மசாலா சாட்
கொஞ்ச நாட்களாக ஒரே அலைச்சல்! "பேசாமல் பெங்களூருக்கும், சென்னைக்கும் சீசன் டிக்கெட் வாங்கி வைத்துக் கொண்டு விடு" என்று சிலர் ஆலோசனை கூட சொன்னார்கள்.
இந்த மாதிரி பயணங்களால் என் பூஜை புனஸ்காரங்கள்(பெரிதாக ஒன்றும் இல்லை), காலை ஆறு மணிக்கு கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து எண்ணங்களை வேடிக்கை பார்ப்பது(இதை தியானம் எனலாமா?), கை, கால்களை பவர் யோகா என்னும் பெயரால் அசைப்பது, சுதர்ஷன் க்ரியா, போன்றவை பாதிக்கப்படுகின்றன. இன்னொரு பாதிப்பு வலையுலகத்திற்கு வர முடியாமல் போவது. செல் போனில் பதிவுகளை படித்து, பின்னூட்டமிடுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
"ஏற்கனவே பேய்க்கோலம் அதில் இன்னும் கொஞ்சம் அக்கிலி பிக்கிலி" என்று என் அம்மா ஒரு சொலவடை சொல்லுவாள். அதைப் போல சாதாரணமாகவே நான் பின்னூட்டமிடுவதில் கொஞ்சம் மோசம், எல்லா பதிவுகளிலும், கடைசி பின்னூட்டம் என்னுடையதாகத்தான் இருக்கும். பயணங்கள் என் பங்களிப்பை இன்னும் கொஞ்சம் தாமதித்து விடுகின்றன. போதும் போதாதற்கு கணினிக்கும் வைஃபாய்க்கும் ஊடல். எப்போது சரியாகுமா? தவிர பன்னிரெண்டாம் தேதி வரை கொஞ்சம் வேலை அதிகம்.
சென்னையில் நான் கலந்துகொண்ட திருமணத்தில் எண்பது வயதைக் கடந்த மணப்பெண்ணின் தாத்தாவும், பாட்டியும், தங்கள் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல்,திருமணத்திற் கு வந்தவர்களை வரவேற்பது, ரிடர்ன் கிஃபிட் கொடுப்பது,என்று சுறுசுறுப்பாக இயங்கியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தாத்தாவுக்கு தினசரி இரண்டுமுறை டயாலிசிஸ் செய்யப்பட வேண்டும். பாட்டி சில மாதங்களுக்கு முன் இதய பாதிப்பால் பெட் ரெஸ்டில் இருந்தார். இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்கள் செயல்பட்ட விதம் மெச்சத்தகுந்ததுதான். அந்த திருமணத்தில் என்னை கவர்ந்த இன்னொரு விஷயம் ஸ்மைலி உருவங்கள் வரையப்பட்டிருந்த ஆரஞ்சுகள்.
இந்த வருடம் மதுரை சோமுவிற்கு மட்டுமல்ல, நாட்டியதாரகை பாலசரஸ்வதிக்கும் நூற்றாண்டு.
இளையராஜா எழுபத்தைந்து நிகழ்ச்சியை என் கணவர் பார்த்ததால், நானும் பார்க்க நேர்ந்தது. இளையராஜா என்றாலே நம் நினைவுக்கு வரும் வைரமுத்து, எஸ்.பி.பி., ஜானகி போன்றவர்கள் எங்கே? வைரமுத்துவோடும், எஸ்.பி.பி.யோடும் லடாய், ஜானகி? நான் பார்த்தது முதல் எபிசோட்தான். ஒருவேளை அடுத்த எபிசோடுகளில் வரலாம்.
ஆடலும், பாடலும் நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒன்று. இதற்கு முக்கிய காரணம், கைகளை கொட்டி பாடுவதும், லஜ்ஜை விட்டு ஆடுவதும் மிகச்சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர்ஸ்(மனமிளக்கிகள் எனலாமா?). அதனால்தான் நம் கடவுளர்களையும் இசையோடும், நடனத்தோடும் சம்பந்தப்படுத்தியிருக்கிறோம் போலிருக்கிறது.
"நீ உட்கார்ந்து பஜனை செய்தால், நான் அதை நின்று கொண்டு கேட்கிறேன், நீ நின்று கொண்டு பஜனை செய்தால் நான் அதை நடனமாடி ரசிக்கிறேன், நீ ஆடிக்கொண்டே பஜனை செய்தால்,அதை நான் உன் காலடியில் உட்கார்ந்து கேட்கிறேன் " என்பாது ஷீர்டி சாய்பாபாவின் வாக்கு.
சம்பிரதாய ஹரி பஜன் என்பவற்றில் ஆண்கள்தான் முன்பெல்லாம் பாடுவார்கள். ராதா கல்யாணம், சீதா கல்யாணம் போன்றவை செய்யும் பொழுது அஷ்டபதிகளை பாடுவார்கள், அதில் நடனமும் பிரதான இடம் பிடிக்கும். ஆடுபவர்கள் எல்லோரும் ஆண்கள்தான்.
இப்போது, அப்படிப்பட்ட ராதா, சீதா கல்யாணங்களை வெகுவாக சுருக்கி விட்டார்கள். பெண்கள் மட்டும் நடத்தும் இவ்வகை பஜனைகளில் ஓரிரு ஆண்களும் பங்கேற்கிறார்கள். திருமணம், பூணூல் போன்ற நிகழ்ச்சிகளில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் வைக்கப்படுகின்றன. சமீபத்தில் நான் கலந்து கொண்ட ஒரு திருமணத்தில் இப்படி பெண்கள் நடத்தும் ஒரு ராதா கல்யாண நிகழ்ச்சியை பார்த்தேன். அதில் அங்கு வந்திருந்த குழந்தைகளுக்கு சாமி பிள்ளையார், முருகன், மாரியம்மன், அய்யப்பன் ஹனுமான் போன்ற வேடங்களிட்டு அதற்கு சம்பந்தப்பட்ட பாடல்களை பாடிய வரை ஓ.கே. கிருஷ்ணனாக ஒரு ஆண் குழந்தைக்கும், ராதையாக ஒரு பெண் குழந்தைக்கும் வேடமிட்டு, "மாலை மாற்றினாள், கோதை மலை மாற்றினாள் .." என்ற பாடலுக்கு ஆண் குழந்தை கழுத்தில் இருந்த மாலையை எடுத்து ஒருவர் பெண் குழந்தையின் கழுத்தில் போட்டார். பெண் குழந்தையின் கழுத்தில் இருந்த மாலையை எடுத்து ஆண் குழந்தையின் கழுத்தில் போட்டார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இது தவறல்லவா?
வாட்ஸாப்பில் வந்த சில ஜோக்குகளோடு முடிக்கலாம்:
இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?
கிடைக்காது, கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்.
இண்டெர்வியூவில் சேல்ஸ் மேனஜர்: உங்களுக்கு ஏதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
ஓ! நிறைய, என் வீடு,கார்,மற்றும் என்னுடைய மனைவியின் அணைத்து நகைகளும் விற்றிருக்கிறேன்.
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் அடிக்கடி போறீங்க?
டாக்டர்தான் சுகர் இருக்கான்னு செக் பண்ணிக்க சொன்னார் அதான்.
ஒரு காப்பி எவ்வளவு சார்?
ஐந்து ரூபாய்
எதிர்த்த கடையில் ஐம்பது காசுன்னு எழுதியிருக்கே?
டேய்,சாவுகிராக்கி, அது xerox காபிடா!
காதல் ஒரு மழை மாதிரி
நனையும் பொழுது சந்தோஷம்
நனைந்த பிறகு ஜலதோஷம்
பானுக்கா குட் மார்னிங்க்!!
ReplyDeleteஅதிகாலையிலேயே இப்படி ஆ என்று வியக்க வைச்சுட்டீங்களே ஹா ஹா ஹா...
//எண்பது வயதைக் கடந்த மணப்பெண்ணின் // இதை மட்டும் முதலில் வாசித்து ஆஆஆ அப்ப 80 பாட்டிக்கு 80 வது செலிப்ரேஷன் என்று நினைத்து அப்புறம் அடுத்த வரி வாசித்ததும் மணப்பெண்ணின் தாத்தா பாட்டி என்று...ஹிஹிஹிஹிஹி
கீதா
பாஸிட்டிவ் தாத்தா பாட்டி!! தங்கள் உடல்நலக்குறைவு அதுவும் மேஜர் பாதிப்பு இருந்தும் இப்படியானவர்களைப் பார்த்தாலே எனக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். ரசிப்பது வழக்கம்!!
ReplyDeleteஸ்மைலி ஆரஞ்சுகள் செமையா இருக்கு...
கைகளை கொட்டி பாடுவதும், லஜ்ஜை விட்டு ஆடுவதும் மிகச்சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர்ஸ்// யெஸ் உண்மையே...
அதான் இப்போதெல்லாம் பஜன் நடக்கும் போதும் நேயர்கள் ஆடுவதைக் காணலாம்...கல்யாணங்களிலும் சங்கீத் என்று...
சில கல்யாணங்களில் ராதா கல்யாணம் வைக்கிறார்கள் தான் நானும் பார்த்திருக்க்றேன் அக்கா..
ஜோக்ஸ் ஹா ஹா ஹா ஹா
கீதா
நன்றி கீதா!
Deleteஅடடே.... காலை யோகா எல்லாம் செய்கிறீர்களா? பாராட்டுகள். குட்மார்னிங்.
ReplyDelete//அடடே.... காலை யோகா எல்லாம் செய்கிறீர்களா?//
Deleteம்ம். அப்படி சொல்லிக்கொள்ளலாம்.
//ஏற்கனவே பேய்க்கோலம் அதில் இன்னும் கொஞ்சம் அக்கிலி பிக்கிலி" //
ReplyDeleteஇது நான் கேள்விப்பட்டதில்லை. என் அம்மா சொல்வது "ஏற்கெனவே துர்க்குணி... அதிலும் இப்போ கர்ப்பிணி" என்பார்..(மாற்றிச் சொல்லணுமோ!)
நீங்கள் சொல்லியிருக்கும் பழமொழியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
Deleteசென்னைத் திருமணத்தில் நீங்கள் ரசித்தவை எங்களையும் ரசிக்க வைக்கின்றன. அந்த தாத்தா பாட்டிக்கு எங்கள் நமஸ்காரங்கள். ஆரஞ்சுப்பழங்கள் புன்னகைக்க வைக்கின்றன.
ReplyDeleteராதா கல்யாணம், சீதா கல்யாணம் விவரங்களும், ஷீர்டி பாபாவின் வாக்கும் புதிது, சுவாரஸ்யம். நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ரொம்பச் சம்பிரதாயமாக பார்த்தால் குழந்தைகள் மாலை மாற்றிக்கொண்டது அதிர்ச்சி. ஆனால் லைட்டாக எடுத்துக்கொண்டால் சாதாரணம்தான். திரைப்படங்களில் நாயகிகள் எத்தனை முறை தாலிகட்டிக் கொள்கிறார்கள்! எத்தனை முறை அக்னியை வலம் வருகிறார்கள்!
ReplyDeleteகடவுள் பெயரால் நிகழும் ஒரு சம்பவமும், திரைப்படமும் ஒன்றாகிவிடுமா?
Deleteவாட்ஸாப் ஜோக்ஸை மறுபடியும் ரசித்தேன்!
ReplyDeleteவருகைக்கும், மீள் வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி.
Delete//திருமணத்தில் எண்பது வயதைக் கடந்த மணப்பெண்ணின் //ஹிஹிஹி, நீங்க சொல்லும் அக்கிலி, பிக்கிலி என் புக்ககத்தில் சொல்லுவார்கள். என் அம்மாவெல்லாம் ஸ்ரீராம் அம்மா மாதிரித் தான் ஏற்கெனவே துர்க்குணி அதிலும் இப்போ கர்ப்பிணி என்பார். ராதா கல்யாணம் பழைய முறையில் இப்போவும் பண்ணுபவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் இப்போதெல்லாம் பெண்களும் நடத்துவதும் தெரியும். பழைய முறையில் பண்ணிய ராதா கல்யாணம் ஒன்றின் படங்கள் இன்னமும் என்னிடம் இருக்கு! முடிந்தால் பகிர்கிறேன். திருமணம் ஆகாதவர்கள் வீட்டில் இருந்தால் ராதாகல்யாணம் பண்ணச் சொல்லுவார்கள். அல்லது பண்ணுபவர்களுடைய ராதாகல்யாண மஹோத்சவத்துக்குப் பருப்புத் தேங்காய் பிடித்துத் தரச் சொல்லுவார்கள். நான் நிறையவே கலந்து கொண்டிருக்கிறேன்.
ReplyDelete//சென்னையில் நான் கலந்துகொண்ட திருமணத்தில் எண்பது வயதைக் கடந்த மணப்பெண்ணின் தாத்தாவும், பாட்டியும்,//இதை நீங்கள், கீதா ரெங்கன், மற்றும் நெ.த. மூவருமே குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த வாக்கியத்தை வேறு எப்படி அமைப்பது என்று தெரியவில்லை.
Deleteநாங்கள் குடியிருந்த பகுதியில் ராம நவமி உற்சவம் பத்து நாட்களுக்கு தினமும் கச்சேரி, கதா காலட்சேபம் என்று வெகு விமரிசையாக நடக்கும். கடைசி நாளன்று சீதா கல்யாணம் இருக்கும். எங்கள் வீட்டு திண்ணையில்தான் படங்கள் வைப்பார்கள். எங்கள் தாத்தா, அப்பா, பெரிய அக்கா, அண்ணா எல்லோருக்கும் அந்த பந்ததி முழுவதும் தெரியும்.
அதைத்தவிர ஏகாதசி அன்று சம்பிரதாய பஜனையும் எங்கள் வீட்டில் நடக்கும்.
எழுத்தாளர் அநுத்தமா சீதா கல்யாண உற்சவத்தை மையமாக வைத்து 'கேட்ட வரம்' (அவர் அந்த ஊரைச்சேர்ந்தவர்) என்று ஒரு கதை எழுதியிருந்தார், படித்திருக்கிறீர்களா?
Deleteமதுரை மீனாக்ஷி கல்யாணத்தில் பட்டர்களின் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் தான் மீனாக்ஷி, சுந்தரேசராக முன்னெல்லாம் அலங்கரித்துப் பல்லக்கில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு வருவார்கள். பின்னாட்களில் அந்தப் பெண்ணுக்கும் பிள்ளைக்குமே மணம் முடிப்பார்கள். இது ஒரு வகையில் சிதம்பரம் தீக்ஷிதர்கள் செய்வது போலத் தான்! என்றாலும் முறைப்படியான திருமணம் பின்னால் தான் நடக்கும். அதற்கேற்றாற்போல் பெண்ணையும், பிள்ளையையும் தேர்ந்தெடுப்பார்கள் என்று சொல்லிக் கேள்வி. இப்போதெல்லாம் பட்டர்களே வந்து விடுகின்றனர்.
ReplyDeleteஸ்ரீவாஞ்சியம் ராமச்சந்திர பாகவதரின் அஷ்டபதி நடனங்கள் பிரமாதமாக இருக்கும். உருகி உருகிப் பாடிக்கொண்டே அபிநயம் பிடிப்பார். இப்போது கொஞ்ச நாட்கள் முன்னால் முகநூலில் கூட நான் அப்படி ஓர் பஜனையைப் பகிர்ந்திருந்தேன். எங்க வீட்டில் என்னோட பெரியப்பா, அவர் நண்பர்கள் எல்லாருமே பஜனைக் குழுவே வைச்சிருந்தாங்க. புரட்டாசி சனிக்கிழமை, மார்கழி மாதங்களில் அமர்க்களமாக பஜனை நடக்கும். குத்து விளக்கு ஏற்றி விட்டு அதைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடிப்பாடுவார்கள். எல்லோருமே பெரிய வக்கீல்கள்!
ReplyDeleteஸ்ரீவாஞ்சியம் ராமச்சந்திர பாகவதர் நான் சிறுமியாக இருந்தபொழுது எங்கள் ஊருக்கு வந்து சீதா கல்யாணம் நடத்தியிருக்கிறார். அவருடைய சகோதரியின் குழந்தைகள் மஸ்கட்டில் எங்களுக்கு நெருங்கிய நட்பு.
Deleteமசாலா ரசனை...
ReplyDeleteவாங்க டி.டி. கருத்துக்கு நன்றி.
Deleteராதா கல்யாணம் சீதா கல்யாணமெல்லாமிப்போதும் நடத்திக் கொண்டிருக்கிறர்கள் பெங்களூர் திருப்பதி தேவஸ்தானக் கோவிலில் நாமும்பெருமாளுக்கு கல்யாணம் செய்யலாம் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து நானும் என் மனைவியும் ஸ்ரீனிவாசக் கல்யாணம் செய்வித்திருக்கிறோம்
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
Deleteஎண்பதைக் கடந்த மணப்பெண்ணின் தாத்தா - அர்த்தமே மாறுதே. நான் சதாபிஷேகத் தம்பதியைப் பற்றியோன்னு நினைத்தேன்
ReplyDeleteஒரு தாத்தா தன் பேரனை செய்தித்தாளை படித்துக் காட்டச் சொன்னார். அந்தப் பேரன்,"ராஜாஜிக்கி கல்யாணம்" என்று வாசித்தவுடன் தாத்தாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. "என்னது? ராஜாஜிக்கு கல்யாணமா? சரியா படி" என்றதும் பேரன் மீண்டும் அப்படியே வாசித்தானாம், தாத்தா பேப்பரை பிடுங்கி, பார்த்ததும்தான் ராஜா,ஜிக்கி கல்யாணம் என்பதைத்தான் அவன் அப்படி படித்திருக்கிறான் என்று. தவறான இடங்களில் நிறுத்தினால், தவறான பொருள்தான் வரும். வேறு எப்படி இந்த வாக்கியத்தை அமைப்பது?
Deleteசெய்தித்தாள்களே இப்படி வாக்கியங்களைத் தவறாக அமைப்பது பற்றி சில வருடங்களுக்கு முன்னால் பேராசிரியர் நன்னன் மக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி வழங்கினார். சுவாரஸ்யமாக இருந்தது. அதைப்பற்றிய ஒரு பதிவு கூட எங்கள் தளத்தில் எழுதி இருந்த நினைவு.
Delete"மணப்பெண்ணின் தாத்தாவும் பாட்டியும் 80 வயதைக் கடந்தவர்கள், அவர்கள் தங்கள் உடல்நிலையையும் பொருட்படுத்தாது...."
இப்படியும் அமைக்கலாம் அந்த வாக்கியத்தை!
ஹா ஹா ஹா நானும் படிக்கும்போது திடுக்கிட்டேன் .. மணப்பெண்ணுக்கு 80 வயசோ .. இது வெளிநாடாக இருக்குமோ என:)..
Deleteபாடகி ஜிக்கி, பாடகர் ராஜாவைத் திருமணம் புரிந்தார்... ஆனா பத்திரிகைகள், இணையம் நம்மைத் திடுக்கிடச் செய்து படிக்கவைக்கும் உத்தி.
Deleteவாழ்க்கையில் முதல்முறையாக சென்ற வருடம் ராதா கல்யாணம் பார்த்து பஜனையையும் பக்தியையும் ரசித்தேன்.
//"மணப்பெண்ணின் தாத்தாவும் பாட்டியும் 80 வயதைக் கடந்தவர்கள், அவர்கள் தங்கள் உடல்நிலையையும் பொருட்படுத்தாது...."// Thanks Sriram.
Deleteசுவையான மசாலா சாட்...
ReplyDeleteசுறுசுறுப்பான தாத்தா-பாட்டி - படிக்கும்போதே மகிழ்ச்சியாக இருந்தது.
வாங்க வெங்கட். உங்களை என் பதிவில் பார்த்து கொஞ்ச நாட்களாயிற்று.
Deleteஅந்த தாத்தா, பாட்டியை உங்களுக்கு தெரிந்திருக்கலாம், அவர்களும் நெய்வேலியை சேர்ந்தவர்கள்தான். பாட்டி பெயர் சியாமளா வெங்கட்ராமன், பள்ளி ஆசிரியையாக பணியாற்றியவர்கள். அவர் கணவர் திரு.வெங்கட்ராமன் இ.பி.ஆபிஸில் பணி புரிந்தவர்.
ஓ.... அவர்கள் நெய்வேலியா?
Deleteகேள்விப்பட்ட பெயராக இல்லை. நிழற்படம் பார்த்தால் தெரியலாம்.... இருந்தால் மின்னஞ்சலில் அனுப்புங்கள். என் அப்பா/அம்மாவிற்கு தெரிந்து இருக்கலாம்.
பானுமா. பதிவு சூப்பர் . பேரன் பூணலில் கூட எல்லோரும் குளித்துக் கும்மி அடித்தார்கள். ராதா, சீதா கல்யாணம் எல்லாம் பார்த்து. நாட்களாச்சு. வாட்ஸ்ஆப் ஜோக். பிரமாதம் பெண்ணுக்கும். படித்துக் காண்பித்தேன். நான் கூட் நிறைய பதிவுகளுக்குச் செல்ல முடிவதில்லை.
ReplyDeleteநன்றி வல்லி அக்கா!
Deleteதாத்தாபாட்டி. நன்றாக இருக்கட்டும்.
ReplyDeleteநேரமில்லை நேரமில்லை என மூக்கால அழுதழுதே முன்னூறு லைட் எழுதிட்டீங்க பானுமதி அக்கா ... ஹா ஹா ஹ ஆனா அத்தனையையும் ரசிச்சேன்.
ReplyDeleteதாத்தா பாட்டியில் கண்போட்டிட்டீங்க:).
ஒரேஞ் அழகு.
குழந்தைக்கு மாலை மாற்றியது... பெற்றோரிடம் கேட்காமல் செய்வது தப்புத்தான். ஆனாஇந்தக் காலத்தில் இதெல்லாம் பெரிய விசயமாக எண்ணக்கூடாது.
வாங்க அதிரா. இந்த மாதிரி ஏதாவது பதிவு போட்டால்தான் வருகிறீர்கள். எப்படியிருந்தாலும் வருகைக்கு நன்றி.
Deleteஅடிப்பாவி! என்ன மாதிரி ஒரு நல்லவளைப்பார்த்து இப்படி சொல்லிப்போட்டிங்களே! இது அடுக்குமா?
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteமசாலா சாட் சுவையான மணம் வீசியது. சென்னைக்கும், பெங்களூருக்கும் சீசன் டிக்கெட் புன்னகைக்க வைத்தது. கறுசுறுப்பான தம்பதியின் கல்யாண வரவேற்பு செயல்கள் மகிழ்வாக இருந்தது இந்த காலத்தில் சோர்ந்து விடாமல் தைரியமாய் நடமாடி இருப்பது நல்ல விஷயம்.
ஸ்மைலி ஆரஞ்சு பழங்கள் நன்றாக இருந்தது. தாங்கள் சொன்னதையும் தெரிந்து கொண்டேன். எங்கள் வீட்டில், "நல்ல நாளிலேயே நாளைப்பார். இப்போது கேட்கவா வேண்டும்" என்பார்கள்.
ஆடல், பாடல் என சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறீர்கள். மற்றும் வாட்சப் ஜோக் அனைத்தையும் ரசித்தேன்.நானும், ஒவ்வொருவரின் பதிவுகளுக்கும் உடனே வந்து கருத்திட இயலவில்லை என்னுடைய பின்னூட்டங்கள் எப்போதுமே அனைவரின் பதிவுகளிலும் கடைசியில்தான் இடம் பெறும். நேரக்குறைவினால், மிகவும் தாமதிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா! நானும் லேட்டாகத்தான் வருவேன். லேட்டாக வந்தால் என்ன? பெட்டெர் லேட் தேன் நெவெர். வாருங்கள் அதுதான் முக்கியம்.
ReplyDelete