சிதம்பரத்தில் ஒரு மதுரை
கோலாப்பூரிலிருந்து சதாராவிற்கு ஒரு கார் அமர்த்திக்கொண்டு சென்றோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே காம்ப்ளிமென்ட்ரி ப்ரேக்ஃபாஸ்ட் இருந்தது. உப்புமா, ப்ரெட் டோஸ்ட், கார்ன் ஃபிளேக்ஸ் இருந்தன. நான் ப்ரெட் டோஸ்டும், கார்ன் பிளேக்ஸ்சும் எடுத்துக் கொண்டேன். காலை 9:30க்கு கோலாப் பூரிலிருந்து கிளம்பிய நாங்கள் 11:30க்கு சதாராவை அடைந்தோம். சுகமான, சௌகரியமான சாலைப் பயணம். மலை, வயல், ஓடை என்று கண்ணையும், கருத்தையும் கவரும் காட்சிகள்
சதாராவில் ரத்ன சபாபதிக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. அபிஷேகம் முடிந்து தீபாராதனையில் ஆடலரசனை தரிசித்தோம். சிதம்பர ரகசியத்தை தரிசிக்க முடியுமா? என்று கேட்டதும், தலைக்கு 50 ரூபாய் டிக்கெட் வாங்க வேண்டும் என்றார்கள். புனாவிலிருந்து வந்திருந்த மற்றொரு குடும்பத்தினர்களுக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாதாம், "உங்களால் நாங்களும் பார்த்தோம்" என்றார்கள்.
1980ஆம் வருடம் சாதுர்மாஸ்ய விரதத்தின் பொழுது சதாராவில் தங்கிய மஹா பெரியவராகிய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள், சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் கோவிலைப்போல போல ஒரு கோவிலை சதாராவில் நிர்மாணிக்க விரும்பினார். சாமண்ணா என்னும் பெரியவாளின் பக்தர் நிலம் கொடுக்க, தமிழ் நாடு, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநில அரசுகள் ஒவ்வொரு கோபுர கட்டுமான செலவை ஏற்றுக்கொள்ள, கோவிலின் பிரதான மண்டபத்தை கட்ட தேவையான தேக்கு மரங்களை கேரள அரசு வழங்க, நல்ல மனம் கொண்ட பக்தர்களின் நன்கொடையால் இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டு 1984 வருடம் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பூர்வ சிதம்பரத்தோடு ஒப்பிடுகையில் மிகச்சிறியது. தெற்குப் பார்த்த நடராஜர். இந்த பிரதான கோபுரத்தைத்தான் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழக அரசு கட்டிக் கொடுத்தது.
உள்ளே நுழைந்ததும் இடது புறம் கிழக்குப் பார்த்த விநாயகர் சந்நிதி. பிரும்மாண்டமான விநாயகர். அதற்கு அடுத்து நின்ற கோலத்தில் கூப்பிய கரங்களோடு இருக்கும் பெரிய ஆஞ்சனேயருக்கு ஒரு சந்நிதி. மேற்கு கோபுரத்தை அடுத்து ராதா கிருஷ்ணர் சன்னிதி. அதை அடுத்து ஆதி மூலநாதர் சந்நிதி. அங்கு தரிசித்து விட்டு, வலம் வரும்பொழுது நவக்கிரக சன்னிதி. இங்கெல்லாம் வணங்கி விட்டு கிழக்கு வாசல் வழியே வெளியே சென்றால் ஐயப்பனுக்கு ஒரு சிறிய கோவில்.
கோவில் பிரகாரத்திலேயே குளம் |
முழுவதும் தேக்கு மரத்தால் கூரை அமைக்கப்பட்ட பிரதான மண்டபத்தில் மஹா பெரியவரின் படம் ஒரு சிறிய பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிரதான மண்டப சுவர்களில் பரத நாட்டிய கரணங்களை சிற்பங்களாக வடித்திருக்கிறார்கள். பழைய கோவிலின் சிற்பங்களின் அழகு, துல்லியம், உயிர்ப்பு இவைகளோடு ஒப்பிடுகையில்...ஹும்! தென்னிந்திய பாணியில் ஒரு கோவில் என்ற வகையில் செல்லலாம். செல்லாவிட்டாலும் பெரிதாக எதையும் தவற விட்டவர்களாக மாட்டோம். ஒரிஜனல் கோவிலில் கிடைக்கும் இறையனுபவத்தையெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்.
இந்த கோவிலில் செய்யப்படும் பூஜைகள், அதற்கான கட்டணங்கள் இவைகள் அலுவலகம் போன்ற ஒன்றின் போர்டில்
குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அங்கேயே உருத்திராட்சம், ஸ்படிக மாலை, ஊதுபத்தி, சூடம் போன்ற பூஜைபொருள்களும், ஸ்வாமிக்கும் அம்மனுக்கும் சாற்றுவதற்கு வேஷ்டி மற்றும் புடவை போன்றவைகளும் கிடைக்கின்றன. செப்டம்பரில் விமானங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைகளை துவங்க உள்ளார்களாம்.
நாங்கள் கோவிலுக்குள் நுழைந்த பொழுது, அங்கு வேலை செய்யும் ஒருவர், "வாங்கம்மா, ஊரிலிருந்து வரீங்களா? நான் மதுரை.." என்று வரவேற்றார். சிதம்பரமும், மதுரையும் பிரிக்க முடியாதவைதான் போலிருக்கிறது.
தலைப்பை கொண்டு வந்து பொருத்தி விட்டீர்களே...
ReplyDeleteஹாஹஹா! மற்ற விடயங்களை ரசித்தீர்களா?
Deleteகடைசி வரியில் தலைப்பு வந்துவிட்டது.
ReplyDeleteகேள்விப்படாத கோவில். புதிய செய்தி தெரிந்துகொண்டேன்.
கேள்வி பட்டதில்லையா? பனே செல்லும் வாய்ப்பு கிடைத்தா சென்று வாருங்கள். வருகைக்கு நன்றி.
Deleteரொம்பப் பார்க்கணும்னு ஆவலோடு காத்திருந்த கோயில். ஆனால் உங்கள் கட்டுரையைப் படித்தால் அவ்வளவு ஈர்க்கவில்லை எனத் தெரிகிறது. சிற்ப வேலைப்பாடுகள் முன்னால் எல்லாம் கல்லில் செதுக்கினார்கள். இப்போது சிமென்ட் அல்லது சுதை மாதிரி (உண்மையான சுதை அல்ல) அமைப்பு! நுணுக்கங்கள் எல்லாம் இருக்காது. மேலும் முன்னெல்லாம் சிற்பிகள் பரத சாஸ்திரமும் படித்திருந்தனர். ஆகவே ஒவ்வொரு கரணங்கள் குறித்தும் அவை ஆடப்படும் காலம் குறித்தும் அவற்றின் நுணுக்கங்களும் தெரிந்து கொண்டு சிற்பங்களை வடித்தனர். இப்போது அவ்வளவு ஈடுபாடு யாரிடமும் இல்லை என்பதோடு சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களும் மிகக் குறைவு.
ReplyDeleteப்ராசீனமான கோவில்களில் உள்ள சிற்பங்களுக்கும், புதிய கோவில்களில் உள்ள சிற்பங்களுக்கும் உள்ள வித்தியாசங்களுக்கு சரியான காரணம் கூறியிருக்கிறீர்கள்.
Deleteஎப்படியோ நான் இந்தக் கோயிலுக்குப் போயிட்டு வாங்கனு கேட்டுக் கொண்டதற்கு இணங்கப் போய்விட்டு வந்துவிட்டீர்கள்! மிக்க நன்றி. படங்கள் எல்லாம் அருமையாக எடுத்திருக்கீங்க!
ReplyDeleteஎனக்கும் நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. உங்கள் தூண்டுதலும் வழிகாட்டுதலும் அதற்கு உதவின. நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
Deleteசிதம்பரமும், மதுரையும் பிரிக்க முடியாத பந்தம் தான்.
ReplyDeleteகோவில் படம், தீர்த்தகுளம் படம்
ஊர்த்துவ தாண்டவ படம் எல்லாம் நன்றாக இருக்கிறது.
புதிய கோவில் தரிசனம் ஆச்சு இன்று.
மிக்க நன்றி.
Deleteஇந்த இடத்தில இப்படியொரு சிதம்பரம் இருப்பது நீங்கள் சொல்லிதான் தெரிகிறது. சிதம்பரத்தில் மதுரை என்கிற தலைப்பு கடைசி வரியில் ஜஸ்டிபை செய்யப்பட்டிருக்கிறது! என்னவோ என்று படித்து வந்தேன்!
ReplyDeleteஎல்லோரையும் படிக்க வைக்க செய்த முயற்சிதான் இப்படிப்பட்ட தலைப்பு.😊😊
Deleteசில கோவில்கள் சமீபத்தில்தான் கட்டப்பட்டவை என்று தெரிந்தால் கொஞ்சம் சுவாரஸ்யம் விட்டுப்போய் விடுகிறதோ!
ReplyDeleteஅதற்கு காரணம் நம்முடைய கம்பேரிசம். வருகைக்கு நன்றி.
Deleteபானுக்கா படங்கள் மிக அழகாக இருக்கின்றன. தலைப்பு பற்றி யோசித்துக் கொண்டே வந்தால் ஹா ஹா கடைசி வரி!!!
ReplyDeleteபூனாவில் இந்தக் கோயிலுக்குச் சென்றதில்லை. புதியதாய் எழும் கோயில்களில் ஏனோ அத்தனை ஈர்ப்பு ஏற்படுவதில்லை.
//செப்டம்பரில் விமானங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைகளை துவங்க உள்ளார்களாம். // முதலில் இந்த வரியை வாசித்துவிட்டு இதென்ன விமானத்திற்குப் பெயிண்டா!! என்று கொஞ்சம் குழம்பி அப்புறம் ஓ கோயில் விமானம் என்று ஹிஹிஹி புரிந்து கொண்டேன். மீ புத்தி இப்படித்தான் பல சமயங்களில் குண்டக்கா மண்டக்கா என்று போகும்!!..
கீதா
நான் எழுதும் பொழுது. கோவில் விமானம் என்று எழுதியிருக்க வேண்டும். இனிமேல் கவனமாக இருக்கிறேன். நன்றி.
Deleteபடங்கள் எல்லாம் செல்ஃபோனில் எடுத்ததுதான்.
Deleteசிதம்பரம் ஆட்சியா...? மீனாட்சி ஆட்சியா...? (வீட்டில்) என்று ஒரு பதிவு எழுத வேண்டும்...!
ReplyDeleteஇப்போது எங்கள் வீட்டில் ஸ்வாமிமலை(தகப்பன் சாமி). ஹாஹாஹா. நன்றி டி.டி.
Deleteஇதுவரை கேள்விப்படாத கோவில்.. இன்று அறிந்துக்கொண்டேன்
ReplyDeleteசந்தோஷமும், நன்றியும்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅருமையான கோவிலைப்பற்றி தெரிந்து கொண்டேன். இந்த மாதிரி சிதம்பரம் புனேயில் உள்ளதென்று தெரியாது. அதன் விபரங்களும், கோவில் உருவான வரலாறும் தங்கள் பதிவினால் அறிய முடிந்தது.
விநாயகி மிகவும் நன்றாக இருக்கிறார். கோவிலும், சிற்பங்கள் படமும் மிக அழகு. பதிவின் தலைப்பு முதலிலும், இறுதியில் அதை விடவும் ஈர்த்தது. தாங்கள் சிதம்பர ரகசியத்தை கேட்டதும், அவரின் ஊரை ரகசியமாக அவரால் வைத்திருக்க இயலவில்லை போலும். ஹா. ஹா. ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.
ReplyDeleteசதாராவில் சிதம்பரம் - புதிய தகவல். விநாயகி சிலை ஈர்க்கிறது. விநாயகர் சிலை/பொம்மைகளை சேமிக்கும் பழக்கம் உடைய நண்பர் ஒருவர் விநாயகி வேண்டும் என ரொம்ப வருடங்களாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறார். இந்த ஊரில் கிடைக்குமா என விசாரிக்க வேண்டும்.
ReplyDeleteதற்போதைய சிலைகள் நிறைய கோவில்களில் சிமெண்ட் கொண்டு செய்கிறார்கள் - அத்தனை கலை நயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
தொடர்கிறேன்.