும் பொருளின் மையம் மறந்து விட்டது!

    ReplyDelete
    Replies
    1. ஆஷ் கொலை வழக்கு ரகமி எழுதியது தொடராக வந்ததை என் மாமனார் கலெக்ட் பண்ணி பைன்ட் செய்து வைத்துள்ளார். என்னிடம் உள்ளது...நான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்....

      கீதா

      Delete
  6. //வீரமாமுனிவர் தமிழில் மட்டுமில்லை மத மாற்றத்திலும் வல்லவராக இருந்திருக்கிறார் என்னும் புது விஷயத்தையும் அவருடைய பரமார்த்த குரு கதைகள் இந்து மத சாமியார்களையும் நம்பிக்கைகளையும் கேலி செய்து எழுதப்பட்டவை என்பதும் கொஞ்சம் அதிர்ச்சி அளித்தன. // இதைப்பற்றி ஐந்தாறு வருடங்கள் முன்னரே குழுமத்தில் பலத்த விவாதம் நடந்தது. எனக்குப் பிடிக்கவே பிடிக்காத கதைகளில் பரமார்த்த குருவும் சீடர்களும் ஒன்று. நான்பத்தாம் வகுப்புப் படிக்கையிலேயே எங்க பொருளாதார ஆசிரியர் இந்தியப் பொருளாதாரம் பற்றி விளக்கும்போது தேவைப்பட்ட இடங்களில் எப்படி எல்லாம் இந்தியப் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டது என்பதை விளக்கும்போது இதை எல்லாம் சொல்லுவார். இன்னும் நிறைய இருக்கு. எழுதினால் பெரிய விவாதமே ஏற்படும்.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் சிறு வயதில் பரமார்த்த குரு கதையை எங்கள் அப்பா சொல்ல மிகவும் விரும்பி கேட்டிருக்கிறோம். அது எவ்வளவு விஷமத்தனமானது என்பது பிறகுதான் புரிந்தது.

      Delete
  7. நானாவதி கொலைவழக்கு திரைப்படமாகவும் வந்து விட்டது. படமும் ஓஹோ. வழக்கு விபரங்களும் ஓஹோ! திரு சொக்கலிங்கம் எழுதியது மட்டுமில்லாமல் ஆங்கிலத்திலும் நானாவதி கொலைவழக்குப் பற்றிப் படித்தேன். சொக்கலிங்கம் எழுதியவற்றை நானும் படிச்சிருக்கேன். :)

    ReplyDelete
  8. பிறர் எழுதுவது எல்லாம் சுவாரசியம் மட்டும்தான் ஒரு hind sight ல் பல விஷயங்களும் ஒரு சாரார் கருத்தே என்பதும் புரியும் ராண்டார் கை என்பவர் எழுதி இருந்ததையும் வாசிக்க வேண்டும் அவர் சில வழக்குகளின் சம காலத்தவர்

    ReplyDelete
    Replies
    1. //பிறர் எழுதுவது எல்லாம் சுவாரசியம் மட்டும்தான் ஒரு hind sight ல் பல விஷயங்களும் ஒரு சாரார் கருத்தே என்பதும் புரியும்// உண்மைதான்.

      Delete
  9. மீள் பதிவு நல்லாத்தான் இருக்கு ஆனா கீழே மீள் பதிவு எனச் சொல்லிக்கொண்டே... சமீபத்தில் படித்த புத்தகங்கள் எனச் சொன்னதுதேன் நல்லாயில்லே:).. ஹையோ எனக்கு இண்டைக்கு என்னமோ ஆகுது:)

    ReplyDelete
    Replies
    1. நான் முன்பு பதிவிட்டிருந்ததை அப்படியே மீண்டும் வெளியிடும் பொழுது மாறுதல் செய்வது சரியா? நீங்கள் இப்போது சர்வர் சுந்தரம் படம் பார்த்தாலும் அதில் நாகேஷ் பதினைந்து பைசாக்களை எடுத்துக் கொண்டுதான் இரண்டு இட்லி,ஒரு காபி சாப்பிட்ட செல்வது போலத்தான் வரும். இன்றைய விலைவாசிக்கு ஏற்ப மாற்ற முடியுமா?அது போலத்தான் இதுவும்.சரியாகத்தானே சொல்கிறேன்..?

      Delete
  10. கற்றதும் பெற்றதும் இரண்டாம் பாகம் என்னிடமும் உண்டு. புத்தகமாக தான் நான் படித்தேன் என்பதால் எனக்கு ஸ்வாரஸ்யமாகத் தான் இருந்தது.

    மற்ற புத்தகம் படித்ததில்லை. நல்லதொரு அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. க.ப. எல்லா பாகங்களும் படித்துப் பாருங்கள், நிறைய ரெபடிஷன் இருக்கும்.

      Delete
  11. பானுக்கா கற்றதும் பெற்றதும் கொஞ்சம் கொஞ்சம் அவ்வப்போது கண்ணில் பட்டால் வாசித்ததுண்டு. முழுவதும் வாசிக்காததால் தெரியவில்லை...

    கீதா

    ReplyDelete