கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, January 14, 2020

எதிர்பாராத வி.ஐ.பி.மீட்!

எதிர்பாராத வி.ஐ.பி.மீட்!


திரு.ககன்தீப் சிங் பேடியோடு கட்டுரையாசிரியர்

சனிக்கிழமை நான் ஒரு வேலையாக வெளியில் சென்றிருந்தபொழுது செல்போன் அழைப்பு. "துக்ளக் அலுவலகத்திலிருந்து பேசுகிறேன், அதில் வரும் வி.ஐ.பி. மீட் பகுதிக்காக தமிழக அரசு செகரட்டரி திரு.ககன்தீப் சிங் பேடி அவர்களோடு உரையாட வேண்டும். உங்களுக்கு விவசாயத்தில் ஈடுபாடு உண்டா?" என்று கேட்டார்கள். அடிப்படையில் நான் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்தவள், அதனால் கலந்து கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.  என் மகனும் ஒப்புதல் அளிக்க, ஞாயிறு எங்கள் காலனியில் நடந்த சங்கராந்தி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, இரவு பேருந்தைப் பிடித்து சென்னை வந்தேன்.

மதியம் 1:30க்கு கோட்டையில் இருக்கும் வேளாண்துறை அலுவலகத்திற்கு வந்து விடுங்கள் என்றார்கள். நான் அங்கு செல்லும் பொழுது மணி 1:15. ககன் தீப் அலுவலகத்தில் ஏற்கனவே ஒருவர் மட்டும் வந்திருந்தார். நான் சென்ற பிறகு மற்றவர்களும் வந்தார்கள். எங்களுக்கு அங்கே மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை முடித்துக்கொண்டு, திரு.ககன்தீப் அவர்களை சந்திக்கச் சென்றோம்.

எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். வேறொரு பெண்மணி பாண்டிச்சேரியிலருந்து வந்திருந்தார். "இதற்காக வெளியூரியிலிருந்து
வந்திருக்கிறார்களா? என்று அவர் கேட்டதும், துக்ளக் நிருபர், என்னை சுட்டிக்காட்டி "அவங்க பெங்களூரிலிருந்து வந்திருக்கிறார்கள், வெளி மாநிலம்.." என்றார்.  பிறகு உரையாடல் தொடங்கியது.   நாங்கள் என்னவெல்லாம் கேட்டோம், அதற்கு அவர் என்ன பதில் கூறினார் என்பதை நீங்கள் அடுத்த வார துக்ளக்கில் படிக்கலாம்.  இந்த சந்திப்பில் என்னைக் கவர்ந்த விஷயங்களை மட்டும் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

பஞ்சாபை சேர்ந்த திரு.ககன்தீப் சிங் சிறு வயதிலிருந்தே ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தாராம். அதற்கு ஆசிரியர்களாக இருந்த தன் பெற்றோர்களும், தன் ஆசிரியர்களும் காரணம் என்றார். பிளஸ் டூ சி.பி.எஸ்.சி. தேர்வில் அகில இந்திய அளவில் ராங்க் வாங்கிய அவருக்கு பொறியியல், மருத்துவம் இரண்டிலுமே சீட் கிடைத்தாலும், ஐ.ஏ.எஸ். படிப்பதற்கு பொறியியல் படிப்பதே உதவும் என்பதால் அதை  தேர்ந்தெடுத்தாராம்.  பொறியியல் முடித்தும், கேம்பஸ் தேர்வில் மிகச்சிறந்த நிறுவனங்களில் தேர்வானாலும், அவைகளை ஏற்றுக் கொள்ளாமல் இந்தியன் ரயில்வே சர்வீஸின் பொறியியல் பிரிவில் பணிக்குச் சேர்ந்தாராம். அங்கிருந்து கொண்டே ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றாராம். "என்னுடைய நண்பர்கள் பலர் மில்லியர்களாகவும், பில்லியனர்களாகவும் இருக்கிறார்கள், ஆனால் ஒரு ஐ.ஏ.அஸ். அதிகாரியாக பணி புரிவதில் கிடைக்கும் நிறைவு வேறு எதிலும் கிடைக்காது, ஐயாம் ஹாப்பி" என்றார்.

தமிழ் சற்று கொச்சையாக இருந்தாலும், ள், ல், நெடில், குறில் போன்றவைகளை உச்சரிப்பதில் தடுமாற்றம் இருந்தாலும் நன்றாகப் பேசினார்.  ஆப்(app) என்று சொல்லாமல் செயலி என்றதும், பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகள் கலக்காமல் பேசியதும் வியப்பாக இருந்தது.  ஆரம்பத்திலிருந்தே தமிழ் நாட்டில்தான் பணிபுரி கிறாராம்.  அவருடைய குழந்தைகள் பள்ளியில் முன்றாவது மொழியாக தேர்ந்தெடுத்தது தமிழ்தான் என்றார்.  இவருடைய தந்தை திருக்குறளை பஞ்சாபியில் மொழி பெயர்த்திருக்கிறாராம்.

தமிழக அரசு விவசாயிகளுக்கு உதவுவதற்காக 'உழவன்' என்றொரு செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறதாம். இதன் மூலம் விவசாயி தனக்குத் தேவையான பல விஷயங்களைப் பெற முடியுமாம். உதாரணமாக ஒரு விவசாயிக்கு உரம் தேவையென்றால் அது எங்கே கிடைக்கும்? என்ன விலை? அந்த கடை செயல்படும் நேரங்கள், அந்த வியாபாரியின் தொடர்பு எண் போன்றவை கிடைக்குமாம்.  "இதைப் போன்ற பல தொழில் நுட்பங்களை தமிழக விவசாயிகள் உடனே ஏற்றுக் கொள்கிறார்கள். மற்ற மாநிலங்களில் அரசாங்கம் கூவி கூவி அழைத்தாலும் ஏற்றுக் கொள்வதில்லை" என்றார்.

எனக்கு இரண்டு கேள்விகள் கேட்க வாய்ப்பு கிடைத்தது. முதல் கேள்வி சோலார் பவர் பேனல்கள் அமைப்பது , அதற்கு அரசாங்கம் விவசாயிகளுக்கு அளிக்கும் மான்யம் பற்றியது. இரண்டாவது கேள்வி கூட்டுப் பண்ணை பற்றியது. இரண்டு கேள்விகளையும் எக்ஸலெண்ட் கொஸ்டின் என்று பாராட்டிய அவர், "உங்களுக்கு விவசாயம் பற்றித் தெரியுமா? என்று கேட்டார். "நான் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வருபவள், இப்போதும் என் சகோதரர் மற்றும் உறவினர்கள் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்.   என் சகோதரரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டேன்"என்றேன்.

சொட்டு நீர்ப் பாசனத்தை பிரபலப்படுத்த வேண்டும் என்பது தன்னுடைய தீவிர ஈடுபாடு உள்ள துறை என்றார். அதற்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைககள் ஆச்சர்யப்படுத்துகின்றன. தமிழக விவசாயிகள் பற்றிய எல்லா விவரங்களும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். தன்னுடைய ஐ பேடில் அதை இயக்கியும் காட்டினார். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில், குறிப்பிட்ட வார்டில், குறிப்பிட்ட கிராமத்தில் எத்தனை விவசாயிகள் எத்தனை ஏக்கரில் விவசாயம் செய்கிறார்கள்? அதில் கிணறு இருந்தும் எத்தனை பேர் சொட்டு  நீர்ப்பாசனத்தை மேற்கொள்ளவில்லை? போன்ற விவரங்களை ஒரு தட்டலில் பெற முடிகிறது. இதைக் கொண்டு அவர் ஏன் சொட்டு நீர்ப் பாசனத்தை மேற்கொள்ளவில்லை? என்று அவரைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொண்டு அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார்களாம்.

இந்த சந்திப்பு என்னைப் பொருத்தவரை ஒரு ஐ ஓபனராக இருந்தது. அரசைப் பற்றியும், நிர்வாக இயந்திரத்தைப் பற்றியும் நான் கொண்டிருந்த எண்ணம் மாறியது. துக்ளக்கிற்கு நன்றி. இன்று பொன்விழா ஆண்டு கொண்டாட இருக்கும் துக்ளக் பத்திரிகைக்கு என்னுடைய வாழ்த்துகள்!








28 comments:

  1. பொங்கலுக்கென்று அமைந்த இந்த பேட்டி,
    மிகச் சிறப்பு பானு மா.
    நீங்கள் துக்ளக் நிருபரா.ஆச்சர்ய வாழ்த்துகள்.
    இத்தனை நல்ல ஒரு அதிகாரியை நீங்கள் பேட்டி கண்டது இன்னும் சிறப்பு.

    செயலி!அற்புதமான வார்த்தை.
    பஞ்சாபிலிருந்து வந்தவர் இத்தனை அருமையான
    சேவைகள் தருவது மிக மிக மகிழ்ச்சி.
    அருமையான பேட்டியாக இருந்திருக்கும்.

    நீங்கள் மேலும் மேலும் உயர வாழ்த்துகள்.
    என்னாலும் துக்ளக் படிக்க முடிந்தால் நன்றாக
    இருக்கும். நன்றி பானு மா.

    ReplyDelete
    Replies
    1. நான் துக்ளக் நிருபர் கிடையாது அக்கா. துக்ளக்கிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது.
      வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  2. வாய்ப்புகளும்.....
    சந்தர்ப்பங்களும்.....
    எல்லோருக்கும் கிடைப்பதில்லை.....
    கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன் படுத்தியதற்கு..... வாழ்த்துக்கள்....
    வாழ்க.... வளர்க....

    ReplyDelete
  3. திருக்குறளை பஞ்சாபியில் மொழிபெயர்ப்பு - ஆகா...!

    சொட்டு நீர்ப் பாசனத்தை பிரபலப்படுத்த வேண்டும் - சிறப்பு...

    ReplyDelete
  4. //திருக்குறளை பஞ்சாபியில் மொழிபெயர்ப்பு - ஆகா...!// உங்கள் நினைவுதான் வந்தது டி.டி. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்!

    நல்ல கேள்விகள் கேட்டு இருக்கிறீர்கள்.
    பஞ்சாபியில் திருக்குறளை மொழி பெயர்த்து இருக்கிறார் அவர் அப்பா என்று கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
    ஆங்கில கலப்பு இல்லாமல் தமிழ் பேசுவது மேலும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. துக்ளக் ஆன்லைனில் சந்தா கட்டிப் படிக்கலாம்.
    இதழ் வந்ததும் பக்கங்களை தெளிவாகப் படம் எடுத்து இங்கே போடலாம்.

    ReplyDelete
    Replies
    1. போட முயற்சிக்கிறேன்.

      Delete
  7. ஆஹா! நீங்களும் VIP ஆகி விட்டீர்களே பானு. பாராட்டுகள். முழு இன்டர்வியூ படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete
  8. இதன் மூலம் நீங்களும் அதி முக்கிய நபராகி விட்டீர்கள். வாழ்த்துகள். அருமையாகக் கேள்விகள் கேட்டதற்கும் அதற்கான பதில்களைப் பெற்றுத் தந்ததுக்கும் மீண்டும் வாழ்த்துகள். ககன் தீப் சிங் பேடி பற்றி ஏற்கெனவே நிறையப் படிச்சிருக்கேன், கேள்விப் பட்டிருக்கேன். திருக்குறளைப் பஞ்சாபியில் மொழி பெயர்த்தது இன்னமும் சிறப்பான தொண்டு. அவர் தகப்பனாருக்கும் வாழ்த்துகள். இதன் மூலம் அவர் தகப்பனார் தமிழை எவ்வளவு ஆழமாகப் படித்திருப்பார் என்பது புரிகிறது. அரசு அதிகாரிகளின் இத்தகைய செயல்பாடுகள் அரசின் நிர்வாகத்தை மேன்மேலும் சிறப்பாக்கும். பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். முடிந்தால் பேட்டியை ஒளிப்படம் எடுத்துப் போடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த சந்திப்பால் அரசு அதிகாரிகளைப் பற்றிய என் எண்ணங்கள் மாறின. வருகைக்கு நன்றி.

      Delete
  9. வாழ்த்துகள்.  நீங்கள் ஏற்கெனவே நிருபர் வேலை பார்த்திருக்கிறீர்கள் இல்லையா?  ஆனால் இங்கு ஒரு வாசகரககலந்து கொண்டிருக்கிறீர்கள்.  துக்ளக்கில் வரும் வி ஐ பி மீட் நான் விரும்பிப் படிக்கும் பகுதிகளில் ஒன்று.  நமக்கு தெரிந்தவர்கள் வருகிறார்களா என்று பார்க்கும் வழக்கம் உண்டு.  இப்போது வந்தாச்சுபோல!

    ReplyDelete
  10. ஆஹா... படிக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது மா...

    நல்லதொரு மனிதர் - இப்படியான துடிப்பான அதிகாரிகள் தான் அரசுக்கும் நம் நாட்டுக்கும் தேவை. இவர் பற்றி நிறைய நல்ல செய்திகள் உண்டு.

    துக்ளக் இங்கே கிடைத்தால் வாங்கிப் படிக்கிறேன் மா...

    வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. நல்ல வாய்ப்பு. மிகச் சரியாக உபயோகித்துக் கொண்டிருக்கிறீர்கள்..

    ReplyDelete
  13. அவரில், கமல் அங்கிளின் சாயல் தெரிகிறது, ஒருகணம், கமல் அங்கிளோடுதான் செல்பி எடுத்தீங்களோ என எண்ணி விட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? நேரில் பார்த்தபொழுது தெரியவில்லை.வருகைக்கு நன்றி.

      Delete
  14. வணக்கம் சகோதரி

    வி ஐ பியுடனான பேட்டியைப் பற்றி படித்தவுடன் மகிழ்வாக இருக்கிறது. தங்கள் தைரியத்திற்கு பாராட்டுகளுடன் வாழ்த்துகளும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  15. நல்ல வாய்ப்பு.நன்றாகவே பய்னபடுத்தி இருப்பீர்கள்
    துகளக் வாசகன் என்கிற வகையில் மிக்க மகிழ்ச்சி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete