கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, October 23, 2019

மசாலா சாட்

மசாலா சாட் 
சில விமர்சனங்கள்


அருணா சாய்ராம் கச்சேரி:



Front Enders Foundation என்னும் சேவை நிறுவனம் அதோடு சம்பந்தப்பட்ட'மைத்ரி' என்னும் நிறுவனத்திற்காக அதுல்யா மற்றும் ஹெல்த் ஃபார் 60+ இவற்றோடு சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த அருணா சாய்ராமின்  இசைக்கச்சேரிக்கு பாஸ் கிடைத்தது. 

18.10.19  வெள்ளியன்று மாலை 6:30க்கு கச்சேரி துவங்கும் என்று போட்டிருந்தாலும், வரவேற்புரை, ப்ரண்ட் எண்டெர்ஸ், மைத்ரி, அதுல்யா, ஹெல்த் ஃபார் 60+ போன்றவைகளை பற்றிய சுருக்கமான அறிமுகம், ஸ்பான்சர்களுக்கு பாராட்டு, கச்சேரி செய்யப் போகும் கலைஞர்களை கௌரவித்தல் போன்றவைகல் முடிந்து கச்சேரி தொடங்கவே 7:15 ஆகி விட்டது. 

'வாழ்க்கைப் பயணம்' என்னும் பொருளுக்கு ஏற்ப ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு பொருத்தமான பாடல்களை தேர்ந்தெடுத்திருந்தார். 'ஒருத்தி மகனாய் பிறந்து..' என்னும் திருப்பாவை பாசுரத்தோடு கச்சேரியை தொடங்கியவர் அடுத்தடுத்து தியாகய்யர், ஊத்துக்காடு வேங்கட சுப்புரமணியர், முத்துசாமி தீக்ஷதர், அஷ்டபதி, பாபநாசம் சிவன், அபங் என்று அழகாக பாடல்களை தொகுத்திருந்தார். கச்சேரியை எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து விடக்கூடாதே என்பதற்காக கல்யாண ராமா பாடலில் ஸ்வரம் பாடினார். கபாலி நின் கருணை நிலவு பொழில் பாடலில் தனி ஆவர்த்தனம் என்று முழு நீள கச்சேரியாக வடிவமைத்திருந்தார். பக்கம் வாத்தியம் வாசித்த எல்லோருமே திறமையாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்றாலும் மிருதங்கம் வாசித்தவரும், புல்லாங்குழல் வாசித்தவரும் அபாரம். மிருதங்கம் சுநாதமாக ஒலித்தது. எங்கே வலுவாக இருக்க வேண்டும், எங்கே மென்மையாக இருக்க வேண்டும் என்று உணர்ந்து வாசித்தார். புல்லாங்குழல் வாசித்தவருக்கு ஆடியன்ஸ் அப்லாஸ் கொடுத்த பொழுது,"ஹி டிசெர்வர்ஸ் திஸ்" என்று அருணா கூறியதில் அவருடைய பெருந்தன்மை தெரிந்தது. ஆனாலும், தனியாக வீடு திரும்ப வேண்டுமே என்று கச்சேரி முடியும் முன்பே கிளம்பி விட்டேன். ஒரு அற்புதமான மாலை!
(அட! நான் கூட ஒரு இசை விமர்சனம் எழுதி விட்டேன்.😃😄😄)

அசுரன்(திரைப்படம்):



நான் சென்னை வரும்பொழுதெல்லாம் என் தோழி ஏதாவது ஒரு சினிமாவிற்கு டிக்கெட் புக் பண்ணிவிடுவார். இந்த முறை அவர் அழைத்துச் சென்ற படம் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த 'அசுரன்' திரைப்படம். 

பூமணி எழுதிய 'வெக்கை' என்னும் நாவல்தான் படமாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். நாவலை படிக்காததால் படமாக்கப்பட்டதில் எதை பெற்றிருக்கிறது, எதை இழந்திருக்கிறது என்று கூற முடியவில்லை. 

ஊரின் பெரிய நிலச் சுவாந்தரான ஆடுகளம் நரேன் அவர் நிலத்திற்கருகில் ஒரு சிறு பூமியை வைத்திருக்கும் தனுஷின் நிலத்தையும் சிமெண்ட் ஃபாக்டரி கட்டுவதற்காக பறித்துக் கொள்ள பார்க்கிறார். இதற்கான முயற்சியில் நடக்கும் ஜாதி மோதல்கள், பழி வாங்கும் நடவடிக்கைகள் இவையே கதையாக விரிகிறது. தன்  நிலத்தை காப்பற்றிக் கொள்ள தனுஷ் குடும்பம் படும் பாட்டை விட ஜாதி சண்டையும், ஆண்டான், அடிமை மனப்பாங்குமே முன்னிலை வகிக்கின்றன.

தனுஷும், அவருடைய மனைவியாக தமிழுக்கு வருகை தந்திருக்கும் மஞ்சு வாரியரும் நன்றாகத்தான் நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் பசுபதிக்கும் தனுஷின் இள வயது காதலியாக வரும் அம்மு அபிராமிக்கும் பொருந்துவது போல் இவர்கள் இருவருக்கும் பொருந்தவில்லை. பாத்திரத்திற்குள் புகுந்து கொள்ளாமல் கொஞ்சம் அந்நியப்பட்டு நிற்பதாகவே தோன்றுகிறது. சிவாஜி கூட இளம் வயதிலேயே வயதான பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு அதற்கேற்ற உடலமைப்பு இருக்கும். தனுஷின் உடல் அமைப்பை விட்டு விடலாம், ஒல்லியாக இருக்கும் கிராமத்து மனிதர்கள் இல்லையா? அவர் முகத்திலேயே மெசூரிட்டி இல்லையோ என்று தோன்றுகிறது. அதைப் போலவே மஞ்சு வாரியரின் உடல் மொழிகளும் நகரம், நகரம் என்கின்றன. 

பசுபதி, அம்மு அபிராமி, தனுஷின் மகன்களாக வரும் தீஜே அருணாச்சலம், கெவின் கருணாஸ்(கருணாஸின் மகனா?) எல்லோருமே பாத்திரத்திற்குள் கச்சிதமாக பொருந்தி, சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதுவும் பசுபதி, தனுஷிற்கு இடையே நிலவும் அன்னியோன்னியம் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜுக்கும், இன்ஸ்பெக்டராக வரும் பாலாஜி சக்தி வேலுக்கும் அதிக வேலை இல்லை. 

முன் பாதியில் பாசம், நேசம், உணர்ச்சிபெருக்கு போன்றவை பின் பாதியில் காணாமல் போய் வெறும் வஞ்சம், ஜாதி மோதல் இவைகளே பிரதான இடம் பிடிக்கின்றன. இரண்டாம் பாதியில் பீறிடும் ரத்தம் நம் மீது தெளித்து விடுமோ என்று தோன்றுகிறது. 
மகனை போலீஸ் பிடியிலிருந்து விடுவிக்க தனுஷ் ஊர் மக்கள் ஒவ்வொருவர் காலிலும் விழும் பொழுது அந்த வலியை நாம் உணர வேண்டாமா? 

கனமான விஷயம், வியாபார நிர்பந்தங்களினால் ஏற்படுத்த வேண்டிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.  

சாரம் உதைத்த சர மழை:

இந்த வருடம் இந்தியா முழுவதுமே நல்ல மழை. இப்போது தமிழகத்திலும் பருவ மழை தொடங்கி வெளுத்து வாங்குகிறது. மே, ஜுனில் மழை பெய்ய வேண்டும் என்பதற்காக வருண ஜெபமெல்லாம் செய்தார்கள். இந்த சுலோகம் சொல்லுங்கள், இந்த மந்திரத்தை ஜபியுங்கள் என்று வாட்ஸாப்பில் தினம் ஒரு மந்திரம் வந்து கொண்டிருந்தது.  இப்போது மழை பொழிகிறதே அந்த நீரை சேமித்து வைத்துக் கொள்ள என்ன செய்கிறோம்? எல்லாமே அரசாங்கம்தான் செய்ய வேண்டுமா? பெரிய பெரிய குடியிருப்புகளும், தனி வீடுகளும் மழை நீர் சேகரிப்பை செய்கின்றனவா? 

கோடையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவிய பொழுது நான் சிலரிடம் தண்ணீர் கஷ்டத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று கேட்ட பொழுது பெரும்பாலானோர், "சொசைட்டியில் லாரி தண்ணீர் வாங்கி ஊற்றுகிறார்கள். எங்கள் வீட்டில் தண்ணீர் வருகிறது". என்றார்கள். இப்படிப்பட்டவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? இந்த விஷயத்தில் கிராமத்து இளைஞர்களுக்கு இருக்கும் உத்வேகம் நகரத்துவாசிகளுக்கு இல்லை. சனியன்று எங்கள் பிளாகில் வெளியாகும் பாசிட்டிவ் செய்திகளை கவனித்தாலே இது புரியும். கிராமத்து இளைஞர்கள்தான் ஆறுகளையும், ஏரிகளையும் தூர் வாருகிறார்கள், மழை நீரை சேமிக்கிறார்கள். நகரத்திற்குத்தான் தண்ணீர் லாரிகள் இருக்கின்றதே. 

28 comments:

  1. அருணா அவர் முத்திரைப்பாடல்களைப் பாடவில்லையா?  இல்லை, அதற்குமுன் கிளம்பி விட்டீர்களா?!  

    ReplyDelete
    Replies
    1. பாடினாரே. விஷமக்கார கண்ணனை விட்டு விட முடியுமா?  

      Delete
  2. தனுஷின் வயதான பாத்திரம் பொருந்தியிருப்பதாக குமார் சொல்லியிருந்தார்.  அப்படி ஒல்லியாக இருக்கும் அவர் ஊர்க்காரர் ஒருவரையும் நினைவு கூர்ந்திருந்தார்.  அந்தப் பையன் கருணாஸின் மகன் என்றுதான்  விமர்சனத்தில் படித்தேன்.  படத்தில் அவருக்கு ஏதோ அதிருப்தி என்றும் செய்தியில் படித்தேன்!  

    ReplyDelete
    Replies
    1. தனுஷ் ஒல்லியாக இருப்பது பிரச்சனை இல்லை. இதை நானும் குறிப்பிட்டிருக்கிறேன். முகத்தில் அந்த மெச்சூரிட்டி இல்லை என்று தோன்றியது. 

      Delete
  3. தண்ணீர் பிரச்னையும் நகரங்களும்....   கிடைக்கும்போது அருமை தெரிவதில்லை.   இல்லாதபோது கஷ்டப்படுகிறோம்.  கர்நாடகாவிலிருந்து போராடி காவிரியை அவர்கள் சிறையிலிருந்து விடுவித்து வாங்கி கடலுக்கு அனுப்புவதில் நாம் ஜித்தர்கள்!

    ReplyDelete
    Replies
    1. காவேரி மட்டுமா? இருந்த ஏரிகளை தூர்த்து வீடு கட்டியாகி விட்டது. இருக்கும் கோவில் குளங்களை கூட பராமரிக்காமல் கான்க்ரீட் தளமாக்குகிறார்கள். புழல் ஏரியில் மணலை கொட்டியிருப்பதாக சமீபத்தில் தினமலரில் படித்தேன். நீர் மேலாண்மையில் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. 

      Delete
  4. >>> நகரத்திற்குத்தான் தண்ணீர் லாரிகள் இருக்கின்றதே..<<<

    நகரத்து இளைஞர்களுக்குத்தான் தண்ணீர் லாரிகளளும் வாட்ஸப் இன்ன பிறவும் இருக்கின்றனவே!...

    வாழ்க மழையும் மழைச்சாரலும்!...

    ReplyDelete
    Replies
    1. நகரவாசிகளில் மேல்தட்டு வர்க்கம் குடிக்க பிஸ்லேரி வாட்டர், குளிக்க லாரி தண்ணீர் என்று கேட்ஜெட்டுகள் உலகத்தில் மூழ்கி கிடந்தால்,  அடிமட்ட இளைஞர்கள் அபிமான நட்சத்திரங்களின் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்து திருப்தி அடைகிறார்கள். யாருக்கு வேண்டும் சமுதாய அக்கறை?

      Delete
  5. அருணா சாய்ராம் எனக்குப் பிடித்தவர். விமரிசனம் நன்றாக இருந்தது. சங்கீத நுணுக்கங்கள் தெரிந்ததால் உங்களால் நன்கு ஆழ்ந்து ரசிக்க முடிந்திருக்கிறது. திரைப்படம் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பார்க்காமல் எப்படிச் சொல்வது! பார்த்திபன் நடித்த ஒருபடம் கூட (ஒற்றைச் செருப்பு?) நன்றாக இருப்பதாகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் இத்தகைய படங்களை விரும்ப மாட்டார்கள் எனவும் விமரிசனம் படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஒற்றை செருப்பு நெ.7 படம் நன்றாக இருக்கிறது என்றுதான் பலரும் சொல்கிறார்கள். சத்யம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறதே. 

      Delete
  6. நகரத்தில் மழை நீர்ச் சேமிப்பெல்லாம் இல்லை. எங்கே! அவங்க அவங்க பாட்டைப் பார்க்க ஓட வேண்டியது. கோடைக்காலத்தில் தண்ணீர் லாரியில் தண்ணீர் பிடிக்க வேண்டியது. அரசைத் திட்ட வேண்டியது. டாஸ்மாக்கில் மூழ்க வேண்டியது இதுக்கே நேரம் பத்தலையே!

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொல்லியிருக்கிறீர்கள். மக்களுக்கு விழிப்புணர்வு வராமல் அரசாங்கம் மட்டும் என்ன சாதித்து விட முடியும்? 

      Delete
  7. வணக்கம் சகோதரி

    மசாலா சாட் மணக்கிறது. இசையில் லயித்து அருணா சாய்ராம் கச்சேரியை அருமையாக விமர்சித்துள்ளீர்கள். மிகவும ரசித்தேன்.

    அசுரன் திரைப்படமும் அமர்க்களமாக விமர்சனம் செய்துள்ளீர்கள். சிறந்த அழகான, அளவான விமர்சனம்.

    தண்ணீர் தேவையைப்பற்றி இப்போதைக்கு நாம் கவலை கொள்ள மாட்டோம் என்பது பெய்யும் மழைக்கே தெரியும். மனிதர்களின் மனநிலை இயற்கைக்கும் புரியும். என்ன செய்வது? ஆழமாக எழுதிய அத்தனையும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. என் விமர்சனம் எப்படி இருந்தாலும் அதைப் பற்றிய உங்கள் விமர்சனம் அழகு. 

    ReplyDelete
  9. அருணா சாய்ராம் ...இரு வாரங்களுக்கு முன் அவரின் பேட்டி ஹலோ fm ல் கேக்கும் வாய்ப்பு கிடைத்தது ..அவ்வளவு சுவையாக பேசினார் ..

    அசுரன் படம் பற்றி பல வித விமர்சனங்கள் ..ஆனால் பார்க்கும் எண்ணம் இல்லை .வெக்கை நாவலும் கிடைத்தது ..அதுவும் இன்னும் வாசிக்க வில்லை


    தண்ணீர் - அந்த உறுத்தல் எனக்கும் உண்டு ...நாம் என்ன செய்கிறோம் பேசுவதை தவிர என்று ..


    ReplyDelete
    Replies
    1. விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி அனு.

      Delete
  10. //'ஒருத்தி மகனாய் பிறந்து.//

    ஆஆ எனக்கும் பிடிக்கும்... உங்களுக்கு இக்கச்சேரிகள் பிடிக்கும் என்பதால் மகிழ்ச்சியான மாலையாக அமைஞ்சிருக்கு பானுமதி அக்கா.

    ReplyDelete
    Replies
    1. அருணா சாய்ராமின் பாடல்களை கேட்டுப் பாருங்கள் அதிரா. ஜனரஞ்சகமாக இருக்கும்.

      Delete
  11. ஓ அப்போ அசுரன் பார்க்கக்கூடிய படம்தான் போலும்..

    தமிழ் நாட்டில் எப்பவும் தண்ணீர்ப் புலம்பல் இருந்து கொண்டே இருக்குது.. அடிச்சால் மொட்டை வளர்த்தால் குடும்பி:) நிலைமை.. இது முன்னோர்களின் சாபமாக இருக்குமோ...

    ReplyDelete
    Replies
    1. அசுரன் ஒரு முறை பார்க்கலாம்.

      Delete
  12. கதம்பம் ரசனை.... ம்ம்ம் கச்சேரிக்கெல்லாம் எப்போ போகப்போகிறேனோ...

    படம் - அதெல்லாம் இப்போ பார்க்க நேரமில்லை. இருந்தாலும் விமர்சனம் பரவாயில்லை.

    பெங்களூரில் நல்ல மழையா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை. நான் தற்சமயம் சென்னைக்கு வந்திருக்கிறேன்.பெங்களூரிலும் அவ்வப்போது மழை பெய்கிறது போலிருக்கிறது.

      Delete
  13. இசை விமர்சனம் - ரசனை

    திரைப்பட விமர்சனம் - (இதுதான்) அட...!

    மழை - சிந்திக்க வேண்டிய தகவல்...

    ReplyDelete
  14. நன்றி, நன்றி, நன்றி டி.டி.

    ReplyDelete
  15. எனக்கு பிடித்த பாடகர் அருணா சாய்ராம்.
    கடைசி வரை கேட்க முடியவில்லை என்றதை படித்ததும் கொஞ்சம் வருத்தமாய் இருந்தது.
    இசை விமர்சனம் அருமை.

    //மழை நீரை சேமிக்கிறார்கள். நகரத்திற்குத்தான் தண்ணீர் லாரிகள் இருக்கின்றதே. //

    இங்கும் மழை நீரை சேமித்தால் நன்றாக இருக்கும். எத்தனை நாள் லாரி வரும் தெரியவில்லை.

    ReplyDelete
  16. அருணா சாய்ராம் பாட்டு நிறைய பேருக்கு பிடிக்கும். திறமையும், எளிமையும் ஒருங்கே அமைந்திருக்கும் கலைஞர் அவர். 
    நீர் மேலாண்மையை அரசாங்கத்தோடு மக்களும் இணைந்து செயல்படுத்த வேண்டும். 

    ReplyDelete
  17. அருணா சாயிராம் எனக்கு மிகவும் பிடித்தவர். அவர் பாடலும் சரி அவர் மனதும் சரி. மிக மிக எளிமையானவர். நம் பக்கத்து வீட்டு மாமி போன்ற எளிமை.

    அசுரன் பொதுவாக நல்ல கருத்து வெளியாகியிருக்கு. பார்க்க வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம்

    மழை நீர் சேமிப்பு நீங்க சொல்லியிருப்பது போல எபி சனி பாசிட்டிவ் செய்திகள் நினைவுக்கு வந்தது.
    அரசாங்கத்துடன் மக்களும் முனைய வேண்டும். நகரத்து மக்களுக்குக் குறிப்பாகச் சென்னை மக்களுக்கு அது பத்தாது. ரோடுகளில் நீர் தேங்கி வீணாகப் போனாலும் போகும் ஆனால் நீர் சேமிப்பு கிடையாது. பின்னர் தண்ணீர்க் கஷ்டம் வரும் போது கூக்குரல் எழுப்புவாங்க. இதில் தண்ணீர் லாரி கான்ட்ராக்டர்களுக்கும் பங்கு உண்டு என்று தோன்றுகிறது. சில விஷயங்கள் அரசு செய்ய வேண்டும் மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    கீதா

    ReplyDelete
  18. அசுரன் படம் நன்றாக இருக்கிறதா? இங்கு வருமா என்று தெரியவில்லை. பாலக்காட்டிலேனும் வரும். இங்கு எங்கள் ஊரில் வர சான்ஸ் இருக்கா என்று தெரியவில்லை.

    மழை நீர் சேமிப்பு இங்கும் கேரளத்தில் குறிப்பாகத் திருவனந்தபுரத்தில் சொல்லப்படுகிறது ஆனால் அதே சமயம் இங்கு எங்களுக்கு வெள்ளமும் வந்துவிடுகிறது அதீத மழையால். தமிழ்நாட்டிற்கு மிக மிக அவசியம்.

    துளசிதரன்

    ReplyDelete