என்ன என்ன பாவங்களோ..?
கம்பராமாயணத்தில், ராமனை காட்டிற்கு அனுப்பி விட்டு தான் பட்டத்தை ஏற்றுக் கொண்டால் தான் எப்படிப்பட்ட பாவியாவேன் என்று கௌசல்யாவிடம் கூறும் பரதன் என்னென்ன பாவங்கள் இருக்கின்றன என்று ஒரு லிஸ்ட் கொடுக்கிறான்.
தாய் பசியால் துடிக்கும் பொழுது உணவு கொடாது, தான் மட்டும் உண்டவனும், போரில் தலைவன் அழியுமாறு விட்டு விட்டு ஓடியவனும் வீழும் நரகத்திலே நானும் வீழ்வேன்.
தன் காலில் அடைக்கலம் என்று வீழ்ந்தவரை காப்பாற்றினால் தனக்கு ஏதேனும் தீங்கு வருமோ? என்று அஞ்சி அவர்களை பகைவரிடம் காட்டிக் கொடுத்த மூடனும், நாளும் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய மறந்தவனும் வீழும் மீள முடியாத நரகத்திலே நானும் வீழ்வேன்.
பொய் சாட்சி கூறியவனும், போரினுக்கு பயந்து ஓடியவனும், காப்பாற்றுமாறு தந்த அடைக்கல பொருளை தராமல் தனக்கே வைத்துக் கொண்டவனும் நிலை தளர்ந்து மெலிந்தவரை வருத்தியவனும் அடையும் நரகத்தை யான் சேர்வேன்.
வேத நெறி வாழும் அந்தணர்கள் வாழும் இடத்தை நெருப்பால் எரித்தவனும், தம் மக்களையே கொன்றவனும், பொய்யான வழக்கு தொடுத்தவனும், தெய்வங்களை பழித்தவனும் செல்லும் கொடிய நரகம் சேர்வேன்.
கன்றுக்கு பால் இல்லாமல் ஒட்டக் கறந்து உயிர் விடுமாறு செய்கிறவனும், பிறர் பொருளை கொடாமல் மறைத்து வைத்துக் கொள்கின்றவனும், செய் நன்றியை மறந்து விடுகிற நாவுடையவனும் அடையும் நரகத்தை அடைவேன்.
தன்னுடன் வரும் பெண்டிரை தீயவர்கள் பிடித்து கேடு செய்யக் கண்டும், அவர்களை விடுவிக்க முயலாமல் தன்னுயிரை காத்துக் கொள்ள தப்பி ஓடிப் போனவனும், தன் பக்கத்தில் உள்ளவர் பசியால் வாடும் பொழுது கொடாமல், தான் மட்டுமே உண்டவனும் செல்லும் நரகத்திற்கு நானும் செல்வேன்.
*உயிர்களை கொன்று தின்னும் ஆசையை உடையவனும், அறநெறியை விட்டு தீய வழியில் பொருள்களை அடைய விரும்பிய மன்னவனும் அடையும் நரகத்தை நானும் அடைவேன்.
சிறந்த குடியில் பிறந்தவரை காலங்கள் உண்டாக்கி பழி கூறியவனும், விலை குறைவான காலத்தில் கிடைக்கும் நல்ல உணவை எளியவர் உண்ண முடியாதபடி செய்தவனும், நல்ல உணவை மிகுந்த மணமும்,சுவையும் உடையதெனக் கூறி, பக்கத்தில் இருப்பவர் நாவில் ஊறுன்படி செய்து, தான் ஒருவனாகவே உண்பவனும், அடையும் நரகத்தை அடைவேன்.
தன் நாட்டு மக்கள், பிற நாட்டில் இருந்து வந்து தங்கிய மக்கள், வாணிகத்தின் பொருட்டாக வந்துள்ள மக்கள், என்ற மூவகையினரும் உள்ள நாட்டின் மீது பகைவன் படை எடுத்து வந்து பொழுது, எதிர்த்து போரிடாமல் பயந்தவன், அல்லது ஒளிந்து கொண்ட மன்னவன் அடையும் நரகத்தை நான் அடைவேன்.
கன்னிப் பெண்ணைக் கெடுக்க கருதியவனும், குருவின் பத்தினியை அடைய விரும்பியவனும், கள்ளினை குடித்தவனும், திருட்டினை விரும்பியவனும் செல்லும் நரகத்திற்கு யானும் செல்வேன்.
உண்ணத்தகாத உணவுகளை ஆராயாமல் நாய் போல் உண்பவனும், ஆண் போல் வீரமும், பெண் போல் நாணமும் இல்லாத இவன் யார் என மற்றவர் இகழ்ந்து கூறவும் நாணாதவனும், கேடு செய்பவனுக்கு நரகம் உண்டு எனும் வேத மொழியைப் பேணாமல் புறம் விடுப்பவனும், மற்றவரின் குற்றங்களையே எப்போதும் கூறித் திரிபவனும் அடையும் கதியை நானும் அடைவேன்.
தன்னிடம் கொடுக்கத்தக்க பொருள் இருந்தும்,அதைக்கேட்டு வந்த இரவலர்க்குத் தராமலும், இல்லை எனக் கூறாமலும், "இன்று வா,நாளை வா" எனப் பல நாளாக அலைய வைத்து வருந்தச் செய்த அறிவிலா மூடன் அடையும் நரகத்தை நானும் அடைவேன்.
வாரியார் சுவாமிகள் இதைக் கூறும் பொழுது, இறந்து போன கன்றுக்குட்டியின் உடலில் வைக்கோலை அடைத்து தாய்ப் பசுவை ஏமாற்றி பால் கறப்பவன் செல்லும் நரகத்திற்கு நானும் செல்வேன், உணவு பொருள்களில் கலப்படம் செய்பவன் செல்லும் நரகத்திற்கு நானும் செல்வேன், உணவுப் பொருள்களை விற்கும் பொழுது எடையில் ஏமாற்றுகிறவன் செல்லும் நரகத்திற்கு நானும் செல்வேன் என்று ராமாயண காலத்தில் இல்லாத கலி கால குற்றங்களையும் சேர்த்துக் கொள்வார். இப்போது அவர் இருந்திருந்தால் வாட்ஸாப்பில் வதந்திகளை பரப்புகிறவன் செல்லும் நரகத்திற்கு செல்வேன் என்று ஊடக குற்றங்களையும் சேர்த்துக் கொண்டிருப்பார்.
*எஃகுஎறி செருமுகத்து ஏற்ற தெவ்வருக்கு
ஓஃகினன்,உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான்
அஃகல் இல் அறனெறி ஆக்க்கியோன் பொருள்
வெஃகிய மன்னன் வீழ் நரகின் வீழ்க யான்
ஆய்த எழுத்திலேயே இத்தனை வார்த்தைகளை அடுக்கியிருக்கும் கம்பனின் புலமை வியக்க வைக்கிறது.
முதன் முறையாக அறிந்த விடயங்கள் நன்றி. கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஐம்பது நாட்களாவது கேட்டு இருப்பேன்.
ReplyDeleteகிருபானந்த வாரியார் போன்ற உபன்யாசகர்கள் இனிமேல் வருவார்களா என்று தெரியவில்லை. மெயின் கதையிலிருந்து நகராமல், நகைச்சுவையோடும், எளிமையாகவும் சொல்லக்கூடியவர்கள் இப்போது இருப்பதாக தெரியவில்லை. வருகைக்கு நன்றி ஜி.
Deleteசிறப்பான பதிவு. அந்நாளில் நிறைய நல்லவர்கள் இருந்திருக்க வேண்டும். இந்நாளில் பட்டியலில் உள்ள ஒரு பாவத்தையாவது செய்யாதோர் இருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.
ReplyDeleteஉண்மை. யாராவது, தவறுதலாக இன்னொருவனைக் குற்றம் சொல்லும்போது, தண்டிக்கும்போது, 'நமக்கென்ன' என்று இருப்பவர்களும் பெரிய பாவத்தைச் செய்தவர்களே.
Deleteஅரசியலை விமர்சிப்பவர்களுக்கும் அத்தகைய நரகம் உண்டு என்று நான் நினைக்கிறேன் (ஒருவன் என்ன நினைத்துச் செய்கிறான் என்பதை நாம் எப்படி அறிய முடியும்?)
அரசியல்வாதிகளை கூர்ந்து கவனிப்பவர்களால் அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளை கணிக்க முடியும் நெல்லை.
Deleteரொம்ப கடினம் பா.வெ. மேடம். இப்போ மோடி செய்வது நல்ல நோக்கத்திலா கெட்ட நோக்கத்திலா (டிமானிடைசேஷன்) என்பதை எப்படிச் சரியாகச் சொல்ல முடியும்? இரண்டு வகையாக கணிப்பதற்கும் நிறைய உதாரணங்கள் இருக்கிறதே.
Deleteவாரியார் சொற்பொழிவு உபன்யாசங்களில் நிறைய வேடிக்கை, புதுமைகள் செய்வார். யாரையாவது தேடுவதுபோல வரும் கதைகளைக் கூறும்பொழுது, அப்பொழுது எழுந்துபோகும் நபரைக் காட்டி "அதோ போகிறாரே, அந்த நீலச்சட்டைக்காரர்... அவராய் இருக்குமோ?" என்பார்.
ReplyDeleteஆமாம் ஸ்ரீராம் கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவுகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். நன்றி ஸ்ரீராம்.
Deleteஇப்போது அநேகமாக இதில் உள்ள பாவங்கள் அனைத்தும் நடைமுறை ஆகி மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். பாவங்கள் என்பதே இல்லாமல் போய் இதான் வழக்கம் என்று ஆகிவிட்டது.
ReplyDeleteஹூம்..! கலிகாலம் எனலாமா? கருத்துக்கு நன்றி கீதா அக்கா.
Deleteவதந்திகள் பிறந்து பல நூற்றாண்டுகள் ஆகி விட்டது...
ReplyDeleteஇருக்கலாம், ஆனால் இப்போது ஆபத்தான வேகத்தில் அல்லவா பரவுகிறது? நன்றி டி.டி.
Deleteசிறப்பான பகிர்வு.
ReplyDeleteதெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் பல பாவங்களை செய்து கொண்டே இருக்கிறோம்.
வதந்திகள் - இப்போது ஒரு நொடியில் பல மக்களை சென்று அடைந்து விடுகின்றன. முன்பே இருந்தாலும் அது பரவ நேரம் - சில நாட்கள் கூட ஆனது! ஆனால் இப்போதோ, நொடிப்பொழுதில் பலரை அடைந்து விடுகிறது - எத்தனை தூர தேசத்தில் இருந்தாலும்!
பாவங்களுக்கு பழகிக் கொண்டு விட்டோம். கருத்துக்கு நன்றி வெங்கட்.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாரியார் சொற்பொழிவுகள் நிறைய கேட்டு இருக்கிறேன். அவர் கையால் புத்தகம் பரிசு வாங்கி இருக்கிறேன். ரயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்து இருக்கிறேன் என் மகனை பெற தாய்வீடு செல்லும் போது. ஆசி வழங்கி மகனை பெறுவாய் என்று வாழ்த்தினார்.
விபூதி அணிவித்தார்.
மகனும் அவர் பேச்சுக்களை விரும்பி கேட்பான்.
வெங்கட் சொன்னது போல் அறிந்தும் அறியாமலும் செய்து கொண்டு இருக்கிறோம்.
நாம் இறைவனிடம் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த குற்றங்களை பொறுத்து அருள வேண்டும் என்று வேண்டிவிடுவோம்.
கிருபானந்த வாரியாரோடு உங்கள் அனுபவங்கள் அற்புதம்! மிகுந்த பாக்கியசாலி நீங்கள். //அவர் கையால் புத்தகம் பரிசு வாங்கி இருக்கிறேன்// அவர் உபன்யாசங்களுக்கிடையே குழந்தைகளிடம் கேள்விகள் கேட்டு,சரியான பதில் சொல்பவர்களுக்கு புத்தகங்கள் பரிசளிப்பார் என்று கேள்வி பட்டிருக்கிறேன். உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
Deleteராமாயணம் படித்ததும் ராமன் மேலிருந்த அபிப்பிராயம் மாறி விட்டது அவதார புருஷன் ஒரு ஆர்டினரி புருஷனாகத் தெரிகிறார்
ReplyDeleteஆர்டினரி புருஷனை அவதார புருஷனாக்குவதுதான் இலக்கியங்களின் நோக்கம். உங்களுக்கு மாறி நடந்திருக்கிறது. கருத்துக்கு நன்றி.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபாவங்கள் பதின்மூன்றும் பதற வைக்கிறது.. இக்காலத்தில், தானே கெட்டித்தனமாக அடுத்தவரைத் தட்டி விட்டெல்லோ ஆட்சியைப் பிடிக்க முயகின்றனர்...
Deleteகிருபானந்த வாரியாரின் பேச்சுக்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
=======
ஹா ஹா ஹா பானு அக்காவுக்குப் பதில் வல்லிம்மா எனப் போட்டுவிட்டேன் முன்னர்:))
என்னையும் நினைத்துக் கொண்ட அதிராவுக்கு
Deleteஅன்பு நன்றி.
அன்பு பானுமா,
த்ரேதாயுகம் அல்லவா. புண்ணியம் 80 பாகமும்
பாவம் 20 பாகமும் இருந்திருக்கும்.
இத்தனை பாபங்களும் இப்பொழுது மிக மிக வழக்கமாகிவிட்டன.
நீங்கள் சொல்வது போல வாட்ஸாப் வதந்தியும் சேர்ந்து கொண்டது.
ராமனை விட உத்தமன் பரதன் என்று ஏதோ சொற்பொழிவில் கேட்டிருக்கிறேன்.
ஸ்ரீ வாரியார் சொற்பொழிவில் உண்மையும் நகைச்சுவையும்
இழையோடும்.நன்றி மா.
வாங்க அதிரா. கருத்துக்கு நன்றி.
Deleteவாங்க வல்லி அக்கா. 64வது நாயன்மார் என்றபட்டத்துக்கு மிகவும் பொருத்தமானவர் வாரியார். நன்றி.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. பாவங்கள் எத்தகையது, எத்தனை வகைப்பட்டது என்பதை பட்டியலிட்டு பகிர்ந்தது அருமையாக உள்ளது. எத்தனை வகை பாபங்கள்... இத்தனையும் நாம் எந்தவொரு இக்கட்டிலும் நினைத்து கூட பார்க்காத சந்தர்ப்பங்களை அந்த இறைவன் தர வேண்டும் என பிரார்த்திப்போம். வாரியார் பேச்சை நானும் ரேடியோவில் கேட்டிருக்கிறேன். மிக நன்றாக பேசுவார். நேரடியாக அவரை தரிசிக்கும் பாக்கியம் அமையவில்லை. பதிவு படிக்க நன்றாக இருந்தது. உண்மைதான்...! கம்பனின் புலமை வியக்க வைக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. நானும் வாரியார் அவர்களின் சொற்பொழிவை ரேடியோவில், கேஸட்டுகளிலும்தான் கேட்டிருக்கிறேன். // இத்தனையும் நாம் எந்தவொரு இக்கட்டிலும் நினைத்து கூட பார்க்காத சந்தர்ப்பங்களை அந்த இறைவன் தர வேண்டும் //உண்மைதான். நன்றி.
ReplyDeleteகிருபானந்தவாரியார் அவர்களின் சொற்பொழிவுகளை முன்பு சிறு வயதில் ரேடியோவில் கேட்டதுண்டு. ஆனால் நேரில் கேட்டதில்லை. வதந்திகளுக்கு எந்தக் காலத்திலும் பஞ்சமே இல்லை. நாம் செய்யும் பாவங்களுக்குக் கணக்கு உண்டோ? இயற்கை கூட நாம் செய்யும் பாவங்களுக்குத்தான் பழிவாங்குகிறது என்று எண்ண வைக்கிறது இப்போதைய நிலைமை.
ReplyDeleteபாவங்களின் லிஸ்டை அறிந்து கொண்டேன்
துளசிதரன்
பானுக்கா தலைப்பைப் பார்த்ததும் டக்குன்னு பாட்டு நினைவுக்கு வந்துவிட்டது
ReplyDeleteஎன்ன் என்ன பாவங்களோ
எண்ணி எண்ணி முடிவதில்லை
பாவம் என்று தெரிந்தாலும்
பாவிகளாய் வாழ்கின்றோம்...
மணலில் கீச்சு கீச்சுத்தாம்பாளம் விளையாடிக் கொண்டே வாரியாரின் சொற்பொழிவைக் கேட்டதுண்டு சிறு வயதில். அப்போது அறியாப்பருவம். ஆனால் அப்புறம் என் மாமா வீட்டில் கேசட் போடுவார் அப்படிக் கேட்டதுண்டு. மிகவும் பிடிக்கும். என்னிடம் வாரியார் சொன்னக் கதைகள் புத்தகம் எனக்குப் பரிசாகக் கிடைத்தது இருக்கிறது. பதிவு எழுத நினைத்து வைத்திருந்தேன் கதைகள் பற்றி இங்கு மேலோட்டமாகத் தேடிக் கிடைக்கவில்லை. இங்கு இருக்கா அல்லது சென்னையில் இருக்கா என்று தெரியவில்லை. பார்க்க வேண்டும்.
வதந்திகள் பற்றி நீங்க சொன்னதை ரசித்தேன் ஆமாம் அது தொடங்கியது இன்றா நேற்றா!!!
கீதா
பாவங்கள் பற்றி அறிந்தோம்.
ReplyDeleteகிருபானந்த வாரியாரின் சொற்பொழிவுகள் எங்கள் அப்பாவுக்கு பிடிக்கும் அதில்தான் நானும் கேட்டிருக்கிறேன்.
வாரியார்தான் நமது சாலமன் பாப்பையாவுக்கு முன்னோடி எனலாம். குறித்த நேரத்தில் ஆரம்பித்து, குறித்த நேரத்தில் சொற்பொழிவை முடிக்கும் திறன் கொண்டவர். இந்துமதத்திற்கு எதிரான கருத்து கொண்டவர்களும் தவறாமல் வாரியாரின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வர். இடையிடையே ரசிகர்களுக்கும் சில புதிர்க் கேள்விகளைக் கேட்டு, சரியான பதில் சொல்பவர்களுக்குப் பரிசு வழங்குவார். தமிழகத்தில் பல்லாண்டுகள் மதரீதியான அமைதி நிலவியதற்கு வாரியாரின் சொற்பொழிவுகளும் ஒரு காரணம் என்பது என் கருத்து.
ReplyDeleteஅது சரி, பாவங்களைப் பற்றி எழுதும்போது பாவ மன்னிப்பு பற்றியும் எழுதலாமே!